Blog

  • சாணி யுகம் மீளுது

    சாணி யுகம் மீளுது

    சி. ஜெயபாரதன், கனடா

    சாணி யுகம்
    மீண்டும்
    வரப் போகுது!
    கிரீன் எரிசக்தி!
    மீள்புதிப்பு எரிசக்தி!
    வீட்டுக்கோர்
    மாட்டுக் கொட்டம்!
    சாணம் வீட்டுக்கு
    எரிசக்தி!
    நாட்டுக்கு மலிவு
    மின்சக்தி!
    இரட்டைக் காளைகள்
    இழுக்கும் வண்டி,
    வயலை
    உழுதிடும் ஏர்கள்,
    ஒற்றைக் குதிரை இழுக்கும்
    வண்டி,

    சைக்கிள் மிதிவண்டி,
    இவைதான்
    எதிர்காலத்தில் இயங்கும்
    சூழ்வெளி சுத்தமான
    வாகனங்கள்!
    ஆராய்ச்சி
    தேவை இல்லை!
    ராக்கெட்
    விஞ்ஞான மில்லை!

    Share
  • நின்னைச் சரணடைந்தேன் | மகாகவி பாரதியார்

    நின்னைச் சரணடைந்தேன் | மகாகவி பாரதியார்

    மகாகவி பாரதியின் ‘நின்னைச் சரணடைந்தேன்’ பாடலுடன் இந்த நவராத்திரியைக் கோலாகலமாகக் கொண்டாடுவோம். அன்னை மகாசக்தியை வணங்கி வேண்டுவோம். அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட, நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக!

    பாடியவர் – கிருஷ்ணகுமார்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • உயர்வகைப் பொருளும் இரண்டாம்கைப் பொருளும்

    உயர்வகைப் பொருளும் இரண்டாம்கைப் பொருளும்

    சந்தைப் பொருள்களில் பல அடுக்குகள் உண்டு. உயர்வகைப் பொருள்களுக்கும் இரண்டாம்கைப் பொருள்களுக்கும் இடையில் எவ்வளவு விலை வேறுபாடு இருக்கிறது? இவற்றுக்குப் பின்னால் உள்ள வாய்ப்புகள், கணக்கீடுகள், அணுகுமுறைகள், மனநிலைகள் என்னென்ன? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் விளக்குகிறார்.

    உங்களுக்கு ஏதும் ஐயம் இருந்தால் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 147 (தம்சரணத்து)

    சேக்கிழார் பாடல் நயம் – 147 (தம்சரணத்து)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    பாடல்

    அருள்செய்த  மொழிகேளா , அடல்சரிகை  தனைஉருவிப்
    பொருள்செய்தாம்  எனப்பெற்றேன்  எனக்கொண்டு பூங்கொடிதன்
    இருள்செய்த  கருங்கூந்தல் அடியிலரிந்  தெதிர்நின்ற
    மருள்செய்த பிறப்பறுப்பார்  மலர்க்கரத்தின்  இடைநீட்ட,

    வரலாறு

    ஏயர்கோன் இல்லத்திலிருந்து மணம்பேச வந்த முதிய அறிஞர்களை  முறைப்படி  வரவேற்றார். அவர்கள் மணம்  புரிந்தேற்க விரும்பியது கேட்டு,  ‘’எங்கள்  குலவழக்கப்படி மனமகளைத் தரும் வகையில் தருவோம்!’’ என்று அனைவரின் மனமும் மகிழும்படி உரைத்துத் திருமணத்துக்கு இசைவு தந்து அனுப்பினார்.

    சென்றவர் இருவீட்டாரும் இசைந்து  சோதிட நூல் கூறிய வண்ணம் திருமண நாள் குறித்தனர். அவ்வாறே திருமணம் புரிவிக்க விரும்பிப் பெண்ணைப்  பெற்ற   தம்சுற்றத் தாருடன் மிகவும் மகிழ்ந்து, வெண்மையான முளைப் பாலிகை, பொற்கலங்களுடன் மலர்கள் பூத்த அந்த ஊரிலேயே திருமண அலங்காரங்கள் செய்வித்தார்.

    மானக்கஞ்சாறர் மகளைக் கைப்பிடிக்க வந்த  ஏயர்குலக்கோனும் தம் சுற்றத்தாருடன் மேகத்துடன்  முரசும் முழங்கும் கஞ்சாரூரின் எல்லையில் வந்தார் . இவ்வுலகம் உய்ய மானக்கஞ்சரனார் மனத்திலுள்ள இறைவனும் இத்திருமணத்திற்குப் புறப்பட்டார்.

    தம் தலையை மழித்து நடுவில் சிகையில் கோத்து  அணிந்த எலும்பு மணியாக முன்பு திருமாலின் அங்கத்தில் இருந்த எலும்பைக் கடைந்து செய்த வெண்முத்து விளங்க , காதில் குண்டலம், என்புமணி கோத்த அழகிய தாழ் வடம், திருத்தோளில் அரவை நீக்கி அணிந்த உத்தரீயம், கரிய மயிரால்  முறுக்கப்பெற்ற பூணூல், அடியார் பிறவியை நீக்கும் திருநீற்றுப்பை, இவற்றோடு . முன்கையில் எலும்புமணி  கோத்த கயிறும், அரிய மறையாகிய கோவணத்தின்மேல் மறைத்த ஆடையும் அணிந்து, நிலத்தில் படிந்த திருவடியில் பதுமம், சங்கம், மகரம், சக்கரம், தண்டம்  ஆகிய பஞ்ச முத்திரை விளங்க, சாம்பல் மூடிய தழல் போல மேனியில் பூசிய திருநீறு அணிந்தவராய் , கொடிகள் நிறைந்த வீதியில் வந்து தம் அவர் இல்லம் புகுந்தார்!

    மாவிரத முனிவர் வடிவில் வந்த இறைவனைக் கண்டு, மகிழ்ச்சியுடன்  எதிர் சென்று மானக்கஞ்சாறர் ‘’அடியேன் இல்லத்துக்கு எழுந்தருளியமையால் நானும் உய்வடைந்தேன்‘’ என்று கூறி, வந்து சேர்ந்த மாவிரத முனிவரைக்கண்டு எதிரே சென்று, பணிந்தார். முனிவர் ‘’இங்கு எதோ மங்கல  நிகழ்ச்சி நடக்கிறது போலும்! ‘’என்றார். அதற்கு விடையாக , ‘’ என் ஒரே மகளின் திருமணம் நிகழ விருக்கிறது!’’ என்றார். உடனே முனிவர் உமக்கு எல்லா நலமும் உண்டாகுக’ என்றார். ஞானம் நிறைந்த தவ முனிவர் திருவடி  பணிந்து, வீட்டுக்குள்  புகுந்து, தேன் நிறைந்த மலர்களால் புனையப்பெற்ற கூந்தலையுடைய செல்வமகளை அழைத்துக் கொண்டு வந்து, திருநீல கண்டத்தை மறைத்து வரும் அந்த முனிவரை வணங்கச் செய்தார்.

    தம்மைத் துதிப்பவர்களுக்குத் தமது திருவடித்தலம் கொடுப்பவராகிய சிவபெருமான்; தமது திருவடிகளில் வீழ்ந்து வணங்கி எழுந்து நின்ற மடமையுடைய கொடிபோல்வாரது மேகம் தழைத்ததுபோலத் தழைத்து வளர்ந்த மலரணிந்த கூந்தலின் புறத்தை நோக்கி;  கும்பிட்டு நின்ற உண்மைத் தொண்டனாரைப் பார்த்து; “அணங்கு  போல்வா ளாகிய இவளது மயிர் நமக்குப் பஞ்சவடிக்கு ஆகும்” என்று சொன்னார்.

    பாடல்

    அருள்செய்த  மொழிகேளா , அடல்சரிகை  தனைஉருவிப்
    பொருள்செய்தாம்  எனப்பெற்றேன்  எனக்கொண்டு பூங்கொடிதன்
    இருள்செய்த  கருங்கூந்தல் அடியிலரிந்  தெதிர்நின்ற
    மருள்செய்த பிறப்பறுப்பார்  மலர்க்கரத்தின்  இடைநீட்ட,

    பொருள்

    இதைக்கேட்ட மானக்கஞ்சாறர் ‘’என்மகள் கூந்தல் சிவந்னடியாரின் பஞ்சவடிக்கு ஆம் ‘’என்று  கேட்கப்பெற்றேன்  என்றெண்ணி உடைவாளை உருவி பூங்கொடிபோல்  மலர்வைத்த தம் மக்களின் கருங்கூந்தலை அரிந்து, நம் பிறப்பறுக்க வந்தவரின் மலர்ந்த கரத்தில் அளிக்க

    விளக்கம்

    பொருளல்லாத இதனையும் பொருட்படுத்தி “இது பஞ்சவடிக்கு ஆகும்” என்றுசொல்லும் பேறு பெற்றேன் என்க. இதற்கு  முற்பிறப்பிற் செய்த நல்லகருமம் என்று உரைகொண்டு, முன் செய்த நற்றவத்தால் இவ்வாறு கொடுப்பது ஒருவர்க்குக்கிட்டும்; நான் என்ன புண்ணியஞ் செய்தேன்? என்று உரைகொள்வர் மகாலிங்கையர்.

    இதனை மறுத்து, மொழிகேட்டு அதற்கு உண்மைப் பொருள் செய்து, அதன்படி செய்யத்துணிந்து, இதனை ஆம் என்று செய்யும்பேறு பெற்றேன் என மகிழ்ந்து என்று கூறுவர் ஆலாலசுந்தரம்பிள்ளை.

    இருள் செய்த என்ற தொடர்  கருநிறங்குறித்து நின்றது. ஆகுபெயர். இருள் செய்த, இருள் – மயக்கம் எனக்கொண்டு, கூந்தல் அழகியது – உடற்கூறு அழகியது என்றெல்லாம் இவ்வுடலைப் பற்றிக் கொண்டு அலையும் உலகியல்பு குறித்ததாக உரைப்பதுமாம். உலகர் அவ்வாறு மயங்காவண்ணம் காட்டும்நிலையில், இதுவரை இருள் செய்த – மயக்கம் செய்த – இனி உண்மை காணக் காரணமாயின- கூந்தல் என்று இப்பொருட்குக் குறிப்பு உரைத்துக்கொள்க.

    மானக்கஞ்சாறனார்போல் “மெய்ப்பொருளை யறிந்துண”ராத  ஏனை உலகர்க்கு மகளிரது கூந்தல் முதலியவை இருள் – மயக்கம் – செய்வன என்ற பொது இலக்கணமாகக் கூறியதாகக் கொள்க. இதனைத் தொடர்ந்து மருள் செய்த பிறப்பறுப்பார் என்றதும் உன்னுக. இருள் – ஆகுபெயராய் மேகத்தை உணர்த்தியதெனவும், செய்த – உவம உருபெனவும் கொண்டு மேகம் போன்ற கரிய கூந்தல் என்றலுமாம். மேல் மஞ்சுதழைத்தென என்றது காண்க.

    அடியில் அரிந்து என்ற தொடர்,  அந்தப் பற்றுச் சிறிதும் எஞ்சி நில்லாவகை அடியோடு களைந்து என்பதைக்  குறித்தது. . “பாசப் பழிமுதல் பறிப்பார்போல” என்றதுகாண்க.

    எதிர்நின்ற – முன்னே நின்றவராகிய பிறப்பறுக்கு முதல்வர். “தாவியவனுடனிருந்தும் காணாத தற்பரன்” என்றபடி எதிரேவரக் காணமுடியாதவர் இவருக்கு எதிர்வந்து நின்றார் என்பது குறிப்பு. எதிர்நின்ற மருள் என்று கொண்டு, உயிர்களை அறிவு மயங்கச்செய்து தம் இனமாகிய தலைவனை யடையாமல் எதிர்த்துக்கட்டி அதுகாரணமாகப் பிறப்பில்வீழ்த்தும் மயக்கம் என்றுரைக்க நிற்பதும் சிந்திக்க.

    “பொருளல்லவற்றைப் பொருளென்றுணரும்,
    மருளானாம் மாணாப்பிறப்பு”

    என்ற திருக்குறட் கருத்து இங்குத் தோற்றுவதனையும் உன்னுக. கூந்தல் முதலியனவாய் மெய் என்று பேர்பெற்ற பொருளல்லாத பொய்யினைப் பொருளெனக் கொண்டு அவற்றுக்காவனவே செய்து இறந்து பிறந்துழலும் மருளினால் ஆகிய மானிட வாழ்க்கையை நோக்கி இவ்வாறு கூறினார் என்பதும் காண்க.

    இனி, உலகபோகப் பொருள்கள் பொருளல்ல என்று தள்ளுதலும், அவையே பொருளாம் என்று கொண்டுழலுதலும் ஆகிய இரண்டும் தவறுடையன; சிவனுக்கும் அடியாருக்கும் பயன்படும் அவ்வளவிற்கே பொருளாம் என்றுணர மருள் செய்த பிறப்பறும் என்று சேர்த்துரைத்துக்கொள்ளுதலும் ஆம்.

    மருள்செய்த பிறப்பு அறுப்பார் , என்ற தொடர்,

    “மையல் செய்திம் மண்ணின்மேற் பிறக்கு மாறு காட்டினாய்” என்றபடி மருளினாலாகிய பிறவியினை அறுத்துத் திருவடித்தலம் கொடுப்பதற்காக எதிர்நின்று செய்த இச்செயல் முடிகின்ற இடமாதலின் இங்கு இத்தன்மையாற் கூறினார்.

    பிறப்பு அறுப்பார் மலர்க்கரம் , என்ற தொடர்  தமது கையினாற் காட்டும் ஞானமுத்திரையால் பிறப்பு அறும்வகை கூட்டுவார் என்ற குறிப்பும் காண்க. (மானக்கஞ்சாறர்) – நீட்ட – (அவர்) – மறைந்து – வந்தார் என வரும்பாட்டுடன் கூட்டி முடிக்க. பெற்றேன் என – கொண்டு – அரிந்து – நீட்ட என்ற வினைகட்கு, மானக்கஞ்சாறர்  என எழுவாய் வருவிக்க.

    இப்பாடலில்,  தம் மகளின் திருமணத்துக்குக் கூந்தலில் மலர் சூட வேண்டுமே என எண்ணாமல், இறைவனடியார்  வேண்டியதை அப்போதே வழங்க வேண்டும்  என்ற  உறுதியம் , அடியாரை இறைவனாகவே கருதும் சிவத்தொண்டும் புலனாகின்றது!

    Share
  • குருவடியைத் திருவடியாய் மனமெண்ணி மகிழ்வோம்!

    குருவடியைத் திருவடியாய் மனமெண்ணி மகிழ்வோம்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண் … ஆஸ்திரேலியா 

    எழுத்தை அறிவித்து எம்மகத்தைத் திறந்திட்ட
    பழுத்த அறிவுடைய பக்குவமே குருவாவாவர்
    நிலத்தை வளமாக்கி நிறைவளத்தைக் காணுகின்ற
    மனத்தை உடையவரே மாண்புடைய குருவாவார்

    அகமுறையும் அழுக்ககற்றி அறிவுச்சுடர் ஏற்றிவைத்து
    ஆதவனாய் ஒளிவிடுவார் அவரேநற் குருவாவார்
    செவிநுகரப் பலதருவார் சிறியவற்றை ஒதுக்கிடுவார்
    புவியதனில் பெருந்துணையாய் பொருந்திடுவார்  குருவாவார்

    கற்பவற்றைக் காட்டிடுவார் கருத்தமர வழியாவார்
    நிற்பதற்கும் நடப்பதற்கு நீள்வழியும் ஆகிடுவார்
    நற்பதத்தைத் தேர்ந்திடுவார் நாளுமதை மொழிந்திடுவார்
    இப்புவியில் நல்வரமாய் வாய்த்தவரே குருவாவார்

    இலக்கியமு மாவார் இலக்கணமு மாவார்
    தலைக்கனமே இல்லா தரமான குருவாவார்
    உலைக்களமாய் இருப்பார் உருக்கியே எடுப்பார்
    நிலைத்திடவே வைக்கும் நிறை குருவுமாவார்

    மெஞ்ஞானம் விஞ்ஞானம் சொல்ஞானம் தருவார்
    அஞ்ஞானம் அகல்வதற் கவர்விளக்  காகிடுவார்
    கல்ஞானம் கல்ஞானம் எனவுரைத்து நிற்பார்
    நல்ஞானம் மிக்குடையார் நம் குருவுமாவர்

    காவியமும் அறிவார் ஓவியமும் அறிவார்
    கணிதமும் தெரிவார் கற்சிலையும் வடிப்பார்
    வானிலையும் சொல்வார் வைத்தியமும் சொல்வார்
    வாழ்க்கையிலே வளமாய் வந்தமைந்தார் குருவாய்

    தலைதொட்டு நாளும் தலைநிமிர வைப்பார்
    தலைகுனியும் செயலை தலைகுனிய வைப்பார்
    உலகிடையே வாழ  உயர்கருத்தை விதைப்பார்
    உணர்வுடனே கலந்து உள்ளுறைவார் குருவாய்

    குருவாசி பெற்றிடுவார் குவலயத்தில் சிறப்பார்
    குருவாசி கிடைத்திடுதல் பெரு வரமேயாகும்
    குருவாய்த்தல் யாவருக்கும் நல் வரமேயாகும்
    குருவடியைத் திருவடியாய் மனமெண்ணி மகிழ்வோம்

    Share
  • சுவரில் வீசிய பந்து (சிறுகதை)

    சுவரில் வீசிய பந்து (சிறுகதை)

    நிர்மலா ராகவன்

    கதிரவன். அது பெற்றோர் அவருக்குச் சூட்டிய பெயரில்லை. ஆனால், எழுத்துத்துறையில் கம்பீரமாக இருக்கவேண்டாமா என்று யோசித்து, அவர் தானே தன்னை நாமகரணம் செய்துகொண்டார்.

    முதலில் வருந்திய பெற்றோரும், அவர் ஒரு தினசரியின் ஞாயிறு பதிப்பாசிரியராகப் பொறுப்பேற்றபின், `எல்லாம் அந்தப் பெயரோட ராசி! சும்மாவா? சூரியனில்ல!’ என்று பெருமைபேச ஆரம்பித்தார்கள்.

    அண்ணனுக்கு அந்தப் பெயரால்தான் வாழ்க்கையில் முன்னேற முடிந்தது என்று நம்பிய கதிரவனுடைய தம்பி பகலவனாக மாறினார்.

    “எதுக்கு அவசரமா வரச்சொன்னே?” என்று கேட்ட அண்ணனிடம் அழமாட்டாக்குறையாகச் சொல்ல ஆரம்பித்தார் பகலவன். “நான் பத்திரிகை ஆரம்பிச்சப்போ நீங்கதானே சொன்னீங்க, `நம்ப மக்களுக்கு நிறைய சினிமா செய்தி குடுடா. படம் பாத்துக்கிட்டிருந்தா, அவங்களுக்குச் சோறு தண்ணிகூட வேணாம்’னு?”

    “அதுக்கென்ன இப்போ? பத்திரிகை நல்லாத்தானே ஓடுது?”

    “இப்போ, ஆறு மாசமா, ரொம்ப நஷ்டம். எல்லாம் அந்தத் தாமரை பத்திரிகையால வந்த வினை!” பொருமினார் தம்பி.

    “காலேஜில படிச்சுக்குடுத்தவன் எவனோ ஆரம்பிச்சிருக்கானாம்!” அவர் குரலில் ஏளனம். “வேலையத்த வேலை! அவன் போடற குப்பையையெல்லாம் யார் படிப்பாங்க!”

    அண்ணன்-தம்பி இருவரும் மலேசிய ரப்பர் தோட்டப்புறங்களில் வளர்ந்தவர்கள். தமிழில் ஆரம்பக்கல்வி கற்றதோடு சரி. மெத்தப் படித்தவர்களைக் கண்டால் உள்ளுர பயம், வெளியில் அலட்சியம்.

    “நானும் அப்படித்தான் நினைச்சு சும்மா இருந்துட்டேன். இப்போ, அவன் போடற கதைங்க, விஷயங்களெல்லாம் சுவாரசியமா இருக்கு, நாலு விஷயம் தெரிஞ்சுக்கலாம்னு எல்லாரும் அதைத்தான் வாங்கிப் படிக்கறாங்க. நம்ப பத்திரிகை கடைங்கள்லே அப்படியே தொங்கிட்டுக் கிடக்கு!”

    கதிரவன் யோசனையில் ஆழ்ந்தார். சிறிது பொறுத்து, “அந்த ரோசாவோ, என்ன எழவோ, விக்காம செய்துட்டா?”

    “தாமரை!” என்று மெல்லிய குரலில் திருத்திய பகலவன், “வாங்கறவங்க கையைப் பிடிச்சு தடுக்கவா முடியும்?” என்றார் நிராசையுடன்.

    “எதை எப்படிச் செய்யணும்கிறதை எங்கிட்ட விடு!”

    அடுத்த வாரமே கதிரவனுடைய தினசரியில்  வெளியாகியிருந்தது அச்செய்தி: “நமது சகோதரரான ஞாயிறு பத்திரிகை ஆசிரியர் சாலை விபத்தில் உயிரிழந்தார். அன்னாரது குடும்பத்திற்கு நமது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம். அதை ஒட்டி, இன்று மாலை நாம் ஏற்பாடு செய்திருக்கும் இரங்கல் கூட்டத்திற்கு இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் திரண்டு வருமாறு கேட்டுக்கொள்கிறோம்”.

    ஞானி (உண்மைப்பெயரில்லை) அதிர்ந்தேபோனான். பதினாறு வயதில், நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் ஆசையுடன் தலைநகருக்கு வந்திருந்தவன் அவன்.

    திசை தெரியாது விழித்துக்கொண்டிருந்தவனை, “தமிழில எழுதப் படிக்கத் தெரியும்தானே? எங்கிட்ட வேலைக்கு சேர்ந்துக்க,” என்றவாறு அடைக்கலம் கொடுத்தார் கதிரவன். அவரைத் தன் தெய்வமாகவே அவன் மதித்து நடந்துகொண்டதில் வியப்பேதுமில்லை.

    இப்போதோ, சுயதலத்திற்காக வன்முறையைப் பயன்படுத்தியிருந்த அவருடைய போக்கு அவனை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

    “என்னங்க ஐயா, இப்படிச் செய்துட்டீங்களே!” என்று குழம்பியவனிடம், “நாலு பேருக்கு நல்லது செய்யணும்னா, எதுவும் தப்பில்ல,” சினிமா வசனத்தை எடுத்துக்கூறினார் கதிரவன். “அந்த நாலு பேத்தில நாம்பளும் ஒத்தங்க!”

    குருவின் இந்த உபதேசத்தால், ஒரு வழியாக உலகம் புரிவதுபோல் இருந்தது ஞானிக்கு.

    அதன்பின் `தாமரை’ முடங்கிப்போக, வாசகர்கள் மீண்டும் திரைப்படச் செய்திகளுக்கும், அரைகுறை ஆடை அணிந்த நடிகைகளின் படங்களுக்கும் தாவினர்.

    “நீங்க மந்திரியா இருக்கவேண்டியவங்கண்ணா!” என்று நன்றிப்பெருக்குடன் பகலவன் கூறியபோது, ஞானியும் அதை ஆமோதித்துத் தலையாட்டினான்.

    தம்பியின் மகிழ்ச்சி நிலைக்கவில்லை.

    “வியாபாரம் படுத்துப்போச்சுண்ணே. எல்லாப் பயலுவளும் ஹேண்ட்போன் வெச்சிருக்கானுங்க!” தான் வெளியிட்ட செய்திகள் கையிலேயே கிடைத்துவிட்டதால் யாரும் தன் பத்திரிகையை வாங்கப் பிரியப்படவில்லை என்ற கோபம் பகலவனது குரலில் வெளிப்பட்டது.

    “பேசாம, அதை மூடிட்டு, எங்கிட்ட சேர்ந்துக்க,” என்று ஆறுதல் கூறினார் கதிரவன். “அந்தப் பய ஞானிக்கு ஒழுங்கா தமிழ் எழுதத் தெரியல. நான் திரும்ப எல்லாத்தையும் திருத்தி எழுத வேண்டியிருக்கு! ஆனா, நாய்மாதிரி என் பின்னாலேயே வரான், பாவம்!”

    அதைக் கேட்டுவிட்ட ஞானியின் மனம் கொதித்தது.

    நாயா?! இருபது வருடங்கள்! எத்தனை முறை வயிற்றைக் காயப்போட்டு, மாடாக உழைத்தோம்!

    “தம்பி, டேய்! இப்பல்லாம் என் ஒடம்பு முந்திமாதிரி இல்ல. வயிறு என்னமோ பலூன்கணக்கா உப்பிக்கிட்டே போகுது,” என்று முனகினார் கதிரவன்.

    “டாக்டர் என்ன சொல்றாரு?”

    “குடியைக் குறைச்சுங்கங்கிறாரு. நான் என்னிக்குடா அந்தக் கருமத்தைத் தொட்டிருக்கேன்?”

    நடந்தால் வயிறு குறையுமோ என்ற நப்பாசையுடன் ஒருநாள் சாயங்காலம் உலவப்போனார் கதிரவன்.

    திரும்பும் வழியில் ஓரடிகூட எடுத்துவைக்க முடியாமல் போக, டாக்ஸி ஒன்றை நிறுத்தி, அதில் ஏறிக்கொண்டார்.

    அந்த வாகன ஓட்டியான மலாய்க்காரர் தன் பயணியின் முகத்தில் தெரிந்த வேதனையையும் அவருடைய பருத்த வயிற்றையும் பார்த்து ஒரு முடிவுக்கு வந்திருந்தார்.

    “இஞ்சே (INCHE — மலாயில் ஐயா)! ஒங்களுக்கு எதிரி யாராவது இருக்காங்களா?”

    “நான் பெரிய சம்பளக்காரனில்ல. எனக்கு எதிரிங்க யாரு இருக்கப்போறாங்க?” என்று அசிரத்தையாகச் சொன்னாலும், சொல்லத்தெரியாத பயம் எழுந்தது.

    “ஒங்களுக்கு யாரோ செய்வினை செஞ்சிருக்காங்க — போமோகிட்ட போய்!” அழுத்தந்திருத்தமாக வந்தது குரல்.

    போமோ (BOMOH)!

    அவரைப்பற்றித் தான் அறிந்ததையெல்லாம் நினைவுபடுத்திக்கொண்டார் கதிரவன்.

    கிராமப்புற மருத்துவர் என்று அறியப்பட்ட மலாய் மாந்திரீகர். மருத்துவர் என்ற பெயருக்கு ஏற்றபடி, வருகிறவர்களின் நோய்களைக் குணப்படுத்துவார்.

    அத்துடன் நில்லாது, அவர்களுக்கு வேண்டாதவர்களுக்கு நோய்களையோ, ஏன், மரணத்தையோகூட உண்டாக்கும் வலிமை படைத்தவர்.

    ஒருவரது தலைமுடியை வைத்துக்கொண்டே அவருக்குத் தீமை விளைவிக்க முடியும் என்பதால்தானே, அழகுநிலையத்திற்குப் போகும் மலாய்ப்பெண்கள் வெட்டப்பட்ட தங்கள் தலைமுடியில் ஓரிழைகூட விடாது சேகரித்துக்கொண்டு வந்து, பூமிக்கு அடியில் புதைத்துவிடுகிறார்கள்!

    ஒருமுறை, போமோ ஒருவரைப் பேட்டி கண்டபோது, “ஒருத்தர் மூளை கலங்கச்செய்ய அவர் வீட்டு வெளியில இருக்கிற கதவிலே நூத்துக்கணக்கான பாம்புங்க நெளியறமாதிரி பிரமை உண்டாக்க எங்களுக்குப் படிச்சுக்குடுத்திருக்காங்க!” என்று கதிரவனிடம் ரகசியக் குரலில் கூறினார். ”செவத்திலே எறியற பந்து திரும்பி நம்பமேலேயே வந்து விழறமாதிரி, கெட்டது பண்ணினாலும் அப்படித்தான், இல்லீங்களா? அதனால, நான் அந்த பக்கமே போறதில்லே”.

    பக்கத்திலிருந்தவரின் உணர்ச்சிகளைக் கவனிக்காது, தன் அறிவைப் பறைசாற்றிக்கொள்வதுபோல், காரோட்டி தன்பாட்டில் பேசிக்கொண்டேபோனார்: “நமக்குப் பிடிக்காத ஒருத்தர் சாக, அவர் வயிறு பெருத்துக்கிட்டே போகச் செய்வாங்க. அதுக்குப் பேரு..”.

    “எப்படி மாத்தறது?” ஈனஸ்வரத்தில் கேட்டார் கதிரவன்.

    “கஷ்டம். சூனியம் போட்டவரால மட்டும்தான் அது முடியும். யாருன்னு எங்கே போய் தேடறது!”

    தான் மரணத்தின் வாயிலில் இருக்கிறோம் என்று சந்தேகமறப் புரிந்தவுடன், எதிலும் பற்று இல்லாது போயிற்று கதிரவனுக்கு.

    அவர் படுத்த படுக்கையாக இருந்தபோது, தான் விடாது, சுவரில் பந்து எறிவதுபோலவும், அது திரும்பி வந்து தன்னையே தாக்குவதுபோலும் தோன்றிக்கொண்டே இருக்க, “தம்பி, தாமரை” என்று பிதற்ற ஆரம்பித்தார்.

    கூடை நிறைய பழங்களுடன் அவரைப் பார்க்க வந்த ஞானியின் உடலில் புதிய மெருகு ஏறியிருப்பது அவ்வளவு கலங்கிய நிலையிலும் அவர் கண்களுக்குத் தப்பவில்லை.

    “நீங்க இருந்த எடத்திலே என்னைப் போட்டிருக்காங்க. எல்லாம் ஒங்க ஆசிதான்! சீக்கிரமே ஒடம்பு நல்லாகி, வந்துடுங்க ஐயா!” என்ற அவனுடைய போலிப்பணிவும் கரிசனமும் நன்றாகவே புரிந்தது.

    விரைவிலேயே, `எனது ஆசான்’ என்ற தலைப்பின்கீழ் அவரது மரணச்செய்தியை ஒரு பக்கத்தில் வெளியிட்டிருந்தான் ஞானி. கூடவே, ஒரு கண்ணீர்க்கவிதை வேறு!

    அவரது அகால மரணத்திற்கு, `மாரடைப்பு, குடிப்பழக்கம், மன இறுக்கம்’ என்று ஏதேதோ காரணங்கள் கற்பிக்கப்பட்டன.

    ஆனால், கதிரவனுக்கு மட்டும் தெரிந்திருந்தது துரோகம் செய்தது யாரென்று. `நாலு பேருக்கு நல்லது செய்யணும்னா, எதுவும் தப்பில்ல. அந்த நாலு பேத்தில நாம்பளும் ஒத்தங்க!’ என்று அவனுக்குப் போதித்ததே அவர்தானே!

    அதனால்தான், இறக்கும் தறுவாயில் அவர் இதழில் ஒரு சிறு புன்னகை நெளிந்திருந்ததோ?

    Share
  • திருமாலடி பிடிப்பாவை

    திருமாலடி பிடிப்பாவை

    சத்தியமணி
    பொடியான் தானமிட நெடியான் அடியளக்க
    அடியான் கல்லையே அகலிகை ஆக்கும்
    முடியான் மூவுலகின் இடையான் திருமலைப்
    படியான் அரங்கக் குடியானைப் பிடிமனமே…1
    ஆவினம் அழைக்க அதன்மடி பால்சுரக்க
    பூவினம் மொட்டுரிய பொன்வண் டெச்சமிட
    கூவினம் பாபயில  கோபியர் மத்தொலிக்க
    நாவினம் கோவிந்தா வெனுநாதனைப் பிடிமனமே…2
    Share
  • தமிழ் வருமோ சொல்!

    தமிழ் வருமோ சொல்!

    சத்தியமணி

    தேவாரம் படிக்காது திருவாசகம் பிடிக்காது
    பூவாரம் தொடுக்காது ஓதுவார்பண் கேட்காது
    தாவாரச் சிவன்கோயில் இடிப்போரைத் தடுக்காது
    நாவோரம் துவேசத்தால் நற்றமிழ் வருமோசொல்

    அருட்பாவைத் திவ்விய பிரபந்தங்கள் பாடாமல்
    கருப்பாவைக் கம்பன்தன் ராமகதைக் கேளாமல்
    திருப்பாவை ஆண்டாளை வேசியெனச் சொல்லிக்
    கொடும்பாவி எரித்தாலே கனித்தமிழ் வருமோசொல்

    பக்திக்கு விழையாமல் பண்பாட்டைக் குறைகூறி
    புத்திக்கு ஏற்றாமல் வழிபாட்டைக் கறையாக்கி
    சித்திக்கு மூடமெனும் பழக்கமென முடக்கித்தன்
    யுத்திக்கு வேடமிடின் பைந்தமிழே வருமோசொல்

    உருவில் சிவனாக அருவில் சிவனாக
    திருவில் சிவனாகக் குருவில் சிவனாக
    இருளில் சிவனாக எதிலும் இவனாக
    அருளில் சிவனேதான் மறையில் சிவனான்
    அவனைப் புரியாது எதுவும் தெரியாது
    தவணைத் தவறுக்கு கர்மவினை புரியாது

    தமிழ் வளர்த்த ஆன்மீகம் தர்மநெறியோடு
    தமிழ் வளர்த்த ஆண்டவர் அறம்பொருளோடு
    தமிழ் வளர்த்த இன்பவீடு பேரளித்தான்றோரின்
    தமிழ் வளர்த்த சேவையைப் பழித்தால் தமிழ்வருமோ?

    Share
  • மாமியார் Vs மருமகள் | நிர்மலா ராகவன்

    மாமியார் Vs மருமகள் | நிர்மலா ராகவன்

    சந்திப்பு: அண்ணாகண்ணன்

    மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே நிகழும் சண்டைகள் குறித்து நிறையப் படித்திருக்கிறோம், கேட்டிருக்கிறோம், பார்த்திருக்கிறோம். எப்படிச் சண்டை ஆரம்பிக்கிறது? இதில் கணவன் என்ன செய்ய வேண்டும்? சண்டையைத் தீர்ப்பது எப்படி? தவிர்ப்பது எப்படி? ஆலோசனை வழங்குகிறார் எழுத்தாளர் நிர்மலா ராகவன்.

    உங்கள் குடும்பத்தில் அல்லது உங்கள் நண்பர்கள் குடும்பத்தில் ஏதும் சிக்கல் இருந்தால், நீங்கள் அதுகுறித்து நிர்மலா ராகவனிடம் இலவச ஆலோசனை பெறலாம். உங்கள் கேள்விகளை இந்தப் பதிவிற்கு மறுமொழியாக இடலாம். அல்லது, annakannan@yahoo.co.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 35

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 35

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    கவிதை அழகு பார்க்கும் கண்ணாடிகள் உவமங்கள்! 

    முன்னுரை

    படைப்பதோடு முடிந்து விடுகிறது படைப்பாளன் பணி. சுவைப்பதோடு நிறைவடைகிறது ரசிகனின் மனம்! படித்தலும் சுவைத்தலும் ஆய்தலும் நீட்டித்துக் கொண்டே போவதால் திறனாய்வாளனின் பணிக்கு ஆதி உண்டு. அந்தம் இல்லை. உவமம் பொருட்பகுதி என்பதால் ஒரு கவிதைக்கான பொலிவும் தெளிவும் அதில் பயன்படுத்தப்படும் உவமத்தைப் பொருத்தே அமையும். சுருக்கியுரைப்பின் கவிதை தன் உள்ளடக்க வெளிப்பாட்டு நேர்த்தியைச் சரிபார்த்துக் கொள்ளும் கண்ணாடியாகவே உவமம் அமைந்திருக்கிறது. அது போன்ற சில கண்ணாடிகளை இக்கட்டுரை அடையாளப்படுத்துகிறது.

    ஓரூர் உண்மை! உள்ளூர் அருமை!

    சிறுபாணாற்றுப்படையின் பாட்டுடைத்தலைவன் நல்லியக்கோடன். இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனாரால் பாடப்பெற்றவன்.  நத்தத்தனார் பாடிய நல்லியக்கோடனைப் புறத்திணை நன்னாகனாரும் பாடியிருக்கிறார். நன்னாகனார் ஒருமுறை நல்லியக்கோடனைக் காணச் சென்ற பொழுதுதான் அவனுடைய தன்மையும் வள்ளன்மையும் தெரிந்திருக்கிறது.  அதுவரை நல்லியக்கோடனின் வள்ளன்மை அறியாது அவனால் புரக்கப்படாது வீணே கழிந்த தன் வாழ்நாள்களுக்காக வருந்தியது அவர் நெஞ்சம். அப்போது பாடிய பாடலில்,

    “பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர்
    ஓரூர் உண்மையின் இகந்தோர் போலக்
    காணாது கழிந்த வைகல் காணா
    வழிநாட்கு இரங்கும் என் நெஞ்சம்! அவன்
    கழிமென் சாயல் காண்டொறு நினைந்தே!” (புறம்.176)

    என்ற வரிகளில்தான் வெண்ணெயிருக்க நெய்க்கு அலைந்த தன் அறியாமைக்கு ஒர் உவமம் சொல்கிறார். பாரியின் பறம்புச் சுனை நீர்  “‘கைவண் பாரி தீம்பெரும் பைஞ்சுனை” (அகம். 78) “பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர்” (குறுந். 166) எனப் பிறராலும் பாடப்பெற்ற பெருமையுடையது. உள்ளூரில் அகப்படும் அரியபொருள் அரிதாகாது எளிதாகக் கருதப்படுவதைப் போலப் பாரியின் சுனைநீரின் அருமையும் உணரப்படாது போயிற்று. எல்லாராலும் அறியப்பட்டுப் பயன்பட்ட பாரியின் சுனை நீர் அருமையை அறியாது, அதனைப் பருகாது வீணானவரைப் போல, நல்லயக்கோடனின் பெருமையை உணராது தானும் துன்பப்பட்டதாக நன்னாகனார் பாடுகிறார்.

    எல்லாப் பூவும் இறைவனுக்கு மணக்கும்! 

    வேள்பாரியைக் கபிலர் கடவுளோடு ஒப்பிட்டுப் பாடுகிறார்!. இந்த ஒப்பீட்டில் அவர் சுட்டும் உவமம், நுண்ணியமுடையது. எருக்கம் பூவை ஏற்கின்ற இறைவனைப் பாரியோடு ஒப்பிடுகிறார். மக்கள் விரும்பாத பூவை இறைவன் ஏற்கிறார். எருக்கம் பூவிற்குக் கொடுக்கும் அடைகள் அதன் புறஅழகைப் பெருக்குமாயினும் மக்கள் அதனை ஏற்பதில்லை. ‘குவியிணர்ப் புல் இலை எருக்கம்’ என்கிறார். ‘குவிமுகிழ் எருக்கு’ என்பது இன்னொரு பார்வை.  ‘குவியிணர் எருக்கின் அதர் பூங்கண்ணி’ என்பதும் பிறிதொரு பார்வை. கம்பர் கூட ‘வெள்ளெருக்கம் சடைமுடியான்’ என அடைகொடுத்தே சிவனைச் சுட்டுவார். கொத்தாகப் பூத்தாலும் புல்லிலைகள் இருப்பினும் இறைவன் அதனை வெறுப்பதில்லை.

    “நல்லவும் தீயவும் அல்ல குவியிணர்ப்
    புல் இலை எருக்கம் ஆயினும்; உடையவை
    கடவுள் பேணேம்” என்னா ஆங்கு
    மடவர் மெல்லியர் செல்லினும்
    கடவன் பாரி கைவண்மையே!” (புறம். 106)

    நறுமணம் இன்மையின் நற்பூ வகையிலும் இறைவன் விரும்பிச் சூடுதலின் தீயபூ வகையிலும் சேராதது எருக்கம்பூ. ஆனால் இறைவன் சூடிக்கொள்கிறான். அதுபோலப் பாரியை நாடிச் செல்வோர் அறியாமை உடையவராயினும் வறுமையால் மெல்லியராயினும் வேள்பாரி தன் வள்ளன்மையிலிருந்துப் பிறழமாட்டான். மலரில் பேதம் பார்க்காத இறைவனைப், புரக்கப்பட வேண்டியவரின் தரம் பார்க்காத பாரியோடு ஒப்பிடுகிறார் கபிலர். ஆழமான சமுதாயக் கருத்தினை உலகியலோடு தொடர்புடைய ஒரு பொருளை உவமமாக வைத்துக் கூறுவது காண்க.

    செருப்பிடைப் பட்ட  சிறுபரல்

    இன்னா செய்தார்க்கு மீளச் செய்வது நன்னயமேயானாலும் அதனை ‘ஒறுத்தல்’ என்ற சொல்லால் திருக்குறள் குறிப்பது சிந்திக்கத்தக்கது.  தூக்குத்தண்டனைக் கைதிக்கு ஆயுள் தண்டனை விதிப்பது குற்றத்தின் தன்மை பொருத்தது என்பதோடு உளவியல் நுட்பம் வாய்ந்தது. தூக்கு உயிர்போக்கும். ஆயுள் உயிர்காக்கும். இந்த முரண் உணரத்தக்கது. ஆனால் முன்னது ஒரு நொடியில் முடிந்து விடும். பின்னது அத்தகையதன்று. உயிர் தவணைமுறையில் கழியும். குற்றம் செய்தவன் தன் குற்றத்திற்காக ஒவ்வொரு நொடியும் எண்ணி மருகுவான். ஆழ்ந்த சிந்தனையாளர் பின்னதையே முன்னெடுப்பர். அந்தக் காலத்தில் அப்படி முன்னெடுத்த மன்னன் ஒருவன் இருந்திருக்கிறான். பெயர் தெரியாது. “கணைக்கால், அம் வயிறு, அகன்ற மார்பு, பைங்கண், குச்சின் இரைத்த குரை மயிர் மேவாய்ச், செவியிறந்து தாழ்தரும் கவுளன் வில்லோடு யார் கொலோ எளியன்?” (புறம். 257) என்று வண்ணனை செய்யப்படும் இவனை, உண்டாட்டில் வைத்துக் கொண்டாடுகிறார்கள் அவன் நாட்டார்!

    “செருப்பிடைச் சிறுபரல் அன்னன்”

    பகைவர்தம் ஆநிரையைக் கவர்ந்து கொண்டு வந்து தம் நாட்டார்க்கு வழங்கிய அவன் பகைவர்க்குத் துன்பம் தருவதில் எத்தகையவன் என்றால் செருப்புக்கு இடையே நுழைந்து அணிந்தவனுக்கு இடையறாது தொல்லை கொடுக்கும் பரலைப் போன்றவனாம்.

    “தருக்கி யொழுகித் தகவல்ல செய்தும்
    பெருக்க மதித்தபின் பேணாமை செய்தும்
    கரப்பிடை உள்ளம் கனற்று பவரே
    செருப்பிடைப் பட்ட பரல்” (பழ. 202)

    என்னும் பதினெண் கீழ்க்கணக்கில் ‘செருப்பிடைப் பட்ட பரல்’ என்னுந் தொடர் வேறொரு பொருண்மையை விளக்கி நிற்கிறது. உவமம் சொல்லும் பெருமக்கள் உலகியலை உற்று நோக்குந்  திறத்தை அவர்கள் கையாளும் உவமங்களாலேயே புரிந்து கொள்ள இயலும்.

    அச்சுடை சாகாட்டு ஆரமும் பல்லியும்

    இழப்பு கண்டு உற்றார் உறவினர் புலம்புவதும் இறந்தவரால் புரக்கப்பட்டவர் புலம்பினாலும் இரண்டுமே கையறுநிலைதான். மனைவி மாண்டு கணவன் அரற்றுவதும் கணவன் மாண்டு மனைவி புலம்புவதும் இத்துறையே!, இறப்பும் இழப்பும் சூழல்களுக்கு அப்பாற்பட்டவையாதலின்  பாலைவனத்தில் எதிர்பாராக் காரணங்களால் தன் கணவனைப் பறிகொடுக்கிறாள் ஒருத்தி. இதுகாறும் இணைந்தே வாழ்ந்தவள் அந்நொடி தனிமை உணர்கிறாள். அதனால் தன்னையும் அவனோடு சேர்த்தே புதைத்துவிட ஒரு முதுமக்கள் தாழி தேவைப்படுகிறது அவளுக்கு. தாழி செய்பவனிடம் இருவரையும் சேர்த்துப் புதைக்குமாறு அகன்ற தாழி செய்து உதவ இப்படி வேண்டுகிறாள்.

    “கலஞ்செய் கோவே கலஞ்செய் கோவே
    அச்சுடை சாகாட்டு ஆரம் பற்றிய
    சிறு வெண்பல்லி போலத் தன்னொடு
    சுரம்பல வந்த எமக்கும் அருள்
    வியன் மலர் அகல்பொழில் ஈமத்தாழி
    அகலி தாக வனைமோ!
    நனந்தலை மூதூர்க் கலஞ்செய் கோவே!” (புறம். 256)

    இக்கால இணையர்கள் தங்களை ஒப்பிட்டுக் கொள்வதே ஒரு தனி ரகம்! மலரும் மணமும் என்றிருந்தது இன்றைக்கும் ‘மந்தையும் மாடும்’ என்ற அளவுக்கு வந்துவிட்டது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக ‘ஆரக்காலில் ஒட்டிக் கொண்ட பல்லியாய்’ வாழ்ந்திருக்கிறாள் மனைவி!. அன்றைக்குக் கணவனுக்கு மனைவியாக வாழ்ந்தவள் இன்றைக்குக் கவிதையில் பொருளாக வாழ்கிறாள். வாழ்வில் மட்டுமன்று சாவிலும் ஒன்றாக வேண்டும் என்பதற்காக அகன்ற தாழியை வேண்டுகிறாள். ஒரே மாலையில் இருவர் கழுத்தும் இருப்பதை விரும்பும் தற்காலத்திற்கும் ஒரே தாழியில் இருவர் அடங்க வேண்டும் என்னும் அக்காலத்திற்கும் காலம் மட்டுமா இடைவெளி? என்ன தெரிகிறது இதனால்? ஒட்டி உறவாடியவர்கள் விட்டுப் பிரிய எண்ணுவதில்லை.

    விதவைபோல் ஆன வீடு

    ‘மனைக்கு விளக்கம் மடவார்’ என்பது முதுமொழி. நவீன காலத்தில் மங்கல நாட்களில் ஆண்கள் வீட்டில் விளக்கேற்றுவது புரட்சியாகத் தெரியலாமே தவிர  மனைக்கு மங்கலமாகாது. ‘வீடு வெறிச்சோடி விட்டது’ என்பது உலக வழக்கு! மகிழ்ச்சியோடு சில நாளே தங்கிய விருந்தினர் சென்றால் கூட வீடு வெறிச்சோடிவிடும் என்றால் விளக்கேற்றிய மனைவி இழந்த மனை எப்படி இருக்கும்? அணிகலன் இழந்த கைம்பெண்ணைப போல் இருக்குமாம்!.

    “அந்தோ எந்தை அடையாப் போரில்
    வண்டுபடு நறவின் தண்டா மண்டையொடு
    வரையாப் பெருஞ்சோற்று முரிவார் முற்றம்
    வெற்று ஆற்று அம்பியின் எற்று? அற்று ஆக!
    …………………………………………………………………………………………
    நிரை  இவண் வந்து நடுகலாகிய
    வென்வேல் விடலை இன்மையின் புலம்பிக்
    கொய்ம்மழித் தலையொடு கைம்மையுறக் கலங்கிக்
    கழிகலன் மகடூஉப் போலப்
    புல் என்றனைப் பல் அணி இழந்தே! “(புறம். 261)

    ‘காரியாதி’ என்னும் மன்னனுக்குப் பாடிய கையறு நிலையை ஆவூர் மூலங்கிழார் ஆதியின் முரிவார் முற்றத்தின் இறந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் ஒப்பிட்டுப் பாடுகிறார். காரியாதி இருந்தபோது வரையாப் பெருஞ்சோற்று முரிவார் முற்றம் அவன் இறந்தபிறகு கழிகலன் மகடூஉப்போலப் பொலிவிழந்ததாகக் கூறுகிறார். ‘கழிகலன் மகடூஉ’ என்னும் கிழாரின் தொடருக்குக் கம்பன் உரையெழுதியிருக்கிறான். வாலியை இழந்து விதவையான தாரையை இப்படி நோக்குகிறான் இலக்குவன்.

    “மங்கல அணியை நீக்கி  மணி அணி துறந்து வாச
    கொங்கலர் கோதை மாற்றிக் குங்குமம் சாந்தம் கொட்டாப்
    பொங்கு வெம் முலைகள் பூகக் கழுத்தொடு மறையப் போர்த்த
    நங்கையைக் கண்ட வள்ளல் நயனங்கள் பனிப்ப நின்றான்” (கம்ப. 4320)

    இந்த விதவைக் கோலத்தில் இருப்பது ஒரு குரங்கு என்பதை எவரும் நினைவுக்குக் கொண்டு வர இயலாது. தாரையின் இந்தக் கோலத்தைக் கண்ட இலக்குவனுக்குத்தன் தாயரின் கைம்மைக் கோலம் நினைவுக்கு வந்ததாம். அங்கேதான் கவிஞன் கம்பன் ஒரு கவிச்சக்கரவர்த்தியாகிறான்.

    “இனையர் ஆம் என்னை ஈன்ற இருவரும் என்ன வந்த
    நினைவினால் அயர்ப்பு சென்ற நெஞ்சினன் நெடிது நின்றான்” (கம்ப. 4321)

    குரங்கைத் தாயாக எண்ணும் பாத்திர செய்நேர்த்தி, உலக உயிர்களை ஒன்றாக எண்ண வைக்கும் இறையுள்ளம், தாயின் நிலை மறக்காத தனையர்களின் இயல்பு எதிரியின் மனைவியானாலும் பெண்மைக்குத் தரப்படும் மதிப்பு என்று கம்பனின் கவியாற்றல் எல்லை மீறிச் செல்வதைக் காணலாம். இந்த உவமங்களைத் தொகுத்து நோக்கினாலோயொழிய உவமச் சிறப்பு அவ்வளவாகப் புலப்படாது. “தாயரைப் போல் தாரையிருக்கிறாள், அந்தத் தாரையைப்போலப் புறநானூற்றுக் கைம்பெண் இருக்கிறாள். கலன்கழிந்த அந்தக் கைம்பெண்ணைப் போலக் காரியாதியை இழந்த இல்லம் இருக்கிறது என்ற நிரலில் வைத்துப் பார்த்தால் இலக்கியச் சுவை என்ன என்பது புரியக் கூடும். ‘கலன் கழிந்த மகடூஉ’ என்பதை விளக்கத்தான் தாரையும் அயோத்தித் தாயரும் இங்கே துணைக்கழைக்கப்பட்டார்கள் என்பது கருதத்தக்கது. “இந்த மன்னன் படையெடுத்தபோது அழிந்த நகரத்தைப் போல் இவள் நலன் அழிந்தது” என்று தலைவன் பிரிவால் இழந்த  நலனுக்கு அழிந்த நகரத்தை அகத்திணையில் உவமமாக்கிய புலவர்கள் உண்டு. மூலங்கிழார் ஒளியிழந்த வீட்டிற்குக் களையிழந்த கைம்பெண்ணை உவமமாக்கியிருப்பது அவலத்தை மிகுவிப்பதாக உள்ளது, மேலே சொல்லப்பட்ட கைம்பெண்களின் கோலத்தை மனத்தில் கொண்டு வந்து ‘கழிகலன் மகடூஉ’வைக் காட்சிப்படுத்திக் கொண்டு காரியாதியின் இல்லத்தை நோக்கினால் தெரியும் உவமத்தின் நுண்ணியம்!

    இல்லது படைக்கவும் இவனால் இயலும்!

    சங்க இலக்கியம் ஓர் உவமத் தோரணம். ஆனால் அவற்றுள் பெரும்பாலானவை அனுபவப் பதிவுகள். அழகியல் துளிகள் அல்ல. கற்பனைப் புள்ளிகள் குறைவு. இதனை வேறுவகையாகச் சொன்னால் மக்கள் வழக்கில் உவமத்தைப் பயன்படுத்துவதற்கும் செய்யுள் வழக்கில் உவமத்தைப் பயன்படுத்துவதற்கும் வேறுபாடு உண்டு. முன்னது இயற்கை. பின்னது செயற்கை. ஆனால் சங்க இலக்கியம் இதற்கு மாறுபட்டது. புலவனின் புலமையாற்றல் பின்னதில் வெளிப்படுவதென்றால் புலவனின் சமுதாய நோக்கும் வாழ்வியல் பட்டறிவும் முன்னதில் வெளிப்படும்.

    “கல்லறுத்து இயற்றிய வல்லுவர்க் கூவல்
    வில்லேர் வாழ்க்கை சீறூர் மதவலி
    நனி நல் கூர்ந்தனன் ஆயினும் பனிமிகப்
    புல்லென் மாலைச் சிறுதீ ஞெலியும்
    கல்லா இடையன் போலக் குறிப்பின்
    இல்லது படைக்கவும் வல்லன்., உள்ளது
    தவச்சிறிது ஆயினும் மிகப் பலர் என்னாள்
    நீள்நெடும் பந்தர் ஊண்முறை ஊட்டும்
    இல் பொலி மகடூஉப் போலச் சிற்சில
    வரிசையும் அளிக்கவும் வல்லன் உரிதினின்
    காவல் மன்னர் கடைமுகத்து உகுக்கும்
    போகுபலி வெண்சோறு போலத்
    தூவவும் வல்லன் அவன் தூவுங்காலே!” (புறம். 331)

    பாட்டில் உள்ள உவமத்தைச் சுவைக்கிறபோது உவமத்தை மட்டுமே தனியெடுத்துச் சுவைக்கலாம். பாயாசத்தில் கிடக்கும் முந்திரியையும் திராட்சையையும் போல. பாட்டோடு கலந்தும் சுவைக்கலாம் சோற்றில் உப்பைப் போல. சங்க இலக்கிய உவமங்கள் பெரும்பாலும் பின்னதைச் சார்ந்தது. இதில் மூன்று வல்லமைகள் காட்டப்படுகின்றன.

    1. இல்லது படைக்கவும் வல்லன்
    2. வரிசையில் அளிக்கவும் வல்லன்
    3. தூவவும் வல்லன்.

    இம்மூவகை வல்லாண்மையை அவற்றை விளக்கும் உவமங்களோடு சுவைக்கிறபோதுதான் பாட்டு இனிக்கிறது.

    கல்லா இடையன் போல வல்லன்

    இல்லாமையைக் காரணமாக்கி ‘இயலாமையை’ முன்னிறுத்தி மறுதலிப்பதைவிட முயற்சியினால் இல்லாமையைப் போக்கிக் கொள்வது சிறந்தது. மிக்க வறுமையுற்ற காலத்திலும்  வறுமையை முன்னிறுத்தாது, ‘குளிரைத் தவிர்ப்பதற்கு வேண்டிய நெருப்பைத் தீக்கடைக்கோலைக் கொண்டு கடைந்துத் தீயுண்டாக்கும் கல்லாத இடையன் போலத்’ தித்தன் உதவுவான் என்னும் இந்த உவம விளக்கம் தித்தன் வறுமையுற்ற காலத்தும் இல்லையென்னாது வந்தார்க்கும் வழங்கும் நெறியைத்தானே கண்டறிந்து ஈட்டி வழங்குவான் என்னும் உண்மை உணர்த்தி நின்றது.

    இல்பொலி மகடூஉப் போல வல்லன்

    இல்லாமையைப் போக்கிக் கொள்ளும் நெறி அவ்வாறெனின் உள்ளது சிறிதாகிப் புரக்கப்பட வேண்டியவர் பலராயின் தித்தன் எப்படிச் செயல்படுவான்? இல்பொலி மகடூஉப் போலச் செயல்படுவானாம்!. அவள் எப்படிச் செயல்படுவாள்? தன்பால் உள்ளது சிறிதாயினும் அதனை இவறுதல் இன்றி யாவர்க்கும் அவரவர் வரிசைக்குத் தக்க முறைப்படுத்தி வழங்குவதனால், கொள்வதனால் கொள்வார்க்கு வருத்தம் பயவாதாம். ‘நெடிய பந்தர்க் கீழ் இருத்தி உணவை முறைமுறையாகத் தந்து உண்பிக்கும் இல்வாழ்க்கையின் சிறந்த மகளைப்போல’ என்னும் அகன்ற விளக்கத்தை இல்பொலி மகடூஉ என்னும் இருசொற்களால் புலப்பட வைத்த நுட்பம் உணர்க.

    வெண்சோறு போலத் தூவவும் வல்லன்

    இல்லாதபோது உருவாக்கிக் கொள்ளுவான். அளவு குறைந்த போது நிரந்து வழங்குவான். செல்வக் காலத்தில் எப்படி வழங்குவான்? “வரையாக் கொடைக்குரிய செல்வக் காலத்தில் (உரிதினின்) நாடு காத்தலைச் செய்யும் வேந்தரது பெருமனையில் எறியப்படும் வெண்சோறு போல யாவர்க்கும் அள்ளி வரையாது வழங்கவும் வல்லனாவானாம். இப்போது நிரல்படுத்திக் கொள்ள வேண்டும். இருக்கிற காலத்தில் வெண்சோறுபோல வாரி இறைப்பான். அளவான காலத்தில் குடும்பத்தலைவிபோல அளவறிந்து தருவான். இல்லாத காலத்து தேவைப்படும் தீயைத் தானே உருவாக்கிக் கொள்ளும் கல்லாத இடையன் போல  உருவாக்கித் தருவான்.

    நிறைவுரை

    உவமம் கவிதை ஆடைக்குள் இழையும் நூல். போலிச் சரிகை பட்டையன்று. அது மலருக்கும் காம்புக்குமான உறவு. கொடிக்கும் குண்டூசிக்குமான உறவன்று. அகத்திணைப் பரப்பிலிருந்துத் தன் ஆளுகையை விரித்துக் கொண்ட பெருமை அதற்கு உண்டு.  கவிதைப்  பேரழகு அதனால் கட்டமைக்கப்பட்டது. சொல்லப்படுகிற கருத்துக்களுக்கேற்றவாறு பொருத்தமான உவமங்களை மிக எளிதாகக் கையாண்டவர்கள் நம் முன்னோர்கள்.! கருத்து விளக்கத்திற்கே உவமங்கள்! கவிதை தன் அழகைப் பார்த்துக் கொள்ளும் கண்ணாடிகள் அவை!

    (தொடரும்…)

    Share
  • எங்கே பச்சை எரிசக்தி?

    எங்கே பச்சை எரிசக்தி?

    சி. ஜெயபாரதன், கனடா

    வருது வருது, 
    புது சக்தி வருகுது!
    கிரீன் சக்தி
    வருகுது!
    ஹைபிரிட் கார்கள்
    செல்வக்
    கோமான் களுக்கு!
    கிரீன் ஹவுஸ் வாயுக்கள்

    வெளி ஏறா
    எலக்டிரிக் கார்கள், 
    உச்ச விலைக் கார்கள்! 
    பச்சை எரிசக்தி 
    வாகனங்கள் அல்ல!

    அனுதினம்
    அமெரிக்க வீதிகளில், 
    இருநூறு பில்லியன் 
    எண்ணிக்கை 
    மிஞ்சிய 
    காஸ்லின் கார்கள்
    காலையில்
    ஓடா விட்டால்
    பிரளயம் விளையும்!
    கரி வாயு
    பாரெங்கும் பரப்பும்
    கார்கள் 
    ஓடித்தான்
    கிரீன் எரிசக்தி
    வாகனம்
    வடிவாகப் போகுது!

    பருவ காலங்களில் 
    உழுது பயிரிட்டு
    அறுவடை செய்யும் 
    விவசாய யந்திரங்கள்
    மின்சா ரத்தால்
    இயங்கா!
    விண்ணில் பறக்கும் 
    737 ஜெட் 
    விமானங்கள்
    மேலே மேலே ஏறவும்
    இறங்கவும்
    தூய காஸ்லின் தேவை.
    சூரிய ஒளிச்சக்தி
    காற்றாடி மின்சக்தி
    இராப் பகலாய்த் தொடர்ந்து
    காரோட்டுமா?
    பாரில் விமானங்கள் 
    பறக்குமா?
    அறுவடை நிகழுமா?

    கிரீன் சக்தி தேடி
    நூறாண்டு
    ஆராச்சி செய்யினும்
    கரி வாயு உமிழும்
    காஸ்லின் 
    கார்கள் ஓடும், ஓடும், 
    ஓடும்,
    பாரெங்கும் பயணம்
    நீடிக்கும்.

    Share
  • கனேரித் தீவில் திடீரென எழுந்த தீக்குழம்பு எரிமலைக் காட்சி

    கனேரித் தீவில் திடீரென எழுந்த தீக்குழம்பு எரிமலைக் காட்சி

    சி. ஜெயபாரதன், கனடா

    Canary Islands La Palma Volcano [September 19, 2021]

    Canary Islands La Palma City

    கனேரித் தீவுகளில் சுற்றுலாப் பயணிகள் போற்றும் ல பால்மா நகர் மலைச் சிகரத்தில் எரிமலை எழுச்சி

    2021 செப்டம்பர் 19 இல் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ல பால்மாவில் திடீரெனப் பொங்கி எழுந்த எரிமலை தெரியும் முன்பு சுமார் 4220 நில நடுக்கங்கள் நேர்ந்தன என்று ஸ்பெயின் தேசீயப் பூதளவியல் ஆய்வுக்கூடம் அறிவித்தது. ல பால்மா நகரம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்து, எரிமலை எழுச்சியை எச்சரித்தது. நாலடுக்கு அபாய அறிவிப்பில் மஞ்சள் ஆரம்ப நிலை எச்சரிக்கை. 11 மில்லியன் கியூபிக் மீட்டர்ஸ் அளவு தீக்குழம்பு கும்பர் வீஜா சரிவுகளில் சில நாட்களில் வழிந்தது.

    கனேரித் தீவுகளின் எரிமலைத் துறையக அபாய அறிவிப்பை / எச்சரிக்கை வெளியிட்டு மக்கள் ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தியது. கடந்த ஒன்பது நாட்களில் சுமார் 25,000 மேற்பட்ட நிலநடுக்கங்கள் உணரப் பட்டுள்ளன. தீவிரம் ; 4.2 ரிக்டர். 20 அடி உயர்ந்த லாவா எரிமலைக் குழம்பு சரிவுகளில் உள்ள 185 இல்லங்களை விழுங்கியது. 6000 மக்கள் வீடிழந்து புலம்பெயர்ந்தார். எரிமலைக் குழம்பு உஷ்ணம் 1800 டிகிரி பாரன்ஹீட். நாள் ஒன்றுக்கு எரிமலை வெளியேற்றிய தீவிர வாயு ஸல்ஃபர் டையாக்சைடு 8000 முதல் 105,00 டன் இருக்கலாம்

    https://www.cnn.com/videos/world/2021/09/29/la-palma-volcano-lava-ocean-lon-orig-tp.cnn

    தகவல்

    1. https://www.cbc.ca/news/world/canary-island-la-palma-volcano-1.6195998
    2. https://www.cnn.com/videos/world/2021/09/29/la-palma-volcano-lava-ocean-lon-orig-tp.cnn
    3. https://www.volcanodiscovery.com/lapalma/sep2021seismic-crisis/current-activity.html

    Share
  • குறளின் கதிர்களாய்…(370)

    குறளின் கதிர்களாய்…(370)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(370)

    கறுத்தின்னா செய்தவக் கண்ணு மறுத்தின்னா
    செய்யாமை மாசற்றார் கோள்.

    – திருக்குறள் – 312 (இன்னா செய்யாமை)

    புதுக் கவிதையில்…

    பகை மிகக்கொண்டு
    ஒருவன்
    பல துன்பம் செய்தாலும்,
    பதிலுக்கு அவனுக்குத்
    தீமை ஏதும்
    திருப்பிச் செய்யாமலிருப்பது
    தெளிந்த மன மாசற்றோர்
    கொள்கையாகும்…!

    குறும்பாவில்…

    தம்மீது பகைகொண்டு ஒருவன்
    தமக்குத் தீங்குசெய்யினும் பதிலுக்கு அவனுக்குத்
    தீமைசெய்யாதது குற்றமற்றார் கொள்கை…!

    மரபுக் கவிதையில்…

    அகத்தில் பகையை வைத்தேதான்
    அளவே யின்றி தாம்நோகப்
    பகர வொண்ணா யிடர்தரினும்,
    பழியைத் தீர்க்கும் வகையினிலே
    மிகவாய் வாட அவர்தமக்கே
    மிகுந்த துன்பம் கொடுக்காத
    நிகரே யில்லாக் கொள்கையதை
    நெஞ்சில் கொள்வர் மாசிலாரே…!

    லிமரைக்கூ…

    பகையால் செய்வர் இடரே,
    திருப்பியவர்க்குத் தீங்கு செய்யா மாசற்றோர்
    தூய கொள்கைச் சுடரே…!

    கிராமிய பாணியில்…

    செய்யாத செய்யாத
    கெடுதல் செய்யாத,
    அடுத்தவன் வருந்தக்
    கெடுதல் செய்யாத..

    பகய மனசுல வச்சி
    தனக்குத் துன்பம் தந்தாலும்,
    திருப்பி அவனுக்குத்
    தீம செய்யாத
    கொள்க கொண்டவங்கதான்
    மனசுல குத்தங்கொற இல்லாதவுங்க..

    அதால
    செய்யாத செய்யாத
    கெடுதல் செய்யாத,
    அடுத்தவன் வருந்தக்
    கெடுதல் செய்யாத…!

    Share
  • T. D. திருமலை நூற்றாண்டு விழா

    T. D. திருமலை நூற்றாண்டு விழா

    அன்புடையீர்,

    ரசிகமணி டி.கே.சி. வட்டத்தொட்டி (2021 அக்டோபர் 3ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11:30) நிகழ்ச்சியில் (ரசிகமணியின் சீடர் காந்திய மாமணி திரு. T. D. திருமலை அவர்களின் நூற்றாண்டு விழா) கலந்துகொண்டு ரசனை அமுதத்தைப் பருக, கீழே உள்ள இணைப்பில் இணையும்படி கேட்டுக்கொள்கிறோம்.

    Google Meet ( https://bit.ly/GMeet-TKC2110 )

    YouTube ( https://bit.ly/YouTube-TKC2110 )

    நன்றி

    விழா ஏற்பாட்டுக் குழு

    Share
  • எதை வாங்குவது? எங்கே வாங்குவது?

    எதை வாங்குவது? எங்கே வாங்குவது?

    நாம் வாங்க விரும்பும் ஒரு பொருளை எந்த அடிப்படையில் தேர்ந்தெடுப்பது? பிராண்டு, விலை, சலுகை, வழக்கம், தரம், அழகு, சந்தைப்படுத்தல்… எனப் பல காரணங்கள் இருக்கையில் நுகர்வோர் இவற்றில் எதை முக்கியமாகக் கொள்ள வேண்டும்? இதே போன்று அந்தப் பொருளை வீட்டுக்கு அருகில் உள்ள சிறிய கடையில் வாங்குவதா? பேரங்காடிகளில் வாங்குவதா? அல்லது இணையத்தில் வாங்குவதா? உள்நாட்டுப் பொருளா? வெளிநாட்டுப் பொருளா? எது நுகர்வோரின் முன்னுரிமையாக இருக்கலாம்? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் தமது கருத்தை முன்வைக்கிறார். உங்களுக்கு ஏதும் ஐயம் இருந்தால் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share