Blog

  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . ( 243 )

     

    சக்தி சக்திதாசன்

     

     

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்கள்..

    இன்னுமொரு வாரம் ! இன்னுமொரு மடல் ! அடுக்கடுக்காய் ஆனந்தங்கள்,அடுக்கடுக்காய் அனர்த்தங்கள். அப்படி ஒரு நிகழ்வு ! இப்படி ஒரு நிகழ்வு ! ஒரு இன்பம், ஒரு துன்பம் அதுதான் வாழ்க்கையென்றிருந்தால் அடுத்தடுத்து இன்பம், அடுத்தடுத்து துன்பம். இவைகளை வகுப்பவர் யார், அவர்தம் விதிகள் தாமெவை ?

    இன்றைய உலகின் அவசர நிகழ்வுகள் அடுக்கடுக்காய் எம்மீது தூக்கிப் போடும் சவால்கள் இவை. இன்றைய உலகின் பலநாடுகளிலும் ஒரு புதிய சமுதாயம் உருவாகியிருக்கிறது . அதுதான் ” புலம்பெயர் சமுதாயம்” இப்புலம்பெயர் சமுதாயம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை மட்டும் உள்ளடக்கியதல்ல. பல்வேறு நாடுகளில் இருந்து பல்வேறு காரணங்களினால் இடம் பெயர்ந்து வேறொரு நாட்டிற்கு குடிபெயரும் அவலமான நிலையில் இருக்கும் மக்களை உள்ளடக்கியதே இச்சமுதாயமாகிறது.  இச்சமுதாயத்தினரால் படைக்கப்படும் இலக்கியம் அவர்களின் மனவோலங்களின் அடிப்படையில் எழுந்தவைகளே ! ஆனால் புலம் பெயர்ந்து வந்து வாழும் அனைவராலும் இலக்கியம் படைக்க முடிகிறதா ? இல்லையே ! தமது மன உணர்வுகளை எழுத்தில் வடித்து வெளியிட முடியாதோரின் மனவோலங்களுக்கு வடிகால் தான் என்ன ?

    எனது எழுத்துக்களின் எல்லைகளை நிர்ணயிப்பது நான் பிறந்த என் தாய்மண்ணான ஈழம், நான் வாழ்க்கைத்துணையைத் தேடிக்கொண்ட தாய்த்தமிழகம், எனக்கு வாழ்வளித்த இங்கிலாந்து எனும் என் மாற்றாந்தாய். எனது பார்வையின் கோணம் இவைகளின் பின்னனியில் விளைபவைகளே ! எனக்குள் எனது பின்புலத்தால் வரைந்து வைக்கப்பட்ட கலாச்சாரக் கோலங்கள் அழிக்கப்பட முடியாதவை. அதேநேரம் பதின்ம வயதின் இறுதிப்படிகளில் இருந்து எனக்கு வாழ்வளித்த இந்த இங்கிலாந்து தேசத்தின் கலாச்சாரப் பின்னனி எனக்குள் எழுதப்பட்ட கலாச்சார விதிகளுக்கு முற்றிலும் மாறானவை. ஆயினும் எந்த வித வற்புறுத்தல்களுமின்றி எனது சொந்த விருப்பில் நான் வாழ்வதற்குத் தேர்ந்தெடுத்த இங்கிலாந்து நாட்டின் காலாச்சாரத்தை சுவீகரித்துக் கொள்ளும் மனப்பான்மையை எனது வாலிப வயதில் வரித்துக் கொள்வதில் எனக்கு எந்தச் சிக்கலும் இருக்கவில்லை. ஆயினும் என் தாய்மண்ணின் கலாச்சாரப் பின்னனியைத் தொலைத்து விடாமல் காப்பாற்றிக் கொள்வதில் பல சிக்கல்கள் இருக்கத்தான் செய்தன.

    இவை யிரண்டுக்கிடையில் இருந்த கலாச்சார இடைவெளியை நிரப்புவதே ஒரு போராட்டமாக இருந்தது. அப்போராட்டக் களத்தில் பல சமயங்களில் பல குழப்பநிலைகள் தோன்றி மறைந்துள்ளன. ஆனால் இன்று எனது முதுமையின் வாசலில் நான் இன்னமும் தமிழையும், அது கற்றுத் தந்த கலாச்சார முக்கியத்துவத்தையும் மனதில் கொண்டிருப்பது எனது போராட்டத்தில் நான் ஓரளவு வெற்றியடைந்தேன் எனும் மகிழ்வை எனக்குத் தந்திருக்கிறது. இந்தப் பின்னனியில் தான் நான் இங்கிலாந்தில் எமது புலம்பெயர் தமிழ்ச் சமுதாயத்தின் மத்தியில் நிகழும் நிகழ்வுகளை எனது கோணத்தில் இருந்து பார்க்க விழைகிறேன். தமிழையும், அதன் கலாச்சாரப் பெருமைகளையும் தாம் வாழும் புலம்பெயர் தேசத்தில் காப்பாற்றி வளர்த்து வருகிறோம் எனும் நம்பிக்கையில் எம்மவர் நிகழ்த்தும் பல நிகழ்வுகளுக்கான உண்மை விளக்கங்களின் அடியில் ஒளிந்திருக்கும் மனப்பான்மையை கொஞ்சம் வெளிக்கொணர்வதே எனது இந்த மடலின் சாரமாக அமைகிறது. மனம் நிறைய எமது கலாச்சாரப் பெருமைகளைச் சுமந்தபடி அந்நிய தேசத்தினுள் நுழைகிறோம். நாம் நுழையும் அந்நிய தேசங்களில் எமக்கு வரவேற்பளித்து எமது தனிமனித உரிமைகளுக்கு மதிப்பளித்து நாம் அவர்களின் சட்டவரம்புக்கு உட்பட்டு எமது கலாச்சாரத்தை வளர்ப்பதற்கு அவர்கள் எவ்விதத் தடையும் போடுவதில்லை. எமது உள்ளங்களில் தேக்கி வைத்திருக்கும் கலாச்சாரங்களைக் காப்பாற்றும் திறன் எமக்குள் இல்லை என்றாலும் இருக்கவே இருக்கிறார்கள் எமது குழந்தைகள். என்ன செய்கிறோம் ? எமது கனவுகளை கலாச்சாரம் எனும் பெயரில் எம்மைப் பிணைத்திருக்கும் விலங்கினை நாம் பாசக்கடமை எனும் பெயரில் எமது குழந்தைகளின் மீது பூட்டி விடுகிறோம். இந்தப் புலம்பெயர் தேசத்தில் பிறந்து வளர்ந்த எமது குழந்தைகள் தம் வாழ்வுக்கான கல்வியைப் பெற்றிட செய்யும் முயற்சிகளோடு பெற்றவர்களின் கலாச்சார சுமைகளையும் சேர்ந்தே சுமக்கிறார்கள்.

    என்ன சக்தியின் மடல் எந்தத் திசை நோக்கிச் செல்கிறது என்கிறீர்களா ? இங்கிலாந்தில் நிகழும் பல அரங்கேற்றங்களையும் அவற்றின் பின்னால் புதைந்திருக்கும் பல துயரங்களையும் கண்ணுற்றதினாலும், கேள்வியுற்றதினாலும் எழுந்த ஆதங்கத்தின் வெளிப்பாடே இம்மடல். ஆமாம் நடனம், இசை, பாடல் எனும் பல கலாச்சார விழுமியங்களின் அடையாளச் சின்னங்களாக தமது வாரிசுகள் வருவதின் பெருமைக்காக பெற்றோர்கள் பலர் படும் இன்னல்கள் சொல்லிலடங்கா. இங்கே நடைபெறும் அரங்கேற்றங்கள் சிலவற்றின் செலவு ஒரு வாரிசின் ஆடம்பரமான திருமணச் செலவுக்கு இணையானது. அத்தகைய நிதியை வங்களில் கடனாகப் பெற்றுக்கூட இத்தகைய நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. இவற்றில் பல அந்த ஒரு அரங்கேற்ற நிகழ்வின் பின்னால் ,அவ்வரங்கேற்றம் செய்த மாணவ மாணவிகளினால் மீண்டும் ஒருபொழுது கூட உபயோகிப்படக்கூடாத நிலையை நான் பல இடங்களில் கண்டிருக்கிறேன். ஆனால் அதேசமயம் தங்களுக்கு பிடித்ததினால், இக்கலைகளைப் பயிலும் பல மாணவ மாணவிகள் இல்லாமல் இல்லை. அவர்களின் திறமைகளையும், அவர்களின் கலச்சார அடையாளப் பாதுகாப்பையும் பார்த்து நான் பிரமிக்கத் தவறுவதில்லை.

    என்னுடைய ஒரே ஆதங்கம் கலாச்சாரப் பாதுகாப்பு எனும் பெயரில் பிடிக்காத ஒன்றைத் தமது சுயமகிழ்வுக்காக தமது குழந்தைகளின் மீது திணிக்கும் முறை சரிதானா என்பதே ! புலம்பெயர் வாழ்வில் எமது இளமைக்காலத்தில் தாய்நாட்டுக் கலாச்சாரத்தில் வளர்ந்து விட்டு பின்பு புலம்பெயர் தேசக் கலாச்சாரப் பின்னனியில் இணைந்து வாழ்வதென்பது ஒரு சுலபமான காரியமல்ல. அவ்வாழ்வில் எங்கே நாம் நமது அடையாளத்தை இந்த அந்நிய தேசத்தில் தொலைத்து விடுவோமோ எனும் பயத்தில், தீவிரமான நடவடிக்கைகளில் இறங்குவது எதிர்பார்க்க வேண்டிய ஒன்றே. ஆயினும் இப்புலம்பெயர் தேசத்தை நமது வாழ்நாடாக எடுத்துக் கொள்ளும் போது, இத்தகைய குழப்பங்களுக்குள் நம்மைப் புகுத்திக் கொள்ளாமல் தப்பித்துக் கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வது அவசியமே !

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

      

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • எழிலரசி கிளியோபாத்ரா -14

    சி. ஜெயபாரதன்

    image (4)

    அங்கம் -2 பாகம் -14

    “காதல் சம்பந்தப்பட்ட வரையில் பாலுணர்ச்சிகளைப் பொய்யாக எண்ணுவதை நானொரு மனிதப் பாபமாகக் கருதுகிறேன். அதே சமயத்தில் காதல் முழுதாயின்றிப் பின்னமாக உள்ள போது ஏற்படும் உணர்ச்சிகளைப் போலித்தனமானத் தவறென்று நான் மதிப்பீடு செய்கிறேன். நான் நம்புவதையே சொல்கிறேன். காதலுற்ற போது ஒருவரை ஒருவர் முடிந்தவரை முழுமையாக நேசிக்க வேண்டும், அல்லாவிட்டால் என்ன நேர்ந்தாலும் சரி, ஒருவர் முழுக் கற்புடன் தனிமையாக வாழ வேண்டும்.”

    ஜியார்ஜ் ஸான்ட் பிரெஞ்ச் பெண் எழுத்தாளி [George Sand (1804-1876)]

    “இறைவா! எப்போதும் நான் சாதிக்கக் கூடுவதை விட மிகையாக வேட்கை கொள்வதையே எனக்கு அளித்திடு.”

    மைக்கேலாஞ்சலோ [1474-1564]

    “ஒரு நாளைப் பொழுதில் கடிது உழைத்துக் காலத்தைச் செலவழித்த பிறகு அன்றிரவில் ஆழ்ந்த சுகமான தூக்கம் வருவதைப் போல், நன்னெறியுடன் வாழ்ந்த வாழ்க்கை மகிழ்ச்சியான மரணத்தை அளிக்கிறது!”

    லியானார்டோ டவின்ஸி [1452-1519]

    “என் எகிப்து நாடே! நன்கு அறிவாய் நீ!

    நின் திசைதிருப்பிப் பின்தட்டுடன் கயிற்றால்

    பிணைக்கப் பட்டு துள்ள தென்  இதயம் !

    பிறகு நீதான் இழுத்துச் செல்ல வேண்டும்!”

    [கிளியோபாத்ரா]

    வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஆண்டனி & கிளியோபாத்ரா]

    நேரம், இடம்:

    அலெக்ஸாண்டிரியாவில் எகிப்த் மன்னர் அரண்மனை. பாரோ மன்னர் வரலாற்று ஓவியங்கள் உயர்ந்த சுவர்களை அலங்கரிக்கின்றன. பகல் வேளை.

    நாடகப் பாத்திரங்கள்:

    ஜூலியஸ் சீஸர், மெய்க்காப்பாளி, கிளியோபாத்ரா, சேடியர்.

    காட்சி அமைப்பு:

    கிளியோபாத்ரா, டாலமியை அகற்றி விட்டுத் தன்னை எகிப்துக்கு ராணியாக்க சீஸரை வேண்டுகிறாள். சீஸர் கிளியோபாத்ராவின் அறிவையும், திறமையையும் மெச்சி அவளை ராணியாக்க ஒப்புக் கொள்கிறார். சீஸரின் பகைவனும், மருமகனுமாகிய ரோமாபுரித் தளபதி பாம்பியை டாலமியின் படையினர் இரகசியமாகக் கொன்றதை அறிந்து சீஸர் வேதனைப் பட்டுக் கோபம் அடைகிறார். டாலமியும் அவரது ஆலோசகரும் அதற்குத் தண்டனை அடைகிறார். மனம் மகிழ்ந்து, கிளியோபாத்ரா தன் உடற் கவர்ச்சியால் வசீகரிக்கையில் சீஸர் காக்காவலிப்பு நோயால் தாக்கப்பட்டு, துடிப்புடன் தரையில் விழுகிறார். மருத்துவர் பணிக்குப் பிறகு சீஸர் படுக்கையில் புத்துயிர் பெற்று எழுந்து அமர்கிறார். சீஸர் ரோமுக்கு மீள்வதை நிறுத்தி, கிளியோபாத்ரா அவரைத் தன் கவர்ச்சியால் மயக்கி ஆண்மகவு பெற்றுத் தருவதாய் உறுதி அளித்து மகிழ்ச்சி ஊட்டுகிறாள். வெளியே டாலமியின் படைவீரர் ரோமானியரைத் தாக்கி, அவரது கப்பல்களுக்குத் தீவைக்கிறார்! முடிவில் அலெக்ஸாண்டரியா நூலகம் எரிகிறது!

    தியோடோடஸ்: [சீஸரைக் கூர்ந்து நோக்கி] உலகப் புகழ் பெற்ற எங்கள் பெரு நூலகம் தீப்பற்றிக் கரியாகக் காரணமானீர்! உலக வரலாற்றை உருவாக்கும் மாவீரர் நீங்கள் பூர்வீக வரலாற்றை அழிப்பதில் பூரண விருப்பமா? எரிந்து போன நூல்களைப் புதிதாகப் பெற்றுத் தர வேண்டும். அல்லது நீங்கள் நட்ட ஈடு தர வேண்டும் எங்களுக்கு!

    ஜூலியஸ் சீஸர்: [சற்று சீற்றமுடன்] ரோமானியக் கப்பலில் தீவைத்தது யார்? எகிப்தியப் படைகள்! கலகம் உண்டாக்கி நூலகத் தீயை அணைக்க முயலும் ரோமானியப் படைகளைத் தடுப்பது யார்? உங்கள் பரம்பரை! தொட்டில் பிள்ளையைக் கிள்ளி விட்டு, தாலாட்ட தாயைத் தேடுகிறீரா? உன்னத நூலகத்தின் மதிப்பை அறியாதவர் உங்கள் மூட மக்கள்! அறிவு கெட்டதனமாய் ரோமானியர் மீது பழி சுமத்த வேண்டாம்! உமது அறிவும் பழுதாகி விட்டது. ஏனிப்படிச் சும்மா நின்று கொண்டு என்னுடன் வாதாடிக் கொண்டிருக்கிறீர்? மெய்யாகவே நூலகத்தைக் காக்க விரும்பினால், வெளியே போய் தீயை அணைப்பீர்!

    [தியோடோடஸ் பக்கத்தில் நிற்கும் போதினஸைப் பார்த்தவண்ணம் விரைந்து வெளியேறுகிறார்]

    போதினஸ்: தியோடோடஸ், நான் போக முடியாது உன்னுடன்! நானொரு வீட்டுக் கைதி இங்கே! வெளியே எங்கும் உன்னைப் போல் நடமாட முடியாது நான்!

    தியோடோடஸ்: [நடந்து கொண்டே] என்ன நீ ஒரு கைதியா? நூலகத்தை என்னால் முடிந்தவரைக் காக்க வேண்டும்! [போகிறார்]

    ஜூலியஸ் சீஸர்: போதினஸ் நீதான் சொல்ல வேண்டும், உலக வரலாறுகள் எரிந்தழியும் இந்த நேரத்தில்! தியோடோடஸ் மூலம் செய்தி அனுப்பு, இனிமேலும் ரோமானியரைக் கொல்ல வேண்டா மென்று! என் நெஞ்சம் கொதிக்கிறது! போரிடாமல் வாளா நிற்கும் ரோமானியரைக் கொல்லத் துணியாதீர்! உமது உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவாவது, எமது படையினரைக் காப்பாற்றுவீரா?

    image (5)

    போதினஸ்: [கோபமாக] உமது படையினர் உயிர் உமது கையில் உள்ளது! அவரைக் கப்பலில் ஏற்றி வந்தவன் நானில்லை! ஆனால் எமது உயிரைப் போக்கத் துணிந்தால், அதற்குப் பதிலாக நீவீர் பெருமிழப்பை ஏற்க வேண்டிய திருக்கும்!

    ஜூலியஸ் சீஸர்: [சினத்துடன்] டாலமியும், நீயும் அக்கிலஸ் மூலமாக ஆயுதமற்ற என் மருமகன், ரோமானிய மாவீரன், பாம்பியின் தலையை வெட்டிய பயங்கர வாதிகள்! உங்கள் குற்றத்துக்குத் தக்க தண்டனை கிடைக்கும்! அதில் ஐயமில்லை! நீவீர் நிரபராதி என்று நிரூபிக்கப்படும் வரையில் முதல்தரக் கொலையாளியாகத்தான் எண்ணப்படுவீர்!

    ரூஃபியோ: [அவசரமாய்க் குறுக்கிட்டு] ஜெனரல் சீஸர்! உங்கள் வருகை தேவைப் படுகிறது! உங்கள் முடிவு வேண்டப் படுகிறது! [துறைமுகம் வழியே எட்டிப் பார்த்து, படை வீரனிடம்] கிழக்கில் நிற்கும் சிறிய படகுகளை வெளியேற்று! நீண்ட படகுகளை என்ன செய்ய வேண்டுமென்று ஆணையிடச் சீஸர் வருவதாகச் சொல்! [சீஸரைப் பார்த்து] எங்கே அந்த எகிப்திய

    ஜூலியஸ் சீஸர்: ரூஃபியோ! நூலகத் தீயை அணைக்க தியோடோடஸை அனுப்பி யுள்ளேன்! உலக வரலாறுகளை, காவியங்களைப் பாதுகாக்க வேண்டும். போதினஸ் சிறைக் கைதியாக வைக்கப் பட்டிருக்கிறான்! நினைவில் வைத்துக் கொள் ரூஃபியோ! எத்தனை எகிப்தியனை நாம் சிறைப் படுத்தி வைத்திருக்கிறோம்! அதே சமயத்தில் ஒவ்வோர் எகிப்தியனுக்கும் இரட்டை ரோமானியக் காவலரைச் சிறைப்படுத்தி வைத்துள்ளோம் பாதுகாக்க.

    ரூஃபியோ: சீஸர்! உங்கள் கசப்பான சுவைப் பேச்சில் ஏதோ ஒரு குள்ள நரித்தனம் தெரிகிறது எனக்கு! எகிப்தியர் மீது ஏன் உங்களுக்கு அத்தனை பரிவு? [பலகணி நோக்கிச் சென்று வெளியே எட்டிப் பார்த்து] சொல், என்ன நடக்கிறது துறைமுகத்தில்?

    ஜூலியஸ் சீஸர்: [அங்குமிங்கும் பார்த்து] என்ன? பிரிட்டானஸ் தூங்கி விட்டானா? எனது கவசத்தைக் கொண்டுவர ஏற்பாடு செய்தேன். .. பிரிட்டானஸ்! எங்கே போய் விட்டாய்? கவசத்தைக் கொண்டுவா! காத்துக் கொண்டிருக்கிறேன். … யாரங்கே வருவது?

    [அப்போது கிளியோபாத்ரா வெளியிலிருந்து சீஸரின் வாள், தலை கெல்மெட்டை பிரிட்டானஸிட மிருந்து பறித்துக் கொண்டு, ஆங்காரமாக உள்ளே நுழைகிறாள். அவளைப் பின்பற்றி பிரிட்டானஸ் தொடர்கிறான். சீஸருக்கு இடப்புறம் கிளியோபாத்ராவும், வலப்புறம் பிரிட்டானஸும் நிற்கிறார்கள்.]

    கிளியோபாத்ரா: [ஆர்வமுடன்] ரோமன் கெல்மெட்டைப் பார்க்கவே வெகு அழகு! அதில் ஆண்மை தெரிகிறது! ஆண்மையின் வல்லமை தெரிகிறது. ஆண்மையின் அதிகாரம் தெரிகிறது. அதைத் தலையில் வைத்தால் ஆடவரின் உயரம் கூடுகிறது! முக லட்சணம் பராக்கிரமத்தைக் காட்டுகிறது! உங்களின் ஆண்மைத் தோன்றத்தைப் பன்மடங்கு அதிகரிக்கிறது! எடுப்பான உங்கள் முகத்தைப் பார்த்தால், பகைவரின் தொடைகள் நடுங்கும்! வயிற்றுக் குடல் வெளியே வந்திடும்! ஆடவருக்கு அப்படி ஓர் அதிகாரக் கெல்மெட் உள்ளது போல, பெண்டிருக்கு ஏன் செய்யப் படவில்லை? எனக்கொன்று அதுபோல் வேண்டும்!

    ஜூலியஸ் சீஸர்: [சிரித்துக் கொண்டு] எங்கள் ரோமானியப் படையில் பெண் வாசமே அடிப்பதில்லை! மருத்துவக் குழுவில் கூட பெண்டிர் எவரும் கிடையாது! போர்ப்படையில் பெண்டிருக்கு யாம் வேலை தர மாட்டோம்! வீட்டுப் போரில் பங்கெடுப்பவர் எமது பெண்டிர்! வெளிப் போரில் பங்கெடுப்பவர் ஆடவர்! வீட்டுப் போரில் பெண்ணை ஆடவர் வெல்ல முடியாது! வெளிப் போரில் பெண்டிர் எம்மை மிஞ்ச முடியாது! வீராங்கனை உனக்கு ஓர் கெல்மெட் தேவைதான்! தயார் செய்து அனுப்பச் சொல்கிறேன். உன்னைப் போல் ஒரு வீரப் பெண்ணை ரோமில் எங்கும் காண முடியாது!

    கிளியோபாத்ரா: [சிரித்துக் கொண்டு] ஆடவர் நீங்கள் வீட்டில் பெண்டிரை ஆராதித்துக் கொண்டு, அரவணைத்துக் கொண்டு, அலங்காரப் பொம்மைகளாய் நடத்திக் கொண்டு வருகிறீர்! என்னைப் போல் பெண்டிர் ரோமிலில்லை என்று கூறி மூடி மறைக்காதீர்! கையில் வாளைக் கொடுத்து, கவசத்தை மார்பில் கட்டி, குதிரையில் ஏற வாய்ப்பைக் கொடுத்தால் என்னைப் போன்ற பெண் ஏன் உருவாக மாட்டாள்?

    ஜூலியஸ் சீஸர்: [சிரித்துக் கொண்டு] கிளியோபாத்ரா! அது உண்மைதான்! ரோமானியப் பெண்டிர் உன் வீரக் கண்களைப் பார்த்தவுடனே பக்கத்தில் வாள் உள்ளதாவென்று அவரது கைகள் தேட ஆரம்பித்து விடும்! நான் ரோமுக்குப் போகும் போது நீ அவசியம் என்னுடன் வா! உன்னை ரோமாபுரியின் பிரதான வீதிகளில் அழைத்துச் செல்கிறேன்! யாவரும் வாழ்த்தி வரவேற்பார்!

    கிளியோபாத்ரா: [பூரிப்புடன் அருகி சீஸர் தோளைப் பற்றிக் கொண்டு] என் வயிற்றில் வளரும் உங்கள் ஆண்மகவு பிறந்து நடக்க ஆரம்பித்ததும் ரோமாபுரிக்கு வருகிறேன்! நிச்சயம் வருகிறேன்! ரோமாபுரியின் வருங்கால வாரிசு மன்னனான உங்கள் புதல்வனை, என் கரத்தில் பற்றிக் கொண்டு வருகிறேன்.

    ஜூலியஸ் சீஸர்: [மகிழ்ச்சியுடன் கிளியோபாட்ராவைத் தழுவி] ஆனந்தம் அடைகிறேன், கிளியோபாத்ரா! நீ தாயா? என் மகவுக்கு அன்னையா? மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்….. ஆனால் அது எப்படி ஆண்மகவு என்று அப்படி உறுதியாகச் சொல்கிறாய்?

    image (6)

    கிளியோபாத்ரா: [சீஸரின் பிடியிலிருந்து மெல்ல விடுவித்துக் கொண்டு] எங்கள் அரண்மனை ஜோதிட நிபுணர் மூவரும் கூறினார், எனக்குப் பிறக்கப் போவது ஆண் மகவென்று! அதை நான் நம்புகிறேன்! அவர் வான சாஸ்திரம் அறிந்தவர். அலெக்ஸாண்டர் இந்தியாவைப் படை யெடுத்து மீண்ட சமயத்தில், அங்கிருந்த வான சாஸ்திர வல்லுநர் மூலம் கிரேக்க ஞானிகள் அறிந்த கலை. வாழையடி வாழையாக அந்த வான சாஸ்திரக் கலை எகிப்திலும் பரவி வளர்ச்சி பெற்றது. [கனிவுடன்] சீஸர்! சீஸர்! சீஸர்! நான் பிறந்ததின் உன்னத பலனைப் பெறுகிறேன். நிச்சயம், நமது முதல் குழந்தை ஆண்மகவு! அந்த எதிர்பார்ப்பில் சிறிதேனும் ஐயமில்லை எனக்கு! அந்த ஆண்மகவு உங்கள் வாரிசு! ரோமாபுரியின் எதிர்கால வேந்தர் வேந்தன்! எகிப்த் நாட்டின் வருங்கால மாமன்னன்!

    ஜூலியஸ் சீஸர்: [ஆனந்தக் கண்ணீர் சொரிய] கிளியோபாத்ரா! என் கனவை நிஜமாக்கியவள் நீ! எனது மனைவி கல்பூர்ணியா பெற முடியாத ஆண்மகவை எனக்கு ஈடிணை யில்லாத அற்புதப் பரிசாக அளிக்கப் போகிறாய்! அரசனாக ஏற்றுக் கொள்ளா விட்டாலும், பிரதான பிள்ளைச் செல்வமாய், ரோமாபுரியும் என் குமரனை வரவேற்கும்! நிச்சயம் வரவேற்கும்! எனக்குக் கிடைக்கும் மதிப்பு என் எகிப்திய மகனுக்கும் கிடைக்கும்!

    [கிளியோபாத்ரா சீஸர் மார்பில் சாய்ந்து கொள்கிறாள்]

    Share
  • பகவான் ஸ்ரீ ரமணர்….!

     
    “சத்சங்கம் வாய்த்தபின் சாத்திரம் ஏதுக்கு,
    மத்யான வெய்யிலுக்கு மாருத, -உத்யா,
    வனமிருக்க கையில் விசிறி எதற்கு,
    மனம்அறுக்கும் அண்ணா மலை”…..கிரேசி மோகன்….

    Share
  • தன்வந்திரி பீடத்தில் ஜீலை 15,16ல் இருவேறு ஹோமங்கள்

    சந்தான கோபால ஹோமம் கந்தர்வராஜ ஹோமம்

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் டாக்டர் கயிலை ஞானகுரு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி வருகிற சனிக்கிழமை 15.07.2017 காலை 10..30 மணி முதல் 1.00 மணி வரை குழந்தை பாக்கியம் பெற வேண்டி சந்தான கோபால யாகம் மற்றும் 16.07.2017 ஞாயிற்றுக் கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 வரை ஆண்கள் திருமணத் தடை நீங்க கந்தர்வ ராஜ ஹோமமும் நடைபெறுகிறது.

    சந்தான கோபால யாகம்

    பெண்களின் பிரசவத்திற்கு பல வகையான உபாயங்கள் உள்ளன. மஹா சந்தான கோபாலானை வழிப்பட்டால் மகப்பேறு கிடைக்கும் என்று நம்பிக்கை.ஸ்ரீ சந்தான கோபால ஹோமம் செய்வதன் மூலம் சுகமாக எத்தடையுமின்றி குழந்தையை பெற்றெடுக்கலாம். மேலும் அறிவு வாய்ந்த திறனுடையவர்களாக திகழ்வார்.சந்தானகோபால ஹோமம் கர்ப்ப சிக்கல்கள் கட்டுப்படுத்த கிருஷ்ணர் ஆசிகள் பெறுவதற்கான ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஹோமம் ஒரு ஆரோக்கியமான நிலையில் குழந்தை கருவுறும் முறைகள் வழங்குகிறது. இன்னும் பல நன்மைகளை பெற இந்த ஹோமத்தில் பங்குபெறலாம்.. மேலும், பெண் கருத்தடையும் பிரச்சனைகளை நீக்கும் எந்த பிரச்சனையும் இல்லாமல், ஒரு குழந்தை பிறக்க ,நாகதோஷம் மற்றும் கர்ம பிரச்சினைகள் இருந்து மீட்க விரும்புவோர் இந்த ஹோமம் செய்யலாம் சந்தான கோபால ஹோமம் சாத்தியமில்லாத கர்ப்ப பிரச்சினைகளை சமாளிக்க ஜாதகத்தில் கிரகங்கள் எதிர்மறை விளைவுகளை அகற்ற செய்கிறது. கர்ப்பிணி பெண்களுக்கு குழந்தை பெற்றெடுக்கும் போது ஏற்படக்கூடிய அபாயத்தைக் குறைக்கும் . மேலும், அது சாத்தியமான அச்சுறுத்தல்கள் இருந்து ஒரு குழந்தை பாதுகாக்க உடலில் சக்தி வாய்ந்த ஆற்றலை அனுபவிக்க உதவுகிறது. நன்மை குணங்களும், ஒரு குழந்தைக்கு வரம் அளிக்கிறது. பெற்றோர் குழந்தைகள் திறமைகளை மேம்படுத்த இந்த ஹோமம் நடைபெறுகிறது

    கந்தர்வ ராஜஹோமம்

    திருமணத்தடைகள் உள்ள ஆண்களுக்கு சகல தோஷங்களும் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற கந்தர்வராஜ ஹோமம் நடைபெற உள்ளது. இந்த ஹோமத்தில் பங்குபெறுபவர்களுக்கு ஜாதக ரீதியாக உள்ள தோஷங்களும், கிரக ரீதியாக உள்ள தோஷங்களும், நவக்கிரக தோஷங்களும், பித்ரு தோஷங்களும், மூதாதையர் சாபங்களும் நீங்கி விரைவில் திருமணம் நடக்க வழிவகை செய்கிறது. மேலும் பீடத்தில் சென்ற 12 ஆண்டுகளில் ஏறக்குறைய சுமார் 2500க்கும் மேற்பட்ட கந்தர்வராஜ ஹோமங்கள் நடைபெற்று எண்ணற்ற ஆண்கள் பங்கு பெற்று பயனடைந்துள்ளார்கள்.இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    170713 - Trivikrama- the planet of Bhakti -lr

    ‘’தூணைப் பிடித்த துரைசிங்கம், வானிலுறிப்
    பானை பிடித்தானார் பாக்கியவான்: -கூனை(முதுகை)
    மிதித்தேறிக் கண்ணன், மகாபலி ஓணத்(து)(ஓணம் மகாபலியோடு சேர்த்துக் கொண்டாடுவது மலையாள மரபு)
    உதித்தவர் ரீவைண்ட்(REWIND) உலா(மலரும் வா மன நினைவு)’’….!

    அயிகிரி நந்தினி மெட்டில்…. பெருமாளின் த்வாதச நாமத்தில் ஒன்று ‘’திரிவிக்கிரமர்….
    “அளிவரம் முக்ரமம் ஒளியரி அக்ரமம்
    உணர்குரு சுக்கிரர் கட்டளையை
    பலியிட அக்கணம் குறள்திரு விக்ரம
    வடிவினில் திக்கது தொட்டனனே
    புலனுரு வாமனம் பழகிட நீமனம்
    பெருகுவை ஆணவ கந்தையிலே
    சலணரு ணேசரின் சிசுரம ணேசரை
    சரணடை கோவண சந்நிதியில்”….
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    ’’ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….!
    ———————————————————–

    170712 - eka rekha Krishna - lr

    ’’ஏக பில்வம் சிவார்ப்பணம்’’
    பில்வாஷ்டகம் படித்த பாதிப்பில் எழுதியது
    ————————————————-
    ‘’சங்குசக்ரம் சாரங்கம் தெண்டம்வாள் நந்தகி
    அங்கையேந்தும் அவதார விஷ்ணு
    ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(1)

    ‘’மூணுமோர் மறைகள் மீட்க மீனமாய்க் கடலுள் சென்ற
    வானவைகுந்தனே
    ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(2)

    ‘’கடல்கடைந்த போதன்று வடவரையை வழுவிடாது
    உடல்சுமந்த ஆமையே
    ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(3)

    ’’கொம்பிலே குவலயத்தை கால்சிலம்பில் கோள்குலுங்க
    நெம்பிய வராகரே
    ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(4)

    ‘’தானாடும் துட்டனைத் தரைமட்டம் ஆக்கிட
    தூணாடும் துரைசிங்கனே
    ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(5)

    ‘’வந்தபின் வரம்வாங்கி அந்தவான் உலகளந்த
    அந்தணன் வாமனனே
    ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(6)

    ’’ராமபரசு ராமஅரசு ராமபல ராமனாய்
    நாமமொன்று நடிப்புவேறு
    ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(7)

    ‘’பூபாரம் போக்கவன்று பாரதப் போர்முடித்த
    கோபாலக் கண்ணனே
    ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(8)….கிரேசி மோகன்….!

    ———————————————————————-

    Share
  • கருமாரி கிரகமாலை

     

    விவேக்பாரதி

     
    காப்பு

    318794_207332152667266_100001714496823_574807_651454047_n

    நவக்கிரக நாயகியே நானுன் பதத்தில்
    அவம்நீங்க வேண்டி அமர்ந்து – கவிசொல்வேன் !
    மாலை முடிந்திடவும் மாற்றம் நிகழ்ந்திடவும்
    காலங் கொடுத்தருள்வாய் காப்பு !

    நூல் :

    காரிய மாற்றிக் கடமைசெய் வோரின் கருத்திடையில்,
    சீரிய நோக்கிற் சிறப்புறச் செல்பவர் சிந்தைதனில்
    பேருரு வாகும் பெருங்கரு மாரி பெயருரைக்கச்
    சூரியத் தேவன் சுகத்தினை நல்கிச் சுடருகவே !

    சுடர்விடு மட்டிகை சுட்டிக ளாரமும் சூடியிங்கே
    இடமெனும் பாக மிருந்தருள் வீசும் இறையவளைக்
    கடமை புரியும் கருமா ரியவள் கனிப்பெயரைச்
    சடுதியிற் சொல்லிடச் சந்திரன் இன்பொளி சாற்றுகவே !

    சாற்று மவள்பெயர் தந்திடும் சக்திகள் சங்கடத்தை
    மாற்றி உயர்க்கதி மண்ணில் நிறுத்திடும் ! மாண்புடைய
    காற்றி லுயர்ந்து கருமா ரியின்பேர் கருதுகின்ற
    ஆற்ற லுணர்ந்தங் காரகன் நன்மை அளித்திடவே !

    அளிக்கும் சிரத்தையி லானந்தங் கண்டே அணைத்திடுவாள் !
    ஒளிதிகழ் கல்வியி லுண்மையி லூன்றியிங் கோங்கிடுவாள் !
    களிதருந் தேவி கருமா ரியின்பேர் கதைத்திடவே
    தெளிவினை நெஞ்சிடைத் தேக்க புதனெனும் தேவனுமே !

    தேவரின் துன்பமும் தேய்ந்திடக் கந்தனின் தேசெனவே
    காவலர் கைகொளும் கங்கெனும் வேலினைக் கைகொடுத்தாங்
    காவலில் நின்ற அருங்கரு மாரி அருட்பெயரைக்
    கூவிட வந்து குருவறி வூட்டுக குணமுடனே !

    குணமும் திறமும் குறையில் மதியும் குவித்திடுவாள் !
    மணமும் தவமும் மடமன மாளும் வழிவகுப்பாள்
    கணக்கை அறியும் கருமா ரியவள் கனற்பெயரால்
    பணமும் உயர்வும் பலசுக் கிரனவர் பாய்ச்சுகவே !

    பாய்ந்தெழுஞ் சத்தம் பகலிர வெல்லாம் படபடக்கக்
    காய்ந்தெழுந் தந்தக் கடுமகி ஷாசுரன் காலமறுத்
    தோய்ந்தவள் பேரை ஒழுகித் துதிக்கு மொருவர்தமை
    ஆய்ந்துபின் பற்றியிங் காள்க சனியெனு மாண்டவனே !

