
கொச்சு பிரகலாதன் கொஞ்சு மழலையில்
உச்சரிக்க நாமம் உரத்(து)அப்போ -உச்சி
குளிர்ந்தவன் உச்சியைக் கோதிய சிங்கம்
மெலிந்துகர் ஜிக்க மியாவ்….கிரேசி மோகன்….!
அன்பினியவர்களே!
அன்பான வணக்கங்களுடன் அடுத்த மடலில் இணைகிறேன். இனியவைகள் சில இந்த மடலில் உங்களுடன் பகிர்வதில் மகிழ்வடைகிறேன். வாழ்க்கை எனும் பயணம் இருக்கிறதே அதன் சிக்கலான் பாதையைக் கடந்து நாம் ஒவ்வொன்றாக பல மைல்கற்களை அடைகிறோம். அப்படி அடையும்போது இடையிடையே எமது இலக்குகளில் சிலவற்றை அடையும்போது நம் வாழ்க்கைப் பாதையில் நாம் கடந்துவந்த பாதையைச் சற்று திரும்பநோக்கி அசைபோட்டுக் கொள்கிறோம்.
மனித வாழ்க்கை என்பது என்ன? அனுபவங்களைச் சேகரித்து வைக்கும் ஒரு வங்கி என்று கூடச் சொல்லலாம் தானே!
சதாபிஷேகம்! ஆமாம் ஒருவர் தனது 80 அகவை பூர்த்தி செய்யும்போது அதனைச் சதாபிஷேகம் என்கிறோம். 80 வயதுஆனவர்களை இன்னும் துல்லியமாகச் சொல்வதானால் வயது10மாதம் ஆனவர்களை ஆயிரம்பிறை கண்டவர்கள் என்று சொல்லலாம். அது எப்படி ஆயிரம் பிறை கண்டவர்கள் என்கிறீர்களா?
80 வருடத்திற்கு 960 சந்திர தரிசனம். சில வருடங்களில் 13சந்திர தரிசனம் நிகழும். 80வருஷத்தில் 30சந்திர தரிசனம் அதிகமாக இருக்கும். அதையும் சேர்த்தால் 990வரும். பத்து மாதத்தில் பத்துசந்திர தரிசனத்தையும் சேர்க்கும்பொழுது 1000பிறைகள் நிறைவுபெறும். எண்பது வயது கடந்தாலே ஒருவர் பூரணவாழ்வு அடைந்து விட்டார்கள் என்று பெருமைப்படுகிறோம். எண்பது அகவை ஏன் மிகப்பெரிய சரித்திரம் என்கிறோம்? ஒருவர் 20 வயது முதல் 80 வயது வரை காணும் வாழ்வின் அனுபவங்களே அவருடையா வாழ்வில் முக்கியத்துவம் பெற்றுப் பதிவாகிறது. இந்த 60 வருட காலத்தில் ஒவ்வொருவருடைய வாழ்விலும் வெற்றிகளும், தோல்விகளும் மாறி மாறி வந்திருக்கும். எண்பது அகவை மனிதர் வாழ்ந்து விட்டால் அவர்கள் இத்தகைய தோல்விகளைகளையும், வெற்றிகளையும் தாங்கிக் கொள்ளும் மனதைரியத்தை அடைந்தவர்களாக இருப்பார்கள் என்பதுவே முன்னோர்களின் நம்பிக்கையாக இருந்தது. ஓர் எண்பதாண்டுப் பெரியவரின் வாழ்க்கை 60 ஆண்டு பேசும் சரித்திரமாக எம்முன்னால் உலவும் நிகழ்வே சதாபிஷேகம் ஆகிறது. நாம்அங்கே கொண்டாடுவது அவர்களுடைய சரீரத்தை அல்ல சரித்திரத்தையே !
சமஸ்கிருதத்தில் 60 ஆண்டுப் பூர்த்தியை சஷ்டியப்தபூர்த்தி என்றும், 70 ஆண்டுகள் பூர்த்தியை பீமரத சாந்தி என்றும், 80 வயது பூர்த்தியைச் சதாபிஷேகம் என்றும் கொண்டாடுகிறார்கள். இதுவே நான் முன்பு சொன்ன வாழ்க்கைப் பயணத்தின் வெவ்வேறு இலக்குகளுக்கான மைற்கற்கள் ஆகின்றன. ஓர் ஆண் சதாபிஷேகம் காணும்போது தம்பதி சமேதராய் இருப்பவர் சிலரே. அதனால்தான் இத்தகைய தம்பதியினரிடம் ஆசி பெறுவது மிகவும் ஒரு பாக்கியம் என்று கருதப்படுகிறது.
இதற்கு ஒரு சிறு மகாபாரத உபகதையொன்றுண்டு. தருமர் செய்த ராஜசூய யாகத்திற்கு சனகாதிகள் போயிருந்தார்கள். அவர்கள் அங்கு சென்றதன் காரணம் அவ் யாகத்திற்கு வாசுதேவர் வருவார் அங்கு அவரை வணங்கலாம் என்பதே. அவர்கள் எதிர்பார்த்தபடியே வாசுதேவரும் வந்தார் ஆனால் அவர் அவர்கள் எதிர்பார்க்காத காரியம் ஒன்றைச் செய்தார்.
அது என்ன என்கிறீர்களா?
அவர் அங்கு வந்திருந்த சில முதியவர்களைப் பாத நமஸ்காரம் செய்தார். அதைக் கண்ட சனகாதிகள் திகைத்து விட்டனர். அவர்கள் கண்ணபிரானிடமே”நாங்களெல்லாம் உங்களை வணங்குவதற்காக வந்திருக்கிறோம், ஏன் இவ்வகிலமே உங்களை வணங்குகிறது. நீங்கள் எதற்காக அம்முதியவர்களை வணங்கினீர்கள்?” என்றார்கள். அதற்கு வாசுதேவர் ” உலகில் ஆறு வகையான முதியவர்கள் வணங்கத்தக்கவர்கள் 1) தினமும் அன்னம் பாலிப்பவன் 2) வாலிப வயதிலேயே யாகம் செய்தவர் 3) ஒருநாள் அல்ல இருநாள் அல்ல வருடக்கணக்கில் தவவாழ்வை மேற்கொண்டவர் 4) கற்புக்கரசியராக வாழ்ந்தவர்கள் 5) பிரம்மத்தை அறிந்த ஞானியர் 6) ஆயிரம் பிறை கண்டவர்கள்.
இதிலிருந்து நாம் சதாபிஷேகம் காணும் பெரியவர்களின் ஆசியைப் பெறுவதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளலாம்.சரி, அப்படியான ஒரு நிகழ்வில் கலந்து கொண்டு அத்தகைய தம்பதியரின் ஆசியைப் பெற்றுக்கொள்ளும் பாக்கியம் எனக்கும் எனது மனைவிக்கும் சமீபத்தில் கிடைத்தது. செட்டிநாட்டுக்கும் எனக்கும் உள்ள சொந்தம் அலாதியானது. எனது எழுத்துக்கு வழிகாட்டியாக, மானசீகக் குருவாக இருக்கும் கவியரசர் கண்ணதாசனை ஈன்ற மண், யாதும் ஊரே! யாவரும் கேளிர் எனும் அரும்பெரும் தத்துவ வரிகளை எமக்களித்த கணியன் பூங்குன்றனார் தோன்றிய மண், புதுமையான் எழுத்துக்களுக்கு வித்திட்ட கல்கண்டை எமக்குச் சுவைக்கத் தந்த பெரியவர் தமிழ்வாணன் ஜயாவை ஈன்ற மண், மறையும்வரை என்னோடு நன்கு பழகி வந்த பதிப்புலகின் மூத்தவர், கவியரசரின் உற்ற நண்பன் வானதி திருநாவுக்கரசு ஜயா அவர்களைத் தந்த மண். என் இனிய நண்பர்களான ரவி, லேனா தமிழ்வாணன் சகோதரர்கள், அன்பு நண்பர் காந்தி கண்ணதாசன், அன்புத்தம்பி தேவகோட்டை இராமநாதன் எனப் பல சொந்தங்களை தமிழன்னை எனக்கு ஈயக் காரணமாயிருந்த மண்ணின் வாசத்தைக் கொண்டது செட்டிநாடு.
அத்தகைய நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த ஜயா தியாகராஜன் அவர்களது சதாபிஷேகக் கொண்டாட்டம் லண்டனில் “டார்ட்ஃபோர்ட் (Dartford)” எனும் இடத்தில் இருவாரங்களின் முன் நடந்தபோது ஜயாவை வாழ்த்திப்பேசும் மகிழ்ச்சியான பணியை எனக்குத் தந்திருந்தார்கள். தியாகராஜன் ஜயா அவர்கள் சுமார் 55வருடங்களுக்கு முன்னால் இலண்டனுக்கு வந்தவர்.
இலண்டன் தமிழ்ச்சங்கம், மற்றும் இலண்டன் நகரத்தார் சங்கம் அனைத்துக்கும் முதல் வித்திட்டு அனைவரையும் ஒன்றிணைப்பதில் முன்னின்று வெற்றி கண்டவர். இலண்டன் ஈஸ்ட்காம் முருகன் கோவில் அமைப்பதில் முன்னின்று செயலாற்றியவர்களில் ஒருவர். இப்படியாக ஐயா தமிழுக்கும், சைவத்துக்கும் பல சேவைகளை ஆற்றிக் கொண்டிருப்பவர். அத்தகைய பெரியவரின் சதாபிஷேக விழாவில் இச்சிறியேனுக்கு நாலுவரிகள் பேசக்கிடைத்த சந்தர்ப்பத்தை நல்கிய தமிழன்னைக்கும், என்றும் எனக்காக்கும் அண்ணமலையானுக்கும் நான் என்றென்றும் நன்றி செலுத்துவேன்.
ஐயா தியாகராஜன் அவர்களுடைய குடும்பத்தோடு, இலண்டன் நகரத்தார் சங்கத்தைச் சேர்ந்தவர்களும், இலண்டன் தமிழ்சங்கத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து இவ்விழாவினைச் சிறப்பித்திருந்தார்கள்.. அருமையான சிற்றுண்டிகளோடு, இரவுப் போசனத்தையும் அளித்து அனைவரையும் மகிழ்வித்தார்கள். அனைத்துக்கும் மேலாக ஐயாவினதும், அம்மாவினதும் ஆசிகளைப் பெற்றுக் கொண்டது ஒன்றே அனைத்துக்கும் மேலாக நாமடைந்த பாக்கியம் என்று எண்ணுகிறேன்.
மீண்டும் அடுத்த மடலில்…
அன்புடன்
சக்தி சக்திதாசன்
தனனா தனத்த தனனா தனத்த
தனனா தனத்த -தனதான
————————————————–
பெருமாள் திருப் புகழ்….!
“சிவனார் கொடுத்த சிலைநா ணிழுத்து
சிலைஜா னகிக்கு -மணமாலை
இடுரா மபத்ர ரகுவீ ரகத்ய
மறைதே சிகர்க்கு -பரிவான,
அவமா னமுற்று அரியே யெனக்கை
அணிசே லைவிட்டு-அவள்கூவ
சரணா கதிக்கு பதிலாய் உடுத்த
வளர்சே லைகொட்டி -அருள்வோனே
கவணால் விரட்ட பரண்மேல் இருக்கும்
குறமா தணைக்க -மயலேறி
கிழவே டமுற்று வருவே லவர்க்கு
முறைமா மசக்தி -அபிராமி
சிவகா மிசுத்த பரிபூ ரணிக்கு
வெகுநே சமுற்ற -முதியோனே
அலைபாற் கடற்குள் விடசே டமெத்தை
வளர்யோ கநித்ரை -பெருமாளே”….கிரேசி மோகன்….!
வாவ் பிரில்லியண்ட் கேசவ்….!
——————————————————————
”தூண்பிளந்த சிங்கம், தொடையில் இரணியன்
நானகந்தை நீவிடும் நாரணர் -ஆண்குழந்தை
உத்தமர் சேவடி ஊறுகின்ற மாடாக
நித்தம் இருந்திடுவாய் நீ’’….கிரேசி மோகன்….!
இவ்வார வல்லமையாளராக அ.முத்துலிங்கம் அவர்களை தேர்ந்தெடுக்கிறோம்
1937 சனவரி 19 ல் இலங்கை யாழ்ப்பாண நகருக்கு அருகாமையில் உள்ள கொக்குவில் கிராமத்தில் பிறந்தவர். அப்பாத்துரை, ராசம்மா தம்பதிகளுக்கு பிறந்த ஏழு பிள்ளைகளில் ஐந்தாவது ஆவார். கொக்குவில் இந்துக் கல்லூரியிலும், யாழ்ப்பாணக் கல்லூரியிலும் பயின்ற இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்தபின் இலங்கையில் பட்டயக் கணக்காளராகவும், இங்கிலாந்தின் முகாமைத்துவக் கணக்காளராகவும் பட்டம் பெற்றவர். பணி நிமித்தமாக பல நாடுகளுக்கு பயணித்திருக்கும் இவர் ஏறத்தாழ இருபது ஆண்டுகள் உலக வங்கியிலும், ஐக்கிய நாடுகள் அவையின் OPS பிரிவிலும் முக்கியமான பதவிகளில் பணியாற்றி தற்சமயம் புலம் பெயர்ந்து தன் மனைவி கமலரஞ்சினியுடன் கனடாவில் வசித்து வருகிறார்.பிள்ளைகள் இருவர் : சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள் தான் அடிக்கடி இவர் கதைகளில் வரும் அப்சரா.
அ. முத்துலிங்கம், பேராசிரியர் க.கைலாசபதியால் எழுத்துலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர். இலங்கை தினகரன் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற ‘அக்கா’ சிறுகதையை தலைப்பாகக் கொண்ட இவரின் முதல் தொகுப்பு திரு க.கைலாசபதியின் அணிந்துரையுடன் 1964ல் வெளியானது. நீண்டகால இடைவெளிக்கு பிறகு 1995ல் மறுபடியும் எழுதத் தொடங்கி சிறுகதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், நேர்காணல்கள், புத்தக மதிப்புரைகள், நாடக, சினிமா விமர்சனங்கள் என்று எழுதி வருகிறார். இருபதுக்கு மேற்பட்ட வெளிநாட்டு ஆங்கில எழுத்தாளர்களுடன் இவர் நடாத்திய நேர்காணல் கட்டுரைகள் தொகுப்பாக விரைவில் வெளிவர இருக்கிறது. தற்போது, கனடாவில் பதிவு செய்யப்பட்ட தமிழ் இலக்கியத் தோட்டம் (Tamil Literary Garden) என்னும் அறக்கட்டளை குழுமத்தில் முக்கிய உறுப்பினராக செயலாற்றுகிறார்
. கடந்த இரண்டரை வருடங்களாக, 2015ல் இருந்து ஹார்வார்ட் தமிழ் இருக்கை அமைப்பின் உறுப்பினராகச் செயலாற்றுகிறார். 2018 மார்ச் 5ம் தேதி ஹார்வார்ட் விதித்த இலக்கான 6 மில்லியன் டொலர்கள் உலகம் முழுவதிலுமிருந்து நன்கொடையாக திரட்டப்பட்டு விட்டதால் தமிழ் இருக்கை உறுதியானது
நவீன தமிழ் இலக்கியத்திற்கு ஈழத் தமிழ் தந்திருக்கும் முக்கியமான கொடை என்று அ.முத்துலிங்கம் படைப்புகளைச் சொல்லலாம். அவர் கதைகளில் காணப்படுவது வெவ்வேறு தேசங்கள், வெவ்வேறு கலாச்சாரங்கள், வெவ்வேறு மனிதர்கள். ஆனால் தமிழ் வாசகருக்கு அந்நியப்படாமலும், தீவிரம் சிதைக்கப்படாமலும் அப்புனைவுகள் படைக்கப்பட்டிருக்கின்றன. நாம் அறிந்த உலகங்களுக்கு நாம் அறியாத பாதைகளில் அவை எம்மை இட்டுச் செல்கின்றன; பிரமிக்கவைக்கின்றன. அவரின் பார்வை அதிசயமான கூர்மை கொண்டது. வார்த்தைகளே தன்னை வசீகரிப்பதாக, சிந்திக்க வைப்பதாக, ஆட்கொள்ளுவதாகச் சொல்லும் அ.முத்துலிங்கத்தின் எழுத்தும் நம்மை அதேவிதமான பாதிப்புக்கு உள்ளாக்குகிறது.
(நன்றி: விக்கிபிடியா)
பரிந்துரை செய்த பேராசியர் செல்வகுமார் அவர்களுக்கு நன்றி
(இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )
”சபரி கிழமவர் சத்வக் கனியை
அபரிமித அன்பை அயோத்தி -நபரவர்
ராமரின் பின்வந்தோன்(கண்ணன்) ராப்பகலாய் கீதமாம்
சாமரஸம்(சாம கானம்) மாட்டின் செவிக்கு’’….கிரேசி மோகன்….!
மரக்கிளையில் அற்புதமாய் கூடுகட்டும் பறவைக்கு
=====மகத்தான சக்தியதை மனதுக்குள் புகுத்தியதாரோ..?
இரவிலொளி உண்டாக்கும் மின்மினிப் பூச்சிக்கு
=====அடிவயிற்றின் முடிவில் ஒளிகொடுத்தது யாரோ..?
மரங்கொத்திப் பறவைதன் கூரலகால் உளிபோல
=====மரத்தைச் செதுக்கும் உத்தியைத் தந்ததுயாரோ..?
குரங்குபோலத் தாவும்நம் அலைபாயும் மனதினில்
=====கோடி கோடியறிவியல் கேள்வியெழும் அன்றாடம்.!
குறையில்லா வாழ்வுவாழ வியனுலகில் இருக்கிறது
=====கொட்டிக்கிடக்கும் எண்ணற்ற இயற்கை வளங்கள்,!
அறைகுறையா யிதையறிந்த அறிவிலியோ ரெலாம்
=====அழித்தொழித்து விடவே கங்கணம் கொண்டிடுவார்,!
கறைபடிந்த மனதுக்குள் அலைபாயும் நினைவினில்
=====கரைகின்ற கரியவெண்ண மெழாதிருக்க வேண்டும்.!
நிறையிருட்டை நீக்குகின்ற முழுமதிபோல…நம்மின்
=====நினைவும் எண்ணமும் நல்லதையே நாடவேண்டும்.!
அருங்கல்வி பயின்ற ஆசானும்தன் மாணவனுக்கு
=====அற்புதமாய்ப் புரிய வைக்குமாற்றல் பெறவேணும்.!
ஒருமித்த கருத்துகளும் உருவாகி வரும்வரையில்
=====இருவரும் ஒன்றாயிருந்தே செயல்படல் வேணும்.!
குருவொருவன் நல்வழிகாட்ட..சீடனுமதைத் தன்
=====கருத்தில் கொண்டால்..குவலயமதில் சாந்திதவழும்.!
பெரும்ஆய கலைகளும் கைகூட வேண்டுமெனில்
=====பெரிதாயலையும் மனதையடக்கும் திறன் வேணும்.!
============================================================
நன்றி தினமணி கவிதைமணி வெளியீடு:: 02nd April’2018
நன்றி படம் :: கூகிள் இமேஜ்
-மேகலா இராமமூர்த்தி
கோலாட்டம் ஆடும் பெண்ணின் முகபாவங்கள் அழகாய் வெளிப்படும் வண்ணம் புகைப்படம் எடுத்துள்ளார் திருமிகு. ஷாமினி. இந்த இரசமிகு படத்தைப் போட்டிக்குத் தேர்வுசெய்து தந்திருக்கிறார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். புகைப்படக் கலைஞர், தேர்வாளர் இருவருக்கும் என் நன்றி.
கலைகளில் சிறந்தது நவரசங்களையும் (தமிழில் மெய்ப்பாடுகள் எட்டே) வெளிப்படுத்தி மக்களைக் கவர்ந்திழுக்கும் ஆடற்கலை. தில்லை அம்பலவனே ஆடவல்லானாய் – நடவரசனாய் ஆனந்த நடம் ஆடிக்கொண்டிருப்பது ஆடலின் மகத்துவத்தை அகிலத்துக்கு உணர்த்துகின்றது.
இனி, முகபாவத்தால் நம் அகம் மயக்கும் இந்த ஆரணங்கைத் தம் கவியாரத்தால் அணிசெய்ய வருகின்றார்கள் கவிவலவர்கள்!
*****
”மனஅழற்சி போக்கும் பயிற்சி; உடல்நலத்தை, மனவளத்தைக் கூட்டும் முயற்சி” என்று இந்த அம்மணி ஆடும் அழகு ரங்கோலியைப் புகழ்கிறார் ஏ. ஆர். முருகன்மயிலம்பாடி.
ஆடு..உடல்வளம் நாடு!!
அம்மிணியாடும் ரங்கோலி _
ஜம்முனிருக்குது பங்காளி!!
குச்சிரெண்டத்தூக்கிகிட்டு
குதிச்சுக்குதிச்சு ஆடும்போது
கூடச்சேந்து கும்மிகொட்டி
ஆடுது ஆசை எனும் ஓங்காளி!
கச்சிதமாய்க் கால வச்சுக்
கைகள் செய்யும் சாகசத்தில்
உறுப்புகள் முறுக்கேற…விளி
உற்றுப்பார்க்கும்போதுகோடாலி
கூர்மையோடு ஒளி வீசும்!!
அடிமனசுக்கு ஏற்ற பயிற்சி
அடித்துப்போகும்மன அழற்சி!!
வடக்கிருந்துவந்த விருந்தாளி!
இளமையிலே விளையாட்டு
இரும்பாக்கும் உடல் வளத்தை
கரும்பாக்கும் மன நலத்தை!! _
நோய்நொடிக்குப்பகையாளி!!
உண்ணுபவை உடன்செரிக்க,
கண்ணயர்ந்து தூக்கம்வர
பெண்களுக்கு பெரிதுதவி
நன்குவாழ உதவும் கூட்டாளி! _
கட்டுடலோடு நற்றவம் சேர
பட்டொளிவீசி வாழ்வதே ஜாலி!!
*****
”ஆடல்காண வந்தவரை வண்டுவிழிகள் துழாவ, கண்மலர்கள் வரவேற்க, வெண்முத்துப் பற்கள் ஒளிசிதறக் கோலாடிக் கொண்டாடினாள்” என்று பாவையின் எழிலைப் பழகு தமிழில் பாராட்டுகின்றார் திருமிகு. சக்திப்ரபா.
வரவேற்பு
ஆடை வனப்பு அழகைக் கூட்டி
அங்கமெங்கும் வர்ணம் பூத்திருக்க,
உற்றவரை உறவுக்கு உகந்தவரை
அங்குமிங்கும் படபடக்கும்
வண்டு விழிகளால் துழாவி
கண்மலர்களால் வரவேற்று
கோலாடிக் கொண்டாடினாள்.
உடன் தாவிய முத்துக்குழைகளும் ஆரங்களும்
சட்டென இதழ் விரித்த வெண்முத்துக்களுடன்
கூடியாடிக் குதித்ததில்,
மேடையெங்கும் ஒரே முத்துச் சிதறல்கள் !
*****
”தமிழ்ப்பாட்டு காதில் தேனாய்ப் பாய, சேலாட்டம் விழிகள் ஆட, கோலாட்டம் ஆடு பெண்ணே! குவலயத்தில் தாய்த்தமிழ்க்கு முடிசூட்டு கண்ணே!” என்று உற்சாகமூட்டுகிறார் திரு. செண்பக ஜெகதீசன்.
கலை வளர்க்க…
ஆடு மயிலே கோலாட்டம்
ஆடுமுன் விழிகள் சேலாட்டம்,
பாடு பாடு தமிழ்ப்பாட்டு
பாயவே காதில் தேனாட்டம்,
சூடு சூட்டு முடிசூட்டு
செந்தமிழ்த் தாய்க்கும் முடிசூட்டு,
ஈடு இணையே இதற்கில்லை
இக்கலை வளர்த்தே ஆடுநீயே…!
*****
”அன்னக்கோல் துழவியாங்கு அமுத அட்சயம் வளர்த்திடு; எண்ணக்கோல் செலுத்தியாடி புதுசாத்திரம் சமைத்திடு; செங்கோல் உயர்த்தியாங்கு சட்டமாற்றம் வகுத்திடு எம் சுதந்திர தேவி!” என்று நடமிடும் சுந்தரிக்கு நல்லறிவு கொளுத்துகின்றார் திருமிகு. அவ்வைமகள்.
சுதந்திரதேவி! சுதந்திரதேவி! சுதந்திரதேவி! சுதந்திரதேவி!
கன்னக்கோல் சுழற்றியாங்கு கயவர் கள்வினை கவர்ந்திடு
துன்னக்கோல் அசத்தியாங்கு மாதர் நல்வினை கோத்திடு
அன்னக்கோல் துழவியாங்கு அமுத அட்சயம் வளர்த்திடு
ஆனைக்கோல் தூக்கியாங்கு வலிய தீவினை ஒடுக்கிடு
சுதந்திரதேவி! சுதந்திரதேவி! சுதந்திரதேவி! சுதந்திரதேவி!
வண்ணக்கோல் தட்டியாடி உடல் சீர்மையைச் செழித்திடு
திண்ணக்கோல் திருத்தியாடி உளஉறுதியை முறுக்கிடு
தண்ணக்கோல் வீசியாட்டிக் கற்பு சூத்திரம் முழக்கிடு
எண்ணக்கோல் செலுத்தியாடிப் புதுசாத்திரம் சமைத்திடு
சுதந்திரதேவி! சுதந்திரதேவி! சுதந்திரதேவி! சுதந்திரதேவி!
செங்கோல் உயர்த்தியாங்கு சட்ட மாற்றமும் வகுத்திடு
வெங்கோல் நிறுத்தியாங்கு கடின விதிமுறை பதித்திடு
அங்கோல் கரத்திலாங்கு மல்லாயுதம் எடுத்திடு
தங்கோல் நாட்டியாங்கு நவயுவ பாரதம் எழுப்பிடு
சுதந்திரதேவி! சுதந்திரதேவி! சுதந்திரதேவி! சுதந்திரதேவி!
கொடுங்கோல் ஒடித்து ஆங்கு ஆணவம் அகற்றிடு
கடுங்கோல் மடித்து ஆங்கு உபத்திரம் ஒழித்திடு
தடுங்கோல் வளர்த்து ஆங்கு பத்திரம் வழங்கிடு
நெடுங்கோல் வழங்கியாங்கு சுதந்திரம் பெருக்கிடு
சுதந்திரதேவி! சுதந்திரதேவி! சுதந்திரதேவி! சுதந்திரதேவி!
சுடுங்கோல் பொருத்தியாங்கு வஞ்சநெஞ்சகம் பொசுக்கிடு!
அடுங்கோல் அணைத்து ஆங்கு அமைதியை நிறுத்திடு
மடுங்கோல் திருத்தியாங்கு தமிழகநீர்வளம் மீட்டிடு
எடுங்கோல் எழுப்பியென்றும் நல்லுறவினை உயர்த்திடு! ( சுதந்திரதேவி! —)
*****
நல்லதமிழ்ச் சொல்லெடுத்து நாட்டிய நங்கைக்கு இனிய தமிழ்மாலை சூட்டியிருக்கும் கவிஞர்கட்கு என் பாராட்டும் நன்றியும்!
