பழகத் தெரிய வேணும் – 86
நிர்மலா ராகவன்
சாமான்களை எடைபோடலாம், மனிதரை அல்ல
“அவன் மகா கஞ்சன்!”
“சிடுமூஞ்சி!”
இவ்வாறு, பார்ப்பவர்களையெல்லாம் தாறுமாறாக எடைபோடுவது மனிதனுடன் பிறந்த குணமென்றே நினைக்கத் தோன்றுகிறது.
பிறர் ஏன் அப்படி இருக்கிறார்கள் என்று சற்றே யோசித்தால், மனம்போனபடி பழிக்கத் தோன்றாது.
ஏன் கஞ்சத்தனம்?
இப்படி யோசிக்கலாமே! கருமித்தனமாக இருப்பவருக்குக் குழந்தைகள் இல்லை. இறுதிக்காலத்தில் யாரை நாடுவது என்ற பயத்தில், இயன்றவரை சேமித்துவைக்கிறார்.
நீண்ட காலம் நெருங்கிப் பழகியபின்னரும் ஒருவரை முழுமையாகப் புரிந்துகொள்வது இயலாத காரியம்.
அப்படியிருக்க, சில நிமிடங்களே பழகிவிட்டு, ஒருவரைக் குறைகூறுவது என்ன நியாயம்?
பலவிதமான சூழ்நிலைகளில் அவர் எப்படி நடந்துகொள்கிறார் என்று கவனித்தால்தான் ஒருவரது குணத்தைப் புரிந்துகொள்ளலாம்.
கதை
எங்களுக்குத் தெரிந்த ஒரு கடைக்காரரின் முகம் எப்போதும் கடுகடுவென்று இருக்கும். இசை சம்பந்தமான சாமான்கள் அவர் கடையில்தான் கிடைத்ததால், போகவேண்டிய நிலைமை.
பல வருடங்கள் பழகியபின்னர், `இவர் முகத்தில் சிரிப்பே கிடையாது. வியாபாரம் நன்றாகத்தானே நடக்கிறது!’ என்று எங்களுக்குள் சொல்லிக்கொள்வோம்.
ஒரு நாள் தினசரியைப் பார்த்தபோது, அவரது மரணச்செய்தியை அறிய நேரிட்டது. `நீண்ட காலம் நோய்வாய்ப்பட்டிருந்தார்,’ என்று குறிப்பிட்டிருந்தார்கள்.
எங்களுக்கு மிகுந்த குற்ற உணர்வு ஏற்பட்டது.
தான் இறக்கப்போகிறோம் என்று புரிந்துதான் சிரிப்பை இழந்தாரா? அல்லது, தீராத உடல்நோவினாலா?
தெரிந்தவரோ, தெரியாதவரோ, எவரைப் பார்த்தாலும், அவரவர் பின்னணியைப் பொறுத்து ஏதாவது அபிப்ராயம் எழும். இது இயற்கை. ஆனால், அதை உரக்க வெளியிடாது, கவனிப்பதுடன் நிறுத்திக் கொண்டிருக்கலாமே என்று தோன்றியது.
`நாம் அவரைவிட மேலானவர்!’ என்ற அற்பதிருப்தி எழ அப்படிச் செய்கிறோமோ?
நாம் மட்டும் குற்றமற்றவரா?
எதற்காகப் பிறரிடம் குற்றம் கண்டுபிடிப்பது?
சிலரைப் பார்த்தவுடன் உடனே நல்ல அபிப்ராயம் எழுகிறது.
“அவர் ரொம்ப நல்லமாதிரி. எல்லாரிடமும் அருமையாகப் பழகுவார்!”
எப்போதும் சிரித்த முகத்துடன், கலகலப்பாகப் பழகுவதால் ஒருவர் நல்லவராகிவிடுவாரா? நாம் அவரை நல்லவிதமாக நினைக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் அத்தகைய பிம்பத்தை உண்டாக்குகிறாரோ, என்னவோ!
விமானப் பணிப்பெண்கள் எப்போதும் தம் முகத்தில் புன்னகையைத் தவழ விட்டுக்கொண்டு இருப்பார்கள். அதற்கான காரணத்தை ஒரு ஆண் பணியாளர் என்னிடம் கூறியது: “சிலர் விமானத்தில் பயணிப்பதற்குப் பல வருடங்களாகச் சேமிப்பார்கள். தம்மை உயர்வாக எண்ணிக்கொண்டு, எங்களிடம் அதிகாரமாக நடப்பார்கள். அது புரிந்து, நாங்களும் சிரிப்பு மாறாது நடந்துகொள்வோம்!”
கதை
விருந்தினராக உறவினர் ஒருவர் வீட்டுக்குப் போய், ஒரே ஒரு நாள் தங்கியிருந்தாள் சியாமளா.
அந்த இல்லத்தரசி, பார்கவி, கணவரையும் அவருடைய தாயையும் மதிப்பதேயில்லை என்று மற்ற உறவினர்களிடம் கதை கதையாகச் சொன்னாள்.
ஓயாமல் பிறரைப் பற்றித் தாறுமாறாகப் பேசுகிறவர், தன்னைப் பற்றியும் யாராவது அப்படிப் பேசுவார்களா என்று யோசிப்பதில்லை.
நான் அவளுடைய கணிப்பை ஏற்கவில்லை. திருமணத்திற்குப்பின் ஒரேயடியாக அடங்கிப்போய், மகிழ்ச்சியை இழந்தவள் சியாமளா.
பிறரது போக்கில் நாம் குற்றம் கண்டுபிடித்துக்கொண்டே இருந்தால், அவர்களிடம் எப்படி அன்பு செலுத்தமுடியும்?
நாம் பிறரைப் பழித்துப் பேசாவிட்டால், நம்மைப் பற்றிப் பிறர் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்ற கவலை எழாது.
பார்கவியின் மாமியார் அவளைப் படாதபாடு படுத்தியது உறவினர் அனைவரும் அறிந்ததுதான். அவள் செய்தது எல்லாவற்றிலும் குற்றம் கண்டுபிடிப்பது, தன் அதிகாரத்தை நிலைநிறுத்த பலபேருக்கு முன்னிலையில் மட்டம் தட்டுவது என்று நடந்துகொண்டாள்.
`எப்போது, எந்த அவமானத்தைத் தாங்க நேரிடுமோ!’ என்றெழுந்த பயத்தைத் தாளமுடியாது போக, பார்கவியின் உடல்நிலை சீர்கெட்டது.
கணவனும் ஆதரவாக இருக்கவில்லை. “நீதான் அடங்கிப்போயேன். என் அம்மாவைப் பிடிக்கவில்லை என்றால், என்னையும் பிடிக்கவில்லை என்றுதான் அர்த்தம்!” என்று அவளை அடக்கினான்.
கவுன்செலிங் முறைப்படி, துணிச்சலாக நடப்பது எப்படி என்று கற்றாள் பார்கவி.
`கெஞ்சினால் மிஞ்சுவார், மிஞ்சினால் கெஞ்சுவார்,’ என்பதுபோல், அவளுடைய கை ஓங்க, மாமியார் அடங்கிப்போனாள்.
பார்ப்பவர்களுக்கு அத்தகைய போக்கு தவறாகப்படலாம். ஆனால், பயத்திலேயே அமிழ்ந்துவிடாது இருக்க அவளுக்கு வேறு வழி தெரியவிலை.
நம்மைவிடத் தாழ்ந்த நிலையில் இருப்பவர்களை ஏளனம் செய்யத் தோன்றுவதுபோல், வெற்றி பெற்றவர்களைப் பார்த்துப் பிரமிக்கத் தோன்றுகிறது. அவர்கள் எத்தனை உழைத்திருப்பார்கள், என்னென்ன தடைகளைக் கடந்து வந்திருப்பார்கள்!
ஆனால், அவர்களையும் விட்டுவைப்பதில்லை இன்றைய இணையதளம். புகழ்பெற்றவர்கள் என்னென்ன தவறு செய்கிறார்கள் என்று தேடிக் கண்டுபிடித்து, உலகெங்கும் பரப்புகிறது.
அவர்களும் மனிதர்கள்தாமே?
குற்றங்கள் புரிந்ததால் திறமையற்றவர்கள் என்றாகிவிடுமா?
ஐயையோ! எவ்வளவு சின்னப்பெண்!
கதை
நானும் என் மகளும் பாங்காக்கைச் சுற்றிப்பார்க்கச் சென்றிருந்தோம். ஒரு சாப்பாட்டுக்கடையில் ஒரு இளம்பெண்ணின் கிளுகிளுப்பான சிரிப்பு ஒலித்துக்கொண்டே இருக்க, ஆர்வத்தை அடக்கமுடியாது, நான் திரும்பிப் பார்த்தேன்.
அப்பெண்ணுக்குப் பதினைந்து வயதுக்குமேல் இராது. அவளுடன் மிக நெருக்கமாக முப்பது வயது மதிக்கத் தகுந்த இரு ஆண்கள். அவளுடைய தொழில் இன்னதென்று புரிய, எனக்கு உண்டான அதிர்ச்சி என் கண்களில் வெளிப்பட்டிருக்க வேண்டும். அதன் எதிரொலியாக, அவள் முகத்தில் ஆழ்ந்த வருத்தம் படர்ந்தது.
சில கணங்களே நடந்த அந்த நாடகத்தை என் மகளுடன் பகிர்ந்துகொண்டபோது, “இது அவளுடைய தொழில். அப்படி ஒன்றும் எளிதானதுமல்ல. இதில் ஈடுபட்ட ஒவ்வொரு பெண்ணும் இருமுறையாவது பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாவாள்,” என்று சிறிது ஆத்திரத்துடன் விளக்கினாள்.
அருகிலுள்ள கிராமங்களில் மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ள குடும்பத்தினர், தெரிந்தே தம் மகளை பாலியல் தொழிலுக்காக தலைநகருக்கு அனுப்புகிறார்களாம்.
அப்பெண்ணின் இடத்தில் என்னைப் பொருத்திப் பார்க்காததால் ஏற்பட்ட தவறு புரிந்தது. கணவன், குழந்தை, தனக்கென ஆதரவாக ஒரு குடும்பம் என்ற ஆசைகள் அப்பெண்ணிற்கு மட்டும் இருந்திருக்காதா! எல்லாம் வெறும் கனவாகிப்போக, குடும்பத்திற்கென உழைக்கிறாள், பாவம்!
“அப்பெண் செலவாளி!”
கணவனது சம்பாத்தியத்தில் தான் எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்கலாமே என்ற சுதந்திர உணர்வுடன் செயல்படும் பெண்கள் பிறரது கண்டனத்திற்கு ஆளாவார்கள்.
இப்படி யோசிக்கலாமே! தாய்வீட்டில் வளர்கையில் பொருளாதார வசதி குறைவாக இருந்திருக்கலாம்.
இரு கதைகள்
`என்ன, இப்படிக் குழந்தை வளர்க்கிறாளே!’ என்று அநேகமாக எல்லா உறவினர் பெண்களையும் கேலி பேசுவாள் சௌந்தரி — அவர்கள் பின்னால்தான்!
சௌந்தரி ஒரு முதிர்கன்னி என்பது குறிப்பிடத்தக்கது. தனக்குக் கிடைக்காத புத்திரபாக்கியம் அவர்களுக்குக் கிடைத்திருக்கிறதே என்ற மனப்பொருமல் இவ்வாறு வெளியாகியிருக்கிறது. குழந்தைகளை வளர்த்துப்பார்த்தால்தானே தெரியும் அதிலுள்ள சிரமங்கள்!
தான் மட்டும் கற்பின் சிகரம், தன் பெண்கள் ஆண்களைப் பார்த்தாலே பயந்து ஓடுவார்கள் என்று ஓயாமல் பெருமை பேசுவாள் கற்பகம். அவளைப் பொறுத்தவரை, ஆண்களுடன் சிரித்துப் பேசும் பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்கள்.
பிறரிடம் குற்றம் கண்டுபிடித்து, அதை விரிவாகக் கூறினால், தாம் சொல்வதைப் பிறர் ஆர்வத்துடன் கவனிப்பார்கள் என்று நடப்பவர்கள் இவ்விருவரும்.
இப்போக்கால் மன இறுக்கம் கூடி, உடல்நிலையைப் பாதித்துவிடுகிறது.
இந்த இரு பெண்மணிகளும் தம் இறுதிக்காலத்தில் நகரவும், பேசவும் முடியாது ஏதேதோ நோய்கள். யாரும் அவர்களுக்காகப் பரிதாபப்படவுமில்லை.
கதை
அதிகம் படித்து, பெரிய உத்தியோகம் வகிக்கும் பெருமை மைத்துனர்களுக்கு. அவர்கள் வீட்டு மாப்பிள்ளை படித்தவராக இருந்தாலும், கிராமப்புறத்தவர். அதிலும், பெரும்பணக்காரர்.
மைத்துனர்களுக்கு அவரைக் கண்டால் ஏளனம். அவருடைய கடவுள் பக்தி, நியமங்கள் ஆகியவை கேலிப்பொருட்களாக ஆயின. ஆனால், அவரைத் தூற்றியவர்களைப்போல் இல்லாது, இறுதிவரை ஆரோக்கியத்துடன் வாழ்ந்தார்.
பெற்றோரின் பேச்சும் நடத்தையும் அவர்கள் பிள்ளைகளையும் பாதித்தது.
பக்தியும் ஒழுக்கமும் நிறைந்தவருடைய குழந்தைகள் வாழ்வில் சிறக்க, மைத்துனர்களின் குழந்தைகள் என்னென்னவோ துயரங்களை அனுபவித்தார்கள்.
நாம் பிறரைப்பற்றி ஏதாவது சொல்லியே ஆகவேண்டுமென்றால், அது அவர்களுக்கு உபயோகமாக இருக்கவேண்டாமா?