விபத்து
முல்லைஅமுதன்
குடித்துவிட்டு
ஓட்டிய மகிழூர்திக்கு
தெரியாது..
தன் போதையில்
முட்டி மோதும்
மனிதர்கள் பற்றி..
அதன் மொழியில்
எல்லாமே பிணங்கள் தான்.
அப்படித்தான்
நானும்
இறந்தேன்.
விபத்தென்றார்கள்.
பெரியவீட்டு செய்தி
என சிலர் அகன்றனர்.
அனைவர் கரங்களும்
இறந்த என்னையே
குற்றவாளியாய்
அல்லது
பிழை என சுட்டியதாக
இருக்கக்
கண்டேன்…
துண்டிக்கப்பட்ட தலை
ஒரு கனம்
நிமிர்ந்து
பார்த்துவிட்டு மறுபடி சரிந்தது.
காவலர் இனி வரலாம்..
அவசரமாக மருத்துவர் வரலாம்..
இறந்த என் உடலைச் சுமக்க..
விசாரிக்க…
இறந்தான் என
அத்தாட்சிப்படுத்த
பலரும் வரலாம் போகலாம்.
எழுத நினைத்த
வலதுகைப் பேனா முனையிலிருந்து
சொட்டுச் சொட்டாய்
தன்
கனவுக்குருதி
ஒழுகியபடி இருந்தது
வெகுநேரமாய்…