இவ்வாரத்தின் சிறந்த கவிதை எனும் பாராட்டைப் பெற்ற கவிதை அடுத்து…
கோபாலா வா…வாவென்று கோலாட்டம் போடுங்கடி..!
பெண்களின் கலைநயத்தைக் காணுகின்ற கலையில்
……….பெருங் கலையே கும்மியடிக்கும் கோலாட்டமாம்..!
வண்ணம் கொண்ட கழிகளிரண்டைக் கையிலேந்தி
……….வகையாய்த் தட்டியே ஒலியெழுப்புமோர் ஆட்டம்..!
எண்ணத்தை வெளிப்படுத்தும் விசேட ஒலியாய்
……….இங்குமங்கும் ஓடியாடி உல்லாசம் கொடுக்குமாம்..!
கண்ணசைவால் கவரும் இளநங்கைகள் தாங்கள்
……….கால்விரலில் உடல்தாங்குமொரு உத்தியை அறிவர்..!
கண்ணுக்குக் குளிர்ச்சிதரும் பட்டாடை உடுத்தி
……….கண்ணன் பிறந்தநாளில் கோலாட்டம் குதூகலமாம்..!
மண்ணில் அன்னவனால் பிறவி கொண்டோமென
……….மாயவனைக் கூத்தாட அழைப்பதுவும் வழக்கமாம்..!
பண்ணிசையால் பாவையர்கள் பாடுமழகைக் காண
……….பறந்தோடி வருவான் மாயப்பிரான் கண்ணனுமே..!
அண்டத்தைத் தன்னண்ணத்தில் காட்டிய பெருமாயன்
……….அகமகிழ்ந்தே ஆயகலையும் கைவர அருளுவான்..!
பண்ண(ணிய) கடுந்தவத்தால் பார்வதியின் கறுத்தமுகம்
……….பளிச்சென முகம்வெளிரப்…பலமாகக் கும்மியடி..!
வெண்ணெய் திருடுமுன் அந்தத் தாழியுடையுமாறு
……….கண்ணன் வருவதற்குமுன் கழிதட்டி ஆடுங்கடி..!
உண்ணவும் உழைக்கவும் உடல்பயிற்சி பெறவும்
……….ஓடியாடி ஒன்றாய்ப்பின்னிப் பிணைந்து கும்மியடி..!
தண்டையணிந்த நம் குதிகாலும் தரையிலூன்றாது
……….வெண்தாடி விருத்தரும் விரைந்துவரக் கும்மியடி..!
”அண்ணத்துள் அண்டம் காட்டிய அந்த மாமாயன் அருள்பெறவே, அவன் பிறந்தநாளில் பாவையர் ஆடும் கோலாட்டம், அனைவர்க்கும் தந்திடும் கோலாகலம்! கெண்டை விழிகள் சுழன்றாட, தண்டையொலிகள் பண்பாட, இளம்பெண்டிர் ஆடும் இந்த எழிலாட்டம் வெண்தாடி விருத்தரையும் விருப்பத்தோடு காண வைக்கும் ஒயிலாட்டம்!” என்று கோலாட்டத்தின் சிறப்பைக் குவலயத்துக்கு இயம்பும் இக்கவிதையினைப் படைத்த பெருவை திரு. பார்த்தசாரதியை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தெரிவுசெய்து பாராட்டுகின்றேன்.
மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
நாமெல்லோ ருக்கும் இடையே உள்ள
தூரத்தைப் பற்றி
வாதாடிக் கொண்டி ருந்தோம் !
மனிதர் சிலர் மயக்க நினைவுச் சுவருக்குள்
ஒளிந்து கொண்டுள்ளார் !
மெய்ப்பாடு கண்டு கொள்ளார் !
அறியும் போது
தவறிப் போகுது காலம் !
நாமெல் லோரும் பகிர்ந்து கொள்ளும்
நேசத்தைப் பற்றி
பேசிக் கொண்டி ருந்தோம் !
நட்பைக் கண்டு விட்டாலோ நாம்
வெட்டி விடத் துணிவோம் !
நேசத்தால் நாமிந்த
காசினியைக் காப்பாற் றலாம் அதன்
வாசனை நுகரும் போது !
எவரும் உன்னை மாற்ற இயலாது !
எண்ணிக் கொள்,
எல்லாம் உன் நெஞ்சுக் குள்ளே
இருக்குது.
பார்த்தால் நீ ஓர் அற்பம் !
வாழ்வு புலர்கிறது
உனக்குள்ளே ! உனக்கு வெளியே !
நாமெல்லாம் ஆறிப் போகும்
காதல் உணர்வைக் காண்கிறோம் !
உலகைக் கைப்பற்ற முனைவோர்
இழப்பர் தம் ஆத்மாவை !
அதை அறியார் அவர் ! காணார் அவர் !
அவர்களில் ஒருவனா நீ ?
உன்னைக் கடந்து அப்பால்
உன்கண் நோக்கினால்,
உனக்கு அங்கே காத்திருக்கும்
மனச்சாந்தி !
நாமெல்லாம் ஒன்றெனும்
காலம் வரும் ! அன்று
உயிர்க்கும் வாழ்வு உனக்குள்ளே !
உனக்கு வெளியே !
பவள சங்கரி
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?
மோகன்தாஸ் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனைக் கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (28.04.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.
ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்
-ம. ஆனந்தன்
சங்க இலக்கியங்களில் பரத்தமை என்பது முக்கியப் பாடுபொருளாக விளங்கியது. காதலை மையப்படுத்திய அக இலக்கியங்களில் பரத்தமை தனி இடத்தைப் பெற்று இருந்தது. தொல்காப்பியர் தலைவன் தலைவியின் காதல் களவிலிருந்து கற்பில் பயணிக்கும் பொழுது பரத்தமையொழுக்கம் அவர்களது வாழ்வில் உட்புகுந்து பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகின்றது என்கிறார். இதன் விளைவால் தலைவி அடையும் துன்பங்கள், ஊராரின் அலர், விருந்தோம்பல் நிகழாமை போன்ற இன்னல்கள் தோன்றுகின்றன.
பரத்தமை என்ற ஒழுக்கம் சங்க காலத்தில் ஆதரிக்கப்பட்ட ஒன்றாகத் திகழ்ந்தது. பரத்தையர் இற்பரத்தை, சேரிப்பரத்தை எனக் கூறப்பட்டனர். இது கூடா ஒழுக்கம் எனினும் அன்றைய மக்கள் ஏற்றுக் கொண்டொழுகினர். பிற்காலத்தில் இவ்வொழுக்கம் சாடப்பட்டது. பரத்தமை பெரும்பாலும் மருதநிலத்தில் மிகுந்து காணப்பட்டது. இதற்கு காரணம் அங்குக் காணப்பட்ட செல்வ வளம், சூழல், மக்களின் வாழ்வியல் இயல்பு போன்றவையாகும்.
தொல்காப்பியர் குறிப்பிடும் செய்யுளியல் உறுப்புகளில் ஒன்றான கைகோளின் கற்பு வாழ்க்கையில் பரத்தமை நீங்கா இடம்பெற்றுள்ளது. அத்தகைய பரத்தமை வாழ்க்கையை எட்டுத்தொகையில் குறிப்பிடும் அக இலக்கியங்களில் மருதத்திணையில் காணலாகும் பரத்தமை வாழக்கையோடு பொருத்திக் காட்டுவதே இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.
தொல்காப்பியரின் கைகோள்
தொல்காப்பியத்தின் மூன்றாவது அதிகாரமாகிய பொருளதிகாரத்தின் உட்பிரிவுகளுள் எட்டாவதாக அமைவது செய்யுளியல் என்ற பகுதி. இலக்கிய மரபினைப் பற்றிய இயல் செய்யுளியலாகும். தமிழண்ணல் அவர்கள் இன்று படைப்பிலக்கியம் என்று நாம் கூறுகிறோமே அதே பொருளில்தான் தொல்காப்பியர் செய்யுள் எனும் சொல்லை ஆள்கின்றார் எனக் கூறுகிறார். அகத்திணையைப் பற்றிக் கூறி அகப்பாடலின் பொருளை உணர்த்தும் தொல்காப்பர் 14 ஆவது உறுப்பாகக் கைகோள் என்பதைக் குறிப்பிடுகிறார்.
சோடிகளின் வாழ்வே கந்தருவ மணம் என்கிறார். எனவே வடமொழியில் கந்தருவ மணம் போன்று இங்கு ‘களவு’என்பதாகும். கைகோள் வகையில் களவு இன்னது என்பதை,
காமப் புணர்ச்சியும் இடந்தலைப்படலும், கைகோள் என்பதற்குப் பவானந்தர் தமிழ்ச்சொல்லகராதி ஓழுக்கம் எனப் பொருள் தருகிறது. மக்களின் ஒழுக்கம் பற்றிக் கூறுவது கைகோளாகும். இதனைத் தொல்காப்பியார் களவு, கற்பு என இருவகைப்படுத்துகிறார்.
கைகோளில் பரத்தமை
பரத்தமை-அயன்மை, பரத்தையர்-அயலார்: களவொழுக்கம் ஒழுகி, மணஞ்செய்து கொண்டு கற்பொழுக்கம் ஒழுகும்- இல்லறம் நடத்தும் தலைவியரல்லாத பிற மகளிர் அதாவது களவொழுக்கம் ஒழுகாமலும், மணஞ்செய்து கொள்ளாமலும் காமத்திற்காக ஆடவருடன் கூடி வாழும் பெண்டிர். இவர்,
1.காமக் கிழத்தியர்
2.காதற் பரத்தையர்
3.சேரிப்பரத்தையர் என மூன்று வகைப்படுவர்.
இன்று சமயக் கன்னிப் பெண்கள் இருப்பது போல. ஆனால் இன்பத்தை வெறுக்காமல், அதற்காகவே பண்டு மணஞ்செய்து கொள்ளாது சில பெண்கள் இருந்து வந்தனர். அவர்கள் தன்னுரிமையுடனேயே வாழ்ந்து வந்தனர். அவர்களே இம்மூவகையினரும்.
“பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப” (கற்பு – 4)
என்பதால், தமிழரிடை, களவொழுக்கம் ஒழுகி, கரணம் இன்றி-பலரறிய மணம் செய்து கொள்ளாது கற்பொழுக்கம் ஒழுகி இல்லறம் நடத்தி வந்த காலமும் ஒன்று இருந்து வந்தது. அதாவது ஒருவனும் ஒருத்தியும் காதல் கொண்டு வாழ்க்கை நடத்தி வந்தனர். திருமணம் என்பதே அன்றில்லை பின்னர் தான் திருமணம் குலப்பெரியோர்களால் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் இப்பரத்தையர் களவொழுக்கமொழுகாது காம நுகர்பவர். எனவே முன்னது தூய ஒழுக்கமாகும். பின்னது தீய ஒழுக்கமாகும்.
காமக் கிழத்தியர்
தக்க பருவத்தே காதலுற்று முறையாகக் களவொழுக்கம் ஒழுகாமலும் மணஞ்செய்து கொள்ளாமலும் காமத்திற்காக மனைவியர்போல் இருந்து வருபவர்.
காதற் பரத்தையர்
இவர் தலைவனிடம் அன்பு கொண்டு இன்பந்துய்ப்பவர். ஆனால் காமக்கிழத்தியர் போலத் தலைவனோடு உடனிருந்து வாழ்க்கை நடத்தாமல் தனிவாழ்க்கை வாழ்பவர். தலைவன் குடும்பத்திற்கும் இவருக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. பரத்தையர் என்பதே இதற்குச் சான்றாகும்.
சேரிப் பரத்தையர்
இவர் தமக்கென ஒருவரை வைத்துக் கொள்ளாமல் விருப்பமுள்ள போது விரும்பியவரைக் கூடி வாழ்பவர். இவர் தலைவன் மீது அன்பின்றித் தலைவன் கொடுக்கும் பொருள் மீது அன்புடையவர்.
“ஒழுங்கங் காட்டிய குறிப்பினும்”
“காமக் கிழத்தி மனையோள் என்றிவர்
ஏமுறு கிளவி சொல்லிய எதிரும்” (கற்பு – 5)
என உயிரினும் ஒழுக்கமே பெரிதெனக் கொண்ட நம் முன்னையோர்க்கு இஃதொரு பேரிழுக்கே யாகும். ஒரு சில ஒழுக்கத்தை மதியாதவர்களால் உண்டான இத்தீமை தமிழினத்திற்கே ஒரு களங்கமாக விளங்கி வருகிறது.
மருதத்திணையில் பரத்தமை
மருதத்திணையின் திணை ஒழுக்கம் ஊடல் ஆகும். அவ்வூடலானது தோன்றுதற்கு முக்கியக் காரணம் பரத்தமையே. இதன் விளைவாகவே தலைவன், தலைவியிடையே ஊடல் மிகுந்தது.
ஒளி இழந்த தலைவி
புதல்வனை ஈன்ற தலைவி அதன் காரணமாகத் தான் அடைந்த முதுமை நிலையைத் தலைவன் வெறுப்பான் என ஐயமுடையவளாய் இருக்கின்றாள். அப்பொழுது தலைவன் பரத்தையரோடு தன் பொழுதினைக் கழித்து வருகின்றான். இதனைக் கேள்வியுற்ற தலைவி அவனை நோக்கி அவனது பரத்தமையை வெகுண்டு கூறுகின்றாள். இதனை,
“பழனப் பன்மீ னருந்த நாரை
கழனி மருதின் சென்னி சேக்கு
……… ……… ………. ……………
…….. ……… ………. …………..
பேஎ யனையமியாஞ் சேய் பயந்தனமே”
ஐங்குறுநூற்றுப் பாடல் புலப்படுத்துகின்றது. ஊர்ப் பொது நிலத்தின்கண் வாழும் பல்வேறு வகை மீன்களையும் பற்றித் தின்ற நாரையானது நன்செய் நிலத்தில் வளர்ந்துள்ள மருதமரத்தின் உச்சியிலே தங்குவதற்கு ஏற்ற இடமான மிகுந்த நீரை உடைய பொய்கையையுடைய புது வருவாய் மிக்க ஊரனே! யாம் மகப் பெற்றுள்ளோம். ஆகவே உனக்குப் பேய் போலத் தோன்றுகிறோம். அதனால் உன்னுடைய பிற பரத்தை மகளிர் தூய்மையும் நறுமணமும் கமழுகின்றோர் போலத் தோன்றுகின்றனர். அதனால் நீ இங்கு வர வேண்டாம் அவர்களிடத்தே தங்கிக் கொள்வாயாக! என வெகுண்டு கூறுகின்றாள்.
இதில் தலைவனின் பரத்தமை ஒழுக்கத்தினைத் தலைவி சாடுகின்றாள். பல வகையான மீன்களை உண்ட புலவு நாற்றத்தை உடைய நாரையானது கழனி மருதின் உச்சியிலே சென்று தங்குவது போலப் பல பரத்தையரோடு கலந்து உறவாடிக் களித்த பின் நீ இப்பொழுது சிறிது இளைப்பாற என்னுடைய இல்லத்திற்கு வந்திருக்கிறாய். இழிந்த புலால் உண்ணும் நாரைக்கு உயர்ந்த மருதின் உச்சி தங்குமிடம் போல மகவை ஈன்று ஒழிந்த என் இல்லம் உனக்கு தங்கும் இடம் போல ஆயிற்று என்று தலைவனின் பரத்தமையை இடித்துரைக்கின்றாள். இப்பாடல் தலைவனின் பரத்தமையைத் தலைவி நேரடியாக அவனுக்கு உணர்த்துவதாய் அமைந்துள்ளது.
வாளை மீனை உண்ணும் நீர்நாய்
பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனிடம் தலைமகள் அவனது பரத்தமையை இடித்துரைக்கின்றாள். இதனை
“அரிபெய் சிலம்பி னாம்பலந் தொடலை
பிண்ட நெல்லின் உறந்தை யாங்கண்
…………. …………. …………. ……………….
…………. …………. ………… ………………….
இனிமையெவன் செய்வது பொய்ம்மொழி யெமக்கே ”
என்ற நெடுந்தொகைப் பாடல் புலப்படுத்துகின்றது. பரல்கள் இடம்பெற்ற சிலம்பினையும் ஆம்பல் மலராகிய அழகிய மாலையினையும் அரத்தால் பிளக்கப் பெற்ற அழகிய வளைகளாற் பொலிந்த முன் கையினையும் அணிகலன் அணிந்த மூங்கிலையொத்த தோளினையும் உடைய ஐயை என்பாளுக்கு தந்தையாகியவன் மழைவளம் தரும் பெரிய வண்மையையுடைய தித்தன் ஆவான். அத்தகையவனின் நெற்குவியல்களை உடைய உறையூரிடத்தில் ஓடக்கோலும் நிலைத்து நில்லாத்தன்மையுடைய காவிரி நீர்ப்பெருக்கில், குழை முதலாகிய மாண்புறம் ஒளி பொருந்திய அணிகளையுடைய உன்னால் விரும்பப்பட்ட பரத்தையொடு வேழக் கரும்பாலாகிய வெள்ளிய தெப்பத்தினைக் கொண்டு அந்த இடத்து பூமி நாட்டாரது குளத்தினை நாடிச் சென்று விளையாடும்.
களிறும் பிடியும் போல முக மலர்ச்சியுற்று உயர்ந்த அழகிய மார்பிலுள்ள மலர்மாலையின் அழகுகெட நேற்று நீ புனலாடினாய்! ஆனால் இன்று இங்கு வந்து மார்பிலுள்ள அழகிய முலையில் தேமல் தோன்றிய குற்றமற்ற கற்பினையுடைய என் புதல்வன் தாயே என்று வஞ்சனை பொருந்திய பொய்ம்மொழியினை வணங்கிப் பல முறை கூறுகின்றாய்! என்னுடைய முதுமையை இகழாதே. இந்நிலைக்கு நான் காரணமல்ல என்று கூறுகின்றாள்.
பின்பு தீப்போலும் தாமரைப் பூக்களையுடைய நீர் மிகுதியாக உள்ள வயலில் அழகிய உட்டுளையுடைய வள்ளையின் மெல்லிய கொடிகளை உழக்கி வாளைமீன்களைத் தின்ற கூரிய பற்களையுடைய நீர் நாயானது முட்கள் பொருந்திய தண்டினையுடைய பிரம்பின் பழைய தூறுகளில் தங்கி இருக்கும். ‘மத்தி’ என்பனது ‘கழாஅர்’ என்ற ஊரினைப் போன்ற எனது இளமை கழிந்து மிகப் பழையதாயிற்று. எனவே உன் பரத்தமையை மறைக்க என்னிடம் உன் பொய்ம்மொழிகளைக் கூறாதே. எனக்கு உன் நிலை அனைத்தும் தெரியும். எனவே உனது பொய்ம்மொழிகள் எனக்கு இன்பம் செய்விக்காது அதை நீ புரிந்து கொள்வாயாக! எனக் கடிந்துரைக்கின்றாள்.
வாளைமீனை உண்டு களிக்கும் நீர் நாயைத் தலைவனது பரத்தமைக்குச் சான்று படுத்திக் கடிந்துரைக்கின்றாள்.
நாணமில்லாதவன்
நெல்லரியும் வினைஞர் தம் தொழிலை விடுத்து இழிந்த கள் வண்டியில் ஆழ்ச்சியைப் போக்குவதற்குச் சிறந்த கரும்பினைச் சிதைப்பது போல நீ இல்லறக் கடமைகளைச் செய்யும் ஒழுக்கத்தினைக் கைவிட்டு இழிந்த பரத்தையின் இன்பத்தை நுகர்வதற்குப் பண்பிற் சிறந்த தலைவியை வருத்துகின்றாய் எனத் தலைவனின் பரத்தமையைச் சாடி வாயில் மறுக்கின்றாள் தோழி. இதனை,
“எரியகைந் தன்ன தாமரை யிடையிடை
அரிந்துகால் குவித்த செந்நெல் வினைஞர்
கட்கொண்டு மறுகுஞ் சாகாடளற்றுறின்
ஆய்கரும் படுக்கும் பாய் புனல் ஊர
ஆடுகொள் வியன்களத் தார்ப்பினும் பெரிதே”
அகநானூற்றுப் பாடல்வழி புலவர் மிக அழகாய்ப் புலப்படுத்தியுள்ளார். நெருப்பு எரிவது போன்ற தாமரைப் பூக்களின் இடைஇடையே நெல்லரிவோர் நெல்லினை அரிந்து அரி அரியாகப் போட்டனர். உழைப்பின் களைப்புத் தெரியாமல் இருக்கவும் மகிழ்ச்சிக்காகவும் தங்களுக்குக் கள்ளினைக் கொண்டு வரும் வண்டி சேற்றில் பதிந்து கொள்ளக்கூடும் என அப்பாதைகளில் கரும்பினை அடுக்கி அதன் மீது வண்டியினை செலுத்தும் வளம் பொருந்திய ஊரனே உறுதியாக நீ மிகவும் நாணமில்லாதவனானாய்.
ஏனெனில் பொரி போலப் புன்கம்பூ மலரும்; அகன்ற நீர்த்துறை பொலிவு பெற ஒளி பொருந்திய நெற்றியினையும் நல்ல நறுமணம் வீசும் மலர்களைச் சூட்டிய பார்ப்பவர்க்கு இனிமை பயக்கும் கூந்தலையும் மாவடு போன்ற கண்ணினையும், முத்துவடம் அசையும் அழகிய முலையினையும் நுண்ணிய அழகின் நலத்தையும் உடைய ஒரு பரத்தையோடு நேற்று இடையூறு இல்லாமல் செல்லும் புனலில் நீ விளையாடினாய் எனப் பலர் கூறினர். ஆனால் அதை நாங்கள் பொய்யென புறத்தே மறைத்தோம். எனினும் எங்கள் செயலினையும் கடந்து அச்செயல் அலரானது.
அது எத்தகு தன்மையுடையது என்றால், மலர்ந்த பூமாலையினையும் தலையில் மை அணிந்த யானையையும் உடைய மறம் பொருந்திய போரில் வல்ல பாண்டியனது என்றும் நீங்காத விழவினையுடைய போர்க்களத்தில் தம்முள் ஒருங்கே இயைந்து எழுந்த சோழ,சேரர்களது கடல் போன்ற பெரிய படைகளைக் கலக்கும் பரிசு தாக்கி ஒலிக்கும் ஒலியினையுடைய முரசு ஒழிந்து கிடைக்க, அவர் பறந்து ஓடும் புறக் கொடையைக் கண்ட நாளில் வெற்றி கொண்ட பெரிய களத்தின் கண் எழுந்த ஆரவாரத்தினை விடப் பெரியதாக இருந்தது. அவ்வாறு பேரலர் தோன்றும் அளவிற்கு உனது புறத்தொழுக்கம் அமையலாயிற்று. எனவே நீ நாணமில்லாதவனானாய் எனத் தலைவனின் பரத்தமையின் இயல்பைத் தோழி கூறி வாயில் மறுக்கின்றாள்.
இந்நிலையை நோக்கும்போது அன்றைய காலகட்டச் சமுதாயச் சூழல் புலனாகின்றது. செல்வ வளத்தின் காரணமாக ஆடவர்கள் தீயொழுக்கம் புரியத் தலைப்பட்டனர். அத் தீய பண்பு நலனின் வெளிப்பாடு பிறர் அறிய நிகழ்ந்துள்ளது என்பதைப் பழம் பாடல்கள் பதிவு செய்துள்ளன.
கூடிக் களிக்கும் கொழுநன் மார்பு
தலைவி தன்னைப் பற்றி இழிவாகப் பேசக் கேட்ட பரத்தை அவளது தலைவனின் நிலையைக் கூறி நகையாடுகின்றாள். அதனை குறுந்தொகைப் பாடல் பதிவு செய்கின்றது.
“கூந்தல் ஆம்பன் முழுநெறி யடைச்சிப்
பெரும்புனல் வந்த இருந்துறை விரும்பி
………… ………….. ………….. ………….
முனையான் பெருநிரை போலக்
கிளையொடு காக்கதன் கொழுநன் மார்பே”
பரத்தைத் தலைவியின் இயலாமையைக் கூறி அவளது தலைவனைத் தம்மிடமிருந்து காக்கும் தன்மை அவளுக்கு இல்லை. எனவே அவள் என்னைப் புறங்கூற எந்தத் தகுதியும் இல்லை என்று எள்ளுவது போன்று இப்பாடல் அமைந்துள்ளது.
கூந்தலில் ஆம்பலின் முழுநெறிப்புள்ள அறுப்பினைச் செருகிக் கொண்டு மிகுந்த நீர்வளம் பொருந்திய நீர்த்துறையை விரும்பி நானும் தலைவனும் நீர் விளையாட்டைச் செய்வதற்காக செல்வோம். தலைவி தான் அவ்விளையாட்டை அஞ்சுதலைக் கொண்டாளாயின், கொடிய போரில் தூசிப்படை அழியும்படி, மேலேறிச் செல்லும் பல வேல்களை உடைய ‘எழினி’ என்பவனின் போர்க்களத்திடத்தில் விளங்கும் பெரிய மன்னர்திரளைப் போல, அவளது சுற்றத்தாரோடு சேர்ந்து எம்மோடு கூடிக்களிக்கும் அவளது கொழுநன் மார்பைக் காப்பாளாக! எனக் கூறுகின்றாள்.
தொல்காப்பியக் கைகோளில் பரத்தமையானது களவொழுக்கம் ஒழுகாது, திருமணம் செய்து கொள்ளாமலும் காமத்திற்காக ஆடவருடன் கூடி வாழும் பெண்கள் என்று கூறப்படுகிறது. அதே போல் சங்க இலக்கிய மருதத்திணையில் தலைவன் கற்பு வாழ்க்கையில் மனைவியை விடுத்து பரத்தையுடன் சில நாள் தங்கி மகிழ்கிறான். இத்தகு பரத்தமை ஒழுக்கத்தை வெறுத்து ஊடல் கொள்கிறாள் தலைவி. மருதத்திணைக்குரிய உரிப்பொருள் ஊடலும் ஊடல் நிமித்தமும் என்பதை தலைவியின் ஊடலுக்குத் தலைவனின் பரத்தமை ஒழுக்கமே காரணம் என்பதை இதன் மூலம் அறியலாம். இவ்வாறு மருதத்திணைப் பாடல்களில் பரத்தமை ஒழுக்கம் பெரிதும் குறிக்கப்படுகிறது.
*****
துணை நூல்கள்
தொல்காப்பியம் – இளம்பூரணர் உரை
தொல்காப்பியம் – தமிழண்ணல் உரை
நற்றிணை – நியூ செஞ்சுரி வெளியீடு
குறுந்தொகை – நியூ செஞ்சுரி வெளியீடு
ஐங்குறுநூறு – நியூ செஞ்சுரி வெளியீடு
அகநானூறு – நியூ செஞ்சுரி வெளியீடு
கலித்தொகை – நியூ செஞ்சுரி வெளியீடு
சங்க காலப் பெண்மை – பதிப்பு முனைவர் அன்னிதாமசு
தொல்காப்பியர் காலத் தமிழர் – புலவர் குழந்தை
சங்கத் தமிழர் வாழ்வியல் – மு.சண்முகம் பிள்ளை,உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்
சங்க மரபு – தமிழண்ணல்
*****
கட்டுரையாளர் – முனைவர் பட்ட ஆய்வாளர்,
தமிழ்த்துறை,
பாரதியார் பல்கலைக்கழகம்,
கோயம்புத்தூர்-46.