Blog

  • இந்த வார வல்லமையாளர்! (234)

    இவ்வார வல்லமையாளாராக போராளி திரு வின்சென்ட் ராஜ் (எவிடென்ஸ் கதிர்) அவர்களை வல்லமை தேர்ந்தெடுத்து அறிவிக்கிறது. தனது உயிரையும் பணையம் வைத்து அவர் பல சமூக நலக் காரியங்களில் ஈடுபடுகின்றார்.
    சென்ற ஆண்டு நடந்த சங்கர் , கௌசல்யா – சங்கர் கொலையில் கௌசல்யாவின் தரப்பில் நீதி கிடைக்க போராடியவர் இவர்  போராடிக் கொண்டிருப்பவர் என்பதோடு அப்பெண் மீண்டும் கல்வியைத் தொடர உதவியதோடு புத்துணர்ச்சியுடன் புது வாழ்வு தொடங்கிடவும் வேலை செய்து சுய காலில் நிற்கவும் தைரியம் அளித்தவர்.
    அது மட்டுமல்லாது தமிழகத்தின் பல பகுதிகளில் தலித் மக்களுக்கு எதிராக நடைபெறும் கொலை, பென்கள் ஆலியல் வன்கொடுமை ஆகியற்றிற்கு உடனடியாக  தனது உதவிக் கரம் நீட்டி அவர்களுக்காக சட்டப்படி நீதி கிடைக்க போராடி வருகின்றார்.

    சங்கர் கொலை குறித்த நிகழ்வில் பேசிய எவிடன்ஸ் கதிர், “இளவரசனின் திவ்யா, கோகுல்ராஜின் ஸ்வாதி ஆகியோர் இன்று நம்முடன் இல்லை.. ஆனால் சங்கரை இழந்த கெளசல்யா இன்று நம்முடன் இணைந்து நீதிக்காக போராடிக்கொண்டு இருக்கிறார். தேசிய சட்ட ஆணையம் மற்றும் தேசிய மகளிர் ஆணையம் ஆகியவை சாதிய படுகொலைகளுக்கு எதிராக தனி சட்டம் இயற்ற வேண்டும் என்று பரிந்துரை செய்தும், இன்னும் இந்த அரசாங்கம் அதை நிறைவேற்றாமல் கிடப்பில்போட்டு வைத்திருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் 22 மாநில அரசுகள் தங்களின் மாநிலங்களில் சாதியப் படுகொலையில் நிகழ்வதை ஒப்புக்கொண்டபோதும், கலப்பு திருமணங்கள் அதிகம் நடக்காத மாநிலங்களில் நாட்டிலேயே இரண்டாவது இடத்தில் இருக்கும் தமிழக அரசு தங்கள் மாநிலத்தில் சாதிய படுகொலைகள் நிகழ்வதே இல்லை என்று கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 175 சாதிய படுகொலைகள் இங்கு அரங்கேறி உள்ளன. அவற்றில் கொலையுண்டவர்களில் 80% பேர், தலித் இளைஞர்களைக் காதலித்து மணமுடித்தப் பெண்களே. ஆதிக்கச் சாதியில் பிறந்திருந்தாலும் சாதி எதிர்ப்புக்காகத் தங்களின் இன்னுயிரை நீத்த அந்த பெண்கள் அனைவரும் தியாகிகள் தான்.

    உடுமலை சங்கர் நினைவு நாள் கருத்தரங்கம்

    சங்கரின் படுகொலைக்கு பிறகு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நிவாரண தொகையில் சுமார் 1.75 லட்சம் ரூபாய் இன்னும் வரவேண்டியுள்ளது. இருந்தாலும் கொலை நடந்து ஒரு வருட காலம் ஆகியும், குற்றவாளிகளுக்குப் பிணை கிடைக்காமல் பார்த்துக்கொண்ட அரசு தரப்பு வழக்கறிஞர்களை நாம் பாராட்ட கடமைப்பட்டிருக்கிறோம்” என்றார்.

     பாதிக்கபடும் பெண்களுக்கு குரம் கொடுத்தும், பட்டியல் இன மக்கள் மேலான வன்முறையையை எதிர்த்தும் செயல்பட அனைவர்க்கும் இத்தேர்வு ஊக்கமளிக்கும் என வல்லமை நம்புகிறது
    இவ்வார வல்லமையாளராக எவிடென்ஸ் கதிர் அவர்களை பரிந்துரை செய்த முனைவர் கே. சுபாஷினி அவர்களுக்கு வல்லமையின் நன்றி.இந்த வாரத்தில் தனது ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியருக்கு (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179
    Share
  • படக்கவிதைப் போட்டி 122-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    dryleaf

    பசும்புல்லின் உச்சிமீது ஒய்யாரமாய் வீற்றிருக்கும் சருகை அருகுசென்று அழகாய்ப் படம்பிடித்து வந்துள்ளார் ஒளிஓவியர் திருமிகு. ராமலக்ஷ்மி. இப்படத்தைக் கவிதைப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விரு பெண்மணிகளுக்கும் என் கனிவான நன்றி!

    பச்சிலை பழுத்து மண்ணேகுவதுபோல், உடலென்னும் துச்சிலைச் சார்ந்திருக்கும் உயிரும் காலனின் அழைப்புவரும் வேளையில் உடல்நீத்து விண்ணேகுகின்றது! இலை சொல்லும் நிலையாமைப் பாடம் மானுடர் அனைவரும் கற்கவேண்டிய ஒன்றல்லவா?

    புல்லையும் சருகையும் வைத்துப் புதுக்கவிதை புனையக் காத்திருக்கிறார்கள் புலவர் பெருமக்கள்; அவர்களை அவைக்கழைப்போம்!

    ***

    ”தாத்தனுக்கும் பேரனுக்கும் நடுவிருக்கும் நல்லுறவு, தொடக்கத்திற்கும் முடிவிற்குமான தொடர்கதையின் ஒரு தொகுப்பு” என்று வாழ்க்கையை அனுபவித்தறிந்த முதுமையொன்று இளமையிடம் இன்பமாய்ப் பகிர்ந்துகொள்வதைத் தன் கவிதையில் பதிவுசெய்திருக்கின்றார் திருமிகு. இராஜலட்சுமி சுப்ரமணியம்.

    தலைமுறை

    வையகம் என்ன வென்று
    வாழ்ந்து பார்த்து அனுபவித்த
    என் நாட்களவை நிறைவடையும்
    வயோதிக வேளை தன்னில்

    என்ன தான் உலகென்று
    வாழ்ந்து பார்க்க வந்தவன் நீ
    என் னுலகாக மாறியெனைப்
    புதுப்பித்து உயிர் ப் பித்தாய் ….

    என்னுள் மறைந் திருக்கும்
    குழந்தை யதை எழுப்பிவிட்டு
    உன்னுள் தொலைக்கச் செய்யும்
    மாயம் உந்தன் விளையாட்டு!!!!

    எத்தனை கவலைகள்
    எண் ணத்தில் இருந்தாலும்
    அத்தனையும் மறைந்து விடும்
    முத்தே உன் மொழிகேட்டு….

    தத்தித் தத்தி நடந்து வந்து
    “
    தாத்தா” யென்றழைக் கையிலே
    என் “தலைமுறை”- யே உனைவாரி
    முத்தம் வைக்கத் தோன்றுதடா

    தாத்த னுக்கும் பேரனுக்கும்
    நடுவி லிருக்கும் நல்லுறவு
    தொடக்கத் திற்கும் முடிவிற்குமான
    தொடர்கதையின் ஒரு தொகுப்பு

    ஓய்வெடுக்கும் வயதி லென்னை
    ஓயாமல் உன்தன் பின்னே
    ஓட வைக்கும் ஓவியமே கேள்

    ஓர் அவாவும் எனக்குள் ளுண்டு

    அன்று துளிர்த் தெழுந்து
    அகிலம் காண ஆசைப்படும்
    பச்சைப் புல்வெளி மேல்
    படர்ந்திடும் ஓர் சருகாய் …

    அனைத்தும் அடங்கி ஆடி ஓய்ந்து
    உடல்விட்டு எந்தன் உயிர்நீங்கும் பொழுது
    வலி யேதும் அறியாமல்; உனை நீங்கிப் பிரியாமல்
    இன்பமே எல்லை யென்று இளைப்பாற வேண்டும்.
    உன் மடிமீது நானும்
    என் தலை கோதி நீயும்!!!!

    ***

    பழுத்துவீழ்ந்த இலைகண்ட பசும்புல் இளமைச் செருக்கோடு ஏளனமாய்ச் சிரிக்க, வாழ்வின் நிலையற்ற தன்மையை புல்லுக்குப் புரியும்வண்ணம் நல்லசொல்லெடுத்துச் சருகு உரைப்பதைக் கேட்கமுடிகின்றது திருமிகு. ராதா மரியரத்தினத்தின் பாவில்.

    காலைக் கதிரவனின்
    ஒளி முத்துக்களைக் 
    வயிற்றில் தாங்கியபடி 
    வளைந்து மிளிர்ந்தன புற்கள்
    அவற்றின் கண்களிலோ பெருமிதம்
    பசுமைகளுக்கெல்லாம் தாமே
    குத்தகை எடுத்தது போலப் பெருமிதம்
    கண்ணுக்கெட்டிய இடமெல்லாம் பசுமை
    தூர நின்ற மரத்தில் 
    பழுத்துச் சுருங்கிய இலையொன்று
    இனித் தாக்குப்பிடிக்கவியலாத நிலையில்
    விடுதலையடைய வீசிய காற்று
    அதனை எடுத்துச் சென்று
    தூரத்திலிருந்த பசும் தரையில் போட்டது
    தீண்டத் தகாதவனைப் போல
    பசுமைகள் கொக்கரித்தன
    ஏளனமாகப் பார்த்தன
    இலை மெதுவாகப் பேசியது
    என் தாய் மிக வலிமை மிக்கவள்
    இன்று முளைத்து நாளை கருகும் புல்லல்லள் அவள்
    அவள் பல நூறு ஆண்டுகள் வாழ்வாள்
    பிறப்பு போல இறப்பு நிச்சயம் அது ஒரு நாள் உனக்கும் புரியும் என்றது

    ***

    ”பச்சைப் பசேல் பசுமையா? கருகிவீழும் சருகு நிலையா? இதில் எது நிலையானது…நிஜமானது? மண்ணில்தோன்றிய அனைத்தும் சருகாகி மறைவதே வல்லவன் வகுத்த விதி…இதற்கில்லை விலக்கு!” எனத் துலக்கமாய்ச் சொல்லுகின்றார் திரு. சி. ஜெயபாரதன்.

    எது நிஜம் ?

