Blog

  • பாகவதப் பாரதத்தில் போர்ச் சித்திரிப்புகள்

    வே. பா. இதழ் நேசராஜ்
    முனைவர் பட்ட ஆய்வு மாணவி
    அரிய கையெழுத்துச் சுவடித்துறை
    தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
    ithazhjoyson@gmail.com
    ஆய்வு நெறியாளர்: முனைவர் த. ஆதித்தன், இணைப்பேராசிரியர்

    ஆய்வுச் சுருக்கம்

    மனிதனின் உள்ளத்தில் இயல்பாக ஊறி எழும் பல்வேறு உயிர்க்குணங்களுள் போர் உணர்வும் ஒன்று என்பதைப் பாரதம் போன்ற இலக்கியங்கள் வாயிலாக அறியமுடிகிறது. ஒரு மன்னனின் புகழ்நிறைந்த, வளமான வாழ்வைக் கண்டு மனம்நொந்த இன்னொரு  நாட்டு மன்னனுக்கு, அத்தகைய வாழ்வு தமக்கு இல்லையே என்று பொறாமை ஏற்பட்டது.  அதைத் தாமும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசையால், அவர்களுக்குப் பலவகையிலும் குற்றங்கள் செய்யத் துணிந்தான். அதனால் அவர்களுக்கிடையில் அது மிகப்பெரிய போராக உருவெடுத்தது. இத்தகைய சூழலில் ஒரு நாட்டைப் பாதுகாப்போடு ஆள்வதற்கு அடிப்படை உறுப்பாகப் படை அமைந்தது. படை இருந்தால் பாதுகாப்பு என்ற இலக்கணத்தோடு நாட்டை ஆட்சி செய்தவன், அதற்கேற்ப படைகளை உருவாக்கினான். அதுவே காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை என நான்காக வகைப்படுத்தப்பட்டுப் பழங்காலம் முதலே நடைமுறையில் இருந்து வருகிறது. போரின் ஆக்கமும் அழிவும் போர்த்தலைமையின் அறிவாற்றல், மதிநுட்பம், அரும்பண்புகள், படைவீரர்களின் தகுதி, குழுவுணர்வு முதலியவற்றைப் பொறுத்தே அமைகிறது; அதன் அடிப்படையிலேயே படையை அணிவகுத்தல், போர் நடைபெறும்போது அதில் முன்னேற்றம், தாக்குதல், காத்தல், பின்வாங்குதல் முதலிய செயல்கள் நடைபெற்றன. ஒவ்வொரு படைப்பிரிவினரும் அதற்கேற்பப் போர்க்கருவிகளைப் பயன்படுத்துதல் வெற்றிக்கு வழிவகுத்தன. சங்ககாலம் முதலே வில், வாள், வேல், அம்பு, தண்டம், கேடயம், கவசம் முதலிய கருவிகளைக் கொண்டு எதிரிகளோடு போரிட்டுள்ளனர். மகாபாரதத்தில் போரின்போது இக்கருவிகளோடு மேலும் பல ஆயுதங்கள், கணைகள் முதலியன பயன்படுத்தியதைக் காணலாம். குருச்சேத்திரப் போர் பாகவதப் பாரதத்தில் எவ்வாறு சித்திரிக்கப்பட்டுள்ளது என்பதைப் புலப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம்.

    குறிப்புச் சொற்கள்: போர் – படை – அணிவகுப்பு – தூது – போர்க்கருவிகள் – போர்க்களம் – போரிசைக்கருவிகள்- போர் அறம் – கடமை

    முன்னுரை

    பாகவதப் பாரதம் பதினெட்டாம் நூற்றாண்டில் (பொ.ஆ.1745-1755) தமிழகத்தின் தென்பகுதியான கன்னியாகுமரி மாவட்டத்தில் தோன்றிய, தமிழுக்குப் புதிய வரவான ஒரு நாட்டுப்புறக் காப்பியம். இதனை இயற்றியவர் தேரிக்கரையான் ஸ்ரீபல்பநாப நாடார் ஆவார். அம்மானை யாப்பிலான இக்காப்பியம் 26,000 அடிகளைக் கொண்டது. ‘பாரதமும் பாகவதமும் பண்பாய்த் தெரிந்தெடுத்து’ அவற்றைப் பொருத்தமாக இணைத்துப் படைத்து இக்காப்பியத்திற்குப் ‘பாகவதப் பாரதம்’ எனப் பெயர் சூட்டியுள்ளார் ஆசிரியர்1. பாகவதப் பாரதத்தில் பன்னிரண்டு போர்கள் இடம்பெற்றுள்ளன.  அவற்றுள் இறுதிப் போரான பாரதப்போர் என்னும் குருச்சேத்திரப் போர்ச் சித்திரிப்புகளை இக்கட்டுரை விவரிக்கிறது.

    போருக்கான காரணம்

    அளவுகடந்த மண்ணாசையால் போர் நிகழ்வதுண்டு. தன்னாட்டில் வாழும் குடிகள் வளத்துடன் வாழ்வதற்குப் போதிய இடமில்லாததினாலும்; இடம் சிறிதென்னும் ஊக்க மேலீட்டினாலும் மன்னர் போர் தொடுப்பர்; அரசுரிமைக்குத் தடையேற்படும்போதும்; சொல்லில் அல்லது செயலில் மானக்குறைவு ஏற்படும்போதும் போர் மூளும். தம் படைவலி, தம் செங்கோல், தம் ஆணை முதலியவற்றை யாவரும் ஒப்புக்கொண்டு தமது ஆட்சிக்கு உட்பட்டிருக்க, தாம் அரசருக்கு அரசராகத் திகழவேண்டும் என்ற உட்கோளே அக்கால அரசரின் போர்கள் பலவற்றிற்குக் காரணமாக இருந்துள்ளன. வெண்ணிப்பறந்தலை, கருவூர், கூடல், வாகைப்பறந்தலை, நெய்தலங்கானல், தலையானங்கானல், கானப்பேர் முதலிய இடங்களில் இக்காரணம் பற்றியே போர்கள் எழுந்துள்ளன2.  இவை மட்டுமன்றி, அரச குடும்பத்திற்குள் ஏற்படும் முரண்கூட போர் ஏற்படும் சூழலை உருவாக்கும்; அது மேற்குறித்த காரணங்களில் ஒன்றோ அல்லது பலவாகவோ இருக்கும். அத்தகைய காரணங்களால் ஏற்பட்ட போர்தான் பாரதப்போர்.

    பாகவதப் பாரதம்வழி பின்வருவனவற்றைப் போருக்கான காரணங்களாக அறியமுடிகிறது. அவை, துரியோதனனுக்கு ஏற்பட்ட மண்ணாசையும்; தானே ஒட்டுமொத்த நாட்டுக்கும் மன்னராக இருப்பதோடு, மன்னவர்க்கெல்லாம் மன்னவராகவும் இருக்க வேண்டும் என்ற பேராசை; பாண்டவர்களின் இராசசூய வேள்வியின்போது தர்மருக்கு வேதியர்களும் பிற மன்னவர்களும் செய்த சிறப்புகளைத் துரியோதனனால் பொறுத்துக்கொள்ள முடியாமல் கொதித்தெழுந்தமை முதலியன.

    தன்புய வலியும் நான்குதம்பியர் வலியும் மாயன்
    வன்புய வலியும் கொண்டே மண்ணெலாம் கவரயெண்ணி
    இன்புயச் சிகரிமன்னர் யாரையும் தன்கீ ழாக்கி
    மின்புயல் அனையான் மேன்மை விளைக்கவே வேள்வி செய்தான்3

    எனத் துச்சாதனன் துரியோதனிடம் கூறி, அவனை வெறுப்பேற்றினான். இந்திரப்பிரஸ்தத்தில் பாண்டவர்கள் வாழ்ந்துவரும் நாளில் துரியோதனன் மனத்தில் அச்சப்பட்டு, நாளை பாண்டவர்கள் நாட்டை இருகூறாப் பகுக்க வேண்டும் என்று சொன்னால் என்ன செய்வது என்று மனந்தடுமாறி, கன்னனிடம் அறிவுரை கேட்க, அதற்குக் கன்னன்,

    பஞ்சவரோ நாடு பகுந்தாள வாறதுகாண்
    அஞ்சப்பொருது வெட்டி ஐவரையும் கொன்றுழக்கி
    ஆருமறியாத அத்தினா புரத்தினிலே
    போர்பொரலா மென்று கன்னன் புத்திமிக உரைத்தான்4

    கன்னனின் அறிவுரையால் எப்படியும் பாண்டவர்களைப் போரில் வென்று நாடு முழுவதையும் தாமே ஆளலாம் என்று எண்ணினான் துரியோதனன்.

    பாண்டவர்களின் வளர்ச்சியால் துரியோதனனுக்கு ஏற்பட்ட பொறாமை; தம் ஆற்றலை மாற்றான் இகழ்வது கண்டு பொறுக்கமுடியாமை; தன்மானம் காத்து, ஆட்சியுரிமையை நிலைநாட்ட முயன்றமை ஆகியன துரியோதனாதிகள் சார்பில் பாண்டவர்களுக்கு எதிராகப் போர் ஏற்படக் காரணமாக அமைந்துள்ளன. பாண்டவர்கள் சார்பில்  தர்மம் காக்கப்பட வேண்டும் என்பதே குறிக்கோளாக இருந்துள்ளது.

    தூது

    ‘பகையை நட்பாகவும் நட்பைப் பகையாகவும் ஆக்குபவன் தூதுவன். போரும் அமைதியும் அவனால்தான் ஏற்படுகின்றன’5. இரு பெரும் மன்னர்களுக்கிடையே போர் நிகழாமல் தடுப்பதற்காகத் தூது செல்லும் வழக்கம் இருந்துள்ளதைப் பின்வரும் இலக்கியச் செய்திகள் வழி அறிகிறோம். ஒரு மன்னனிடம் தூது செல்பவன் எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும் என்பதைத் திருக்குறள்6 விளக்குகிறது. அதியமானுக்காகத் தொண்டைமானிடம் ஔவையார் தூது சென்றதைப் புறநானூறு7 எடுத்துக்காட்டுகிறது. பாரதத்தில் கிருஷ்ணர் தூது சென்ற நிகழ்வு  ‘கிருஷ்ணன் தூது’ என்னும் கதைப்பாட்டு இலக்கியமாகப் புகழுடன் நிலைத்து நின்று பேசப்படுகிறது8.

    பாகவதப் பாரதம் பாண்டவர்களுக்காகத் துரியோதனன் சபையில் கிருஷ்ணர் தூது சென்ற நிகழ்வைச் சித்திரிக்கிறது. அங்குச் சென்ற கிருஷ்ணர், பாண்டவர்களுக்கு நாட்டில் பாதிப் பாகத்தைப் பகிர்ந்து கொடுக்கும்படி வேண்ட, அதற்குத் துரியோதனன் மறுப்புத் தெரிவிக்க, கிருஷ்ணர் ஆளுக்கொரு ஊரைக்கொடு அல்லவென்றால் ஆளுக்கொரு வீட்டையாவது கொடு என்று கேட்கிறார்9. அதற்குத் துரியோதனன், தெள்ளுதமிழ் வல்ல திருமாலே, ஐவருக்கு எள்ளளவு பூமிகூட கொடுக்கமாட்டேன் என்றான்10. கிருஷ்ணர் துரியோதனனிடம் சென்ற சமாதானத் தூது பலனளிக்கவில்லை.

    போர்ப் படைகள்:

    நாட்டைக் காப்பதற்கும் பகைமன்னன்மேல் போர்தொடுப்பதற்கும் ஒரு நாட்டில் நான்கு வகையான படை ஏற்படுத்தப்பட்டது. பகைநாட்டோடு போர்தான் தீர்வு என ஒரு மன்னன் நினைத்துவிட்டால், அவன் தன் படை பலத்தைப் பெருக்குவான்.  படையின் சிறப்பைக் கூறும் திருக்குறள், ”ஒரு மன்னவனின் செல்வங்கள் எல்லாவற்றிலும் மேலான செல்வம் என்பது, நான்கு படையுறுப்புகளும் நிறைந்து, அஞ்சாது பகைவரை வெல்லும் படை எனக் குறிப்பிடுகிறது11.   மன்னனின் திருமேனி எனப் போர்ப்படையைத்,

    ’தாழ்கழன் மன்னன் தன் திருமேனி
    வாழ்க சேனாமுகமென வாழ்த்தி’

    எனச் சிறப்பிக்கும் சிலப்பதிகார அடிகளுக்குத், ‘திருமேனியாகிய சேனாமுகம்; சேனாமுகம் அரசனுக்குச் சிறந்தமையின், திருமேனி’ என உரை வகுத்துள்ளார் அடியார்க்குநல்லார்’12.

    கன்னன் சொல்கேட்டுத் துரியோதனன் விராடபுரத்தில் சென்று ஆநிரைகளைக் கவர்ந்து வருமாறு அஸ்வத்தாமனுக்கு ஆணையிட்டான். மன்னவனின் ஆணைக்கிணங்க, அவன் மூன்று அக்குரோணி படைகளைத் திரட்டிச் சென்று,

    தாம் முக்குறுணி தளத்துடனே தானடந்து
    வென்றியுடைய விலா(ரா)டன் திருநாட்டில்
    சென்றுநிரை கொள்ளவென்று திரைகடல்போலே வளைந்தான்13 .

    அக்குரோணி என்பது பாரதப்போரில் ஈடுபட்ட படைகளின் அளவைக் குறிப்பதாகும். அக்குரோணி என்பதில் பத்தி, சேனாமுகம், குல்மம், கணம், வாகினி, பிருதனை, சமு, அனீகினி என்ற எட்டு உட்பிரிவுகள் காணப்படும். பத்தி என்பது ஒரு தேர், மூன்று குதிரைகள், ஐந்து சிப்பாய்கள், ஒரு யானை ஆகியவை கொண்டது. சேனாமுகம் என்பது மூன்று பத்திகள்; குல்மம் என்பது மூன்று சேனாமுகங்கள்; கணம் என்பது மூன்று குல்மம்கள்; வாகினி என்பது மூன்று கணங்கள்; பிருதனை என்பது மூன்று வாகினிகள்; சமு என்பது மூன்று பிருதனைகள்; அனீகினி என்பது மூன்று சமுக்கள்; அக்குரோணி என்பது பத்து அனீகினிகள் ஆகும். அதாவது, இருபத்தோராயிரத்து எண்ணூற்று எழுபது தேர்கள்; இருபத்தோராயிரத்து எண்ணூற்று எழுபது யானைகள்; ஒரு லட்சத்து ஒன்பதாயிரத்து முந்நூற்று ஐம்பது காலாட்கள்; அறுபத்தையாயிரத்து அறுநூற்றுப் பத்துக் குதிரைகள் அடங்கியது ஓர் அக்குரோணி ஆகும்14.

    சதுரத்துக்குச் சதுரமாகிய பத்துக் காதம் தொலைவுள்ள கடலில் படைகள் இறங்கும்போது, கடல் வற்றி வறண்டு எங்கும் ஒன்றுபோல் காட்சியளித்தால் அந்தப் படை ஓர் அக்குரோணி என்னும் இலக்கு ஆகும் எனப் பாகவதப் பாரதம் கூறுகிறது15.

    படை அணிவகுத்தல்:

    மன்னர்கள் படை, கொடி, குடை, முரசு முதலியவற்றோடு குதிரைப்படையும் யானைப்படையும் தேர்ப்படையும் தார்ப்படையும் (காலாட்படை மற்றும் தூசிப்படை) கொண்டிருந்தனர் என்பதைப்

    படையும் கொடியும் குடியும் முரசும்
    நடைநவில் புரவியும் களிறும் தேரும்
    தாரும் முடியும் நேர்வன பிறவும்
    தெரிவுகொள் செங்கோல் அரசர்க்குரிய

    என்னும் தொல்காப்பிய நூற்பா16 வாயிலாக அறியலாம். எதிரிகளை வீழ்த்தும் வியூகம் அறிந்து நால்வகைப் படையையும் வகுப்பது படையணி வகுப்பு ஆகும். இதனைத் திருக்குறள்,

    தார்தாங்கிச் செல்வது தானை  தலைவந்த
    போர்தாங்கும் தன்மை அறிந்து17

    எனக் குறிப்பிடும்.

    ஒரு படைக்குப் பகைவரைத் தாக்கும் திறமையும்; தாக்குதலைத் தாங்கும் திறமையும் இருக்க வேண்டும்; இது தண்டம், மண்டலம், அசங்கதம், போகம் என நான்கு வகைப்படும். தண்டம் என்பது படையைக் குறுக்காக நிறுத்துவது; மண்டலம் என்பது பாம்புபோல் வளைவாக நிறுத்துவது; அசங்கதம் என்பது வேறுவேறாக நிறுத்துவது; போகமாவது நால்வகைப் படையையும் ஒன்றன்பின் ஒன்றாக நிறுத்துவது18. அதனைக் கருத்தில் கொண்டே படையை அணிவகுப்பர்.

    படையைத் தனக்கு அனுகூலமாக இருக்கும் பகுதியில் தெற்குநோக்கி நிறுத்தாமல் சூரியன் பின்புறமாக இருக்குமாறும்; தங்களுக்கு அனுகூலமாக காற்று வீசுமாறும் பார்த்து வியூகத்தை அமைக்க வேண்டும்19. எதிரி எதிர்ப்புறத்திலிருந்து தம்மை ஆக்கிரமிக்கக் கூடுமானால் மகரவியூகத்திலும் (முதலைவடிவம்); பின்புறத்திலிருந்து வளையக்கூடுமானால் சகடவியூகத்திலும் (வண்டிவடிவம்); பக்கங்களில் இருந்து தாக்கக்கூடுமென்றால் வஜ்ரவியூகத்திலும் (வைரக்கல் வடிவம்); நாற்புறத்திலிருந்தும் தாக்குதல் வரக்கூடும் என்ற ஐயமேற்பட்டால் சர்வதோபத்ர வியூகத்திலும் (சதுர வடிவம்); ஒவ்வொருவராக மட்டுமே செல்லக்கூடிய பாதையாக இருந்தால் ஊசி வியூகத்திலும் (ஊசிபோன்று நீள்வடிவம்) பயணிக்க வேண்டும்20.

    இரு பகைநாட்டு மன்னர்களுக்கிடையே போர் ஏற்படும்போது, எதிரியை எதிர்த்துப் போரிடும் தன்மை அறிந்து, அவரவர்தம் படைகளின் தன்மைக்கேற்ப, தலைமைக்கேற்ப படைப்பிரிவை ஏற்படுத்திக் கொள்வர். துரியோதனனுக்குப் பாண்டவர்கள்மேல் இருந்த வன்மத்திற்குப் போர்தான் தீர்வு என முடிவானவுடன், இருதரப்பினரும் அவரவர் தங்கள் படைகளைத் தகுதியுடன் பிரித்தத்தைப் பாகவதப் பாரதம் கீழ்வருமாறு குறிப்பிடுகிறது.

    ஓரணிக்குத் தேரதுதான் ஒன்பது நூறாயிரம்
    காரணிந்த தேரதுக்குக் கரிகள் நூறாக
    போரணிந்த தேரது கரிக்கு புரவியது நூறாக
    காரணிந்த தேரதுக்குக் காலாட்கள் நூறாக21

    படைகள் பிரிந்தன. துரியோதனனுக்காக முதலில் பீஷ்மர் படையை அணிவகுத்தார். வலிமையுடைய வீரர்களைக் கொண்ட படைகளை அவர், யானை, யாளி, சிங்கம் மற்றும் பெரிய பறவையின் வடிவாக  வகுத்தார். இதனை,

    காரானை யாளிசிங்கம் கவர்ந்த புள்ளிக்கு நாமாவும்
    பேரான கண்டப் பேரண்ட பட்சிதன் வடிவும்22

    எனப் பாகவதப் பாரதம் காட்சிப்படுத்துகிறது. அப்படைப்பிரிவு ஒன்றில் கன்னனை சேனாதிபதியாக்கி, அப்படைப் பிரிவை நாலணிக்குப் பின்னணியாக்கி வகுத்தார் பீஷ்மர்23. துரியோதனனிடம் பதினெட்டு அக்குரோணி படைகள் இருந்தன. பீஷ்மர் எட்டுத் திசையிலும் முந்நூற்று இருபது காத தூரத்தில், இருபத்தொரு அணிகளைக் கொண்ட படைகளைச் சிறு கடல்போல் நிறுத்தினார். பதினான்காம் நாள் போரில் துரியோதனாதிகள் தங்கள் படைகளை, ’நாலுதிக்குந் தறியாய் நாலெட்டுக் காதமிடம், எண்ணரிய சேனையெல்லாம் எண்பதணி வகுத்துப்’ போரிட்டனர்24.

    பாண்டவர் படையை மாயவர் கருடன் வடிவில் அமைத்தார்25. பகதத்தன், வீமசேனன், அருச்சுனன், நகுலன், சாத்தகி, கடோற்கயன், அவீமன், சீகண்டி, சுகந்தன் முதலியோரின் தலைமையில் படைகள் அணி வகுக்கப்பட்டன; அவை ஓர் அக்குரோணி அளவுடையதாக இருந்தன26.

    போர்க்கருவிகள்

    தானை, யானை, புரவி, தேர் என்னும் நால்வகைப் படையில் தானைப்படை எனப்படும் காலாட்படையினர் பயன்படுத்தும் போர்க்கருவிகளைக் கொண்டு அதனை வில்படை, வாள்படை, வேல்படை என மூன்றாக வகைப்படுத்துவர். இவ்வாறு அவர்கள் பிரிந்திருந்தாலும் படைவீரர்கள் இம்மூன்று போர்க்கருவிகளை மட்டுமன்றி, வேறு சரங்களையும் பயன்படுத்தினர்.  வில் வீரர்கள் பெரிய கேடயங்களையும் கவசங்களையும் குத்து வாள்களையும் வைத்திருந்தனர். தேவைக்கேற்ப அவற்றைப் பயன்படுத்தினர். குதிரைப்படை வீரர்கள் நீண்ட வேல்களுடன் குதிரைப்படைக்கென்று தனித்த முறையில் செய்யப்பட்ட கேடயங்களையும் குத்துவாள்களையும் உடைவாள்களையும் பெற்றிருந்தனர். தேர்ப்படை வீரர்கள் பல்வேறு விதமான வில்களையும் அம்புகளையும் பெற்றிருந்ததோடு, நீண்ட வேல்களையும் எறிவேல்களையும் குத்துவாள்களையும் பயன்படுத்தினர்; அவர்கள் தானைப்படையினர் வைத்திருப்பதுபோன்று கவசங்களையும் கேடயங்களையும் வைத்திருந்தனர்27.

    அர்ச்சுனன் ஏராளமான கணைகளைக் கொண்டு போரிட்டான். அவை அனைத்தும் அவனது குருமார்கள் அவனுக்குப் பரிசாகக் கொடுத்தவையாகும். துரோணர் அவனுக்குக் கம்சனை வதைத்த கண்ணன் சரம், இந்திரன் கொடுத்த ஈராணியன் கணை, சந்திரன் கொடுத்த சிவமணி, ஆதித்தன் கொடுத்த அக்கினிக்கோல் முதலியவற்றைக் கொடுத்தார். கிருபாச்சாரியார் சிவன் அவருக்கு அளித்த சரத்தைக் கொடுத்தார். பீஷ்மர் வில், பிறை, நான்கு கணைகள், மோகினி அஸ்திரம், மூர்த்தி அஸ்திரம், அன்னை பராசக்தியின் மெய்க்கவசம் போன்ற தேர், அழகிய தாமரை ஆகியவற்றைக் கொடுத்தார். பரசுராமன் அர்ச்சுனனுக்கு வாரி என்னும் கணை, வாசு என்னும் ஞாண், சிறந்த மழு, ஒரு தேர், மேனியைக் காக்கும் சக்கரம், பிறைவாய்ச்சரம், நான்கு திசைகளிலும் நான்கு விதமாய்த் திகழும் நாலாயிரம் கோடி கோலவாய் அம்புகள் ஆகியவற்றைக் கொடுத்தார். விதுரன் அர்ச்சுனனுக்கு முப்புரத்தை எரித்த விற்களில் மேலான வில் ஒன்றைக் கொடுத்தார். போர்க்களத்தில் புகுந்து உடன் மீளவும்; நடுவில் நின்று முன்னணியையும் பின்னணியையும் முறிக்கின்ற தந்திரத்தையும் வியாசர் அர்ச்சுனனுக்குக் கொடுத்தார்28. அர்ச்சுனன் சிவனை நோக்கித் தவமிருந்து பாசுபதக் கணையைப் பெற்றிருந்தான்29. குருமார்கள் கொடுத்த போர்க்கருவிகளோடு அருச்சுனன் போர்க்களம் கண்டான்.

    துரியோதனனும் வீமனும் தேர்ப்படையினர் என்றாலும் அவர்கள் காலாட்படையினர்போல் தரையிலிருந்து தண்டாயுதத்தாலும் போரிட்டனர்30. கன்னன் அம்பு எய்வதில் வல்லவனாக இருந்தான். அவனிடம் சக்திவாய்ந்த நாகக்கணை இருந்தது31.

    படைக்கருவிகள் கைவிடுபடை, கைவிடாப்படை என அவை அவற்றின் செயல்பற்றி இருவகைப்படும். கைவிடுபடை அஸ்திரம் என்றும்; கைவிடாப்படை சஸ்திரம் என்றும் வழங்கப்படும். பண்டைக்காலப் போர்க்கருவிகள் எய்படை, எறிபடை, குத்துப்படை, வெட்டுப்படை, அடுபடை, தடுபடை என அறுவகைப்பட்டன. அம்பு எய்படை; விட்டேறு எறிபடை; வேல், ஈட்டி, குந்தம் முதலியன குத்துப்படை; வாள், மழு முதலியன வெட்டுப்படை; தண்டு முதலியன அடுபடை; கவசம், கேடயம் முதலியன தடுபடை என அழைக்கப்பட்டன. மேற்குறித்த அறுவகைப் படைக்கருவிகளின் செயலால் எய்படை முதல் அடுபடை முடியவுள்ள ஐந்தும் தாக்குப்படை என்றும்; ஆறாவதாக உள்ள தடுபடை காப்புப்படை என்றும் கொள்ளலாம்32.    

    போரிசைக் கருவிகள்

    பாரதப்போரில் போர்க்களத்தில் வீரத்தைத் தூண்டும் பல இசைக்கருவிகள் இசைக்கப்பட்டதை வில்லிபாரதம் முதலிய நூல்கள் குறிப்பிடுகின்றன. போர் தொடங்குவதற்கு முன்னர் போர்ப்படையை வருணிக்கும்போது பலவகை இசை வாத்தியங்களின் ஒலிகள் எழுந்ததை, ‘வளைமுழக்கின கிடுகு கொட்டின…..’ என்னும் பாடல் வழி அறியமுடிகிறது33. மேலும், மத்தளம் முதலாகவுள்ள தோற்கருவிகளும்; வெண்கலத்தால் செய்யப்பட்ட மணி, தாளம் முதலிய கஞ்சக்கருவிகளும்; புல்லாங்குழல், நாயனம் முதலிய துளைக்கருவிகளும்; வீணை, யாழ் முதலிய நரம்புக் கருவிகளும் ஏழுகடல்கள் பொங்கி எழுந்ததுபோலவும்; ஏழு தீவுகளும் எதிர்த்தனபோலவும்; ஏழுமேகங்களும் ஒருசேர இடித்தனபோலவும் முழங்கி இசைத்தது34. குருச்சேத்திரப் போரில் முரசுகள் ஒலித்ததையும்; இடம்புரி, வலம்புரி, சஞ்சலம் ஆகிய சங்குகள் முழங்கியதையும் வில்லிபாரதம் குறிப்பிடுகிறது35.

    பாரதப்போரில் பயன்படுத்தப்பட்ட போரிசைக் கருவிகள் சிலவற்றைப் பாகவதப் பாரதம் குறிப்பிடுகிறது. அவற்றில் முதலானது சங்கு. இச்சங்கு வெற்றிச் சங்கு, அபாயச் சங்கு என இருநிலைகளில் ஒலித்ததைக் காணமுடிகிறது. வீமன் வெற்றிச் சங்கு ஊதியதைப் பலவிடங்களில் காணமுடிகிறது36. படைவகுப்பில் இயற்றப்படும் குழூஉக்குறிகளை இசைக்கருவிகளின் வேறுபட்ட இசையால் அறிவிக்கும்போது அது இன்னதென்று படைவீரர் தவிர, வேறுயாரும் அறியாத வண்ணம் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும்37. அந்த வகையில் அமைந்ததுதான் கிருஷ்ணர் எழுப்பிய அபாயச் சங்கு ஓசை. அவ்வோசையைப் பிறரால் புரிந்துகொள்ள முடியாதபோது தர்மர் மட்டுமே இது அபாயத்தைக் குறிக்கும் ஓசை எனப் புரிந்துகொண்டார். படையில் குழூஉக்குறிப் பயன்பாட்டின் சிறப்பு இதன்மூலம் வெளிப்படுகிறது. கிருட்டினரையும் அருச்சுனரையும் கன்னன் முதலானோர் சூழ்ந்த நிலையில் அருச்சுனன் இறப்பது முடிவாகிவிட்டது எனத் தேவர்கள் அஞ்சினர். அப்போது கிருட்டினர் அபாயச் சங்கை ஊதினார். அவ்வோசையைக் கேட்ட தருமர் அச்சத்தால் நடுங்கி, சாத்தகியை அணுகி விபரம் கேட்டார். இதனைப் பாகவதப் பாரதம்,

    அப்போது மாயவனார் அரசர் நடுநடுங்க
    மெய்ப்பான சங்கை விசனாக ஊதிடவே
    சங்கோசை கேட்டதற்பின் தன்மர் மிகநடுங்கி
    இங்கேவா சாத்தகியே என்றவரை வரவழைத்து
    தார்நெடுமாலும் இப்போ சங்குவாய் வைத்தனர் காண்
    போர்விசையர்க்கு இப்போது பொல்லாங்கு வந்ததுண்டோ38

    என அபாயச் சங்கொலி கேட்ட தருமரின் மனநிலையைச் சித்திரிக்கிறது.

    பதினான்காம் நாள் போரில் துரியோதனன் படையில், ‘சாலமொடு சங்கு சமுத்திரம்போலே முழங்க’ எனச் சங்கும் சாலகையும் முழங்கியது குறிப்பிடப்படுகிறது39. சாலம் என்பது சாலகை அல்லது சாலரி என வழங்கும். இது ஒரு வகை இசை வாத்தியம், முப்பத்தேழாவது மேளகர்த்தா ஆகும்40. மேலும், பதினான்காம் நாளில் கிருஷ்ணர்  தம் சக்கரத்தால் சூரியனை மறைக்க, போர் முடிந்துவிட்டது எனத் தவறாகக் கணித்த துரியோதனாதிகள் தம் இருப்பிடத்திற்குப் புறப்பட்டபோது, ‘தம்பட்டம் பேரிகைகள் தாரை கொம்பு தான் முழங்கச் சென்றனர்’41. பதினேழாம் நாள் போரில் கன்னன் மகன் விசகருணன் போருக்குப் புறப்பட்டபோது, ‘தம்பட்டம் நன்றதிர தாரை சின்னம் தானதிர’ தன் தந்தையின் முன் வந்தான்42. இவ்வாறு குருச்சேத்திரப் போரில் இசைக்கருவிகள் பல பயன்படுத்தப்பட்டிருப்பது புலப்படுகிறது.

    போர்க்களம்

    போர்க்களம் வந்த துரியோதன பாண்டவர் படையால் நான்கு திசையிலும் பூமி நடுங்கியது. துரியோதனன் படைகளைப் போர்க்களத்தில் பீஷ்மர் வகைவகையாய் அணிவகுத்து நிறுத்தினார்.

    தென்னான் பாவி திரியோதனன் படையை
    கோலமுள்ள வண்மை குருக்கேத்திரந் தனிலே
    நாலுதிக்கும் பூமி நடுநடுங்கக் கூடியதே
    எண்ணரியதோர் படையை இயல்வீட்டிமனாரும்
    மண்ணதிர விண்ணதிர வகைவகையாய் தானிறுத்தி43

    முன்னணிக்கு முகவாயில்போல் பீஷ்மரே நின்றார். பாண்டவர் படையைப் போர்க்களத்தில் கிருஷ்ணர் கொண்டு நிறுத்தியதை,

    ஏற்றமுள்ள பஞ்சவர்கள் எண்ணரிய சேனையெல்லாம்
    தோற்றமுள்ள மாயவனார் குருக்கேத்திரந் தனிலே
    வாய்த்த சிறுகெருடன் வன்னவடிவாகி யொக்க
    தோற்றமுடனே அணியைத் துவங்க மிகவே வகுத்தார்44

    எனப் போர்க்களத்தில் போர்வீரர்களின் அணிவகுப்பைப் பாகவதப் பாரதம் புலப்படுத்துகிறது.

    முதல்நாள் முதல் பதினெட்டு நாள் வரையுள்ள போரில் போர்க்களம் பரவலாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. சான்றாக, பத்தாம்நாள் போரில் பீஷ்மர், பாண்டவர் படையை எதிர்த்துப் போரிடுவதற்காகப் போர்க்களம் நோக்கிப் புறப்படும்போது பலவித நிமித்தங்களை எதிர்கொண்டார். தேரேறிப் போர்க்களம் வந்தவர், மிக்க கோபத்துடன் பலரையும் வெட்டிச் சரித்தார். தேரோடு பல தேர்கள் முட்டி மோதின; அத்தருணத்தில் கரிகள் பரிகள் குடல்சரிந்தன; காலாட்கள் பார்வேந்தர் பட்டுவிழுந்தனர்; பகதத்தன், சிகசத்துவமுடைய சேரசோழ பாண்டியர், பாஞ்சாலர் முந்நூறு பேரும் பட்டார் படுகளத்தே45 எனப் போர்க்களம் சித்திரிக்கப்படுகிறது.

    போர்க்களத்தில் வீரர்கள் போரிடுவதால் கிளம்பிய செந்தூள் மேலிருக்கும் சூரியன் இருப்பதை அறியமுடியாதபடி மறைத்து விட்டது46. வீமன் கன்னனின் படைவீரர்களைத் துரத்தித் துரத்தி அடித்தான். பல மன்னர்களையும் வீரர்களையும் அவன் கொன்று குவித்ததால் வீரர்கள் கொதித்தெழுந்ததை,

    அடித்தே குமித்தனர்காண் அங்கேதான் துரத்தி
    இடித்தே குமித்தனர்காண் இரணகளம் சூடெனவே47

    எனப் போர்க்களம் சித்திரிக்கப்படுகிறது. மேலும், அங்குப் பேயும் கழுகும் பருந்தும் நரியும் விருந்துண்ட காட்சியும்; இரத்த ஆற்றில் யானைக்குட்டி இழுத்துச் செல்லப்பட்ட காட்சியும் கீழ்வருமாறு சித்திரிக்கப்படுகின்றன.

    கொன்று குருதியிட்டக் கொலைக்களத்தைப் பார்ப்பளவில்
    கரிகள் குடல்சரிய காலாக்கள் தான்மடிய
    பரிகள் குடல்சரிய பார்வேந்தர் பட்டுவிழ
    அரசர் தலையுருள ஆள்வீரர் தான்மடிய
    மூவுயற்றோன் தன்கரத்தை முகமுங் கரமுமுருள
    ஆறுங் குருதி யலைந்தோட அக்களத்தில்
    பாறுங் கழுகும் பருந்தும் விருந்துண்ணவே
    சீறுநரி பேய்கள் தின்றே யேப்பமிட்டிடவே
    ஏறுங் குருச்சேத்திரத்தில் ஆற்றொழுங்கிடவே
    கட்டன் கொடியன் கடும்பாவி நெட்டூரன்
    குட்டிமதக் கரியைக்கூட இழுத்தோடிடுமாம்
    இப்படியோடும் இரத்தாற்றைத் தான்பார்த்து
    செப்பமுள்ள சொல்லான் திருமாலும் ஏதுரைப்பார்48
    இவ்வாறு பாகவதப் பாரதத்தில் போர்க்களம் சித்திரிக்கப்படுகிறது.

    போர் வீரர்கள்

    துரியோதனாதிகளுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே போர்தான் தீர்வு என்று முடிவானபோது படைகள் அணிவகுக்கப்பட்டன. அப்போது தலைமைப் பொறுப்பேற்றிருந்த பீஷ்மரும் கிருஷ்ணரும் அவரவர் தங்கள் விருப்பத்திற்கேற்ப படைத்தலைவர்களையும் அவர்களுக்குக் கீழ் நின்று போரிடும் போர் வீரர்களையும் தேர்வு செய்தனர். போரில் வீரமரணத்தைத் தழுவிய வீரர்களும்; உடல்பாகங்களை இழந்து துன்பத்தை அனுபவித்த வீரர்களும் ஏராளம். அவர்களின் புலம்பல்களைப் பாகவதப் பாரதம் எடுத்துரைக்கிறது. போரில் பரிகளையும் கரிகளையும் வெட்டித் துண்டாக்கிவிட்டு, கணையிழந்து வில்லிழந்து தட்டழிந்து, தலைகெட்ட நூல்போல் வீரர்கள் ஓடினர்49. ஏராளமானோர் பிழைப்பதற்கு வேறு வழிதெரியாமல் போரிட்டு, இது நம் விதியென எண்ணி மடிந்து விழுந்தனர். மேலும் பலர் காலிழந்து, கையிழந்து, சென்னி அறுபட்டு மயங்கி வீழ்ந்தனர். சிலர் நஞ்சையுண்ட மீன்போல் நடுங்கி வீழ்ந்தனர். சிலர் ஓடிப் பிழைத்துக் கொள்ளலாம் என்று போக வழிதேடிப் புலம்பித் திரிந்தனர். ஓடிப்பிழைக்க ஓரிடமும் காணாமல் வழிதேடித் தடுமாறித் திரிந்தனர்.

    மாண்டு விழுகையிலே மகாகோடி சேனையுள்ளார்
    பூண்ட விதியெனவே பொருது மடிவாரும்
    கால்தெறித்து வீழ்வாரும் கைதெறித்து வீழ்வாரும்
    நீலமுடன் அப்பொழுது நின்று விழுவாரும்
    சென்னியற்று வீழ்வாரும் சிவனெனவே வீழ்வாரும்
    வன்னிச் சிராயதுபோல் மதிமயங்கி வீழ்வாரும்
    நஞ்சையுண்ட மீன்போல் நடுநடுங்கி வீழ்வாரும்
    என்செய்வோம் ஈசுரரே என்று விழுவாரும்
    ஆபாத கேடன் அரவக் கொடியுடையோன்
    மாபாவி யென்று மயங்கி விழுவாரும்
    சாகமாட்டாமல் தலைமேல் கையைவைத்து
    போக வழிதேடிப் புலம்பித் திரிவாரும்
    ஓடிப்பிழைக்க ஒருவிடமும் காணாமல்
    தேடி வழிபார்த்துத் தியங்கித் திரிவாரும்50

    எனப் போர்க்களத்தில் உயிருக்குப் போராடிய போர்வீரர்களின் அவலநிலை சித்திரிக்கப்படுகிறது.

    போர் அறம்

    ஒரு மன்னனுக்கு அறமே செங்கோல், அனைவரும் உறங்கும்போது அது விழித்திருக்கும்51. ஒரு மன்னனுக்குப் போரில் வெற்றியைக் கொடுப்பது அவன் போர்க்கலமாகிய வேல் அல்ல; அவனது முறைதவறாத செங்கோல் ஆகும் என்பதை,

    வேலன்று வென்றி தருவது மன்னவன்
    கோலதூஉம் கோடது எனின்52

    எனத் திருக்குறள் எடுத்துரைக்கிறது. ‘மன்னன் உலகத்தைக் காப்பான்; அவனைச் செங்கோல் காக்கும்’53. அறநெறிப்படி ஆட்சி செய்யும் மன்னர்களுக்கிடையே ஏதோ சில காரணங்களுக்காகப் போர் மூண்டுவிட்டால், போரில் கடைப்பிடிக்க வேண்டிய அறம் சார்ந்த நெறிமுறைகள் பல காணப்படுகின்றன. அவற்றை அந்தந்த நாட்டுப் போர்வீரர்கள் ஒழுகி நடக்க வேண்டும். போருக்கான காரணங்கள் என்னவென்று புரிந்துகொள்ளுதல், போர் செய்யும் முறை, போரின்போது நடந்துகொள்ளும் விதம், கொல்லக்கூடாதோர் யார் யார்?, போர் வீரர்கள் ஒருவருக்கொருவரை மதித்தல், காலையில் சூரிய உதயத்திற்குப் பின்னர் போரைத் தொடங்கி, மாலையில் சூரிய மறைவில் போரை முடிவுக்குக் கொண்டு வருதல் முதலியவை போர் அறமாகக் கொள்ளப்படும். போர் என வந்துவிட்டால் எதிர்ப்பக்கம் போரிடுபவரைக் கொல்வதுவே வெற்றி. இந்தக் கொலை வெற்றியின் அடையாளம். ஆனால் எதிரிகளில்கூட இன்னாரைக் கொல்லலாம், இன்னாரைக் கொல்லக்கூடாது என அறம்சார்ந்த பல நெறிமுறைகளை எடுத்துரைக்கின்றன நீதிநூல்கள்.

    போர்த் தருமத்தை அறிந்த போர்வீரன் அறத்தை மதித்து நடந்து கொள்வான். போர்க்களத்தில் போருக்கு அஞ்சி இன்னோரிடத்தில் அடைக்கலமாகி இருப்பவன், அலி, கைகூப்பி வணங்குபவன், தலைமயிர் அவிழ்ந்து சரியப் பெற்றவன், நான் உனக்கு ஆளாகின்றேன் எனக் கூறுகின்றவன், உறங்கிக்கொண்டிருப்பவன், கவசம் முதலியன பூண்டு போர்வீரனாக இல்லாதவன், ஆடை இல்லாதவன், ஆயுதம் இல்லாதவன், போர் செய்யாதவன், போரைக் கண்டுகொண்டிருப்பவன், மற்றொருவனோடு போரிட்டுக் கொண்டிருப்பவன், தண்ணீர் குடிப்பவன், உணவருந்துபவன், பிற செயல்களில் முனைந்திருப்பவன், அச்சமுடையவன், புறங்கொடுத்தோடுபவன் ஆகியோரைக் கொல்லுதல் தகாது. மேலும், வயது முதிர்ந்தோர், பாலகர், பெண்கள், துணையில்லாத மன்னவன் ஆகியோரையும் கொல்லுதல் கூடாது. போர்வீரர் தம் தகுதிக்கேற்பவுள்ள பகைவீரனோடு போரிட்டு அவனைக் கொல்லுதல் அறநெறிக்கு அப்பாற்பட்டதாகாது. அறத்தின்வழி செய்யப்படும் போருக்கு மட்டுமே இது பொருந்தும். வஞ்சகமாகச் செய்யப்படும் போருக்கு இவை பொருந்துவதில்லை54.

    போர்க்களத்தில் எதிரி நிராயுதபாணியாக நிற்கும்போது அவரைக் கொல்லுதல் அறத்திற்கு மாறானது. பத்தாம் நாள் போரிலும் பதினேழாம் நாள் போரிலும் முறையே பீஷ்மரும் கன்னனும் ஆயுதமின்றி நிற்கும்போது, அர்ச்சுனன் அவர்களைக் கொல்லுதல் முறையன்று, அவர்களை நான் கொல்வதில்லை என்று கிருஷ்ணரிடம் கூறியதைப் பாகவதப் பாரதம் கீழ்வருமாறு சித்திரிக்கிறது.

    ஆதி முதலான் அருள் வீட்டிமனாரும்
    பாதிநா ளொன்றதிலே பருத்த சிலைபோட்டு
    வெற்றிசெய்து போர்க்களத்தில் வெறுங்கையே நிற்கையிலே
    கொற்றவரே நானவரைக் கொல்லவல்லேன் எனவுரைத்தார்55
    கண்ணான பஞ்சவர்கள் காசினியை ஆள்வாரென்று
    விண்ணோரென கன்னன் வெறுங்கையே நிக்கலுற்றான்
    வெறுங்கையால் நிக்கையிலே விசையா நீ கொல்லுமென்றார்,
    மெய்யான கன்னனவன் வெறுங்கையால் நிக்கையிலே
    எய்வேனோ பாவம் எனக்குப் பலியாதோ56

    என்றான் அர்ச்சுனன். கிருஷ்ணர் அவனிடம் அவர்கள் மரிக்க வேண்டியவர்கள் என்பதற்கான அறநெறி சார்ந்த காரணங்களையும் அதற்குரிய வழிமுறைகளையும் கூறி, அவர்களைக் கொல்லுமாறு வற்புறுத்தினார்.

    தேற்றரசனால் தன் மகன் அவீமன் (அபிமன்யு) கொல்லப்பட்டான் என்பதை அறிந்து, பதினான்காம் நாள் போரில் மாலைநேரம் தேற்றரசனைக் கொல்வது என்று கிருஷ்ணரும் அர்ச்சுனனும் முடிவு செய்தனர். ஆனால் மாலையில் தக்க நேரத்தில் அவன் இருக்குமிடத்திற்குத் தேரைக் கொண்டுசெல்ல முடியாதபடி இருந்தார் கிருஷ்ணர். அப்போது அவர் தன் கையிலிருந்த சக்கரத்தால் சூரியனை மறைத்தார்57.. பொழுது அடைந்தது என போரை முடித்துக்கொண்டு, இசைக்கருவிகள் முழங்க, துரியோதனாதிகள் ஆற்றில் நீராடித் தம் பாசறைக்குச் சென்றனர். மகிழ்ச்சியோடு சென்ற மன்னர்களின் பின்னால் தேற்றரசன் சென்றுகொண்டிருந்தான். அந்தப்பொழுதில் மாயவர் சக்கரத்தைப் பின்வாங்க, சூரியனும் உதித்தான். அப்போது மாயவர் அர்ச்சுனனிடம், தேற்றரசன் போய்க்கொண்டிருக்கிறான், சிவனை நோக்கித் தவமிருக்கும் அவன் தகப்பன் கையில் தலை அறுந்து விழுமாறு அவன்மேல் சரத்தைச் செலுத்து என்றார்58. மாயவர் கூறியதைக் கேட்ட அர்ச்சுனன், பொழுது அடைந்துவிட்டது என்று எண்ணிப் போகிறவரைக் கொல்வார்களோ? ஈசனை நோக்கிப் பூமியில் செய்துகொண்டிருக்கும் தவத்தைக் குலைப்பார்களோ? என்றான்59. உடனே கிருஷ்ணர், அர்ச்சுனா, போர்க்களத்தில் சாத்திரம், நீதி, தர்மம் பற்றிப் பேசுவார்களோ? இது உனக்கொரு பண்பா? என்று கூறி, வில்லில் சரத்தைப் பூட்டி அவன் கையில் கொடுத்து, தேற்றரசனைச் சொன்னபடி கொல் என்றார். கிருஷ்ணரின் கட்டளையை ஏற்ற அர்ச்சுனன் ஏவிய சரத்தில் தேற்றரசன் தலை அறுந்து, தவம் செய்துகொண்டிருந்த அவன் தந்தை கையில் வீழ்ந்தது60. தர்மத்திற்கு எதிராக இருப்பவனைக் கொல்லுதல் போர் அறம் என்பதற்கேற்பத் தேற்றரசன் அர்ச்சுனனால் கொல்லப்பட்டான்.

    மனிதாபிமான கடமை உணர்வு

    மனிதாபிமான கடமையுணர்வு என்பது ஒருவரின் சொந்த நலன்களைத் தாண்டி, பிறரின் நலன்களைக் கருத்தில்கொண்டு செய்யப்படும் செயல்பாடுகள் ஆகும். இது மனிதநேயம், இரக்கம், கருணை முதலிய உணர்வுகளோடு தொடர்புடையது. ஒருவருடைய துன்பத்தைக் கண்டு அதைத் தணிக்க அல்லது நீக்குவதற்கு உதவுவது. போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் செய்யப்படும் கடமைகள் இதன்பால் அடங்கும். இறந்தவனைக் காணும்போது, காலை நம்மோடு இருந்தவன் மாலை நம்மோடு இல்லையே என்ற ஏக்கம் ஒவ்வொருவர் மனத்தையும் அழுத்தும். அதனாலேயே விழுப்புண் பட்டிறந்தோரை முறைப்படி மரியாதையுடன் அடக்கம் செய்வர். பாகவதப் பாரதம், ஒவ்வொரு நாள் போரின் இறுதியிலும் இறந்தோரை அடக்கம் செய்வதோடு, அவர்களுக்குரிய கடமைகளையும் செய்து, நீராடிச் சென்ற படைத்தலைவர்கள் மற்றும் போர்வீரர்களின் மனிதாபிமான கடமை உணர்வைச் சித்திரிக்கிறது.

    வெற்றியுடன் பட்டவரை வீரமுடனே அடக்கி
    மற்றுமிரு படையும் வாகாகப் பட்டவரை
    முற்றும் எடுத்தடக்கி முழுகினார் நீரதிலே61

    என முதல்நாள் போரின் முடிவில் இறந்தோரை முறைப்படி அடக்கம் செய்து நீராடிச் சென்றதைக் காணமுடிகிறது. நான்காம் நாள் மற்றும் ஒன்பதாம் நாள் போரின் இறுதியில்,

    அன்றுபட்ட மன்னரையும் ஆனவீரர் தங்களையும்
    நன்றியுடன் நடத்தி நல்சுனையில் நீராடி
    முழுபடையும் தங்கள் பதிக்கேகினர் காணப்போது62
    அன்று வரையில் கதிரோனும் போய்மறைந்தான்
    பட்டவரசரையும் பார்வீரர் தங்களையும்
    இட்டமுடனே எடுத்தடக்கி நீர்மொழுகி63

    எனப் போரில் இறந்தோருக்குச் செய்யும் இறுதிக் கடனை நெறியோடு ஆற்றியதைப் பாகவதப் பாரதம் புலப்படுத்துகிறது.

    முடிவுரை:

    பகையும் போரும் எந்நாளும் இவ்வுலகில் உண்டு. மண்ணாளும் மன்னரின் ஆசைக்கு அளவே இல்லை. அகிலமெல்லாம் கட்டி ஆண்டாலும் கடல்மீதிலே ஆணை செலுத்த விரும்புவர். கடலாட்சி பெற்றபின்னர் வானவெளியை ஏகபோகமாக ஆள ஆசைப்படுவர். இத்தகைய ஆசையால் வருவது பூசல். ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும் புதிது இல்லை. அது இவ்வுலகத்து இயற்கை என்பது ஒரு தமிழ்க் கவிஞன் கூற்று64. அக்கூற்றுக்கு இணங்க மண்ணாசை கொண்ட வணங்காமுடியோனாகக் குருநாட்டில் வலம்வந்த துரியோதனனால் ஏற்பட்டதே குருச்சேத்திரப்போர். பாகவதப் பாரதம் அப்போரை வெகுவாகச் சித்திரிக்கிறது.

    மேற்கோள் குறிப்புகள்

    1. சிவ. விவேகானந்தன், பாகவதப் பாரதம்: ஆராய்ச்சிப் பதிப்பு, ப. 88
    2. சு. வித்தியானந்தன், தமிழர் சால்பு, பக். 52, 53
    3. நாராயண வேலுப்பிள்ளை, எம் (உரை) வில்லி பாரதம், இராசசூயச் சருக்கம், பா.எ. 169
    4. சிவ. விவேகானந்தன், மு.கு.நூல், ப. 409
    5. தமிழ்நாடன் (மொ.பெ.ஆ), மநுதர்மம், ப. 103
    6. பரிமேலழகர் (உரை), திருக்குறள், அதிகாரம் 69
    7. இளங்குமரன் (உரை), புறநானூறு, பா. எ. 95
    8. க. கருப்பையா, ஓலைச்சுவடியில் மகாபாரதம்: கிருஷ்ணன் தூது
    9. சிவ. விவேகானந்தன், மு.கு.நூல், ப. 796
    10. மேலது, ப. 796
    11. பரிமேலழகர் (உரை) மு.கு.நூல், பா.எ. 761
    12. அடியார்க்குநல்லார் (உரை), சிலப்பதிகாரம் மூலமும் உரையும், காட்சிக்காதை, 191, 192
    13. சிவ. விவேகானந்தன், மு.கு.நூல், ப. 733
    14. லட்சுமி சுப்பிரமணியன், இதிகாசக் களஞ்சியம், பக். 28, 29
    15. சிவ. விவேகானந்தன், மு.கு. நூல். பக். 835, 836
    16. புலியூர்க்கேசிகன் (உரை), தொல்காப்பியம், மரபியல், நூ. 72
    17. பரிமேலழகர், மு.கு. நூல், பா.எ. 767
    18. கலைக்களஞ்சியம், தொகுதி 6, ப.. 683
    19. ஸ்ரீஆனந்தநாச்சியாரம்மா (மொ.பெ.ஆ), அர்த்தசாஸ்திரம், ப. 543
    20. மேலது, ப. 540
    21. சிவ. விவேகானந்தன், மு.கு.நூல், ப. 820
    22. மேலது, ப. 820
    23. மேலது, ப. 821
    24. மேலது, ப. 945
    25. மேலது, ப. 838
    26. மேலது, ப. 840
    27. அ.இராகவன், தமிழ்நாட்டுப் படைக்கலன்கள், ப.21
    28. சிவ. விவேகானந்தன், பாகவதப் பாரதம்: உரைநடைக் காப்பியம், பக். 95, 96
    29. மேலது, ப. 308
    30. மேலது, ப. 461
    31. மேலது, ப. 552
    32. தங்கங் கந்தசாமி, போரியல் அன்றும் இன்றும், ப. 150
    33. நாராயண வேலுப்பிள்ளை, எம் (உரை) மு.கு.நூ, உத்தியோகப் பருவம், பா.எ. 376
    34. மேலது, பா.எ. 388
    35. மே.கு.நூ, முதற்போர்ச் சருக்கம், பா.எ. 18, 19
    36. சிவ. விவேகானந்தன், பாகவதப் பாரதம்: ஆராய்ச்சிப் பதிப்பு, பக். 889, 893, 905
    37. மு.கதிரேசஞ் செட்டியார் (மொ.பெ.ஆ), சுக்கிரநீதி, ப. 338
    38. சிவ. விவேகானந்தன், மே.கு.நூ. ப. 955
    39. மேலது, ப. 946
    40. கழகத் தமிழகராதி, ப. 446
    41. சிவ. விவேகானந்தன், மே.கு.நூ. ப. 964
    42. மேலது, ப. 988
    43. மேலது, ப. 843
    44. மேலது, ப. 843
    45. மேலது, பக். 912-915
    46. மேலது, ப. 930
    47. மேலது, ப. 959
    48. மேலது, ப. 964
    49. மேலது, ப. 950
    50. மேலது, பக். 950, 951
    51. தமிழ்நாடன் (மொ.பெ.ஆ), மநுதர்மம், ப.101
    52. பரிமேலழகர் (உரை), திருக்குறள், பா.எ. 546
    53. மேலது, பா.எ. 547
    54. மு. கதிரேசஞ் செட்டியார் (மொ.பெ.ஆ), மே,கு.நூ, பக். 229, 230
    55. சிவ. விவேகானந்தன், மே.கு.நூ. ப. 916
    56. மேலது, ப. 997
    57. மேலது, ப. 964
    58. மேலது, ப. 965
    59. மேலது, ப. 965
    60. மேலது, ப. 965
    61. மேலது, ப. 891
    62. மேலது, ப. 897
    63. மேலது, பக். 911, 912
    64. ரா.பி. சேதுப்பிள்ளை, தமிழர் வீரம், ப. 16

    பயன்பட்ட நூல்கள்

    அடியார்க்குநல்லார் (உரை), சிலப்பதிகாரம் மூலமும் உரையும், உ.வே.சா. நூலகம், சென்னை, 1927

    இராகவன், அ, தமிழ்நாட்டுப் படைக்கலன்கள், அமிழ்தம் பதிப்பகம், சென்னை, 2007

    இளங்குமரன் (உரை), புறநானூறு மூலமும் உரையும், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை,2003

    கதிரேசன் செட்டியார், மு (மொ.ஆ), சுக்கிரநீதி, சன்மார்க்கச் சபை, மேலைச் சிவபுரி, 1926

    கலைக்களஞ்சியம், தொகுதி-6, தமிழ் வளர்ச்சிக் கழகம், சென்னை, 1959

    கழகப் புலவர் குழு, கழகத் தமிழகராதி, கழக வெளியீடு, சென்னை, 2004

    சேதுப்பிள்ளை, ரா.பி, தமிழர் வீரம், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, 2011

    தங்கங் கந்தசாமி, போரியல் அன்றும் இன்றும், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை, 1987

    தமிழ்நாடன் (மொ.ஆ), மநுதர்மம், காவ்யா, சென்னை, 2011

    நாராயண வேலுப்பிள்ளை, எம் (உரை) வில்லி பாரதம்- பாகம் 1-5, பூம்புகார் பதிப்பகம், சென்னை, 2006

    பரிமேலழகர் (உரை), திருக்குறள், கழக வெளியீடு, சென்னை, 1951

    புலியூர்க்கேசிகன் (உரை), தொல்காப்பியம், பாரி நிலையம், சென்னை, 1977

    லட்சுமி சுப்பிரமணியன், இதிகாசக் களஞ்சியம், லட்சுமி பிரசுரம், சென்னை, 2006

    வித்யானந்தன், சு, தமிழர் சால்பு, பாரி புத்தகப் பண்ணை, சென்னை, 2021

    விவேகானந்தன், சிவ., பாகவதப் பாரதம் உரைநடைக் காப்பியம், காவ்யா, சென்னை, 2020

    விவேகானந்தன், சிவ., பாகவதப் பாரதம் ஆராய்ச்சிப் பதிப்பு, காவ்யா, சென்னை, 2021

    ஸ்ரீஆனந்த நாச்சியாரம்மா, (உரை), அர்த்தசாஸ்திரம், ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ், சென்னை, 2010

    Share
  • ஒரு புலம் பெயர் தமிழன் , ஒரு கோணம் , ஒரு பார்வை

    ஒரு புலம் பெயர் தமிழன் , ஒரு கோணம் , ஒரு பார்வை

    சக்தி சக்திதாசன்

    1975ஆம் ஆண்டு, 18 வயது மாணவனாக இங்கிலாந்து வந்தேன்.

    உயர்கல்வி எனும் கனவோடு வந்த என் பயணம், இன்று 51 ஆண்டுகளைக் கடந்த ஒரு தாத்தாவின் பயணமாக மாறியுள்ளது.

    இந்த காலப்பகுதியில், இங்கிலாந்து 15 பிரதமர்களைக் கண்டுள்ளது.

    ஒவ்வொருவரும் தனித்துவமான அரசியல் கோட்பாடுகளோடு வந்தாலும், அவர்களின் முடிவுகள் என் வாழ்க்கையின் பல பரிமாணங்களைத் தாக்கியுள்ளன.

    மாறும் தலைமைகளும், மாறாத மக்களுமாய் கண்ட காட்சிகளின் தாக்கங்கள் தந்த அனுபவப் பரிமாணங்கள் பரபரப்பானவை , பிரமிப்பானவை.

    சிலரை மட்டும் இங்கு அலசிப் பார்க்கிறது எந்தன் மனம்.

    ஹரோல்ட் வில்சன் (1964–1970, 1974–1976)

    தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிக்கும் தொழில்நுட்ப வளர்ச்சி என்ற கோட்பாட்டுடன் வந்தார்.

    கல்வி, சுகாதாரம், சமூக சமத்துவம் ஆகியவற்றில் முக்கியமான சட்டங்களை கொண்டு வந்தார்.

    Open University திறந்த பல்கலைக்கழக உருவாக்கம் எனது உயர்கல்வி கனவுக்கு வழிகாட்டியது.

    நிற வேற்றுமை தடைச் சட்டம், கருத்தடை சட்டம், பாலியில் குற்ற சட்டம் போன்ற சட்டங்கள் முக்கியத்துவம் பெற்றன.

    புலம்பெயர்ந்தவர்களுக்கான உரிமைகளை உறுதி செய்யபட்டன.

    மாணவனாக இருந்த எனக்கு, இங்கிலாந்து ஒரு திறந்த சமூகமாக மாறுவதற்கான ஆரம்பக் காலம் இது.

    ஹரோல்ட் வில்சன் பிரதமராக இருந்த காலத்தில் 1975ம் ஆண்டு ஐக்கிய இராச்சியம் ஐரோப்பிய பொதுச் சந்தையில் அங்கத்துவம் பெறுவதற்கான மக்கள் ஆணையை சர்வ ஐன வாக்கெடுப்பின் மூலம் பெற்றுக் கொண்டது.

    டெனிஸ் ஹீலி (1964–1970, 1974–1979)

    ஹரோல்ட் வில்சன் பதவி இராஜினாமா செய்ய இவர் எஞ்சியிருந்த காலத்தின் பிரதமராகப் பொறுப்பேற்றார்

    பாதுகாப்பு அமைச்சராகவும், பின்னர் நிதியமைச்சராகவும் பணியாற்றினார்.

    – 1976ஆம் ஆண்டு, IMF கடன் பெறும் சூழ்நிலையில், கடும் செலவுக் குறைப்புகளை மேற்கொண்டார்.

    – மாணவனாக இருந்த எனக்கு, கல்வி உதவித் தொகைகள் குறைவடைந்தன; வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்தன.

    – ஆனால், அவரது நேர்மையான அரசியல் அணுகுமுறை, எனக்கு பொறுப்பான நிர்வாகம் என்ற கருத்தை உருவாக்கியது.

    மார்கரெட் தாட்சர் (1979–1990)

    “இரும்பு பெண்மணி” என அழைக்கப்பட்ட இவர், தனியார்மயமாக்கல், தொழிலாளர் சங்கங்களின் கட்டுப்பாடு ஆகியவற்றில் தீவிரமான மாற்றங்களை ஏற்படுத்தினார்.

    என் மாணவ வாழ்க்கையில் வேலைவாய்ப்பு குறைபாடுகள், சமூக சேவைகளின் சுருக்கம் போன்றவை நேரடியாகத் தாக்கின.

    ஜோன் மேஜர் (1990–1997)

    மக்கள் வரிச் சட்டம் (Poll Tax) நீக்கம், உள்வரி அறிமுகம் என, சமூக நலனுக்கான மாற்றங்களை மேற்கொண்டார்.

    கறுப்பு புதன் (Black Wednesday) எனப்படும் பொருளாதார வீழ்ச்சி, எனது குடும்பத்தின் வாழ்வாதாரத்தைக் குலைத்தது.

    பிரஜைகள் சட்ட மூலம், அரசு சேவைகளில் பொறுப்புணர்வு உருவாக்க முயன்றார்.

    வட அயர்லாந்து சமாதன உடன்படிக்கை (Northern Ireland Peace Process) ஆரம்பித்தது, சமாதானத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தியது.

    நான் தந்தையாகிய காலத்தில், பிள்ளைகளின் கல்வி, வேலைவாய்ப்பு, சமூக பாதுகாப்பு ஆகியவற்றில் இவரது நடவடிக்கைகள் நேரடியாகப் பாதித்தன.

    டோனி பிளேயர் (1997–2007)

    “நியூ லேபர்” என்ற புதிய கோட்பாட்டுடன் வந்த இவர், கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் முதலீடு செய்தார்.

    என் பிள்ளைகள் பள்ளிக்கல்வி பெறும் காலத்தில், இவரது திட்டங்கள் நன்மை பயந்தன.

    டேவிட் கேமரூன் (2010–2016)

    இவரது ஆட்சியில் நடந்த பிரெக்சிட் வாக்களிப்பு, எனது குடும்பத்தில் எதிர்காலம் குறித்த குழப்பங்களை ஏற்படுத்தியது.

    ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது, புலம்பெயர்ந்தவர்களுக்கு புதிய சவால்களை உருவாக்கியது.

    பொரிஸ் ஜான்சன் (2019–2022): கோவிட் காலத்தின் பிரதமர்

    கோவிட்-19 பாதிப்புகள் மற்றும் நடவடிக்கைகள்

    2020 மார்ச் 23: முதல் தேசிய பூட்டுதல் அறிவிக்கப்பட்டது. “வீட்டில் இருங்கள், வைத்திய சேவையைப் பாவியுங்கள் , உயிர்களைப் பாதுகாப்பதற்கு உதவுங்கள் (Stay at home, protect the NHS, save lives) என்ற முழக்கம் மக்கள் மனதில் பதிந்தது.

    பரிசோதனை மற்றும் தடுப்பூசி திட்டங்கள்:
    “சோதனை மற்றும் நோயாளிகளை கண்டறிதல்” திட்டம் £37 பில்லியன் செலவில் தொடங்கப்பட்டது,

    ஆனால் பல குறைபாடுகள் இருந்தன.
    UK உலகில் முதலில் தடுப்பூசியை அங்கீகரித்து வழங்கியது.

    பொருளாதாரத்தை சீராக்கும் திட்டத்தில் மக்கள் உணவகங்களில் உண்பதற்காக அரச உதவி அளிக்கப்பட்டது.
    – “Eat Out to Help Out” திட்டம், மக்கள் உணவகங்களுக்கு செல்ல ஊக்குவிக்கப்பட்டது,

    ஆனால் இது கோவிட் பரவலை அதிகரித்தது என ஆய்வுகள் கூறுகின்றன.

    அரசியல் மற்றும் நம்பகத்தன்மை சிக்கல்கள்
    கட்சி விதி மீறல் (Partygate) பூட்டுதல் விதிகளை மீறி டவுனிங் ஸ்ட்ரீட்டில் நடந்த கொண்டாட்டங்கள், நம்பகத்தன்மையை பாதித்தன.

    லாங் கோவிட் குறித்து அலட்சியம்: 2020ல், அவர் “லாங் கோவிட் என்பது உண்மையல்ல” என ஒரு ஆவணத்தில் எழுதியதாக தகவல்கள் வெளியாகின.

    டாமினிக் கமிங்ஸ், மட் கன்கொக் போன்ற முக்கிய ஆலோசகர்களுடன் கருத்து வேறுபாடுகள்.

    சமூக சமத்துவம் குறித்த விமர்சனங்கள்: கறுப்பு , ஆசிய இன சமூகங்கள் அதிகமாக பாதிக்கப்பட்ட போதும், ஜான்சன் அரசு “நிற வேற்றுமை நிராகரிப்பு ” அணுகுமுறையை பின்பற்றியது என கோவிட் விசாரணைக் குழு கூறியது.

    லிஸ் ட்ரஸ் (செப்டம்பர்–அக்டோபர் 2022): மிகக் குறுகிய காலம்

    தற்காலிக பட்ஜெட் £45 பில்லியன் வரிவிலக்கு அறிவிக்கப்பட்டது,

    ஆனால் பங்கு சந்தை வீழ்ச்சி, பவுண்ட் மதிப்பு குறைவு, வட்டி உயர்வு ஆகியவை ஏற்பட்டன.

    உலக வங்கி, இங்கிலாந்து வங்கி ஆகியவை தலையீடு செய்ய வேண்டிய நிலை.

    குவாசி க்வாட்டங் பணி நீக்கம், ஜெர்மி கண்ட் நிதியமைச்சராக நியமனம்.
    – Conservative கட்சியில் ஆதரவு குறைந்து, 49 நாட்களில் பதவி விலகினார்.

    Thatcher-போன்ற “Iron Lady” பிம்பத்தை உருவாக்க முயற்சி.

    கன்சர்வேடிவ் (Conservative) உறுப்பினர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார், ஆனால் பொதுமக்கள் ஆதரவு குறைவாக இருந்தது.

    பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இல்லாமை, பத்திரிகை விமர்சனங்கள், பார்டி உள்நோக்க சிக்கல்கள் ஆகியவை பதவி விலகும் நிலையை உருவாக்கின.

    ஒரு புலம்பெயர்ந்தவனின் பார்வையில்

    பொரிஸ் ஜான்சன் காலத்தில், கோவிட்-19 எனும் உலகளாவிய பேரழிவை எதிர்கொள்ளும் அரசியல் சிக்கல்கள், நம்பகத்தன்மை வீழ்ச்சி, மற்றும் சமூக சீர்கேடுகள் எல்லாமே அந்த காலகட்டத்தின் சிக்கல்களுக்கு முகம் கொடுத்தவர்களுக்கு ஒரு வாழ்வாதார பிரச்சனையாகவே உருவானது.

    லிஸ் ட்ரஸ் காலம், ஒரு பொருளாதார சோதனையின் விளைவாக, அரசியல் நிர்வாகத்தின் நுட்பங்களை மீறிய ஒரு பாடமாகும்.

    இவர்கள் இருவரும், எனது 50 வருட அரசியல் அனுபவத்தில், நாட்டின் நிலைமையை மாற்றிய பிரதமர்கள். ஆனால், என் மனதில் பதிந்தது, மக்களின் நலனுக்கான அரசியல் தான்.

    ரிஷி சுனாக் ( 2022 – 2024 )

    ஒரு புலம்பெயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்த ஆசியர் பிரதமராக வருவது, எனக்கு ஒரு தனிப்பட்ட பெருமிதத்தை அளித்தது.

    ஆனால் பொருளாதார சிக்கல்கள், வாழ்வாதார செலவுகள் ஆகியவை தொடர்ந்தே இருந்தன.

    பொருளாதரத்தில் நிபுணராக இருந்தும் அனைத்து பொருளாதார சிக்ககளின் பொறுப்பும் இவரையே சார்ந்தது.

    இவர் ஒரு புலம்பெயர் சமூகத்தைச் சார்ந்தவர் என்பது இவருக்கு எதுவிதமான அனுகூலத்தையும் அளிக்கவில்லை என்பதுவே உண்மை.

    ஐக்கிய இராச்சியம் கிறீஸ்துவ மதத்தை பெரும்பான்மையாகக் கொண்ட வெள்ளை இனத்தவரின் நாடு எனும் கருத்தை ஆதரிப்போர் இவரின் வீழ்ச்சியைக் கொண்டாடினார்கள் என்பதும் உண்மை.

    அதேநேரம் இப்படியான ஒரு சந்தர்ப்பத்தை ஒரு வேற்று மதம், இனம் , நிறம் கொண்ட ஒருவருக்குக்கு கொடுக்கும் சந்தர்ப்பம் இங்கிலாந்து போன்ற ஒரு நாட்டிலேயே நிகழும் என்பது எனக்கு இந்நாட்டின் பிரஜையாக பெருமையளிக்கிறது என்பதும் உண்மை.

    கியர் ஸ்டார்மர் (2024–தற்போது)

    தற்போதைய பிரதமர், “நிலைத்தன்மை மற்றும் மிதவாதம்” எனும் கோட்பாட்டுடன் ஆட்சி நடத்துகிறார்.

    சமூக சமத்துவம், புலம்பெயர்ந்தவர்களின் உரிமைகள் குறித்து நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன்.

    இந்த 50 ஆண்டுகளில், நான் ஒரு மாணவனாக, கணவனாக, தந்தையாக, இன்று ஒரு தாத்தாவாக, ஒவ்வொரு அரசியல் மாற்றத்தையும் என் வாழ்க்கையின் ஒரு பாகமாகவே அனுபவித்துள்ளேன்.

    அரசியல் என்பது வெறும் தலைவர்கள் மாற்றம் அல்ல; அது ஒரு குடும்பத்தின், ஒரு சமூகத்தின், ஒரு மனிதனின் வாழ்வின் ஓரங்களை மாற்றும் சக்தி.

    இங்கிலாந்து அரசியல், அதன் தலைவர்கள், அவர்களின் கொள்கைகள் கொடுத்த தாக்கங்கள் கூட ஏதோ வகையில் என் செதுக்களில் பங்காற்றியிருக்கின்றன.

    ஆனால், என் தமிழ்ப் பாரம்பரியம், என் குடும்பத்தின் உறவுகள், என் மனதின் நிலைத்தன்மை இவை எனக்கு வழிகாட்டிய ஒளிகள்.

    அரசியல் மாற்றங்களை நேர்மறையாக அணுகும் மனப்பாங்கு, ஒரு புலம்பெயர்ந்தவனின் உண்மையான வெற்றிக்குறியாகும்.

    இந்த 50 ஆண்டுகளில், நான் ஒரு மாணவனாக, கணவனாக, தந்தையாக, இன்று ஒரு தாத்தாவாக, ஒவ்வொரு அரசியல் மாற்றத்தையும் என் வாழ்க்கையின் ஒரு பாகமாகவே அனுபவித்துள்ளேன்.

    அரசியல் என்பது வெறும் தலைவர்கள் மாற்றம் அல்ல; அது ஒரு குடும்பத்தின், ஒரு சமூகத்தின், ஒரு மனிதனின் வாழ்வின் ஓரங்களை மாற்றும் சக்தி.

    வாழ்க்கை விரிகின்றது , கணவன், தந்தையாக பொறுப்புகள் பெரிதாகின்றன.

    உறவுகள், பணியிடம், குடும்ப வாழ்க்கை
    -மாறும் முன்னுரிமைகள். ‘நான் என்ன பெறலாம்’ என்ற நிலை ‘நாங்கள் என்ன தரலாம்’ என்ற நிலைக்கு மாறுகிறது.

    தொடர்புகளில் ஆழம். பிள்ளைகள் மூலம் நேர்மையான மனிதத் தன்மை மேம்படுகிறது.

    கடந்த நாள் கனவாகத் தோன்றுகிறது; இன்றைய நாள், எதையாவது அர்ப்பணிக்க வேண்டிய நேரமாக மாறுகிறது.

    அடக்கம் மற்றும் அமைதி. வாழ்க்கையின் முழுமையான பக்கங்களை பார்த்த பின் வரும் ஒரு தூர பார்வை.

    பாரம்பரியம் & கலாசார கவனம். ‘நாம் யார்’ என்பது முக்கியத்துவம் பெறுகிறது.

    அருளும் அறிவும் ஒருங்கிணைகின்றன. சலிப்பற்ற காதல், விதி நிலைத்த ஞானம் இவை தாத்தா மனதின் தனிச் சீரிய தன்மைகள்.

    புதுமுறையை ஊக்குவிக்கும் முயற்சி. “பிழைத்ததை பகிர்வோம்” என்ற எண்ணம், இளம் தலைமுறையுடன் வேரடுக்கும்.

    “நான் வாழ்ந்த வாழ்க்கையின் மொத்தம் இப்போது ஒரு வழிகாட்டி தீபமாகிறது.”

    காலம் ஒரு சோதனை அல்ல, ஒரு அருள்

    ஒரு மாணவன் கனவுகளின் உச்சியில் நிற்பவர்.

    ஒரு தாத்தா, அனுபவங்களின் பள்ளத்தில் அமைதியுடன் வசிப்பவர்.

    இருவரும் ஒவ்வொரு பருவத்தில், வாழ்வை புதிதாய் எழுத்து எழுதுகிறவர்கள்.

    என் இனிய வாசக உள்ளங்களே ! எனது இந்த 50 வருட கால இங்கிலாந்து வாழ்க்கையின் அனுபவங்களை ஒரு புர்ஹித கோணத்தில் பார்க்க விழைந்ததன் விளைவே இது.

    Share
  • பறந்து போ – திரை விமர்சனம்

    பறந்து போ – திரை விமர்சனம்

    அண்ணாகண்ணன்

    பறந்து போ படத்தைப் பார்த்த போது, கவலையாக இருந்தது. இது குழந்தைகளுக்கான படம் என முன்வைக்கும்போது சற்றே அச்சமாகவும் இருந்தது. படத்தின் அதீதமான காட்சிகள் பலவும் இயல்பானவையாகக் காட்டப்படுகின்றன. இவை தவறானவை என்ற எண்ணத்தை ஏற்படுத்தாமல், சரிதான் எனக் குழந்தைகளே நினைக்கும் அளவுக்குக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

    படத்தின் நாயகனாக வரும் சிறுவன் அன்பு (மிதுல் ரயான்), அப்பாவிடம் கோபித்துக்கொண்டு சொல்லாமல் கொள்ளாமல் எங்காவது சென்று விடுகிறான். அப்பா மிர்ச்சி சிவா, அவனைப் பல இடங்களில் தேடுகிறார். இதற்காகவே ஒரு பாடல் வைத்திருக்கிறார், இயக்குநர் ராம். வேர் இஸ் அன்பு? அன்பைக் காணவில்லை. காணோம் காணோம் கா கா காணோம். காத்தோடு காத்தா கரைஞ்சு போனானா? கிட்னாப்பர் கிட்ட மாட்டிக்கிட்டானா? டைம் மிஷின் ஏறித் தொலைஞ்சு போனானா? ஹைட் அண்ட் சீக்கே ஆட்றானா? என மதன் கார்க்கி எழுதியிருக்கிறார். காத்தோடு காத்தா கரைஞ்சு போனானா? என ஒரு குழந்தையைச் சொல்வது, மிகவும் அதிகப்படி. மதன் கார்க்கி இப்படி எழுதுவார் என எதிர்பார்க்கவில்லை.

    சிறுவன் தொலைவதும் அப்பா தேடுவதும் கண்டுபிடிப்பதும் ஏதோ நகைச்சுவை போல் வருகிறது. இதைப் பார்க்கும் சிறுவர்களுள் யாரேனும் இப்படி வேண்டுமென்றே தொலைந்தால் என்னாவது? இப்படிப் பெற்றோரிடம் சொல்லாமல், எங்காவது செல்வதும் பெற்றோரைத் தேட வைப்பதும் சரி எனப் பிள்ளைகள் நினைத்தால், எத்தகைய ஆபத்துகள், சிக்கல்கள் எழும் என இயக்குநர் யோசிக்கவே இல்லையா?

    அடுத்து, கிரஷ். பள்ளித் தோழியை அப்பா பார்த்தால், இவர் தான் உன் கிரஷ்ஷா? எனச் சிறுவன் அன்பு கேட்கிறான். தன் பள்ளித் தோழியைப் பார்க்கப் போகும்போது, நான் என் கிரஷ் வீட்டுக்குப் போகிறேன் என்கிறான். ஸ்லீப் ஓவர் எனச் சிறுவனும் சிறுமியும் சேர்ந்து படுத்துத் தூங்குகிறார்கள். பிறகு, அப்பா வேண்டும் என்கிறான் எனச் சொல்லி, சிறுவனைச் சிறுமியின் அம்மா தூக்கிக்கொண்டு வந்து, சிவா அறையில் படுக்க வைக்கிறார்.

    சிறுவர்கள் இயல்பாக நண்பர்களாக இருக்கலாம். இதில் கிரஷ் என்ற வார்த்தை எதற்கு? பூ கொடுப்பதும் ஓரக் கண்ணால் பார்த்துச் சிரிப்பதும் ஒன்றாகப் படுப்பதும் அவர்களுக்குத் தேவையற்ற கற்பனைகளைக் கொடுக்கும் வாய்ப்பு உண்டு. பத்து வயதுச் சிறுவர்களுக்கு இவையெல்லாம் தேவையா? பல திரைப்படங்களும் திரைப்பாடல்களும் பள்ளிப் பருவக் காதலைக் காட்டுவதால் அது இயல்பு என்ற எண்ணம் எழக் கூடாது. பல நிலைகளில் சமூக அடுக்குகள் கொண்ட தமிழ்ச் சமூகம், இறுக்கமான கட்டுப்பாடுகளைக் கொண்டது. இந்தப் பின்னணியில் உன் கிரஷ், என் கிரஷ் எனச் சிறுவர்கள் பேசுவது நல்லதில்லை. நகரத்து மாணவர்களுக்கும் கிராமத்து மாணவர்களுக்கும் இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தும் வாய்ப்பும் இந்தப் புதிய பண்பாட்டுக்கு உண்டு.

    பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்வதால், சிறுவனை வீட்டில் பூட்டிவிட்டுச் செல்கிறார்கள். சிறுவன் அன்பு, பீட்சா, பர்கர் எனக் கேட்டும் ஆர்டர் செய்தும் சாப்பிடுகிறான். வேவ்போர்டு விளையாடுகிறான். வீட்டில் நெட்பிளிக்ஸ் பார்க்கிறான். வீடியோ கேம் விளையாடுகிறான். கொரிய இசைக்குழுவான பிடிஎஸ் இசைக்கும் பாடல்களைப் பார்க்கிறான். இந்தப் பெருநகர வழக்கங்களைக் காட்டுவதால், சிறுநகரத்திலும் கிராமத்திலும் இருந்து இதைப் பார்க்கும் சிறுவர்கள், தாங்களும் இவ்வாறு பீட்சா, பர்கர் சாப்பிட வேண்டும் எனக் கேட்கக்கூடும். பெருநகரத்திலேயே எல்லோர் வீடுகளிலும் இப்படி எந்த நேரமும் ஆர்டர் செய்து சாப்பிடுவதில்லை. இந்தப் படத்துக்குப் பிறகு, புதிய இயல்பாகச் சிறுவர்கள் அடம் பிடித்துக் கேட்கலாம்.

    படம் முழுவதும் ஒரு பொறுப்பின்மை விரவி இருக்கிறது. சிறுவன் அன்பு எண்ணெய் டின்னை உடைத்து, தரை முழுவதும் எண்ணெய் பரவியுள்ள நிலையிலும் அதற்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்பது போல் கேம் விளையாடுகிறான். அப்பாவே கண்டுபிடித்துத் துடைக்கிறார். தான் எண்ணெய் கொட்டியதால் மற்றவர்கள் வழுக்கி விழுந்துவிடுவார்களே, அவர்களை எச்சரிக்க வேண்டுமே என்று கூட அன்புக்குத் தோன்றவில்லை. படம் நெடுகிலும் இருசக்கர வாகனம் ஓட்டும் சிவா, பெரும்பாலும் தலைக்கவசம் அணியவில்லை. கடன் கொடுத்தவருக்கு உரிய பதில் சொல்லவில்லை. கடன் கொடுத்தவர் துரத்தும்போது சாலையோரப் பாப்கார்ன் கடையில் இடித்துப் பாப்கார்ன் சிதறுகிறது. அவருக்கு இவர்கள் எந்த இழப்பீடும் தரவில்லை.

    சிறுவன் அன்பு அடம் பிடிப்பதுடன் திமிராகவும் நடந்துகொள்கிறான். அப்பாவை வீட்டுக்குள் பூட்டி வைக்கிறான். உடனே இருசக்கர வாகனத்தில் செல்ல வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறான். 25 கி.மீ. தள்ளிக் கடை இருந்தாலும் உடனே பர்கர் சாப்பிட வேண்டும் என்கிறான். சாலையில் வேவ்போர்டு விளையாடுகிறான். மலை சூழ்ந்த இடத்துக்கு வீட்டை மாற்று என்கிறான். பெற்றோர் எதற்கும் கோபப்படாமல், ஐயம் ப்ரவ்டு ஆப் யூ என்கிறார்கள். அதிகம் செல்லம் கொடுக்கும் இந்தக் காலத்துப் பெற்றோர்களை இதில் காண முடிகிறது. ஆயினும் பிள்ளைகள் நினைத்ததை எல்லாம் உடனே செய்ய வேண்டும் என நினைக்கக் கூடாது. பெற்றோர்களும் அவர்கள் கேட்டதை எல்லாம் உடனே நிறைவேற்ற வேண்டும் என நினைக்கக் கூடாது.
    படம், இந்த வகையில் சமநிலையில் இல்லை.

    கிறித்துவப் பெண், இந்துவைக் காதலித்துத் திருமணம் செய்வதும் இந்த இந்து அப்பாவும் மகனும் முஸ்லிம் வீட்டுக்குப் போய்த் தங்குவதும் இயல்பாக உள்ளன. இதிலும் கிறித்துவப் பெண், தம் கணவரைத் தம் வீட்டார் சொல்வது போல் சாத்தானே என அழைப்பது இயல்பாக இல்லை.

    படத்தில் நல்ல விஷயங்களும் இருக்கின்றன. நல்ல விஷயத்துக்கு அடம் பிடியுங்கள். நீங்கள் அடம் பிடித்தால், உங்கள் அப்பாவின் புகைப் பழக்கத்தை விடச் செய்யலாம் என வழிகாட்டியது நன்று. சிறுவன் அன்பு துணிச்சலாக நீச்சல் அடிப்பதும் டிராக்டரை நிறுத்தி லிப்ட் கேட்பதும் புதிய நண்பர்களைப் பெறுவதும் புதிய விளையாட்டுகளைக் கற்பதும் சிறப்பாகக் காட்டப்பட்டு உள்ளன.

    மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆன்டனி, அஞ்சலி, விஜய் யேசுதாஸ், பாலாஜி சக்திவேல், அஜூ வர்கீஸ் உள்ளிட்ட பலரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் தயாநிதி இசையில், 11 பாடல்கள், படத்தில் இடம் பெற்றுள்ளன. பாடலுக்குத் தேர்ந்தெடுத்த சூழ்நிலைகளும் அதற்கு எழுதிய வரிகளும் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். ஆனால், பின்னணி இசையிலும் சூழலுக்கு ஏற்ற மனநிலைக்குப் படம் பார்ப்பவர்களைக் கொண்டு வருவதிலும் இசையமப்பாளர் வெற்றி பெற்றிருக்கிறார்.

    மாணவர்களிடம் திரைப்படம் செலுத்தக்கூடிய தாக்கம் மிகப் பெரியது. மாணவர்கள் படம் பார்க்கும்போது என்னென்ன விஷயங்களை எடுத்துக்கொள்வார்கள் என்ற கண்ணோட்டம், இயக்குநருக்குத் தேவை.

    ஊர் சுற்றுங்கள், உலகம் சுற்றுங்கள், புதிய இடங்களுக்குச் செல்லுங்கள், புதியவர்களைச் சந்தியுங்கள் என்பதே இயக்குநர் ராம் சொல்ல வந்த செய்தி. அவரது அனுபவத்திற்கு அவர் இன்னமும் சிறப்பாகப் பாத்திரங்களைப் படைத்திருக்கலாம். படத்தை எடுத்திருக்கலாம்.

    பறந்து போ – இன்னும் பறக்க வேண்டும்.

    Share
  • நீலத்தைப் பிரித்துவிட்டால் வானத்தில் ஏதுமில்லை என்பது சரியா?

    நீலத்தைப் பிரித்துவிட்டால் வானத்தில் ஏதுமில்லை என்பது சரியா?

    அண்ணாகண்ணன்

    ‘வண்ணம் கொண்ட வெண்ணிலவே’ பாடலை அண்மையில் கேட்டேன். 1991ஆம் ஆண்டு வெளியான சிகரம் திரைப்படத்தில், வைரமுத்து எழுதிய பாடலுக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இசையமைத்துப் பாடியுள்ளார். மிக இனிய இசையும் குரலும் நல்ல பல வரிகளும் கொண்ட பாடல். மென்மையாக வருடி, உள்ளத்தை லேசாக்கக் கூடியது.

    வாராயோ வெண்ணிலாவே, நிலாவே வா, நிலா நிலா ஓடி வா என நிலவை அழைத்த கவிஞர்களின் வரிசையில் வைரமுத்து இணைந்தார். வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத் தாண்டி வருவாயா என்றும் இவரே கேட்டார். வண்ணம் கொண்ட வெண்ணிலவே பாடலில் நிலவுடன் காதலையும் கலந்து பாடி ஈர்த்துள்ளார். இதில் இடம்பெற்ற ‘நீலத்தைப் பிரித்துவிட்டால் வானத்தில் ஏதுமில்லை!’ என்ற வரியை முதலில் கேட்ட போது, ஏதோ அரிய தத்துவம் போல் மயக்கியது. பிறகு தான் இது அறிவியலுக்குப் புறம்பானது என்பது புலப்பட்டது.

    இருவர் படத்தில் ‘பூ கொடியின் புன்னகை’ என்ற பாடலிலும் ‘நீலம் மட்டும் இழந்துவிட்டால் வானில் ஒரு கூரையில்லை’ என எழுதியுள்ளார். அடிப்படை இல்லாத இப்படி ஒரு பார்வையை வைரமுத்து எங்கிருந்து பெற்றார் என்று தெரியவில்லை.

    சூரிய ஒளி, பூமியின் மேற்பரப்பில், குறைந்த அலைநீளம் கொண்ட நீல நிறத்தை அதிகமாகச் சிதறடிப்பதால் வானம் நம் கண்களுக்கு நீல நிறமாகத் தெரிகிறது. சூரியன் உதிக்கும் போதும் மறையும் போதும் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் நிறமாக வானம் தெரிவதற்கு ஒளிச்சிதறலே காரணம். இந்த நிறங்கள் மாறக் கூடியவை. இந்த நிறங்களுக்கு அப்பால் எல்லையற்ற வெளியும் எண்ணற்ற கோள்களும் கற்பனைக்கு எட்டாத சக்திகளும் இருக்கின்றன. இந்த நிலையில், நீலத்தைப் பிரித்துவிட்டால் வானத்தில் ஏதுமில்லை என்பது அறியாமையின் வெளிப்பாடு.

    ஒன்றுமற்ற ஒரு வெற்றிடத்திலிருந்துதான் இவ்வளவு பெரிய பிரபஞ்சம் தோன்றியிருக்கிறது. எனவே வானம் என்பதே ஏதுமில்லாதது எனக் கூற இயலாது. மேலும், இந்த வெற்றிடத் தத்துவத்திற்கும் நீலத்தைப் பிரிப்பதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.

    ‘வானம் எனக்கொரு போதிமரம்’ என எழுதிய வைரமுத்து, நீலத்தைத் தான் வானம் என்று கருதி எழுதினாரா? வானத்தைப் பார்த்தேன் பூமியைப் பார்த்தேன் மனுசனை இன்னும் பார்க்கலையே என எழுதிய வைரமுத்து, வானத்தை இன்னும் சரியாகப் பார்க்கவில்லையா?

    Share
  • ஆண்டவனே வழிகாட்டு !

    ஆண்டவனே வழிகாட்டு !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    அதிகாரம் என்றும் ஆகாது உடலுக்கு
    அதிகாரம் உலக அழிவுக்கு வித்தே
    இதிகாசம் புராணம் எடுத்துமே சொன்னது
    எதையுமே கேளா எழுந்தது அதிகாரம்

    அதிகாரம் அரச கட்டிலில் அமர்கிறது
    எதையுமே பாரா எக்காள மிடுகிறது
    ஊதிப் பெருக்க ஒன்றாக இணையும்
    பாதகர் பலரும் பக்கமாய் வருகின்றார்

    நீதியை மிதிக்கின்றார் நிட்டூரம் செய்கிறார்
    போதனை போதனை பொய்யாய் விரிக்கிறார்
    பாதகத்தை செய்ய பக்குவமாய் சொல்கிறார்
    பாரிருப்பா ரெல்லாம்  பதறித் துடிக்கின்றார்

    அநியாயம் அங்கே அதிரசமாய் ஆகிறது
    ஆலவட்டம் பிடிப்பார் அகமகிழ்ந்து நிற்கின்றார்
    அதிகார அரக்கன் அஹிம்சையை மறந்து
    அதிகார வெறியால் ஆடியே நிற்கின்றான்

    காவலர்க ளெல்லாம் கடிநாயாய் மாறுகிறார்
    கடித்துக் குதறி கடுவிஷமாய் ஆகின்றார்
    நீதிமான்கள் யாவருமே நினைவிழந்து நிற்கின்றார்
    அதிகாரம் அங்கே அதிர்ந்துமே சிரிக்கிறது

    வள்ளுவர் கண்ணீர் கடலினுள் மூழ்கின்றார்
    வள்ளலார் மனமொடிந்து வாடியே நிற்கின்றார்
    தெள்ளுதமிழ் பாரதியார் உள்ளம் ஒடிகின்றார்
    தேசபிதா காந்திமகான் தனைமறந்து அழுகின்றார்

    அறமுடையார் அனைவருமே ஆண்டவனை நாடுகிறார்
    அவலங்கள் போக்கிடவே அனைவருமே வேண்டுகிறார்
    அமைதியொடு அன்புயர அதிகார வெறியழிய
    அனைத்துமாய் இருப்பவனே ஆண்டவனே வழிகாட்டு

    Share
  • (Peer Reviewed) செம்மொழியாம் தமிழ்மொழி

    (Peer Reviewed) செம்மொழியாம் தமிழ்மொழி

    முனைவர் பீ. பெரியசாமி,
    உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை,
    டாக்டர் எம்.ஜி.ஆர். சொக்கலிங்கம் கலைக் கல்லூரி,
    ஆரணி, திருவண்ணாமலை மாவட்டம் – 632317,
    தமிழ்நாடு, இந்தியா,
    மின்னஞ்சல்: periyaswamydeva@gmail.com,
    கைபேசி: 9345315385,

    ORCID ID –  https://orcid.org/0000-0002-7395-9699


    1. முன்னுரை

    மொழி என்பது ஒருவர் தன் உணர்வுகளைப் பிறருக்கு அறிவிக்கப் பயன்படும் ஒரு தொடர்புக் கருவியாகும். இந்தியாவில் உள்ள மொழிக்குடும்பங்களில் மிகப் பழமையானது திராவிட மொழிக்குடும்பமாகும். அத்திராவிட மொழிக்குடும்பத்தின் தாய் மொழியாக விளங்குவது தமிழ் மொழியாகும். அத்தமிழ் மொழியின் தொன்மையையும் அம்மொழி பெற்றிருக்கும் செம்மொழிக்குரிய தகுதிகளையும் ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். அதனடிப்படையில் மொழியின் அடிப்படை, இந்திய மொழிக்குடும்பங்கள், திராவிட மொழி, திராவிட மொழிகளின் தாய் தமிழ்மொழி, திராவிட மொழிகளின் எண்ணிக்கை அவற்றின் பகுப்புமுறை, தமிழ் மொழிக்கும் பிற மொழிகளுக்குமானத் தொடர்பு, தமிழ்மொழி, வெளிநாட்டார் குறிப்புகள், நூல்கள், கல்வெட்டுகள், தமிழரின் தொன்மை, சிறப்பு, தோற்றம், செம்மொழியே தமிழ்மொழி எனும் தலைப்புகளினூடாக இவ்வாய்வுக்கட்டுரை பயணித்து தமிழ்மொழியில் செம்மொழிக்குரிய தகுதிப்பாடுகளை ஆராய்கின்றது.

    2. மொழி

    மொழி என்பது, மனிதர்கள் தங்களது உணர்வுகளையும் கருத்துகளையும் மற்றவர்களுக்குத் தெரிவிப்பதற்கான ஒரு முறையான வழிமுறையாகும். இது, பேச்சு மொழி, எழுத்து மொழி என இரண்டாகப் பகுப்பர். ஆரம்பத்தில் பேச்சுமொழி சைகைகளாகவும், எழுத்து மொழி குறிகள், அடையாளங்களாகவும் இருந்தன. இதனை,

    குழந்தைகளின் மொழித்திறன் வளர்ச்சி, பிறப்பிலிருந்தே தொடங்கி பல ஆண்டுகள் நீடிக்கும்.மொழியின் பிறவடிவம், செயல்முறை ஆகிய இரண்டையும் உள்ளத்தில் கொண்டு மொழியை விளக்கிய அறிஞர்கள் பொருளைக் குறிக்க மரபாக ஏற்பட்ட குறியீடுகளின் ஒழுங்குபட்ட அமைப்பே மொழி என்றனர். (திராவிட மொழிகளின் ஒப்பாய்வு, ப.2)

    எனவும்,

    ஒரு குறிப்பிட்ட பண்பாட்டுக் குழுவினர் புரிந்து கொள்ளும் வரையறுக்கப்பட்ட ஒலிகளின் இணைப்பே மொழி என்றனர். (திராவிட மொழிகளின் ஒப்பாய்வு, பக்.2-3)

    ஜான்சாமுவேல் கூறியுள்ளார். குறியீடும்,  ஒலிகளும் மொழிகளின் தோற்றத்தின் அடிப்படை என்பது இதிலிருந்து அறியமுடிகின்றது.

    மொழியே ஒரு இனத்தின் முக்கிய அடையாளம்.மொழி என்பது சொல்வளம், இலக்கியம், இலக்கணம், ஆகியவற்றையே கொண்டிருத்தல் சிறப்பு. மொழியானது பிறரிடம் தொடர்பு கொள்ளவும், தன் உணர்வுகளை வெளிப்படுத்தவும் பயன்படுகிறது. இதனை,

    மொழி மனித சமுதாயத்தோடு தோன்றி, நின்று, அழியும் என்பது தெளிவு. மொழி நாகரிகத்தின் வித்து; எண்ணத்தின் வடிவம்; ஒருவரோடு ஒருவரை பிணைக்கும் இணைப்பு; காலத்தைக் கடந்து நிலையாக நிற்கின்ற கருத்தோவியம்; மற்ற உயிரினங்களுக்கிடையே காணப்படாத பெருஞ்சிறப்பு; பழக்கம் என்ற விளைநிலத்தின் பயிராக்கப்பட்ட பயிர். (திராவிட மொழிகளின் ஒப்பாய்வு, ப.3)

    என ஜான்சாமுவேல் கூறியுள்ளார். எனவே மனிதன் சமூகமாகக் கூடிவாழத் தலைப்பட்ட காலத்திலே மொழிகள் தோன்றியிருக்க வேண்டும் என்பதை உய்த்துணர முடிகின்றது.

    3. இந்திய மொழிக் குடும்பங்கள்

    இந்தியாவில் ஆஸ்ட்ரிக் குடும்பம், இந்தோ – ஆரிய மொழிக் குடும்பம், திபத்தோ –  சீன மொழிக் குடும்பம்,  திராவிட மொழிக் குடும்பம் என்ற நான்கு மொழிக் குடும்பங்கள் உள்ளன.

    4. திராவிட மொழி

    திராவிட மொழி என்பது மொழியல்ல. அது மொழிக் குடும்பத்தின் பெயர். தமிழிலிருந்து தோன்றிய பல மொழிகளின் கூட்டே திராவிட மொழி என்பது. இதனை முதலில் ஆய்ந்த டாக்டர் கால்டுவெல் அவர்கள் தென்னிந்திய திராவிட மொழிகளையே ஆய்வுக்கு உட்படுத்தினார் பின்னர் ஏற்பட்ட மொழியியல் ஆய்வின் வளர்ச்சியின் காரணமாக வட இந்தியாவிலும், பிற இடங்களிலும் திராவிடம் மொழிகள் கண்டறியப்பட்டன. தமிழில் திராவிடம் என்ற சொல்லை முதன் முதலில் குமரிலபட்டரே பயன்படுத்தியுள்ளார். அவர்,

    திராவிட மொழிகளை ஆந்திர, திராவிட பாஷா(திராவிட மொழிகள்,(தொகுதி-2), ப.79)

    என்க கூறியுள்ளார். பழங்காலத்தில்,

    தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழிகளை‘Tamilian’அல்லது ‘Tamulic’ ( திராவிட மொழிகள், (தொகுதி-1), ப.21)

    என்றே  அழைத்துள்ளனர்.

    ‘தமிழ்’ என்ற சொல்லிலிருந்து தான் ‘திராவிட’ என்ற சொல் உருவாயிற்று என்பதை ஸ்டென்கனொவ் எனும் ஆய்வாளர்,

    ‘திராவிட’ என்ற சொல்லை விட ‘திரமிள’ என்ற சொல் தான் பழமையாக உள்ளது என்றும் அது ‘தமிழ்’ என்ற சொல்லிலிருந்து உருவானது ( திராவிட மொழிகள், (தொகுதி-1), ப.26)

    என்று கூறியுள்ளார். இந்தியாவின் பழைமையான நாகரிகம் திராவிட நாகரிகம் என்பதை,

    இந்திய நாட்டை பொறுத்தமட்டில் ஆரியர்கள் வருவதற்கு முன்பே சிறந்ததொரு நாகரிகம் இந்திய மண்ணில் உருவாகி வளர்ந்திருந்தது என்பதும் அந்நாகரிகம் பல கோணங்களில் பண்பட்டுச் சிறந்து இருந்தது என்பதும் இன்றைய ஆராய்ச்சியாளர்களின் முடிபாகும். ( திராவிட மொழிகள், (தொகுதி-1), ப.31)

    என்றும்,

    திராவிட மொழிகள் மிகப் பழமையான மொழிகள் என்பதும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்திய நாட்டில் வழக்கிலிருந்து வந்துள்ளன என்பதும் இன்றைய மொழியியலாளர்களின் கொள்கை. (திராவிட மொழிகள், (தொகுதி-1), ப.35)

    என்றும் ச. அகத்திய லிங்கம் கூறியுள்ளார். இவற்றின்வழி திராவிட நாகரிகம் இந்தியாவின் பண்பட்ட நாகரிகம் என்பதும் பழைமையான நாகரிகம் என்பதும் அறியமுடிகின்றது. மேலும், இதற்கு வலுசேர்க்கும் விதமாக,

    திராவிடர்கள் பற்றிப் பொதுவாக இரண்டு வன்மையான கருத்துக்கள் உள்ளன. ஒன்று அவர்கள் இந்நாட்டுப் பழங்குடியினர், இந்நாட்டுக்கே சொந்தமானவர்கள். (திராவிட மொழிகள், (தொகுதி-1), ப.95)

    எனக் கூறியதிலிருந்து திராவிடர்களே இந்தியாவின் மூத்த குடிமக்கள் என்பது நிறுவப்படுகின்றது.

    சமஸ்கிருத மொழியிலிருந்து தான் இந்தியாவிலுள்ள எல்லா மொழிகளும் தோன்றின என கால்டுவெல் எனும் அறிஞரின் ஆய்வுநூலான திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் வெளிவரும்வரை சமஸ்கிருத மொழியாளர்களாலும் அதற்குத் துணை போன சில மொழியியல் ஆய்வாளர்களாலும் நம்பவைக்கப்பட்டிருந்தன. ஆனால்,

    திராவிட மொழிகள் சமஸ்கிருத மொழியிலிருந்து பிரிந்தவை அல்ல என்றும் இவை தனி ஒரு இனம் ( திராவிட மொழிகள், (தொகுதி-1), ப.40)

    என்று விளக்கியுள்ளார்  கால்டுவெல்.

    5. திராவிட மொழிகளின் எண்ணிக்கை

    திராவிட மொழிகளின் எண்ணிக்கையில் ஆய்வாளர்களிடையே பல்வேறு கருத்து மாறுபாடுகள் உள்ளன. அவற்றுள் டாக்டர் கால்டுவெல் திராவிட மொழிகள் பன்னிரண்டு என்கிறார்.

    தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளி ஆகிய ஐந்து மொழிகளையும் பண்பட்ட மொழிகளாகவும் தோடா, கோடா, கோண்டு, கூ என்ற நான்கையும் பண்படாத மொழிகளாகவும் கருதினார். பிராகூயி, மால்டோ போன்ற மொழிகளைச் சுட்டிச் சென்றார் தவிர அவற்றைப் பற்றிய சிறப்பாராய்ச்சியினை அவர் மேற்கொள்ளவில்லை. (திராவிட மொழிகளின் ஒப்பாய்வு, ப.18)

    மேலும், கிரியர்ஸன் எனும் மொழியியல் ஆய்வாளர்,

    கொலாமி, நாயக்கி ஆகிய இரு மொழிகளையும் கால்டுவெல் கூறியதோடு இணைத்து திராவிட மொழிகள் 14 எனக் குறிப்பிட்டுள்ளார். திராவிட மொழிகளைத் தென் திராவிட மொழிகள், நடு திராவிட மொழிகள், வட திராவிட மொழிகள் என்று பிரித்தும் ஆராய்ந்துள்ளனர்.

    பர்ரோதன் ஆய்வில்,

    1950 இல் பெங்கோ, பர்ஜி ஆகியன திராவிட மொழிகளின் கிளை மொழிகள் எனக் கண்டார்.

    ஆனால், தற்போது திராவிட மொழிகளின் எண்ணிக்கை முப்பதுக்கும் மேலாகப் பெருகி உள்ளன.

    6. திராவிட மொழிகளின் பகுப்பாய்வு

    திராவிட மொழிகளைத் தென் திராவிட மொழிகள், நடு திராவிட மொழிகள், வட திராவிட மொழிகள் என மூன்று பிரிவுகளாகப் பகுப்பர். அவற்றுள், தமிழ், மலையாளம், கொடகு, கோடா, தோடா, கன்னடம், படகா, துளி ஆகிய ஒன்பது மொழிகளும் தென் திராவிட மொழிகள்.நடு திராவிட மொழிகளைத் தெலுங்கு – குவி கிளை என்றும்,  கொலாமி –  நாயக்கி கிளை என்றும் மொழி நூலால் இரு கூறுபடுத்துவர்.தெலுங்கு – குவி கிளையில் – தெலுங்கு, கோண்டி, குவி, குவி, பெங்கோ, மண்டா ஆகிய ஏழு மொழிகளும் கோலாமி – நாயக்கி கிளையில் – கோலாமி, நாயக்கி,  பர்ஜி, கடப்பா ஒல்லாரி,  கடப்பா சில்லூர் ஆகிய ஐந்து மொழிகளும் உள்ளன.வட திராவிட மொழிகள் – பிராகுயி, மால்டோ, குருக் ஆகிய மூன்று மொழிகள்.

    7. திராவிட மொழிகளின் தாய் தமிழ்மொழி

    திராவிட மொழிகளில் பல்வேறு வகையிலும் தொன்மை வாய்ந்ததும் மற்ற மொழிச் சொற்களுக்கு எல்லாம் வேர்ச்டசொற்களைத் தந்ததும் தமிழ் மொழியே ஆகும். தமிழில் தான் திராவிட மொழி நூல்களுக்கு எல்லாம் காலத்தால் முந்திய தொல்காப்பியம் எனும் நூல் தோன்றியுள்ளது. இதனை,

    திராவிட மொழிகளில் காணப்படும் மிகவும் பழமையான நூல்களில் முதன்மையானது தொல்காப்பியம். ( திராவிட மொழிகள், (தொகுதி-1), ப.150)

    என்று ச. அகத்திய லிங்கம் கூறியுள்ளார். மேலும், ஏனைய திராவிட மொழிகளைக் காட்டிலும் பழமையான இலக்கண இலக்கியங்கள் தமிழில் உள்ளன என்பதை,

    திராவிட மொழிகளின் பழமையான இலக்கியங்களையும் இலக்கணங்களையும் கொண்டுள்ளது தமிழ்மொழி. ( திராவிட மொழிகள், (தொகுதி-1), ப.106)

    என்றும் கூறப்பட்டுள்ளது. டாக்டர் ஜார்ஜ் ஆலுவர் சிந்துவெளி நாகரிகத்தின் தோற்றத்திற்கு அடிப்படை காரணமாக இருந்தவர்கள் திராவிட மக்களே எனத்  தெளிவுபடுத்தி உள்ளார். இதன்வழி தமிழ்மொழி திராவிட மொழிகளின் தாய் என்பதை அறியலாம்.

    8. தமிழ்மொழி

    தமிழின் பழமைக்குச் சான்றாய் விளங்கும் கி.மு. 5 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த தொல்காப்பியத்தை முதல் நூலாகக் கொண்டே தமிழ்மொழி, இலக்கியம், இலக்கணம் பற்றிய ஆதாரங்கள் ஆரம்பமாகின்றன. கிறிஸ்துக்கு முன்பே தமிழில் சிறந்த படைப்புகள் இருந்தன என்பதை,

    திராவிட மொழிகளுக்குள்ளே கிறிஸ்துவ சகாப்தத்தின் துவக்கத்திலிருந்தே சிறப்புமிக்க இலக்கியங்களைக் கொண்டு சிறந்த மொழி தமிழேயாம். (தமிழும் பிற பண்பாடும், ப.15)

    என்று தெ. பொ. மீனாட்சி சுந்தரம் கூறுவதிலிருந்து அறியலாம். மேலும்,

    தமிழ் மொழியின் வரலாற்றுக்கான அடிப்படைச் சான்றுகளுக்கு இலக்கியங்களையே முதன்மையாகக் கொள்ள வேண்டியதிருக்கிறது. இலக்கியம் என்று குறிப்பிடுகின்ற பொழுது இலக்கியத்தரம் வாய்ந்த நூல்கள் என்ற வரையறைக்கு உட்படுத்தாது எல்லா பொருள்களையும் பற்றிய உரைநடை அல்லது செய்யுள் வடிவில் உள்ள எல்லாத் தமிழ் நூல்களையும் குறிப்பதாகக் கொள்ள வேண்டும். (தமிழ் மொழி வரலாறு, பக். 41- 42)

    என்றும் கூறியுள்ளார். எனவே, தமிழ் மொழியின் பழமையான நூல்களைத் தேடி ஆய்வதிலிருந்தே தமிழரின் தமிழ்மொழியின் முழுமையான வரலாற்றை அறிய முடியும் என்பதை உணரமுடிகின்றது.

    9. வெளிநாட்டாரின் பார்வையில் தமிழ்மொழி

    வெளிநாட்டார் சில  தமிழ் மொழியினைக் குறித்த நூல்களை இயற்றியுள்ளனர். அவைகளும் நமக்குத் தமிழ்மொழியின் தொன்மையையும் சிறப்பையும் அறிய உதவுகின்றன. அவற்றுள், பால்தே இயற்றிய இந்திய மொழிகள் பற்றிய நூலொன்று எழுதியுள்ளார். 1680இல் கோஸ்டா தமிழ் இலக்கணத்தை இலத்தின் மொழியில் இயற்றியுள்ளார். 1685 இல் புருனோ தமிழ் இலக்கண நூல் ஒன்று எழுதியுள்ளார். பெஸ்கி (வீரமாமுனிவர்) பேச்சுத்தமிழ் இலக்கணம் ஒன்றை எழுதியுள்ளார். வீரமாமுனிவர் போர்த்துகீசிய மொழியிலும் தமிழிலும் அகராதிகளை இயற்றியுள்ளார். இவையெல்லாம் குறிப்பித்தகுந்தவைகள்.