    ஆண்டவன் கொண்ட அரவைக் குடையா யமைத்திருப்பாள் !
    மீண்டது கையின் விரல்மோ திரமாய் மிளிர்ந்திடுமே !
    வேண்டு மனைத்தையும் வேகமெ னத்தரும் வெற்றியின்பேர்,
    யாண்டுமு ரைக்க யிராகுவும் நோக்குக யாக்கையையே !

    யாக்கை கடந்தவள் யாரும் வணங்கிட ஆதரிப்பாள் !
    பூக்கள் மணந்தரும் புன்னகை ஏந்திப் பொலிந்திடுவாள் !
    காக்கை நிறத்தள் கருமா ரியின்பேர் கதைசொலவே
    கேட்கும் அனைத்தையும் கேதுவும் நல்குக கேண்மையிலே !

    கேண்மையு மாகிக் கெடுத்திடு மெண்ணங் கெடுத்தெனக்கும்
    ஆண்மையை என்று மருள்க நவகிரக ஆண்டவர்தாம் !
    பூண்பது சத்தியம் ! புத்தியில் நிற்பது பூரணமே !
    காண்பது சக்தியைக் காய மவள்செயுங் காரியமே !
    “ஓம் சக்தி”

    Share
  • INDIA / VI – In this land

     

     

    கொரிய மூலம் : கிம் யாங் – ஷிக்
    ஆங்கில மூலம் : கிம்ன் ஜின் சுப்
    தமிழ் மொழிபெயர்ப்பு : பவள சங்கரி

     
    இந்த மண்ணில்
    அனைத்தும் எரிந்து கருகிக்கிடக்கின்றன!
    கற்கள், நீர், மிருகங்கள்
    மற்றும் மனிதரும் கூட.

    இந்த மண்ணில்,
    அனைத்தும் வெகுகாலத்திற்கு முன்பே அளவிடவொண்ணா
    ஆழத்தில் புதையுண்டிருக்கின்றன,
    தீவிர பதட்டமும், அநித்யமான கலக்கமும்
    மற்றும் கோபமும் கூட.

    கதிர்வீச்சுடனான காட்டு மலர்களுடனும்
    சாறுநிறை கனிகளும்,
    மரகத வண்ணத்தில் செழித்தோங்கியிருக்கும்
    விண்ணை முட்டும் மரங்கள்.

     

    Share
  • விபத்து

    முல்லைஅமுதன்

     

    குடித்துவிட்டு

    ஓட்டிய மகிழூர்திக்கு

    தெரியாது..

    தன் போதையில்

    முட்டி மோதும்

    மனிதர்கள் பற்றி..

    அதன் மொழியில்

    எல்லாமே பிணங்கள் தான்.

    அப்படித்தான்

    நானும்

    இறந்தேன்.

    விபத்தென்றார்கள்.

    பெரியவீட்டு செய்தி

    என சிலர் அகன்றனர்.

    அனைவர் கரங்களும்

    இறந்த என்னையே

    குற்றவாளியாய்

    அல்லது

    பிழை என சுட்டியதாக

    இருக்கக்

    கண்டேன்…

    துண்டிக்கப்பட்ட தலை

    ஒரு கனம்

    நிமிர்ந்து

    பார்த்துவிட்டு மறுபடி சரிந்தது.

    காவலர் இனி வரலாம்..

    அவசரமாக மருத்துவர் வரலாம்..

    இறந்த என் உடலைச் சுமக்க..

    விசாரிக்க…

    இறந்தான் என

    அத்தாட்சிப்படுத்த

    பலரும் வரலாம் போகலாம்.

    எழுத நினைத்த

    வலதுகைப் பேனா முனையிலிருந்து

    சொட்டுச் சொட்டாய்

    தன்

    கனவுக்குருதி

    ஒழுகியபடி இருந்தது

    வெகுநேரமாய்…

     

     

    Share
  • திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் (17)

    க.பாலசுப்பிரமணியன்

    இறைவனை எங்கெல்லாம் தேடுவது ?

    திருமூலர்-1-3

    பலநேரங்களில் நாம் இறைவனிடம் நம்முடைய பிரார்த்தனை வீணானதோ  என்ற ஒரு சந்தேகத்திற்கு உட்படுகின்றோம். இறைவன் சிலருக்குத்தான் அருள் புரிகின்றான்,. நான் வேண்டும்போது இந்த அண்டத்தின் எந்த மூலையில் அவன்  இருந்தானோ,   அவன் காதுகளில் நம் குரல் விழுந்ததோ,  இல்லை, அதை அவன் கேட்டும் கேட்காமல் இருக்கின்றானோ என்ற  ஐயம் நமது உள்ளத்தில் தோன்றுகின்றது.

    மனிதடைய இந்த அறியாமையை விளக்கும் கபீர்தாஸ் மனிதனைப் பார்த்துக் கூறுகினு ன்றார். “மூடனே! எவ்வாறு ஒரு கஸ்துரி மான் தன நாபியிலிருந்து வருகின்ற ஒரு வாசத்தை எங்கோ வெளியிலிருந்து வருகின்றது என்று நினைத்து  இங்கும் அங்குமாக ஓடுகின்றதோ, அது போல் உன் உள்ளிருக்கும் இறைவனை அறியாமல் நீ இங்கும் அங்கும் ஓடுகின்றாய்.”

    திருமூலரோ இந்த  உடலே ஒரு திருக்கோயில். இதன் உள்ளே இருக்கும் இறைவனை உன்னால் ஏன் காணமுடியாது? அப்படிக்  காண்பதற்கு உன் உள்ளக்கதவுகளைத் திறந்து உள்ளிருக்கும் சிவனை நீ அறிந்து கொள்ள வேண்டும். தரிசனம்  செய்ய வேண்டும்  என்ற கருத்தை முன் வைக்கின்றார்.

    ” உள்ளம் பெருங்கோயில்  ஊனுடம்  பாலயம்

     வள்ளற் பிரானார்க்கு  வாய்க்கோ  புரவாசல்

    தெள்ளத்  தெளிந்தோர்க்குச் சிவன் சிவலிங்கம்

    கள்ளப்  புலனைந்துங் காளா மணிவிளக்கே .”

    இந்தப் பாடல் இறையின் திருவருள் எங்கும் பரவி நிறைந்திருப்பதற்கு  அத்தாட்சியாக  இருக்கின்றது

    குமரகுருபரரோ மீனாட்சி பிள்ளைத் தமிழில் அன்னையைப் பாராட்டும் பொழுது ” அகந்தைகே கிழங்கை அகழ்ந்தெடுக்கும் தொழும்பர் உளக் கோயிற்கு  ஏற்றும் விளக்கே”  எனச் சொல்லி “அகந்தையை நீக்கிவிட்டு தூய மனதோடு இருப்போரின் உளக் கோயிலில் உள்ள விளக்கை ஏற்றுபவளே”  என விளிக்கின்றார்.

    இந்தக் கருத்தை வலியுறுத்தும் பட்டினத்தாரோ நம்முடைய புறக்கண்களை நீக்கிவிட்டு அறிவுக்கண்களோடு அவனை நோக்கினால் அவன் புலப்படுவான் என்ற கருத்தை சுருக்கமாக விளக்கியுள்ளார்

    உளகண்ணுக்  கல்லா தூன்கண்ணா  லோருமதோ

    விளக்குச் சுடரொளிபோல் மேவி யிருந்தாண்டி.

    ஊனக்கண்ணால்  அவனை அணுகாமல் ஞானக்கண் கொட்டிண்டு அவனை அணுகுதல் வேண்டும்.

    இதே கருத்தை நிலைநிறுத்தும் வண்ணம் அமைகின்றது திருமூலரின் பாடல்

    “திரிகின்ற முப்புரஞ் சென்ற பிரானை

    அரியனென் றெண்ணி அயர்வுற வேண்டா

    புரிவுடுடை யாளர்க்குப் பொய்யலன் ஈசன்

    பரிவோடு நின்றுபரிசறி வானே.”

    “ஈசன் எங்கோ மிகதூரத்தில் இருக்கிறான்; நம் பிடிப்பிற்கு அப்பால் இருப்பவன் என எண்ணுதல் வேண்டாம். “புரிந்துகொண்டு” அவனை நாடுபவர்கட்கு என்றும் அருகாமையில் இருப்பவன் ஈசன். என்ற நம்பிக்கையை நம் மனதில் ஊன்றுகிறார்.

    அந்த ஆண்டவனைச் சிந்தையில் வைத்து நாம் எப்படிப் பற்றிக்கொள்ளவேண்டும்? இதை விளக்குமாறு அமைகிறது திருவாசகத்தில் மாணிக்கவாசகரின் அருள்வாக்கு “

    “கொழும்பில் அரும்பாய்க் குவிமலராய்க் காயாகி

    வம்பு பழுத்த்துடலம்  மாண்டிங்கன்  போகாமே

    நம்புமென் சிந்தை நணுகும்வண்ணம் நானணுகும்

    அம்பொன் குலாத்தில்லை ஆண்டானைக்  கொண்டன்றே “

     வள்ளலாரோ ‘இத்தனை முயற்சி எதற்கு?” – அன்பே வடிவான பரம்பொருளை அன்பால் அணைத்தால் போதாதோ? நமது அன்பின் குரலுக்கு அடிபணிந்து அவன் நம்மை ஆட்கொள்ள மாட்டானோ ? எனக் கேட்கின்றார்

    அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே

    அன்பெனும் குடில் புகும் அரசே

    அன்பெனும் வலைக்குள் படுபரம் பொருளே

    அன்பெனும் கரத்து அமர் அமுதே

    அன்பெனும் கடத்துள் அடங்கிடும் அமுதே

    அன்பெனும் உயிர் ஒளிர் அறிவே

    அன்பெனும் அணுவுள் அமைந்த பேர்ஒளியே

    அன்புருவாம் பரசிவமே !

    “அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்” என வள்ளுவர் கூறியது சரிதானே ?

    தொடரும்..

    Share
  • நிழலாடும் நினைவு..!

    பெருவை பார்த்தசாரதி

     

     

    வாழ்க்கையெது இன்னதென்று வகுத்துச் சொல்ல

    வாழ்வோடு நிழலாகவரும் நினைவுகள் வழியாகும்.!

     

    நிலையிலா வாழ்வினில் நிழலாடும் நினைவலைகள்

    நிம்மதிதரும்.! நினைவுப் பாதையில் ஒவ்வொன்றாக.!

     

    முன்னிட்ட விதைகள் பன்னெடுங்காலம் கழிந்து

    பின்னெடிய மரங்களாகி சுவாசம்தரு மிக்காலம்.!

     

    பனங் காயிரண்டில் சிறிதாய்ச்சகடை கட்டியதை

    பாங் காயுருட்டிப் பலமைல்கடந்த பாலபருவம்..!

     

    கழுதைவாலில் பனைமட்டை கட்டி யோடவிட்டு

    பொழுதைப் பகலில் வீணேகழித்த வாலிபக்குறும்பு.!

     

    எதுகிடைக்கினும் காலாலே காததூர முதைத்தே

    எத்திச்சென்று எங்கோ விட்டுவந்த இளமைக்காலம்.!

     

    தட்டான் தும்பியைப் பக்குவமாய்ப் பிடித்துவந்து

    பட்டத்தை யதன்வாலில் கட்டிப்பறக்க விட்டநேரம்.!

     

    இன்பம் காணுவோமொரு துன்பத்திலே போலும்

    துன்புறுத்தி மகிழவொரு ஓணான் கிடைத்தகாலம்.!

     

    வெடிக்காத பட்டாசை வெகுவாய்ச் சேர்த்துவந்து

    படித்த பேப்பரிலே புஸ்வானம்செய்த இளமைக்காலம்.!

     

    பருவத்தில் துளிர்விடும் துடித்த இளஞ்சிலிர்ப்பால்

    பருவமங்கை மேனியை பயத்தால்தொட்ட ஸ்பரிசம்.!

     

    காலம் மறையுமானால் காயத்தின்வடு மறையாது

    பலகால மானாலும் பல்லாயிரமுயிரை வாங்கிய..

     

    ஆழிப் பேரலையின் அட்டகாசத்தை நினைக்கையில்

    பாழ்நெஞ்சம் நொறுங்கிப் போகும் நொடிப்பொழுதில்.!

     

    காலமிக முன்னேறி பழையது பழங்கதை யாகிவிட்டது

    கணிணியின் கைக்குளுலகெலாம் அகப்பட்டு விட்டது.!

     

    அப்பனால் எப்போதும் “தத்தாரி”யெனப் பட்டம்பெற்ற

    சுப்பனும் கணிணியில்தொழில் செய்துமனிதனான்.!

     

    நோக்கமின்றி வாழ்ந்த காலத்தை நினையும்போது

    ஏக்கம் வரும் எப்போதாவது தூக்கமிலா நேரத்தில்.!

     

    வாலிபத்தின் முன்வருவது வாழ்க்கைப் பாதையதன்

    வலிகளின் நினைவுகளாய் பின்தொடர்வது வயோதிகம்.!

     

    ஆடியயிளரத்த ஆட்டத்தைத் தள்ளாடிய யென்

    நாடியெலாம் தளர்ந்தபின் நானுணர்ந்து நவிலுறேன்.!

     

    மனிதன் செய்ததவறுகள் மறந்துபோன நினைவுகள்

    பிரிந்துபோன உறவுகளெலாம் மறுபடி மறுபடியெழும்.!

     

    உள்ளோட்ட நினைவுதனை உனைப் பார்த்துரைத்திடவே

    மேலோட்டப் பார்வையைக் கூடயென்விழி  மறைக்கிறது.!

     

    நிழலாடும் நினைவுதனை நினைத்துப் பார்த்தாலது

    நிழற்குடையானது வெயிலில் தரும்சுகம் போலாகும்.!

     

    இதயரணங்களால் துன்புறுமிந்தக் கிழப் பருவத்திற்கு

    உதயமாகும் நிழல்போன்ற நினைவுகளே மருந்தாகும்.!

     

    நன்றி தினமணி கவிதைமணி வெளியீடு.. 10-07-2017

    நன்றி படஉதவி..கூகிள் இமேஜ்

     

    Share
  • அக நாற்பது

    செந்தில்

    தலைவனுடன் அவளுக்கு
    அடங்கா காதலும் இல்லை,
    பெரிய ஊடலும் இல்லை.
    பிரியுந்துயரம் இல்லை,
    தூதனுப்ப எண்ணமும் இல்லை.
    வினைவென்று திரும்பியவனிடம்
    தலைவி சொன்னாள்,
    “பசங்களுக்கு ஹோமஒர்க் சொல்லிக்கொடுங்க,
    நா டின்னர் ரெடி பண்ணனும்.”!

    Share
  • Gho Lakshmi Thirukalyanam Panthakkal Muhurtham

    ஸ்ரீ தன்வந்திரிபீடத்தில் கோலக்ஷ்மிக்கும் ரிஷபராஜாவிற்கும் 21.07.2017ல் நடைபெறவுள்ள திருமணத்திற்காக

    ஜீலை 16ல் குலதேவதா கிராமதேவதா பூஜையுடன்

    பந்தக்கால் முகூர்த்தம்.

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தில் உலக அமைதி வேண்டியும் உலக நலனுக்காகவும் மழை வேண்டியும் இயற்கை வளம் பெறவும் சகல விதமான ஜீவராசிகளும் உஜ்விக்கவும் விவசாய பெருமக்களின் நலனுக்காகவும் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் வருகிற ஆடி மாதம் 5ம் தேதி 21.07.2017 வெள்ளிக் கிழமை காலை 9.15 மணி முதல் 10.15 மணிக்குள் கடக லக்னத்தில் வீட்டிற்கு பயன்தரும் கோமாதா என்ற பசுவிற்கும் நாட்டிற்கு பயன் தரும் ரிஷபராஜா என்ற காளைக்கும்நம் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு எவ்வாறு திருமணம் நாம் செய்து வைப்போமோ அவ்வகையில் பசு என்றழைக்கும் கோ லஷ்மிக்கும் காளை என்று அழைக்கும் ரிஷபராஜாவிற்கும் திருமணத்தை தன்வந்திரி குடும்பத்தினர் முறையாகவும் வைபவமாகவும் நிகழ்த்த உள்ளார்..

    மேற்கண்ட வைபவத்திற்காக வருகிற 16.07.2017 ஞாயிற்று கிழமை காலை 7.00 மணிக்கு பந்தக்கால் முகூர்த்மும் 8.00 மணிக்கு ஸ்ரீ முனீஸ்வரருக்கும், நவகனியருக்கும்,விஷேச அபிஷேகத்துடன் பொங்கல்வைத்து குல தெய்வ கிராம தெய்வ வழிபாடும் 9.30 மணியளவில் சுமங்கலி பூஜையும் 10.00 மணிக்கு கந்தர்வராஜ பூஜையும் நடைபெற்று மாலை 3.00 மணியளவில் பட்டுப் புடவை, பட்டு வேட்டி, திருமாங்கல்யம் மற்றும் சௌபாக்ய பொருட்கள் வாங்கி வருதலும் மாலை 6.00 மணிக்கு தன்வந்திரி பீடத்தில் நடைபெறும் கோடி தீபம், கோடி அர்ச்சனையில் சௌபாக்ய பொருட்களுடன் மாங்கல்யம் வைத்து மாங்கல்ய பூஜையும் நடைபெற உள்ளது.

    இதனை தொடர்ந்து வருகிற 20.07.2017 மாலை 6.30 மணிக்கு சிறப்பு நிகழ்ச்சிகளுடன் 108 வகையான பொருட்களுடன் 7.30 மணிக்கு சீர்வரிசையுடன் மாப்பிள்ளை அழைப்பும் இரவு 8.00 மணிக்கு சிறப்பு விருந்தும் நடைபெற்று மாங்கல்யதாரணம் மறுநாள் 21.07.2017 ஆடி முதல் வெள்ளிக் கிழமை சிறப்பு ஹோமங்களுடன் காலை 9.15 முதல் 10.15 மணிக்குள் கோ லஷ்மிக்கும் ரிஷபராஜா என்கிற நந்திகேசனுக்கும் நடைபெற்று 10.30 மணிமுதல் 12.00 மணிவரை 150 மேற்பட்ட நாதஸ்வர கலைஞர்கள் பங்கேற்கும் நாத சங்கமம் நிகழ்ச்சியும் சிறப்பு திருமண பிரசாதமும் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. .இந்த வைபவத்தில் ஏராளமான மடாதிபதிகளும், ஆயிரக்கணக்கான பக்தர்களும் கலந்து கொண்டு முப்பத்து முக்கோடி தேவர்கள் 48 ஆயிரம் ரிஷிகள் அஷ்டவசுக்கள், மற்றும் நவகிரகங்களின் ஆசிகளுடன் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் எழுந்தருளியுள்ள தெய்வங்களின் ஆசிகளையும் பெற உள்ளனர்.இந்த வைபவத்தில் அனைவரும் பங்கேற்று ஆசிபெற ஆரோக்ய பீடம் அன்புடன் அழைக்கிறது.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    170711 - Navneet Krishna -lr

    சேடன் படுத்திருந்தாய் கிருஷ்ணா! கிருஷ்ணா!
    மாடுகள் மேய்க்கவந்தாய் கிருஷ்ணா! கிருஷ்ணா!
    கூடா குரங்குக்கும்(மனக்குரங்கு -கூடாரை வெல்லும் கோவிந்தன்) கிருஷ்ணா! கிருஷ்ணா!
    நாடகம் நவனீதம் கிருஷ்ணா! கிருஷ்ணா!….கிரேசி மோகன்….!

    Share
  • ” பெருமாளே சரிதானே ”

     

    கிரேசி மோகன்

    —————————–

    பால் குடத்தை நோக்கிப் படையெடுக்கும் எறும்புகளாய்
    தோல் குடத்தைத் தொத்த வரும் தீவீர வியாதியெலாம்
    மால் படுத்த அரங்கன் மணிவண்ணன் பேர் சொல்ல
    வால் சுருட்டிக் கொள்ளுமாமே ,பெருமாளே சரிதானே….(1)

    நாய் வால் நிமிர்த்தலுக்கு இணையான நாற்பதிலே
    நோய்வாய் கிடந்து வளைந்த நேரத்தில்
    தாய்போல் தேற்றி தூக்கி நிறுத்த வல்ல
    மாயா ஜால மருந்தாமே பெருமாளே சரிதானே….(2)

    கானல்நீர் இளமைக் காலம் கண்சிமிட்டும் நேரம்
    கூனல் முதுகில் முதுமை மூப்பு மூட்டை பாரம்
    நாணல் யமுனா நதி நாதன் திருநாமம்
    பூணல் பொலிவாமே பெருமாளே சரிதானே….(3)

    முயலாமை கதையாக முடிகின்ற வாழ்க்கையின்
    இயலாமை தன்னை இளமையிலே உணர்ந்து
    செயலாவையும் ஸ்ரீரங்கனுக் களித்தால்
    பயமில்லையாமே பெருமாளே சரிதானே….(4)

    கள் ஒழுகு மலர் தேடி கருவண்டு மொய்ப்பது போல்
    உள் ஒழுகும் உணர்வுக்கு ஓடிவரும் ஒப்பில்லா
    கள்ளழகன் கார்வண்ணன் காகுத்தன் கண்ணனென்று
    தெள்ளமுதப் பிரபந்தம் சொல் பெருமாளே சரிதானே….(5)

    சிலந்திதன் வலையில் சிக்கிடும் பூச்சியாய்
    புலன்கள் ஐம்பொறி புகுந்து புலம்பாமல்
    நலம்தரும் நாராயணன் நாமம் சொன்னால்
    பலன் பரம் பதமாமே பெருமாளே சரிதானே….(6)

    பத்தியம் இல்லாத பகாசுர வாழ்க்கையை
    சத்தியம் என்றெண்ணி சஞ்சலம் அடைவோர்
    நித்திய கல்யாண வைபவன் அருளால்
    முத்தி அடைவாராமே பெருமாளே சரிதானே….(7)

    இல்லாததை இருப்பதென்று எண்ணிக் குவித்து
    செல்லாத இவ்வாழ்வை செலவழிக்க முயலாமல்
    மல்லாண்ட மணிவண்ணன் மலர்பதம் பற்றினால்
    எல்லாமும் தெளிவாமே பெருமாளே சரிதானே….(8)….கிரேசி மோகன்….!

     

    Share