க.பாலசுப்பிரமணியன்

கற்றலும் நுண்ணறிவும் (Learning and Intelligence)

education-1-1-1

பல நேரங்களில் பள்ளிகளிலும் கல்வித்துறைகளிலும் கற்றலின் குறிக்கோள் மாணவர்களை ஒரு குறிப்பிட்ட தகுதிக்குத் தயார் செய்வதாகமட்டும் இருக்கின்றது. இதற்கு மையமாக ஒரு பாடப்புத்தகமும் அதைச் சார்ந்த தேர்வுகளும்  முன்வைக்கப்படுகின்றன.  பாடப்புத்தகங்களைச் சார்ந்த  தேர்வுகளும் பொதுவாக ஒரு மாணவனின் கற்றலின் திறன்களின மதீப்பீட்டிற்காக (Assessment of skills)  நடத்தப்படுகின்றன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த  நோக்கங்கள் முற்றிலுமாக ஓரங்கட்டப்பட்டு வெறும் நினைவுகள் சார்ந்த (Memory based) மற்றும் செய்திகள் சார்ந்த (information based) தேர்வுகளாக மாறி அதன் முழுமையான பலனைத் தருவதில்லை. இதன் காரணமாக தேர்வுகளின் மதிப்பீடுகள் ஒரு மாணவனின் முழு கற்றலையோ அல்லது கற்றல் சார்ந்த திறன்களையோ  வெளிப்படுத்திடுவதில்லை. மதிப்பெண்களின் தரக்குறைவால் அந்த எண்களுக்கும் அவை வெளிப்படுத்தும் திறன்களுக்கும் எந்த சம்பந்தமும் சமன்பாடும் இருப்பதில்லை. ஒரு மாணவனின் நுண்ணறிவை வளர்ப்பதற்க்கோ அல்லது மதிப்பேடு செய்வதற்க்கோ அவை காரணமாகவோ அல்லது கருவியாகவோ அமைவதில்லை.

எந்த ஒரு பொருள் கருத்து அல்லது  அறிவுத் துகளையோ அலசி ஆராய்ந்து அதை புத்திக்கூர்மையுடன் உபயோகிப்பதே நுண்ணறிவாகக் கருதப்படுகின்றது. ஆகவே நுண்ணறிவை வெளிப்படுத்துவதற்குத் தேவையான நிகழ்வுகள் – அறிதல்,(Cognition) புரிதல் (understanding). இடம், பொருளுக்குத் தகுந்தவாறு ஒரு கருத்தை உபயோகித்தல்,(contextiual application of knowledge) அந்த உபயோகத்திற்கான  முழுமையான பலனை  அடைதல் (Maximizing the application of knowledge)  ஆகியவையாகும். எப்பொழுது இந்த நிகழ்வுகளைச் சார்ந்த கற்றல் ஏற்படவில்லையோ அப்பொழுது கற்றலின் நோக்கம் பலவீனமாகி  “நுனிப்புல் மேய்தல்” என்ற சொற்றொடருக்கு விளக்கமாக அமைந்துவிடும்.

பல நூற்றாண்டுகளாக “நுண்ணறிவு” (Intelligence) என்பதை வெறும் “அறிவுசால்  நுண்ணறிவாகவே”  (Cognitive Intelligence) கருதிவந்தனர். அறிவு சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில் ஒருவர் காட்டும் திறனை  வைத்து அவர்களுடைய  நுண்ணறிவு மதிப்பிடப்பட்டு அதற்கான குறியீடுகள்  Cognitive intelligence scales ) தயாரிக்கப்பட்டன. இதன் காரணமாக குறிப்பிட்ட அறிவுத்திறன்களை வெளிப்படுத்த முடியாதவர்கள் நுண்ணறிவில் குறைந்த தகுதி உள்ளவர்களாகக் கருதப்பட்டு சிறப்பான வேலைகளுக்கும் செயல்களுக்கும்  தகுதியற்றவர்களாகக்  கருதப்பட்டனர்.. “நுண்ணறிவு எண்கள்”(Cognitive Index)  ஒரு மனிதனின் சிறப்பை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன.

பல ஆராய்ச்சிகளின் காரணமாக, ‘நுண்ணறிவு’ என்பது வெறும் ‘அறிவுசால்” வெளிப்பாடு அல்ல என்றும்   அதிகமான நேரங்களில் அது ‘உணர்வுசால்”  நிகழ்வென்றும் அறியப்பட்டு “உணர்வுசால்  நுண்ணறிவுக்கான ” (Emotional Intelligence) விளக்கங்களும் அதற்கான குறியீடுகளும்  கண்டுபிடிக்கப்பட்டன. நடைமுறையில் “உணர்வுசால் நுண்ணறிவில்” மேம்பட்டவர்கள் ‘அறிவுசால் நுண்ணறிவில் மேம்பட்டவர்களைக் காட்டிலும் திறனுடையவர்களாகவும் வாழ்க்கைப் பாதையில் வெற்றிப்படிகளை எளிதாக அடைபவர்களாகவும் அறியப்பட்டனர். ஆகவே  கல்வி பாடத்திட்டங்களில் “உணர்வுசால் நுண்ணறிவை” வளர்ப்பதற்கான  வழிகளையும் கோட்பாடுகளையும், நடைமுறைத் திட்டங்களையும் கொணருவதற்க்கான முயற்சிகளின் அவசியம் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

உணர்வுசால் நுண்ணறிவு பற்றிய ஆராய்ச்சிகளின் விளக்கத்தையும் கற்றலுக்கும் வாழ்க்கை மேம்பாட்டிற்கும் அதன் பயன் பற்றிய பல மேபட்ட விளக்கங்களை டேனியல் கோல்மான் என்ற அறிஞர் மற்றும்  ஆராய்ச்சியாளர் விளக்கமாக எழுதி  உள்ளார். ஒரு தனி மனிதனின் தன்னறிவு, தன்னடக்கம், முயற்சிகள், உறவுமுறைகள், செயல் பரிமாணங்கள், வாழ்க்கைப் போராட்டங்கள், வெற்றி தோல்விகளை எதிர்கொள்ளும் மனப்பாங்கு, சமூக உள்ளுணர்வுகள் போன்ற பல பரிமாணங்கள் இந்த உணர்வுசால் நுண்ணறிவால்  பாதிக்கப்படுகின்றன.

எனவே கற்றல் நடக்கும் காலங்களில் அதற்கான பாடத் திட்டங்கள், பாடம் நடத்தும் முறைகள், அதற்கான பயிற்சிகள் ஒரு மாணவனின் உணர்வுகளை வலுப்படுத்துவதாகவும், வளப்படுத்துவதாகவும், மேம்படுத்துவதாகவும் அமைய வேண்டும். இவைகள் வெறும் புத்தகக் கட்டமைப்புக்குள் இருக்கும் எழுத்துக்களுக்கும் பின்னப்படுவதில்லை. இதனால்தான் “பாடத் திட்டங்களும், புத்தகங்களும் ஒரு விமானத்திற்குத் தேவையான ஓடுகளத்தைப்  போல் கருதப்படுகின்றன.” எவ்வாறு ஒரு விமானம் ஓடுகளத்தை    உபயோகப்படுத்தி வானில் பறந்து உயர்காணலைத் தேடிச்  செல்கின்றதோ அதே போல் கற்றலின் நோக்கம் புத்ததகங்களையும் பாடங்கள் நடத்தப்படும் முறைகளையும் உபயோகப்படுத்தி நுண்ணறிவின் உச்சங்களைத்  வேண்டும் இந்த நுண்ணறிவு அறிவுசால் நுண்ணறிவு மற்றும் உணர்வுசால் நுண்ணறிவு ஆகிய இரண்டு வளங்களின் இனப்பிப்பில் வளர்ந்து வளப்பட்டு மேன்மை அடைதல் வாழ்க்கையின் வெற்றிக்கு மிக்க அவசியம்.

நுண்ணறிவின் மற்றொரு பரிமாணமாக ‘திறன் நுண்ணறிவு’ (Skill Quotient ) கருதப்படுகின்றது . ஒரு மாணவன் தன்னுடைய அறிவுசால் நுண்ணறிவோடும், உணர்வுசால் நுண்ணறிவோடும் எவ்வாறு தன கருத்து சார்ந்த மற்றும் கைத்திறன் சார்ந்த நுண்ணறிவை  வெளிப்படுத்துகின்றானோ  அவனுக்கு  வெற்றிப்படிகளின் பயணம் மிகவும் எளிதாக அமைகின்றது. அறிவும், உணர்வும் சார்ந்த நுண்ணறிவுகள் எவ்வளவு இருந்தாலும் அவைகள் அவனுடைய செயல் பரிமாணங்களில் வெளிப்படவில்லையென்றால்  விழலுக்கிறைத்த நீரைப்போல் வீணாகிவிடுகின்றது. ஆகவே கற்றலின்  முழுமையின் வெளிப்பாடாக செயல்திறன்கள் அமைய வேண்டும். எப்போது இந்த செயத்திறன்கள் அவனுடைய அறிவு மற்றும் உணர்வுசால் நுண்ணறிவுகளோடு இணைந்து ஒளிர்கிறதோ அப்பொழுது அவனுடைய முழுத்திறனும் உலகுக்கு வெளிச்சம்போட்டுக்  காட்டப்படுகின்றது. ஆகவேதான் பல நாட்டுக் கல்வித்திட்டங்களில் இந்த மூன்று நுண்ணறிவுகளின் சங்கமத்தை (IQ, EQ and SQ) உயர்த்துவதற்கான முயற்சிகள் தளர்வின்றி எடுக்கப்படுகின்றன. நம்முடைய பாடத்திட்டங்களும் அதன் வரைபாடுகளும் இதைக் கருத்தில் கொள்ளுதல் இன்றியமையாததாக ஆகின்றது.

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *