க.பாலசுப்பிரமணியன்

இறைவனை எங்கெல்லாம் தேடுவது ?

திருமூலர்-1-3

பலநேரங்களில் நாம் இறைவனிடம் நம்முடைய பிரார்த்தனை வீணானதோ  என்ற ஒரு சந்தேகத்திற்கு உட்படுகின்றோம். இறைவன் சிலருக்குத்தான் அருள் புரிகின்றான்,. நான் வேண்டும்போது இந்த அண்டத்தின் எந்த மூலையில் அவன்  இருந்தானோ,   அவன் காதுகளில் நம் குரல் விழுந்ததோ,  இல்லை, அதை அவன் கேட்டும் கேட்காமல் இருக்கின்றானோ என்ற  ஐயம் நமது உள்ளத்தில் தோன்றுகின்றது.

மனிதடைய இந்த அறியாமையை விளக்கும் கபீர்தாஸ் மனிதனைப் பார்த்துக் கூறுகினு ன்றார். மூடனே! எவ்வாறு ஒரு கஸ்துரி மான் தன நாபியிலிருந்து வருகின்ற ஒரு வாசத்தை எங்கோ வெளியிலிருந்து வருகின்றது என்று நினைத்து  இங்கும் அங்குமாக ஓடுகின்றதோ, அது போல் உன் உள்ளிருக்கும் இறைவனை அறியாமல் நீ இங்கும் அங்கும் ஓடுகின்றாய்.”

திருமூலரோ இந்த  உடலே ஒரு திருக்கோயில். இதன் உள்ளே இருக்கும் இறைவனை உன்னால் ஏன் காணமுடியாது? அப்படிக்  காண்பதற்கு உன் உள்ளக்கதவுகளைத் திறந்து உள்ளிருக்கும் சிவனை நீ அறிந்து கொள்ள வேண்டும். தரிசனம்  செய்ய வேண்டும்  என்ற கருத்தை முன் வைக்கின்றார்.

உள்ளம் பெருங்கோயில்  ஊனுடம்  பாலயம்

 வள்ளற் பிரானார்க்கு  வாய்க்கோ  புரவாசல்

தெள்ளத்  தெளிந்தோர்க்குச் சிவன் சிவலிங்கம்

கள்ளப்  புலனைந்துங் காளா மணிவிளக்கே .”

இந்தப் பாடல் இறையின் திருவருள் எங்கும் பரவி நிறைந்திருப்பதற்கு  அத்தாட்சியாக  இருக்கின்றது

குமரகுருபரரோ மீனாட்சி பிள்ளைத் தமிழில் அன்னையைப் பாராட்டும் பொழுது ” அகந்தைகே கிழங்கை அகழ்ந்தெடுக்கும் தொழும்பர் உளக் கோயிற்கு  ஏற்றும் விளக்கே”  எனச் சொல்லி “அகந்தையை நீக்கிவிட்டு தூய மனதோடு இருப்போரின் உளக் கோயிலில் உள்ள விளக்கை ஏற்றுபவளே”  என விளிக்கின்றார்.

இந்தக் கருத்தை வலியுறுத்தும் பட்டினத்தாரோ நம்முடைய புறக்கண்களை நீக்கிவிட்டு அறிவுக்கண்களோடு அவனை நோக்கினால் அவன் புலப்படுவான் என்ற கருத்தை சுருக்கமாக விளக்கியுள்ளார்

உளகண்ணுக்  கல்லா தூன்கண்ணா  லோருமதோ

விளக்குச் சுடரொளிபோல் மேவி யிருந்தாண்டி.

ஊனக்கண்ணால்  அவனை அணுகாமல் ஞானக்கண் கொட்டிண்டு அவனை அணுகுதல் வேண்டும்.

இதே கருத்தை நிலைநிறுத்தும் வண்ணம் அமைகின்றது திருமூலரின் பாடல்

திரிகின்ற முப்புரஞ் சென்ற பிரானை

அரியனென் றெண்ணி அயர்வுற வேண்டா

புரிவுடுடை யாளர்க்குப் பொய்யலன் ஈசன்

பரிவோடு நின்றுபரிசறி வானே.”

“ஈசன் எங்கோ மிகதூரத்தில் இருக்கிறான்; நம் பிடிப்பிற்கு அப்பால் இருப்பவன் என எண்ணுதல் வேண்டாம். “புரிந்துகொண்டு” அவனை நாடுபவர்கட்கு என்றும் அருகாமையில் இருப்பவன் ஈசன். என்ற நம்பிக்கையை நம் மனதில் ஊன்றுகிறார்.

அந்த ஆண்டவனைச் சிந்தையில் வைத்து நாம் எப்படிப் பற்றிக்கொள்ளவேண்டும்? இதை விளக்குமாறு அமைகிறது திருவாசகத்தில் மாணிக்கவாசகரின் அருள்வாக்கு “

“கொழும்பில் அரும்பாய்க் குவிமலராய்க் காயாகி

வம்பு பழுத்த்துடலம்  மாண்டிங்கன்  போகாமே

நம்புமென் சிந்தை நணுகும்வண்ணம் நானணுகும்

அம்பொன் குலாத்தில்லை ஆண்டானைக்  கொண்டன்றே

 வள்ளலாரோ ‘இத்தனை முயற்சி எதற்கு?” – அன்பே வடிவான பரம்பொருளை அன்பால் அணைத்தால் போதாதோ? நமது அன்பின் குரலுக்கு அடிபணிந்து அவன் நம்மை ஆட்கொள்ள மாட்டானோ ? எனக் கேட்கின்றார்

அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே

அன்பெனும் குடில் புகும் அரசே

அன்பெனும் வலைக்குள் படுபரம் பொருளே

அன்பெனும் கரத்து அமர் அமுதே

அன்பெனும் கடத்துள் அடங்கிடும் அமுதே

அன்பெனும் உயிர் ஒளிர் அறிவே

அன்பெனும் அணுவுள் அமைந்த பேர்ஒளியே

அன்புருவாம் பரசிவமே !

“அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்” என வள்ளுவர் கூறியது சரிதானே ?

தொடரும்..

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *