தமிழ் இலக்கியத்தில் பண்பாட்டுப் பதிவியல்
ம. பூங்கோதை
முனைவர்பட்ட ஆய்வாளர்
தமிழ்த்துறை
நேரு கலை அறிவியல் கல்லூரி
திருமலையம்பாளையம்
கோயம்புத்தூர் – 105
இனிமையும், பழமையும், சிறப்பும் வாய்ந்த தமிழ்மொழியில் இலக்கியங்கள் சிறந்த இடத்தை வகிக்கின்றன. இந்த இலக்கியங்கள் மூவேந்தரையும், முத்தமிழையும் கொண்டு முறையான தகுதி பெற்றது. இதில் சங்க இலக்கியம், காப்பிய இலக்கியம் என்று பலவகை இருப்பினும் இக்கால இலக்கியம் தனக்கென்று ஒரு தனிச்சிறப்பைப் பெற்றுள்ளது.
இக்கால இலக்கியம் :
இக்கால இலக்கியமானது சமுதாயச் சீர்திருத்தத்தை கொண்டு வருவதுமாய், சமுதாயச் சீர்கேடுகளை களைவதுமாக அமைந்து, மனிதனின் வாழ்க்கை முறையோடு பின்னிப்பினைந்து ஓர் குறிக்கோளோடு படிப்பவரின் ஆர்வத்தை தூண்டுவதாக அமைகின்றது. அதிலும் சிறுகதைகள் வாழ்க்கை நெறிகளை வகுத்துக்காட்டி தனி இடம் பெற்றுள்ளன.
பண்பாடு
ஒரு சமுதாயத்தில் வாழும் மக்களின் வாழக்கை அமைப்பு முறையின் வெளிப்பாடே பண்பாடாகிறது. வாழ்க்கை அமைப்பு என்பது அச்சமுதாயத்தின் பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், மரபுகள், கலைகள், இலக்கியங்கள் முதலியவற்றில் அறியப்படுவது. சுருங்கக்கூறின் பண்பாடென்பது ஒரு தலைமுறையினர் சென்ற தலைமுறையினரிடம் பெற்றுக்கொண்ட வாழ்க்கை முறையாகும்.
பண்பாடு என்பது ஒரு குழுவினரின் வாழ்க்கை முறையாகும். அது மொழி மற்றும் பாவனைகள் மூலம் ஒரு சந்ததியினர் பிறிதொரு சந்ததிக்கு விட்டுச்செல்கின்ற, பகிர்ந்து கொள்ளப்படும் கருத்துக்களின் தொகுதிகள் மற்றும் தேறிய நடத்தைகளின் மாதிரிகள். நாவல்கள் வாழ்க்கை நெறிகளையும், பரிமாறிக் கொள்ளும் எண்ணங்களையும் அழகாய் எடுத்து இயம்புகிறது.
பண்பாட்டுக் கூறுகள்
எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் “என்ன சொல்கிறாய் சுடரே” என்ற சிறுகதை தொகுப்பில் கலாச்சாரம், பண்பாடு, இல்வாழ்க்கை, விருந்தோம்பல், தாய்மை, ஒற்றுமை, நட்பு, முயற்சி போன்ற கூறுகள் பாத்திரங்கள் வழியே இடம்பெற்று மனதில் நீங்காவண்ணம் சிறந்து விளங்குவதாய் அமைந்துள்ளது.
இல்வாழ்க்கை
(“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கைப் பண்பும் பயனும் அது”)கணவன், மனைவி இடையே அன்பும், பிணைப்பும் அறநெறியில் ஒழுகுதலும் இருக்குமாயின் அந்த வாழ்க்கையின் பண்பும், பயனும் அதுவே என்ற வள்ளுவர் வாக்கிற்கிணங்க, எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் இரவு நடை, காகித வளையம் என்ற இருகதைத் தொகுப்பில் அழகாய் சித்தரிக்கின்றார்.
