பவள சங்கரி

சிறுவர் இலக்கியம்

ஒரு படைப்பிற்கு ஆரம்பம் என்பது எவ்வளவு முக்கியமானதொன்று என்பதை அறிந்திருப்போம். முதல் கோணல் முற்றும் கோணல் என்பார்கள். முதல் பகுதி சுவையாக அமைய கருத்தில் கொள்ளவேண்டிய சில விசயங்களைப் பார்ப்போம்.

⦁ கதை அல்லது நாடகம் என எதுவாயினும் நினைவில் நிற்கக்கூடிய ஒரு கதாபாத்திரத்தை உருவாக்குங்கள். முதல் அறிமுகம் வித்தியாசமானதாக இருக்கட்டும்.
⦁ கதை நாயகனுக்கு ஏற்படப்போகும் பிரச்சனையோ அல்லது எதிர்ப்போ அதற்கான ஒரு குறிப்பைக் கொடுக்கலாம்.
⦁ அந்தப் பிரச்சனை ஏன் அவ்வளவு மோசமானது என்பதற்கான காரணத்தைச் சொல்லலாம்.
⦁ அதன் தீர்வு ஏன் அவ்வளவு முக்கியமானது அல்லது தீர்ப்பதில் என்ன சிரமம் என்பதைக் குறிப்பிடலாம்.
⦁ கதாநாயகனோ அல்லது நாயகியோ அதற்கான முயற்சியாக என்ன செய்கிறார்கள் என்பதைச் சொல்லலாம்.
⦁ சரியான நேரத்தில், இடைவெளியில் ஆரம்பப்புள்ளியை அழுத்தமாகப் பதிக்கவேண்டும்.
⦁ இயன்றவரை தேவையற்ற வார்த்தைகளைத் தவிர்த்து சுருக்கமாகவும் சுவையாகவும் கொடுக்க முயலவேண்டும்.
⦁ பரீட்சார்த்தமான புதிய யுக்திகள் உதிக்கும்போது அதை ஒதுக்கத் தேவையில்லை. துணிவுடன் முயன்று பார்க்கலாம்.
⦁ கதாநாயகி அப்பாவை மட்டுமே சந்திக்கவேண்டும், அப்பா பற்றி மட்டுமே பேசவேண்டும் என்று நினைக்க வேண்டியதில்லை. நல்ல நட்பையோ, நல்ல ஆசிரியரையோ, தான் சம்பந்தப்பட்டத் துறை நிபுணரையோ, தலைவர்களையோ போன்ற பரந்துபட்ட சிந்தனையை வெளிக்கொணரலாம்.
⦁ ஆழ்ந்த பெருமூச்சுடன் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு அடுத்த கட்டத்திற்குச் செல்லலாம்.

தொடரும் ஆரம்பத்துடன் அடுத்தகட்ட நகர்வுகள் ஆச்சரியமான அனுபவங்களைக் கொடுக்கவல்லதாக இருப்பது நலம். வாசகர்களை சுண்டியிழுக்கும் சுவையான பகுதிகளாக அவை இருக்கவேண்டியது அவசியம். கதை முழுவதும் முடியும்வரை எந்த கவனச் சிதறல்களும் ஏற்படாதவாறு கட்டிப்போட்டு வைப்பது சிறந்த படைப்பாகக் கருதப்படும்.

மேற்கண்ட கருத்துகளை நடைமுறைப்படுத்துவது எப்படி? ஆரம்பப்பகுதியை ஆய்ந்தறிந்து அதன் போக்கில் கதையை நகர்த்திச் செல்வது எளிது.

கதை சொல்வதற்கான சில வழிமுறைகள் பற்றி பார்ப்போம்:

ஆரம்பப்பகுதியைத் தொடர்ந்து அதே நடையில் முன்னேறிச் செல்வது. ஒவ்வொரு படியாகக் கடந்து தொய்வில்லாமல் கதையை முன்னோக்கி மட்டும் நகர்த்திச் செல்வது. இந்த முறையில் கருப்பொருளை உருவாக்குவதும் எளிதாகும். ஆனாலும் இந்த முறையில் மட்டுமே மேலெடுத்துச் செல்ல வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும். அதாவது கதையை பின்னோக்கி எடுத்துச் செல்லும் ஃபிளாஷ்பேக் என்ற உத்தி இல்லாமல் கதையின் போக்கில் முன்னேற்ற வாய்ப்புகள் குறைவாகவே இருக்கக்கூடும்.

“வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும்!” என்ற என் கதையின் ஆரம்பப்பகுதி ….

சிரிப்பு என்றால் என்ன? இதைக்கேட்டவுடன் சிரிப்பு வருகிறதா? ஆமாம், இந்த உலகில் உள்ள பல கோடி உயிரினங்களில் மனிதனால் மட்டுமே சிரிக்க முடியும் தெரியுமா? . மனிதரோடு உடன் பிறந்த உணர்வுகள் பல. அதில் மிகவும் முக்கியமானது சிரிப்பு. நாம் ஒரு முறை சிரிக்கும் போது நம் உடலின் 300 தசைகள் அசைகின்றன என்கிறது விஞ்ஞானம். இந்த சிரிப்பு, உடல் ஆரோக்கியமாக இருக்கக்கூடிய மனிதர்களிடமிருந்து வித விதமான சந்தர்ப்பங்களிலும் இயல்பாகத் தானாக வெளிப்படக்கூடிய ஒன்று. சிரிப்பு மட்டுமே நம் மனதையும், உடலையும் வலிமைப்படுத்தி புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கக்கூடியது என ஆய்வுகள் கூறுகின்றன. மனம் விட்டு, வாய்விட்டுச் சிரித்தால் நம் உடலிலும், மனதிலும் உள்ள அழுத்தங்களும், கவலைகளும் வெளியேறுகின்றன. முகத்திலுள்ள தசைகளும், நெஞ்சுத் தசைகளும் பலம் பெற்று ஆரோக்கியத்தைத் தருகின்றன. நோய் எதிர்ப்பு சக்தியும் கூட அதிகமாகின்றதாம். சிரிக்கும் போது கவனித்துப் பாருங்களேன். மூச்சை நம்மால் ஆழமாக இழுக்க முடியும். அதனாலேயே தேவையான ஆக்சிஜனை எளிதாக உள்வாங்கிக் கொள்ள முடிகிறது. மகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடிய ஹார்மோன்களை இந்த சிரிப்பின் மூலம் மூளை உடலுக்கும் பரவச்செய்வதால், உடலும் நல்ல ஆரோக்கியமாக ஆகிறது. கபடமற்ற குழந்தைகள் கண்டதற்கெல்லாம் சிரித்து மகிழ்வார்கள். அவர்கள் நாளொன்றுக்கு சராசரியாக 400 முறைகள் சிரிக்கிறார்கள் என்றும் , பெற்றோர்கள் 15 முறைகள் மட்டுமே சிரிக்கிறார்கள் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. சிரிப்பு என்பது ஒரு தொற்று வியாதி போல. ஆமாம், கூட்டமாக இருக்கிற ஒரு இடத்தில் ஒருவர் சிரிக்க ஆரம்பித்தால் அது மளமளவென்று அங்கிருக்கும் அனைவரையும் தொற்றிக்கொள்ள ஆரம்பித்துவிடும். சிரிப்பில், புன் சிரிப்பு அசட்டுச் சிரிப்பு, ஆணவச் சிரிப்பு, ஏளனச் சிரிப்பு, சாகசச் சிரிப்பு, நையாண்டிச் சிரிப்பு என பலவகை உண்டு.

அடுத்து நேரடியாக முன்னேறிச்செல்லும் இடைப்பட்ட பகுதியின் ஆரம்பம் இப்படிச் செல்கிறது ….

“பெருந்தலைவர்கள், சொற்பொழிவாளர்கள் போன்ற பலர் இயல்பாகத் தங்கள் நகைச்சுவையை வெளிப்படுத்தி சபையோரை சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பார்கள். சில கலைஞர்களைப் பார்த்தவுடன் பொத்துக்கொண்டு சிரிப்பு வரும். அவர்களுடைய ஒவ்வொரு நடவடிக்கையும் , கண்களை உருட்டிப் பார்க்கும் ஒரு பார்வை கூட, அப்படி ஒரு சிரிப்பை வரவழைத்துவிடும், சார்லி சாப்ளின் படம் பார்த்திருப்பீர்கள் இல்லையா. அதுபோல இன்றும் கூட பல திரைப்பட நடிகர்கள் மற்றும் நாடக நடிகர்களென பலர் இருக்கிறார்கள்”

இங்கு ஃபிளாஷ் பேக் என்ற பின்னோக்கிச் செல்லும் உத்தியுடன் கதை எளிதாக முன்னேறும் வகையைக் காணலாம்……..

…….மிகப்பெரும் தத்துவ அறிஞரான பெர்னாட்ஷா, ஒரு முறை அழைப்பின் பேரில் ஒரு வயலின் கச்சேரிக்குச் சென்றிருந்தார். கச்சேரி முடிந்தவுடன், அங்கிருந்த பெண் நிர்வாகி ஒருவர் இவரிடம் வந்து, வயலின் வாசித்த அந்த கலைஞரைப் பற்றி தான் நினைப்பதைக் கூறும்படி கேட்டார்.

அதற்கு ஷா சற்றும் தயங்காமல், ” பாதரவ்ஸ்கியை (பாதரவ்ஸ்கி இன்னொரு இசைக் கலைஞர்) நினைவூட்டுகிறார்” என்று பதில் அளித்தார்.

அந்த நிர்வாகிக்கு இந்த பதில் மிகவும் ஆச்சரியமாகிவிட்டது. “பாதரவ்ஸ்கியா..? அவர் ஒரு வயலின் கலைஞர் இல்லையே.” என்று இழுத்தார்.
அதற்கு ஷாவும் முகத்தில் எந்தவிதமான உணர்வையும் காட்டாமல், “இவர் மட்டும் என்னவாம்?!” என்றாராம்.
அந்த நிர்வாகியின் முகத்தில் ஈயாடவில்லையாம், …………

நடந்து முடிந்த பழைய சம்பவங்களை நினைவுகூர்ந்து அதை நடப்பு நிகழ்வுடன் பொருத்துவதன் மூலமாக சுவையாக முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. கதையின் கருவிற்கு ஏற்ற பழைய நிகழ்வுகளை எடுத்துக்காட்டாக விளக்குவதன் மூலம் கதையின் ஓட்டமும் தொய்வில்லாமல் பயணிக்க வழிவகுக்கும். கிளைக்கருவை நகர்த்துவதற்கான சிறு விளக்கங்களும் கொடுப்பதற்கு ஏதுவாகும். ஒரு குறிப்பிட்ட கதாப்பாத்திரமோ அல்லது மையக்கருவின் கருத்தையோ ஒளியூட்டக்கூடிய வகையில் அமைந்துவிடுகிறது. முக்கியமான கதாநாயகப் பாத்திரத்தை மெருகேற்றவும் செய்கிறது. கதைக்கு மென்மை மற்றும் ஆழ்ந்த தன்மையை வழங்குகிறது.

ஃபிளாஷ் பேக் உத்தியில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, குழந்தைகளுக்கு நிகழ்கால சம்பவமா அல்லது நடந்து முடிந்த பழைய சம்பவமா என்ற குழப்பம் ஏற்படாதவாறு இருக்கவேண்டும். நேரத்தை சரியாகக் கணக்கிட்டு நிகழ் காலத்திற்கு சரியான நேரத்தில் வந்து சேர்ந்துவிட வேண்டும்.
மேற்கண்ட கதையில் வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகும் என்ற மையக்கருவிற்கு வளம் சேர்க்கும் வகையில் முக்கியமான கதாபாத்திரங்களின் பழைய சம்பவங்களை பின்னோக்கிப் பார்த்து விளக்கப்பட்டுள்ளது.
தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *