சேக்கிழார் பாடல் நயம் – 147 (தம்சரணத்து)
திருச்சி புலவர் இராமமூர்த்தி
பாடல்
அருள்செய்த மொழிகேளா , அடல்சரிகை தனைஉருவிப்
பொருள்செய்தாம் எனப்பெற்றேன் எனக்கொண்டு பூங்கொடிதன்
இருள்செய்த கருங்கூந்தல் அடியிலரிந் தெதிர்நின்ற
மருள்செய்த பிறப்பறுப்பார் மலர்க்கரத்தின் இடைநீட்ட,
வரலாறு
ஏயர்கோன் இல்லத்திலிருந்து மணம்பேச வந்த முதிய அறிஞர்களை முறைப்படி வரவேற்றார். அவர்கள் மணம் புரிந்தேற்க விரும்பியது கேட்டு, ‘’எங்கள் குலவழக்கப்படி மனமகளைத் தரும் வகையில் தருவோம்!’’ என்று அனைவரின் மனமும் மகிழும்படி உரைத்துத் திருமணத்துக்கு இசைவு தந்து அனுப்பினார்.
சென்றவர் இருவீட்டாரும் இசைந்து சோதிட நூல் கூறிய வண்ணம் திருமண நாள் குறித்தனர். அவ்வாறே திருமணம் புரிவிக்க விரும்பிப் பெண்ணைப் பெற்ற தம்சுற்றத் தாருடன் மிகவும் மகிழ்ந்து, வெண்மையான முளைப் பாலிகை, பொற்கலங்களுடன் மலர்கள் பூத்த அந்த ஊரிலேயே திருமண அலங்காரங்கள் செய்வித்தார்.
மானக்கஞ்சாறர் மகளைக் கைப்பிடிக்க வந்த ஏயர்குலக்கோனும் தம் சுற்றத்தாருடன் மேகத்துடன் முரசும் முழங்கும் கஞ்சாரூரின் எல்லையில் வந்தார் . இவ்வுலகம் உய்ய மானக்கஞ்சரனார் மனத்திலுள்ள இறைவனும் இத்திருமணத்திற்குப் புறப்பட்டார்.
தம் தலையை மழித்து நடுவில் சிகையில் கோத்து அணிந்த எலும்பு மணியாக முன்பு திருமாலின் அங்கத்தில் இருந்த எலும்பைக் கடைந்து செய்த வெண்முத்து விளங்க , காதில் குண்டலம், என்புமணி கோத்த அழகிய தாழ் வடம், திருத்தோளில் அரவை நீக்கி அணிந்த உத்தரீயம், கரிய மயிரால் முறுக்கப்பெற்ற பூணூல், அடியார் பிறவியை நீக்கும் திருநீற்றுப்பை, இவற்றோடு . முன்கையில் எலும்புமணி கோத்த கயிறும், அரிய மறையாகிய கோவணத்தின்மேல் மறைத்த ஆடையும் அணிந்து, நிலத்தில் படிந்த திருவடியில் பதுமம், சங்கம், மகரம், சக்கரம், தண்டம் ஆகிய பஞ்ச முத்திரை விளங்க, சாம்பல் மூடிய தழல் போல மேனியில் பூசிய திருநீறு அணிந்தவராய் , கொடிகள் நிறைந்த வீதியில் வந்து தம் அவர் இல்லம் புகுந்தார்!
மாவிரத முனிவர் வடிவில் வந்த இறைவனைக் கண்டு, மகிழ்ச்சியுடன் எதிர் சென்று மானக்கஞ்சாறர் ‘’அடியேன் இல்லத்துக்கு எழுந்தருளியமையால் நானும் உய்வடைந்தேன்‘’ என்று கூறி, வந்து சேர்ந்த மாவிரத முனிவரைக்கண்டு எதிரே சென்று, பணிந்தார். முனிவர் ‘’இங்கு எதோ மங்கல நிகழ்ச்சி நடக்கிறது போலும்! ‘’என்றார். அதற்கு விடையாக , ‘’ என் ஒரே மகளின் திருமணம் நிகழ விருக்கிறது!’’ என்றார். உடனே முனிவர் உமக்கு எல்லா நலமும் உண்டாகுக’ என்றார். ஞானம் நிறைந்த தவ முனிவர் திருவடி பணிந்து, வீட்டுக்குள் புகுந்து, தேன் நிறைந்த மலர்களால் புனையப்பெற்ற கூந்தலையுடைய செல்வமகளை அழைத்துக் கொண்டு வந்து, திருநீல கண்டத்தை மறைத்து வரும் அந்த முனிவரை வணங்கச் செய்தார்.
தம்மைத் துதிப்பவர்களுக்குத் தமது திருவடித்தலம் கொடுப்பவராகிய சிவபெருமான்; தமது திருவடிகளில் வீழ்ந்து வணங்கி எழுந்து நின்ற மடமையுடைய கொடிபோல்வாரது மேகம் தழைத்ததுபோலத் தழைத்து வளர்ந்த மலரணிந்த கூந்தலின் புறத்தை நோக்கி; கும்பிட்டு நின்ற உண்மைத் தொண்டனாரைப் பார்த்து; “அணங்கு போல்வா ளாகிய இவளது மயிர் நமக்குப் பஞ்சவடிக்கு ஆகும்” என்று சொன்னார்.
பாடல்
அருள்செய்த மொழிகேளா , அடல்சரிகை தனைஉருவிப்
பொருள்செய்தாம் எனப்பெற்றேன் எனக்கொண்டு பூங்கொடிதன்
இருள்செய்த கருங்கூந்தல் அடியிலரிந் தெதிர்நின்ற
மருள்செய்த பிறப்பறுப்பார் மலர்க்கரத்தின் இடைநீட்ட,
பொருள்
இதைக்கேட்ட மானக்கஞ்சாறர் ‘’என்மகள் கூந்தல் சிவந்னடியாரின் பஞ்சவடிக்கு ஆம் ‘’என்று கேட்கப்பெற்றேன் என்றெண்ணி உடைவாளை உருவி பூங்கொடிபோல் மலர்வைத்த தம் மக்களின் கருங்கூந்தலை அரிந்து, நம் பிறப்பறுக்க வந்தவரின் மலர்ந்த கரத்தில் அளிக்க
விளக்கம்
பொருளல்லாத இதனையும் பொருட்படுத்தி “இது பஞ்சவடிக்கு ஆகும்” என்றுசொல்லும் பேறு பெற்றேன் என்க. இதற்கு முற்பிறப்பிற் செய்த நல்லகருமம் என்று உரைகொண்டு, முன் செய்த நற்றவத்தால் இவ்வாறு கொடுப்பது ஒருவர்க்குக்கிட்டும்; நான் என்ன புண்ணியஞ் செய்தேன்? என்று உரைகொள்வர் மகாலிங்கையர்.
இதனை மறுத்து, மொழிகேட்டு அதற்கு உண்மைப் பொருள் செய்து, அதன்படி செய்யத்துணிந்து, இதனை ஆம் என்று செய்யும்பேறு பெற்றேன் என மகிழ்ந்து என்று கூறுவர் ஆலாலசுந்தரம்பிள்ளை.
இருள் செய்த என்ற தொடர் கருநிறங்குறித்து நின்றது. ஆகுபெயர். இருள் செய்த, இருள் – மயக்கம் எனக்கொண்டு, கூந்தல் அழகியது – உடற்கூறு அழகியது என்றெல்லாம் இவ்வுடலைப் பற்றிக் கொண்டு அலையும் உலகியல்பு குறித்ததாக உரைப்பதுமாம். உலகர் அவ்வாறு மயங்காவண்ணம் காட்டும்நிலையில், இதுவரை இருள் செய்த – மயக்கம் செய்த – இனி உண்மை காணக் காரணமாயின- கூந்தல் என்று இப்பொருட்குக் குறிப்பு உரைத்துக்கொள்க.
மானக்கஞ்சாறனார்போல் “மெய்ப்பொருளை யறிந்துண”ராத ஏனை உலகர்க்கு மகளிரது கூந்தல் முதலியவை இருள் – மயக்கம் – செய்வன என்ற பொது இலக்கணமாகக் கூறியதாகக் கொள்க. இதனைத் தொடர்ந்து மருள் செய்த பிறப்பறுப்பார் என்றதும் உன்னுக. இருள் – ஆகுபெயராய் மேகத்தை உணர்த்தியதெனவும், செய்த – உவம உருபெனவும் கொண்டு மேகம் போன்ற கரிய கூந்தல் என்றலுமாம். மேல் மஞ்சுதழைத்தென என்றது காண்க.
அடியில் அரிந்து என்ற தொடர், அந்தப் பற்றுச் சிறிதும் எஞ்சி நில்லாவகை அடியோடு களைந்து என்பதைக் குறித்தது. . “பாசப் பழிமுதல் பறிப்பார்போல” என்றதுகாண்க.
எதிர்நின்ற – முன்னே நின்றவராகிய பிறப்பறுக்கு முதல்வர். “தாவியவனுடனிருந்தும் காணாத தற்பரன்” என்றபடி எதிரேவரக் காணமுடியாதவர் இவருக்கு எதிர்வந்து நின்றார் என்பது குறிப்பு. எதிர்நின்ற மருள் என்று கொண்டு, உயிர்களை அறிவு மயங்கச்செய்து தம் இனமாகிய தலைவனை யடையாமல் எதிர்த்துக்கட்டி அதுகாரணமாகப் பிறப்பில்வீழ்த்தும் மயக்கம் என்றுரைக்க நிற்பதும் சிந்திக்க.
“பொருளல்லவற்றைப் பொருளென்றுணரும்,
மருளானாம் மாணாப்பிறப்பு”
என்ற திருக்குறட் கருத்து இங்குத் தோற்றுவதனையும் உன்னுக. கூந்தல் முதலியனவாய் மெய் என்று பேர்பெற்ற பொருளல்லாத பொய்யினைப் பொருளெனக் கொண்டு அவற்றுக்காவனவே செய்து இறந்து பிறந்துழலும் மருளினால் ஆகிய மானிட வாழ்க்கையை நோக்கி இவ்வாறு கூறினார் என்பதும் காண்க.
இனி, உலகபோகப் பொருள்கள் பொருளல்ல என்று தள்ளுதலும், அவையே பொருளாம் என்று கொண்டுழலுதலும் ஆகிய இரண்டும் தவறுடையன; சிவனுக்கும் அடியாருக்கும் பயன்படும் அவ்வளவிற்கே பொருளாம் என்றுணர மருள் செய்த பிறப்பறும் என்று சேர்த்துரைத்துக்கொள்ளுதலும் ஆம்.
மருள்செய்த பிறப்பு அறுப்பார் , என்ற தொடர்,
“மையல் செய்திம் மண்ணின்மேற் பிறக்கு மாறு காட்டினாய்” என்றபடி மருளினாலாகிய பிறவியினை அறுத்துத் திருவடித்தலம் கொடுப்பதற்காக எதிர்நின்று செய்த இச்செயல் முடிகின்ற இடமாதலின் இங்கு இத்தன்மையாற் கூறினார்.
பிறப்பு அறுப்பார் மலர்க்கரம் , என்ற தொடர் தமது கையினாற் காட்டும் ஞானமுத்திரையால் பிறப்பு அறும்வகை கூட்டுவார் என்ற குறிப்பும் காண்க. (மானக்கஞ்சாறர்) – நீட்ட – (அவர்) – மறைந்து – வந்தார் என வரும்பாட்டுடன் கூட்டி முடிக்க. பெற்றேன் என – கொண்டு – அரிந்து – நீட்ட என்ற வினைகட்கு, மானக்கஞ்சாறர் என எழுவாய் வருவிக்க.
இப்பாடலில், தம் மகளின் திருமணத்துக்குக் கூந்தலில் மலர் சூட வேண்டுமே என எண்ணாமல், இறைவனடியார் வேண்டியதை அப்போதே வழங்க வேண்டும் என்ற உறுதியம் , அடியாரை இறைவனாகவே கருதும் சிவத்தொண்டும் புலனாகின்றது!