குறளின் கதிர்களாய்…(370)

செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்…(370)

கறுத்தின்னா செய்தவக் கண்ணு மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்.

– திருக்குறள் – 312 (இன்னா செய்யாமை)

புதுக் கவிதையில்

பகை மிகக்கொண்டு
ஒருவன்
பல துன்பம் செய்தாலும்,
பதிலுக்கு அவனுக்குத்
தீமை ஏதும்
திருப்பிச் செய்யாமலிருப்பது
தெளிந்த மன மாசற்றோர்
கொள்கையாகும்…!

குறும்பாவில்

தம்மீது பகைகொண்டு ஒருவன்
தமக்குத் தீங்குசெய்யினும் பதிலுக்கு அவனுக்குத்
தீமைசெய்யாதது குற்றமற்றார் கொள்கை…!

மரபுக் கவிதையில்

அகத்தில் பகையை வைத்தேதான்
அளவே யின்றி தாம்நோகப்
பகர வொண்ணா யிடர்தரினும்,
பழியைத் தீர்க்கும் வகையினிலே
மிகவாய் வாட அவர்தமக்கே
மிகுந்த துன்பம் கொடுக்காத
நிகரே யில்லாக் கொள்கையதை
நெஞ்சில் கொள்வர் மாசிலாரே…!

லிமரைக்கூ

பகையால் செய்வர் இடரே,
திருப்பியவர்க்குத் தீங்கு செய்யா மாசற்றோர்
தூய கொள்கைச் சுடரே…!

கிராமிய பாணியில்

செய்யாத செய்யாத
கெடுதல் செய்யாத,
அடுத்தவன் வருந்தக்
கெடுதல் செய்யாத..

பகய மனசுல வச்சி
தனக்குத் துன்பம் தந்தாலும்,
திருப்பி அவனுக்குத்
தீம செய்யாத
கொள்க கொண்டவங்கதான்
மனசுல குத்தங்கொற இல்லாதவுங்க..

அதால
செய்யாத செய்யாத
கெடுதல் செய்யாத,
அடுத்தவன் வருந்தக்
கெடுதல் செய்யாத…!

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க