திருப்புவனம் அஜித்குமார் கொடூர மரணம்
அண்ணாகண்ணன்
திருப்புவனம் காவலர் அஜித்குமாரின் கொடூர மரணம், காவல் துறையின் கோர முகத்தைக் காட்டுகிறது.
அஜித்குமாரை உடல் முழுவதும் ஈவு இரக்கமின்றி அடித்து, மிளகாய்ப் பொடி தடவி, சாகடித்த காவலர்களுக்கு எந்தக் குற்றவுணர்வும் இருக்காது. மேலதிகாரி சொன்னார், நான் செய்தேன் என்பார்கள். இது அவர்களுக்குச் சாதாரணம். ஆனால், பாதிக்கப்படும் மக்களுக்கோ அழியாத ரணம். சிரமறுத்தல் வேந்தருக்குப் பொழுதுபோக்கும் சிறிய கதை, நமக்கோ பெரிய வாதை என்ற பாரதிதாசனின் பாடலே நினைவுக்கு வருகிறது.
காவல் துறையினர், தங்கள் உயரதிகாரிகளையும் அரசியல் தலைவர்களையும் கண்டால், ஐயா / அம்மா எனப் பணிவாக அழைப்பார்கள். விறைப்பாக வணக்கம் வைப்பார்கள். அவர்கள் முன்னால் நின்றுகொண்டே கடமையாற்றுவார்கள். அதே நேரம், இதே காவலர்கள், சாமானிய எளிய மக்களை அதட்டி அழைப்பார்கள். வாடா போடா என ஒருமையில் பேசுவார்கள். அவர்களை உட்காரச் சொல்லாமல், நிற்க வைத்தே பேசுவார்கள். ஆதாரம் இல்லாவிட்டாலும் வெறும் சந்தேகம் இருந்தாலே அடித்து நொறுக்குவார்கள். அதிகாரம் மேலிருந்து கீழ்நோக்கிப் படிப்படியாகப் பரவும்.
காவல் துறையினர் யாரையும் தடுத்து நிறுத்தி, அவர்களின் அடையாள அட்டையைக் கேட்க முடியும். தன்னை விசாரிக்கும் காவலரிடம் அடையாள அட்டையைக் காட்டுமாறு இங்கு யாரும் கேட்க முடியுமா?
காவல் துறையினர் மீது மரியாதை எழ வேண்டுமே தவிர, பயம் வரக்கூடாது. காவல் துறை உங்கள் நண்பன் என ஒலிபெருக்கியில் பேசுவார்கள். ஆனால், கூட்டத்தை ஒழுங்குபடுத்த, லத்தியைச் சுழற்றுவார்கள். இவர்களின் லத்திக்குப் பயந்தே தள்ளுமுள்ளு ஏற்படும். யாருக்கு எந்தக் காயம், எந்த இழப்பு ஏற்பட்டாலும் இவர்களுக்குக் கவலை இல்லை. யாரும் இவர்களைக் கேள்வி கேட்க முடியாது.
இந்தப் புண்ணிய பூமியில், ஜனநாயகத் திருநாட்டில், கேட்பதற்கு எனக்கு உரிமை இருக்கிறது எனத் தலைநிமிர்ந்து யாரும் நடக்க முடியாது. காவல் துறையினர் மன்னர்களைப் போல் நடப்பார்கள். அவர்களுக்கு மக்கள் கூழைக் கும்பிடு போட வேண்டும். மதிக்காதவர்களை முட்டிக்கு முட்டி தட்டுவார்கள். சட்டத்தைத் தங்கள் கையில் எடுப்பார்கள். சிறைக் கழிவறையில் வழுக்கி விழவைத்து, மாவுக் கட்டுப் போடுவார்கள். நீதியை நிலைநாட்டியதாக நினைப்பார்கள்.
காவல் துறையில் வெளிப்படைத்தன்மை இல்லாததே அடிப்படைச் சிக்கல். எல்லாக் காவல் நிலையத்திலும் கண்காணிப்புப் படக்கருவிகள் வைக்காதது ஏன்? அவை எந்த நேரத்திலும் இயங்குவதை உறுதி செய்யாதது ஏன்? காவல் துறையினர் மீது குற்றம் சாட்டப்படும்போது, அவர்கள் மட்டும் எளிதாகத் தப்பிவிடுவர். அந்த அமைப்பே கூட்டாகச் சேர்ந்து அவர்களைக் காப்பாற்றும்.
இடைநீக்கம், இடமாற்றம், அபராதம் போன்றவை தண்டனையே கிடையாது. இதைச் செய்தவன் மூலம் ஏதோ நடவடிக்கை எடுத்தது போல் காட்டுகின்றார்கள். மனமாற்றம் ஏற்படுத்தவே தண்டனை என்றால், உண்மையில், தண்டனை பெற்றவர்களுக்கு இதனால் எந்த மனமாற்றமும் ஏற்படாது.
அஜித்குமாருக்கு நடந்தது, நாளைக்கு யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். யாரும் எதற்கும் பொறுப்பு ஏற்க மாட்டார்கள். அதிகாரம் மிக்கவர்களுக்குச் சேவைகள் செய்து, அவர்களைக் காத்து நிற்பார்கள். எளிய மக்களை அடித்துத் துரத்துவார்கள். எனில், இந்த மக்களுக்கு யார்தான் பாதுகாப்பு?
