தமிழ் வருமோ சொல்!
சத்தியமணி
தேவாரம் படிக்காது திருவாசகம் பிடிக்காது
பூவாரம் தொடுக்காது ஓதுவார்பண் கேட்காது
தாவாரச் சிவன்கோயில் இடிப்போரைத் தடுக்காது
நாவோரம் துவேசத்தால் நற்றமிழ் வருமோசொல்
அருட்பாவைத் திவ்விய பிரபந்தங்கள் பாடாமல்
கருப்பாவைக் கம்பன்தன் ராமகதைக் கேளாமல்
திருப்பாவை ஆண்டாளை வேசியெனச் சொல்லிக்
கொடும்பாவி எரித்தாலே கனித்தமிழ் வருமோசொல்
பக்திக்கு விழையாமல் பண்பாட்டைக் குறைகூறி
புத்திக்கு ஏற்றாமல் வழிபாட்டைக் கறையாக்கி
சித்திக்கு மூடமெனும் பழக்கமென முடக்கித்தன்
யுத்திக்கு வேடமிடின் பைந்தமிழே வருமோசொல்
உருவில் சிவனாக அருவில் சிவனாக
திருவில் சிவனாகக் குருவில் சிவனாக
இருளில் சிவனாக எதிலும் இவனாக
அருளில் சிவனேதான் மறையில் சிவனான்
அவனைப் புரியாது எதுவும் தெரியாது
தவணைத் தவறுக்கு கர்மவினை புரியாது
தமிழ் வளர்த்த ஆன்மீகம் தர்மநெறியோடு
தமிழ் வளர்த்த ஆண்டவர் அறம்பொருளோடு
தமிழ் வளர்த்த இன்பவீடு பேரளித்தான்றோரின்
தமிழ் வளர்த்த சேவையைப் பழித்தால் தமிழ்வருமோ?
வணக்கம்!
‘கவிதை’ எழுதிய சததியமணி அவர்களுக்கு வாழ்த்துக்கள்! அவர்தம் பன்முக ஆற்றல் பாராட்டுக்குரியதே!, ஆனால் கவிதைத் தொழில் என்பது படைப்புத் தொழில்!. ‘மரபுக் கவிதை’ என்று குறிப்பிட்டிருப்பது யாப்பமைக் கவிதை என்றாகுமானால் (உண்மையில் மரபுக்கவிதை என்பது யாப்பு மட்டும் அமைந்ததன்று) அந்த யாப்பு என்ன என்பதைக் குறிப்பிட்டிருக்க வேண்டுமல்லவா? இனி நாலாவது ‘பாடல்’ ஏனைய பாடலகளினும் அடிகள் மிக்கு அமைந்திருப்பது குழப்பமாக உள்ளது!, செய்திகளின் தொகுப்பு தகவல்களின் தொகுப்பு இவையெல்லாம் கவிதையாகாது!, மொழிவழி வெளிப்படும் உள்ளத்து அதிர்வுகளே கவிதையாகும். ஆர்வம் பாராட்டுக்குரியதுதான். வரம்பற்ற கவிதைகளை மனப்பாடம் செய்வதும் பொறுமையாக யாப்பியல் நுட்பங்களை அறிவதும் இப்படைப்பாளர் எதிர்நாளில் கவிதை எழுத உதவக்கூடும்!. இப்பின்னூட்டடம் கண்டவுடன் “நான் யாப்பிலக்கணத்தை முறையாகப் பயின்றதில்லை” என்று சொல்லிவிட வேண்டாம்! நன்றி!