குருவடியைத் திருவடியாய் மனமெண்ணி மகிழ்வோம்!

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் … ஆஸ்திரேலியா 

எழுத்தை அறிவித்து எம்மகத்தைத் திறந்திட்ட
பழுத்த அறிவுடைய பக்குவமே குருவாவாவர்
நிலத்தை வளமாக்கி நிறைவளத்தைக் காணுகின்ற
மனத்தை உடையவரே மாண்புடைய குருவாவார்

அகமுறையும் அழுக்ககற்றி அறிவுச்சுடர் ஏற்றிவைத்து
ஆதவனாய் ஒளிவிடுவார் அவரேநற் குருவாவார்
செவிநுகரப் பலதருவார் சிறியவற்றை ஒதுக்கிடுவார்
புவியதனில் பெருந்துணையாய் பொருந்திடுவார்  குருவாவார்

கற்பவற்றைக் காட்டிடுவார் கருத்தமர வழியாவார்
நிற்பதற்கும் நடப்பதற்கு நீள்வழியும் ஆகிடுவார்
நற்பதத்தைத் தேர்ந்திடுவார் நாளுமதை மொழிந்திடுவார்
இப்புவியில் நல்வரமாய் வாய்த்தவரே குருவாவார்

இலக்கியமு மாவார் இலக்கணமு மாவார்
தலைக்கனமே இல்லா தரமான குருவாவார்
உலைக்களமாய் இருப்பார் உருக்கியே எடுப்பார்
நிலைத்திடவே வைக்கும் நிறை குருவுமாவார்

மெஞ்ஞானம் விஞ்ஞானம் சொல்ஞானம் தருவார்
அஞ்ஞானம் அகல்வதற் கவர்விளக்  காகிடுவார்
கல்ஞானம் கல்ஞானம் எனவுரைத்து நிற்பார்
நல்ஞானம் மிக்குடையார் நம் குருவுமாவர்

காவியமும் அறிவார் ஓவியமும் அறிவார்
கணிதமும் தெரிவார் கற்சிலையும் வடிப்பார்
வானிலையும் சொல்வார் வைத்தியமும் சொல்வார்
வாழ்க்கையிலே வளமாய் வந்தமைந்தார் குருவாய்

தலைதொட்டு நாளும் தலைநிமிர வைப்பார்
தலைகுனியும் செயலை தலைகுனிய வைப்பார்
உலகிடையே வாழ  உயர்கருத்தை விதைப்பார்
உணர்வுடனே கலந்து உள்ளுறைவார் குருவாய்

குருவாசி பெற்றிடுவார் குவலயத்தில் சிறப்பார்
குருவாசி கிடைத்திடுதல் பெரு வரமேயாகும்
குருவாய்த்தல் யாவருக்கும் நல் வரமேயாகும்
குருவடியைத் திருவடியாய் மனமெண்ணி மகிழ்வோம்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க