பெருவை பார்த்தசாரதி

 

 

வாழ்க்கையெது இன்னதென்று வகுத்துச் சொல்ல

வாழ்வோடு நிழலாகவரும் நினைவுகள் வழியாகும்.!

 

நிலையிலா வாழ்வினில் நிழலாடும் நினைவலைகள்

நிம்மதிதரும்.! நினைவுப் பாதையில் ஒவ்வொன்றாக.!

 

முன்னிட்ட விதைகள் பன்னெடுங்காலம் கழிந்து

பின்னெடிய மரங்களாகி சுவாசம்தரு மிக்காலம்.!

 

பனங் காயிரண்டில் சிறிதாய்ச்சகடை கட்டியதை

பாங் காயுருட்டிப் பலமைல்கடந்த பாலபருவம்..!

 

கழுதைவாலில் பனைமட்டை கட்டி யோடவிட்டு

பொழுதைப் பகலில் வீணேகழித்த வாலிபக்குறும்பு.!

 

எதுகிடைக்கினும் காலாலே காததூர முதைத்தே

எத்திச்சென்று எங்கோ விட்டுவந்த இளமைக்காலம்.!

 

தட்டான் தும்பியைப் பக்குவமாய்ப் பிடித்துவந்து

பட்டத்தை யதன்வாலில் கட்டிப்பறக்க விட்டநேரம்.!

 

இன்பம் காணுவோமொரு துன்பத்திலே போலும்

துன்புறுத்தி மகிழவொரு ஓணான் கிடைத்தகாலம்.!

 

வெடிக்காத பட்டாசை வெகுவாய்ச் சேர்த்துவந்து

படித்த பேப்பரிலே புஸ்வானம்செய்த இளமைக்காலம்.!

 

பருவத்தில் துளிர்விடும் துடித்த இளஞ்சிலிர்ப்பால்

பருவமங்கை மேனியை பயத்தால்தொட்ட ஸ்பரிசம்.!

 

காலம் மறையுமானால் காயத்தின்வடு மறையாது

பலகால மானாலும் பல்லாயிரமுயிரை வாங்கிய..

 

ஆழிப் பேரலையின் அட்டகாசத்தை நினைக்கையில்

பாழ்நெஞ்சம் நொறுங்கிப் போகும் நொடிப்பொழுதில்.!

 

காலமிக முன்னேறி பழையது பழங்கதை யாகிவிட்டது

கணிணியின் கைக்குளுலகெலாம் அகப்பட்டு விட்டது.!

 

அப்பனால் எப்போதும் “தத்தாரி”யெனப் பட்டம்பெற்ற

சுப்பனும் கணிணியில்தொழில் செய்துமனிதனான்.!

 

நோக்கமின்றி வாழ்ந்த காலத்தை நினையும்போது

ஏக்கம் வரும் எப்போதாவது தூக்கமிலா நேரத்தில்.!

 

வாலிபத்தின் முன்வருவது வாழ்க்கைப் பாதையதன்

வலிகளின் நினைவுகளாய் பின்தொடர்வது வயோதிகம்.!

 

ஆடியயிளரத்த ஆட்டத்தைத் தள்ளாடிய யென்

நாடியெலாம் தளர்ந்தபின் நானுணர்ந்து நவிலுறேன்.!

 

மனிதன் செய்ததவறுகள் மறந்துபோன நினைவுகள்

பிரிந்துபோன உறவுகளெலாம் மறுபடி மறுபடியெழும்.!

 

உள்ளோட்ட நினைவுதனை உனைப் பார்த்துரைத்திடவே

மேலோட்டப் பார்வையைக் கூடயென்விழி  மறைக்கிறது.!

 

நிழலாடும் நினைவுதனை நினைத்துப் பார்த்தாலது

நிழற்குடையானது வெயிலில் தரும்சுகம் போலாகும்.!

 

இதயரணங்களால் துன்புறுமிந்தக் கிழப் பருவத்திற்கு

உதயமாகும் நிழல்போன்ற நினைவுகளே மருந்தாகும்.!

 

நன்றி தினமணி கவிதைமணி வெளியீடு.. 10-07-2017

நன்றி படஉதவி..கூகிள் இமேஜ்

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *