தற்காலப் பெண்ணின் சமூகச் சிக்கல்களும் தீர்வுகளும்
-கு.கோபாலகிருஷ்ணன்
முன்னுரை
இக்கட்டுரை, மரபுகாலம் தொட்டுத் தற்காலம் வரை சமுதாயத்தில் பெண்ணிய வளர்ச்சியும் அதே நிலையில் அவர்களுக்கு ஏற்படுகின்ற சிக்கல்களையும் காண்கின்றது. தீர்வுகள் என்பதைச் சிக்கல்களிலிருந்து மீட்டுருவாக்கம் செய்யலாம் என்னும் பாங்கில் அமைந்திருக்கின்றது.
சமுதாயம், ஓர் விளக்கம்
சமுதாயம் என்பது பல்வேறு சமூக நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாக விளங்கும் சமூகக் கூட்டமைப்பு என்பர். தன்னுடைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், இனப்பெருக்குவதற்கும், புதிய தேவைகளை உருவாக்கம் செய்வதற்கும், காரணிகளை உற்பத்தி செய்யும் கூட்டியக்கமே சமுதாயம் ஆகும்.
பெண்ணியம் – விளக்கம்
பாலினப்பாகுபாடு தொடர்பானச் சமூகப்பண்பாட்டு வேர்களை இனம் கண்டு கொள்ளவும், குறிப்பாகப் பெண்களுக்கு எதிரான அடக்குமுறை, சுரண்டல் முறைகளை உணர்ந்து கொள்ளவும், பெண்ணியம் தெளிவான வரையறையை வகுத்துக் கொள்கிறது. பெமினிசம் (Feminism) என்ற ஆங்கிலச் சொல் ‘பெமினா’ (Femina) என்ற இலத்தீன் சொல்லிலிருந்து மருவி வந்ததாகும். ‘பெமினா’ (Femina) என்ற சொல்லுக்குப் பெண்ணின் குணாதிசயங்களைக் கொண்டுள்ளது என்பது பொருளாகும். முதலில் இச்சொல் பெண்ணின் பாலியல் குணாதிசயங்களைக் குறிப்பிட்டு வழங்கப்பட்டுப் பின்பு பெண்களின் உரிமையைப் பேசப் பயன்பட்டது.
1890-க்கு முன்பு வரை உமனிசம் (Womanism) என்ற சொல் பெண்ணின் உரிமைப் பிரச்சனையும் அதன் அடிப்படையில் எழுந்த போராட்டத்தையும் உணர்த்தப் பயன்பட்டது. 1890லிருந்து உமனிசம் என்ற சொல்லினடத்தைப் பெமினிசம் (Feminism) என்ற சொல் பெற்றது.
பெண்ணியம், பெண்ணியல், பெண்நிலைவாதம், பெண்ணுரிமை எனப்பலவாறு ‘பெமினசம்’ (Feminism) என்ற ஆங்கிலச் சொல் தமிழில் மொழி பெயர்க்கப்படுகிறது. எனினும் ‘பெண்ணியம்’ என்ற சொல்லே இன்று வழக்கில் நிலை பெற்று வருகின்றது.
‘போர்லடபன்ச்’ என்ற அறிஞர் பெண்ணியம் என்பது பெண்ணின் எல்லாச் சிக்கல்களையும் புரிந்து கொண்டு அவற்றை நீக்க முயல்வதாகும். அவற்றின் வழியாக உலகளவில் அரசியலிலும், பண்பாட்டிலும், பொருளாதாரத்திலும், ஆன்மிக நெறியிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றார். மேலும் பெண்ணியம் என்பது எல்லாப் பெண்களையும் அரசியல் மற்றும் பிற அடிமைத்தளையிலிருந்து விடுவித்தல் என்ற கொள்கை உடையதாகும். இளம்பெண்கள், தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள், ஏழைப் பெண்கள், தன்பால் சேர்க்கையுடைய பெண்கள், வயதான மூதாட்டிகள் மற்றும் பொருளாதார நிலையிலும், மரபு மணமுறையிலும் துன்புறும் பெண்கள் ஆகிய அனைவருக்கும் விடுதலை பெற்றுத் தருவதே பெண்ணியத்தின் தலையாய இலக்காகும்.
சமுதாயச் சிக்கல்கள்
சமுதாயத்தில் மரபுகளைத் தொட்டுப் பெண்ணைத் தெய்வமாகவும், தாயாகவும் போற்றும் முறைகள் எண்ணற்ற சிக்கல்களையும், கொடுமைகளையும் பெண்ணுக்குப் பரிசாக கொடுக்கிறது என்பதை மறுக்க முடியாது எனலாம்.
1) தொழிற்புரட்சி சிக்கல்கள்
2) மேற்கத்திய உருவாக்கச் சிக்கல்கள்
3) நகரிய உருவாக்கச் சிக்கல்கள்
4) புதுமையாக்க நிலைகள்
5) சமூகச் சீர்திருத்த இயக்கக் கூறுகள்
6) நாட்டு விடுதலை இயக்கங்கள்
7) சமநிலை இன்மை
8) பாலுறவுச் சிக்கல்கள்
9) பெண்மீதான வன்முறைகள்
10) குழந்தை முதல் முதியோர்வரை ஏற்படும் இன்னல்கள், போராட்டங்கள்
’பெண் என்று பிறந்து விட்டால். பெரும் பிழை இருக்குதடி’ என்றான் பாரதி. இந்த ஒப்பற்ற பிறவியைத்தான் இந்த ஆண் சமுதாயம் பெரும் அடிமைப்படுத்துகிறது.
உற்பத்திப் பொருளாதார அமைப்பிலே (Productive Economy) ஆண், பெண் இருபாலரின் பணிகள் தனித்தனியாக வரையறுக்கப்பட்டதனால், குடும்பம் பொருள் உற்பத்தி செய்யும் களமாக விளங்கியது. இவற்றின்வழிப் பெண்களுக்குச் சிக்கல்கள், போராட்டங்கள் எழலாயின. இந்தியாவை ஆங்கிலேயர் ஆட்சி செய்யத் தொடங்கிய நாள்முதல் மேனாட்டுக் கல்விமுறையும், பண்பாடும், தொழில் நுட்பங்களும் உற்பத்தி முறைகளும் ஏற்படுத்தப்பட்டன. ‘மகளிர் ‘ பலர் கற்கத் தலைப்பட்டனர். மேற்கத்தியப் பண்பாடான நடை, உடை, பாவனை, பழக்கவழக்கங்கள் இந்நாட்டிலும் வளரத் தொடங்கின. இதன் விளைவால் சமூகச் சிக்கல்கள், குற்றங்கள் பெருகின என்பது குறிப்பிடத்தக்கது. நகரிய ஆக்கத்தால் கிராமங்களில் செய்து வந்த உழவுத் தொழில்களையும், கைத்தொழில்களையும் கைவிட்டு ஆண், பெண் இரு பாலரும் நகரங்களை நோக்கி நகர்ந்தனர். இவற்றின் வழியாக வளர்ச்சி அதே அளவுக்குப் பெண்களின் மீதான பல்வேறு சிக்கல்கள், கொடுமைகள் யாவும் வளர்ச்சி அடைய தொடங்கின.
கால நிலைகளுக்கு ஏற்ப கருத்துகளும் உருமாறின, புதிய வாழ்க்கை முறைக்கு வழி வகுத்தன. அரசியல், சமூகம், சமயம் ஆகிய அனைத்துத் துறைகளிலும் புதுமைகள் தழைத்தன. அனைத்துத் துறைகளிலும் பெண்கள் நெகிழ்ச்சி அடையும் அளவுக்கு வளர்ச்சிப் பெற்றனர். வேத காலத்திலும், பழந்தமிழர் காலத்திலும், உரிமையோடு கடமையாற்றிய மகளிர் உரிமையை இழந்தனர் என்பதும் நினைவுக் கூரத்தக்கது.
1) குழந்தைமணம்
2) கொடுமை
3) விதவைத் துயர்
4) உடன்கட்டை ஏறுதல்
5) பலதாரமணம்
6) பிற மூடப் பழக்கங்கள்
7) குழந்தைப்பேறு இன்மை பிற
மேற்கண்ட கொடுமைகள் எல்லாம் உடைத் தெரிந்து, எதிர்நீச்சல் போட்டு வெற்றிக் கண்டு வரும் வரலாறு குறிப்பிடத்தக்கதாகும்.
தற்காலச் சமூகம்
இன்னும் பிறந்தக் குழந்தை பெண் என்பதால் முயற்சியில்லா மூடர்கள் சலிப்பும் வெறுப்பும் அடைந்து தன்னம்பிக்கையை இழக்கிறார்கள். மேலும் காலங்காலமாய்ப் பாலியல் சிக்கல்களுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இவற்றிற்குக் கடுமையான சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும். பழக்க வழக்கங்களிலும் வாழ்க்கை முறைகளிலும் கலந்து போன ‘இன்டர்நெட்’ அறிவியல் வளர்ச்சி என்பதில் ஆபாசத்தை உட்படுத்துவது நாட்டுப் பண்பாட்டை முற்றிலும் அழித்து வருவதை பெண்கள் (இளைஞர்கள்) உணர்ந்து நடக்க வேண்டும்.
பெண்கள் மதிப்பும், மரியாதையும் உரிய தொழில்களைத் தேர்வு செய்து பணியாற்றிட வேண்டும். கலைத்துறை, உழைப்பு, பணியகம் இவற்றில் உடலியல் சார்ந்த அநீதிகள் தவிர்க்கப்பட வேண்டும். சமூகத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள ‘சாதீயம்’என்ற ‘தீ’ அழிக்கப்பட வேண்டும். அது எரியும் வரைச் சமுதாயமும் எரிந்து கொண்டிருக்கும்.
ஆண். பெண்ணின் உயர்வுக்கும், வளர்ச்சிக்கும் என்றென்றும் வழிவகை செய்ய வேண்டும். பத்துமாதம் சுமந்து பெற்ற ஒப்பற்ற தெய்வம் ‘தாய் ’ ஒரு பெண்தானே என்பதை உணர்ந்து அனைவரும் வாழச் சமுதாயம் வளரும்.