இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . ( 243 )
சக்தி சக்திதாசன்
அன்பினியவர்களே !
அன்பான வணக்கங்கள்..
இன்னுமொரு வாரம் ! இன்னுமொரு மடல் ! அடுக்கடுக்காய் ஆனந்தங்கள்,அடுக்கடுக்காய் அனர்த்தங்கள். அப்படி ஒரு நிகழ்வு ! இப்படி ஒரு நிகழ்வு ! ஒரு இன்பம், ஒரு துன்பம் அதுதான் வாழ்க்கையென்றிருந்தால் அடுத்தடுத்து இன்பம், அடுத்தடுத்து துன்பம். இவைகளை வகுப்பவர் யார், அவர்தம் விதிகள் தாமெவை ?
இன்றைய உலகின் அவசர நிகழ்வுகள் அடுக்கடுக்காய் எம்மீது தூக்கிப் போடும் சவால்கள் இவை. இன்றைய உலகின் பலநாடுகளிலும் ஒரு புதிய சமுதாயம் உருவாகியிருக்கிறது . அதுதான் ” புலம்பெயர் சமுதாயம்” இப்புலம்பெயர் சமுதாயம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை மட்டும் உள்ளடக்கியதல்ல. பல்வேறு நாடுகளில் இருந்து பல்வேறு காரணங்களினால் இடம் பெயர்ந்து வேறொரு நாட்டிற்கு குடிபெயரும் அவலமான நிலையில் இருக்கும் மக்களை உள்ளடக்கியதே இச்சமுதாயமாகிறது. இச்சமுதாயத்தினரால் படைக்கப்படும் இலக்கியம் அவர்களின் மனவோலங்களின் அடிப்படையில் எழுந்தவைகளே ! ஆனால் புலம் பெயர்ந்து வந்து வாழும் அனைவராலும் இலக்கியம் படைக்க முடிகிறதா ? இல்லையே ! தமது மன உணர்வுகளை எழுத்தில் வடித்து வெளியிட முடியாதோரின் மனவோலங்களுக்கு வடிகால் தான் என்ன ?
எனது எழுத்துக்களின் எல்லைகளை நிர்ணயிப்பது நான் பிறந்த என் தாய்மண்ணான ஈழம், நான் வாழ்க்கைத்துணையைத் தேடிக்கொண்ட தாய்த்தமிழகம், எனக்கு வாழ்வளித்த இங்கிலாந்து எனும் என் மாற்றாந்தாய். எனது பார்வையின் கோணம் இவைகளின் பின்னனியில் விளைபவைகளே ! எனக்குள் எனது பின்புலத்தால் வரைந்து வைக்கப்பட்ட கலாச்சாரக் கோலங்கள் அழிக்கப்பட முடியாதவை. அதேநேரம் பதின்ம வயதின் இறுதிப்படிகளில் இருந்து எனக்கு வாழ்வளித்த இந்த இங்கிலாந்து தேசத்தின் கலாச்சாரப் பின்னனி எனக்குள் எழுதப்பட்ட கலாச்சார விதிகளுக்கு முற்றிலும் மாறானவை. ஆயினும் எந்த வித வற்புறுத்தல்களுமின்றி எனது சொந்த விருப்பில் நான் வாழ்வதற்குத் தேர்ந்தெடுத்த இங்கிலாந்து நாட்டின் காலாச்சாரத்தை சுவீகரித்துக் கொள்ளும் மனப்பான்மையை எனது வாலிப வயதில் வரித்துக் கொள்வதில் எனக்கு எந்தச் சிக்கலும் இருக்கவில்லை. ஆயினும் என் தாய்மண்ணின் கலாச்சாரப் பின்னனியைத் தொலைத்து விடாமல் காப்பாற்றிக் கொள்வதில் பல சிக்கல்கள் இருக்கத்தான் செய்தன.
இவை யிரண்டுக்கிடையில் இருந்த கலாச்சார இடைவெளியை நிரப்புவதே ஒரு போராட்டமாக இருந்தது. அப்போராட்டக் களத்தில் பல சமயங்களில் பல குழப்பநிலைகள் தோன்றி மறைந்துள்ளன. ஆனால் இன்று எனது முதுமையின் வாசலில் நான் இன்னமும் தமிழையும், அது கற்றுத் தந்த கலாச்சார முக்கியத்துவத்தையும் மனதில் கொண்டிருப்பது எனது போராட்டத்தில் நான் ஓரளவு வெற்றியடைந்தேன் எனும் மகிழ்வை எனக்குத் தந்திருக்கிறது. இந்தப் பின்னனியில் தான் நான் இங்கிலாந்தில் எமது புலம்பெயர் தமிழ்ச் சமுதாயத்தின் மத்தியில் நிகழும் நிகழ்வுகளை எனது கோணத்தில் இருந்து பார்க்க விழைகிறேன். தமிழையும், அதன் கலாச்சாரப் பெருமைகளையும் தாம் வாழும் புலம்பெயர் தேசத்தில் காப்பாற்றி வளர்த்து வருகிறோம் எனும் நம்பிக்கையில் எம்மவர் நிகழ்த்தும் பல நிகழ்வுகளுக்கான உண்மை விளக்கங்களின் அடியில் ஒளிந்திருக்கும் மனப்பான்மையை கொஞ்சம் வெளிக்கொணர்வதே எனது இந்த மடலின் சாரமாக அமைகிறது. மனம் நிறைய எமது கலாச்சாரப் பெருமைகளைச் சுமந்தபடி அந்நிய தேசத்தினுள் நுழைகிறோம். நாம் நுழையும் அந்நிய தேசங்களில் எமக்கு வரவேற்பளித்து எமது தனிமனித உரிமைகளுக்கு மதிப்பளித்து நாம் அவர்களின் சட்டவரம்புக்கு உட்பட்டு எமது கலாச்சாரத்தை வளர்ப்பதற்கு அவர்கள் எவ்விதத் தடையும் போடுவதில்லை. எமது உள்ளங்களில் தேக்கி வைத்திருக்கும் கலாச்சாரங்களைக் காப்பாற்றும் திறன் எமக்குள் இல்லை என்றாலும் இருக்கவே இருக்கிறார்கள் எமது குழந்தைகள். என்ன செய்கிறோம் ? எமது கனவுகளை கலாச்சாரம் எனும் பெயரில் எம்மைப் பிணைத்திருக்கும் விலங்கினை நாம் பாசக்கடமை எனும் பெயரில் எமது குழந்தைகளின் மீது பூட்டி விடுகிறோம். இந்தப் புலம்பெயர் தேசத்தில் பிறந்து வளர்ந்த எமது குழந்தைகள் தம் வாழ்வுக்கான கல்வியைப் பெற்றிட செய்யும் முயற்சிகளோடு பெற்றவர்களின் கலாச்சார சுமைகளையும் சேர்ந்தே சுமக்கிறார்கள்.
என்ன சக்தியின் மடல் எந்தத் திசை நோக்கிச் செல்கிறது என்கிறீர்களா ? இங்கிலாந்தில் நிகழும் பல அரங்கேற்றங்களையும் அவற்றின் பின்னால் புதைந்திருக்கும் பல துயரங்களையும் கண்ணுற்றதினாலும், கேள்வியுற்றதினாலும் எழுந்த ஆதங்கத்தின் வெளிப்பாடே இம்மடல். ஆமாம் நடனம், இசை, பாடல் எனும் பல கலாச்சார விழுமியங்களின் அடையாளச் சின்னங்களாக தமது வாரிசுகள் வருவதின் பெருமைக்காக பெற்றோர்கள் பலர் படும் இன்னல்கள் சொல்லிலடங்கா. இங்கே நடைபெறும் அரங்கேற்றங்கள் சிலவற்றின் செலவு ஒரு வாரிசின் ஆடம்பரமான திருமணச் செலவுக்கு இணையானது. அத்தகைய நிதியை வங்களில் கடனாகப் பெற்றுக்கூட இத்தகைய நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. இவற்றில் பல அந்த ஒரு அரங்கேற்ற நிகழ்வின் பின்னால் ,அவ்வரங்கேற்றம் செய்த மாணவ மாணவிகளினால் மீண்டும் ஒருபொழுது கூட உபயோகிப்படக்கூடாத நிலையை நான் பல இடங்களில் கண்டிருக்கிறேன். ஆனால் அதேசமயம் தங்களுக்கு பிடித்ததினால், இக்கலைகளைப் பயிலும் பல மாணவ மாணவிகள் இல்லாமல் இல்லை. அவர்களின் திறமைகளையும், அவர்களின் கலச்சார அடையாளப் பாதுகாப்பையும் பார்த்து நான் பிரமிக்கத் தவறுவதில்லை.
என்னுடைய ஒரே ஆதங்கம் கலாச்சாரப் பாதுகாப்பு எனும் பெயரில் பிடிக்காத ஒன்றைத் தமது சுயமகிழ்வுக்காக தமது குழந்தைகளின் மீது திணிக்கும் முறை சரிதானா என்பதே ! புலம்பெயர் வாழ்வில் எமது இளமைக்காலத்தில் தாய்நாட்டுக் கலாச்சாரத்தில் வளர்ந்து விட்டு பின்பு புலம்பெயர் தேசக் கலாச்சாரப் பின்னனியில் இணைந்து வாழ்வதென்பது ஒரு சுலபமான காரியமல்ல. அவ்வாழ்வில் எங்கே நாம் நமது அடையாளத்தை இந்த அந்நிய தேசத்தில் தொலைத்து விடுவோமோ எனும் பயத்தில், தீவிரமான நடவடிக்கைகளில் இறங்குவது எதிர்பார்க்க வேண்டிய ஒன்றே. ஆயினும் இப்புலம்பெயர் தேசத்தை நமது வாழ்நாடாக எடுத்துக் கொள்ளும் போது, இத்தகைய குழப்பங்களுக்குள் நம்மைப் புகுத்திக் கொள்ளாமல் தப்பித்துக் கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வது அவசியமே !
மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்
http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan