தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 35
புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள்
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
விளார் புறவழிச்சாலை,
தஞ்சை மாவட்டம் – 613006.
மின்னஞ்சல் முகவரி – egowrisss@gmail.com
கவிதை அழகு பார்க்கும் கண்ணாடிகள் உவமங்கள்!
முன்னுரை
படைப்பதோடு முடிந்து விடுகிறது படைப்பாளன் பணி. சுவைப்பதோடு நிறைவடைகிறது ரசிகனின் மனம்! படித்தலும் சுவைத்தலும் ஆய்தலும் நீட்டித்துக் கொண்டே போவதால் திறனாய்வாளனின் பணிக்கு ஆதி உண்டு. அந்தம் இல்லை. உவமம் பொருட்பகுதி என்பதால் ஒரு கவிதைக்கான பொலிவும் தெளிவும் அதில் பயன்படுத்தப்படும் உவமத்தைப் பொருத்தே அமையும். சுருக்கியுரைப்பின் கவிதை தன் உள்ளடக்க வெளிப்பாட்டு நேர்த்தியைச் சரிபார்த்துக் கொள்ளும் கண்ணாடியாகவே உவமம் அமைந்திருக்கிறது. அது போன்ற சில கண்ணாடிகளை இக்கட்டுரை அடையாளப்படுத்துகிறது.
ஓரூர் உண்மை! உள்ளூர் அருமை!
சிறுபாணாற்றுப்படையின் பாட்டுடைத்தலைவன் நல்லியக்கோடன். இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனாரால் பாடப்பெற்றவன். நத்தத்தனார் பாடிய நல்லியக்கோடனைப் புறத்திணை நன்னாகனாரும் பாடியிருக்கிறார். நன்னாகனார் ஒருமுறை நல்லியக்கோடனைக் காணச் சென்ற பொழுதுதான் அவனுடைய தன்மையும் வள்ளன்மையும் தெரிந்திருக்கிறது. அதுவரை நல்லியக்கோடனின் வள்ளன்மை அறியாது அவனால் புரக்கப்படாது வீணே கழிந்த தன் வாழ்நாள்களுக்காக வருந்தியது அவர் நெஞ்சம். அப்போது பாடிய பாடலில்,
“பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர்
ஓரூர் உண்மையின் இகந்தோர் போலக்
காணாது கழிந்த வைகல் காணா
வழிநாட்கு இரங்கும் என் நெஞ்சம்! அவன்
கழிமென் சாயல் காண்டொறு நினைந்தே!” (புறம்.176)
என்ற வரிகளில்தான் வெண்ணெயிருக்க நெய்க்கு அலைந்த தன் அறியாமைக்கு ஒர் உவமம் சொல்கிறார். பாரியின் பறம்புச் சுனை நீர் “‘கைவண் பாரி தீம்பெரும் பைஞ்சுனை” (அகம். 78) “பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர்” (குறுந். 166) எனப் பிறராலும் பாடப்பெற்ற பெருமையுடையது. உள்ளூரில் அகப்படும் அரியபொருள் அரிதாகாது எளிதாகக் கருதப்படுவதைப் போலப் பாரியின் சுனைநீரின் அருமையும் உணரப்படாது போயிற்று. எல்லாராலும் அறியப்பட்டுப் பயன்பட்ட பாரியின் சுனை நீர் அருமையை அறியாது, அதனைப் பருகாது வீணானவரைப் போல, நல்லயக்கோடனின் பெருமையை உணராது தானும் துன்பப்பட்டதாக நன்னாகனார் பாடுகிறார்.
எல்லாப் பூவும் இறைவனுக்கு மணக்கும்!
வேள்பாரியைக் கபிலர் கடவுளோடு ஒப்பிட்டுப் பாடுகிறார்!. இந்த ஒப்பீட்டில் அவர் சுட்டும் உவமம், நுண்ணியமுடையது. எருக்கம் பூவை ஏற்கின்ற இறைவனைப் பாரியோடு ஒப்பிடுகிறார். மக்கள் விரும்பாத பூவை இறைவன் ஏற்கிறார். எருக்கம் பூவிற்குக் கொடுக்கும் அடைகள் அதன் புறஅழகைப் பெருக்குமாயினும் மக்கள் அதனை ஏற்பதில்லை. ‘குவியிணர்ப் புல் இலை எருக்கம்’ என்கிறார். ‘குவிமுகிழ் எருக்கு’ என்பது இன்னொரு பார்வை. ‘குவியிணர் எருக்கின் அதர் பூங்கண்ணி’ என்பதும் பிறிதொரு பார்வை. கம்பர் கூட ‘வெள்ளெருக்கம் சடைமுடியான்’ என அடைகொடுத்தே சிவனைச் சுட்டுவார். கொத்தாகப் பூத்தாலும் புல்லிலைகள் இருப்பினும் இறைவன் அதனை வெறுப்பதில்லை.
“நல்லவும் தீயவும் அல்ல குவியிணர்ப்
புல் இலை எருக்கம் ஆயினும்; உடையவை
கடவுள் பேணேம்” என்னா ஆங்கு
மடவர் மெல்லியர் செல்லினும்
கடவன் பாரி கைவண்மையே!” (புறம். 106)
நறுமணம் இன்மையின் நற்பூ வகையிலும் இறைவன் விரும்பிச் சூடுதலின் தீயபூ வகையிலும் சேராதது எருக்கம்பூ. ஆனால் இறைவன் சூடிக்கொள்கிறான். அதுபோலப் பாரியை நாடிச் செல்வோர் அறியாமை உடையவராயினும் வறுமையால் மெல்லியராயினும் வேள்பாரி தன் வள்ளன்மையிலிருந்துப் பிறழமாட்டான். மலரில் பேதம் பார்க்காத இறைவனைப், புரக்கப்பட வேண்டியவரின் தரம் பார்க்காத பாரியோடு ஒப்பிடுகிறார் கபிலர். ஆழமான சமுதாயக் கருத்தினை உலகியலோடு தொடர்புடைய ஒரு பொருளை உவமமாக வைத்துக் கூறுவது காண்க.
செருப்பிடைப் பட்ட சிறுபரல்
இன்னா செய்தார்க்கு மீளச் செய்வது நன்னயமேயானாலும் அதனை ‘ஒறுத்தல்’ என்ற சொல்லால் திருக்குறள் குறிப்பது சிந்திக்கத்தக்கது. தூக்குத்தண்டனைக் கைதிக்கு ஆயுள் தண்டனை விதிப்பது குற்றத்தின் தன்மை பொருத்தது என்பதோடு உளவியல் நுட்பம் வாய்ந்தது. தூக்கு உயிர்போக்கும். ஆயுள் உயிர்காக்கும். இந்த முரண் உணரத்தக்கது. ஆனால் முன்னது ஒரு நொடியில் முடிந்து விடும். பின்னது அத்தகையதன்று. உயிர் தவணைமுறையில் கழியும். குற்றம் செய்தவன் தன் குற்றத்திற்காக ஒவ்வொரு நொடியும் எண்ணி மருகுவான். ஆழ்ந்த சிந்தனையாளர் பின்னதையே முன்னெடுப்பர். அந்தக் காலத்தில் அப்படி முன்னெடுத்த மன்னன் ஒருவன் இருந்திருக்கிறான். பெயர் தெரியாது. “கணைக்கால், அம் வயிறு, அகன்ற மார்பு, பைங்கண், குச்சின் இரைத்த குரை மயிர் மேவாய்ச், செவியிறந்து தாழ்தரும் கவுளன் வில்லோடு யார் கொலோ எளியன்?” (புறம். 257) என்று வண்ணனை செய்யப்படும் இவனை, உண்டாட்டில் வைத்துக் கொண்டாடுகிறார்கள் அவன் நாட்டார்!
“செருப்பிடைச் சிறுபரல் அன்னன்”
பகைவர்தம் ஆநிரையைக் கவர்ந்து கொண்டு வந்து தம் நாட்டார்க்கு வழங்கிய அவன் பகைவர்க்குத் துன்பம் தருவதில் எத்தகையவன் என்றால் செருப்புக்கு இடையே நுழைந்து அணிந்தவனுக்கு இடையறாது தொல்லை கொடுக்கும் பரலைப் போன்றவனாம்.
“தருக்கி யொழுகித் தகவல்ல செய்தும்
பெருக்க மதித்தபின் பேணாமை செய்தும்
கரப்பிடை உள்ளம் கனற்று பவரே
செருப்பிடைப் பட்ட பரல்” (பழ. 202)
என்னும் பதினெண் கீழ்க்கணக்கில் ‘செருப்பிடைப் பட்ட பரல்’ என்னுந் தொடர் வேறொரு பொருண்மையை விளக்கி நிற்கிறது. உவமம் சொல்லும் பெருமக்கள் உலகியலை உற்று நோக்குந் திறத்தை அவர்கள் கையாளும் உவமங்களாலேயே புரிந்து கொள்ள இயலும்.
அச்சுடை சாகாட்டு ஆரமும் பல்லியும்
இழப்பு கண்டு உற்றார் உறவினர் புலம்புவதும் இறந்தவரால் புரக்கப்பட்டவர் புலம்பினாலும் இரண்டுமே கையறுநிலைதான். மனைவி மாண்டு கணவன் அரற்றுவதும் கணவன் மாண்டு மனைவி புலம்புவதும் இத்துறையே!, இறப்பும் இழப்பும் சூழல்களுக்கு அப்பாற்பட்டவையாதலின் பாலைவனத்தில் எதிர்பாராக் காரணங்களால் தன் கணவனைப் பறிகொடுக்கிறாள் ஒருத்தி. இதுகாறும் இணைந்தே வாழ்ந்தவள் அந்நொடி தனிமை உணர்கிறாள். அதனால் தன்னையும் அவனோடு சேர்த்தே புதைத்துவிட ஒரு முதுமக்கள் தாழி தேவைப்படுகிறது அவளுக்கு. தாழி செய்பவனிடம் இருவரையும் சேர்த்துப் புதைக்குமாறு அகன்ற தாழி செய்து உதவ இப்படி வேண்டுகிறாள்.
“கலஞ்செய் கோவே கலஞ்செய் கோவே
அச்சுடை சாகாட்டு ஆரம் பற்றிய
சிறு வெண்பல்லி போலத் தன்னொடு
சுரம்பல வந்த எமக்கும் அருள்
வியன் மலர் அகல்பொழில் ஈமத்தாழி
அகலி தாக வனைமோ!
நனந்தலை மூதூர்க் கலஞ்செய் கோவே!” (புறம். 256)
இக்கால இணையர்கள் தங்களை ஒப்பிட்டுக் கொள்வதே ஒரு தனி ரகம்! மலரும் மணமும் என்றிருந்தது இன்றைக்கும் ‘மந்தையும் மாடும்’ என்ற அளவுக்கு வந்துவிட்டது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக ‘ஆரக்காலில் ஒட்டிக் கொண்ட பல்லியாய்’ வாழ்ந்திருக்கிறாள் மனைவி!. அன்றைக்குக் கணவனுக்கு மனைவியாக வாழ்ந்தவள் இன்றைக்குக் கவிதையில் பொருளாக வாழ்கிறாள். வாழ்வில் மட்டுமன்று சாவிலும் ஒன்றாக வேண்டும் என்பதற்காக அகன்ற தாழியை வேண்டுகிறாள். ஒரே மாலையில் இருவர் கழுத்தும் இருப்பதை விரும்பும் தற்காலத்திற்கும் ஒரே தாழியில் இருவர் அடங்க வேண்டும் என்னும் அக்காலத்திற்கும் காலம் மட்டுமா இடைவெளி? என்ன தெரிகிறது இதனால்? ஒட்டி உறவாடியவர்கள் விட்டுப் பிரிய எண்ணுவதில்லை.
விதவைபோல் ஆன வீடு
‘மனைக்கு விளக்கம் மடவார்’ என்பது முதுமொழி. நவீன காலத்தில் மங்கல நாட்களில் ஆண்கள் வீட்டில் விளக்கேற்றுவது புரட்சியாகத் தெரியலாமே தவிர மனைக்கு மங்கலமாகாது. ‘வீடு வெறிச்சோடி விட்டது’ என்பது உலக வழக்கு! மகிழ்ச்சியோடு சில நாளே தங்கிய விருந்தினர் சென்றால் கூட வீடு வெறிச்சோடிவிடும் என்றால் விளக்கேற்றிய மனைவி இழந்த மனை எப்படி இருக்கும்? அணிகலன் இழந்த கைம்பெண்ணைப போல் இருக்குமாம்!.
“அந்தோ எந்தை அடையாப் போரில்
வண்டுபடு நறவின் தண்டா மண்டையொடு
வரையாப் பெருஞ்சோற்று முரிவார் முற்றம்
வெற்று ஆற்று அம்பியின் எற்று? அற்று ஆக!
…………………………………………………………………………………………
நிரை இவண் வந்து நடுகலாகிய
வென்வேல் விடலை இன்மையின் புலம்பிக்
கொய்ம்மழித் தலையொடு கைம்மையுறக் கலங்கிக்
கழிகலன் மகடூஉப் போலப்
புல் என்றனைப் பல் அணி இழந்தே! “(புறம். 261)
‘காரியாதி’ என்னும் மன்னனுக்குப் பாடிய கையறு நிலையை ஆவூர் மூலங்கிழார் ஆதியின் முரிவார் முற்றத்தின் இறந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் ஒப்பிட்டுப் பாடுகிறார். காரியாதி இருந்தபோது வரையாப் பெருஞ்சோற்று முரிவார் முற்றம் அவன் இறந்தபிறகு கழிகலன் மகடூஉப்போலப் பொலிவிழந்ததாகக் கூறுகிறார். ‘கழிகலன் மகடூஉ’ என்னும் கிழாரின் தொடருக்குக் கம்பன் உரையெழுதியிருக்கிறான். வாலியை இழந்து விதவையான தாரையை இப்படி நோக்குகிறான் இலக்குவன்.
“மங்கல அணியை நீக்கி மணி அணி துறந்து வாச
கொங்கலர் கோதை மாற்றிக் குங்குமம் சாந்தம் கொட்டாப்
பொங்கு வெம் முலைகள் பூகக் கழுத்தொடு மறையப் போர்த்த
நங்கையைக் கண்ட வள்ளல் நயனங்கள் பனிப்ப நின்றான்” (கம்ப. 4320)
இந்த விதவைக் கோலத்தில் இருப்பது ஒரு குரங்கு என்பதை எவரும் நினைவுக்குக் கொண்டு வர இயலாது. தாரையின் இந்தக் கோலத்தைக் கண்ட இலக்குவனுக்குத்தன் தாயரின் கைம்மைக் கோலம் நினைவுக்கு வந்ததாம். அங்கேதான் கவிஞன் கம்பன் ஒரு கவிச்சக்கரவர்த்தியாகிறான்.
“இனையர் ஆம் என்னை ஈன்ற இருவரும் என்ன வந்த
நினைவினால் அயர்ப்பு சென்ற நெஞ்சினன் நெடிது நின்றான்” (கம்ப. 4321)
குரங்கைத் தாயாக எண்ணும் பாத்திர செய்நேர்த்தி, உலக உயிர்களை ஒன்றாக எண்ண வைக்கும் இறையுள்ளம், தாயின் நிலை மறக்காத தனையர்களின் இயல்பு எதிரியின் மனைவியானாலும் பெண்மைக்குத் தரப்படும் மதிப்பு என்று கம்பனின் கவியாற்றல் எல்லை மீறிச் செல்வதைக் காணலாம். இந்த உவமங்களைத் தொகுத்து நோக்கினாலோயொழிய உவமச் சிறப்பு அவ்வளவாகப் புலப்படாது. “தாயரைப் போல் தாரையிருக்கிறாள், அந்தத் தாரையைப்போலப் புறநானூற்றுக் கைம்பெண் இருக்கிறாள். கலன்கழிந்த அந்தக் கைம்பெண்ணைப் போலக் காரியாதியை இழந்த இல்லம் இருக்கிறது என்ற நிரலில் வைத்துப் பார்த்தால் இலக்கியச் சுவை என்ன என்பது புரியக் கூடும். ‘கலன் கழிந்த மகடூஉ’ என்பதை விளக்கத்தான் தாரையும் அயோத்தித் தாயரும் இங்கே துணைக்கழைக்கப்பட்டார்கள் என்பது கருதத்தக்கது. “இந்த மன்னன் படையெடுத்தபோது அழிந்த நகரத்தைப் போல் இவள் நலன் அழிந்தது” என்று தலைவன் பிரிவால் இழந்த நலனுக்கு அழிந்த நகரத்தை அகத்திணையில் உவமமாக்கிய புலவர்கள் உண்டு. மூலங்கிழார் ஒளியிழந்த வீட்டிற்குக் களையிழந்த கைம்பெண்ணை உவமமாக்கியிருப்பது அவலத்தை மிகுவிப்பதாக உள்ளது, மேலே சொல்லப்பட்ட கைம்பெண்களின் கோலத்தை மனத்தில் கொண்டு வந்து ‘கழிகலன் மகடூஉ’வைக் காட்சிப்படுத்திக் கொண்டு காரியாதியின் இல்லத்தை நோக்கினால் தெரியும் உவமத்தின் நுண்ணியம்!
இல்லது படைக்கவும் இவனால் இயலும்!
சங்க இலக்கியம் ஓர் உவமத் தோரணம். ஆனால் அவற்றுள் பெரும்பாலானவை அனுபவப் பதிவுகள். அழகியல் துளிகள் அல்ல. கற்பனைப் புள்ளிகள் குறைவு. இதனை வேறுவகையாகச் சொன்னால் மக்கள் வழக்கில் உவமத்தைப் பயன்படுத்துவதற்கும் செய்யுள் வழக்கில் உவமத்தைப் பயன்படுத்துவதற்கும் வேறுபாடு உண்டு. முன்னது இயற்கை. பின்னது செயற்கை. ஆனால் சங்க இலக்கியம் இதற்கு மாறுபட்டது. புலவனின் புலமையாற்றல் பின்னதில் வெளிப்படுவதென்றால் புலவனின் சமுதாய நோக்கும் வாழ்வியல் பட்டறிவும் முன்னதில் வெளிப்படும்.
“கல்லறுத்து இயற்றிய வல்லுவர்க் கூவல்
வில்லேர் வாழ்க்கை சீறூர் மதவலி
நனி நல் கூர்ந்தனன் ஆயினும் பனிமிகப்
புல்லென் மாலைச் சிறுதீ ஞெலியும்
கல்லா இடையன் போலக் குறிப்பின்
இல்லது படைக்கவும் வல்லன்., உள்ளது
தவச்சிறிது ஆயினும் மிகப் பலர் என்னாள்
நீள்நெடும் பந்தர் ஊண்முறை ஊட்டும்
இல் பொலி மகடூஉப் போலச் சிற்சில
வரிசையும் அளிக்கவும் வல்லன் உரிதினின்
காவல் மன்னர் கடைமுகத்து உகுக்கும்
போகுபலி வெண்சோறு போலத்
தூவவும் வல்லன் அவன் தூவுங்காலே!” (புறம். 331)
பாட்டில் உள்ள உவமத்தைச் சுவைக்கிறபோது உவமத்தை மட்டுமே தனியெடுத்துச் சுவைக்கலாம். பாயாசத்தில் கிடக்கும் முந்திரியையும் திராட்சையையும் போல. பாட்டோடு கலந்தும் சுவைக்கலாம் சோற்றில் உப்பைப் போல. சங்க இலக்கிய உவமங்கள் பெரும்பாலும் பின்னதைச் சார்ந்தது. இதில் மூன்று வல்லமைகள் காட்டப்படுகின்றன.
- இல்லது படைக்கவும் வல்லன்
- வரிசையில் அளிக்கவும் வல்லன்
- தூவவும் வல்லன்.
இம்மூவகை வல்லாண்மையை அவற்றை விளக்கும் உவமங்களோடு சுவைக்கிறபோதுதான் பாட்டு இனிக்கிறது.
கல்லா இடையன் போல வல்லன்
இல்லாமையைக் காரணமாக்கி ‘இயலாமையை’ முன்னிறுத்தி மறுதலிப்பதைவிட முயற்சியினால் இல்லாமையைப் போக்கிக் கொள்வது சிறந்தது. மிக்க வறுமையுற்ற காலத்திலும் வறுமையை முன்னிறுத்தாது, ‘குளிரைத் தவிர்ப்பதற்கு வேண்டிய நெருப்பைத் தீக்கடைக்கோலைக் கொண்டு கடைந்துத் தீயுண்டாக்கும் கல்லாத இடையன் போலத்’ தித்தன் உதவுவான் என்னும் இந்த உவம விளக்கம் தித்தன் வறுமையுற்ற காலத்தும் இல்லையென்னாது வந்தார்க்கும் வழங்கும் நெறியைத்தானே கண்டறிந்து ஈட்டி வழங்குவான் என்னும் உண்மை உணர்த்தி நின்றது.
இல்பொலி மகடூஉப் போல வல்லன்
இல்லாமையைப் போக்கிக் கொள்ளும் நெறி அவ்வாறெனின் உள்ளது சிறிதாகிப் புரக்கப்பட வேண்டியவர் பலராயின் தித்தன் எப்படிச் செயல்படுவான்? இல்பொலி மகடூஉப் போலச் செயல்படுவானாம்!. அவள் எப்படிச் செயல்படுவாள்? தன்பால் உள்ளது சிறிதாயினும் அதனை இவறுதல் இன்றி யாவர்க்கும் அவரவர் வரிசைக்குத் தக்க முறைப்படுத்தி வழங்குவதனால், கொள்வதனால் கொள்வார்க்கு வருத்தம் பயவாதாம். ‘நெடிய பந்தர்க் கீழ் இருத்தி உணவை முறைமுறையாகத் தந்து உண்பிக்கும் இல்வாழ்க்கையின் சிறந்த மகளைப்போல’ என்னும் அகன்ற விளக்கத்தை இல்பொலி மகடூஉ என்னும் இருசொற்களால் புலப்பட வைத்த நுட்பம் உணர்க.
வெண்சோறு போலத் தூவவும் வல்லன்
இல்லாதபோது உருவாக்கிக் கொள்ளுவான். அளவு குறைந்த போது நிரந்து வழங்குவான். செல்வக் காலத்தில் எப்படி வழங்குவான்? “வரையாக் கொடைக்குரிய செல்வக் காலத்தில் (உரிதினின்) நாடு காத்தலைச் செய்யும் வேந்தரது பெருமனையில் எறியப்படும் வெண்சோறு போல யாவர்க்கும் அள்ளி வரையாது வழங்கவும் வல்லனாவானாம். இப்போது நிரல்படுத்திக் கொள்ள வேண்டும். இருக்கிற காலத்தில் வெண்சோறுபோல வாரி இறைப்பான். அளவான காலத்தில் குடும்பத்தலைவிபோல அளவறிந்து தருவான். இல்லாத காலத்து தேவைப்படும் தீயைத் தானே உருவாக்கிக் கொள்ளும் கல்லாத இடையன் போல உருவாக்கித் தருவான்.
நிறைவுரை
உவமம் கவிதை ஆடைக்குள் இழையும் நூல். போலிச் சரிகை பட்டையன்று. அது மலருக்கும் காம்புக்குமான உறவு. கொடிக்கும் குண்டூசிக்குமான உறவன்று. அகத்திணைப் பரப்பிலிருந்துத் தன் ஆளுகையை விரித்துக் கொண்ட பெருமை அதற்கு உண்டு. கவிதைப் பேரழகு அதனால் கட்டமைக்கப்பட்டது. சொல்லப்படுகிற கருத்துக்களுக்கேற்றவாறு பொருத்தமான உவமங்களை மிக எளிதாகக் கையாண்டவர்கள் நம் முன்னோர்கள்.! கருத்து விளக்கத்திற்கே உவமங்கள்! கவிதை தன் அழகைப் பார்த்துக் கொள்ளும் கண்ணாடிகள் அவை!
(தொடரும்…)