இரவுநடை : (பாத்திரங்கள் – முரளி, அபர்ணா)
முரளி, அபர்ணா இருவரும் 27 வருடங்கள் தனது வாழ்க்கைப் பயணத்தை தொடர்ந்தார்கள். மகள், மகன் என இருவரையும் தகுதிபெற்ற நிலையில் கல்வி, வேலைவாய்ப்பு, திருமணம் என்று அனைத்தையும் நிறைவு செய்துவிட்டுத் தனிமையை அனுபவிக்கின்றனர். ஒரு நாள் இரவு அபர்ணா நடைபயிற்சிப் போக வேண்டும் என்று முரளியிடம் கேட்க இரவு 11.30 மணி என்று கூறியும் போகலாம் என்ற அபர்ணாவின் ஆசையை நிறைவேற்றும் வண்ணமாய் முரளி அமைகின்றான்.
அப்போது இருவரும் தன் 27 வருடங்களுக்கு முன்பு பார்த்த பல இடங்களை காணும் போது, அவை பெரிதும் மாறுபட்ட நிலையில் உள்ளன. அபர்ணா, முரளியை பார்த்து இந்த நாள் 27 வருடங்களுக்கு முன்பு உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா எனக் கேட்க அதே பாசத்துடனும், நேசத்துடனும் அந்த நாளை மறக்க முடியமா என்று கூறி இருவரும் ஆனந்தப்பட்டனர்.
இவ்வாறாகப் பேசி கடைசியில் வீட்டை அடைந்தனர். அவள் கால்கடுத்த நிலையில் அமர தேநீர் அருந்துகிறாயா என்று கேட்டு அதனை எடுத்து வருவதற்குள் அவள் உறங்கிவிட்டாள். அவளுக்கு போர்வை அணிந்துவிட்டு பக்கத்திலே உட்கார்ந்த படியாக முரளி அவளை இரசிக்கின்றான்.
ஐங்குறுநூலில் இல்லறம் சிறக்க கூறிய வழி போல,
வாழி அதன், வாழி அவனி
பால் பல ஊறுக! பகடுபல சிறக்க
வாழி ஆதன், வாழி அவனி
பகைவர் புல் அர்க! பார்ப்போர் ஓதுக!
வாழி ஆதன், வாழி அவனி
பசி இல் லாகுக! பணிசேண் நீங்குக!
வாழி ஆதன்! வாழி அவனி
அரசுமுறை செய்க! களவு இல்லாகுக!
(ஐங்குறுநூறு, வேட்கைபத்து:3)
என்ற வரிகளுக்கு இணங்க பசி, பிணி ஆகியவை இல்லாமல் இருக்கும் இடத்தில் இல்லறம் சிறக்கும், மன்னவன் காவல் இன்றியமையாதது என்பதை எண்ணுகிறான் முரளி.
எத்தனை காலங்கள் கடந்தாலும் கணவன் மனைவி இடையே உள்ள பாசமும், பந்தமும் மாறாது. உலக வாழ்க்கையில் எத்தனை மாற்றங்கள் ஏற்பட்டாலும் இல்வாழ்க்கை இனிமையையே பயக்கும் என்று எஸ். ராமகிருஷ்ணனின் கதைகள் அழகாய் நம்மை நம் வாழ்க்கையை த் திரும்பிப் பார்க்க வைக்கின்றது.
காகித வளையம் : (பாத்திரங்கள்- கேசவன், வேணி)
“ஒருவனுக்கு ஒருத்தி” என்ற வரிகளுக்கு ஏற்பவும்“பெற்றான் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு” (குறள் 58) என்ற குறளில் தம் கணவனை போற்றிக் கடமை செய்யும் மகளிர் பெரும் சிறப்புடைய புத்தேளிர் வாழும் மேலுக வாழ்வினைப் பெறுவர் என்ற வள்ளுவர் வாக்கிற்கிணங்க இந்த கதையில் வரும் கதாபாத்திரம் அமைவதாக எஸ்.ராமகிருஷ்ணன் விளக்குகிறார்.
காகித வளையம் என்ற கதைத் தொகுப்பில் கேசவன், வேணி இருவரும் பரஸ்பர அன்புடன் ஒருவரை ஒருவர் விட்டுப்பிரியாது அவனை அவளுக்குள்ளும் அவளை அவனுக்குள்ளும் இரு இதயங்கள் கலந்த ஒரு உயிராக வாழ்ந்து வருகின்றனர்.
“ நீர் இன்று அமையா உலகம் போலத்
தம் இன்று அமையாராம்! (நற்றினை1)
– என்ற வரிகளுக்கு ஏற்ப தண்ணீர் இல்லாமல் உலகம் இல்லை அதுபோல நீ இல்லாமல் நான் இல்லை என்று இருவரும் இருந்த நிலையில் இழக்க முடியாத பேரிழப்பாக வேணி, கேசவனை விட்டு பிரியும் நிலை உருவாகின்றது. அவள் இருந்த காலத்தில் கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்றும் கணவனையே “கொழுநன் தொழுது எழுபவளாகவும்” வாழ்ந்தாள். அவளுடைய அரவணைப்பு அவனை விடாது வருத்திக் கொன்றது. கேசவன் அந்த அணைப்புக்காக ஏங்குகிறான் பலப் பெண்களை காண்கிறான் இருந்தாலும் அவன் மனம் அதற்கு இடம் கொடுக்கவில்லை.
கடற்கரைக்குச் சென்று கடல் அலையையே வேணியாக எண்ணி அதனுடனே தன் சங்கடங்களைப் பகிறுகிறான். பின்பு பெண்மை மதிக்கப்பட வேண்டும், பெண்ணியம் பேசப்பட வேண்டும், பெண்கள் போற்றப்பட வேண்டும், அவர்கள் தங்களை நமக்காக அற்பணிப்பது நமக்கு தரும் தண்டனை! அதை என்னாளும் ஏற்று அதற்கு துரோகம் செய்யாது வாழ வேண்டும் என்று நினைத்து இது அவளுக்கும், எனக்கும் இடையில் இருந்த பரிபாஷை தானோ என்று கூற விளைகிறான். இவ்வாறாக இக்கதையில் எஸ்.ராமகிருஷ்ணன் சமுதாயத்தில் கணவன் – மனைவி சண்டை, விவாகரத்து இவற்றை விட்டு வெளியே வரவேண்டும். இல்வாழ்க்கை மிகவும் இனிமையானது அதனை இனிமையாய் நுகர்ந்து அனுபவிக்க வேண்டும் என்ற கருத்துக்களை அழகாகக் கூறியிருக்கிறார்.
விருந்தோம்பல் – கலாச்சாரம் :
“அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்” (குறள் 84)
என்ற குறளில் முகமலர்சியோடு நல்ல விருந்தினரைப் போற்றுகின்றவள் உடைய வீட்டில் திருமகள் மனம் மகிழ்ந்து வாழ்வாள் என்ற வாக்கிற்கிணங்க எஸ். ராமகிருஷணன் அவர்களின் “அதிகம் இனிப்பு” என்ற கதை அமைந்துள்ளது.
அதிகம் இனிப்பு (பாத்திரங்கள் ஷியாமளா, அருட்செல்வன், கன்னையன்)
ஷியாமளா, அருட்செல்வன் இருவரும் வீடுகட்ட நிலம் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் சிறுக, சிறுக பணம் சேர்க்கின்றனர். அருட்செல்வன் கல்லூரியில் உதவி பேராசிரியராகவும், ஷியாமளா இன்ஷீரன்ஸ் கம்பெனியில் பணிபுரிபவராகவும் இருக்கின்றனர். கன்னையா தனது நண்பன் ஸ்டீபன் உதவியின் மூலம் அருள் செல்வத்தின் தொலைபேசி எண்ணை பெற்றுக் கொண்டான். பின்பு கன்னையா அவரிடம் தொடர்பு கொண்டு பேசுகையில் அருட்செல்வம் அந்த இடத்தினை வாங்க ஒப்புதல் கூறி நாளை நேரில் வரும்படியும் கூற, அடுத்த நாள் கன்னையா அவர்களை சந்திக்கையில் இருவரும் கண்பார்வையற்றவர் என்பதை உணர்கிறான்.
இருப்பினும் பணத்தின் மோகம் காரணமாக அவர்களை ஏமாற்ற ஒரு பொய்யான பத்திரத்தைச் செய்து அவர்களுக்கு கொடுத்து, நாளை முன்தொகையைச் செலுத்தலாம் என்று கூறி ஷியாமளா வீட்டிற்கு மூவரும் திரும்புகின்றனர். வீட்டிற்கு வந்தவர்களை நன்று கவனிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்
“ திருவிருந்த தண்டலையார் வளநாட்டில்
இல்வாழ்க்கை செலுத்தும் நல்லோர்
ஒருவிருந்தா கிலும் இன்றி உண்டபகல்
பகலாமோ உறவாய் வந்த
பெருவிருந்துக்கு உபசாரம் செய்தனுப்பி
இன்னும் எங்கே பெரியோர் என்று
வருவிருந்தோடு உண்பது அல்லால் விருந்து இல்லாது
உணும் சோறு மருந்து தானே!” (தண்டலையார் சதகம் :9)
என்ற தண்டலையார் பாட்டிற்கிணங்க வீட்டிற்கு வந்தவர்க்கு உணவளிக்காது தாம் உண்பது சரியல்ல. இவ்வாறு இருப்பதே சிறந்த இல்வாழ்க்கை என்ற கருத்திற்கேற்ப அவள் கன்னையாவுக்கு இலைப்போட்டு பரிமாறி அனுப்புகிறாள். இந்த விருந்தோம்பல் பண்பு அவர்களை ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணம் கூட மாறி அவர்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணம் கன்னையாவிற்கு எழுகிறது. அடுத்த நாள் அது வேறொருவற்கு கிரையம் ஆகிவிட்டதாகக் கூறி அவர்களின் முன் தொகையைத் திருப்பிக் கொடுத்து தங்கையை போல எண்ணுகிறேன் என்று பாச உணர்வினையும் கன்னையா என்ற பாத்திரத்தின் மூலமாக எஸ்.ராமகிருஷ்ணன் விளக்குகிறார்.
கலாச்சாரம் :
“நல்விருந்து ஓம்பலின் நட்டாளம் வைகலும்
இல்புறம் செய்தலன் ஈன்றதாய் தொல்குடியின்
மக்கள் பெறலின் மனைவி கிழத்தி இம்மூன்றும்
கற்புடையாள் பூண்டகடன்” (திரிகடுகம் : 3)
என்று கூறும் பாடலுக்கு ஏற்ப ஒரு பெண் தன் கணவனுக்குத் தாயாக, மனைவியாக, தோழியாக விளங்கவேண்டும் என்னும் நிலையோடு விளங்குவதாக இந்த கதாபாத்திரத்தின் மூலம் எஸ்.ராமகிருஷ்ணன் கூறுகிறார்.
ஷியாமளாவும், அருட்செல்வமும் கண்பார்வை அற்றவர்கள் இருந்தாலும் ஒருவரை ஒருவர் புரிந்து கலாச்சாரத்தோடும், மானம், மரியாதை இவற்றோடும் பல்வேறு மக்களின் முன்னிலையில் தனி இடத்தைப் பெற்று வாழவேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் வாழ்கின்றனர். இதன் மூலம் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் சமுதாயத்திற்கு ஊனம் ஒரு குறையில்லை என்பதையும் , அவர்கள் நல்ல கலாச்சாரத்தோடு வாழ்வதையும் உணர்த்துவதோடு அதை நாமும் கடைபிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தைப் பதிவு செய்வதாக இக்கதையை அமைத்திருக்கிறார்.
தாய்மையும், முயற்சியும் :
“ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனை
சான்றோன் எனக்கேட்ட தாய்”
(குறள் 69) என்ற குறளில் தன் மகன் சான்றோன் என்று கேட்கும் போது அவனை பேறுபெற்ற போது அடைந்த இன்பத்தை விட பேரின்பம் அடைவதாக தாய் எண்ணுகிறாள். என்ற வள்ளுவர்வாக்கிற்கிணங்க எஸ்.ராமகிருஷ்ணனின் “தனிமை வெளிச்சம்” அமைகின்றது. தாய் சான்றோன் என்று தன்னை கேட்க வேண்டும் என்ற நிலையில் படித்து வேலை தேடிஅலையும் இளைஞன் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி வசித்து வந்தான். ஒரு நாள் தனது அறையில் பல்பு எரியவில்லை என்று குடியிருப்பு முதலாளியிடம் கூற விளைகையில் கீழ் அறையில் இருக்கும் 40 வாட்ஸ் பல்பினை எடுத்துப் போட்டுக் கொள்ளும்படி கூறியிருக்கிறார். அந்த பல்பானது இவனது அறைக்கு வந்தவுடன் ஒரு பெண் குரல் கொண்டு பேசுகிறது. இழந்த தாய் தன்னுடன் மீண்டும் வந்து சேர்ந்ததாக எண்ணி மிகவும் சந்தோ ஷப்பட்டு முயற்சி எடுத்து வேலைதேட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்குகிறது.
“முயற்சி திருவினையாக்கும் என்றும், முடியாது என்ற முட்டுக்கட்டையை முயற்சி என்ற கோடாறியால் தகர்த்தால் வெற்றி என்னும் விறகு கிடைக்கும் என்ற வரிகளை மனதில் கொண்டும், வேலை தேடி அலைந்து ஒரு நல்ல வேலையைப் பெறுகிறான்.
கடமையைக் கண்ணாய் கொண்டால்
காலனும் கைகட்டி சேவகம் செய்யும்
முயற்சியை மூச்சாய் கொண்டால்
மலைமுகடு கூட காலடியில் படியாய் மாறும்!
என்ற எண்ணத்திற்கு ஏற்ப கடமையைச் செய்கிறான். தன் வருமானத்தினைப் பெருக்குகிறான். இந்தக் கதாபாத்திரம் முயற்சி இருந்தால் மட்டுமே தோல்வியை வெற்றியாய் மாற்ற முடியும் என்ற கருத்தினைச் சமுதாயத்திற்கு எடுத்து இயம்புவதாக அமைகின்றது. அந்த இளைஞன் முதல் சம்பளத்தினை அந்த பல்பின் முன்பு நீட்டுகிறான். அந்த தாய் குரல் அதிக சந்தோஷத்துடன், இது உன் பணம் முறையாய் அனுபவி என்று கூறுகிறது. பின்பு வசதிகள் பெருக அந்தக் குடியிருப்பு அவனுக்குப் போதுமானதாக இல்லை. பின்பு ஒரு தனிவீட்டிற்கு செல்கிறான். அங்கு அவன் அந்த பல்பினை எடுத்துக் கொண்டு போடுகிறான். இங்கு இருந்தது போல அது பேசவில்லை. ஆத்திரம் கொள்கிறான். பின்பு கோபத்தில் அதனைப் போட்டு உடைக்கின்றான் அப்போது அது, “காலில் கண்ணாடிகள் குத்தப் போகின்றன பார்த்து” என்று கூறியதும், அவன் இழந்த தாயை எண்ணி மிகவும் வேதனையுறுகிறான்.
எஸ். ராமகிருஷ்ணனின் இக்கதை தாய் – மகன் இடையே உள்ள உறவினையும், தாய்மை பண்பினையும் அழகாய் கூறியதோடு“வீட்டின் பெயரோ அன்னை இல்லம் அன்னை இருப்பதோ அனாதை இல்லம் “ என்று வாழும் இன்றைய சமுதாயத்தினருக்கு தாய்மை என்பது பொக்கிஷம், உனது உயிர் அதை என்னாளும் கலங்கப்படுத்தாதே என்று கூறுவதாக அமைகிறது. தாய்மையிடமே அன்பு, பாசம், நேசம், கருணை, இவையாவும் பிறக்கின்றன. அதனை கலங்கப்படுத்தாமல் பார்க்க வேண்டும், அவர்கள் அறிவுரையை கேட்டு நடக்க வேண்டும் என்று இன்றைய சமுதாயத்தினருக்கு தனிமை வெளிச்சம் மூலம் எஸ்.இராமகிருஷ்ணன் அவர்கள் கூறுகிறார்.
ஒற்றுமை நட்பு:
“மதிமொழி யிடல்மாலை வினைவர்போல் வல்லவர் செதுமொழி சீத்த செவி செறுவாக முதுமொழி நீராப் புலனா வுழவர்
புதுமொழி கூட்டுண்ணும் புரிசைசூழ் புனலூர்” (கலித்தொகை : 68)
புலவர்கள் பலர் மதுரையில் இருந்தனர் என்பதும் பேராசானாகிய பாண்டியனுக்கு அவர்தம் செவி செய்யாகவும், சான்றோர் செய்யுள் நீராகவும் அவர்தம் நா ஏராகவும் கொண்டு புலம் உழுதுண்ணும் புலவர்கள் என்பதும் அவர்கள் புதிய பாடல்களை ஒருங்கூடி ஆய்ந்தனர் என்ற தமிழ் இலக்கியத்தின் கருத்துக்கேற்ப எஸ்.ராமகிருஷ்ணன் கதைத் தொகுப்பில் “பாதிக்கனவு” என்ற தலைப்பில் வர்ணிக்கின்றார். பாதிக்கனவு (பாத்திரங்கள் சத்யன், சீனி, ரவி, விநோத்) இவர்கள் அனைவரும் நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றனர். சத்யன் புத்தக ஆர்வம் கொண்டவனாக உள்ளான்.
“இம்மை பயக்குமால் ஈயக் குறைவன்றால்
தம்மை வளிக்குமால் தாமுளராக் கேடின்றால்
எம்மை யுலகத்தும் யாங்காணோம் கல்விபோல்
மம்மர் அறுக்கும் மருந்து” (நாலடியார் 132)
என்ற நாலடியார் பாட்டில், இவ்வுலக வாழ்விற்கு கல்வி கண்போன்றது, எதையும் சாதிக்கும் ஓர் அரிய கருவி கல்வியாகும், இருளழிக்கும், ஒளியாக்கும், எல்லா நன்மைகளையும் தரும் ஈயக் குறையாது உன்னையே உணரச் செய்யும், மெய்ஞானியாக மாற்றும், கல்விதான் அறியாமை மயக்கத்தை அகற்றும் அருமருந்து என்ற கருத்துக்களை உணர்ந்த பாத்திரமாக சத்யன் புத்தகங்களை அதிகம் படிக்கும் ஆர்வம் உள்ளவனாக இருக்கின்றான். சத்யன் தம் நாட்டு புத்தகங்கள் மட்டுமின்றி பிறநாட்டு புத்தகங்களையும் படித்துத் தனக்கென ஓர் தகுதி படைத்துத் தன்னுடைய கருத்துக்களை எல்லாம் ஒன்று சேர்த்து வைத்துள்ளான். அவன் அதனை ஒன்று சேர்த்து நூலாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறான். திடீரென சத்யன் இறந்துவிடுகிறான். அதனால் மனமுடைந்த நண்பர்களுக்கு,அவனுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்குகிறது. அப்போது அவர்கள் அவனுக்காக புத்தகம் போட வேண்டும் என்று பேசி முடிவு செய்கின்றனர்.
“மால்வரைக்
கமழ் பூஞ் சாரல் கவினிய நெல்ல
அமிழ்து விளை தீங்கின ஒளவைக்கு ஈந்த
உரவுச்சினம் கனலும் ஒளிதிகழ் நெடுவேல்
அரவக் கடல் தானை அதிகனும்” (புறநானூறு 99-103)
என்ற வரிகளுக்கு ஏற்ப பெரிய மலையில் கமழும் பூக்களைக் கொண்ட பக்கமலையில் கிடைத்த அழகிய கருநெல்லி என்னும் அமிழ்தினை ஒத்த இனிய கனியினைத் தான் நுகர்ந்து நீண்ட நாள் வாழவேண்டுமென விரும்பாமல் ஒளவைக்கு கொடுத்த அதியமானின் நட்பு போல இந்த கதாபாத்திரங்கள் தன் வாழ்க்கையின் முக்கியத்துவத்தை எண்ணாது நண்பனின் முக்கயத்துவம் கருதி ஒவ்வொருவரும் 2000 ரூபாய் போட்டு அவனது புத்தகத்தை வெளியிடுகின்றனர். இவ்வாறாக இக்கதைகளில் இலக்கியங்களுக்கு ஒப்பாகப் பண்பாட்டுக் கூறுகள் அமைகின்றன.
தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கோர் குணமுண்டு அமிழ்தம் அவனுடைய மொழியாகும்! அன்பே அவனுடைய வழியாகும் மானம் பெரிதென உயிர்விடுவான்! மற்றவர்க்காகத் துயர்படுவான் தானம் வாங்கி பசித்திடுவான்! தருவது மேல் எனப்பேசிடுவான்! (பாரதிதாசன்) என்றவாறு விருந்தோம்பல், இல்வாழ்க்கை, தாய்மை, ஒற்றுமை, நட்பு என்ற பண்பாடு கொண்டு இச்சமுதாயம் சீர்திருத்தம் பெற்று விளங்கி சிறந்ததொரு சமுதாயமாக விளங்கவேண்டும் என எஸ். ராமகிருஷ்ணன்அவர்கள் “என்ன சொல்கிறாய் சுடரே” மூலம் உணர்த்துகிறார்.
நாமும் அவ்வழி செல்வோம் !
நல்வழி பெறுவோமாக!
