Featuredஇலக்கியம்கட்டுரைகள்

மஞ்சள் வெயிலும் மாயச் சிறுமியும் – கவிதைநூல் விமர்சனம்

-முனைவர் ஜே. ஜெகத் ரட்சகன்

கவிதைகள் எழுதுவோரின் எண்ணிக்கை பெருகிவிட்டதால் அதனை மலிவாக எண்ணுகின்ற மனப்போக்கும் உருவாகியுள்ளது. உண்மையில் அதுபோன்ற மனப்போக்கு சரியானதுதானா? என்ற வினாவுக்கு, ஆம். சரிதான் என்று உடனடி பதிலை எவராலும் கூறமுடியாது. ஏனெனில் கவிதைகள் தம்முடைய பயணத்தின் உள்ளும் புறமும் அதன் வீரியத்தை இன்னமும் இழந்துவிடாமல் புதுப்பித்துக்கொண்டே வருகின்றன. புதுக்கவிதைகள் எதனைக் குறித்தும் பாடுபொருளாகக் கொள்ளலாம் என்கிற அதற்குரிய சுதந்திரம் அதன் பயணத்தில் தொய்வு ஏற்படாமல் தக்கவைத்துள்ளது. அந்தச் சுதந்திரத்தின் பயனாக இடுக்குகளில் மனிதப் பார்வைக்கு எட்டாமல் போயிருந்த மெல்லிய உணர்வுகளையும், சொல்லொணாத வலிகளையும், அழகியலையும் எதிர்ப்புகளையும் மிகச் சரியாக உள்வாங்கி வெளிப்படுத்தும் ஆற்றலைக் கூடுதலாக தாமாகவே தன் தலைமேல் ஏற்றுக்கொண்டு வாழ்ந்து வருகிறது. எனவே, புதுக்கவிதைகள் முற்றாக வெறுத்து ஒதுக்கப்பட வேண்டியவையல்ல என்கிற புரிதல்கள் அவ்வப்போது உரிய சான்றுகளுடன் நிரூபிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பா. ஜெய்கணேஷ் அவர்கள் எழுதிய மஞ்சள் வெயிலும் மாயச் சிறுமியும் என்ற கவிதைத் தொகுப்பைக் கூறலாம். 73 கவிதைகள் அடங்கிய சிறிய தொகுப்பு. 73 கவிதைகளின் தலைப்புகளும் கவித்துவம் நிரம்பியவை. ஈர்ப்புக்குக் குறைவில்லாதவை. நூலமைப்பும் ஓவியங்களும் அழகிய கவிதைகளாகவே தென்படுகின்றன.

‘இல்லாதவைகளின் உலகம்’ என்னும் கவிதையில் வளர்ச்சி என்ற போலியான போர்வையில் போர்த்தப்பட்டு, வாழ்வின் அற்புத கணங்களையும் கவித்துவம் நிரம்பிய அழகிய வாழ்வையும் இழந்துவிட்டதைக் குத்தலோடு பதிவு செய்துள்ளார். ‘இருளின் கண்கள்’ என்னும் கவிதையில் இழந்துபோன இளம்பருவ கிராமத்து வாழ்வின் பதிவு அப்பட்டமாகக் காணப்படுகிறது.  சிறுகதையானாலும் கவிதையானாலும் காட்சிப்படுத்துதல் மிக முக்கியம். அந்த வகையில், சில சிறு சொற்களைக் கொண்டே கூறவந்ததைக் காட்சிகளாக நிலைநிறுத்துவதில் வெற்றி பெறுகிறார் கவிஞர். கவிதைக்கான சொற்களை வலிந்து தேடாமல் எளிதான சொற்களாலேயே மிக அழகான கவிப்பின்னலை உருவாக்கியுள்ளார். ‘வன்பூனைகளும் மென்பூனைகளும்’, ‘பலி ஆடு’ இத்தொகுப்பினுள் மிகவும் குறிக்கத்தக்கக் கவிதைகள். இக் கவிதைகளில் கவிஞர் துள்ளிக் குதித்தோடுமாறு படைத்துள்ள ஆட்டையும் பூனையையும் படிப்போர் எதனோடும் ஒட்ட வைத்து, அக்கவிதையைத் தனக்கேற்றவாறு வளைத்துக்கொள்ள இடமளிப்பவை. யானையும் எறும்பும் எனும் கவிதையும் அத்தகையதே.

இறந்தவற்றை உண்டு புசிக்கும்/ இறக்கை விரித்த கழுகுகள்/ இருப்பவற்றையும் உயிர்க்குருதி குடித்து/ வாசம்தேடி வானின்/அகண்ட வெளியெங்கும்/ எக்காளமிட்டுத் திரிகின்றன/ இது பிணம் தின்னிக் /  கழுகுகளின் உலகம்   (43) என்ற கவிதையில் மனிதர்களுக்கெதிரான தம் போரைத் தொடுக்கிறார்.

எல்லாம் அதனளவில் / இருப்பதில் எனக்கென்ன பிரச்சனை / யாவும் கலைத்து / பிரபஞ்சம் அழித்து / நான் மட்டும் வாழவா என்ற எளிய வரிகள் மனிதச் சமுதாயத்தை எதிர்நிலையில் வைத்து இயற்கையின் சார்பில் வாதிடுகிறார். ஆடு, யானை, எறும்பு, மான், சிட்டுக்குருவி, நரி, ஓநாய், விட்டில் பூச்சி உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட உயிரினங்கள் இவருடைய கவிதைகளில் தென்படுகின்றன. மனிதர்களின் மீதான கோபங்களை நேரடியாகக் கூறாமல் விலங்குகளுக்குத் தம்முடைய எதிர்ப்பு மொழியைக் கற்பித்து மனிதர்களின் மீதான தாக்குதலைத் தொடுக்கிறார். மேலே சொல்லப்பட்ட விலங்குகள் ஓரிடத்தும் அந்த விலங்குகளாக இத்தொகுப்பினுள் பயன்படுத்தப்படவில்லை.

பல கவிதைகள் குறுங்கதைகள் கூறுவதைப் போன்று அமைந்துள்ளன. சில கவிதைகள் எளிதாகப் பேச வேண்டியதைச் சுற்றி வளைத்துப் பேசுவதையும் காணமுடிகிறது. பல கவிதைகளில் ஒன்றின் சாயல் ஒன்றின்மீது பட்டுத்தெறிப்பதை எளிதில் உணர முடிகிறது. ஒன்றாக எழுதப்பட்டு வெட்டப்பட்டிருக்குமோ என்ற ஐயம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. கவிதைக்கான களங்களையும் ஒரு கை விரல்களுக்குள் அடக்கிவிடலாம் எனத் தோன்றுகிறது.  எனினும் சில கவிதைகளின் வழியாகவும் கவித்துவ நடையாலும் கவிஞரின் முதல் தொகுப்பு இது என்று கூறுவதை ஏற்க மனம் தயங்குகிறது. மஞ்சள் வெயிலும் மாயச் சிறுமியும் இயல்புகளின் எல்லை யாவும் உடைத்து மெதுமெதுவாய் எல்லாவற்றையும் விழுங்கிக் கொண்டிருக்கிறது.

*****

விமர்சகர் – உதவிப் பேராசிரியர், தமிழ்ப் பேராயம்,
எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்

 

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க