இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . (270)

0

அன்பினியவர்களே!

அன்பான வணக்கங்களுடன் அடுத்த மடலில் இணைகிறேன். இனியவைகள் சில இந்த மடலில் உங்களுடன் பகிர்வதில் மகிழ்வடைகிறேன். வாழ்க்கை எனும் பயணம் இருக்கிறதே அதன் சிக்கலான் பாதையைக் கடந்து நாம் ஒவ்வொன்றாக பல மைல்கற்களை அடைகிறோம். அப்படி அடையும்போது இடையிடையே எமது இலக்குகளில் சிலவற்றை அடையும்போது நம் வாழ்க்கைப் பாதையில் நாம் கடந்துவந்த பாதையைச் சற்று திரும்பநோக்கி அசைபோட்டுக் கொள்கிறோம்.

மனித வாழ்க்கை என்பது என்ன? அனுபவங்களைச் சேகரித்து வைக்கும் ஒரு வங்கி என்று கூடச் சொல்லலாம் தானே!

சதாபிஷேகம்! ஆமாம் ஒருவர் தனது 80 அகவை பூர்த்தி செய்யும்போது அதனைச் சதாபிஷேகம் என்கிறோம். 80 வயதுஆனவர்களை இன்னும் துல்லியமாகச் சொல்வதானால் வயது10மாதம் ஆனவர்களை ஆயிரம்பிறை கண்டவர்கள் என்று சொல்லலாம். அது எப்படி ஆயிரம் பிறை கண்டவர்கள் என்கிறீர்களா?

80 வருடத்திற்கு 960 சந்திர தரிசனம். சில வருடங்களில் 13சந்திர தரிசனம் நிகழும். 80வருஷத்தில் 30சந்திர தரிசனம் அதிகமாக இருக்கும். அதையும் சேர்த்தால் 990வரும். பத்து மாதத்தில் பத்துசந்திர தரிசனத்தையும் சேர்க்கும்பொழுது 1000பிறைகள் நிறைவுபெறும். எண்பது வயது கடந்தாலே ஒருவர் பூரணவாழ்வு அடைந்து விட்டார்கள் என்று பெருமைப்படுகிறோம். எண்பது அகவை ஏன் மிகப்பெரிய சரித்திரம் என்கிறோம்? ஒருவர் 20 வயது முதல் 80 வயது வரை காணும் வாழ்வின் அனுபவங்களே அவருடையா வாழ்வில் முக்கியத்துவம் பெற்றுப் பதிவாகிறது. இந்த 60 வருட காலத்தில் ஒவ்வொருவருடைய வாழ்விலும் வெற்றிகளும், தோல்விகளும் மாறி மாறி வந்திருக்கும். எண்பது அகவை மனிதர் வாழ்ந்து விட்டால் அவர்கள் இத்தகைய தோல்விகளைகளையும், வெற்றிகளையும் தாங்கிக் கொள்ளும் மனதைரியத்தை அடைந்தவர்களாக இருப்பார்கள் என்பதுவே முன்னோர்களின் நம்பிக்கையாக இருந்தது. ஓர் எண்பதாண்டுப் பெரியவரின் வாழ்க்கை 60 ஆண்டு பேசும் சரித்திரமாக எம்முன்னால் உலவும் நிகழ்வே சதாபிஷேகம் ஆகிறது. நாம்அங்கே கொண்டாடுவது அவர்களுடைய சரீரத்தை அல்ல சரித்திரத்தையே !

சமஸ்கிருதத்தில் 60 ஆண்டுப் பூர்த்தியை சஷ்டியப்தபூர்த்தி என்றும், 70 ஆண்டுகள் பூர்த்தியை பீமரத சாந்தி என்றும், 80 வயது பூர்த்தியைச் சதாபிஷேகம் என்றும் கொண்டாடுகிறார்கள். இதுவே நான் முன்பு சொன்ன வாழ்க்கைப் பயணத்தின் வெவ்வேறு இலக்குகளுக்கான மைற்கற்கள் ஆகின்றன. ஓர் ஆண் சதாபிஷேகம் காணும்போது தம்பதி சமேதராய் இருப்பவர் சிலரே. அதனால்தான் இத்தகைய தம்பதியினரிடம் ஆசி பெறுவது மிகவும் ஒரு பாக்கியம் என்று கருதப்படுகிறது.

இதற்கு ஒரு சிறு மகாபாரத உபகதையொன்றுண்டு. தருமர் செய்த ராஜசூய யாகத்திற்கு சனகாதிகள் போயிருந்தார்கள். அவர்கள் அங்கு சென்றதன் காரணம் அவ் யாகத்திற்கு வாசுதேவர் வருவார் அங்கு அவரை வணங்கலாம் என்பதே. அவர்கள் எதிர்பார்த்தபடியே வாசுதேவரும் வந்தார் ஆனால் அவர் அவர்கள் எதிர்பார்க்காத காரியம் ஒன்றைச் செய்தார்.

அது என்ன என்கிறீர்களா?

அவர் அங்கு வந்திருந்த சில முதியவர்களைப் பாத நமஸ்காரம் செய்தார். அதைக் கண்ட சனகாதிகள் திகைத்து விட்டனர். அவர்கள் கண்ணபிரானிடமே”நாங்களெல்லாம் உங்களை வணங்குவதற்காக வந்திருக்கிறோம், ஏன் இவ்வகிலமே உங்களை வணங்குகிறது. நீங்கள் எதற்காக அம்முதியவர்களை வணங்கினீர்கள்?” என்றார்கள். அதற்கு வாசுதேவர் ” உலகில் ஆறு வகையான முதியவர்கள் வணங்கத்தக்கவர்கள் 1) தினமும் அன்னம் பாலிப்பவன் 2) வாலிப வயதிலேயே யாகம் செய்தவர் 3) ஒருநாள் அல்ல இருநாள் அல்ல வருடக்கணக்கில் தவவாழ்வை மேற்கொண்டவர் 4) கற்புக்கரசியராக வாழ்ந்தவர்கள் 5) பிரம்மத்தை அறிந்த ஞானியர் 6) ஆயிரம் பிறை கண்டவர்கள்.

இதிலிருந்து நாம் சதாபிஷேகம் காணும் பெரியவர்களின் ஆசியைப் பெறுவதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளலாம்.சரி, அப்படியான ஒரு நிகழ்வில் கலந்து கொண்டு அத்தகைய தம்பதியரின் ஆசியைப் பெற்றுக்கொள்ளும் பாக்கியம் எனக்கும் எனது மனைவிக்கும் சமீபத்தில் கிடைத்தது. செட்டிநாட்டுக்கும் எனக்கும் உள்ள சொந்தம் அலாதியானது. எனது எழுத்துக்கு வழிகாட்டியாக, மானசீகக் குருவாக இருக்கும் கவியரசர் கண்ணதாசனை ஈன்ற மண், யாதும் ஊரே! யாவரும் கேளிர் எனும் அரும்பெரும் தத்துவ வரிகளை எமக்களித்த கணியன் பூங்குன்றனார் தோன்றிய மண், புதுமையான் எழுத்துக்களுக்கு வித்திட்ட கல்கண்டை எமக்குச் சுவைக்கத் தந்த பெரியவர் தமிழ்வாணன் ஜயாவை ஈன்ற மண், மறையும்வரை என்னோடு நன்கு பழகி வந்த பதிப்புலகின் மூத்தவர், கவியரசரின் உற்ற நண்பன் வானதி திருநாவுக்கரசு ஜயா அவர்களைத் தந்த மண். என் இனிய நண்பர்களான ரவி, லேனா தமிழ்வாணன் சகோதரர்கள், அன்பு நண்பர் காந்தி கண்ணதாசன், அன்புத்தம்பி தேவகோட்டை இராமநாதன் எனப் பல சொந்தங்களை தமிழன்னை எனக்கு ஈயக் காரணமாயிருந்த மண்ணின் வாசத்தைக் கொண்டது செட்டிநாடு.

அத்தகைய நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த ஜயா தியாகராஜன் அவர்களது சதாபிஷேகக் கொண்டாட்டம் லண்டனில் “டார்ட்ஃபோர்ட் (Dartford)” எனும் இடத்தில் இருவாரங்களின் முன் நடந்தபோது ஜயாவை வாழ்த்திப்பேசும் மகிழ்ச்சியான பணியை எனக்குத் தந்திருந்தார்கள். தியாகராஜன் ஜயா அவர்கள் சுமார் 55வருடங்களுக்கு முன்னால் இலண்டனுக்கு வந்தவர்.

இலண்டன் தமிழ்ச்சங்கம், மற்றும் இலண்டன் நகரத்தார் சங்கம் அனைத்துக்கும் முதல் வித்திட்டு அனைவரையும் ஒன்றிணைப்பதில் முன்னின்று வெற்றி கண்டவர். இலண்டன் ஈஸ்ட்காம் முருகன் கோவில் அமைப்பதில் முன்னின்று செயலாற்றியவர்களில் ஒருவர். இப்படியாக ஐயா தமிழுக்கும், சைவத்துக்கும் பல சேவைகளை ஆற்றிக் கொண்டிருப்பவர். அத்தகைய பெரியவரின் சதாபிஷேக விழாவில் இச்சிறியேனுக்கு நாலுவரிகள் பேசக்கிடைத்த சந்தர்ப்பத்தை நல்கிய தமிழன்னைக்கும், என்றும் எனக்காக்கும் அண்ணமலையானுக்கும் நான் என்றென்றும் நன்றி செலுத்துவேன்.

ஐயா தியாகராஜன் அவர்களுடைய குடும்பத்தோடு, இலண்டன் நகரத்தார் சங்கத்தைச் சேர்ந்தவர்களும், இலண்டன் தமிழ்சங்கத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து இவ்விழாவினைச் சிறப்பித்திருந்தார்கள்.. அருமையான சிற்றுண்டிகளோடு, இரவுப் போசனத்தையும் அளித்து அனைவரையும் மகிழ்வித்தார்கள். அனைத்துக்கும் மேலாக ஐயாவினதும், அம்மாவினதும் ஆசிகளைப் பெற்றுக் கொண்டது ஒன்றே அனைத்துக்கும் மேலாக நாமடைந்த பாக்கியம் என்று எண்ணுகிறேன்.

மீண்டும் அடுத்த மடலில்…
அன்புடன்
சக்தி சக்திதாசன்

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.