    கண்ணைக் கவரும்
    பச்சைப் புல்தளம் நிஜமா ?
    அல்லது
    கருகிப் போன சருகுதான்
    நிஜமா ?
    சிரசிலிருந்து கீழே விழுந்தால்
    உரோமத் துக்கு
    ஒரு மதிப்பில்லை !
    பச்சைக் கம்பளப் பின்புலம்
    நிஜமா ?

    போலிப் பின்புலம் !
    நீர் வறண்ட பாலையில்
    வேர் விடுமா
    ஆல மரம் ?
    பச்சைப் புல் எல்லாம் கரிந்து
    நரையாகி
    ஒருநாள் சருகாகும் !
    சருகெல்லம் மீண்டும் கண்கவர்
    பச்சை இலை ஆகுமா ?
    பிறந்த ஒவ்வொன்றும் பசுமையாய்
    இளமையில் கவர்ந்து
    முதுமையில் கூனிக் குறுகிச்
    சருகாய்ப் போகும்
    இதுவே விதி !

    ***

    ”பச்சை நிரந்தரமன்று..உன் பகட்டும் நிரந்தரமன்று” என்று பசும்புல்லுக்குச் சுடச்சுட வாழ்க்கைப் பாடம் புகட்டும் அனுபவசாலியான சருகைக் காண்கிறோம் திரு. செண்பக ஜெகதீசனின் கவிதையில்!

    நிலையல்ல…

    பச்சையாய்த்தான் இருந்தேன்,
    பழுத்துதிர்ந்து சருகனேன் இன்று..

    உயரத்திலிருந்தேன் ஒயிலாக,
    உதிர்ந்த சருகாய் இன்று..

    பரிகாசம் செய்யாதே
    பச்சைப் புல்லே,
    பச்சை நிரந்தரமல்ல
    உன்
    பகட்டும் நிரந்தரமல்ல..

    வான்மழை பொய்த்தால்
    வாடிவிடுவாய் நீ,
    மனிதன் நினைத்தால் நீ
    மாண்டுவிடுவாய்..

    காற்று வந்தது,
    கொண்டுசென்றது சருகை–
    கதைசொல்ல வேறிடத்தில்…!

    சருகையும் புல்லையும் வைத்து அருமையாய் வாழ்வியல் உண்மைகளை விளம்பியிருக்கின்றனர் நம் வித்தகப் புலவர்கள்; பாராட்டுக்கள் அவர்களுக்கு!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தேர்வாகியிருப்பது அடுத்து…

    நிலையில்லா நிலை

    இலையாய் நான் இருந்த கதை
    கேளாயோ பச்சைப் புல்வெளியே!
    பூமித்தாய் மடியினிலே விதை ஒன்று
    அழகுச் செடியாய் பிறந்ததம்மா!
    அச் செடியில் தளிர் இலையாய் இருந்து
    வந்த தங்க மகன் நானம்மா!
    மொட்டோடும், மலரோடும்

    ஆடி மகிழ்ந்ததும் நிசமம்மா!
    காயோடும், கனியோடும்
    களித்துக் கிடந்ததும் உண்டம்மா!
    மரப் பெண்ணின் மானம் காக்க
    நானே ஆடையாய் இருந்ததும் உண்டம்மா!
    காற்றுத் தேவன் ஆணைப்படி
    பூமியில் விழுந்தேன் நானம்மா!
    புதிய இலைகள் வாழ்வதற்கு
    பழைய இலை நான் உதிர்ந்து விட்டேன்!
    சருகாய் நானும் உலர்ந்து விட்டேன்!
    மண்ணில் கலந்து மறையுமுன்னே!
    மனதில் பட்டதைச் சொல்லிவிட்டேன்!
    ’நிலையாமை ஒன்றே நிலை’ என்னும்
    உண்மை நானும் உணர்ந்து விட்டேன்!
    மனிதர்கள் உணர்ந்திட நான் உரைத்தேன்!
    வாழ்ந்து முடித்த மனிதர்களே!
    வாழ்க்கைத் தத்துவம் தெளிந்திடுங்கள்
    இளைய தலைமுறைக்கு இடம் கொடுங்கள்!
    இளைய தலைமுறையே, மூத்த தலைமுறை
    இளைப்பாற, இதமாய் அவர்களைத் தாங்கிடுங்கள்! !

     ’பழையன கழிதலும் புதியன புகுதலுந்தானே’ வாழ்க்கை நியதி? அதற்கு இலைகளும் விதிவிலக்கிலையே! ’நிலையாமை ஒன்றே நிலையானது’ எனும் வாழ்க்கைத் தத்துவத்தைத் தன்கவி வழியே நம்செவிபுகச் செய்திருக்கும் திரு. பழ. செல்வமாணிக்கத்தை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

    Share
  • வல்லமையின் மறுவடிவம் பாரதி!

    கவிஞர் இடக்கரத்தான்

    1449822241-4574

    வல்லமையில் மறுவடிவம் பாரதி 

    நரிகள் வெள்ளையர்க்குத் தானவனும் பேரிடி 

    அடிமைப் பள்ளமதில் நமைத்தள்ளிப் படுத்தியவர் தமைப்பதறச் செய்தவன் – பாட்டால் – வைதவன்!
    அனைவர்க்கும் வேண்டும்தான் வல்லமை – எதிர்ப்பு அஞ்சிஓடும் வண்ணம்திடச் சொல்லமை – செய்யின் உனைத்துரத்தும் எதிர்ப்பலையை உன்காலில் விழச்செய்வாய் என்றான் – மனதில – நின்றான்!
    பாரதியின் பாட்டனைத்தும் நெருப்பு – வெள்ளைப் பதர்களுக்கு அவனென்றால் வெறுப்பு – பெரும் பாரதிரும் பாட்டாலும் பரங்கியரை ஆட்டிவைத்துக் காட்டினான் – துரத்தி – ஓட்டினான்!
    ரௌத்திரமும் கொள்ளுமெனச் சொன்னவன் – பாட்டு ரதமோட்டி வலம்வந்த தென்னவன் – பெரும் ஔவியமும் கொண்டவெள்ளை அரக்கர்தமை நடுநடுங்கச் செய்தவன் – வாகை – கொய்தவன்!
    தோட்டாக்கள் எனும்அவனின் பாட்டு – வெள்ளைத் துரைமார்க்கு வைத்ததுதான் வேட்டு – பாட்டு நாட்டோரை உந்தவைக்க நரிகளெனும் பரங்கியரும் பணிந்தார் – ஓடத் – துணிந்தார்!
    பாட்டுக்கு ஒருபுலவன் பாரதி – விடுதலைப் போரில்ரதம் செலுத்தியநற் சாரதி – எங்கள் நாட்டின்பெரும் செல்வமதை நக்குபவர் நாவறுப்பேன் என்றவன் – பாட்டால் – கொன்றவன்!
    பாரதியை நெஞ்சிலென்றும் வைப்போம் – அவன் புனிதமொழி தமைவணங்கி மெய்ப்போம் – நமை யாரெதிர்க்க வந்திடினும் அச்சமில்லை அச்சமில்லை சொல்லுவோம் – நிமிர்ந்து – செல்லுவோம்!
    06.08.2017

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் -89

    க.பாலசுப்பிரமணியன்

    கற்றலும் நுண்ணறிவும் (Learning and Intelligence)

    education-1-1-1

    பல நேரங்களில் பள்ளிகளிலும் கல்வித்துறைகளிலும் கற்றலின் குறிக்கோள் மாணவர்களை ஒரு குறிப்பிட்ட தகுதிக்குத் தயார் செய்வதாகமட்டும் இருக்கின்றது. இதற்கு மையமாக ஒரு பாடப்புத்தகமும் அதைச் சார்ந்த தேர்வுகளும்  முன்வைக்கப்படுகின்றன.  பாடப்புத்தகங்களைச் சார்ந்த  தேர்வுகளும் பொதுவாக ஒரு மாணவனின் கற்றலின் திறன்களின மதீப்பீட்டிற்காக (Assessment of skills)  நடத்தப்படுகின்றன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த  நோக்கங்கள் முற்றிலுமாக ஓரங்கட்டப்பட்டு வெறும் நினைவுகள் சார்ந்த (Memory based) மற்றும் செய்திகள் சார்ந்த (information based) தேர்வுகளாக மாறி அதன் முழுமையான பலனைத் தருவதில்லை. இதன் காரணமாக தேர்வுகளின் மதிப்பீடுகள் ஒரு மாணவனின் முழு கற்றலையோ அல்லது கற்றல் சார்ந்த திறன்களையோ  வெளிப்படுத்திடுவதில்லை. மதிப்பெண்களின் தரக்குறைவால் அந்த எண்களுக்கும் அவை வெளிப்படுத்தும் திறன்களுக்கும் எந்த சம்பந்தமும் சமன்பாடும் இருப்பதில்லை. ஒரு மாணவனின் நுண்ணறிவை வளர்ப்பதற்க்கோ அல்லது மதிப்பேடு செய்வதற்க்கோ அவை காரணமாகவோ அல்லது கருவியாகவோ அமைவதில்லை.

    எந்த ஒரு பொருள் கருத்து அல்லது  அறிவுத் துகளையோ அலசி ஆராய்ந்து அதை புத்திக்கூர்மையுடன் உபயோகிப்பதே நுண்ணறிவாகக் கருதப்படுகின்றது. ஆகவே நுண்ணறிவை வெளிப்படுத்துவதற்குத் தேவையான நிகழ்வுகள் – அறிதல்,(Cognition) புரிதல் (understanding). இடம், பொருளுக்குத் தகுந்தவாறு ஒரு கருத்தை உபயோகித்தல்,(contextiual application of knowledge) அந்த உபயோகத்திற்கான  முழுமையான பலனை  அடைதல் (Maximizing the application of knowledge)  ஆகியவையாகும். எப்பொழுது இந்த நிகழ்வுகளைச் சார்ந்த கற்றல் ஏற்படவில்லையோ அப்பொழுது கற்றலின் நோக்கம் பலவீனமாகி  “நுனிப்புல் மேய்தல்” என்ற சொற்றொடருக்கு விளக்கமாக அமைந்துவிடும்.

    பல நூற்றாண்டுகளாக “நுண்ணறிவு” (Intelligence) என்பதை வெறும் “அறிவுசால்  நுண்ணறிவாகவே”  (Cognitive Intelligence) கருதிவந்தனர். அறிவு சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில் ஒருவர் காட்டும் திறனை  வைத்து அவர்களுடைய  நுண்ணறிவு மதிப்பிடப்பட்டு அதற்கான குறியீடுகள்  Cognitive intelligence scales ) தயாரிக்கப்பட்டன. இதன் காரணமாக குறிப்பிட்ட அறிவுத்திறன்களை வெளிப்படுத்த முடியாதவர்கள் நுண்ணறிவில் குறைந்த தகுதி உள்ளவர்களாகக் கருதப்பட்டு சிறப்பான வேலைகளுக்கும் செயல்களுக்கும்  தகுதியற்றவர்களாகக்  கருதப்பட்டனர்.. “நுண்ணறிவு எண்கள்”(Cognitive Index)  ஒரு மனிதனின் சிறப்பை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன.

