Blog

  • தமிழ் இலக்கியத்தில் பண்பாட்டுப் பதிவியல்

    ம. பூங்கோதை

    முனைவர்பட்ட ஆய்வாளர்

    தமிழ்த்துறை

    நேரு கலை அறிவியல் கல்லூரி

    திருமலையம்பாளையம்

    கோயம்புத்தூர் – 105

     

    இனிமையும்,  பழமையும்,  சிறப்பும்  வாய்ந்த  தமிழ்மொழியில்  இலக்கியங்கள் சிறந்த  இடத்தை  வகிக்கின்றன.   இந்த  இலக்கியங்கள்  மூவேந்தரையும், முத்தமிழையும்  கொண்டு  முறையான  தகுதி  பெற்றது.   இதில்  சங்க  இலக்கியம்,  காப்பிய  இலக்கியம்  என்று  பலவகை  இருப்பினும்  இக்கால  இலக்கியம் தனக்கென்று ஒரு தனிச்சிறப்பைப் பெற்றுள்ளது.

    இக்கால இலக்கியம் :

    இக்கால இலக்கியமானது சமுதாயச் சீர்திருத்தத்தை கொண்டு வருவதுமாய், சமுதாயச்  சீர்கேடுகளை  களைவதுமாக  அமைந்து,  மனிதனின்  வாழ்க்கை முறையோடு  பின்னிப்பினைந்து ஓர் குறிக்கோளோடு  படிப்பவரின்  ஆர்வத்தை தூண்டுவதாக  அமைகின்றது. அதிலும்  சிறுகதைகள்  வாழ்க்கை  நெறிகளை வகுத்துக்காட்டி தனி இடம் பெற்றுள்ளன.

    பண்பாடு

    ஒரு  சமுதாயத்தில்  வாழும்  மக்களின்  வாழக்கை  அமைப்பு  முறையின் வெளிப்பாடே  பண்பாடாகிறது.   வாழ்க்கை  அமைப்பு  என்பது  அச்சமுதாயத்தின் பழக்கவழக்கங்கள்,  நம்பிக்கைகள்,  மரபுகள்,  கலைகள்,  இலக்கியங்கள் முதலியவற்றில்  அறியப்படுவது.  சுருங்கக்கூறின்  பண்பாடென்பது  ஒரு தலைமுறையினர்  சென்ற  தலைமுறையினரிடம்  பெற்றுக்கொண்ட  வாழ்க்கை முறையாகும்.

    பண்பாடு  என்பது  ஒரு  குழுவினரின்  வாழ்க்கை  முறையாகும்.  அது  மொழி மற்றும் பாவனைகள் மூலம் ஒரு சந்ததியினர் பிறிதொரு சந்ததிக்கு விட்டுச்செல்கின்ற, பகிர்ந்து  கொள்ளப்படும்  கருத்துக்களின்  தொகுதிகள்  மற்றும்  தேறிய நடத்தைகளின்  மாதிரிகள்.  நாவல்கள்  வாழ்க்கை  நெறிகளையும்,  பரிமாறிக் கொள்ளும் எண்ணங்களையும் அழகாய் எடுத்து இயம்புகிறது.

    பண்பாட்டுக் கூறுகள்

    எஸ்.ராமகிருஷ்ணன்  அவர்களின்   “என்ன  சொல்கிறாய்  சுடரே”  என்ற சிறுகதை  தொகுப்பில்  கலாச்சாரம்,  பண்பாடு,  இல்வாழ்க்கை,  விருந்தோம்பல், தாய்மை,  ஒற்றுமை,  நட்பு,  முயற்சி  போன்ற  கூறுகள்  பாத்திரங்கள்  வழியே இடம்பெற்று மனதில் நீங்காவண்ணம் சிறந்து விளங்குவதாய் அமைந்துள்ளது.

    இல்வாழ்க்கை

    (“அன்பும்  அறனும்  உடைத்தாயின்  இல்வாழ்க்கைப்  பண்பும்  பயனும்  அது”)கணவன்,  மனைவி  இடையே  அன்பும்,  பிணைப்பும்  அறநெறியில்  ஒழுகுதலும் இருக்குமாயின்  அந்த  வாழ்க்கையின்  பண்பும்,  பயனும்  அதுவே  என்ற  வள்ளுவர் வாக்கிற்கிணங்க,  எஸ்.  ராமகிருஷ்ணன்  அவர்கள்  இரவு  நடை, காகித  வளையம் என்ற இருகதைத் தொகுப்பில் அழகாய் சித்தரிக்கின்றார்.

    இரவுநடை : (பாத்திரங்கள் – முரளி, அபர்ணா)

    முரளி,  அபர்ணா  இருவரும்  27  வருடங்கள்  தனது  வாழ்க்கைப்  பயணத்தை தொடர்ந்தார்கள்.  மகள்,  மகன்  என  இருவரையும்  தகுதிபெற்ற  நிலையில்  கல்வி, வேலைவாய்ப்பு,  திருமணம்  என்று  அனைத்தையும்  நிறைவு  செய்துவிட்டுத் தனிமையை  அனுபவிக்கின்றனர்.   ஒரு  நாள்  இரவு  அபர்ணா  நடைபயிற்சிப்  போக வேண்டும்  என்று  முரளியிடம்  கேட்க  இரவு  11.30  மணி  என்று  கூறியும்  போகலாம் என்ற  அபர்ணாவின்  ஆசையை  நிறைவேற்றும்  வண்ணமாய்  முரளி  அமைகின்றான்.

    அப்போது இருவரும் தன் 27 வருடங்களுக்கு முன்பு பார்த்த பல இடங்களை காணும்  போது, அவை  பெரிதும்  மாறுபட்ட  நிலையில்  உள்ளன.  அபர்ணா, முரளியை  பார்த்து  இந்த  நாள்  27  வருடங்களுக்கு  முன்பு  உங்களுக்கு  ஞாபகம் இருக்கிறதா  எனக்  கேட்க  அதே  பாசத்துடனும்,  நேசத்துடனும்  அந்த  நாளை மறக்க முடியமா என்று கூறி இருவரும் ஆனந்தப்பட்டனர்.

    இவ்வாறாகப்  பேசி  கடைசியில்  வீட்டை  அடைந்தனர்.  அவள்  கால்கடுத்த நிலையில்  அமர  தேநீர்  அருந்துகிறாயா  என்று  கேட்டு  அதனை  எடுத்து வருவதற்குள்  அவள்  உறங்கிவிட்டாள்.  அவளுக்கு  போர்வை  அணிந்துவிட்டு பக்கத்திலே உட்கார்ந்த படியாக முரளி அவளை இரசிக்கின்றான்.

    ஐங்குறுநூலில் இல்லறம் சிறக்க கூறிய வழி போல,

    வாழி அதன், வாழி அவனி

    பால் பல ஊறுக! பகடுபல சிறக்க

    வாழி ஆதன், வாழி அவனி

    பகைவர் புல் அர்க! பார்ப்போர் ஓதுக!

    வாழி ஆதன், வாழி அவனி

    பசி இல் லாகுக! பணிசேண் நீங்குக!

    வாழி ஆதன்! வாழி அவனி

    அரசுமுறை செய்க! களவு இல்லாகுக!

     (ஐங்குறுநூறு, வேட்கைபத்து:3)

    என்ற வரிகளுக்கு இணங்க பசி,  பிணி  ஆகியவை  இல்லாமல்  இருக்கும்  இடத்தில்  இல்லறம்  சிறக்கும், மன்னவன் காவல் இன்றியமையாதது என்பதை எண்ணுகிறான் முரளி.

    எத்தனை  காலங்கள்  கடந்தாலும்  கணவன்  மனைவி  இடையே  உள்ள பாசமும்,  பந்தமும்  மாறாது.  உலக  வாழ்க்கையில்  எத்தனை  மாற்றங்கள் ஏற்பட்டாலும்  இல்வாழ்க்கை  இனிமையையே  பயக்கும்  என்று  எஸ்.  ராமகிருஷ்ணனின் கதைகள் அழகாய் நம்மை நம் வாழ்க்கையை த் திரும்பிப் பார்க்க  வைக்கின்றது.

    காகித வளையம் : (பாத்திரங்கள்- கேசவன், வேணி)

     “ஒருவனுக்கு ஒருத்தி”  என்ற வரிகளுக்கு ஏற்பவும்“பெற்றான்  பெறின்பெறுவர்  பெண்டிர்  பெருஞ்சிறப்புப்  புத்தேளிர்  வாழும் உலகு”  (குறள் 58) என்ற குறளில் தம் கணவனை போற்றிக் கடமை செய்யும் மகளிர் பெரும் சிறப்புடைய புத்தேளிர் வாழும் மேலுக வாழ்வினைப் பெறுவர் என்ற வள்ளுவர்  வாக்கிற்கிணங்க  இந்த  கதையில்  வரும்  கதாபாத்திரம்  அமைவதாக எஸ்.ராமகிருஷ்ணன் விளக்குகிறார்.

    காகித வளையம்  என்ற  கதைத்  தொகுப்பில்  கேசவன்,  வேணி  இருவரும் பரஸ்பர  அன்புடன்  ஒருவரை  ஒருவர்  விட்டுப்பிரியாது  அவனை  அவளுக்குள்ளும் அவளை  அவனுக்குள்ளும்  இரு  இதயங்கள்  கலந்த  ஒரு  உயிராக  வாழ்ந்து வருகின்றனர்.

    “ நீர் இன்று அமையா உலகம் போலத்

    தம் இன்று அமையாராம்! (நற்றினை1)

    – என்ற வரிகளுக்கு ஏற்ப தண்ணீர் இல்லாமல் உலகம் இல்லை அதுபோல நீ இல்லாமல் நான்  இல்லை  என்று  இருவரும்  இருந்த  நிலையில்  இழக்க  முடியாத பேரிழப்பாக வேணி,  கேசவனை  விட்டு  பிரியும்  நிலை  உருவாகின்றது.   அவள்  இருந்த காலத்தில்  கல்லானாலும்  கணவன்,  புல்லானாலும்  புருஷன்  என்றும்  கணவனையே “கொழுநன்  தொழுது  எழுபவளாகவும்”  வாழ்ந்தாள்.  அவளுடைய அரவணைப்பு அவனை விடாது வருத்திக் கொன்றது. கேசவன்  அந்த  அணைப்புக்காக  ஏங்குகிறான்  பலப்  பெண்களை  காண்கிறான் இருந்தாலும் அவன் மனம் அதற்கு இடம் கொடுக்கவில்லை.

    கடற்கரைக்குச் சென்று கடல்  அலையையே  வேணியாக  எண்ணி  அதனுடனே  தன்  சங்கடங்களைப் பகிறுகிறான்.  பின்பு  பெண்மை  மதிக்கப்பட  வேண்டும்,  பெண்ணியம்  பேசப்பட வேண்டும்,  பெண்கள்  போற்றப்பட  வேண்டும்,  அவர்கள்  தங்களை  நமக்காக அற்பணிப்பது நமக்கு தரும் தண்டனை! அதை என்னாளும் ஏற்று அதற்கு துரோகம் செய்யாது வாழ வேண்டும் என்று நினைத்து இது அவளுக்கும், எனக்கும் இடையில் இருந்த பரிபாஷை தானோ என்று கூற விளைகிறான். இவ்வாறாக இக்கதையில்  எஸ்.ராமகிருஷ்ணன்  சமுதாயத்தில்    கணவன்  –  மனைவி  சண்டை, விவாகரத்து  இவற்றை விட்டு  வெளியே  வரவேண்டும்.  இல்வாழ்க்கை  மிகவும்  இனிமையானது  அதனை இனிமையாய்  நுகர்ந்து  அனுபவிக்க  வேண்டும்  என்ற  கருத்துக்களை  அழகாகக்  கூறியிருக்கிறார்.

    விருந்தோம்பல் – கலாச்சாரம் :

    “அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து

    நல்விருந்து  ஓம்புவான்  இல்”  (குறள்  84)

     என்ற  குறளில்  முகமலர்சியோடு நல்ல விருந்தினரைப் போற்றுகின்றவள் உடைய வீட்டில் திருமகள் மனம் மகிழ்ந்து வாழ்வாள்  என்ற  வாக்கிற்கிணங்க  எஸ்.  ராமகிருஷணன்  அவர்களின்   “அதிகம் இனிப்பு”   என்ற கதை  அமைந்துள்ளது.

    அதிகம் இனிப்பு (பாத்திரங்கள் ஷியாமளா, அருட்செல்வன், கன்னையன்)

    ஷியாமளா,  அருட்செல்வன்  இருவரும்  வீடுகட்ட  நிலம்  வாங்க  வேண்டும் என்ற  எண்ணத்தில்  சிறுக,  சிறுக  பணம்  சேர்க்கின்றனர்.   அருட்செல்வன் கல்லூரியில்  உதவி  பேராசிரியராகவும்,  ஷியாமளா  இன்ஷீரன்ஸ் கம்பெனியில் பணிபுரிபவராகவும் இருக்கின்றனர். கன்னையா தனது நண்பன் ஸ்டீபன் உதவியின் மூலம்  அருள்  செல்வத்தின்  தொலைபேசி  எண்ணை  பெற்றுக்  கொண்டான்.  பின்பு கன்னையா  அவரிடம்  தொடர்பு  கொண்டு  பேசுகையில்  அருட்செல்வம்  அந்த இடத்தினை  வாங்க  ஒப்புதல்  கூறி  நாளை  நேரில்  வரும்படியும்  கூற,  அடுத்த  நாள் கன்னையா  அவர்களை  சந்திக்கையில்  இருவரும்  கண்பார்வையற்றவர்  என்பதை உணர்கிறான்.

    இருப்பினும் பணத்தின் மோகம் காரணமாக அவர்களை ஏமாற்ற ஒரு பொய்யான  பத்திரத்தைச்  செய்து  அவர்களுக்கு  கொடுத்து,  நாளை  முன்தொகையைச் செலுத்தலாம்  என்று கூறி  ஷியாமளா  வீட்டிற்கு  மூவரும்  திரும்புகின்றனர்.  வீட்டிற்கு வந்தவர்களை நன்று கவனிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்

    “ திருவிருந்த தண்டலையார் வளநாட்டில்

    இல்வாழ்க்கை செலுத்தும் நல்லோர்

    ஒருவிருந்தா கிலும் இன்றி உண்டபகல்

    பகலாமோ உறவாய் வந்த

    பெருவிருந்துக்கு உபசாரம் செய்தனுப்பி

    இன்னும் எங்கே பெரியோர் என்று

    வருவிருந்தோடு உண்பது அல்லால் விருந்து இல்லாது

    உணும் சோறு மருந்து தானே!” (தண்டலையார் சதகம் :9)

    என்ற  தண்டலையார்  பாட்டிற்கிணங்க  வீட்டிற்கு  வந்தவர்க்கு  உணவளிக்காது  தாம் உண்பது  சரியல்ல.  இவ்வாறு  இருப்பதே  சிறந்த  இல்வாழ்க்கை  என்ற கருத்திற்கேற்ப அவள் கன்னையாவுக்கு இலைப்போட்டு பரிமாறி அனுப்புகிறாள். இந்த  விருந்தோம்பல்  பண்பு  அவர்களை  ஏமாற்ற  வேண்டும்  என்ற  எண்ணம் கூட மாறி அவர்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணம் கன்னையாவிற்கு எழுகிறது. அடுத்த நாள் அது வேறொருவற்கு கிரையம் ஆகிவிட்டதாகக் கூறி அவர்களின் முன்  தொகையைத்  திருப்பிக்  கொடுத்து  தங்கையை போல  எண்ணுகிறேன் என்று பாச உணர்வினையும் கன்னையா என்ற பாத்திரத்தின் மூலமாக எஸ்.ராமகிருஷ்ணன் விளக்குகிறார்.

    கலாச்சாரம் :

    “நல்விருந்து ஓம்பலின் நட்டாளம் வைகலும்

    இல்புறம் செய்தலன் ஈன்றதாய் தொல்குடியின்

    மக்கள் பெறலின் மனைவி கிழத்தி இம்மூன்றும்

    கற்புடையாள்  பூண்டகடன்”  (திரிகடுகம்  :  3) 

    என்று  கூறும்  பாடலுக்கு  ஏற்ப ஒரு பெண் தன் கணவனுக்குத் தாயாக, மனைவியாக, தோழியாக விளங்கவேண்டும் என்னும்  நிலையோடு  விளங்குவதாக  இந்த  கதாபாத்திரத்தின்  மூலம் எஸ்.ராமகிருஷ்ணன் கூறுகிறார்.

    ஷியாமளாவும்,  அருட்செல்வமும்  கண்பார்வை  அற்றவர்கள்  இருந்தாலும் ஒருவரை  ஒருவர்  புரிந்து  கலாச்சாரத்தோடும்,  மானம்,  மரியாதை  இவற்றோடும் பல்வேறு  மக்களின்  முன்னிலையில்  தனி  இடத்தைப்  பெற்று  வாழவேண்டும்  என்ற எண்ணத்தின்  அடிப்படையில்  வாழ்கின்றனர்.   இதன்  மூலம்  எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள்  சமுதாயத்திற்கு  ஊனம்  ஒரு  குறையில்லை  என்பதையும்  , அவர்கள்  நல்ல  கலாச்சாரத்தோடு  வாழ்வதையும் உணர்த்துவதோடு  அதை  நாமும்  கடைபிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தைப் பதிவு செய்வதாக இக்கதையை அமைத்திருக்கிறார்.

    தாய்மையும், முயற்சியும் :

    “ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனை

    சான்றோன்  எனக்கேட்ட  தாய்”

     (குறள்  69)  என்ற  குறளில்  தன்  மகன் சான்றோன்  என்று  கேட்கும்  போது  அவனை  பேறுபெற்ற  போது  அடைந்த இன்பத்தை  விட  பேரின்பம்  அடைவதாக  தாய்  எண்ணுகிறாள்.   என்ற வள்ளுவர்வாக்கிற்கிணங்க  எஸ்.ராமகிருஷ்ணனின்  “தனிமை  வெளிச்சம்” அமைகின்றது. தாய் சான்றோன் என்று தன்னை கேட்க வேண்டும் என்ற நிலையில் படித்து வேலை  தேடிஅலையும்  இளைஞன்  அடுக்குமாடி  குடியிருப்பில்  தங்கி  வசித்து வந்தான்.  ஒரு  நாள்  தனது  அறையில்  பல்பு  எரியவில்லை  என்று  குடியிருப்பு முதலாளியிடம் கூற விளைகையில் கீழ் அறையில் இருக்கும் 40 வாட்ஸ் பல்பினை எடுத்துப்  போட்டுக்  கொள்ளும்படி  கூறியிருக்கிறார்.   அந்த  பல்பானது இவனது அறைக்கு  வந்தவுடன்  ஒரு  பெண்  குரல்  கொண்டு  பேசுகிறது.   இழந்த  தாய் தன்னுடன்  மீண்டும்  வந்து  சேர்ந்ததாக  எண்ணி  மிகவும்  சந்தோ ஷப்பட்டு  முயற்சி எடுத்து வேலைதேட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்குகிறது.

    “முயற்சி  திருவினையாக்கும்  என்றும்,  முடியாது  என்ற  முட்டுக்கட்டையை முயற்சி என்ற கோடாறியால் தகர்த்தால் வெற்றி என்னும் விறகு கிடைக்கும் என்ற வரிகளை  மனதில்  கொண்டும்,  வேலை  தேடி  அலைந்து  ஒரு  நல்ல  வேலையைப் பெறுகிறான்.

    கடமையைக் கண்ணாய் கொண்டால்

    காலனும் கைகட்டி சேவகம் செய்யும்

    முயற்சியை மூச்சாய் கொண்டால்

    மலைமுகடு கூட காலடியில் படியாய் மாறும்!

    என்ற   எண்ணத்திற்கு  ஏற்ப  கடமையைச்  செய்கிறான்.  தன்  வருமானத்தினைப் பெருக்குகிறான்.   இந்தக்  கதாபாத்திரம்   முயற்சி  இருந்தால்  மட்டுமே  தோல்வியை  வெற்றியாய்  மாற்ற  முடியும்  என்ற கருத்தினைச் சமுதாயத்திற்கு எடுத்து இயம்புவதாக அமைகின்றது. அந்த  இளைஞன்  முதல்  சம்பளத்தினை  அந்த  பல்பின்  முன்பு  நீட்டுகிறான். அந்த தாய் குரல் அதிக சந்தோஷத்துடன், இது உன் பணம் முறையாய் அனுபவி என்று  கூறுகிறது.   பின்பு  வசதிகள்  பெருக  அந்தக்  குடியிருப்பு  அவனுக்குப் போதுமானதாக இல்லை. பின்பு ஒரு தனிவீட்டிற்கு செல்கிறான். அங்கு அவன் அந்த பல்பினை  எடுத்துக்  கொண்டு  போடுகிறான்.  இங்கு  இருந்தது  போல  அது பேசவில்லை.  ஆத்திரம்  கொள்கிறான்.  பின்பு  கோபத்தில்  அதனைப்  போட்டு உடைக்கின்றான்  அப்போது  அது,  “காலில்  கண்ணாடிகள்  குத்தப்  போகின்றன பார்த்து”  என்று  கூறியதும்,  அவன்  இழந்த  தாயை  எண்ணி  மிகவும் வேதனையுறுகிறான்.

    எஸ்.  ராமகிருஷ்ணனின் இக்கதை  தாய்  –  மகன்  இடையே  உள்ள  உறவினையும், தாய்மை பண்பினையும் அழகாய் கூறியதோடு“வீட்டின் பெயரோ அன்னை இல்லம் அன்னை   இருப்பதோ  அனாதை  இல்லம்  “ என்று  வாழும்  இன்றைய சமுதாயத்தினருக்கு  தாய்மை  என்பது  பொக்கிஷம்,  உனது  உயிர்  அதை என்னாளும் கலங்கப்படுத்தாதே என்று கூறுவதாக அமைகிறது. தாய்மையிடமே  அன்பு,  பாசம்,  நேசம்,  கருணை,  இவையாவும்  பிறக்கின்றன. அதனை   கலங்கப்படுத்தாமல்  பார்க்க வேண்டும்,  அவர்கள்  அறிவுரையை  கேட்டு நடக்க வேண்டும் என்று இன்றைய சமுதாயத்தினருக்கு தனிமை வெளிச்சம் மூலம் எஸ்.இராமகிருஷ்ணன் அவர்கள் கூறுகிறார்.

     ஒற்றுமை நட்பு: 

    “மதிமொழி யிடல்மாலை வினைவர்போல் வல்லவர் செதுமொழி சீத்த செவி செறுவாக முதுமொழி நீராப் புலனா வுழவர்

    புதுமொழி கூட்டுண்ணும் புரிசைசூழ் புனலூர்” (கலித்தொகை : 68)

    புலவர்கள்  பலர்  மதுரையில்  இருந்தனர்  என்பதும்  பேராசானாகிய  பாண்டியனுக்கு அவர்தம் செவி செய்யாகவும், சான்றோர் செய்யுள் நீராகவும் அவர்தம் நா ஏராகவும் கொண்டு  புலம்  உழுதுண்ணும்  புலவர்கள் என்பதும்  அவர்கள்  புதிய  பாடல்களை ஒருங்கூடி  ஆய்ந்தனர்  என்ற  தமிழ்  இலக்கியத்தின்  கருத்துக்கேற்ப எஸ்.ராமகிருஷ்ணன்  கதைத்  தொகுப்பில்  “பாதிக்கனவு”  என்ற  தலைப்பில் வர்ணிக்கின்றார். பாதிக்கனவு (பாத்திரங்கள் சத்யன், சீனி, ரவி, விநோத்) இவர்கள்  அனைவரும்  நெருங்கிய  நண்பர்களாக  இருக்கின்றனர்.   சத்யன்  புத்தக ஆர்வம் கொண்டவனாக உள்ளான்.

    “இம்மை பயக்குமால் ஈயக் குறைவன்றால்

    தம்மை வளிக்குமால் தாமுளராக் கேடின்றால்

    எம்மை யுலகத்தும் யாங்காணோம் கல்விபோல்

    மம்மர்  அறுக்கும்  மருந்து”  (நாலடியார்  132)

     என்ற  நாலடியார்  பாட்டில், இவ்வுலக  வாழ்விற்கு கல்வி  கண்போன்றது,  எதையும்  சாதிக்கும் ஓர்  அரிய  கருவி கல்வியாகும்,  இருளழிக்கும்,  ஒளியாக்கும்,  எல்லா  நன்மைகளையும்  தரும்  ஈயக் குறையாது  உன்னையே  உணரச்  செய்யும்,   மெய்ஞானியாக  மாற்றும்,  கல்விதான் அறியாமை  மயக்கத்தை  அகற்றும் அருமருந்து என்ற கருத்துக்களை  உணர்ந்த பாத்திரமாக  சத்யன்  புத்தகங்களை  அதிகம்  படிக்கும் ஆர்வம் உள்ளவனாக இருக்கின்றான். சத்யன் தம் நாட்டு புத்தகங்கள் மட்டுமின்றி பிறநாட்டு  புத்தகங்களையும்  படித்துத்  தனக்கென  ஓர்  தகுதி  படைத்துத்  தன்னுடைய கருத்துக்களை  எல்லாம்  ஒன்று  சேர்த்து  வைத்துள்ளான்.   அவன் அதனை  ஒன்று சேர்த்து  நூலாக்க  வேண்டும்  என்ற  எண்ணத்தில்  இருக்கிறான்.   திடீரென  சத்யன் இறந்துவிடுகிறான்.  அதனால் மனமுடைந்த  நண்பர்களுக்கு,அவனுக்காக  ஏதாவது  செய்ய  வேண்டும்  என்ற  எண்ணம்  மேலோங்குகிறது. அப்போது  அவர்கள் அவனுக்காக  புத்தகம்  போட  வேண்டும்  என்று  பேசி  முடிவு செய்கின்றனர்.

    “மால்வரைக்

    கமழ் பூஞ் சாரல் கவினிய நெல்ல

    அமிழ்து விளை தீங்கின ஒளவைக்கு ஈந்த

    உரவுச்சினம் கனலும் ஒளிதிகழ் நெடுவேல்

    அரவக் கடல் தானை அதிகனும்” (புறநானூறு 99-103)

    என்ற  வரிகளுக்கு  ஏற்ப  பெரிய  மலையில்  கமழும்  பூக்களைக்  கொண்ட பக்கமலையில் கிடைத்த அழகிய கருநெல்லி  என்னும் அமிழ்தினை ஒத்த இனிய கனியினைத்  தான்  நுகர்ந்து  நீண்ட  நாள்  வாழவேண்டுமென  விரும்பாமல் ஒளவைக்கு கொடுத்த அதியமானின் நட்பு போல இந்த கதாபாத்திரங்கள்  தன்  வாழ்க்கையின்  முக்கியத்துவத்தை  எண்ணாது  நண்பனின் முக்கயத்துவம்  கருதி  ஒவ்வொருவரும்  2000  ரூபாய்  போட்டு  அவனது  புத்தகத்தை வெளியிடுகின்றனர்.  இவ்வாறாக இக்கதைகளில்  இலக்கியங்களுக்கு  ஒப்பாகப்  பண்பாட்டுக்  கூறுகள் அமைகின்றன.

    தமிழன்  என்றோர்  இனமுண்டு  தனியே  அவர்க்கோர்  குணமுண்டு  அமிழ்தம் அவனுடைய  மொழியாகும்!  அன்பே  அவனுடைய  வழியாகும் மானம்  பெரிதென உயிர்விடுவான்!  மற்றவர்க்காகத்  துயர்படுவான்  தானம்  வாங்கி  பசித்திடுவான்!  தருவது மேல் எனப்பேசிடுவான்! (பாரதிதாசன்) என்றவாறு விருந்தோம்பல், இல்வாழ்க்கை, தாய்மை, ஒற்றுமை, நட்பு என்ற பண்பாடு கொண்டு  இச்சமுதாயம்  சீர்திருத்தம்  பெற்று விளங்கி  சிறந்ததொரு  சமுதாயமாக விளங்கவேண்டும் என எஸ். ராமகிருஷ்ணன்அவர்கள்  “என்ன சொல்கிறாய் சுடரே” மூலம் உணர்த்துகிறார்.

    நாமும் அவ்வழி செல்வோம் !

    நல்வழி பெறுவோமாக!

    Share
  • திருமந்திரத்தில் சில  சிந்தனைத் துளிகள் 18

    க. பாலசுப்பிரமணியன்

    உள்ளத்தில் உறவாடும் இறைவன்

    திருமூலர்-1-3

    இறைவன் நம்மை எப்படி ஆட்கொள்ளுகின்றான்? அவன் எவ்வாறு நம்மை அவனுக்கே உரியவனாக ஆக்கிக்கொள்ளுகின்றான்? அவனோடு நமக்கு உறவு எவ்வாறு ஏற்படுகின்றது? இந்த உறவை ஏற்படுத்த  முயற்சி செய்வது நாம அல்லது இறைவனா? அவன் எவ்வாறு நமது உள்ளத்துக்குள் வந்து அமருகின்றான்?

    திருமூலர் கூறுகின்றார்:

    பிறவாநெறி தந்த பேரருளாளன்

    மறவா அருள் தந்த மாதவன் நந்தி

    அறஆழி அந்தணன் மாதவன் பராபரன்

    உறவாகி வந்து உளம் புகுந்தானே 

    உடல் பொருள் ஆவி  என்ற மூன்றையுமே இறைவனுக்கு அர்ப்பணித்து விட்டால்  நமக்கு வேறு கவலை ஏது  என்று நாம்  நினைக்கின்றோம்.  ஆனால்  இத்தனையும் அவனுக்கு  அர்ப்பணித்த பின்னும் கூட அவன் நம்மைத் தனியாக விட்டு விட மாட்டான் என்று எப்படி  நம்பும் இந்த  உள்ளம்?  எல்லாம் அவனுக்கே உரிமையென்று  ஆன  பின்னே அவன் அதற்கு உரிமையாளனாக  விடுகின்றான். அவன் அதை என்ன செய்தல் நமக்கென்ன?

    ஆனால்  மாணிக்க வாசகருக்கோ எந்த  நிலையிலும் இறைவன் தன்னைக் கைவிட்டு விடக்கூடாது என்ற விருப்பம். ஆகவே அவர் இறைவனுக்கு அளிக்கும் விண்ணப்பம் என்ன தெரியுமா ?

    இருந்து என்னை ஆண்டுகொள் விற்றுக்கோள்

    ஒற்றி வை  என்னின் அல்லால்

    விருந்தினனே விடுதி கண்டாய்

    மிக்க  நஞ்சு அமுதா

    அருந்தினனே மன்னும்  உத்தரகோச

    மங்கைக்கு அரசே

    மருந்தினனே  பிறவி பிணிபட்டு

    மடங்கினர்க்கே

    என்னே ஒரு வேண்டுதல் ! என்னே ஒரு ஈடுபாடு !

    இவ்வளவு  அன்பு காட்டும் இறைவனின் திருவடிகளை நாம் எப்படி அடைய முடியும்?  எவ்வாறு அவன்  பொற்பாதங்களின் தரிசனம் நமக்குக் கிட்டும் ? அவனை அடைய ,மகிழ்விக்க  எந்த வழியைக் கடைப்பிடிக்கலாம் ? அது எளிதானதா அல்லது மிகவும் கடினமானதா?

    இப்படியே உலகிலுள்ள அனைவரும் இறைவனின் பாதங்களை நாடினால் அவனுக்கு நம்மை கவனிக்க சற்றேனும் நேரம் கிடைக்குமா? அல்லது அவன் தன் அடியார்களை வரிசைப்படுத்தி அருள் கொடுப்பானா? இந்த ஐயத்திற்கு சற்றும் இடம் கொடுக்காமல் வள்ளலார் கேட்கின்றார் :

    யார்மீது உன் மனமிருந்தாலு முன்கடைக்

    கண்பார்வை யது போதுமே !

    திருநாவுக்கரசரோ உடலையும் உள்ளத்தையும் உயிரையும் அவனுக்கே அர்ப்பணித்து வேண்டி நிற்கின்றார் அவனுடைய பொற்பாதங்களின் தரிசனத்திற்காக.

    உடம்பெனும் மனையகத்து உள்ளமே தகழியாக

    மடம்படு முணர் நெய்யட்டி உயிரெனும்  திரிமயக்கி

    இடம்படு ஞானத்தீயால் எரிகொள் இருந்து நோக்கின்

    கடமபர் காளை தாதை கழலடி காணலாமே 

    திருமூலரோ இறைவனின்  தரிசனத்திற்கு அன்பு மட்டும் இருந்தால் போதும் . உண்மையான அன்புடன் இறைவனை அணுகினால் அவன் உள்ளம் நெகிழ்ந்து விடும்.  இதற்க்கெல்லாம் நமக்கு  திருமூலரிடமிருந்து  விளக்கமான பதில் கிடைக்கிறது :

    ஆர்வம் உடையவர் காண்பர் அரன்தன்னை

    ஈரம் உடையவர் காண்பார் இணையடி

    பாரம் உடையவர் காண்பார் பவந்தன்னைக்

    கோர நெறிகொடு கொங்குபுக் காரே.

    அது மட்டுமல்ல. “தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் ” என்று நாரணனை பிரகலாதன் வர்ணித்தது போல் அரனை எங்கே காணலாம் என்ற வினாவுக்கு திருமூலர் தெள்ளத் தெளிவாக பதில் அளிக்கின்றார்

    அன்பின்உள் ளான்புறத்தான் உட லாயுளான்

    முன்பின்உள் ளான்முனி வர்க்கும் பிரானவன்

    அன்பின்உள் ளாகி அமரும் அரும்பொருள்

    அன்பினுள் ளார்க்கே அணைதுணை யாமே.

    (தொடரும்)

    xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

    Share
  • இன்றைய தாலாட்டு..!

     

    பெருவை பார்த்தசாரதி

     

    தாலாட்டு

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

    தந்தை உயிர்கொடுத்து தாயென் உருவமெடுத்தென்

    சிந்தைமகிழ விந்தைமிகப் பிறந்தவனே தாலேலோ.!

     

    சஷ்டியில் விரதமிருந்து கருப்பையில் உருவாகி

    திருஷ்டி கழிக்கவந்தவனே ஆராரோ…ஆரிரரோ.!

     

    அரசனும் வேம்பையும் பரவசமாய்ச் சுத்திவந்து

    அரிதாயுதித்த அற்புதமே ஆராரோ ஆரிரரோ.!

     

    சிரவண ஏகாதசி சித்ரா பெளர்ணமியில சீராகபல

    விரதமிருந் தென்வயித்தில் உதித்தவனே தாலேலோ.!

     

    மணமாகி பலவருஷம் மாவிளக்கு இட்டதாலே

    வந்தென் வயிற்றிலுதித்த மின்னலேநீ கண்ணுறங்கு.!

     

    நாவால்வேண்டி நவமுறைசுற்றி நவகிரக அருளால

    நவரத்தினமெனப் பிறந்தயென் நித்திலமே நீயுறங்கு.!

     

    மலைபோல வந்ததுன்பம் நொடியில மறையுவண்ணம்

    அலைபோல தூளியிலே ஆடிநீயும் உறங்குதியோ.!

     

    முண்டக்கண்ணி கோவிலிலே முழங்கால் முட்டிதேய

    மண்டியிட்டு மடிப்பிச்ச கேட்டுப் பிறந்தபெரும்பேறே.!

     

    கன்னக் கதுப்பினுள் குழிவிழும் சிரிப்பைக்காணநான்

    என்ன தவம்செய்துனைப் பெற்றேனோ தாலேலோ.!

     

    பத்தியம் பலவிருந்து பலசோற்றில் உப்புநீக்கி

    வைத்தியம் செய்யாவந்துதித்த வண்ணமே நீயுறங்கு.!

     

    பிஞ்சுக் கரம்நீட்டியென் கன்னம் தொட்டபோதென்

    நெஞ்சு நிறைஞ்சுதடிநீ இமைமூடி உறங்குதியோ.!

     

    சந்தியம்மங் கோவிலிலே சமகாலந் தவமிருந்து

    சீதனமா நீயும்வந்து பொறந்தாயடி தாலேலோ.!

     

    குட்டிவாய்மலர்ந்து குழறுமுன் மழலைமொழி கேட்க

    எட்டிநீயுதைத்த என்வயிறு வாழ்த்துதடி தங்கமே.!

     

    தாலிக்குத்தங்கம் தரும்தமிழ்த்திரு நாட்டிலே பிறந்த

    தங்கமே தாலேலோ..!தூங்குகண்ணா தாலேலோ.!

     

    அஞ்சனந்தீட்டி அருமைப் பொட்டிட்டு அழகாய்ப்

    பஞ்சணைப் பட்டின்மேல்மலர் மொட்டாக நீயுறங்கு.!

     

    வாங்கி வச்சிருக்கேன் சங்குபாலாடை வெள்ளியிலே

    தூங்கி யெழுவாய்நீ துள்ளியெழுந்து பால்குடிக்க..

     

    தூளிவாசம் துயில் நீப்பாயெம் செல்லமகனே

    அள்ளி யணைக்கயிப்ப தாய்மாமன் வந்திடுவான்.!

     

    எண்ணிலாச் சுமைகளை ஏந்திச் சுழன்றேனே..உனைப்

    புண்ணியமாய்ப் பெற்று புகழடைந்தேன் பூமியிலே.!

     

    நீரைநீக்கிப் பாலையருந்தும் அன்னம்போலே அன்னை

    உயிரைப்போக்கும் மனச்சுமை யகற்றப் பிறந்தவனே.!

     

    ஆராரோ… ஆரிரரோ…! ஆரிரரோ…! ஆராரோ…!

    Share
  • ஊடு பயிர்…

     

    என்னவோ சாபமோ ஏனோ பிறப்பிங்கு
    நன்மக வாயென நாப்புலம்பும்… தன்மையில்
    பெண்ணென ஆணாகப் பேடு!

    பேடும் ஒருபிறவி பெற்றாரென் றெள்ளிநகை
    யாடும் நிலையறுக்கு மார்வமானப்.. பாடுதரும்
    ஊடு பயிராய் உறவு!

    உறவுடன் கூடும் உலகினில் பேடும்
    பிறப்பென உண்மை பிணைந்த… அறமும்
    மறவனுக் கேற்புடைய மாண்பு!

    … நாகினி

    Share
  • ஆடம்பரமற்ற எனது நிழல்

     
    ஆடம்பரமற்ற எனது நிழல்

    நான் நிழலால் செல்கிறேன்
    என் கூடவே வருகிறது நிஜம்

    என் நிழலுக்குள்
    சூரியன் நுழைய முடியவில்லை

    மர நிழலுக்குப் பொறாமை
    அங்குமிங்கும் செல்கின்ற என் நிழல் பார்த்து

    நான் இருக்கிறேன்
    இருளுக்குள் இறந்து விடுகிறது எனது நிழல்

    வெளிச்சம் படைக்கின்ற
    என் நிழலுக்கு இரகசியமில்லை

    அடித்தாலும் மிதித்தாலும் வலிக்காத
    என் நிழலைத்தான் நான் நேசிக்கிறேன்

    நீரில் மூழ்காத எனது நிழல்
    நனைவதில்லை

    வண்ண ஆடை உடுத்தாலும்
    கறுப்பாகவே இருக்கிறது ஆடம்பரமில்லாத எனது நிழல்

    – ராஜகவி ராகில் –

    Share
  • நான் மரம் பேசுகிறேன்.!

     

     

    எண்ணிலா
    என் இலைகளால்
    மானிடனே
    உன் சுவாசத்திற்காய்
    நான் .!

    என் கிளைகளில்
    ஊஞ்சல் கட்டி
    ஆடியே சிரித்தாய்
    உன்னுடன் நானும்
    சிலிர்த்தேன்.!

    அணில் கடித்த
    பழத்தையும் உனக்காய்
    சுமந்தே நின்றேன்
    ருசித்து நீ உன்ன
    ரசித்தே நான்.!

    அன்னை மடிபோல்
    எந்தன் அடியில் உறக்கம்
    தென்றலாய் நான் வீச
    அசந்து நீ தூங்க
    அசையாமல் நான்.!

    உனக்கே என்னை
    முழுதும் அளித்தேன்
    மானிடா
    என் உயிர் மூச்சை
    மட்டும் அறுத்து விடாதே
    அடுத்து உன் வம்சத்தின்
    குலக் கொடிகளை
    காணும் ஆவலில்
    நான்..
    நான் மரம் பேசுகிறேன்.!

    விஜயகுமார் வேல்முருகன்

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    170718 - Gopi vastrApaharaNa-VastrAbharana-lr

    ”நீல யமுனையில் நீந்திய கோபியர்
    சேலைப் புதையலை சேகரித்தோய்: -நாளை
    சபையில் துரோபதை சோகம் களைந்து
    அபயம் அளிக்கத்தா னே!”….கிரேசி மோகன்….!

    Share
  • படக்கவிதைப் போட்டி 119-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    ladies with burden on head

    சிரத்திலும் கரத்திலும் சுமையோடு பயணம் புறப்பட்டுவிட்ட இந்தத் தாயையும் உடன்வரும் சேயரையும் தன் படப்பெட்டிக்குள் நேயத்தோடு சுமந்துவந்திருப்பவர் திருமிகு. அனிதா சத்யம். இப்படத்தைப் போட்டிக்குத் தேர்வுசெய்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். பெண்மணிகள் இருவருக்கும் என் பணிவான நன்றி!

    வாழ்வெனும் நெடும்பயணத்தில் மனிதர்களுக்குத்தான் எத்தனை எத்தனை சுமைகள்! அவற்றில் சில சுகமானவை; பல இறக்கவும் துறக்கவும் இயலாக் க(டி)னமானவை. ஆயினும் பயணங்கள் தவிர்க்க இயலாதவை. சுமைகளோடும் கனவுகளோடும் மனிதர்கள் மேற்கொள்ளும் பயணம் வெற்றிப்பயணமா, பயனற்ற வெற்றுப்பயணமா என்பதைக் காலமே தீர்மானிக்கின்றது.

    கவிஞர்களின் சிந்தனையில் பூத்த கவிதை மலர்கள் அடுத்து அணிவகுக்கக் காத்திருக்கின்றன. அவற்றை வரவேற்போம்!

    ”சுமைகளே வாழ்க்கையாகிப் போனது பெண்களுக்கு. மற்றவர்களுக்காகவே சுமந்து கூன்விழுந்துபோன பெண்ணே! இனியேனும் உனக்காக வாழு! சுமைகளை உதறிச் சிறகுவிரித்துப் பறந்திடு!” என்று பெண்விடுதலைக்குக் குரல்கொடுக்கின்றார் திரு. பழ. செல்வமாணிக்கம்.

    சுமை தலையில் ஒரு சுமை!
    இடையில் ஒரு சுமை!
    இருந்தும் உன் மனதில் இல்லை என்றும் குறை!
    பெண்ணாக பிறந்ததினால் சில வருடம்
    பெற்றார், உற்றாரின் வசவுகளை நீ சுமந்தாய்!
    அண்ணன், தம்பி மகிழ்ந்து விளையாட பெற்றோர்
    அனுமதிக்க! நீ விளையாட அவர் மறுத்துரைக்க
    ஏக்கத்தை நீ சுமந்தாய்!
    படிக்கும் வயதில் தாலியைத் தான் சுமந்தாய்!
    பிள்ளைகளை வயிற்றில் சுமந்தாய்!
    குடும்ப நலத்தை மனதில் சுமந்தாய்!
    உன் கனவுகளை நீ தொலைத்து குடும்பத்தை
    வாழ வைத்தாய்!
    சுமப்பதினால் இது வரை என்ன சுகம் கண்டாய்! ;
    உன்னை சுமக்க வைக்க மற்றவர்கள் சொல்லும்
    பொய்களை நம்பியது போதும் பெண்ணே!
    மற்றவர்களுக்காய் நீ சுமந்தது போதும் பெண்ணே!
    உன் இரக்கத்தை ஏணியாக்கி ஆண்கள்
    ஏறிச் சென்றது போதும் பெண்ணே!
    இனியாவது புதுமைப் பெண்ணே !
    உன் எண்ணச் சிறகுகளை விரித்து பறந்திடு !
    இனிய வாழ்க்கையை என்றும் வாழ்ந்திடு !

    ***

    ”தன்னம்பிக்கை எனும் பிடிமானமே எங்கள் வருமானம்; பகுத்துண்டு வாழ்தலே எங்களுக்கு வெகுமானம். உழைத்து வாழ்கின்றோம்; பிறர் உழைப்பில் வாழ்வதில்லை” என்று தன்மான வார்த்தைகளைத் தலைநிமிர்த்தி உச்சரிக்கும் பெண்மணியைத் தன் கவிதையில் உலவவிட்டிருக்கின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    உழைப்பே எங்கள் உடன்பிறப்பு

    அன்றாடம் உழைத்தால்தான் அரைவயிறு நிறையும்
    ….ஆரும்நன்றாய்ப் படித்து பெரிதாய்ப் ஈட்டுவோரில்லை.!
    சென்றுபோகும் இடமெல்லாம் நடந்துதான் செல்லவேண்டும்
    ….அன்று சம்பாதிப்பது அன்றுமட்டுமே போதாதென்றாலும்.!
    நன்றாகத்தான் வாழ்கிறோம் எம் கைக்கொண்டுழைத்தே
    ….நல்லவேலை செய்வதற்கே நாங்களும் பிறப்பெடுத்தோம்.!
    குன்றுபோல் செழித்திருக்கும் குடியிருப்பு இல்லமொன்றில்
    ….கூட்டுக் குடும்பமாய்வாழ கூலிக்கென்றுமே பஞ்சமில்லை.!

    கருப்புக் குமரிகள்தான் நாங்களாயினு மெங்களைக்
    ….காதலித்து ஏமாற்றும் கயவர்பயம் எங்களுக்கில்லை.!
    ஆருமில்லை ஆதரிப்போரெனும் ஆதங்கமும் இல்லை
    ….அன்பாலே ஏனையொரை ஈர்க்குமாற்றல் எமக்குண்டு.!
    விருப்பமுடன் வீடுதேடி வேலைகேட்பின் இல்லையென
    ….மறுக்கமாட்டார் எடுத்தெறிந்து பேசமாட்டார் எவரும்.!
    கரும்புபோல பேசிவிட்டு முகம்சுளிப்போர் நடுவே
    ….அரும்புச் சிரிப்புடன் ஆறுதலாய் பேசுவோருண்டு.!

    இடையூறு இன்னல்கள் எதுவரினும் எதிர்கொள்ள..
    ….இறையருளும் எங்களுக்கு எப்போதும் உடனிருக்கும்.!
    தடையில்லா வாழ்வு வாழ எங்களுக்கும் ஆசைதான்
    ….தருவாயா இறைவாநீ உடலுறத்தை உயிருள்ளவரை.!
    நடைபோடும் தளிர்நம்பிக்கை யெனும் கொழுகொம்பைப்
    ….பிடித்துவாழும் பிடிமானமேயெங்கள் நிரந்தர வருமானம்.!
    படையோடு பலருடன் மகிழ்ந்தெதையும் கொண்டாடுவோம்
    ….பக்குவமாய் உழைத்து வாழ்வோர் உதாரணமாவோம்.!

    ***

    பள்ளிச் சீருடைகளிலும் ரிப்பன்களிலும் மட்டுமே காணக்கிடைக்கின்ற சமத்துவம் சமூகத்தில் ஏனோ சீர்கெட்டுப்போயிருக்கின்றது. ரிப்பன் கட்டிய சிறுமியாய்த் தொடங்கும் பெண்ணின் வாழ்க்கை, நடை தளர்ந்து, நரை வளர்ந்து, முதியவளாய் அவள் மாறியபின், (பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு) முதியோர் இல்லத்தில் முற்றுப்பெறுவதை உணர்வுபூர்வமாய் விவரிக்கின்றார் திரு. கா. முருகேசன்.

    நிழல்!
    தலை நிறைய மூட்டை,

    சின்னஞ்சிறு மழலைகளின் சிரிப்பு,
    நடக்க நல்ல ஒரு மணல் பரப்பு!
    வெயிலின் பிரதிபலிப்பால்
    அவர்களை விட்டு பிரியாது தொடரும்
    நிழல்!

    முடி நரைத்தாலும் மூட்டை தூக்குவதில்
    சலிப்பில்லாத முதுமை!

    பள்ளிகூடங்களில் மட்டும் சமத்துவம் என்பது,
    இல்லாதிருந்தால் நாம் மறந்திருப்போம்,
    ரிப்பன் கட்டும் பழக்கத்தை!
    பெண்களின் அழகை
    சீர்தூக்கி நிறுத்தும் ரிப்பன் இப்போது,
    பல கொடிகளின் வண்ணங்களாய்
    மிளிர்கிறது!
    பள்ளிக்கூடங்கள் திணறுகின்றன,
    எந்த வண்ணத்தை தீர்மானிக்க என்று!

    இரட்டைச் சடையும்,
    ஒற்றைச் சடையுமாய் வளர்ந்து
    முதுமையடைகிறாள் பெண்!

    முதுமை என்றதும் நினைவுக்கு வருவது
    மீன் குழம்பும், கத்தரிக்காய் கூட்டும்!
    அப்போது!
    இப்போது!
    முதுமை என்றதும் நினைவுக்கு வருகிறது
    முதியோர் இல்லம்!

    கூன் விழாத முதுகுத்தண்டு சொல்லும்
    அவள் உழைப்பை!
    நரைத்த முடிகள் சொல்லும்
    அவள் கஷ்டத்தை!
    தன் மகனும், மகளும் படிக்க,
    வயல் தோட்டங்கள், தொழில் கூடங்கள் என
    உழைப்பிற்காக நடந்த நடையைச் சொல்லும்
    அவளின் செருப்பில்லாத பாதங்கள்!
    குழந்தைகளை நிழல் போல் காக்கிறாள்!
    நிலத்தில் விழுந்து விடக்கூடாதென்று!

    எல்லாவற்றையும் கடந்து உழைக்கிறாள்!
    என் மகன், மகள் கஷ்டப்படக்கூடாதென்பதற்காக!

    ஆனால், அவர்களோ!
    முதுமையின் முதுமையாய் முதிர்ந்தவர்களை,
    விடுகின்றனர் முதியோர் இல்லத்தில்!

    இந்த உலகத்தில் முதுமைக்கு
    விலையில்லாத விலைமதிக்கத்தக்க ஒன்று,
    ஒரு வேளை சோற்றை விடவும் உயர்ந்தது!
    மொழி கடந்து, சொல் கடந்து,
    அந்த மௌனச்சிரிப்பினால்,
    முதுமையின் கன்னத்தை வருடும்
    பேரன் பேத்திகளின் ஸ்பரிசம் ஒன்றுதான்!
    அது கிடைக்காதா! என்று
    ஏங்குகிறாள் முதியோர் இல்லத்தில்!

    முதுமை நினைத்துப்பார்க்கிறது!
    என்றும் உங்களின் நிழலாக இருக்கிறேனே
    நான்!

    உங்களைப் படிக்க வைத்தேன்
    படித்தும் புரியவில்லையே!
    நிழலைப் பிரிக்கமுடியாது என்று!
    என் குழந்தைகளுக்கு!

    கடவுளே என் மகனும் மகளும்
    நன்றாக இருக்க வேண்டும்!
    நான் மறைந்தாலும் அவர்களுக்கு
    நிழலாக!

    ***
    முதுமை மேற்கொண்ட நடைப்பயணம் கண்டு மனங்கசிந்து, மடைதிறந்த வெள்ளமெனக் கவிமழை பொழிந்திருக்கின்றனர் நம் வித்தகக் கவிஞர்கள். அவர்களுக்கு என் உளங்கனிந்த பாராட்டுக்கள்!

    ***

    மனித வாழ்வுக்குத் தேவை ’இலக்கு’ என்பது பெரியோர் வாக்கு. ’குறிக்கோளின்றிக் கெட்டேனே’ என்று ஞானச் செல்வரான அப்பர்கூட மொழிந்திருக்கக் காண்கின்றோம். ஆனால் வாழ்வுக்கு உகந்த இலக்கினை அமைப்பதும், அதனை வெற்றிகரமாய்ச் சென்றடைவதும் அத்தனை இலகுவன்று என்பதே  உண்மை!

    மதுஅரக்கனின் பிடியில் சிக்கி மனைவியை நட்டாற்றில் தவிக்கவிடும் மணாளர்களுக்குப் பஞ்சமில்லை நம் தாய்த்தமிழ் நாட்டிலே!

    கட்டியவனைப் பறிகொடுத்த காரிகையொருத்தி, சுட்டெரிக்கும் வெயிலில், பட்டமரமெனப் பிஞ்சுக் குழந்தைகளோடு நடந்துசெல்லும் இலக்கற்ற பயணத்தைக் காட்சிப்படுத்தியுள்ள கவிதையொன்று நெஞ்சைச் சுடுகின்றது!

    இலக்குகள்…

    போகுமிடம்
    மதுக்கடை மட்டும்
    தெரிந்தவன்
    போய்ச் சேர்ந்தான்,
    பெண்டாட்டி பிள்ளைகளைத்
    தெருவில்
    திண்டாட விட்டு…

    புறப்பட்டுவிட்டார்கள்
    இவர்கள் இப்போது,
    பிழைப்புத் தேடி-
    போகுமிடம் எதுவென்ற
    இலக்குத் தெரியாமலே…!

    சிறிய கவிதையில் நடப்பியலைச் சிறப்பாய்க் கூறியிருக்கும் திரு. செண்பக ஜெகதீசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    170717 - New Forever -scan -lr

    ”ஆலில் மிதந்தவா ஆழ்வார்கள் பாசுர
    நூலில் நிறைந்தவா நந்தலாலா -தோளில்
    திருத்துழாய் பூண்ட திருவோணத் தானே
    கருத்தில் கலந்துவளைக் காப்பு”….கிரேசி மோகன்….!

    ’’உந்த எதுகை, உருவாக மோனைகள்,
    வந்ததே வெண்பா விதவிதமாய், -அந்தக்,
    குழலினிது யாழினிது என்போர்கள், கண்ணன்,
    மழலைச்சொல் கேளாத தவர்’’….கிரேசி மோகன்….

    Share
  • INDIA / VIII – The transcending eye

    கொரிய மூலம் : கிம் யாங் – ஷிக்
    ஆங்கில மூலம் : கிம்ன் ஜின் – சுப்
    தமிழ் மொழிபெயர்ப்பு : பவள சங்கரி

    800px-CandlesInBuddhistTemple

    கண்களைக் கடந்து

     

    ஓ ஒளியே, மெய்மையில்   சுடர்மிகும் ஒளி நீயே.
    சில வேளைகளில் வசந்த வளியை ஒளிரச்செய்வதும் நீயே.
    சில வேளைகளில் கருணைநிறை புன்னகை சூடும் ஒளியும் நீயே.
    சில வேளைகளில் ஞானக்கண்ணீர் ஏந்தும் ஒளியும் நீயே.

    நாளுக்கு நாளும்
    இரவின் பின் இரவும்
    ஓ ஒளியே, பிரார்த்தனையில்
    உள்ளங்கைகள் இணைந்து தாமரையாய்
    மலர்கிறாய் நீ.

    உறுதியாய் நித்தியத்திற்காய்
    மலரும் மணமிகு தாமரையாய்
    ஆகிவிட்டாய் நீ.

    Share
  • கறுப்பு

    இன்னம்பூரான்

    ஜூலை 14, 2917

    unnamed

    கறுப்புப்பணம் கூடு விட்டு கூடு பாய்வது பல்லாண்டு பல்லாண்டுகளாக தணிக்கைத்துறையில் எங்கள் கண்களை உறுத்தும். வருமான வரி, கலால் வரி, சுங்கவரி ஆகியவை நான் 1955ல் தணிக்கைத்துறையில் சேர்ந்த போது, ‘தணிக்கைக்கு அப்பாற்பட்டவை, கிட்ட வராதீர்கள்’ என்று கதறினார்கள்; எங்களை உதறினார்கள்; அலறினார்கள். விடாக்கொண்டன், தொடாக்கொண்டன் கதை தான். எங்கள் துறை முள்ளை முள்ளால் எடுத்தது. பிறகு என்ன? ‘அம்புட்டுக்கொண்டான் தும்மட்டிக்காய் பட்டர்’ கதை தான்.

    வருமானவரி விதிமுறைகள் பாலைத்திணை போல் கரடு முரடானவை. ஏமாற்றுபவனைக் காப்பாற்றி, ஏமாந்தவனைத் தூக்கில் போடக்கூடிய சாமர்த்தியம் உள்ள அதிகாரிகள் அந்த இலாக்காவை ஆட்டிப்படைத்ததும் உண்டு. தற்காலம் விதிகள் புரியக்கூடியவை; எளிய மொழி கையாளப்படுகிறது. தண்டனைகளும் அக்கு வேறு, ஆணி வேறாக, கூவிக்கூவிப் பிரகடனம் செய்யப்படுகின்றன. தப்புத்தவறு செய்யும் அதிகாரிகள்,வங்கி அதிகாரிகள், தனியார் நிறுவனங்கள் செம்மையாக மாட்டிக்கொள்கிறார்கள். எங்கள் துறையின் பளு குறையலாம் அல்லது அதிகரிக்கலாம்!

    இன்றைய செய்தி:

    என் வங்கிக்கணக்கில் என்னுடைய ஊதியத்திற்கு மேல் எக்கச்சக்கமாக வரவு வைக்கப்பட்டிருந்தால், அது எப்படி என்று வருமான வரி இலாக்கா விசாரிப்பது அவர்கள் கடமை. நவம்பர் 9, 2016க்கு பிறகு 5.56 லக்ஷம் ஆசாமிகள் அந்த மாதிரி பினாமியாக இயங்கி, கோக்குமாக்கு செய்துள்ளார்கள். அவர்கள் மீது கேள்விக்கணை பாய்கிறது. இது இரண்டாவது கட்டம்.

    முதல் கட்டத்தில், தன்னுடைய பற்பல வங்கிக்கணக்குகளைப் பற்றி மெளனம் சாதித்தவர்கள் 1.04 லக்ஷம் நபர்கள். தடபுடலாக, சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் லக்ஷக்கணக்கில் வங்கியில் வரவு வைத்தவர்கள் 17.92 லக்ஷம் நபர்கள். அவர்களில் 9.72 லக்ஷம் நபர்கள் மின்னஞ்சலில் பதில் அளித்துள்ளார்கள். வருமான வரி இலாக்காவும் https://incometaxindiaefiling.gov.in. மூலம் தங்களை தொடர்பு கொண்டு விளக்கம் அளிக்கலாம். வருமானவரி அலுவலகத்தை முற்றுகையிட தேவையும் இன்றி வரி செலுத்துவோர் ஆன்லைன் விளக்கத்தைச் சமர்ப்பிக்க முடியும். அகப்பட்டுக்கொண்ட தும்மட்டிக்காய் பட்டர்கள் எல்லாருக்கும்

    எஸ்எம்எஸ் மூலம் தாக்கீது அனுப்பப்படும். 2 லக்ஷம் ரூபாய்க்கு மேல் செய்யப்படும் வைப்புத்தொகை தகவல் அவர்கள் தெரிவிக்கவேண்டும் என்று ஆணை.

    சுருங்கச்சொல்லின்: உண்மை விளம்புக.

    -#-

    படித்தது: நாளைய ஹிந்து இதழ்.

    சித்திரத்துக்கு நன்றி: https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a7/Flag_of_Afghanistan_%281880–1901%29.svg/1200px-Flag_of_Afghanistan_%281880–1901%29.svg.png

    இன்னம்பூரான்

    http://innamburan.blogspot.co.uk

    http://innamburan.blogspot.de/view/magazine

    www.olitamizh.com

    Share
  • படக்கவிதைப் போட்டி (120)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    19866349_1372215519499310_188705727_n

    ஷாமினி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (22.07.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (64)

    நிர்மலா ராகவன்

    விழு-அழு-எழு

    நலம்

    முன்பு, என் பக்கத்து வீட்டு மலாய்க்காரப் பெண் சாயங்கால வேளைகளில் எங்கள் வீட்டுக்கு அவளுடைய கைக்குழந்தையுடன் வந்து, என்னுடன் பேசிக்கொண்டிருப்பாள்.

    “எனக்கு ரொம்ப கவலையாக இருக்கிறது,” என்று ஆரம்பித்தவள், “குழந்தையின் குரல் ஆண்பிள்ளைகளுடையதுபோல் கட்டையாக இல்லையே!” என்றாள். அவளுக்கு இரண்டு பெண்கள் இருந்தார்கள்.

    “மூன்று மாதம்தானே ஆகிறது! பையனோ, பெண்ணோ, எல்லாக் குழந்தைகளுக்கும் குரல் கீச்சு மூச்சென்றுதான் இருக்கும். தானே பதினான்கு வயதானால் ஆண்பிள்ளைகளின் குரல் உடைந்துவிடும்,” என்று சமாதானப்படுத்தினேன்.

    ““நிஜமாகத்தானே சொல்கிறீர்கள்? நான் ரொம்ப பயந்துவிட்டேன்!” என்று, திரும்பத் திரும்ப அதையே நான் சொல்லும்படி கேட்டுக்கொண்டாள்!

    ஆண்பிள்ளை என்றால் கட்டைக்குரலுடன், யாருக்கும் படியாத முரடனாக இருக்க வேண்டுமா, என்ன?

    `வீரம்’ என்றால் மீசையை முறுக்குவது, சிறு காரணத்திற்கெல்லாம் பிறரை அடித்து உதைப்பது, சட்டையின் பின்புறத்திலிருந்து அரிவாளை உருவுவது என்பதெல்லாம் தமிழ்ப்படங்கள் நமக்கு உணர்த்தும் பாடம். அதிகாரத்தால் பிறரை பயப்பட வைக்கலாம். ஆனால் அப்படிச் செய்வதால் உண்மையான அன்போ, மரியாதையோ கிடைக்குமா?

    மூன்று, நான்கு வயதுக் குழந்தை அழுதால்கூட, “ஐயையே! வெக்கமேயில்லே. ஆம்பளை அழலாமா?” என்று கேலி செய்து, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொள்வதுதான் ஆண்மையின் லட்சணம் என்று சிறு வயதிலேயே உணர்த்திவிடுகிறார்கள்.

    அதனால், கீழே விழுந்து அடிபட்டுக்கொள்ளும்போது, `அழுதால் பிறர் கேலி செய்வார்களே!’ என்று பயந்து, அதை அடக்கிக்கொள்வார்கள். எதையும் பொறுத்துப்போவதும் உண்டு. அது தவறு.

    கதை

    ஐந்து வயதுக்குள் இருக்கும் அவனுக்கு. எப்போதும் அழுவான். அப்படி என்ன வருத்தம் அவனுக்கு?

    தாத்தா காரணமில்லாமல் அவனைத் திட்டிக்கொண்டே இருப்பார். மரியாதை கருதி, அவனைப் பெற்றவர்களும் கண்டுகொள்ள மாட்டார்கள். ஏனெனில், அந்த வீட்டில் தாத்தா வைத்ததுதான் சட்டம். அப்படி ஒரு சர்வாதிகாரம்.

    உறவினர்கள் அச்சிறுவனுக்குக் கொண்டுகொடுக்கும் விளையாட்டுச் சாமான்களை உடனே பிடுங்கி, அவனுக்கு எட்டாத தூரத்தில் வைத்துவிடுவார்கள். உடனே உடைத்துவிடுவானே! `என்ன கொண்டு வந்தார்கள்?’ என்று வம்படிக்க வரும் அக்கம்பக்கத்தினருக்கு உடைந்த சாமான்களையா காட்டுவது?

    தான் யாருக்குமே ஒரு பொருட்டாக இல்லையே என்ற ஏமாற்றத்துடன், வாயைத் திறந்தாலே மிக உரக்கத்தான் பேசுவான் சிறுவன். இல்லாவிடில், அழுதுகொண்டே இருப்பான். நல்ல வேளை, எல்லா விளையாட்டுகளிலும் ஈடுபாடு இருந்ததால், நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள்.

    இப்போது, உலகப் பிரசித்தி பெற்ற நிறுவனம் ஒன்றில் தலைமைப் பதவியில் இருக்கிறான். சிறு வயதில் அவனை அறிந்தவர்கள், `இவன் எப்படி இவ்வளவு தூரம் முன்னுக்கு வந்தான்!’ என்று வியப்படையும் அளவுக்கு ஒரு வளர்ச்சி. பொறுமையும் நிதானமும் அவன் குணமாகிவிட்டது.

    இளமையில் எவ்வளவோ கஷ்டப்பட்டபோதும், அவ்வப்போது அழுது அவைகள் தன்னைப் பாதிக்க விடவில்லை அவன். அத்துடன், பிற மனிதர்களின் குணமும் புரிந்துபோயிற்று.

    ஆண் என்றால் அதிகாரம்

    ஆண் என்பவன் எந்த நிலையிலும் உறுதி படைத்தவனாக இருக்க வேண்டும் என்ற எழுதப்படாத விதியால் ஒருவரின் மன அழுத்தம்தான் அதிகரிக்கிறது. வளர்ந்த பின்னரும், முகத்தில் எந்தவித உணர்ச்சியும் காட்டாது இருப்பவர் ஆண்மை மிகுந்தவராக இருக்கிறார் என்று பிறரை நினைக்க வைக்க முயலுகிறார்கள். தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்கிறார்களோ?

    அலுவலகங்களில் அதிகாரிகளுக்கு அடங்கி நடப்பவர்கள் வீட்டில் தம் அதிகாரத்தைக் காட்டி ஆறுதல் தேடிக்கொள்வார்கள். இவர்களைப் போன்றவர்கள் பெண்கள் தம்மைவிட உயர்ந்த நிலையில் இருந்தால் பலவீனமாக உணர்வார்கள். தம் அதிகாரத்தை மறைமுகமாக அவர்கள்மேல் செலுத்துவார்கள். மட்டம் தட்டவும் தயங்குவதில்லை.

    `ஆண்’ என்றாலே அதிகாரம் என்று எளியவர்களை ஆட்டிப்படைக்கும் குணம் எப்படி வருகிறது?

    முன்காலத்தில், ஒருவயதுக்குட்பட்ட பெண்களைவிட ஆண்குழந்தைகளே அதிகமாக இறக்க, அவர்களது உடல் நிலையில் அதிகக் கவனம் செலுத்த வேண்டியிருந்ததாம். `பெற்றோரும் உற்றாரும் தம்மீது பாசத்தைப் பொழிகிறார்களே, தாம் உயர்த்தி என்பதால்தானே!’ என்ற எண்ணம் ஆண்களுக்கு அப்படி ஏற்பட்டிருக்கலாம். ஹார்மோனால் கூடுதலான உடல் வலிமைவேறு!

    (இப்போதும், முதுமையில் பெண்களைவிட ஆண்கள்தாம் சில வருடங்கள் முன்னரே இறக்கிறார்கள். பெண்கள் அவ்வப்போது அழுது தம் மனக்கவலைகளைத் தீர்த்துக்கொள்வதும் ஒரு காரணம்).

    `தவறு செய்துவிடுவோமோ!’ என்று பயந்து எதுவுமே செய்யாதிருப்பவரும் இல்லாமலில்லை.

    ஒரு வேலைக்கான பேட்டிக்கு வந்த பட்டதாரியிடம் கேட்கப்பட்ட கேள்வி: “சம்பளம் கிடைத்தால், என்ன செய்வாய்?”

    “வங்கியில் போடுவேன்!”

    அந்த இளைஞனுக்கு வேலை கிடைக்கவில்லை. புதிதாக எதையாவது கற்க வேண்டும், சாதிக்க வேண்டும் என்ற ஆர்வமோ, தைரியமோ இல்லையே!

    பிறர் எந்த அளவுக்கு உதவுவார்கள் என்று எதிர்பாராது, `என்னால் முடியும்!’ என்ற நம்பிக்கையுடன் ஒரு காரியத்தில் பொறுப்பாக இறங்குபவர்கள்தாம் முன்னேறுகிறார்கள்.

    சோம்பலுக்கு இடங்கொடேல்

    மிகுந்த பிரயாசையுடன் மலையேறுகிறார்களே சிலர், ஏன்? கடினமாக உழைப்பதே நாம் எதிலும் தோல்வி அடையாது இருக்கும் வழி என்று உணர்ந்தவர்கள் அவர்கள்.

    ஒரு கடினமான முயற்சியில் ஈடுபடும்போது எவ்வளவோ வேண்டாத விமரிசனங்கள், இன்னல்கள் எழலாம். சில சமயங்களில், அபாயங்களும் இருக்கக்கூடும். அவை நிகழும்போது சற்று மனம் தளர்ந்தாலும், கீழே விழுந்து மீண்டும் எழுந்திருப்பதுபோல், விடாமுயற்சியுடன் தொடர்ந்தால், முன்பு இருந்ததைவிட உயரத்தில் இருப்பதைக் காண்போம். மனமும் உறுதி பெற்றிருக்கும்.

    “ஆண்மை என்றால் தனிமையை விரும்புவது, அலட்டலாக நடந்துகொள்வது என்பதில்லை. சரியென்று நமக்குப்பட்டதை, விளைவு என்ன ஆகுமோ என்று யோசிக்காது, துணிச்சலுடன் செய்வது”. (மகாத்மா காந்தி)

    உடல் வன்மை இருக்கிறதோ, இல்லையோ, அறிவு, ஒழுக்கம், கடமை உணர்ச்சி எல்லாவற்றிலும் சிறந்திருப்பவர்களே மரியாதைக்கு ஏற்றவராகக் ஏற்கப்படுகிறார்கள்.

    கதை

    தமிழ்நாட்டில் ஓரிடத்தில் பெண்பார்க்க என்னையும் அழைத்துப்போனார்கள் உறவினர்கள், என் மறுப்பை லட்சியம் செய்யாது.

    `நான் மூன்று தங்கைகளுக்குக் கல்யாணம் செய்து வைத்தேன்!’ என்று திரும்பத் திரும்ப என்னிடம் கூறினார் பெண்ணின் தந்தை.

    அவர் வீட்டில் அவ்வளவாக வசதி இருக்கவில்லை. ஆனால் தன் சுகத்துக்காக பொறுப்புகளைத் தட்டிக்கழிக்காது இருந்த தந்தை! கணவரின் போக்கில் குறுக்கிடாது, அவருக்குப் பக்கபலமாக இருந்த தாய். இவர்களிடம் வளர்ந்த பெண்ணும் அப்படித்தானே இருப்பாள் என்று நாங்கள் நினைத்தது வீண்போகவில்லை. எங்கள் குடும்பத்தில் ஓரங்கமாகி, எல்லாருடைய பாராட்டையும் பெற்றுவிட்டாள் அப்பெண்.

    சிறு பிராயத்தில் உலகமே தன்னைச் சுற்றித்தான் இயங்குகிறது என்ற எண்ணம் இயற்கையாக எழுவது. வளர்ந்தபின்னும் அப்படியே இருந்தால் அது அழகல்ல. எப்போது, எதிலும், தான்தான் முன்னிலையில் இருக்க வேண்டும் என்றால் நடக்கிற காரியமா!

    பிறரை அடித்துப்பிடித்துக்கொண்டு முந்தாமல், விட்டுக்கொடுத்து, வெற்றியடைந்தால் அதற்காக தோல்வி அடைந்தவரை ஏளனமாகக் கருதாது இருப்பவர்களை ஜெண்டில்மேன் (gentleman) என்று குறிப்பிடுகிறோம். இவர்களே மாறுபட்டவர்களையும் புரிந்துகொள்ளும் சூட்சுமம் நிறைந்தவர்கள்.

    பல பரிசுகளையும், விருதுகளையும் பெற்றுவிட்ட நடிகரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது: “நீங்கள் தலைசிறந்த நடிகர். ஒப்புக்கொள்வீர்களா?”

    தொண்ணூறு வயதான அவரது பதில்: அப்படி நினைத்தால், அன்றே நான் இறந்துவிடுவது நல்லது!”

    தொடருவோம்

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் (86)

    க. பாலசுப்பிரமணியன்

    மறைமுகமான பாடத்திட்டத்தின் சில குறிக்கோள்கள்  (Salient features of the Hidden curriculum)

    education

    வெளிப்படையான  பாடத்திட்டங்களைக் காட்டிலும் மறைமுகமான பாடத்திட்டத்தின் குறிக்கோள்கள் மிக முக்கியமானவையாகவும் அவசியமானவைகளாகவும் அமைகின்றன. வெளிப்படையான பாடத்திட்டத்தில் ஒரு மாணவனுக்குத் தேவையான பல கற்றல் துறைகளின் (disciplines  of  learning) அறிமுகமும்  அவைகளைச் சார்ந்த நல்லறிவும் திறனும்  கிடைக்கின்றது. உதாரணமாக கணிதம், இயற்பியல், வேதியல் , பொருளாதாரம், சரித்திரம், புவியியல் போன்ற  வாழ்க்கைக்கும் பிற்காலத்  தொழில்களுக்கும் தேவையான  அறிவும் பயிற்சிகளும் கிடைக்கின்றன. ஆனால் மறைமுக பாடத்திட்டத்தில் வாழ்க்கைக்கல்வி, பாரம்பரியங்கள் பற்றிய அறிவு, சமுதாயக் கண்ணோட்டம் , சிந்திக்கும் திறன்கள்,  முடிவெடுக்கும் திறன்கள், அரசியல் மற்றும் அறிவியல் கண்ணோட்டங்கள், சமூகச் சீரமைப்பு, நாட்டு நலன், தேசீய பண்பாட்டுக் கண்ணோட்டங்கள் போன்ற பல அறிவு சால் திறன்கள் வெளிப்படுகின்றன. இவைகள் பாடத்திட்டங்களில் வெளிப்படையாக இல்லாவிட்டாலும், வெளிப்படைப் பாடத்திட்டங்களின் உள்நோக்காக அமைகின்றன

    வாழ்க்கைக் கல்வி

    கற்றலில் வாழ்க்கைக் கல்வி மிக முக்கியமான மற்றும் அவசியமான பங்கு வகிக்கின்றது. கல்வியின் முக்கிய நோக்கமே வாழ்க்கையை சீராகவும் வெற்றிகரமாகவும் அமைதியாகவும் திறமையாகவும் நிர்வகிப்பதற்கான திறன்களை வளர்ப்பதாகக் கருதப்படுகின்றது. எனவே, ஒரு மாணவன் அறிவில் எவ்வளவு சாலச் சிறந்தவனாக  இருந்தாலும் வாழ்க்கையைத் திறனுடன் சமாளிப்பதற்கான அறிவினைப் பெற்றிருத்தல் மிக அவசியம்.

    இதற்கான வித்துக்கள் இளமையில் பள்ளியின் ஆரம்ப நாட்கள் முதலிருந்தே விதைக்கப்படுகின்றன. இந்த வளரும் பருவத்தில் இளம் சிறார்களுக்கு தன்னைப் பற்றிய அறிவு (Self-concept) பெற்றுக்கொள்வதற்கான சூழ்நிலைகளை பள்ளிகளும் பெற்றோர்களும் உருவாக்க வேண்டும். இந்த நிலையில் அவர்கள் கற்றுக்கொள்ளவேண்டிய முக்கிய கருத்துக்கள்:

    1. நான் யார்?
    2. என் உறவுகள் யார்?
    3. குடும்பம் என்றால் என்ன?
    4. என்னைச் சுற்றி அமைந்திருக்கும் சூழ்நிலைகள் என்ன?
    5. நான் என்னை எவ்வாறு கவனித்துக்கொள்ள வேண்டும்?
    6. என்னைச் சார்ந்தவர்களிடமும் என்னோடு உறவாடுபவர்களிடமும் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும்?

    இது போன்ற கருத்துக்கள் தன்னறிவை உருவாக்குவதற்கும் தன்னைப் பற்றிய சரியான உணர்வுகளையும் சிந்தனைகளையும்  ஏற்படுத்திக்கொள்ளுவதற்கும் ஏதுவாக இருக்கும்.

    இதை அடுத்து இரண்டாவது படியாக அமைவது தன்னம்பிக்கை.(Self-confidence) வளரும் பருவத்தில் தன்னம்பிக்கையின் வித்துக்களை விதைத்தல் ஒரு வாழ்க்கைப் பயணத்திற்கு மிக அவசியமாகின்றது .தன்னம்பிக்கை வாழ்க்கையில் வெற்றிக்கு ஆணிவேர். பல நேரங்களில் அதிக அளவில் கல்வியில் வெற்றி பெற்றவர்கள் கூட வாழ்க்கையில் சாதிக்க முடியாமல் தோல்வியுற்றோ அல்லது துவண்ட உள்ளதோடு இருப்பதை நாம் கண்கூடாகக் காண்கின்றோம். இதற்கு எதிர்மாறாக கல்வியில் சிறப்பாகச் சாதிக்காதவர்கள் கூட வாழ்க்கையில் சாதனைகள் புரிந்திருப்பதை பார்க்கின்றோம். இவர்கள் வாழ்க்கைக் கல்வியில் அதிகத் தேர்ச்சி பெற்றவர்களாக விளங்குகின்றனர். பல நாடுகளில் இளம் பிராயம் முதற்கொண்டே மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்டக்கூடிய அறிவூட்டல்களையும் கைத்திறன்களையும் வளர்ப்பதற்கான சூழ்நிலைகளை உருவாக்கித் தருகின்றனர். இந்த தன்னம்பிக்கையை வளர்க்கும் சூழ்நிலைகளை சுமார் 7 அல்லது 8 வயது முதற் கொண்டே நாம் ஏற்படுத்த வேண்டும். இந்த சூழ்நிலைகளை கற்றல் நேரங்களிலும் கற்றல் நடக்கும் இடங்களிலும் எவ்வாறு ஏற்படுத்தலாம்?

    1. மாணவர்களை கற்றலில் பங்குதாரர்களாக ஆக்கவேண்டும். ஏதோ ஒரு மலை உச்சியில் இருந்து அறிவு பெருகி ஓடி வந்து அவர்களை அடைவது போன்ற ஆணவப் போக்கை வகுப்பறைகளிலிருந்து நீக்கி கற்றலை அவர்களின் முயற்சியாகவும் அவர்களின் ஆக்க சக்தியின் பலனாகவும் ஆக்கும்பொழுது அந்தக் கருத்துக்களுடன் அவர்களுடைய சொந்தமும் உரிமையும் அதிகமாகின்றது (Ownership in learning ). அந்த நேரங்களில் கற்றல் ஒரு அனுபவ பூர்வமான நிகழ்வாக மாறி  (Experiential  Learning) சிறப்படைகின்றது
    1. கற்றல் நடக்கும் நேரத்தில் மாணவர்களை கருத்துக்களை கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளாமல் அவைகளை கேள்விக்கணைகளால் துளைத்தும். அவைகளை அலசி ஆராய்ந்தும், அவற்றிற்கு எதிர்மறையான கருத்துக்களால் என்ன விளைவுகள் ஏற்படும் என்று விவாதித்தும் தங்கள் ஆர்வங்களை பகிர்ந்துகொண்டும் பங்கேற்றுக்கொள்ள அனுமதிக்க வேண்டும். பல நேரங்களில் வகுப்பறைகளில் மாணவர்கள் வினாக்களை எழுப்பும் பொழுது ஆசிரியர்கள் அவர்கள் தங்களை சோதிப்பதாகவோ அல்லது ர்ப்பதாகவோ அல்லது விளையாட்டுத்தனமாக நேரத்தை வீணடிப்பதாகவோ கருதி உதாசீனப் படுத்தி விடுகின்றனர். இது ஒரு தவறான போக்காகும். வகுப்பறையின் நோக்கமே வினாக்களை எழுப்பி அதற்க்கான தகுந்த பதில்களையும் தீர்வுகளையும் காண்பதுவே. இதற்கெல்லாம் நேரம் எங்கே கிடைக்கின்றது என்று பொதுவாக எழுப்பப்படும் கேள்வி சில நேரங்களில் விவாதத்திற்கும் நிர்வாக சீர்திருத்தங்களுக்கு தேவையானதாக இருந்தாலும் அவை மாணவர்களின் வாழ்க்கையில் அவர்களுடைய சீரிய சிந்தனைத் திறன்களை வளர்ப்பதற்கு உதவுவதாகத் தெரியவில்லை.
    1. மூன்றாவதாக, ஒரு கோட்பாட்டையோ அல்லது கருத்தையோ சொல்லிக்கொடுக்கும் நேரங்களிலும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளும் நேரங்களிலும், ஆசிரியர்கள் மாற்றுக கருத்துக்களை வரவேற்க வேண்டும். அவை தவறான கருத்துக்களாக இருந்தாலும், அவற்றை ஒதுக்காமல், அவற்றை கண்டனம் செய்யாமல், அந்தக் கருத்துக்கு அந்த மாணவர் வந்த வழியையும் போக்கையும் விளக்கி தவறுகளை திருத்துதல் அவசியம். பெரும்பாலும் நமது பள்ளிகளில் இருக்கும் “சரியான விடை” என்ற ஒரு போக்கு காலம்தொட்டு நிரந்தரமாக பின் போற்றப்பட்டு வந்தாலும் போற்றத்தக்கதாக பல கல்வியாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. வினாக்களுக்கு கொடுக்கப்படும் மாற்று விடைகள், மாற்றுச் சிந்தனைகளின் வடிவங்கள், மாற்று வழிமுறைகளை ஏற்றுக்கொண்டு பாராட்ட தயக்கம் காட்டக் கூடாது. மாற்றுச் சிந்தனைகளும், மாற்றுக கருத்துக்களும் தான் புதிய உத்திகளுக்கும் புதிய கண்டுபிடிஉப்புக்களுக்கும் முன்னோடியாக விளங்குகின்றன.

    “நான் என்னுடைய மாணவர்களுக்கு எதையும் சொல்லிக்கொடுப்பதில்லை. அவர்கள் கற்றுக்கொள்ளுவதற்கான சூழ்நிலைகளை மட்டும் ஏற்படுத்துகின்றேன் “ – ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

    (தொடரும்)

    Share
  • குறளின் கதிர்களாய்…(175)

     

    செண்பக ஜெகதீசன்

     

    புறத்துறுப் பெல்லா யெவன்செய்யும் யாக்கை

    யகத்துறுப் பன்பி லவர்க்கு.

           –திருக்குறள் –79(அன்புடைமை)

     

    புதுக் கவிதையில்…

     

    மனித உடலிலுள்ள

    புறத்துறுப்புக்களால்

    பயனேதுமில்லை,

    அகத்துறுப்பாம்

    அன்பு இல்லையெனில்…!

     

    குறும்பாவில்…

     

    அன்பெனும் அகவுறுப்பில்லையேல்,    

    மானிட உடலில்

    புறவுறுப்புக்களால் பலனேதுமில்லை…!

     

    மரபுக் கவிதையில்…

     

    உயிருடன் மனிதன் உலவிடவே

         உடலது கொண்ட அங்கங்கள்

    வயிறு முதலா பற்பலவும்

       வாய்த்தும் பலனாய் ஏதுமில்லை,

    உயர்ந்த உண்மை அன்பதுதான்

      உள்ளே உறுப்பாய் அமைந்தால்தான்

    உயர்வது பெற்றிடும் உடலதுவே,

       உண்மை இதுதான் உணர்வீரே…!

     

    லிமரைக்கூ..

     

    அகத்தினில் அன்புதான் அங்கமே,

    அதுயிலாது புறவுறுப்புக்களால் பலனில்லை,  

    அவற்றால் வாழ்வினில் பங்கமே…!

     

    கிராமிய பாணியில்…

     

    அன்புவேணும் அன்புவேணும்

    உள்ளத்தில அன்புவேணும்,

    அதுதான் ஒடம்புல

    உள்ளுறுப்பா அமயவேணும்..

     

    அதுயில்லாம

    வெளியவுள்ள உறுப்பெல்லாம்

    உண்மயில உறுப்பில்ல,

    அதுகளால பயனுமில்ல..

     

    அதால,

    அன்புவேணும் அன்புவேணும்

    உள்ளத்தில அன்புவேணும்…!

     

     

    Share