    10. தமிழ் மொழியின் தொடர்பு

    தமிழ்மொழி ஆரிய மொழி, கிரேக்கம், கொரிய மொழி, ஜப்பானிய மொழி ஆகியவற்றோடு நெருங்கிய தொடர்புடையனவாக விளங்குகின்றன. இதனால் பிற மொழிகளில் தமிழ் மொழிச் சொற்களும் தமிழ்மொழியில் பிறமொழிச் சொற்களும் கலந்து போயின. இதனை,

    பன்னெடுங்காலமாகப் பிறமொழி பேசும் மக்களோடு ஏற்பட்ட தொடர்பினாலே பல பல சொற்கள் தமிழிலே புகுந்து இன்றைய வழக்கிலும் நிலைபெற்று விட்டன. இதுபோலவே தமிழ்ச் சொற்களும் பிற மொழிகளில் புகுந்தன. (தமிழும் பிற பண்பாடும், ப.13)

    என்பதன் வழி அறியலாம். மேலும்,

    1700 ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்கள் பலர் மலாயாவை, கெடாவை, சயாமைக் கைப்பற்றி ஆண்ட செய்திகளும், அவர்களில் முதலாம் குலோத்துங்கன் பர்மாவை ஆண்ட செய்தியும், சோழன் கரிகாலன் இலங்கையைக் கைப்பற்றி ஆண்ட செய்தியும், இலக்கியங்களாலும், வரலாறுகளாலும், கல்வெட்டுகளாலும் அறியப்படும் உண்மைகளாகும். இதனால், தமிழ் மொழியானது அக்காலத்திலேயே உள்நாட்டை ஆட்சி புரிந்தும், வெளிநாட்டை ஆட்சி புரிந்தும் ஒரு வல்லரசின் ஆட்சி மொழியாகவும் இருந்திருக்கிறது எனத் தெரிய வருகிறது. (தமிழின் சிறப்பு, ப.28)

    படையெடுப்புகளாலும் தமிழ்மொழி வெளிநாடுகளில் பரவியது என்பதை இதன்வழி அறியமுடிகின்றது.

    11. தமிழ்மொழிக்கும் ஏனைய திராவிட மொழிகளுக்குமான உறவு

    தமிழ் மொழிக்கும் ஏனைய திராவிட மொழிகளுக்கும் நெருங்கிய தொடர்புகள் உள்ளன. இதனை,

    கி.மு. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த வரருசியும் (Vararuchi), கி.மு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பூஞ்சலையும்(Patanjali) குறிப்பிடும் சில தென்னிந்தியச் சொற்களுடன் இதைத் தொடங்கலாம். இதற்குப் பின்னர் பாலி, சமஸ்கிருதம், பிராகிருதம்  ஆகிய மொழிகளின் இலக்கியங்களிலும், குமரிலபட்டரின் (Kumarila Bhatta), ‘தந்திர வாத்திகா’ (Tantra Varttika) போன்ற நூல்களிலும், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற திராவிட குடும்ப மொழிகளிலும் குறிப்புக்கள் வருகின்றன. கி.பி.14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘லீலா திலகம்’ (Lila Tilakam) எனும் மலையாள நூல் பாண்டிய நாட்டிலும், சோழ நாட்டிலும் நிலவிய சில வழக்காறுகளையும் உச்சரிப்புகளையும் குறிக்கின்றது. இதற்கு முற்பட்ட இராம சரிதம் போன்ற மலையாள நூல்கள், தமிழ் நூல்களே என்க கூறப்படுவதுமுண்டு. (தமிழ் மொழி வரலாறு, பக். 49-50)

    என்பவற்றிலிருந்து அறிய முடிகின்றது.

    • கல்வெட்டுகள்

    தமிழ் மொழியின் தொன்மையை அறிந்து கொள்ளக் கல்வெட்டுகள், பட்டயங்கள், செப்பேடுகள், இலக்கியங்கள், இலக்கணங்கள், வெளிநாட்டார் குறிப்புகள், வெளிநாட்டார் நூல்கள், மொழியியல் ஆய்வுகள் எனப் பல இருந்தாலும், கல்வெட்டுச் சான்றுகள் என்பவை முக்கியமானதாகப் பார்க்கப்படுகின்றன. அந்த வகையில்,

    தமிழகம் கல்வெட்டுகளுக்குப் பெயர் போனது. ஒரு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே கல்வெட்டுகளைக் கண்டுள்ளது தமிழகம். (திராவிட மொழிகள், (தொகுதி-1), ப.142)

    என்பதன் வழி ஏனைய மொழிக் கல்வெட்டுகளைக் காட்டிலும் தமிழ் மொழியில் உள்ள கல்வெட்டுகள் காலத்தால் முந்தியவை என்பதை அறியமுடிகின்றது. மேலும்,

    இன்று கிடைக்கும் கல்வெட்டுகளில் பழமையானவை பிராமி எழுத்துக்களால் ஆனவை. இவற்றைக் கீழ் வளைவு, மறுகால் தலை, ஆனைமலை, அழகர் மலை, மேட்டுப்பட்டி, முத்துப்பட்டி, சித்தனை வாசல், திருவாதவூர்,  விக்கிரமங்கலம் போன்ற இடங்களில் காணலாம். இவற்றைப் பற்றிய செய்திகள் கிபி 1903 முதலே நமக்குக் கிடைக்கின்றன. (திராவிட மொழிகள், (தொகுதி-1), ப.142)

    என்பதன் வழி தமிழகத்தில் கல்வெட்டுகள் கிடைக்கப்பட இடங்களை அறியமுடிகின்றது. அவ்வாறு கிடைக்கும் கல்வெட்டுகள், தமிழ், கிரந்தம், வட்டு எழுத்து ஆகிய மூன்று வகை எழுத்துக்களால்  பொறிக்கப்பட்டுள்ளன. மேலும்,

    தமிழகத்தின் தென் மாவட்டங்களிலுள்ள குகைகளில் பிராமி வரிவடிவத்தில் எழுதப்பட்ட சிறிய கல்வெட்டுகள் பல காணப்படுகின்றன. இவை பிராமி வரிவடிவத்தில் தெற்கத்திய முறையில் எழுதப்பட்டவையாகும். கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் தொல் எழுத்தியல் (Paleography) ஆராய்ச்சி அடிப்படையில் இவற்றின் காலத்தைக் கிறிஸ்துக்கு முந்திய மூன்றாம் இரண்டாம் நூற்றாண்டுகள் என மதிப்பிடுகின்றனர். (தமிழ் மொழி வரலாறு, ப.46)

    எனவே கி.மு. மூன்றாம் நூற்றாண்டளவில் தமிழில் கல்வெட்டுகள் எழுதப்பட்டுள்ளன என்பது அறியப்படுகின்றது. இதுவே பழமை என்றல்ல மேலும் பழமையானக் கல்வெட்டுகளும் கிடைத்துள்ளன. கிடைத்துக் கொண்டும் உள்ளன. சமீப காலமாகத் திருச்செந்தூர் கடற்கரை ஒட்டிய பகுதிகளில் கல்வெட்டுகளும் முருகன் சிலைகளும் பாறைகளும் கண்டறியப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • வெளிநாட்டார் குறிப்புகள்

    வெளிநாட்டினர்களான மெகஸ்தனிஸ், பெரிபுளூஸின் ஆசிரியர், ப்ளினி, தாலமி, சீன யாத்திரிகர் யுவன் சுவாங், மார்கோபோலோ போன்றவர்கள் குறிப்புகள் குறிப்பிடத் தகுந்தன. இவர்களின் குறிப்புகள் தமிழ் மொழியினுடைய பழமைக்குக் குறிப்பிடத் தகுந்த சான்றுகளாகின்றன.

    12. தமிழ் மொழியின் சிறப்பு

    தமிழ் மொழியில் முதல் எழுத்துக்கள் மொத்தம் 30 தான். அவை உயிர்- 12, மெய்- 18, உயிர்மெய் – 216, ஆயுதம் -1 என மொத்தம் 247 எழுத்துக்கள் உள்ளன.  இம்மொழி எழுதவும் படிக்கவும் ஏனைய மொழிகளைக் காட்டிலும் எளிமையானது என்பதை,

    தமிழ் மொழியானது எழுத மட்டுமல்ல படிக்கவும் எளிது. தமிழில் ஒரு எழுத்துக்கு ஒரே ஒலியானதால் எவரும் எளிதாக எதையும் படிக்க முடிகிறது. (தமிழின் சிறப்பு, ப.15)

    என்றும், அதனை எழுதும் முறை எளிமையானது என்பதை,

    சீன, சப்பானிய மொழிகளின் எழுத்துக்களைப் போல் மேலிருந்து கீழ்நோக்கி எழுதுகிற அல்லது உருது மொழி எழுத்துக்களைப் போல வலப்புறமிருந்து இடப்புறம் நோக்கி எழுதுகின்ற கடினமான முறை தமிழுக்கு இல்லை. இடதுபுறமிருந்து வலப்பக்கம் நோக்கி எளிதாக எழுதலாம். (தமிழின் சிறப்பு, ப.16)

    என்றும் கூறப்பட்டுள்ளது.

    13. தமிழ் மக்களின் தோற்றம்

    தமிழ் மக்கள் இந்தியாவின் பூர்வக்குடிகள் என்பதை முன்னமே கண்டோம். அவர்களின் காலம் என்ன என்பதை இன்றளவும் நம்மால் ஆராய்ந்தறிய முடியாததாகவே உள்ளது. 2000 ஆண்டுகளுக்கு முன் கிரேக்கர்கள் இந்தியாவைப் பற்றி எழுதியிருக்கும் குறிப்புகளிலும், 2300 ஆண்டு பழமை வாய்ந்த பிராமிய கல்வெட்டுகளிலும் தமிழ்மொழி குறிப்புகள் காணப்படுகின்றன.  2800 ஆண்டுகளுக்கு முன்பு ரோம் நாட்டை ஆண்ட ஏழாவது சாலமன் காலத்தில் தமிழர்கள் அந்நாட்டுடன் உறவு கொண்டிருந்தார்கள். 3000 ஆண்டுகளுக்கு முந்தைய தொல்காப்பியத்தில் என்மானார் புலவர், என்ப எனத் தொல்காப்பியரே குறிப்பிட்டுள்ளார். மேலும்,

    தமிழகத்தில் 3 கடற்கோள்கள் அடுத்தடுத்தும் தோன்றிக் கடல்நீர் நாட்டில் புகுந்து நிலப்பரப்பை, மக்களை, தமிழ்ச் சுவடிகளை அழித்துவிட்டன என்றும்,  இது நடந்த காலம் 3000-ம், 5000-ம், 9000-ம் ஆண்டுகளாயின எனவும் கூறப்படுகிறது. (தமிழின் சிறப்பு, ப.30)

    என்பதன் வழி ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இங்குத் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர் என்பதை அறியமுடிகின்றது. அதுமட்டுமன்றி,

    காவிரிபூம்பட்டினத்தில் நிலைத்து நின்று வாழும் தமிழ் மக்களைப் “பதியெழு அறியாப் பழங்குடியினர்” என இளங்கோவடிகள் கூறுகின்றார். இதற்கு உரை கூற வந்த அடியார்க்கு நல்லார், “படைப்புக் காலந் தொட்டே வாழுங்குடியினர்” எனக் கூறியிருக்கிறார். தமிழ் மக்கள் தோன்றிய காலத்தைக் குறிப்பிடும் பொழுது, “கல்தோன்றி மண் தோன்றாக் காலத்திற்கு முன் தோன்றி மூத்த குடியினர்” என ஆசிரியர் பரிமேலழகர் கூறுகிறார். (தமிழின் சிறப்பு, ப.26)

    என்கின்றனர். இவற்றின்வழி, தமிழ்மொழியின் தொடக்கக் காலம் என்பது அறுதியிட்டுக் கூற இயலாத வகையில் நீண்டு செல்கிறது என்பதை அறியமுடிகின்றது.

    14. தமிழ்மொழி செம்மொழி

    தமிழ் செம்மொழித் தகுதிக்குத் தொன்மை ஒரு முக்கியமான கூறுபாடாகக் கருதப்படுகிறது. தமிழின் தொன்மை உலகளாவிய ஒன்று. என்பதை,. “Apart from literature written in classical (Indo-Aryan) Sanskrit, Tamil is the oldest literature in India” (Encyclopedia Britannica. Vol.II.P.350) என்று என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா தமிழையும், சமஸ்கிருதத்தையும் தொன்மையான இந்திய மொழிகள், செம்மொழிகள் எனக் கூறியிருக்கிறது.உலகில் எத்தனையோ மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. இதில் பல மொழிகளுக்கு எழுத்து வடிவங்கள் இல்லை என்பதால் பயன்பாட்டுக்குக் கொண்டு வர முடியாமல் உள்ளன. ஆனால் சில மொழிகள் மிகப் பழமையானதாகவும், இலக்கியத்தில் சிறந்து விளங்குவதாகவும் உள்ளன. இவற்றில் சில மொழிகளைச் செம்மொழிகள் என்று அடையாளப்படுத்துகின்றனர்.

    15. செம்மொழித் தகுதி

    ஒரு மொழிக்குச் செம்மொழி என்ற தகுதி அம்மொழியில் இடம் பெற்றிருக்கும் இலக்கியத் தரத்தின் அடிப்படையில்தான் முடிவு செய்யப்படுகிறது. இருப்பினும் செம்மொழி என்பதற்கு அம்மொழியில் இடம் பெற்றிருக்கும் முக்கியமான இரண்டு சிறப்புகள் தேவையாய் இருக்கின்றன. அவைகள், இலக்கியப் படைப்புகள், கலைப் படைப்புகள் இந்த இரு படைப்புகளைக் கொண்டே அந்த மொழி செம்மொழிகளாக அறிவிக்கப்படுகின்றன. அந்தவகையில், 2004-ம் ஆண்டுச் செப்டம்பர் 17-ம் நாள் நடைபெற்ற இந்திய அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில், தமிழைச் செம்மொழியாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான ஆணை, 2004 அக்டோபர் 12-ம் நாள் வெளியிடப்பட்டது.

    • இலக்கியப் படைப்புகள்

    ஒரு மொழியின் சிறப்பிற்கும் செம்மைக்கும் முதல் அடையாளமாகத் திகழ்வது அம்மொழியின் பழமை வாய்ந்த இலக்கியங்கள்தான். இந்த இலக்கியங்களில் இருக்கும் பழமையுடன் அதில் கருத்துச் செறிவுகளும் இருக்க வேண்டும். ஒரு மொழியின் சிறப்பு அந்த மொழியில் படைக்கப்பட்ட இலக்கியப் படைப்புகள் வழியாகத்தான் அறிய முடிகிறது.

    • கலைப் படைப்புகள்

    ஒரு மொழியின் பழமைக்கு இலக்கியம் சான்றாக இருந்தது என்பதுடன் அந்த மொழி சார்ந்த பகுதிகளில் உருவாக்கப்பட்ட கலைப் படைப்புகள் அந்த மொழியின் பழமையை உணர்த்தும் அடுத்த சான்றாக இருக்க வேண்டும். கலைப் படைப்புகள் என்பது கட்டடக் கலை, சிற்பக் கலை போன்ற பழமை வாய்ந்த கலைச் சான்றுகளாக இருக்க வேண்டும்.

    16. உலகச் செம்மொழிகள்

    16.1. தொல் பழமை

    சுமேரிய மொழி, எகிப்திய மொழி, பண்டைய பாபிலோனியம், மத்திய அசீரியம், வேத சமசுகிருதம், பண்டைய எபிரேயம், பண்டைய பாரசீகம், பண்டைய சீனம், பண்டைய கிரேக்கம், பண்டைய சமசுகிருதம், பண்டைய தமிழ், பண்டைய பாளி, பண்டைய இலத்தீன், பண்டைய மண்டேயம், பண்டைய சீரியாம், மத்திய பாரசீகம், பண்டைய கொப்டிக்

    16.2. திராவிட மொழிகள்

    தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்

    16.3. இந்தோ-ஐரோப்பிய மொழிகள்

    கிரேக்க மொழி, சமசுகிருதம், இலத்தீன், பாரசீக மொழி

    16.4. ஆப்பிரிக்க-ஆசிய மொழிகள்

    அரபு மொழி, எபிரேயம்

    16.5. சீனோ-திபெத்திய மொழிகள்:

    சீன மொழி

    17. பழமை வாய்ந்த தமிழ்மொழி

    இந்தியாவில் ஆரியம் சார்ந்த பண்பாட்டிற்கு வடமொழி எப்படி விளங்கியதோ அதைப் போலவே திராவிடம் சார்ந்த பண்பாட்டிற்குத் திராவிட மொழிகளில் முதலாவதான தமிழ் 6000 ஆண்டுகள் மேற்பட்ட இலக்கிய பழமை வாய்ந்தது. ஐரோப்பிய நாகரீகத்தை அறிந்து கொள்ளக் கிரேக்கம், இலத்தீன் மொழிகள் போல் தற்போதைய இந்திய வரலாற்றை அன்றைய சேர, சோழ, பாண்டியர்கள், போன்ற வரலாற்றை அறியத் தமிழ், மொழி தேவையாக உள்ளது.

    18. செம்மொழிக்கான தகுதிகள்

    தொன்மை, தனித்தன்மை, பொதுமைப் பண்பு, நடுவு நிலைமை, தாய்மைப் பண்பு, பண்பாட்டுக் கலை அறிவு பட்டறிவு வெளிப்பாடு, பிற மொழித் தாக்கமில்லா தன்மை, இலக்கிய வளம், உயர் சிந்தனை, கலை இலக்கியத் தனித்தன்மை, மொழிக் கோட்பாடு

    18.1. தொன்மை

    செம்மொழி நிலைக்கு ஒரு மொழி ஆயிரம் ஆண்டுக்கால தொன்மை படைத்ததாக விளங்க வேண்டும். தமிழோ ஆயிரமல்ல ஓராயிரம் ஆண்டிற்கும் மேலாகப் பேசி, எழுதி, படைத்து தனக்குள்ளே பெரும் இலக்கியச் செல்வங்களைக் கொண்டது. இதனை எவராலும் மறுக்கப்படாமல் ஏற்கத்தக்க அளவிற்கு இதன் தொன்மை சிறப்பானது. அத்துடனில்லாமல் இன்றளவும் உலகமெங்கும் பரவியுள்ள தமிழர்களின் பேச்சு மொழியாகவும், எழுத்து மொழியாகவும், கல்வி கற்கும் மொழியாகவும், படைப்பு புனைதலில் புதிய புதிய துறைகளிலும் நிகரற்று விளங்குவது அதன் தனிச் சிறப்பு.

    18.2. தனித் தன்மை

    பல்வேறு திணை நிலங்களிலும் திராவிட குடும்ப மொழிகள் கிளைத்திட வைத்த தமிழ், தாயாக விளங்கி தனக்கென ஒரு மொழிக் குடும்பத்தை உருவாக்கி தன்னைச் சுற்றி வேர்களாகவும், விழுதாகவும் மொழிகள் கிளைப்பினும் தன்னிலை மாறாத உன்னத நிலையுடன் நிலைபெற்று விளங்குவது இதன் தனித்தன்மையாகும்.

    18.3. பொதுமைப் பண்பு

    உலகின் எந்த இயற்கை மொழிக்கும் இல்லாத சிறப்புமிக்க இலக்கணக் கட்டமைப்பு கொண்டது தமிழ் மொழி. தமிழின் இலக்கணப் பொதுமைப் பண்பு நெறிகள் திராவிட மொழிக் குடும்பத்திற்கு மட்டுமல்லாமல் இதர இயற்கை மொழி அனைத்தும் பயனுறும் வகையில் அமைந்துள்ளது இதன் சிறப்பாகும்.

    18.4. நடு நிலைமை

    தமிழின் இலக்கண விதி உன்னத நெறியுடனான பன்முகத் தன்மை கொண்டது. எனினும் இதன் இலக்கண விதிகள் வேறு எதனுடனும் சாராமல் தனித்தியங்கி நடுநிலையுடன் விளங்குவது.

    18.5. தாய்மைத் தன்மை

    தமிழ் எனும் மூல மொழி தான் மட்டுமே என்ற தன்னலமின்றி தாய்மைப் பண்புடன் திராவிட மொழிக் குடும்பம் உருவாகிட அடிப்படையில் விளங்கியது. பேச்சு மொழியென்றும், இலக்கிய வளமிக்க மொழிகளென்றும், பல்வேறு தன்மையுள்ள மொழிக் குடும்பத்தில் முதலாய் ஏனையவற்றுக்குத் தொடக்கமாய் விளங்கும் தாய்மைப் பண்பு ஏனைய இயற்கை மொழிகளை விடச் சிறப்பானது.

    18.6. பண்பாட்டுக் கல்வியறிவு பட்டறிவின் வெளிப்பாடு

    தமிழின் உன்னதமே அதன் இலக்கிய வளங்கள் தாம். தமிழரின் அகத்திணைக் கோட்பாடும், புறத்திணைக் கோட்பாடும் இலக்கியப் படைப்பாளர்களான முன்னோர்களின் பண்பாட்டுக் கல்வியறிவின் வெளிப்பாடாகும். அகத்திணை புறத்திணை மட்டுமல்லாமல் மெய்யியல் கோட்பாடும், அறவழிக் கோட்பாடும் வேறெந்த இயற்கை மொழிப் படைப்பிலும் தமிழில் உள்ள அளவுக்கு இல்லை. இந்த இலக்கிய வளமே தமிழ்ப் புலவர் பெருமக்களின் அறிவுப் புலன் சான்றாக இன்றளவும் திகழ்கிறது.

    18.7. பிறமொழித் தாக்கமில்லா தனித் தன்மை

    உலகில் நிலவும் மொழிக் குடும்பங்களில் மூல மொழியாய்த் திகழும் மொழிகள் யாவும் வேர்ச் சொல்லாக்கத் திறன் குறைவால் பிறமொழிகளின் கூறுகளை சில துறைகளில் தாங்கி நிற்கின்றன. வினைகளால் ஒரு புதிய துறை சார்ந்த சொற்களைத் தமிழில் எளிதாக உருவாக்கும் அளவுக்கு இலக்கண வளம் செறிந்தது தமிழ். ஆகையினால் கடந்த காலமாயினும் சரி நிகழ்காலமாயினும் சரி எதிர்காலமாயினும் சரி எக்காலத்திலும் சமூகப் பண்பாட்டில் நிகழும் மாற்றங்களுக்கேற்ப தனித் தன்மையுடன் தனக்கேயுரிய இலக்கண செழுமையுடன் தமிழில் புதிய சொற்களை, துறைகளை உருவாக்குதல் எளிது. காட்டாக, கம்ப்யூட்டர் எனும் 20ஆம் நூற்றாண்டு சாதனம். உலகெங்கும் பல துறைகளில் பரவியது போன்றே தமிழ் நிலத்திலும் காலூன்றியது. பிறமொழிகள் அதில் வழங்கும் துறை சார்ந்த சொற்களை நேரடியாகப் பயன்படுத்தும் நிலையில் தமிழில் அதனைப் பொருளுணர்ந்து கணியம், கணினி, கணிப்பொறி என ஆக்கம் செய்து பயன்படுத்தல் ஒன்றே தமிழின் பிறமொழி கலவாத் தனித்தன்மை விளங்கிக் கொள்ளத்தக்கது.

    18.8. இலக்கிய வளம்

    தமிழர் தமிழ் இனம் எனும் மக்களினத்தைத் தெளிவாக அறியக்கூடிய காலக் கண்ணாடியாக விளங்குவது தமிழில் உள்ள இலக்கியங்களே. இலக்கியங்கள் வழியாகத் தமிழரைப் பார்க்கும் போது தமிழ் நிலத்தில் ஓங்கி இருந்த பண்பாட்டை, சமூக, பொருளாதார, இயற்கைக் கோட்பாட்டுடன் இணைந்த தமிழரின் வாழ்வை, வளத்தை அறிய இயலும். சங்க காலத்திலிருந்து தொடங்கும் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒவ்வொரு காலம் தோறும் அந்தந்த சூழல்களுக்கேற்ப அரசன், தலைவன், தெய்வம், அற வாழ்க்கை, அக வாழ்க்கை, புற வாழ்க்கை, வீரம், இயற்கை வளம், பழக்க வழக்கம், வழிபாட்டு முறைகள் என்பன போன்றவற்றின் தாக்கம் எப்போதெல்லாம் அதிகரிக்கின்றதோ அப்போதெல்லாம் அது தொடர்பான இலக்கியங்கள் படைக்கப்பட்டன. எந்த இலக்கியமாக இருந்தாலும் அதில் கையாளப்படும் மொழியின் ஓசை, எழுத்து, சொல், பொருள் போன்றவை பொதுமைப் பண்புடன் துலங்கும் வகையில் இலக்கணக் கட்டமைப்புடன் இலக்கியங்கள் படைக்கப்பட்டுள்ளது.

    தமிழிலக்கியத்தின் சிறப்பு : பொதுவில் இத்தகைய இலக்கியப் படைப்புகள் தனிநபர், தன்னார்வக்குழு, அரசு நிறுவனம் எனும் மூன்று தளங்களில் உருவாக்கப்பட்டன. சிற்சில இலக்கியம் தனிப்புலவர்களால் உருவாக்கப்பட்டது. அதைப் போலவே கூட்டாகப் புலவர்கள் குழுக்களும் நூல்களைப் படைத்துள்ளனர். இது போன்ற படைப்பிலக்கியப் பணிகளுக்குக் கொடையாளர்களாக அரசர்கள், அரசாங்கம் விளங்கியுள்ளது. சில அரசர்களே புலமை மிக்கவர்களாக விளங்கி இருந்தமையால் நேரடி இலக்கியப் படைப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.

    பெரும்பாலான சங்க இலக்கிய நூல்கள் புலவர்கள் அமர்ந்த பெரும் குழுவால் உருவாக்கப்பட்டு அவைகளை பிறிதொரு புலவர் குழு அந்த இலக்கிய திறனை அதன் மொழியமைப்பை ஆய்வு செய்வர். பிறிதொரு புலவர் குழு. அப்படைப்பு எக்காலமும் தமிழர்களுக்குப் பொதுவில் பயன்பட வேண்டும் எனும் உயரிய சிந்தனையால் அதன் இலக்கணக் கட்டமைப்பை ஆய்ந்திடுவர். இவ்வாறு ஒரு படைப்பு ஆய்வுக்குப்பின்னரே மக்களை அடைந்ததால் மொழிப் பயன்பாடு, பொதுமைப்பணபாடு தமிழரிடம் மிகுந்திருந்தது. தமிழ் இலக்கிய நூல்களில் கற்பனை நயத்தை விட இன்புறு நோக்கு அதிகமிருக்கும். இயற்கையோடு இணைந்த வாழ்வியல் பண்பாட்டைத் தமிழர்கள் கொண்டிருந்ததால் அது இலக்கியப் படைப்புகளிலும் எதிரொலித்தன.

    தமிழ் இலக்கியப் படைப்புகள் சங்க காலம் தொடங்கி 16ஆம் நூற்றாண்டு வரை செய்யுள் நடையிலேயே படைப்புகள் உருவாக்கம் நிகழ்ந்துள்ளது. ஐரோப்பியர் வருகைக்குப் பின்னரே உரைநடை எனும் புதிய நடை தமிழில் இடம் பெற்றது. பின்னர் ஈழத்து ஆறுமுகநாவலர் தொடங்கி நாடகத்தந்தை பம்மல் சம்பந்த முதலியார், திரு.வி.க. வரை பலர் உரை நடை இலக்கியம் வளர வித்திட்டனர். மேலைநாட்டு இலக்கியங்களையொத்த புதினங்கள், சிறுகதைகள் கட்டுரைகள் எனத் தமிழிலக்கியம் உரைநடை பரிமாணம் பெற்றது. செய்யுள் நடைகளில் படைத்த இலக்கியங்களில் இலக்கணக் கட்டமைப்புடன் பல்வேறு சிற்றிலக்கியங்களும், காப்பியங்களும் விரவியுள்ளன. இவற்றில் தூது, பிள்ளைத் தமிழ், பரணி, கலம்பகம், குறவஞ்சி, பள்ளு, உலா, பல்சந்தம் எனச் செய்யுள் வடிவ இலக்கியத்துள் உறுப்புகளாக விளங்குகிறது.

    இது போலவே மரபு நடைச் செய்யுள் வடிவிலிருந்து புதுக்கவிதை, அய்க்கூ எனும் வடிவுடனும் தமிழ்க் கவிதை படைக்கப்படுகிறது.

    தமிழ் தன் இலக்கியச் செல்வங்களால் இன்புறு, கற்பனை இலக்கியத்துடன் நில்லாமல் தொழில் நுட்பம் சார்ந்த அறிவியல் நூல்கள் படைப்பாக்கத்திற்கும் உட்பட்டுள்ளது. படைப்பின் எந்த உறுப்பாக இருப்பினும் அதற்கேற்ற சொல்வளமும், பொருள் வளமும் தமிழில் சிறப்புடன் விளங்குவதால் உலக இயற்கை மொழிகளின் இலக்கிய தளத்தில் தமிழுக்கென தனித்துவமான இடமுள்ளது.

    18.9. உயர் சிந்தனை

    இலக்கியத்தில் உயர் சிந்தனை என்பது அது எத்தகைய படைப்பாக விளங்கினும் மக்கள் சமூகத்திற்குப் பயன் விளைவிப்பதாக விளங்குதலே. இந்த அடிப்படைதான் தமிழ் இலக்கியங்களின் கருப் பொருளாக விளங்குகின்றன. தமிழ் இலக்கியங்கள் எத்தகைய காலத்தவையாக இருப்பினும் அவை மானுடம் போற்றும் உயர் சிந்தனைகளின் தொகுப்பாகவே மிளிர்வதைக் காணலாம். சங்க இலக்கியங்களில் பாடுபொருளாக விளங்கும் அகத்திணையும், புறத்திணையும், அறவியலும் தமிழர் வாழ்வுடன் இணைந்த உயர் சிந்தனை மரபாகும். உயர் சிந்தனை மரபுகள் இலக்கியத்தில் நிலை பெற்றிட வேண்டி இலக்கண நெறிகள் பிழையறப் பின்பற்றப்பட்டன. தனிமனிதர் தொடங்கி சமூகம், அரசு என்ற மூன்று நிலைகளிலும் கோட்பாடுகளை, வாழ்வியல் நெறிகளை வலியுறுத்தும் தமிழ் இலக்கியங்களில் உள்ள உயர்ந்த சிந்தனை மரபு உலக சிந்தனை மரபிலிருந்து உயர்ந்தோங்கியவை என்பது மறுக்கவியலாது.

    18.10. கலை இலக்கிய தனித் தன்மை வெளிப்பாடு

    தமிழ் இலக்கியங்களில் திகழும் கலை நயம் தனித் தன்மை பெற்றது. தமிழ் இலக்கியங்களில் தனிப்பாடலாயினும், புலவர்கள் குழு படைத்து, தொகுத்த பாடலாயினும் அரசர்கள் அரசு உதவியுடன் படைப்புகளை உருவாக்கிய இலக்கியங்களில் இழையோடும் கலை நயமும், கவி நயமும் போற்றத்தக்கவை.

    ஏழைப்புலவரான சத்திமுத்தப் புலவர் அக்காலத்தில் பாடிப்பரிசு பெறும் வண்ணம் ஓர் ஊருக்குச் சென்றார். அது பனிக்காலம் என்பதால் மேலாடை இல்லா கவிஞர் குளிர்தாங்காமல் ஊர் புறத்தே இருந்த குட்டிச் சுவருக்கருகில் நடு நடுங்கி இருந்தார். அச்சமயம் இரைதேடப் பறந்த நாரையொன்றைப் பார்த்த சத்திமுத்தப் புலவரின் சிந்தனை கவிபுனையத் தொடங்கியது. அவர் கவிதையை உரக்கக் கூறிய போது அந்த வழியாக இரவுக் காவலுக்குத் தாமே பொறுப்பேற்ற அவ்வூர் அரசன் குட்டிச் சுவரருகே ஒரு கவிதை ஒலிப்பதைக் கண்டு கூர்மையாக அதைக் கேட்டனன்.

    “நாராய் நாராய் செங்கால் நாராய்
    பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன
    பவளக் கூர்வாய் செங்கால் நாராய்
    நீயு நின் மனைவியும் தென்திசை குமரியாடி
    வட திசைக்கு ஏகி விராயின்
    எம்மூர்ச் சத்திமுத்த வாவியுள் டங்கி
    நனைசுவர்க் கூறைகளைக் குரற் பல்லி
    பாடு பார்த்திருக்குமென் மனைவியைக் கண்டு
    எங்கோ மாறன் வழுதி கூடலில்
    ஆடையின்றி வாடையின் மெலிந்து
    கையது கொண்டு மெய்யது பொத்திக்
    காலது கொண்டு மேலே தழீஇப்
    பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
    ஏழையாளனைக் கண்டனும் எனுமே” (தனிப்பாடல் – சத்திமுத்தப்புலவர்)

    என்று பாடினார் சத்திமுத்தப் புலவர். பாடி முடித்ததும் மறைவிலிருந்த அரசன் அவரறியாமல் தன் மேலாடையை அவர் மேல் போர்த்துமாறு வீசி விட்டு உடனிருந்த காவலரைப் பணிந்து இப்புலவரை அரண்மனைக்கு அழைத்து வர ஆணையிட்டுச் சென்றான்.

    தமிழகத்தை ஆண்ட பல அரசர்களும் சிறந்த புலமையுடையோர். இயற்கையோடு இணைந்த வாழ்வில் ஊறித் திளைப்பவர்கள். அதனால் அவர்கள் நாட்டு நலத்துடனேயே தங்களின் புலமை வளர்க்கும் திறத்தால் அறிவு சார் புலவர் பெருமக்கள் எப்போதும் அரசவையில் சூழ்ந்திருக்குமாறு வாழ்ந்தனர். இது போன்ற அவைக்களத்தில்தான் கருத்துப் பரிமாற்றம், புதிய பொருட்களைப் பற்றிய ஆய்வு, இலக்கியம் படைத்தல் போன்ற தமிழ்ப் பணிகள் நடந்தது. மேற்காணும் அரசனும் அத்தகையவனே. நாரையின் கூர்மையான நீள மூக்கிற்கு இயற்கையான எடுத்துக்காட்டை அறியப் பல புலவர்களையும், நூல்களையும் ஆய்வு செய்தும் சரியான விடை தெரியாத நிலையில் அரசனின் ஐயத்தையும் போக்கி, தன் நிலையையும் தன் மனைவியின் பிரிவாற்றாமையையும் நயம்படக் கூறிப் பாடிய செய்யுள்.

    ஒரு புலவனின் புலமை அவன் வறுமை. அரசனின் ஐயம் என்பவற்றை மட்டும் கொண்டதல்ல. அந்நாளில் ஆள்வோரும், புனைவோரும் இயற்கையோடு இணைந்த இயல்பு வாழ்க்கையில் திளைத்தனர். அவர்கள் வாழ்க்கை முழுவதும் ஒரு கோட்பாட்டுடன் விளங்கியுள்ளது. வாழ்வதற்கேற்ற நிலம், காலம் அமையப் பெற்றதால் அன்பு தழைக்கும் அமைதி வாழ்வைக் கொண்டிருந்தனர். அதனால் அவர்களின் சிந்தனை எச்சூழலிலும் இயற்கை வயப்பட்டதாகவே விளங்கியுள்ளது. இந்த பண்பே பொதுமையாக இக்கால இலக்கியங்களிலும் வெளிப்பாடாக விளங்குகிறது.

    18.11. மொழிக்கோட்பாடு

    உலகில் சில இனங்களின் அடையாளமாக மொழி காணப்படுகிறது. அந்த மொழியில் படைக்கப்பட்டுள்ள படைப்புகளும், மொழியின் பயன்பாடும், அதன் பொதுப்பண்புகளும் எல்லா காலங்களுக்கும் பொருந்தும் வகையில் மொழியானது தனக்குள் உரியவாறு கட்டமைப்பைக் கொண்டிருப்பதே அம்மொழியின் அடிப்படைக் கோட்பாடாகும். இந்த அரும் பண்புகள் தமிழுக்குண்டு.

    மொழியியலாளர் ஒரு மொழியை மதிப்பிடுகையில் மொழியில் உருவான இலக்கியங்களைத் திறனாய்வு செய்வர். அதில் அம்மொழிக்குரிய இனம், அது வாழ்ந்த, வாழ்ந்துவரும் சூழல், காலம் எனும் மூன்றையும் நோக்குவர். ஏனெனில் ஒரு மொழியால் உருவான இலக்கியம் அச்சமூகத்தை மட்டுமே நமக்குத் தெரிவிப்பவை அல்ல. கூடவே அச்சமூகத்தைத் தொடர்ந்து வரும் மரபார்ந்த பண்பு நலன்கள் பலவற்றையும் தெரிவிக்கின்றன. எனவே தான் முன்னோர்கள் தமிழ் மொழிகளின் படைப்புகள் சமுதாயத்தில் தாக்கத்தை உருவாக்கும் வல்லமை கொண்டது என்கிற காரணத்தால் இலக்கியங்கள் கற்பதற்கும், கற்பிப்பதற்கும் வழங்கும்போது பொருளமைதி குறித்த கோட்பாட்டை வகுத்தனர். இந்த கோட்பாட்டை நெறி பிறழாமல் விளங்க இலக்கணத்தை வகுத்தனர். அதனால் தான் தமிழ்மொழி தனக்குள்ளே இலக்கணம் என்கிற கட்டமைப்பைப் பெற்றுள்ளதால் தரமிக்க இலக்கியப் படைப்புகள் அனைத்தும் சங்ககாலம் முதல் ஓர் ஒழுங்கமைதியுடன் பேணப்பட்டுவருகிறது. அத்துடன் வளர்ந்து வரும் புதிய துறைகள் எதுவென்றாலும் அதனையும் ஏற்றுத் தனித்தன்மை மாறாமல் தூய தமிழ்ச் சொற்களிலேயே அத்துறைகளை அறியும் வண்ணம் சீரிளமைத் திறனுடன் தமிழ் மொழி விளங்குகிறது. இத்திறனே அதன் கோட்பாடாகும்.

    இந்த பதினோர் தகுதிப்பாடுகளும் தமிழுக்கு மட்டுமே பொருந்துவனவாம் என்பதுதான் தனிச் சிறப்பு சமஸ்கிருதத்துக்கு ஏழு தகுதிப்பாடுகளும், லத்தீன், கிரேக்க மொழிகளுக்கு எட்டுத் தகுதிப்பாடுகளும் மட்டுமே பொருந்துகின்றன என்பது மொழியியலாளர் கணிப்பு

    19. தமிழ்ச் செவ்வியல் நூல்கள்

    தமிழ் மொழி இலக்கியங்கள் ஐரோப்பியச் செம்மொழிகளான கிரேக்கம், இலத்தீன், சீனம், ஹீப்ரு, பாரசீகம், அரேபியம் ஆகியவற்றைக் காட்டிலும்  செறிவு மிக்கவை.  கி.பி. 600க்கு முந்தைய காலத்தைச் செவ்வியல் காலமாகக் கொண்டு அக்காலப்பகுதியில் தோன்றிய நூல்களைச் செவ்வியல் அவைகள்,

    19.1.இலக்கணம்

    தொல்காப்பியம், இறையனார் அகப்பொருள்

    19.2.சங்க இலக்கியம் – எட்டுத்தொகை

    நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு

    19.3.பத்துப்பாட்டு

    திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்

    19.4.பதினெண் கீழ்க்கணக்கு

    நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னாநாற்பது , இனியவை நாற்பது, கார்நாற்பது, களவழிநாற்பது, ஐந்திணைஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழிஐம்பது, திணைமாலைநூற்றைம்பது, பழமொழி, சிறுபஞ்சமூலம், திருக்குறள், திரிகடுகம், ஆசாரக்கோவை, முதுமொழிக்காஞ்சி, ஏலாதி, கைந்நிலை

    19.5.காப்பியம்

    சிலப்பதிகாரம், மணிமேகலை,

    19.6. முத்தொள்ளாயிரம்

    ஆகியனவாகும்.

    20. முடிவுரை

    தமிழ்மொழி இந்திய மொழிகளில் பழமையானது என்பதும், தமிழர்களே இந்நாட்டின் பழங்குடிகள் என்பதும், சிந்து சமவெளி நாகரிகம் தமிழர்களுடையதே என்பதும் இக்கட்டுரையின்வழி அறியப்படுகின்றது. அதுமட்டுமல்லாது சமஸ்கிருதம் உள்ளிட்ட எம்மொழியிலிருந்தும் தோன்றியதல்ல தமிழ்மொழி . அது சுயம்புவாக தானே தோன்றி மற்ற மொழிகளுக்கு தாயாக விளங்கக் கூடியது. இம்மொழியின் தோற்றத்தையோ இம்மொழி பேசும் மக்களின் தோற்றத்தையோ எக்கால எல்லைக்குள்ளும் அடக்க இயலாது. உயிர்கள் தோன்றிய காலத்தில் தோன்றிய மனித இனம் தமிழினம். இம்மொழி வணிகத்தாலும், படையெடுப்புகளாலும் பல்வேறு நாடுகளுக்குச் செல்லலாயிற்று. அதுமட்டுமன்றி இம்மொழியில் பல்வேறு மொழிச் சொற்களும் புகுந்துக் கொண்டது. இருந்தாலும் தன் தன்மை மாறாமல் இன்றளவும் நிலைத்து வருகின்றது. அது மட்டுமன்றி செம்மொழிக்குரிய அனைத்துத் தகுதிப்பாடுகளையும் தன்னக்தே கொண்டு செம்மொழியாம் தமிழ்மொழி எனச் சீரிய நடைபயின்று வருகின்றது என்பது இவ்வாய்வுக்கட்டுரையின் வழி அறியப்பட்டது.

    துணைநூற்பட்டியல்

    1. அகத்தியலிங்கம், ச. திராவிட மொழிகள், (தொகுதி-1), மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2002.
    2. அகத்தியலிங்கம், ச. திராவிட மொழிகள், (தொகுதி-2), மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2002.
    3. மீனாட்சி சுந்தரனார், தெ. பொ. தமிழ் மொழி வரலாறு, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2022.
    4. மீனாட்சி சுந்தரனார், தெ.பொ. தமிழும் பிற பண்பாடும், நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 1998.
    5. விசுவநாதன், கி.ஆ.பெ. தமிழின் சிறப்பு, பாரி நிலையம், சென்னை, 1993.
    6. ஜான் சாமுவேல், ஜி. திராவிட மொழிகளின் ஒப்பாய்வு, ஆசியவியல் நிறுவனம், சென்னை, 2001.
    7. Encyclopedia Britannica. Vol.II.
    8. https://www.tamilvu.org/courses/hg300/hg304/html/hg304tso.htm

    மதிப்பாய்வறிஞரின் கருத்துரை

    Ø தனது மொழிச் செல்வப் பெருமையையும் பண்பாட்டு விழுமியத்தையும் கருத்திற் கொள்ளாமல் நடப்பியல் சார்ந்த, பயனற்ற ஒரு அலங்கார வாழ்வுக்குத தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் இன்றைய தமிழ்ச சமுதாயத்திற்குக், குறிப்பாக இளைஞர் சமுதாயத்திற்குப் பயன்படும் ஒரு கட்டுரை இது.

    Ø திராவிட மொழிகள் பற்றி உலகந்தழுவிய அறிஞர் பெருமக்களின் ஆய்வுக் கருத்துக்களை நிரலாகப் பயன்படுத்தியிருப்பதும் இந்திய மொழிக்குடும்பங்களைப் பற்றிய பகுப்பும் வரலாற்றுப் பின்புலமும் மொழியியல் ஆய்வு மாணவர்களுக்குப் பெருந்துணையாகலாம்.

    Ø “உயர்பதவியில் இருப்பதனாலேயே அனைத்தும் தெரிந்தவர்கள்” என எண்ணிக் கொள்ளும் போலிகள் வலம் வரும் காலத்தில், வலிமையான தரவுகளோடும், பொருத்தமான மேற்கோள்களோடும் கட்டுரை அமைந்திருப்ப்து ஒரளவு ஆறுதலைத் தருகிறது.

    Ø ஆய்வு நெறி முற்றாகப் பின்பற்றப்படவில்லை எனினும் அதற்குப் பங்கம் ஏற்படாத அளவுக்குக் கட்டுரை அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Ø பத்தி பிரிப்புக்களிலும் அவற்றுக்கு எண் மற்றும் பகுப்பு எண் கொடுப்பதிலும் ஆய்வாளர் இன்னும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். சான்றாகச் செம்மொழிக்கான தகுதிகள் என்னும் பத்திக்கு எண் கொடுக்காமல், அதன் துணைப் பிரிவுகளுக்கு எண்கொடுத்திருப்பதைச் சுட்டலாம். செம்மொழிக்கான தகுதிகள் என்னும் பத்திக்கு எண் 11 என்றால் தொடர்ந்து வரும் உட்தலைப்புக்கள் 11.1. 11.2 11.3 11.4 என்று அமைந்திருக்க வேண்டும். அதுதான் ஆய்வு நெறி. இதுபோன்றே கட்டுரையின் அனைத்துப் பத்திகளுக்கும் உட்தலைப்புக்களுக்கும் எண் கொடுத்திருந்தால் கட்டுரை இன்னும் சிறந்திருக்கும்.

    Ø சராசரியாகப் பக்கத்திற்கு ஐந்தென நூற்றுக்கும் மேற்பட்ட ஒற்றுப்பிழைகள் நீக்கமற இலங்கும் இறைவனைப் போல் கட்டுரை எங்கும் பரந்து கிடக்கின்றன. “மொழி என்பது ஒருவர் தன் உணர்வுகளை (ப்) பிறருக்கு அறிவிக்கப் பயன்படும் ஓர் தொடர்பு (க்) கருவியாகும்.” என இரண்டு ஒற்றுப் பிழைகளோடுதான் கட்டுரையே தொடங்குகிறது. வல்லினம் மிகுதலும் மிகாமையும் செம்மொழியான தமிழின் தனிச்சிறப்பல்லவா?


     

    Share
  • விம்பிள்டன் – ஒரு புலம்பெயர்ந்த தமிழன் கண்ட 50 ஆண்டு பார்வை

    விம்பிள்டன் – ஒரு புலம்பெயர்ந்த தமிழன் கண்ட 50 ஆண்டு பார்வை

    சக்தி சக்திதாசன்

    1975ஆம் ஆண்டு. பதினெட்டு வயதுடன் ஒரு இளைய தமிழ் மாணவன் இலங்கையில் இருந்து உயர்கல்விக்காக, ஒரு கனவுடன் இங்கிலாந்தை அடைகிறான்.

    அவனுக்கு சமையல், பனி, பசுமை, பசியுடன் பசும் கவலை. ஆனால் இங்கிலாந்தின் மதிய பத்திரிகை தாள்களில் ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் ஒரு பெயர் மட்டும் பிரகாசிக்கிறது விம்பிள்டன்.

    அதிகாரமுள்ள இங்கிலாந்தின் டென்னிஸ் அரங்கம்.

    புலம்பெயர்ந்த இளைஞனின் வாழ்க்கையில் இந்த விளையாட்டு நிகழ்வு எப்படி ஒளியும் நிழலும் ஆனது .

    1877 இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த போட்டி, உலகின் மிகப் பழமையான மற்றும் மதிப்புக்குரிய டென்னிஸ் போட்டியாக விளங்குகிறது.

    இங்கிலாந்து இதனை தம் கலாச்சார பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகக் கொண்டாடுகிறது.

    வெள்ளை உடைகள், பழங்கால மர பலகை புள்ளிவிவரங்கள், முக்கனிகள், ஸ்ட்ராபெரி ஆகியவையுடன் தேசிய ஒளிப்பதிவுகளும், பி.பி.சி நேரடிக் காட்சிகளும் இதை ஒரு நாட்டுப்பற்றின் பிம்பமாக மாற்றியுள்ளன.

    1970களில் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு விளையாட்டுப் பண்பாடுகள் புதிது.

    கிரிக்கெட் மட்டும் சிலருக்கே பரிச்சயமாக இருந்தது.

    ஆரம்பத்தில் விம்பிள்டன் ஒரு “மேல்மட்ட மரபுக்கவசத்துடன் கூடிய வெள்ளையர் விழா” போலவே தோன்றியது.

    ஆனால் இடையே ஒலித்த கமெண்டேட்டர்களின் வாகைச்சொற்கள், சுய ஒழுக்கத்தின் நடிப்பு, வீரர்களின் அமைதியான போராட்டம்… இவை அந்த இளைய தமிழனின் கவனத்தை ஈர்த்தன.

    புதுமுகங்களை கொண்டு வந்த விம்பிள்டன்: மார்ட்டினா நவரட்டிலோவா, விரோஜினா வேட், 1990களில் வந்த வினஸ் மற்றும் செரீனா வில்லியம்ஸ் போன்ற கருப்பின வீராங்கனைகள், ‘தம்மைப் போன்றவர்கள்’ மேடையிலுள்ளதை புலம்பெயர்ந்த மாணவனுக்குக் காண்பித்தது.

    விம்பிள்டன் பல்லின சமத்துவத்தின் ஓர் அமைதியான தூதுவராக வளர்ந்தது .

    வீரர்களை மட்டும் அல்ல, பார்வையாளர்களின் மனதையும் மாற்றியது.

    வாழ்க்கை முறை மாறுதல்: ஆண்டுதோறும் ஒவ்வொரு ஜூலை மாதமும் அந்த மாணவன் இப்போது இங்கிலாந்துப்.பிரஜை.

    வீட்டு நாகரிகத்தை விம்பிள்டன் பார்வையுடன் பொருத்திக் கொண்டார்.

    1980களில் பின்புற வரிசையிலிருந்த புலம்பெயர்ந்த மக்களுக்கு விம்பிள்டன் வழிமுறைகள், காகித வாசல் சீட்டுகள், கட்டண உயர்வுகள் அனைத்தும் “தடைச் சின்னங்கள்” போலவே இருந்தன.

    சத்தம் இல்லாத பிரேக்குப் பொழுதுகள், காழ்ப்புணர்வு நிறைந்த கமெண்ட்டுகள் சில சமயங்களில் மன உளைச்சலை ஏற்படுத்தின.

    விளம்பரத்திற்கும் வணிகரீதியிலும் போட்டி மெதுவாக நகரும்போது, பசுமையும் பசுமை மனப்பான்மையும் குறைந்தது என்பது கண்ட வருத்தமாக இருந்தது.

    இப்போது 68 வயதுடைய ஒருவன் — அன்றைய விம்பிள்டன் போட்டியையும், இன்றைய இணைய ஓட்டுக்களிலும் காணும் தமிழ்க் குழந்தைகளையும் இணைத்துப் பார்க்கிறான்.

    அவனுக்கு, விம்பிள்டன் என்பது வெறும் விளையாட்டு நிகழ்வல்ல — அந்த நாடு எப்படி, எதனால், எங்கு திருந்தியது என்பதற்கான ஒரு சமூகக் கண்ணாடி.

    அவனது கனவுபசுமை மேடையைப் போலவே பசுமை மனமுடைய புது தலைமுறையினரை வளர்த்தெடுத்திடும் உயர் நோக்குடையது.

    புலம்பெயர்ந்த ஒரு மாணவனின் பார்வையில் விம்பிள்டன் என்பது நேரம் போவதைக் காட்டும் கடிகாரம் மட்டுமல்ல. அது உலகம் நோக்கும் திறந்த ஜன்னலாகவும், ஒருமைப்பாட்டின் ஓர் அடையாளமாகவும் மாறிவிட்டது.

    இங்கிலாந்தின் விளையாட்டு அரங்கில், தமிழரின் சிந்தனையும் கூச்ச உணர்வும், ஒளியும் நிழலும் நிகழ்த்தும் வண்ணப் பயணமாக இருக்கிறத்.

    என் இனிய வாசக உள்ளங்களே !

    இங்கிலாந்தில் என் வாழ்வுப் பயணத்தின் 50 வருடங்களை முடித்து விட்ட இந்த ஆண்டில் இந்த உலகப் பிரசித்தி பெற்ற போட்டி மீதான எனது பார்வையை பகிர்ந்து கொண்டேன்.

    Share
  • நினைத்துப் படிப்போம் நிமலனும் மகிழுவான் !

    நினைத்துப் படிப்போம் நிமலனும் மகிழுவான் !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    வள்ளுவம் படிப்போம் வள்ளலார் படிப்போம்
    பட்டினத் தடிகள் பாட்டையும் படிப்போம்
    நாலடி படிப்போம் நல்லுரை படிப்போம்
    தேனார் திரு  வாசகம் படிப்போம்

    மூலரைப் படிப்போம் மூதுரை படிப்போம்
    சீலமாம் அடியார் திருமுறை படிப்போம்
    கம்பனைப் படிப்போம் கவிமணி படிப்போம்
    பாரதி பாரதி தாசனைப் படிப்போம்

    படிப்போம் படிப்போம் பலதும் படிப்போம்
    படித்ததை மனதில் பக்குவப் படுத்துவோம்
    படித்ததை படித்த நிலையிலே விட்டிடா
    படித்ததை  வாழ்வுக்குப் படிக்கல் லாக்குவோம்

    முன்னவர் நமக்காய் எழுதிக் குவித்தார்
    முது சொம்மாக நிறைந்தே இருக்கு
    எடுக்க எடுக்க எமக்கே பயனே
    எடுத்துப் படித்தால் இமயமாய் உயருவோம்

    வாழ்வின் தத்துவம் வண்ணமாய் சொன்னார்
    வரம்பைக் கட்டிக் காத்தார் வாழ்வினை
    வழுக்கி வீழா காத்திட முனைந்தார்
    நினைத்துப் பார்க்கையில் நெஞ்சம் நிறையுது

    கையைப் பிடித்து அழைத்துச் சென்று
    கடமை கண்ணியம் காட்டி நிற்கிறார்
    அறத்தை உணர்த்தி அன்பை உணர்த்தி
    ஆண்டவன் நினைப்பை அகத்தில் பதிக்கிறார்

    நூல்களைப் படிப்போம் நுண்மாண் கருக்களை
    வாழும் வாழ்வுக்கு வழியாய் கொள்ளுவோம்
    மனத்தின் மாசை அகற்றும் மருந்தாய்
    நினைத்துப் படிப்போம் நிமலனும் மகிழுவான்

    Share
  • கண்ணதாசன் பாடல்களில் ஆன்மீக அறிவியல் – 12

    கண்ணதாசன் பாடல்களில் ஆன்மீக அறிவியல் – 12

    சக்தி சக்திதாசன்

    “பாடல் எழுதும் போது எல்லாம் நான் ஒரு பாமரனாகிறேன்,” என்று கவியரசர் கண்ணதாசன் ஓரளவு நகைச்சுவையோடும், ஆழமாகவும் கூறியிருப்பார்.

    இன்றைய போதனைகள் புத்தக பக்கங்களில் சிக்கிக் கிடக்கும்போது, அவர் பாடல்கள் பாமரனின் இதயத்தில் நெடுக பரவி உருக்கமாக குரல் கொடுக்கின்றன.

    சாமானிய மனிதன் திருப்பதி சென்று வணங்கும் போது தன் உள்ளே எழும் பயம், ஆசை, ஏக்கம் அனைத்தையும் கண்ணதாசன் வரிகளில் காண்கிறான்.

    “அருணாசலா” என அவர் உரைத்த ஒவ்வொரு அடியிலும் ஆன்மாவின் அசைவும், உள்ளத்தின் வலியும் ஒலிக்கின்றன.

    இந்தக் கட்டுரையில், அவருடைய பாடல்களில் தோன்றும் ஆன்மீகப் பின்னணியை ஒரு பொதுமகனின் நேர்மையான உணர்வுகளில் இருந்து பார்வையிடப் போகிறோம் .

    ஞானமும் பாசமும் கலந்து ஓர் இறை நாடாளும் மொழியாக வளர்ந்த கவிதைகளின் பயணம் இது.

    இனி வரிகளைப் பார்ப்போம்

    கண்ணன் என்னும் மன்னன் பேரை
    சொல்ல சொல்ல
    கல்லும் முள்ளும் பூவாய் மாறும்
    மெல்ல மெல்ல

    கண்ணன்” என்பதன் வெளிப்படை பொருள் கிருஷ்ணர் என்றே இருந்தாலும், ஆன்மீகப் பார்வையில் இது சுத்தம், கருணை, ஈர்ப்பு எனும் தெய்வீக சக்தியைச் சுட்டுகிறது.

    மனிதன் கண்ணன் எனும் நாமத்தை குறும்புக்காக அல்ல, இருகரம் நீட்டிச் சொல்லத் தொடங்கும்போது, அவனது உள்ளத்து மயக்கம் கலைந்து, உலகின் கடினம் கன்மங்களும் (“கல்லும் முள்ளும்”) மெதுவே மலர்களாக மாறுகிறது .

    அதாவது உள்ளத்தின் கெட்ட எண்ணங்கள் கரைந்து, அமைதி, சமாதானம், பாசம் போன்ற மலர்கள் மலருகின்றன.

    “சொல்ல சொல்ல…” என்பது ஜபம், நாமசங்கீர்த்தனை போன்ற உள்மூச்சு சாதனைகள் போன்றது.

    “மெல்ல மெல்ல…” என்பது பயணத்தின் நிதானத்தை — உடனடித் திருவிளைவு அல்ல, நெடுநாள் தீட்சையின் பயனைச் சுட்டுகிறது.

    அவர் சொல்லும் ஒரே நாமம் நம்முள் ஏற்படுத்தும் அந்தரங்க மாற்றம் — இதுவே இந்த வரிகளில் அடங்கிய அதீத ஆன்மீக உண்மை.

    இனி அடுத்து

    எண்ணம் என்னும் ஆசைப்படகு
    செல்ல செல்ல
    வெள்ளம் பெருகும் பெண்மை உள்ளம்
    துள்ள துள்ள

    எனும் வரிகளையும்.எமது கவியரசரின் ஆன்மீகக்.கோணமும் உள்ளதா என்று பார்க்கலாம்.

    இது வெறும் காதல் அல்லது மனித உணர்வைப் பற்றி மட்டும் பேசும் வரிகள் போல தோன்றினாலும், இவற்றில் ஒரு ஆழ்ந்த ஆன்மீகப் பார்வை நிரம்பியிருப்பதைக் காணலாம்.

    வாருங்கள், வரிகளைக் கவனமாக விரித்து பார்ப்போம்.

    “எண்ணம் என்னும் ஆசைப்படகு செல்ல செல்ல…”
    இது மனதின் யாத்திரை இல்லையா ? சஞ்சலமான எண்ணங்களின் பயணம்.

    இங்கே “எண்ணம்” என்பது மனிதனின் சிந்தனைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

    “ஆசைப்படகு” என்பது ஆசைகளால் இயக்கப்படும் மனம் .

    இது சம்சாரத்திற்குள் பயணிக்கும் நாவாயைக்கூறும் உருவகம்.

    ஆன்மீகப் பாதையில், இந்த எண்ணங்கள் வெறுமனே யாதொன்றையும் தாண்டாது முன்னே செல்கின்றன.

    ஆனால், அவை நடத்தும் பயணம் நம் உள்ளத்தின் ஆழத்தில் மாற்றங்களை உருவாக்குகிறது.

    “வெள்ளம் பெருகும் பெண்மை உள்ளம் துள்ள துள்ள…”

    தெய்வீக சக்தியின் வெளிப்பாடு – சக்தியின் உந்துதல்

    “பெண்மை உள்ளம்” என்பது இங்கு பெண்தன்மையை மட்டுமல்லாமல், பராசக்தியையும், கருணையை ஏந்தும் ஆதித்தாயியையும் குறிக்கக்கூடும்.

    அந்த உள்ளத்தில் வெள்ளம் பெருகும் – அதாவது, தெய்வீக சக்தி அதிகரிக்கிறது; அந்த பரிசுத்த எழுச்சி துள்ளித் துள்ளிக் களிக்கிறது.

    இது ஆன்மாவின் உணர்வு பூரிப்பும், சக்தியின் உந்துதலும்.

    ஒரு பக்கம், ஆசைகள் மனத்தை இழுத்துச் செல்லும் பொழுது, மற்றொரு பக்கம், அந்த ஆசைகளால் தூண்டப்படும் தேடலில் உள்ளம் ஒரு பரிபூரணத்தை அடைகிறது.

    இது இன்பத்தில் இல்லை – இறை உணர்வின் பரவலில் உள்ளம் துள்ளும் தருணம்.

    “சங்க நிரைத்த புவியிலே” என்ற வார்த்தைகளை போலவே, இங்கே உணர்ச்சி வெள்ளம் ஆன்மீகப் பரவலைக் குறிக்கிறது.

    அப்பப்பா அப்படியே கவியரசரின் வரிகளுக்குள் விழுந்து நீச்சலடிக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

    இன்பத்தின் ஆழத்திற்கு அல்லவா அடித்துச் செல்லப்படுகிறோம்.

    வாருங்கள் உங்களை அடுத்த அலைக்குள் இழுத்துச் செல்கிறேன்

    தென்றல் இன்று பாடும் பாடல் என்ன என்ன
    தென்றல் இன்று பாடும் பாடல் என்ன என்ன
    சின்ன கிளிகள் சொல்லும் கதைகள் என்ன என்ன
    சின்ன கிளிகள் சொல்லும் கதைகள் என்ன என்ன

    “தென்றல் இன்று பாடும் பாடல் என்ன என்ன…”

    இறை அருள் நம்மை எப்போதும் எட்டிப் பார்க்கும் குரல்
    தென்றல், ஆன்மீகத்தின் பார்வையில், இறை பரிசுத்த சத்தமாகவும், நமக்கு உள்ளளவிலேயே கனிவாக ஒலிக்கும் அறிவுரையாகவும் பார்க்கப்படுகிறது.

    தென்றல் என்றால் தவிர்க்கமுடியாத ஒரு அழைப்பு போல அது நம்மை நோக்கிக் கீற்றுக்கீற்றாய் வந்து, “நீ என்னுள் கேள்” எனச் சொல்வது போல் இந்த பாட்டில், அந்த தென்றல் பாடும் இசை என்பது நம் உள்ளத்தில் எழும் விழிப்புணர்ச்சி அல்லது தெய்வீகக் குறிப்பு.

    “சின்ன கிளிகள் சொல்லும் கதைகள் என்ன என்ன…”

    நற்குணங்களின் நட்பு மொழிகள் — இறை இளமை திருவுணர்வுகள்
    சின்ன கிளிகள் — இவை குழந்தையின் உள்ளம் போல தூய்மையான எண்ணங்களுக்குச் சின்ன உருவகங்கள்.

    கிளிகள் உன்னதமான நற்குணங்களை (அன்பு, கருணை, நம்பிக்கை) நம் மனதுடன் பகிரும் தூதர்கள் போல. அவைகள் சொல்லும் கதைகள் என்பது நம் மனம் கேட்டுச் சொல்லும் உள் உண்மைகளின் மென்மையான அறிவுரை.

    சின்ன கிளிகள் = நம் உள்ளத்தின் தூய எண்ணங்கள், முன்வாழ்ந்த மகான்கள் அல்லது குழந்தைத் தெய்வங்கள்
    கதைகள் = ஒவ்வொரு நாள் வாழ்க்கையிலும் இறை நம்பிக்கையோடு எதிர்கொள்ளும் ஆன்மீகக் கற்றல்களின் கதைச்சுருக்கம்

    மொத்தத்தில்…
    இந்த வரிகள் இயற்கையின் மென்மையிலிருந்து கடந்து நம்முள் ஒலிக்கும் தெய்வீக வாய்மொழிகளைப் பேசுகின்றன.

    தென்றலும் கிளிகளும் ஒன்றாய் சொல்லும் அந்த மெளனச் செய்தி — “உயிரின் அமைதியை உறுதி செய், அங்கே தான் இறை இருக்கின்றான்.” என்கிற வாக்கில் எழுதியிருப்பாரோ ?

    சரி இனி அடுத்த வரிகளைப் பார்ப்போம்

    கண்ணும் நெஞ்சும் ஒன்றுக்கொன்று
    பின்ன பின்ன
    என்னை துன்பம் செய்யும் எண்ணம் என்ன என்ன

    இந்த வரிகளில் உணர்வுப் புழுங்கலும், ஆழ்ந்த ஆன்மீக ஏக்கமும் இயல்பாகக் கலந்து ஓடுகிறது.

    வாருங்கள், இதை உள்நோக்கத்தில் புனைந்துகொண்டு, ஒரு ஆன்மீக நுண்ணுணர்வு அடங்கிய விளக்கத்தில் பரிமாறிப் பார்க்கலாம்.

    “கண்ணும் நெஞ்சும் ஒன்றுக்கொன்று பின்ன பின்ன…”

    இது உளவுருக்கம் மற்றும் தெய்வச் சேர்ந்த உணர்வின் ஓட்டம்  .

    இங்கே ‘கண்’ என்பது பார்வையை மட்டும் அல்ல, உள்ளார்ந்த விழிப்பையும் குறிக்கலாம். ‘நெஞ்சு’ என்பது உணர்வுகளின் இருப்பிடமாய், இறையை உணரும் மையமாகக் கொள்ளலாம்.

    இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று பின்னிப் பின்னி செல்லும் தருணம் என்பது, ஆன்மிகத் தேடலின் ஆரம்பம் .

    “பார்வையால் உணர்வு தூண்டப் பெறுகிறது, உணர்வால் பார்வை பெருமை பெறுகிறது.”
    இது ஒரு பக்தன், தெய்வத்தை உள்மனத்துடன் நாடும் முயற்சியின் பிரதிபலிப்பு.

    “என்னை துன்பம் செய்யும் எண்ணம் என்ன என்ன…”

    அவித்யையின் விளையாட்டோடு கலந்த அக எண்ணத்தின் எழுச்சி.

    மனதிற்குள் எழும் எண்ணங்களே நமக்குத் துன்பத்தை அளிக்கின்றன.

    ஆன்மீகப் பார்வையில், இந்த எண்ணங்கள் மாயையின் வெளிப்பாடுகள். “என்ன என்ன…” என்று பலமுறை சொல்லும் பாவனையின் பின்னணி .

    அது ஒரு வகை மயக்கம், அவை ஓர் ஓய்வு இல்லா சுழற்சி.

    இது யோகி யார் என்பதைப் பற்றிய தவம் போல — யார்தான் இந்த எண்ணங்களை உருவாக்குகிறார்கள்? என் ஆத்மா அவையல்ல; ஆனால் அவை என்னுள் ஏன் வேரூன்றுகின்றன?

    இக்கேள்வியை மனதுள்.வேள்வியாக்கும் வரிகள் இவை.

    சுருக்கமாகச் சொன்னால்…
    இந்த வரிகள் — ஒருவன் உணர்வுகளால் தன்னை இழந்தும், பிறகு அந்த இழப்பில் இறையையும் தேட முயல்கின்ற பயணத்தின் ஓர் அத்தியாயம்.

    இவை ஆத்ம சந்தேகத்தின் ஊடே ஆனந்தத்தை நோக்கிய விரோதம் வாய்ந்த பயணங்களைப் பிரதிபலிக்கின்றன.

    ஆகா தோண்டத் தோண்ட வைரங்கள் வருவது போல கவியரசரின் வரிகளுக்குள் புகுந்து கொள்ள பேரானந்தம் காத்திருக்கதே !

    சீக்கிரம் வாருங்கள் ஆராயும் மனதின் ஈரம் காயுமுன்னே அடுத்த வரிகளைப் பார்ப்போம்.

    அக்கம் பக்கம் யாரும் பார்த்தால்
    வெட்கம் வெட்கம்
    அக்கம் பக்கம் யாரும் பார்த்தால்
    வெட்கம் வெட்கம்
    அன்பே உன்னை நேரில் கண்டால்
    நாணம் நாணம்
    அன்பே உன்னை நேரில் கண்டால்
    நாணம் நாணம்

    ஆசை நெஞ்சை சொல்லப்போனால்
    அச்சம் அச்சம்
    அன்றும் இன்றும் அதுதான் நெஞ்சில்
    மிச்சம் மிச்சம்

    இந்த வரிகளில் காதலான உணர்வோட்டம் மேலோட்டமாகத் தோன்றினாலும், அதற்குள் ஒரு நுட்பமான ஆன்மீகத் தேடலும் நாணமும் உள்ளது.

    வாருங்கள், மென்மையான ஆன்மீகக் கோணத்தில் இதை உள்நோக்கமாக விரித்துப் பார்க்கலாம்.

    “அக்கம் பக்கம் யாரும் பார்த்தால்… வெட்கம் வெட்கம்”

    இறையை நாடும் தனிப்பட்ட பயணத்தின் பொருள்   இறைசிந்தனையில் முழுமையாக கலையும் போது, வெளி உலகம் ஒருவனின் மனநிலை மாற்றங்களை கவனிக்கலாம்.

    அந்த நேரத்தில் வரும் ஒரு வியக்கத்தக்க மௌனம் அல்லது மகிழ்ச்சி, மற்றவர்கள் பார்த்துவிடுவார்களோ என்ற இறுக்கம்.

    ஆன்மீகத்தில் இது ‘அந்தரங்க பக்தி’ என அழைக்கப்படுகிறது.

    அந்த நெகிழ்வுக்கு மனம் வெட்கப்படுவது, சுயத்தை விடுத்து இறை நடுக்கத்தில் நின்றிருக்கும் நிலை.

    “அன்பே உன்னை நேரில் கண்டால்… நாணம் நாணம்”

    தெய்வீக தரிசனத்தின் முன்னே வரும் வீடுபடுத்தும் மரியாதை
    இறையை உணர்ந்த தருணங்களில் மனம் சின்னமாகி விடும்.

    நேரில் கண்ட உணர்வில் ஏற்படும் நாணம், நமக்கு எவ்வளவு பாவபரிசுத்தம் தேவை என்பதை உணர்த்தும்.

    இது ஒரு தேடிய பக்தனுக்கு கிடைக்கும் வரம் .

    தனக்கு இன்னமும் தகுதி இல்லை என்ற சுயவிமர்சன மயக்கம்.

    “ஆசை நெஞ்சை சொல்லப்போனால்… அச்சம் அச்சம்”

    உள் விருப்பங்களை இறைவனிடம் பதியும்போது ஏற்படும் அச்சம்
    நம் ஆசைகளை, தயங்களை வெளிப்படுத்தும் முன் வரும் மனமுழுக்கம்.

    “நான் என்னைத் தூய்மைப்படுத்தியுள்ளேனா?” என்ற சந்தேகம்.

    இங்கே ஆசை என்பது உலக ஆசைகளை மட்டும் அல்ல — இறையை பெறும் அகமான ஏக்கம் கூட இருக்கலாம். அதனைத் திறந்துவிட அச்சம்தான்.

    “அன்றும் இன்றும் அதுதான் நெஞ்சில்… மிச்சம் மிச்சம்”

    நித்தியமான இறை நினைவு – அகபரிந்த மனநிலை
    நாள்கள் மாறினாலும், நெஞ்சில் மிச்சமாகக் கிடப்பது ஒரே நினைவு.

    அந்த ‘அன்பு’. இவ்விதமான நிலை, பக்தியின் பரிணாம வளர்ச்சியை அறிவிக்கிறது.

    எத்தனை காலங்களாக இருந்தாலும், அந்த நிஜமான தேடல் விடாமல் இருக்கிறது.

    மொத்தத்தில்…
    இந்த வரிகள், ஒரு பக்தன் இறைநேசத்தினால் உருவாகும் உள்ளார்ந்த நிலைகளை மிக நெகிழ்வாகவும், இயற்கையாகவும் வெளிப்படுத்துகின்றன .

    வெட்கம், நாணம், அச்சம், நினைவு. இவை அனைத்தும் உண்மையான ஆன்மீக வாழ்வின் பரிணாம நிலைகள் என்பதைத் தொட்டுத் தெரிவிக்கின்றன.

    என் இனிய வாசக உள்ளங்களே ! காதல் பாடலில் கூட கவியரசர் கண்ணனை மையமாக நிறுத்தியது அதன் ஆன்மீகக்.கோணத்துள் கொஞ்சம் மூழ்கிப்பார்க்க இந்தப் பாமஅ ரசிகனைத் தூண்டியது.

    இந்தப் பயணத்தில் எனக்குத் துணையாக வரும் உங்களுக்கு எனது அன்பு நன்றி கலந்த வணக்கங்கள்.

    மீண்டும் அடுத்த பகுதியில் மற்றொரு பாடலோடு

    Share
  • 3 BHK – திரை விமர்சனம்

    3 BHK – திரை விமர்சனம்

    அண்ணாகண்ணன்
    3 BHK திரைப்படத்தை இன்று பார்த்தேன். படத்தின் தொடக்கத்தில் காசா கிராண்டு நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்கள். இது வழக்கமானது தானே என்று நினைத்தால், இந்த ஒட்டுமொத்தப் படமும் காசா கிராண்டுக்கும் அது போன்ற இதர ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கும் மிகப் பெரிய விளம்பரப் படமாக அமைந்துள்ளது.
    வீடு வாங்க ஆசைப்படுபவர்களுக்கான எல்லாத் தூண்டில்களும் வலைகளும் சரியாக வீசப்பட்டுள்ளன. வாடகை வீட்டில் உள்ள சிக்கல்களை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார்கள். அதில் உள்ள கட்டுப்பாடுகள், போதாமைகள், சிக்கல்கள் அனைத்தும் விரிவாகப் பேசப்பட்டுள்ளன. தண்ணீரை அளவாகப் பயன்படுத்த வேண்டும் என்பது தொடங்கி, மழைக் காலத்தில் வீட்டில் தண்ணீர் புகுந்துவிடுவது வரை. இதற்கு ஒரே தீர்வு, சொந்த வீடு வாங்க வேண்டும் (சொந்த வீட்டுக்குள்ளும் வெள்ளம் புகுந்துள்ளது என்பது தனிக்கதை).
    சொந்த வீடு வாங்குவோருக்கான அடுத்த தூண்டில், இந்த இடம் பெரிய அளவில் வளரும். உங்கள் முதலீடு பல மடங்கு உயரும் என்பது. இதைப் படிப்படியாகப் படத்தில் காட்டுகிறார்கள். 2006க்கு முன்பு ஏழரை லட்ச வீடு, பிறகு பதினைந்து லட்சமாகி, அது பிறகு இருபத்தைந்து லட்சமாக உயருகிறது. இப்போது எவ்வளவு லட்சம் என்பதைச் சொல்லாமல் விட்டிருக்கிறார்கள். வாடிக்கையாளர்களை மனத்தளவில் இந்த விலைக்குத் தயார் செய்வதற்கு இந்த முந்தைய விலை விவரம் உதவுகிறது.
    கடன் வாங்காமல் வீடு வாங்க முடியாது என்பது படத்தின் அடுத்த மையக் கருத்து. இது வசனமாகவே வருகிறது. எனவே கடன் வாங்கத் தயங்குபவர்களை அதிலிருந்து வெளிவந்து கடன் வாங்கத் தூண்டுகிறார்கள்.
    வீட்டுக் கடனுக்கு ஒப்புதல் கிடைத்திருக்கிறது என்பதை ஏதோ பெரிய வெற்றி என்பதைப் போல், பல முறைகள், பல காட்சிகளில் காட்டுகிறார்கள். வீட்டுக் கடன் அளிப்பவர்கள், உரிய சான்றுகள் இருந்தால் மட்டுமே அளிப்பார்கள். இது முழுவதும் வணிகம். இதில் குடும்பக் கண்ணீருக்கு எல்லாம் இடமில்லை. வருவாய்ச் சான்று உள்பட வங்கி கேட்கும் சான்றுகள் உங்களிடம் இருந்தால் கடன் கிடைக்கும். இல்லை என்றால் இல்லை. இதற்கு எல்லாம் ரொம்ப உணர்ச்சிவசப்படக் கூடாது. இப்போது நிலையான வருவாய் இல்லாவிட்டாலும், அதிக வட்டிக்கு வீட்டுக் கடன் கொடுக்கப் பலர் இருக்கிறார்கள். அவர்களின் குறி, வட்டி வருவாய் தான். அப்படியே உங்களால் கடன் கொடுக்க முடியாவிட்டால், வீட்டை ஜப்தி செய்து ஏலம் விட்டுவிடுவார்கள். எனவே, வீட்டுக் கடனால் வங்கிகளுக்கோ நிதி நிறுவனங்களுக்கோ பெரிய இழப்பு எதுவும் கிடையாது; லாபமே அதிகம்.
    சொந்த வீடு வாங்க நினைப்பவர்கள், புறநகரில், சற்று தூரத்தில், சிறு நகரங்களில், கிராமங்களில் மனையாக வாங்கி வீடு கட்டலாம்; தனி வீடும் வாங்கலாம். இந்த வாய்ப்புகளைப் பற்றி சிறிதும் யோசிக்காமல் அடுக்குமாடி வீட்டை மட்டுமே தேர்ந்தெடுக்குமாறு காட்சிகள் அமைந்துள்ளன. இது அடுக்குமாடி நிறுவனங்களுக்கே சாதகமானது.
    படத்தின் நிறைவுக் காட்சியில், சித்தார்த் வாங்கும் சொந்த வீடும் காசா கிராண்டு வீடாக இருப்பது தற்செயலானது இல்லை.
    அந்த வீட்டைப் பார்க்க வரும் வீட்டுத் தரகர் யோகி பாபு அதன் சுவரைத் தடவிப் பார்த்து, தரமாகத்தான் கட்டியிருக்கிறார்கள், உங்கள் அப்பாவைப் போல என்று சொல்வதும் தற்செயலானது இல்லை.
    படம் பார்க்கும் ரசிகர்களை வாடிக்கையாளர்களாக மாற்றும் உள்நோக்கத்துடன் இந்தப் படத்தை இயக்கி, தயாரித்திருக்கிறார்கள். இதற்குள் கச்சிதமான குடும்பக் கதையை, அதன் உணர்ச்சிகரமான தருணங்களோடு, ஆசைகளோடு கனவுகளோடு காட்சிப்படுத்தி இருப்பது இயக்குநரின் சாமர்த்தியம்.
    படத்தில் நடித்துள்ள சரத்குமார், தேவயானி, சித்தார்த் உள்பட அனைவரும் இது விளம்பரப் படம் இல்லை; உண்மையான கதை என்ற உணர்வை ஏற்படுத்தும் படியாகவே நடித்திருக்கிறார்கள்.
    அடுக்குமாடி வீட்டின் சிக்கல்களை, வீட்டுக் கடன் வாங்குவதன் சிக்கல்களை இன்னொருவர் இன்னொரு படமாகத் தயாரிக்கலாம்.
    Share
  • பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் மறைவு

    பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் மறைவு

    பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்களின் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல்.

    அவர் குறித்து, 30 ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய விருத்தம் இது.

    ஆண்பால் ஒளவை!

    – அண்ணாகண்ணன்

    பாட்டாலே பாரதிநீ! பளபளக்கும்
    பைந்தமிழால் அவன்தாசன்! படைத்த நூலால்
    கேட்டாலே இனிக்கின்ற கிப்ரான்! என்றும்
    கீழடையாத் தரத்தாலே ஷெல்லி! சென்ற
    நாட்டாலே புகழ்நாட்டும் தாகூர்! கொண்ட
    ஞானமதால் இறக்காத மில்டன்! நீதான்
    பூட்டாலே அடங்காத புஷ்கின்! வீழும்
    பூந்தமிழை வாழவைக்கும் சேது ராமன்!

    கற்பனையால் காதலினால் கண்ண தாசன்!
    கைத்திறத்தால் ஷேக்ஸ்பியர்நீ! கவிதை சொல்லும்
    கற்பகமாய் நின்றதனால் வேர்ட்ஸ்வொர்த்! நாளும்
    கழறுகின்ற தத்துவத்தால் சாக்ர டீஸ்நீ!
    அற்புதமாய் நிற்கின்ற அரிஸ்டாட் டில்தான்!
    அருந்தமிழின் கடலுக்குள் பாதை கண்ட
    உற்சவமே வாஸ்கோட காமா! என்றும்
    உண்மைகளின் சீருருவே சேது ராமா!

    கவித்தேரில் மற்றுமொரு கம்பன்! நல்ல
    கவிதைகளால் இன்னுமொரு இளங்கோ! வெண்பாப்
    புவிவென்ற புகழேந்தி உன்றன் பாட்டன்!
    போர்ப்பரணி கொட்டியதில் செயங்கொண் டான்நீ!
    குவியாத தாமரைநீ! ஒட்டக் கூத்தன்!
    கொலுவீற்ற தமிழால்நீ ஆண்பால் ஒளவை!
    செவிமோதும் அமுதத்தால் சேது ராமன்
    செம்மாந்த தமிழ்போல நீடு வாழி!

    Share
  • நற்றமிழின்  காவலன் இற்றைத் திங்களின் நாயகன் – அ.கி. பரந்தாமனார்

    நற்றமிழின் காவலன் இற்றைத் திங்களின் நாயகன் – அ.கி. பரந்தாமனார்

    முனைவர் நா. சியாமளா
    உதவிப் பேராசிரியர் , தமிழ்த்துறை
    குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி
    சரவணம்பட்டி, கோயம்புத்தூர்-35.

    அன்றாட நடைமுறையில் பயன்படும் மொழியை அடிப்படையாகக் கொண்டு தமிழ் இலக்கணத்தைப் புதிய தமிழுக்கு இலக்கணமாக்கிக் காட்டியவர். மாணவர்கள் செய்யும் இலக்கணப் பிழைகளைத் தன் எழுதுகோல் கொண்டு வேரோடு களைந்தவர். நாளிதழ்கள் மாத இதழ்களைக் களங்களாகக் கொண்டு  அதில் இடம்பெறும் தவறுகளையும் அதன் திருத்தங்களையும் சுட்டிக்காட்டி திருத்தி  தமிழின் நிலையை  உயர்த்திப் பிடித்தவர். நல்ல தமிழ் எழுத வேண்டுமா? என்று யாரேனும் நம்மைப் பார்த்துக் கேட்டாலே தமிழ்ப் பெருமகனார் அ.கி. பரந்தாமனாரின் நினைவு வராத மனிதர்கள் யாரும் இருக்க முடியாது . பள்ளி கல்லூரி நாள்களிலேயே தனி இதழ்களில் கவிதை எழுதி வெளியிட்டவர். பள்ளி கல்லூரிகளில் சரித்திரத்தை விரும்பிப் பாடமாகப் படித்தவர். திராவிட இந்தியா என்னும் புகழ்பெற்ற நூலின் ஆசிரியர் டி. ஆர் .சேஷய்யங்காரும் ஸ்ரீனிவாச்சாரியாரும்அ.கி.ப விற்குப் பேராசிரியர்களாக இருந்தவர்கள். அவர்கள் அன்று ஊட்டிய தமிழ்ப்பற்று தான் மதுரை நாயக்கர் வரலாற்றையும் தலைசிறந்த பாண்டிய மன்னர்களின்  வரலாற்றையும் எழுதுவதற்குத் தூண்டுதலாக அமைந்தது என்று அ.கி.ப கூறுவார். மதுரைத் திருவள்ளுவர் கழகத்தில் வாரம் தோறும் மதுரை நாயக்கர் வரலாறு பற்றித் தொடர் சொற்பொழிவாற்றுவார் .ஆங்கிலப் பெரும் புலவர் கிப்பன் எழுதிய ரோமன் நாட்டு வரலாற்றை ஒட்டியே மதுரை நாயக்கர் வரலாற்று நூலை  அவர் உருவாக்கியுள்ளார். தான் இயற்றிய நூல்களுள் இந்நூலையே  சிறப்பானதாகக் கருதினார். தமிழ்நாடு ஞாயிறு மலரில் வாழ்க்கைக் கலை, பேச்சுக்கலை, தலைசிறந்த பாண்டிய மன்னர்களின் வரலாறு பற்றியும் சிறுவர் பாடல்களைக் கீரன் என்னும் புனைபெயரிலும் எழுதியவர்.

    இவரது மணி விழாவை மதுரை திருவள்ளுவர் கழகம் சிறப்பாகக் கொண்டாடியது .அவ் விழாவின்பொழுது எழுத்தாளர் மன்றத்தினர் இவருக்குப் பைந்தமிழ்ப் பாவலர் என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தனர். பாடநூல்களிலும் மற்ற இதழ்களிலும் மாணவர்களுக்காக இவர் எழுதிய சிறுவர் பாடல்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு எங்கள் தோட்டம் என்ற நூலாக வெளிவந்தது. இந்த நூல் நடுவண் அரசின் சிறுவர் இலக்கியப் பரிசினை வென்றது. இந்தச் செய்தியை வானொலி வாயிலாக மதுரை தியாகராசர் கல்லூரியின் அந்நாள் முதல்வர் சிதம்பரநாதன் அவர்கள் கேட்டவுடன் அன்று மாலையே கல்லூரி வளாகத்தில் அ. கி. பரந்தாமன் அவர்களுக்குப் பாராட்டு விழாவை நடத்தினார். இருள் சூழ்ந்து ஊர் அடங்கி அமைதியாக இருக்கும் பொழுது தான் இவரது எழுதுகோலும் எண்ண அலைகளும் எழுந்து நின்று ஆர்ப்பரிக்குமாம். தான் எழுதும் கட்டுரைகளில் முழு திருப்தி ஏற்பட்டால்தான் அதை அவர் நூலாகக் கொண்டு வருவாராம். புரட்சிக் கவிஞர்கள் என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரைத் தொகுப்பினை  அவர் வெளியிடவில்லை. ஏனெனில் அவர் மனம் நிறைவடையும் வகையில் அதனை விரித்து எழுத வேண்டும் என்று அவர் நினைத்திருந்ததாகவும் அதைச் செய்வதற்கான சூழல் அமையாததாலும் வெளியிட இயலவில்லை. தான் எழுதிய கவிதை நூலை மகாவித்வான் வேணுகோபாலப் பிள்ளை அவர்களிடம் மேற்பார்வைக்காகக் கொடுப்பார் .தான் எழுதிய நூல்கள் பிழையில்லாமல் வெளிவர வேண்டும் என்பதில் மிகுந்த கவனம் செலுத்துவார். நல்ல தமிழ் எழுத வேண்டுமா? என்கின்ற தனது நூலுக்கு கூடுதலாக இரு தமிழறிஞர்களை மேற்பார்வையிடச் செய்து பிழையின்றி வெளிவர ஏற்பாடு செய்தார். தான் எழுதும் நூல்களுக்கு தாமே முதலீடு செய்து அதை அச்சில் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டார் .அவ்வமயம் மலர் நிலையம்  பதிப்பகத்தார் தாங்களாகவே முன்வந்து அவர் நூல்களை விற்றுத் தர உரிமை கோரினர். அ.கி. பரந்தாமனாரும் அதற்கு உடன்பட்டு ஒப்புதல் அளித்தார். இவ்வாறு அவரது பல நூல்கள் வெளியாகிக் கொண்டிருந்த சமயத்தில் சில ஆண்டுகளுக்குப் பிறகு மலர் நிலையத்தார் விற்பனை செய்த நூல்களுக்கு உரிய தொகையைக் கொடுக்காததால் அதிக பொருள் இழப்பிற்கு ஆளானார் அ.கி.ப. உடனே சற்றும் யோசிக்காமல் அந்தப் பதிப்பகத்தார் மீது வழக்கு தொடர்ந்து வெற்றியும் பெற்றார். ஆயினும் ஓரளவு தான் பணம் கிடைத்தது. அந்தப் பணமும் வழக்கு நடத்தும் செலவுகளுக்குத் தான் பயன்பட்டது. ஓர் எழுத்தாளன் அதுவும்  ஒரு தமிழ்ப் பேராசான் பதிப்பகத்தார் மீது வழக்கு தொடுத்து வெற்றி பெற்றது எழுத்துலகில் அன்று வியப்பான செய்தியாக அமைந்தது. மதுரைத் தியாகராசர் கல்லூரியில் இவர் பணியாற்றியபோது விடுதிக் காவலராகவும் இருந்தார். மாணவர்களுடைய அன்பைப் பெற்றிருந்ததால் அவர் பல ஆண்டுகள் விடுதிக் காவலராகப் பணியாற்ற முடிந்தது. எந்த ஒரு செருக்கும் இல்லாமல் இயல்பாக எப்பணியையும் மனமுவந்து செய்து முடிக்கக்கூடிய வல்லமைக்  குணம் அவரிடம் இயல்பாகவே குடியிருந்தது. அ.கி. பரந்தாமன் ஓய்வு பெற்ற போது அவரது மாணவர்கள் மதுரை விளக்குத் தூணில் இருந்து தியாகராசர் கல்லூரி வரை மேளதாளத்துடன் அவரை ஊர்வலமாக அழைத்து வந்தார்கள். கல்லூரியில் விடைபெறும் விழாவைச் சிறப்பாக நடத்தி பணமுடிப்பும் கொடுத்தார்கள். இவையெல்லாம் மாணவர்கள் அவர் மீது அன்பு மழை பொழிந்ததற்கான அடையாளங்கள். தமிழக அரசு தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக்கழகம் நிறுவிய போது அவருக்குத் திரு. வி. க விருதும் பொற்கிழியும் வழங்கிக் கௌரவித்தது.அ.கி.ப சிறந்த இலக்கிய இலக்கண நூலாசிரியர்; எழுத்தாளர்; பேச்சாளர்; கவிஞர்; சிறுவர் பாடல் ஆசிரியர் ; அதையும் தாண்டி மனித நேயம் மிக்க பண்பாளர். எங்கெல்லாம் நல்ல தமிழ் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் அ.கி. பரந்தாமனாரின் உள்ளம்  வாழ்த்து மழை பொழிந்து கொண்டே இருக்கும். தமிழுக்காய் வாழ்ந்த தலைமகனை அவர் பிறந்த சூலைத் திங்களிதழ் தன் மடியில் வைத்துத் தாலாட்டி மகிழ்வதில் பெருமை கொள்கிறது.

    இலக்கியம் போற்றும் இனிய மனிதர் விரும்பிய
    இலக்கினை நோக்கிப் பயணப்படுவோம்!

    Share
  • வாசகரின் வாசகத்தை மனமுருகிப் படிப்போம்!

    வாசகரின் வாசகத்தை மனமுருகிப் படிப்போம்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    ஆதியந்த மில்லா அருருளான சோதியை
    அதிமதுரத் தமிழினில் அமர்த்தினார் வாசகர்
    தேசமே வியந்தேற்ற திவ்ய திருவாசகமாய்
    மலர்ந்துமே வந்து மனமமர்ந்து நிற்கிறது

    வாதவூர் பிறந்தார் மனமெல்லாம் இறையே
    சோதனையை வாதவூரர் சுகமாகக் கண்டார்
    காதலுடன் கடவுளை கைகூப்பி நின்றார்
    கையணைத்துக் கடவுளும் கரையேற்றி விட்டார்

    மந்திரியாய் இருந்தார் மனமெல்லாம் சிவனே
    மாணிக்கம் வைரம் மனமேற்க வில்லை
    பார்க்கு மிடமெங்கும் பரமனே தெரிந்தார்
    பாடினார் வாசகத்தைப் பரமனுமே ஏற்றார்

    அதிகாரம் வாதவூரர் அகம் ஏறவில்லை
    ஆணவம் அவரிடத்து அணுகிடவும் இல்லை
    அகமுழுக்க அரனே அமர்ந்துமே இருந்தார்
    ஆசையில்லா நிலையினிலே வாதவூரர் வாழ்ந்தார்

    பக்தியின் பக்குவத்தைப் பலவாறு பாடினார்
    பாடிய அத்தனையும் பசுந்தமிழின் சொத்தே
    தத்துவம் இருந்தது தர்க்கமும் இருந்தது
    இத்தரையில் யாவர்க்கும் ஏற்றதாய் அமைந்தது

    மதங்கடந்து பலபேரும் மனமேற்றி நின்றார்
    மாபெரும் தத்துவத்தை வாசகரே மொழிந்தார்
    தேனாகாத் தித்திக்க திரு வாசகத்தை
    ஊனுருக உவந்தளித்தார் உளமுருகி வாதவூரர்

    வாசகரின் வாசகத்தை மனமுருகிப் படித்தால்
    மனமாசு அகன்றோடும் மாவெளிச்சம் வந்துவிடும்
    சித்தம் தெளியும் சிவனருளும் கிடைக்கும்
    நித்தம் படிப்போம் நிம்மதியைப் பெற்றிடுவோம்

    Share
  • திருப்புவனம் அஜித்குமார் கொடூர மரணம்

    திருப்புவனம் அஜித்குமார் கொடூர மரணம்

    அண்ணாகண்ணன்

    திருப்புவனம் காவலர் அஜித்குமாரின் கொடூர மரணம், காவல் துறையின் கோர முகத்தைக் காட்டுகிறது.

    அஜித்குமாரை உடல் முழுவதும் ஈவு இரக்கமின்றி அடித்து, மிளகாய்ப் பொடி தடவி, சாகடித்த காவலர்களுக்கு எந்தக் குற்றவுணர்வும் இருக்காது. மேலதிகாரி சொன்னார், நான் செய்தேன் என்பார்கள். இது அவர்களுக்குச் சாதாரணம். ஆனால், பாதிக்கப்படும் மக்களுக்கோ அழியாத ரணம். சிரமறுத்தல் வேந்தருக்குப் பொழுதுபோக்கும் சிறிய கதை, நமக்கோ பெரிய வாதை என்ற பாரதிதாசனின் பாடலே நினைவுக்கு வருகிறது.

    காவல் துறையினர், தங்கள் உயரதிகாரிகளையும் அரசியல் தலைவர்களையும் கண்டால், ஐயா / அம்மா எனப் பணிவாக அழைப்பார்கள். விறைப்பாக வணக்கம் வைப்பார்கள். அவர்கள் முன்னால் நின்றுகொண்டே கடமையாற்றுவார்கள். அதே நேரம், இதே காவலர்கள், சாமானிய எளிய மக்களை அதட்டி அழைப்பார்கள். வாடா போடா என ஒருமையில் பேசுவார்கள். அவர்களை உட்காரச் சொல்லாமல், நிற்க வைத்தே பேசுவார்கள். ஆதாரம் இல்லாவிட்டாலும் வெறும் சந்தேகம் இருந்தாலே அடித்து நொறுக்குவார்கள். அதிகாரம் மேலிருந்து கீழ்நோக்கிப் படிப்படியாகப் பரவும்.

    காவல் துறையினர் யாரையும் தடுத்து நிறுத்தி, அவர்களின் அடையாள அட்டையைக் கேட்க முடியும். தன்னை விசாரிக்கும் காவலரிடம் அடையாள அட்டையைக் காட்டுமாறு இங்கு யாரும் கேட்க முடியுமா?

    காவல் துறையினர் மீது மரியாதை எழ வேண்டுமே தவிர, பயம் வரக்கூடாது. காவல் துறை உங்கள் நண்பன் என ஒலிபெருக்கியில் பேசுவார்கள். ஆனால், கூட்டத்தை ஒழுங்குபடுத்த, லத்தியைச் சுழற்றுவார்கள். இவர்களின் லத்திக்குப் பயந்தே தள்ளுமுள்ளு ஏற்படும். யாருக்கு எந்தக் காயம், எந்த இழப்பு ஏற்பட்டாலும் இவர்களுக்குக் கவலை இல்லை. யாரும் இவர்களைக் கேள்வி கேட்க முடியாது.

    இந்தப் புண்ணிய பூமியில், ஜனநாயகத் திருநாட்டில், கேட்பதற்கு எனக்கு உரிமை இருக்கிறது எனத் தலைநிமிர்ந்து யாரும் நடக்க முடியாது. காவல் துறையினர் மன்னர்களைப் போல் நடப்பார்கள். அவர்களுக்கு மக்கள் கூழைக் கும்பிடு போட வேண்டும். மதிக்காதவர்களை முட்டிக்கு முட்டி தட்டுவார்கள். சட்டத்தைத் தங்கள் கையில் எடுப்பார்கள். சிறைக் கழிவறையில் வழுக்கி விழவைத்து, மாவுக் கட்டுப் போடுவார்கள். நீதியை நிலைநாட்டியதாக நினைப்பார்கள்.

    காவல் துறையில் வெளிப்படைத்தன்மை இல்லாததே அடிப்படைச் சிக்கல். எல்லாக் காவல் நிலையத்திலும் கண்காணிப்புப் படக்கருவிகள் வைக்காதது ஏன்? அவை எந்த நேரத்திலும் இயங்குவதை உறுதி செய்யாதது ஏன்? காவல் துறையினர் மீது குற்றம் சாட்டப்படும்போது, அவர்கள் மட்டும் எளிதாகத் தப்பிவிடுவர். அந்த அமைப்பே கூட்டாகச் சேர்ந்து அவர்களைக் காப்பாற்றும்.

    இடைநீக்கம், இடமாற்றம், அபராதம் போன்றவை தண்டனையே கிடையாது. இதைச் செய்தவன் மூலம் ஏதோ நடவடிக்கை எடுத்தது போல் காட்டுகின்றார்கள். மனமாற்றம் ஏற்படுத்தவே தண்டனை என்றால், உண்மையில், தண்டனை பெற்றவர்களுக்கு இதனால் எந்த மனமாற்றமும் ஏற்படாது.

    அஜித்குமாருக்கு நடந்தது, நாளைக்கு யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். யாரும் எதற்கும் பொறுப்பு ஏற்க மாட்டார்கள். அதிகாரம் மிக்கவர்களுக்குச் சேவைகள் செய்து, அவர்களைக் காத்து நிற்பார்கள். எளிய மக்களை அடித்துத் துரத்துவார்கள். எனில், இந்த மக்களுக்கு யார்தான் பாதுகாப்பு?

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 305

    இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 305

    சக்தி சக்திதாசன்
    இங்கிலாந்து

    அன்பான வல்லமை வாசக நெஞ்சங்களே !

    நான் நலமேயுள்ளேன் . நீங்களும் நலமாக இருக்க அனைவர்க்கும் பொதுவான இறையைப் பிரார்த்திக்கிறேன்.

    மீண்டும் அடுத்த மடலில் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.

    2025-இன் மே மாதம், இங்கிலாந்து ஒரு பரிணாமக் கட்டத்தில் நுழைந்தது. வெப்பம் அதிகரித்தது மட்டுமல்ல, அரசியல் சூழ்நிலையும், சமூக மாற்றங்களும், கலாச்சார நிகழ்வுகளும் நாட்டின் மனநிலையை பிரதிபலித்தன.

    புதிய ஆட்சியின் சவால்கள், மக்கள் எதிர்பார்ப்புகள், மற்றும் உள்ளூர் தேர்தல்களின் தாக்கம்—இவை அனைத்தும் ஒரு புதிய பாதையை உருவாக்கின.

    அரசியல் பரிமாணம்: லேபர் ஆட்சியின் சோதனைக்காலம்

    2024-இல் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற பிரதமர் கியர் ஸ்டார்மர் தலைமையிலான லேபர் அரசு, தனது ஆட்சியின் 11வது மாதத்தில் முழுமையான செலவுத்திட்ட மதிப்பீட்டை (Comprehensive Spending Review) மே 11-ஆம் தேதி வெளியிட்டது.

    இது, நாட்டின் எதிர்கால செலவுகள் மற்றும் முதலீடுகளுக்கான திசையை நிர்ணயித்த முக்கிய தருணமாக அமைந்தது.

    NHS மற்றும் பாதுகாப்புத் துறைக்கு அதிக நிதி

    சுகாதார சேவைகளுக்கு வருடத்திற்கு 2.8% வரை அதிகரிப்பு.

    பொதுத்துறை முதலீடுகள் – பள்ளிகள், போக்குவரத்து, மற்றும் பசுமை ஆற்றல் திட்டங்களில் முதலீடு.

    பிரதமரின் நோக்கம் – “ஒரு புது பத்தாண்டு தேசிய மறுசீரமைப்பு” என்ற லேபர் வாக்குறுதியை நடைமுறைப்படுத்தும் முயற்சி.

    இது, லேபர் ஆட்சியின் “தொடக்க வெற்றிக்காலம்” முடிவடைந்து, நடவடிக்கைகள் மூலம் நம்பிக்கை பெற வேண்டிய கட்டமாக மாறியதை சுட்டிக்காட்டுகிறது.

    உள்ளூர் தேர்தல்கள்  ரீபார்ம் UK-வின் எழுச்சி

    மே 2 அன்று நடைபெற்ற உள்ளூர் தேர்தல்களில், ரீபோர்ம் (Reform UK) கட்சி 677 கவுன்சில் இடங்களை வென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

    குறிப்பாக, ஹல் ‘ கிழக்கு யோர்க்‌ஷையர் (Hull & East Yorkshire) மற்றும் Greater Lincolnshire ஆகிய இரண்டு புதிய மேயர் ஆட்சிகளை கைப்பற்றியது.

    ஆனால்…

    – இது முழுமையான வெற்றி அல்ல

    ரீபோர்ம் யூ.கே (Reform UK) இன் வெற்றிகள் பெரும்பாலும் சிறிய நகரங்களில் மட்டுமே.

    சவால்கள் – கட்சி உறுப்பினர்கள் சிலர், “தொழிலாளர்களை நீக்குவோம்” போன்ற பிரச்சனையான கருத்துகளை வெளியிட்டதால், சட்டரீதியான சிக்கல்கள் உருவாகும் அபாயம்.

    இது, பிரதமர் ஸ்டார்மரின் ஆட்சிக்கு எதிரான மக்கள் எதிர்வினையாக பார்க்கப்படுகிறது.

    ஆனால் ரீபோர்ம் யூ.கே (Reform UK) இப்போது ஆட்சியில் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது .

    இது ஒரு புதிய சோதனை.

    சமூக மாற்றங்கள் பல நிகழ்ந்தன ப்ரைட்(Bright) விழாக்களில் ஆதரவு குறைவு.

    LGBTQ+ ப்ரைட் விழாக்களுக்கு பெரும்பாலான பெருநிறுவனங்கள் ஆதரவைத் திரும்பப் பெற்றுள்ளன..

    Sony, Durex, Costa Coffee போன்ற பிராண்டுகள், DEI (Diversity, Equity, Inclusion) கொள்கைகளுக்கான அரசியல் எதிர்ப்புகளால், அமெரிக்காவில் ஏற்பட்ட அழுத்தங்களின் தாக்கமாக இங்கிலாந்திலும் பின்வாங்கியுள்ளன.

    இது, சமூக நீதி மற்றும் வர்த்தக அரசியலின் மோதலை வெளிப்படுத்துகிறது.

    இங்கிலாந்து நிறுவனங்கள், அமெரிக்க அரசியல் சூழ்நிலையின் தாக்கத்தில் தங்கள் நிலைப்பாடுகளை மாற்றத் தொடங்கியுள்ளன.

    கலாச்சாரம் மற்றும் மக்கள் நிகழ்வுகள்:

    ஷெல்சி மலர் கண்காட்சி (Chelsea Flower Show) [மே 21–25]

    பசுமை நகரங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருப்பொருளில் தோட்டக்கலை விழா.

    வைக்கல் விழ (Hay Festival (மே 22–ஜூன் 1) – இலக்கியம், கவிதை, சிந்தனை உரைகள்.

    – Brighton Festival (மே 3–26) – இசை, நாடகம், நடனம், திரைப்படம்.

    – FA Cup Finals (மே 17–18) – வெம்ப்லியில் ஆண்கள் மற்றும் பெண்கள் இறுதிப்போட்டிகள்.

    இப்படியான கலாசார நிகழ்வுகள் பல நடந்தேறின.

    ஒரு தேசத்தின் திசை மாற்றம் ஏற்படும் சாத்தியக்கூறுகள் இங்கிலாந்தில் தென்படத் தொடங்கியுள்ளது.

    2025 மே மாதம், இங்கிலாந்து அரசியல் மறுசீரமைப்பு, சமூக சிந்தனையின் மாறுதல், மற்றும் கலாச்சார உற்சாகம் ஆகியவற்றின் சந்திப்பாக அமைந்தது.

    லேபர் ஆட்சி தனது வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறது.

    Reform UK தனது வெற்றிகளை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

    மக்கள், மாற்றத்திற்கான உணர்வுடன், நடவடிக்கைகளை எதிர்பார்க்கும் நிலையில் இருக்கின்றனர்.

    இஸ்ரேல்–ஈரான் யுத்தம் மேற்கு ஆசியாவை பதற்றமூட்டும் நிலையில், இங்கிலாந்து பிரதமர் கெயர் ஸ்டார்மர் எடுத்துள்ள நிலைப்பாடு முக்கியத்துவம் பெறுகிறது.

    அவர், ஈரான் இந்தப் பகுதியில் நீண்ட காலமாக அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருவதாகக் கூறியதுடன், இஸ்ரேலுக்கு தன்னை பாதுகாத்துக்கொள்ளும் உரிமை உள்ளது என வலியுறுத்தியுள்ளார்.

    இதன் மூலம், இங்கிலாந்து இஸ்ரேலுக்கு ஆதரவாகவும், மேற்கு ஆசியாவில் அமைதி நிலவ வேண்டும் என்ற நோக்கத்துடனும் செயல்படுகிறது.

    இருப்பினும், இந்த நிலைப்பாடு ஈரானின் தாக்குதல்களை கண்டிக்கும் வகையிலும், இஸ்ரேலின் பாதுகாப்பு நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது.

    இஸ்ரேல்–ஈரான் மோதல் தொடர்பாக இங்கிலாந்து அரசு முன்பு எடுத்திருந்த நிலைப்பாடுகள் சில முக்கிய அம்சங்களை கொண்டிருந்தன:

    – பயண எச்சரிக்கை: இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனப் பகுதிகளுக்கான பயணங்களைத் தவிர்க்குமாறு பிரித்தானிய குடிமக்களுக்கு அரசு அறிவுறுத்தியது.

    இது அப்பகுதியில் நிலவும் பாதுகாப்பு சூழ்நிலையை பிரதிபலிக்கிறது.

    – பிரித்தானிய குடிமக்கள் வெளியேற்றம்: இஸ்ரேலில் உள்ள பிரித்தானியர்களை வெளியேற்ற சிறப்பு விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டது.

    இது பிராந்தியத்தில் தீவிரமடைந்த மோதல்களுக்கு பதிலாக எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கையாகும்.

    – இராணுவ பங்கேற்பில் எச்சரிக்கை: ஈரான், இஸ்ரேலுக்கு ஆதரவளிக்கும் நாடுகள் மீது தாக்குதல் நடத்தும் என எச்சரித்தபோதும், இங்கிலாந்து நேரடியாக எந்த இராணுவ நடவடிக்கையிலும் பங்கேற்கவில்லை.

    இதன் மூலம், இங்கிலாந்து தற்காலிகமாகத் தன்னைத் தவிர்த்துக்கொண்டு, பாதுகாப்பு மற்றும் ராஜதந்திர நடவடிக்கைகளில் கவனம் செலுத்தியது.

    இங்கிலாந்து அரசு, பொதுவாக, இஸ்ரேலின் பாதுகாப்பு உரிமையை ஆதரிக்கின்ற போதிலும், நேரடி மோதல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கும் ஒரு சமநிலை நிலைப்பாட்டை முன்னெடுத்துள்ளது.

    இது ஒரு மாதம் மட்டுமல்ல – ஒரு புதிய அரசியல் பருவத்தின் தொடக்கம்.

    உக்ரைன் உடன்படிக்கை: இங்கிலாந்து மற்றும் உக்ரைன் இடையே 100 ஆண்டு கால பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

    இது ரஷ்யா-ஈர்ப்பு சூழ்நிலையில் உக்ரைனுக்கு உறுதுணையாக அமைகிறது.

    பிரெக்சிட் பிந்தைய வர்த்தக ஒழுங்குகள்: ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய வர்த்தக ஒப்பந்தங்களை மீளாய்வு செய்யும் முயற்சிகள் தொடங்கப்பட்டன.

    அரசியல் நிதி ஒழுங்குமுறை: தேர்தல் நிதி முறைகள் மற்றும் அரசியல் நிதி பங்களிப்புகள் தொடர்பான புதிய கட்டுப்பாடுகள் குறித்து விவாதம் நடைபெற்றது.

    பாராளுமன்ற சீர்திருத்தம்: மேலவை உறுப்பினர்களை நியமிக்கும் முறையில் மாற்றம் செய்யும் திட்டம் முன்வைக்கப்பட்டது.

    2025 ஜூன் மாதம், இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஒரு வரலாற்றுச் சம்பவமாக, தீராத நோயால் பாதிக்கப்பட்ட முதியவர்கள் தங்கள் உயிரை தாங்களே முடிக்க அனுமதிக்கும் கருணைக் கொலை மசோதா பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.

    314–291 என்ற வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, மனித உரிமை, கண்ணியமான இறப்பு, மற்றும் தனிநபர் சுயாதீனத்தை முன்னிறுத்தும் ஒரு முக்கியமான சட்டமாக கருதப்படுகிறது.

    இது, 1967ஆம் ஆண்டு கருக்கலைப்பு சட்டத்துக்குப் பிறகு சமூகக் கொள்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றமாகவும் பார்க்கப்படுகிறது.

    இருப்பினும், இந்த மசோதாவுக்கு எதிராக பலர் கவலை தெரிவித்துள்ளனர்.

    குறிப்பாக, மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியவர்கள் சமூக அழுத்தத்தால் தங்கள் உயிரை முடிக்கத் தூண்டப்படக்கூடும் என்ற எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

    இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர் பேரவை உள்ளிட்ட மதநம்பிக்கைக் குழுக்கள், மனித வாழ்வின் மதிப்பை வலியுறுத்தி, இந்த சட்டத்திற்கு எதிராக வாக்களிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தியிருந்தனர்.

    இந்த சட்டம் மேல்சபையில் மேலும் பரிசீலிக்கப்படவுள்ள நிலையில், இங்கிலாந்து சமூகத்தில் இறுதி நேர உரிமைகள் குறித்த விவாதங்களை இது மேலும் தீவிரமாக்கியுள்ளது.

    இந்த மாத மடலில் இங்கிலாந்தில் ஏற்பட்ட பல நிகழ்வுகளையும் அதன் தாக்கங்களையும் பார்த்தோம்.

    மீண்டும் அடுத்த மடலில் சந்திக்கும்வரை.

    Share