    பல ஆராய்ச்சிகளின் காரணமாக, ‘நுண்ணறிவு’ என்பது வெறும் ‘அறிவுசால்” வெளிப்பாடு அல்ல என்றும்   அதிகமான நேரங்களில் அது ‘உணர்வுசால்”  நிகழ்வென்றும் அறியப்பட்டு “உணர்வுசால்  நுண்ணறிவுக்கான ” (Emotional Intelligence) விளக்கங்களும் அதற்கான குறியீடுகளும்  கண்டுபிடிக்கப்பட்டன. நடைமுறையில் “உணர்வுசால் நுண்ணறிவில்” மேம்பட்டவர்கள் ‘அறிவுசால் நுண்ணறிவில் மேம்பட்டவர்களைக் காட்டிலும் திறனுடையவர்களாகவும் வாழ்க்கைப் பாதையில் வெற்றிப்படிகளை எளிதாக அடைபவர்களாகவும் அறியப்பட்டனர். ஆகவே  கல்வி பாடத்திட்டங்களில் “உணர்வுசால் நுண்ணறிவை” வளர்ப்பதற்கான  வழிகளையும் கோட்பாடுகளையும், நடைமுறைத் திட்டங்களையும் கொணருவதற்க்கான முயற்சிகளின் அவசியம் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

    உணர்வுசால் நுண்ணறிவு பற்றிய ஆராய்ச்சிகளின் விளக்கத்தையும் கற்றலுக்கும் வாழ்க்கை மேம்பாட்டிற்கும் அதன் பயன் பற்றிய பல மேபட்ட விளக்கங்களை டேனியல் கோல்மான் என்ற அறிஞர் மற்றும்  ஆராய்ச்சியாளர் விளக்கமாக எழுதி  உள்ளார். ஒரு தனி மனிதனின் தன்னறிவு, தன்னடக்கம், முயற்சிகள், உறவுமுறைகள், செயல் பரிமாணங்கள், வாழ்க்கைப் போராட்டங்கள், வெற்றி தோல்விகளை எதிர்கொள்ளும் மனப்பாங்கு, சமூக உள்ளுணர்வுகள் போன்ற பல பரிமாணங்கள் இந்த உணர்வுசால் நுண்ணறிவால்  பாதிக்கப்படுகின்றன.

    எனவே கற்றல் நடக்கும் காலங்களில் அதற்கான பாடத் திட்டங்கள், பாடம் நடத்தும் முறைகள், அதற்கான பயிற்சிகள் ஒரு மாணவனின் உணர்வுகளை வலுப்படுத்துவதாகவும், வளப்படுத்துவதாகவும், மேம்படுத்துவதாகவும் அமைய வேண்டும். இவைகள் வெறும் புத்தகக் கட்டமைப்புக்குள் இருக்கும் எழுத்துக்களுக்கும் பின்னப்படுவதில்லை. இதனால்தான் “பாடத் திட்டங்களும், புத்தகங்களும் ஒரு விமானத்திற்குத் தேவையான ஓடுகளத்தைப்  போல் கருதப்படுகின்றன.” எவ்வாறு ஒரு விமானம் ஓடுகளத்தை    உபயோகப்படுத்தி வானில் பறந்து உயர்காணலைத் தேடிச்  செல்கின்றதோ அதே போல் கற்றலின் நோக்கம் புத்ததகங்களையும் பாடங்கள் நடத்தப்படும் முறைகளையும் உபயோகப்படுத்தி நுண்ணறிவின் உச்சங்களைத்  வேண்டும் இந்த நுண்ணறிவு அறிவுசால் நுண்ணறிவு மற்றும் உணர்வுசால் நுண்ணறிவு ஆகிய இரண்டு வளங்களின் இனப்பிப்பில் வளர்ந்து வளப்பட்டு மேன்மை அடைதல் வாழ்க்கையின் வெற்றிக்கு மிக்க அவசியம்.

    நுண்ணறிவின் மற்றொரு பரிமாணமாக ‘திறன் நுண்ணறிவு’ (Skill Quotient ) கருதப்படுகின்றது . ஒரு மாணவன் தன்னுடைய அறிவுசால் நுண்ணறிவோடும், உணர்வுசால் நுண்ணறிவோடும் எவ்வாறு தன கருத்து சார்ந்த மற்றும் கைத்திறன் சார்ந்த நுண்ணறிவை  வெளிப்படுத்துகின்றானோ  அவனுக்கு  வெற்றிப்படிகளின் பயணம் மிகவும் எளிதாக அமைகின்றது. அறிவும், உணர்வும் சார்ந்த நுண்ணறிவுகள் எவ்வளவு இருந்தாலும் அவைகள் அவனுடைய செயல் பரிமாணங்களில் வெளிப்படவில்லையென்றால்  விழலுக்கிறைத்த நீரைப்போல் வீணாகிவிடுகின்றது. ஆகவே கற்றலின்  முழுமையின் வெளிப்பாடாக செயல்திறன்கள் அமைய வேண்டும். எப்போது இந்த செயத்திறன்கள் அவனுடைய அறிவு மற்றும் உணர்வுசால் நுண்ணறிவுகளோடு இணைந்து ஒளிர்கிறதோ அப்பொழுது அவனுடைய முழுத்திறனும் உலகுக்கு வெளிச்சம்போட்டுக்  காட்டப்படுகின்றது. ஆகவேதான் பல நாட்டுக் கல்வித்திட்டங்களில் இந்த மூன்று நுண்ணறிவுகளின் சங்கமத்தை (IQ, EQ and SQ) உயர்த்துவதற்கான முயற்சிகள் தளர்வின்றி எடுக்கப்படுகின்றன. நம்முடைய பாடத்திட்டங்களும் அதன் வரைபாடுகளும் இதைக் கருத்தில் கொள்ளுதல் இன்றியமையாததாக ஆகின்றது.

    தொடருவோம்

    Share
  • ஊர் நினைப்பு

     

    ரா.பார்த்தசாரதி

     

     

    நான் இல்லாமலேயே  எங்கோ வெகு தூரத்தில் இருக்கிறதே

    என் கால் தடம் படாத அந்த சவுக்கு காடும் இருக்கின்றதே

    மழை வராத காலங்களில் மணல் சுடுவதும் தெரிந்ததே

    கடும் வெய்யிலில் எனக்கு நூங்கும், இளநீரும் தாகம்தீர்த்ததே!

     

    சப்பாத்தி முள்ளில் பெயரெழுதிய அந்த கள்ளிச் செடி வரவேற்றதே

    நான் வளர்த்த தென்னையும்,மாமரமும் காயும்,கனியுமாய் நின்றதே

    ஊர் அம்மன் கோவில் குகை என் குரலை அன்றும் எதிரொலித்ததே

    ஏரியும், குளமும் வறண்டு பாலைவனமாய் காட்சி அளித்ததே!

     

    அன்று மழை பெய்து பயிர்கள் யாவும் பசுமையாய் காணப்பட்டதே

    மழை இன்மையால் உழவு மாடுகளும்,பசுக்களும் காணாமல் போனதே

    விவசாய  நிலங்களும் வீட்டு  மனைகளாக கூறு போடப்பட்டதே

    மக்கள் வாழ்வாதாரம் கேள்வி குறியாய் ஆனதே!

     

    ஏதோ ஒருநாள் குலதெய்வம் வேண்டுதலுக்காக ஊர்  கூடுகின்றதே

    அன்று ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து விழாவிற்கு உதவி செய்கின்றதே

    யாதும் ஊரே ! யாவரும் கேளிர் என்ற பழமொழி ஞாபகம்  வருகின்றதே

    ஊர் விட்டு, நகரில் வசித்தாலும் ஒரு நாள் ஊர் நினைப்பு   மனதில் தோன்றுதே !

     

     

    Share
  • நட்பு தினம்

    ரா.பார்த்தசாரதி              

    நட்பு என்பது இருபாலார்க்கும், மாநிலங்களுக்கும் பொது 

    ஒருவர் பொறை, இருவர் நட்பு என்பது  பழமொழி 

    நல்லவர்களது  நட்பு என்பது  வளர்பிறை போன்றதாகும்

    தீயவர்கள்     நட்பு  என்பது  தேய்பிறை  போன்றதாகும் !

     

    நட்பு  என்பதின்   அடிப்படை அன்பும், நம்பிக்கையுமே 

    பழக, பழக  ஒருவரையொருவர் புரிந்துகொள்ளும் தன்மையே,

    பண்புடையோர் நட்பு என்றும்  இன்பம் தரும் 

    பண்பிலார்  நட்பு  என்றும்  துன்பத்தை  தரும் !

     

    ஒத்த உணர்ச்சியே  ஒருவனின்  நட்பினை பெருக்கும் 

     மாறுபட்ட  உணர்ச்சியே  ஒருவனின் நட்பினை விலக்கும் 

     ஆடை  அவிழும் போது மறுகை  தானாகவே பிடித்திழுக்கும் 

    நல்ல நண்பனின் உதவியும் தானே தேடி வரும் !

     

    நட்பிற்கு இலக்கணம், பிசிராந்தையார், கோப்பெருங்சோழன்

     நட்பிற்கு இலக்கணம் ஒளவையாரும், அதியமானும் 

    உலகில்  தவிர்க்க முடியாதது  பந்தமும், பாசமும்,

    உலகில்   பிரிக்கமுடியாதது  உறவும்,  நட்பும்  !

                 

    அண்டை மாநிலத்துடன் நட்பாய் இருந்தால் பிரச்சனைகள் தீரும் 

    ஒருவர்க்கொருவர் நேசமும், நட்பாய் இருந்தால் நன்மைகள் பல.

    யாதும் ஊரே, யாவரும் கேளிர் ! என்பது   பழமொழியாகும் 

     நட்பு தினத்தன்று, நட்பை பாலமாக, அமைப்பதே புது மொழியாகும் !

     

     

     

    Share
  • பெருந்துயர்

     

     

    மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

     

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

     

    unnamed

     

     

     

     

     

     

     

     

    கடுமை யாக நடத்திய தென்னை

    இவ்வையகம் ! பெருந்துயரே !

    என்றும் அழாத குணத்தவன் நான் !

    தாழ்வாக மதித்த தென்னை

    இவ்வையகம் ! பெருந்துயரே !

    இப்போ தவளை நான்

    இழந்து விட்டேன் நிச்சயமாய் !

    இனிக் காணப் போவ தில்லை.

    இழுத்து வர வேண்டும் என்னிடம்

    இனி அவளை ! பெருந்துயரே !

     

    நினைவுக்கு வரும் நாங்கள் செய்த

    நல்வினைகள் யாவும் !

    தனித்துப் போன

    தன்னைப் பற்றி மட்டும்

    ஒன்றும் அறியா தவளா அவள் ?

    அழைத்துவா மீண்டும் அவளை

    என்னிடம் !  ஏனெனில்

    எல்லாரும் அவளைக் காணலாம்.

     

    அவள் இன்றேல் வரும் துயர் எனக்கே !

    நினைவுக்கு வரும் நாங்கள் செய்த

    நல்வினைகள் யாவும் !

    அவளுக்குத் தெரியும்

    அவள் மட்டும் தனித்துப் போனதை !

    அழைத்து வா அவளை,

    என்னிடம்

    அனைவரும் காண !

    அவள் இன்றேல் துயர்தான் எனக்கு !

    துயர்தான் ! துயர்தான் !

    துயர்தான் !

     

     

     

     

    Share
  • ஒரு வரிக் கரும்பு

     

    ராஜகவி ராகில்

     

     

    * முள்ளில் பனித்துளி

    * சிலந்தி வலையில் பட்டாம் பூச்சி

    * குளத்தில் நிலா அசைகிறது

    * உதிர்ந்து கிடந்த இலையில் பிணவாடை

    * குடத்தினுள் காற்று

    * அரிசிப்பானைக்குள் கடன்

    * அடுப்பில் எறும்புகள்

    * விளக்கில் இருள்

    * வேப்பமரத்தின் கீழ் மிட்டாய்க்காரன்

    * காலையில் உதிர்ந்து கிடந்தது கனவு

    * தேநீர்க் கடைக்காரன் கோபக்காரன்

    * கொக்கு இருளில் கறுப்பு

    * ஆற்றில் விழுந்தும் நிழல் நனையவில்லை

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (67)

    நிர்மலா ராகவன்

    காலம் மாறிப்போச்சு

    நலம்-4
    ஒரு தலைமுறைக்குமுன் இருந்ததைவிட தற்போது குடும்பச்சண்டை, விவாகரத்து இதெல்லாம் அதிகரித்துவிட்டது என்று சமூக நல இயக்கத்தைச் சார்ந்த பெண்மணி ஒருவர் மேடையில் முழங்கினார். முன்பெல்லாம் பெண்கள் `கணவனே கண்கண்ட தெய்வம்’ என்று அமைதியாக இருந்தார்கள், இப்போது அவர்களுக்குப் பொறுமையும், விட்டுக்கொடுக்கும் குணமும் போய்விட்டன என்று காரணம் காட்டிப் பழித்தார்.

    பெண்கள் மோசமாகிவிட்டார்களா, அல்லது ஆண்கள்தாம் கடவுளைப்போல் இல்லையா? ஆராய்வோமா?

    அன்பு என்பது..

    காதலியோ, மனைவியோ, தன்னைத்தவிர வேறு எந்த ஆணுடனும் பழகக்கூடாது என்று மறைமுகமாகவோ, நேரிடையாகவோ தடைவிதிக்கும் ஆண் அவள் தனது உடைமை என்று எண்ணுகிறான். தான் சொல்வதையெல்லாம் கேட்டு அதன்படி நடந்தால்தான் அவளுக்குத் தன்மேல் அன்பு இருக்கிறதென்று அர்த்தம் என்று தவறாக நினைக்கிறான். அவனை மீறினால், உணர்ச்சிபூர்வமாகவோ, உடலாலோ வதைப்பதும் அவனுக்குச் சரியென்றே படுகிறது.

    பெண்களுக்கு உணர்ச்சிகளா? சேச்சே!

    சமீபத்தில் மலேசிய சட்டசபையில் ஓர் அரசியல்வாதி கூறியிருந்தார், கணவன் இன்னுமொரு பெண்ணை மணக்க ஒப்புதல் தராத மனைவி அவனை உணர்ச்சிபூர்வமாக வதை செய்கிறாள் என்று!

    இவரைப் போன்றவர்களுக்கு ஆண் என்ன செய்தாலும், `சரி’ என்று சொல்கிற பெண்கள்தாம் நல்லவர்கள். அதாவது, பெண்கள் சுயமாகச் சிந்திக்கக்கூடாது, அவர்களுக்கு உணர்ச்சிகள் என்று இருக்குமாயின், அவைகளை மறைத்துக்கொள்ள வேண்டும், அல்லது குழிதோண்டிப் புதைத்துவிட வேண்டும். அப்போதுதானே ஆண்களின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே அவர்களை வைத்திருக்க முடியும்!

    பெண் வெறும் போகப்பொருளாக இருந்த காலம் போய்விட்டது. தம் தாய்மார்களும், அத்தை, பெரியம்மாக்களும் வாழ்ந்து காட்டியதைப்போல் இன்றைய இளம்பெண்களுக்கு வாழ விருப்பமில்லை. இருப்பினும், கட்டுப்படுத்தும் ஒருவரை – காதலனாகவோ, கணவனாகவோ — தம்மையறியாது தேர்ந்தெடுத்து விடுகிறார்கள்.
    நாமிருவர், எப்போதும்!

    காதலர்களோ, புதிதாக மணம் புரிந்துகொண்டவர்களோ, எப்போதும் ஒன்றாக இருப்பதுதான் அன்பின் வெளிப்பாடு என்று நினைக்கிறார்கள். `இவருக்குத்தான் தான் எவ்வளவு தேவைப்படுகிறோம்!’ என்று ஆரம்பத்தில் பெண்ணுக்கு ஏற்படும் பெருமை நாளடைவில் பொறுக்க முடியாத பாரமாகிவிடுகிறது.

    ஒன்றாகப் போகும்போது செல்ல வேண்டிய இடத்தையும், செய்ய வேண்டிய காரியத்தையும் ஒருவரே முடிவு செய்யும்போது, நாளடைவில் அடுத்தவருக்கு அதிருப்தி பிறக்கிறது.

    `நீ எங்கே போயிருந்தாய்?’

    `நான் உன்னுடன் இல்லாதபோது என்ன செய்கிறாய்?’

    இப்படி அடிக்கடி நேரிலோ, தொலைபேசிவழியோ ஒருவர் விசாரிப்பது அவர்களது பாதுகாப்பின்மையைத்தான் குறிக்கும். தன் காதலுக்கு உரியவர் தன்னைவிட்டுப் போய்விடுவாரோ என்ற பயம்தான் இப்படியெல்லாம் ஒருவரை அலைக்கழிக்கிறது. இது கண்டிப்பாக அன்போ, பரிவோ இல்லை. கட்டுப்பாடுதான்.

    கதை

    எப்போதும் காதலி தன்னுடனேயே இருக்கவேண்டும் என்று நினைத்தான் நாதன். அதனால் அவளுக்கு நெருக்கமானவர்களுடன் இருக்கும் தொடர்பை முறித்துவிடுகிறான். அப்படியே அவள் பிறருடன் தொடர்பு வைத்துக்கொண்டிருந்தாலும், அவனுக்குப் பிடிப்பதில்லை. `நாமிருவர் மட்டும் தனியாகப் போகலாமே! எதற்குப் பிறரை இழுக்கிறாய்?’ என்று நைச்சியமாகப் பேசுகிறான். தகராறு செய்கிறான்.

    பிறரிடமிருந்து ஒருவரைத் தனிமைப்படுத்துவதும், கட்டுப்படுத்துவதும் வதையின் ஆரம்பம். வதைப்பவனுக்கு அதிகாரம் கூடுகிறது.

    `இவர் சொல்வதும் நியாயம்தானே!’ என்றெண்ணியோ, இல்லை, `எதற்கு வீண் சண்டை!’ என்று நினைத்தோ, அவளும் விட்டுக்கொடுக்கிறாள்.

    அவனுடைய ஆக்கிரமிப்பால் விளையும் சுதந்திரமின்மை பொறுக்க முடியாது போகிறது. ஆனால், யாரிடம் போய்ச் சொல்வது என்று புரியாது, மேலும் ஒடுங்கிப்போகிறாள்.

    எப்போதாவது தோழிகளுடன் வெளியே போகையில், பழைய கலகலப்பு குறைந்திருக்கிறது. அவர்களிடம் அவனைப்பற்றித் தரக்குறைவாகப் பேசவும் முடிவதில்லை.

    எந்தவித வதையை அனுபவிப்பவர்களும் தம்மை வதைப்பவர்களிடம் விசுவாசமாக இருப்பார்கள்.

    `என்னிடம் சொல்லாது, உன் ஃப்ரெண்ட்ஸோட ஊர் சுத்தினியா? என்னைப்பத்திதானே பேசினீர்கள்?’ என்று நாதன் அடித்தபோது கலக்கம் வந்தது.
    உடனே அவன் மன்னிப்பு கேட்டு, கொஞ்ச ஆரம்பித்தான். அவள் மனம் சமாதானப்பட்டது. அதுதான் அவள் செய்த தவறு.

    வதை ஆரம்பிக்கையிலேயே அதைத் தடுக்க முயல வேண்டும். இல்லாவிட்டால், அது தொடரும். முற்றிவிடும்.

    `உங்களுக்கும் மகிழ்ச்சியும் பாதுகாப்புமாக வாழ உரிமை இருக்கிறது என்று பெண்களுக்கு அறிவுறுத்த வேண்டும். பெண்களுக்குப் பிடித்தம் இல்லாததைச் செய்யச் சொல்லிக் கட்டாயப்படுத்த எவருக்கும் உரிமை கிடையாது,’ என்று அறிவுரை வழங்குகிறார் பெண்கள் ஆதரவு இல்லத்தை நிர்வகிக்கும் ஒரு பெண்மணி.

    தொடருவோம்

    Share
  • சந்தோஷம் என்றும் நம் பக்கம்

     

    ரா. பார்த்தசாரதி

     

    சந்தோஷம்  என்றும்  நம்  பக்கம்,

    சந்தோஷம்  என்றாலே மனிதனுக்கு  பாதி  பலம் ,

    அது  இல்லையெனில்  மனிதனுக்கு ஏது  பலம்,

    சந்தோஷம்  நாம்  வாழ்க்கையில் தேடுவது ,

    எப்பவும்  எல்லோர்  நெஞ்சுக்குள் நினைப்பது

    போதுமென்ற  மனம் இருந்தால் தானே வருவது !

    சூரியனைக்  கண்டால்  தாமரை

    சந்தோஷத்துடன்  மலர்ந்துதானே பழக்கம்,

     

    கார்முகில்கள்  திரண்டு  வந்து

    மழை தந்துதான்  பழக்கம்,

    மழையைக்  கண்டால்  மயிலுக்கு

    மகிழ்ச்சியுடன்  ஆடித்தான்  பழக்கம்,

    காட்டில்  உள்ள  குயிலுக்கோ

    சந்தோஷத்துடன்  கூவிதான்  பழக்கம்.

     

    கிடைத்ததை  மனதிற்கொண்டு  நடப்பவை

    எல்லாம்  நன்மைக்கே  என  தெளிந்தால்

    வாழ்வில்  சந்தோஷம்  என்றும் நம் பக்கம்.!

    Share
  • குறளின் கதிர்களாய்…(178)

    –செண்பக ஜெகதீசன்

    பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
    எண்ணிய தேயத்துச் சென்று. (திருக்குறள் -753: பொருள் செயல்வகை) 

    புதுக் கவிதையில்…

    சேரும் செல்வமோர்
    அணையா விளக்கு…
    அது
    சேர்ந்தவர்க்கு,
    எண்ணிய தேசமெலாம் சென்று
    இருளெனும் பகையழிக்கும்…! 

    குறும்பாவில்…

    செல்வமெனும் அணையா விளக்கு,
    சேர்ந்தவர் விரும்பும் தேசமெலாம் சென்று
    இருளாம் பகையை இல்லாமலாக்கும்…! 

    மரபுக் கவிதையில்…

    இருளை யகற்றி ஒளிகொடுக்கும்
         -என்றும் அணையா விளக்காகி,
    பொருளது அதனைச் சேர்ப்பவர்க்குப்
        -பெரிதும் துணையாய் வந்திடுமே,
    விரும்பும் தேசம் எங்கேயும்
    -விரைந்தே உடனே சென்றாங்கே
    பொருந்தா இருளாம் பகையழித்துப்
       -போகுமே பொருளாம் விளக்கதுவே…! 

    லிமரைக்கூ…

    அணையா விளக்காகும் பொருளே,
    அதுவே விரும்பும் தேசமெலாம் சென்றாங்கே
    போக்கிடும் பகையெனும் இருளே…! 

    கிராமிய பாணியில்…

    சேருசேரு செல்வஞ்சேரு
    நல்லபடியா செல்வஞ்சேரு…
    சேருஞ்செல்வம் ஒருவெளக்கு,
    சூறக்காத்து அடிச்சாலும்
    அதுவொரு அணையாவெளக்கு…
    அந்த வெளக்குதான்
    விரும்புற
    அந்நிய தேசமெல்லாம் போயி
    பகங்கிற இருட்டப்
    பக்குவமா அழிச்சிடுமே…
    அதுக்கு,
    சேருசேரு செல்வஞ்சேரு
    நல்லபடியா செல்வஞ்சேரு…!

     

     

     

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 237

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – கட்டுரை காதை

    திருத்தங்காலில் பராசரன் தங்கிய காலத்து நிகழ்ந்தவை

    செங்கோல் கொண்ட பாண்டியனின்
    திருந்திய செயல் உடைய
    அந்தணர்கள் வசிக்கும் ஊர் திருத்தங்கால்…
    அவ்வூரில் உள்ள
    பசுமையான தழைகளால் நிறைந்த
    அரசமரத்தின் கீழ்த்
    தண்டையும் கமண்டலத்தையும் வெண்குடையையும்
    பண்டங்கள் உடைய சிறிய பொதியையும்
    மிதியடியையும் வைத்திருப்பவன் அவன்…

    குடிமக்களைக் காக்கும் வெண்கொற்றக் குடையும்
    அறநெறியால் கொண்ட வெற்றியும் உடைய
    மேலானவன் வாழ்க…
    கடலின்கண் பகைவர் தம்மை அழித்த
    மன்னவன் வாழ்க…
    இமயமலையில் வில்லெழுதிய
    காவலன் வாழ்க…
    பொலிவும் குளிர்ச்சியும் பொருந்திய
    பொருநையாற்றினையுடைய
    பொறையன் வாழ்க…!

     

     

    Share
  • தற்காலப் பெண்ணின் சமூகச் சிக்கல்களும் தீர்வுகளும்

    -கு.கோபாலகிருஷ்ணன்

    முன்னுரை

                    இக்கட்டுரை, மரபுகாலம் தொட்டுத் தற்காலம் வரை சமுதாயத்தில் பெண்ணிய வளர்ச்சியும்  அதே நிலையில் அவர்களுக்கு ஏற்படுகின்ற சிக்கல்களையும் காண்கின்றது. தீர்வுகள் என்பதைச் சிக்கல்களிலிருந்து மீட்டுருவாக்கம் செய்யலாம் என்னும் பாங்கில் அமைந்திருக்கின்றது.

    சமுதாயம், ஓர் விளக்கம்

                 சமுதாயம் என்பது பல்வேறு சமூக நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாக விளங்கும் சமூகக் கூட்டமைப்பு என்பர்.  தன்னுடைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், இனப்பெருக்குவதற்கும், புதிய தேவைகளை உருவாக்கம் செய்வதற்கும், காரணிகளை உற்பத்தி செய்யும் கூட்டியக்கமே சமுதாயம் ஆகும்.

    பெண்ணியம் – விளக்கம்

                    பாலினப்பாகுபாடு தொடர்பானச் சமூகப்பண்பாட்டு வேர்களை இனம் கண்டு கொள்ளவும், குறிப்பாகப் பெண்களுக்கு எதிரான அடக்குமுறை, சுரண்டல் முறைகளை உணர்ந்து கொள்ளவும், பெண்ணியம் தெளிவான வரையறையை வகுத்துக் கொள்கிறது. பெமினிசம் (Feminism) என்ற ஆங்கிலச் சொல் ‘பெமினா’ (Femina) என்ற இலத்தீன் சொல்லிலிருந்து மருவி வந்ததாகும். ‘பெமினா’ (Femina) என்ற சொல்லுக்குப் பெண்ணின் குணாதிசயங்களைக் கொண்டுள்ளது என்பது பொருளாகும்.  முதலில் இச்சொல் பெண்ணின் பாலியல் குணாதிசயங்களைக் குறிப்பிட்டு வழங்கப்பட்டுப் பின்பு பெண்களின் உரிமையைப் பேசப் பயன்பட்டது.

                    1890-க்கு முன்பு வரை உமனிசம் (Womanism) என்ற சொல் பெண்ணின் உரிமைப் பிரச்சனையும் அதன் அடிப்படையில் எழுந்த போராட்டத்தையும் உணர்த்தப் பயன்பட்டது. 1890லிருந்து உமனிசம் என்ற சொல்லினடத்தைப் பெமினிசம் (Feminism) என்ற சொல் பெற்றது.

                    பெண்ணியம், பெண்ணியல், பெண்நிலைவாதம், பெண்ணுரிமை எனப்பலவாறு ‘பெமினசம்’ (Feminism) என்ற ஆங்கிலச் சொல் தமிழில் மொழி பெயர்க்கப்படுகிறது. எனினும் ‘பெண்ணியம்’ என்ற சொல்லே இன்று வழக்கில் நிலை பெற்று வருகின்றது.

                    ‘போர்லடபன்ச்’ என்ற அறிஞர் பெண்ணியம் என்பது பெண்ணின் எல்லாச் சிக்கல்களையும் புரிந்து கொண்டு அவற்றை நீக்க முயல்வதாகும்.  அவற்றின் வழியாக உலகளவில் அரசியலிலும், பண்பாட்டிலும், பொருளாதாரத்திலும், ஆன்மிக நெறியிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றார். மேலும் பெண்ணியம் என்பது எல்லாப் பெண்களையும் அரசியல் மற்றும் பிற அடிமைத்தளையிலிருந்து விடுவித்தல் என்ற கொள்கை உடையதாகும்.  இளம்பெண்கள், தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள், ஏழைப் பெண்கள், தன்பால் சேர்க்கையுடைய பெண்கள், வயதான மூதாட்டிகள் மற்றும் பொருளாதார நிலையிலும், மரபு மணமுறையிலும் துன்புறும் பெண்கள் ஆகிய அனைவருக்கும் விடுதலை பெற்றுத் தருவதே பெண்ணியத்தின் தலையாய இலக்காகும்.

    சமுதாயச் சிக்கல்கள்

                    சமுதாயத்தில் மரபுகளைத் தொட்டுப் பெண்ணைத் தெய்வமாகவும், தாயாகவும் போற்றும் முறைகள் எண்ணற்ற சிக்கல்களையும், கொடுமைகளையும் பெண்ணுக்குப் பரிசாக கொடுக்கிறது என்பதை மறுக்க முடியாது எனலாம்.

    1)            தொழிற்புரட்சி சிக்கல்கள்
    2)            மேற்கத்திய உருவாக்கச் சிக்கல்கள்
    3)            நகரிய உருவாக்கச் சிக்கல்கள்
    4)            புதுமையாக்க நிலைகள்
    5)            சமூகச் சீர்திருத்த இயக்கக் கூறுகள்
    6)            நாட்டு விடுதலை இயக்கங்கள்
    7)            சமநிலை இன்மை
    8)            பாலுறவுச் சிக்கல்கள்
    9)            பெண்மீதான வன்முறைகள்
    10)          குழந்தை முதல் முதியோர்வரை ஏற்படும் இன்னல்கள், போராட்டங்கள்

    ’பெண் என்று பிறந்து விட்டால். பெரும் பிழை இருக்குதடி’ என்றான் பாரதி. இந்த ஒப்பற்ற பிறவியைத்தான் இந்த ஆண் சமுதாயம் பெரும் அடிமைப்படுத்துகிறது.

                    உற்பத்திப் பொருளாதார அமைப்பிலே (Productive Economy) ஆண், பெண் இருபாலரின் பணிகள் தனித்தனியாக வரையறுக்கப்பட்டதனால், குடும்பம் பொருள் உற்பத்தி செய்யும் களமாக விளங்கியது.  இவற்றின்வழிப் பெண்களுக்குச் சிக்கல்கள், போராட்டங்கள் எழலாயின. இந்தியாவை ஆங்கிலேயர் ஆட்சி செய்யத் தொடங்கிய நாள்முதல் மேனாட்டுக் கல்விமுறையும், பண்பாடும், தொழில் நுட்பங்களும் உற்பத்தி முறைகளும் ஏற்படுத்தப்பட்டன. ‘மகளிர் ‘ பலர் கற்கத் தலைப்பட்டனர்.  மேற்கத்தியப் பண்பாடான நடை, உடை, பாவனை, பழக்கவழக்கங்கள் இந்நாட்டிலும் வளரத் தொடங்கின. இதன் விளைவால் சமூகச் சிக்கல்கள், குற்றங்கள் பெருகின என்பது குறிப்பிடத்தக்கது.  நகரிய ஆக்கத்தால் கிராமங்களில் செய்து வந்த உழவுத் தொழில்களையும், கைத்தொழில்களையும் கைவிட்டு ஆண், பெண் இரு பாலரும் நகரங்களை நோக்கி நகர்ந்தனர். இவற்றின் வழியாக வளர்ச்சி அதே அளவுக்குப் பெண்களின் மீதான பல்வேறு சிக்கல்கள், கொடுமைகள் யாவும் வளர்ச்சி அடைய தொடங்கின.

                    கால நிலைகளுக்கு ஏற்ப கருத்துகளும் உருமாறின, புதிய வாழ்க்கை முறைக்கு வழி வகுத்தன. அரசியல், சமூகம், சமயம் ஆகிய அனைத்துத் துறைகளிலும் புதுமைகள் தழைத்தன. அனைத்துத் துறைகளிலும் பெண்கள் நெகிழ்ச்சி அடையும் அளவுக்கு வளர்ச்சிப் பெற்றனர்.  வேத காலத்திலும், பழந்தமிழர் காலத்திலும், உரிமையோடு கடமையாற்றிய மகளிர் உரிமையை இழந்தனர் என்பதும் நினைவுக் கூரத்தக்கது.

    1)            குழந்தைமணம்
    2)            கொடுமை
    3)            விதவைத் துயர்
    4)            உடன்கட்டை ஏறுதல்
    5)            பலதாரமணம்
    6)            பிற மூடப் பழக்கங்கள்
    7)            குழந்தைப்பேறு இன்மை பிற

    மேற்கண்ட கொடுமைகள் எல்லாம் உடைத் தெரிந்து, எதிர்நீச்சல் போட்டு வெற்றிக் கண்டு வரும் வரலாறு குறிப்பிடத்தக்கதாகும்.

    தற்காலச் சமூகம்

                    இன்னும் பிறந்தக் குழந்தை பெண் என்பதால் முயற்சியில்லா மூடர்கள் சலிப்பும் வெறுப்பும் அடைந்து தன்னம்பிக்கையை இழக்கிறார்கள். மேலும் காலங்காலமாய்ப் பாலியல் சிக்கல்களுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இவற்றிற்குக் கடுமையான சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும். பழக்க வழக்கங்களிலும் வாழ்க்கை முறைகளிலும் கலந்து போன ‘இன்டர்நெட்’ அறிவியல் வளர்ச்சி என்பதில் ஆபாசத்தை உட்படுத்துவது நாட்டுப் பண்பாட்டை முற்றிலும் அழித்து வருவதை பெண்கள் (இளைஞர்கள்) உணர்ந்து நடக்க வேண்டும்.

                    பெண்கள் மதிப்பும், மரியாதையும் உரிய தொழில்களைத் தேர்வு செய்து பணியாற்றிட வேண்டும். கலைத்துறை, உழைப்பு, பணியகம் இவற்றில் உடலியல் சார்ந்த அநீதிகள் தவிர்க்கப்பட வேண்டும். சமூகத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள ‘சாதீயம்’என்ற ‘தீ’ அழிக்கப்பட வேண்டும். அது எரியும் வரைச் சமுதாயமும் எரிந்து கொண்டிருக்கும்.

                    ஆண். பெண்ணின் உயர்வுக்கும், வளர்ச்சிக்கும் என்றென்றும் வழிவகை செய்ய வேண்டும்.  பத்துமாதம் சுமந்து பெற்ற ஒப்பற்ற தெய்வம் ‘தாய் ’ ஒரு பெண்தானே என்பதை உணர்ந்து அனைவரும் வாழச் சமுதாயம் வளரும்.

    Share
  • நமது சூரிய மண்டல எல்லை தாண்டிய நாசாவின் இரண்டு விண்கப்பல்கள் அடுத்த பரிதி மண்டலம் நோக்கிப் பயணம்.

    Posted on August 5, 2017

     

    சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா

    நாற்பது ஆண்டுகள் பயணம் செய்து
    நாசாவின் விண்வெளிக் கப்பல்
    இரண்டு
    பரிதி மண்ட லத்தின்
    விளிம்பு அரணைக் கடந்து
    தொடர்ந்து முன்னேகும் !
    பக்கத்து விண்மீன் மண்டலத்தில்
    பாய்ந்து நுழையும்  !
    நேர்கோட் டமைப்பில் வந்த
    சூரியனின்
    வெளிப்புறக் கோள்களை
    விண்கப்பல்கள்
    ஆழ்ந்து உளவுகள் செய்யும் !
    நெப்டியூனின் நிலவை,
    கருந் தேமலை,
    பெரும் புயலைக் காணும் !
    நாலாண்டு திட்டப் பயணம்
    நீள்கிறது
    நாற்பது ஆண்டுகளாய் !
    அடுத்த பரிதி மண்டலத்தின் எல்லையில்
    அன்னிய கோள்களுக்கு
    சின்னமாய் எடுத்துச் சென்று, நமது
    ஞாலக் கதை சொல்லும்
    காலச் சிமிழ் !

    +++++++++++++++++

    கடந்த 40 ஆண்டு கால நாசா விண்வெளிக் குறிப்பணிகளில் வாயேஜர் விண்கப்பல் பயணத்தைப் போல் இயங்கிய ஒப்பில்லா விண்வெளித் தேடல் வேறெதுவும் இல்லை.  அவற்றால் நமது பிரபஞ்சத்தின் தெரியாத அற்புதங்களை அறிந்து கொண்ட தோடு, சூரிய மண்டலத்துக்கு அப்பால் உள்ளதையும் இப்போது காண வாய்ப்புக் கிடைத்துள்ளது.

    தாமஸ் சுர்புசென் [NASA Science Mission Associate Administrator]

    நாசாவின் நெடுந்தூர, நீண்ட காலப் பயண விண்கப்பல்கள்

    1977 ஆகஸ்டு / செப்டம்பரில் ஏவப்பட்ட வாயேஜர் 1 & 2 விண்கப்பல்கள் 40 ஆண்டுகாலம் தொடர்ந்து பயணம் செய்து, சூரியப் புறக்கோள்கள் பூதக்கோள் வியாழன், வளையக் கோள் சனி,  வாயுக்கோள் யுரேனஸ், நெப்டியூன் கடந்து, சூரிய குடும்ப எல்லை தாண்டி, இப்போது  அடுத்த சூரிய மண்டல விளிம்பைத் தொட்டிருக்கின்றன.  வாயேஜர் -1 தற்போது பூமியிலிருந்து 13 பில்லியன் மைல் தூரத்தில் பறந்து கொண்டுள்ளது.  மேலும் வாயேஜர் -1 விண்கப்பல் நமது புவிச்சின்னமாய் வட்டக் காலச்சிமிழ் [Circular Time Capsule] ஒன்றைத் தூக்கிச் செல்கிறது.

    வாயேஜர் 1 & 2 விண்கப்பல்கள் கண்டுபிடித்தவை என்ன ? பூமிக்கு அப்பால் பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் “லோ” [Lo] கொண்டுள்ள  பொங்கும் முதல் எரிமலை ! வியாழன் துணைக்கோள் “ஈரோப்பா” [Europa] கொண்டுள்ள உட்தளக் கடல் ! சனிக்கோளின் துணைக்கோள் “டைடான்” பூமியைப் போல் இருப்பது.  புறக்கோள் யுரேனஸில் பனிக்கோள் மிராண்டா [Miranda] துணைக்கோளாய் இருப்பது.  புறக்கோள் நெப்டியூனில் பனிநீர் எழுச்சிகள் பற்பல துணைக்கோள் டிரைடான் [Triton] கொண்டிருப்பது.  பூமிக்குப் 13 பில்லியன் மைல் தூரத்தில் செல்லும் வாயேஜர் -1 அண்டவெளியில் அகிலக் கதிர்கள், அணுக்கருக்கள் ஒளிவேகத்துக்கு ஒட்டிய விரைவில், ஓடுவதைக் கண்டுள்ளது.

    பூமிக்குப் 11 பில்லியன் மைல் தூரத்தில் செல்லும் வாயேஜர் -2 சூரிய மண்டல விளிம்பில் மின்னியல் துகள்கள், காந்த தளங்கள், தணிவு -அதிர்வு ரேடியோ அலைகள், சூரியப் புயல் ஒளிப்பிழம்பு [Solar Wind Plasma] ஆகியவற்றின் பரிமாணத்தை அறியும் கருவிகளைக் கொண்டுள்ளது.  நெடுந்தூரம், நீண்ட காலம் பயணம் செய்ய வாயேஜர் 1 & 2 விண்கப்பல்களை இயக்குவது  புளுடோனியம் -238 அணுக்கருசக்தி ஓட்டும் தனித்தனி மூன்று கதிர்மூல வெப்ப-மின்சக்தி ஜனனிகள் [ Plutonium -238 Radio-isotope thermoelectric Generators] அதன் அணுசக்தி ஆற்றல் 88 ஆண்டுகளில் பாதி அளவு குறையும்.  அதன் கடைசிக் கருவி 2030 ஆம் ஆண்டில் நிறுத்தம் அடையும்.  ஆயினும்  30,000 mph [48280  kmh] வேகத்தில் பயணம் செய்யும் வாயேஜர் 1 & 2 விண்கப்பல்  தொடர்ந்து பல ஆண்டுகள் பறந்து செல்லும். அவற்றின் மங்கிய சிக்னல்களைத் தேடி உள்வாங்கும் ரேடார் தட்டுகள் : நாசாவின் 230 அடி அகல ரேடார் தட்டு; அமெரிக்க நியூ மெக்ஸிகோ தேசிய வானியல் நோக்ககத் தட்டு;  ஆஸ்தி ரேலியாவின் பார்க்ஸ் வானியல் நோக்கத் தட்டு; ஜப்பானின் உசுடா ஆழ் விண்வெளி  நோக்கு மையத் தட்டு.

    “இப்போது வாயேஜர் -1 எல்லை மாற்ற அரங்கத்தில் பயணம் [Transition Zone] செய்கிறது [2012].  விண்கப்பல் சூரிய விளிம்பு நிறுத்த வரம்பைக் [Heliopause] கடந்து அகில விண்மீன் ஈடுபாட்டு ஊடகத்தில் [Interstellar Medium] புகுந்து இங்குமங்கும் ஊசலாடி இருக்கலாம். ”

    ராபர்ட் டெக்கர் [John Hopkins University in Maryland]

    சூரிய மண்டலத்தைப் பற்றிய மகத்தான முக்கிய தகவலை  வாயேஜர் விண்ணுளவிகள் அறிவித்து வருகின்றன.

    ரோஸின் லாலிமென்ட் [பாரிஸ் வானியல் நோக்ககம்]

    “வியாழன், சனிக் கோள்களுக்குச் செல்ல நான்காண்டுத் திட்டமாக ஆரம்பிக்கப்பட்ட வாயேஜர் -2 விண்கப்பல் பயணம் இப்போது 35 ஆண்டுகள் நீடித்து இன்னும் தகவல் அனுப்பி வருகிறது !  ஏற்கனவே அது நாம் இதுவரை நெருக்கத்தில் காணாத யுரேனஸ், நெப்டியூன் ஆகிய இரண்டு கோள்களின் தெளிவான காட்சிகளைப் படமெடுத்து அனுப்பியுள்ளது.”

    எட்வேர்டு ஸ்டோன் (வாயேஜர் திட்ட விஞ்ஞானி) (C.I.T. Pasadena)

    “பரிதி மண்டலத்தின் வெளிப்புறத்தில் என்ன இருக்கிறது என்று காண நமது கண்களை விழிக்கச் செய்தது வாயேஜர் விண்கப்பல் !  அதைத் தொடர்ந்துதான் கலிலியோ, காஸ்ஸினி விண்கப்பல் பயணத் திட்டங்கள் உருவாக அழுத்தமான ஆதாரங்கள் நமக்குக் கிடைத்தன.”

    ஜான் கஸானி, (வாயேஜர் விண்கப்பல் திட்ட ஆளுநர்) (1975-1977)


    “வாயேஜர் திட்டத்தின் வியப்பான விளைவுகளில் குறிப்பிடத் தக்கது அது பயணம் செய்த காலமே !  175 ஆண்டுகளுக்கு ஒருமுறை பரிதி மண்டலத்தில் நிகழும் புறக்கோள்களின் நேரமைப்பு (Planetary Alignment of Jupiter, Saturn, Uranus & Neptune) விண்கப்பலை ஏவி அனுப்பும் ஆண்டு களில் ஏற்பட்டது.  தொலைத் தொடர்பு, மின்னியல், மின்னாற்றல், விண்கப்பல் நகர்ச்சிக் கட்டுப்பாடுக்கு ஏற்ற கருவிகளின் பொறி நுணுக்கங்கள் அப்போது விருத்தியாகி இருந்தன.

    ஹாரிஸ் சூர்மையர் (Harris Schurmeier, Voyager Project Manager) (1970 -1976)

    “வாயேஜர் விண்கப்பல் பயணம் எத்தகைய மகத்துவம் பெற்ற திட்டம் !  நமது பரிதி மண்டலத்தின் விரிவான அறிவைப் பெற வழிவகுத்த வாயேஜரின் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளில் நான் பெருமிதம் அடைகிறேன்.  ஆழ்ந்த விண்வெளித் தொடர்புக்கும் வாயேஜர் விண்கப்பலுக்கும் உள்ள நீடித்த இணைப்பை வியந்து அந்தக் குழுவினரில் ஒருவராய் இருப்பதில் பூரிப்படைகிறேன்.”

    டாக்டர் பீடர் பூன் (தொலைத் தொடர்பு & திட்ட ஏற்பாடு ஆளுநர்) (2004-2010)

    நாசாவின் வாயேஜர் 1 & 2 விண்கப்பல்களில் நமது வரலாற்றை, கலாச்சாரத்தைப் படங்களாய், பாடல்களாய்க் கூறும் காலச் சின்னத்தைப் (Time Capsule) பதித்து அனுப்பியுள்ளார்கள்.  அது 12 அங்குல வட்டத்தில், தங்க முலாம் பூசப்பட்ட ஒரு தாமிரத் தட்டு.  அண்டை விண்மீன் மண்டலத்தினர் (Aliens) விண்கப்பலைக் கைப்பற்றினால் அவருக்கு ஒரு நினைவுப் பரிசாய் அளிக்க வைக்கப்பட்டுள்ளது.

    நாசா வெளியிட்ட அறிக்கை

    புதிய வரலாற்று மைல் கல் நாட்டும் வாயேஜர் விண்கப்பல்கள்

    35 ஆண்டுகளாய் சுமார் 10 பில்லியன் மைல் பயணம் செய்து, தற்போது சூரிய மண்டலம் தாண்டிப் பிரபஞ்சக் காலவெளியில் தடம் வைத்துள்ள வாயேஜர் விண்கப்பல்கள் 1 & 2 புதியதோர் சாதனை மைல் கல்லை வரலாற்றில் நாட்டியுள்ளது.  இது நாசா விஞ்ஞானி களின் மாபெரும் விண்வெளித் தேடல் சாதனைகளில் ஒன்றாக மதிக்கப் படுகிறது.   10 பில்லியன் மைல்கள் தாண்டிய பிறகும் அவற்றின் மின் கலன்கள் சிதையாமல் இன்னும் பணி புரிந்து வருகின்றன.   சூரிய மண்டலத்தின் புறக் கோள்களான பூதக்கோள் வியாழன், வளையங்கள் அணிந்த சனிக்கோள், யுரேனஸ், நெப்டியூன் ஆகியவற்றின் தகவல் அறிவித்து இப்போது சூரிய எல்லை தாண்டி அடுத்த விண்மீன் மண்டலத்தில் அடியெடுத்து வைக்கிறது.  இரண்டு வாயேஜர் விண்கப்பல்களும் மணிக்கு 38,000 மைல் வேகத்தில் பயணம் செய்கின்றன.   அவற்றில் தங்க முலாம் பூசிய 12 அங்குல தாமிரப் பதிவுத் தட்டும், அதைப் பேச வைக்கும் பெட்டியும் வைக்கப் பட்டுள்ளன.

    2004 ஆண்டிலேயே வாயேஜர் -1 வரம்பு அதிர்ச்சி [ Termination Shock ]  தளத்தைக் கடந்து சூரியப் புயலின் துகள்களும், அதனைக் கடந்த விண்வெளி துகள்களும் மோதும் பகுதியில் பயணம் செய்துள்ளது.   இதுவே கொந்தளிப்புள்ள அரங்க மென்று [Turbulent Zone, called Heliosheath] கருதப் படுகிறது.  இதுவே சரிந்து முடிவில் சூரிய மண்டல நிறுத்த அரங்கம்  [Heliopause] என்பதில் இறுதி ஆகிறது.   அப்பகுதியி லிருந்து அகிலவெளி விண்மீன் அரங்கம் [Interstellar Space] தொடங்குகிறது.

    இரண்டு வாயேஜர்களின் கருவிகள் இயக்கி வருபவை ஆயுள் நீண்டஅணுக்கரு மின் கலன்கள் [Long Life Nuclear Batteries].  அவை 2025 ஆண்டு வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.  வாயேஜர் -1 விண் கப்பலிலிருந்து பூமிக்குத் தகவல் வர சுமார் 16:30 மணிநேரம் ஆகிறது.

    நாசா கண்காணித்து வரும் வாயேஜர் விண்வெளிப் பயணம்

    2010 மே மாதம் 17 ஆம் தேதி நாசா ஜெட் உந்துகணை ஏவகத்தின் (NASA’s Jet Propulsion Lab) பொறியியல் நிபுணர்கள் 8.6 பில்லியன் மைல் தூரத்தில் பரிதி மண்டலத்தின் விளிம்பைத் தாண்டிப் பயணம் செய்யும் வாயேஜர் 2 இன் உட்புறக் கணினியை முடுக்கி அதன் பணியை மாற்றம் செய்தார்.  அதனால் விண்கப்பலின் நலம் மற்றும் நிலைமைத் தகவல் மட்டுமே பூமிக்கு அனுப்பப்படும்.  மே முதல் தேதி வந்த தகவலில் விண்கப்பல் நலமோடு பயணத்தைத் தொடர்வதாக அறியப் பட்டது.

    ஏப்ரல் 22 இல் வாயேஜர் -2 இலக்கத் தகவலில் (Data Packets) மாறுதலைக் கண்டார்.  திட்ட நிபுணர் விஞ்ஞானத் தகவல் அனுப்புதலைச் செம்மைப் படுத்த உளவு செய்தார்.  ஏப்ரல் 30 இல் பூமியிலிருந்து வாயேஜருக்கு அனுப்பும் தொடர்பு சீராக்கப் பட்டது.  பூமியிலிருந்து வாயேஜருக்குத் தகவல் போக 13 மணி நேரமும், மறுபடிப் பதில் பூமியில் உள்ள நாசாவின் ஆழ்வெளித் தொலைத் தொடர்பு வலைக்கு (NASA’s Deep Space Network on Earth) வந்து சேர 13 மணி நேரமும் ஆயின.

    வாயேஜர் 2 விண்கப்பல் முதலாக 1977 ஆகஸ்டு 20 ஆம் தேதி பூதக்கோள் வியாழன், வளையக்கோள் சனி ஆகிய இரண்டையும் துருவி உளவாய்வு செய்ய நான்கு ஆண்டுகள் பயணம் செய்ய ஏவப் பட்டது.  அதன் இரட்டை விண்கப்பல் வாயேஜர் 1 இரண்டு வாரங்கள் கடந்து அனுப்பப் பட்டது.

    இப்போது அவை இரண்டும் பரிதியின் புறக்கோள்களான வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகியவற்றையும் அவற்றின் சில துணைக் கோள்களையும் உளவிப் பரிதியின் விளிம்புக் குமிழியைத் (Heliosphere) தாண்டி அப்பால் அகில விண்மீன் மந்தை வெளி வாசலில் (Interstellar Space) தடம் வைத்து விட்டன !

    “வியாழன், சனிக் கோள்களுக்குச் செல்ல நான்காண்டுத் திட்டமாக ஆரம்பிக்கப்பட்ட வாயேஜர் -2 விண்கப்பல் பயணம் இப்போது 33 ஆண்டுகள் நீடித்து இன்னும் தகவல் அனுப்பி வருகிறது !  ஏற்கனவே அது நாம் இதுவரை நெருக்கத்தில் காணாத யுரேனஸ், நெப்டியூன் ஆகிய இரண்டு கோள்களின் தெளிவான காட்சிகளைப் படமெடுத்து அனுப்பியுள்ளது.” என்று வாயேஜர் திட்ட விஞ்ஞானி எட்வேர்டு ஸ்டோன் கூறுகிறார்.

    வாயேஜர் விண்கப்பல் ஏவப்பட்ட பொன்னான காலம் சிறப்பானது,  175 ஆண்டுகளுக்கு ஒருமுறைப் புறக்கோள்கள் நான்கும் நேர் கோட்டமைப்பில் வருகின்றன.  அந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி வாயேஜர் விண்கப்பல்கள் நேர் போக்கில் நான்கு பெரும் புறக்கோள்களையும் அவற்றின் சில துணைக் கோள்களையும் ஆராய வசதியானது.

    புறக்கோள்களை ஆராய்ந்த வாயேஜர் விண்கப்பல்கள்

    1986 இல் வாயேஜர் 2 யுரேனஸ் கோளையும், 1989 இல் நெப்டியூன் கோளையும் கடந்து சென்றது.  அப்போது சிறப்பாக விண்கப்பல் நெப்டியுனில் இருக்கும் மிகப் பெரிய கரு வடுவையும் (Great Dark Spot) மணிக்குப் ஆயிரம் மைல் வேகத்தில் அடிக்கும் சூறாவளியையும் எடுத்துக் கட்டியது. செந்நிற நைட்ரஜன் பனிக்கட்டியி லிருந்து பீறிட்டெழும் ஊற்றுகளையும் (Geysers from Pinkish Nitrogen Ice) அவை நெப்டியூன் துணைகோள் டிரைடான் துருவங்களில் (Polar Cap on Triton) பனியாய்ப் படிவதையும் படம் பிடித்து அனுப்பியது.  வாயேஜர் 1 பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் “லோ” வில் (Jupiter’s Satellite Lo) தீவிரமாய் எழும்பும் எரிமலை களைப் படமெடுத்தது !

    மேலும் சனிக்கோளின் அழகு வளையங்களில் உள்ள நெளிவு, சுழிவுகளையும், மேடு பள்ளங்களையும் காட்டியது !  2010 மே மாதத்தில் வாயேஜர் 2 பூமியிலிருந்து 8.6 பில்லியன் மைல் (13.8 பில்லியன் கி.மீ.) தூரத்திலும் வாயேஜர் 1 பூமியிலிருந்து 10.5 பில்லியன் மைல் (16.9 பில்லியன் கி.மீ.) தூரத்திலும் பயணம் செய்கின்றன !

    வாயேஜர் திட்டங்கள் அண்டைக் கோள் ஈர்ப்புச் சுற்று வீச்சு உந்து முறையால் (Flyby Gravity Swing Assist) விரைவாக்கப் பட்டு சிக்கனச் செலவில் (Two Third Cost Reduction) செய்து காட்ட உருவாயின.  வாயேஜரின் மகத்தான கண்டுபிடிப்புகள் நிகழ்ந்த முதல் 12 ஆண்டுகளில் நாசாவுக்கு நிதிச் செலவு 865 மில்லியன் டாலர்.  அந்த உன்னத வெற்றியால் அவற்றின் ஆயுள் இன்னும் 2 ஆண்டுகள் நீடிக்கப்பட்டு மேற்கொண்டு 30 மில்லியன் டாலரே நிதிச் செலவு கூடியது !

    பரிதி மண்டலத்தின் எல்லைக் குமிழியைக் கடக்கும் விண்கப்பல்கள் !

    வாயேஜரின் அகில விண்மீன் விண்வெளித் திட்டப் பயணம் (Intersteller Mission) துவங்கிய போது பரிதியிலிருந்து வாயேஜர் 1 சுமார் 40 AU தூரத்திலும் (AU -Astronomical Unit) (AU = Distance Between Earth & Sun), வாயேஜர் 2 சுமார் 31 AU தூரத்திலும் இருந்தன.  பரிதியை விட்டு நீங்கும் வாயேஜர் 1 இன் வேகம் : ஆண்டுக்கு 3.5 AU தூரம்.  வாயேஜர் 2 இன் வேகம் : ஆண்டுக்கு 3.1 AU தூரம்.  இரண்டு விண்கப்பல்களும் இன்னும் பரிதி மண்டலத்தின் எல்லை அதிர்ச்சி அரங்கில்தான் (Termination Shock Phase) நகர்ந்து செல்கின்றன !  அந்த வேலி அரங்கில் பரிதியின் காந்த மண்டலச் சூழ்வெளிக் கட்டுப்பாடுக்குள் இயங்கி வருகின்றன.  அதி சீக்கிரம் வாயேஜர் -1 எல்லை அதிர்ச்சியில் ஈடுபட்டு பரிதிக் கவசத்தை (Heliosheath) உளவி ஆராயத் துவங்கும்.  எல்லை அதிர்ச்சி அரங்கிற்கும், பரிதித் தடுப்பு அரணுக்கும் இடையே இருப்பதுதான் (Between Termination Shock Phase and Heliopause) பரிதிக் கவசம்.  வாயேஜர் பரிதிக் குமிழியை (Heliosphere) நீங்கும் போதுதான் அகில விண்மீன் வெளி வாசலைத் தொடத் துவங்கும் !

    வாயேஜர் விண்வெளித் தேடலின் உன்னதம் என்ன வென்றால் 33 ஆண்டுகள் கடந்த பின்னும் அதன் மின்சக்தி ஆற்றல் சிக்கனமாகச் செலவாகி, நகர்ச்சிக் கட்டுப்பாடு செய்யும் உந்து சாதனம் (Use of Available Electric Power & Attitude Control Propellant) செம்மையாக இயங்கி வருகிறது !  ஏவும் போது வாயேஜர் விண் கப்பலுக்கு மின்சக்தி அளித்தது : கதிரியக்க ஏகமூல வெப்ப-மின்சக்தி ஜனனி (Radioisotope Thermo-electric Generators – RTG).  முதலில் அது பரிமாறிய ஆற்றல் : 470 வாட்ஸ்.  1997 ஆரம்பத்தில் புளுடோனியத்தின் கதிர்வீச்சுத் தேய்வால் ஆற்றல் 335 வாட்ஸ் ஆகக் குறைந்தது.  2001 இல் ஆற்றல் 315 வாட்ஸ்,  மின்சக்தி ஆற்றல் இழப்பைக் குறைக்கச் சில சாதனங்கள் நிறுத்தப் பட்டன.  இந்த ஆற்றல் இழப்பு நிலையில் நகர்ந்தால் வாயேஜர் 2020 ஆண்டுக்கு மேல் இயங்கிச் செல்ல முடியாது முடங்கிப் போகும் !

    கார்ல் சேகன் தயாரித்து வாயேஜரில் அனுப்பிய தங்க வில்லை

    இன்னும் சில மாதங்களில் நாசா வாயேஜர் 1 & 2 ஏவிய முப்பதாண்டு நிறைவு விழாவைக் கொண்டாடும்.  2010 மே 15 ஆம் தேதிப்படி இரண்டு வாயேஜர் விண்கப்பல்களும் புறக் கோள்களில் ஒன்றாக ஒரு காலத்தில் கருதப்பட்ட புளுடோவின் சுற்று வீதியைக் கடந்து அண்டையில் உள்ள புதிய பரிதி மண்டலத்தின் வாசலுக்கு வந்து விட்டன. மேலும் வாயேஜர் விண்கப்பல்கள் நமது உலக மாந்தரின் வரலாற்றைப் பதித்த காலச் சின்னம் (Time Capsule) ஒன்றைத் தூக்கிச் செல்கின்றன.  உலக வரலாற்றுப் பதிவுக்காக அற்புதப் படங்கள், மனிதர் பெயர்கள், இசைப் பாடல்கள் ஆகியவற்றை கார்ல் சேகன் ஆறு மாதங்களாகத் தகவலைச் சேகரித்தார்.  படங்களில் ஐக்கிய நாடுகளின் தலைமையகம் பற்றியும், இந்தியாவில் கிரீன் ஹௌஸ் வாயுக்கள் சேமிப்பு பற்றியும். ஜார்ஜ் புஷ்ஷின் படமும் இடம் பெற்றுள்ளன.  நமது வரலாற்றைக் கூறும் ‘காலச் சின்னம்’ அண்டைக் கோளப் பிறவிகட்கு நமது இளவச நன்கொடையாக இருக்கும்.

    ———————–

     

    *************************

    படங்கள்:  BBC News, National Geographic News, NASA

    தகவல்:

    a)  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40206171&format=html (Jupiter)

    b)  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40206102&format=html (Saturn)

    c)  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40206231&format=html  (Uranus & Neptune)

    1.  National Geographic News – Voyager 1 at Solar System Edge By : Stefan Lovgren (June 2, 205)

    2.  National Geographic News – Voyager Probes Send Surprises from Solar System Edge By : Richard A. Lovett (September 26, 2006)

    3.  NASA’s Golden Gift to the Aliens : 30 Years Later Voyager 1 & 2 By : Kevin Friedl (May 15, 2010)

    4.  NASA’s Voyager 2 Spaceship “Hijacked By Aliens’ By : Stephanie Dearing (May 15, 2010)

    5.  From Wikipedia – Voyager 2 (May 16, 2010)

    6.  Voyager 2 Journey By NASA (Updated on May 17, 2009)

    7.  Space Travel :   Mankind’s Messenger [Voyager 1 & 2]  at the Solar System  Frontier  [September 5, 2012]

    8.  http://en.wikipedia.org/wiki/Voyager_1   [September 8, 2012]

    9.  http://www.history.com/news/6-fascinating-facts-about-space-probe-voyager-1  [September 5, 2012]

    10.  http://voyager.jpl.nasa.gov/mission/interstellar.html  [Interstellar Mission]

    11.  http://www.nasa.gov/vision/universe/solarsystem/voyager_agu.html

    12.  https://en.wikipedia.org/wiki/Voyager_program  [February 9, 2016]

    13.  https://en.wikipedia.org/wiki/Voyager_1 [July 31, 2017]

    14. http://www.spacedaily.com/reports/Voyager_spacecraft_still_in_communication_40_years_out_into_the_void_999.html [August 1, 2017]

    15.http://www.spacedaily.com/reports/Two_Voyagers_Taught_Us_How_to_Listen_to_Space_999.html  [August 3, 2017]

    16.  https://en.wikipedia.org/wiki/Voyager_2 [August 4, 2017]

    ********************
    S. Jayabarathan (jayabarathans@gmail.com) August 5, 2017 [R-2]

    Attachments area

    Preview YouTube video NASA’s Voyager 1 is in Interstellar Space

    NASA’s Voyager 1 is in Interstellar Space
    Share
  • ஈரோடு புத்தகத் திருவிழா (2017)

     

    Makkal Sinthanai Peravai,
    A – 47, Sampath Nagar,
    Erode – 638011.
    Ph No : 0424  – 2269186.

    INVITATION

    MSP-BOOK-2017-WRAPPER

    Share