திருமந்திரத்தில் சில  சிந்தனைத் துளிகள் 18

க. பாலசுப்பிரமணியன்

உள்ளத்தில் உறவாடும் இறைவன்

திருமூலர்-1-3

இறைவன் நம்மை எப்படி ஆட்கொள்ளுகின்றான்? அவன் எவ்வாறு நம்மை அவனுக்கே உரியவனாக ஆக்கிக்கொள்ளுகின்றான்? அவனோடு நமக்கு உறவு எவ்வாறு ஏற்படுகின்றது? இந்த உறவை ஏற்படுத்த  முயற்சி செய்வது நாம அல்லது இறைவனா? அவன் எவ்வாறு நமது உள்ளத்துக்குள் வந்து அமருகின்றான்?

திருமூலர் கூறுகின்றார்:

பிறவாநெறி தந்த பேரருளாளன்

மறவா அருள் தந்த மாதவன் நந்தி

அறஆழி அந்தணன் மாதவன் பராபரன்

உறவாகி வந்து உளம் புகுந்தானே 

உடல் பொருள் ஆவி  என்ற மூன்றையுமே இறைவனுக்கு அர்ப்பணித்து விட்டால்  நமக்கு வேறு கவலை ஏது  என்று நாம்  நினைக்கின்றோம்.  ஆனால்  இத்தனையும் அவனுக்கு  அர்ப்பணித்த பின்னும் கூட அவன் நம்மைத் தனியாக விட்டு விட மாட்டான் என்று எப்படி  நம்பும் இந்த  உள்ளம்?  எல்லாம் அவனுக்கே உரிமையென்று  ஆன  பின்னே அவன் அதற்கு உரிமையாளனாக  விடுகின்றான். அவன் அதை என்ன செய்தல் நமக்கென்ன?

ஆனால்  மாணிக்க வாசகருக்கோ எந்த  நிலையிலும் இறைவன் தன்னைக் கைவிட்டு விடக்கூடாது என்ற விருப்பம். ஆகவே அவர் இறைவனுக்கு அளிக்கும் விண்ணப்பம் என்ன தெரியுமா ?

இருந்து என்னை ஆண்டுகொள் விற்றுக்கோள்

ஒற்றி வை  என்னின் அல்லால்

விருந்தினனே விடுதி கண்டாய்

மிக்க  நஞ்சு அமுதா

அருந்தினனே மன்னும்  உத்தரகோச

மங்கைக்கு அரசே

மருந்தினனே  பிறவி பிணிபட்டு

மடங்கினர்க்கே

என்னே ஒரு வேண்டுதல் ! என்னே ஒரு ஈடுபாடு !

இவ்வளவு  அன்பு காட்டும் இறைவனின் திருவடிகளை நாம் எப்படி அடைய முடியும்?  எவ்வாறு அவன்  பொற்பாதங்களின் தரிசனம் நமக்குக் கிட்டும் ? அவனை அடைய ,மகிழ்விக்க  எந்த வழியைக் கடைப்பிடிக்கலாம் ? அது எளிதானதா அல்லது மிகவும் கடினமானதா?

இப்படியே உலகிலுள்ள அனைவரும் இறைவனின் பாதங்களை நாடினால் அவனுக்கு நம்மை கவனிக்க சற்றேனும் நேரம் கிடைக்குமா? அல்லது அவன் தன் அடியார்களை வரிசைப்படுத்தி அருள் கொடுப்பானா? இந்த ஐயத்திற்கு சற்றும் இடம் கொடுக்காமல் வள்ளலார் கேட்கின்றார் :

யார்மீது உன் மனமிருந்தாலு முன்கடைக்

கண்பார்வை யது போதுமே !

திருநாவுக்கரசரோ உடலையும் உள்ளத்தையும் உயிரையும் அவனுக்கே அர்ப்பணித்து வேண்டி நிற்கின்றார் அவனுடைய பொற்பாதங்களின் தரிசனத்திற்காக.

உடம்பெனும் மனையகத்து உள்ளமே தகழியாக

மடம்படு முணர் நெய்யட்டி உயிரெனும்  திரிமயக்கி

இடம்படு ஞானத்தீயால் எரிகொள் இருந்து நோக்கின்

கடமபர் காளை தாதை கழலடி காணலாமே 

திருமூலரோ இறைவனின்  தரிசனத்திற்கு அன்பு மட்டும் இருந்தால் போதும் . உண்மையான அன்புடன் இறைவனை அணுகினால் அவன் உள்ளம் நெகிழ்ந்து விடும்.  இதற்க்கெல்லாம் நமக்கு  திருமூலரிடமிருந்து  விளக்கமான பதில் கிடைக்கிறது :

ஆர்வம் உடையவர் காண்பர் அரன்தன்னை

ஈரம் உடையவர் காண்பார் இணையடி

பாரம் உடையவர் காண்பார் பவந்தன்னைக்

கோர நெறிகொடு கொங்குபுக் காரே.

அது மட்டுமல்ல. “தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் ” என்று நாரணனை பிரகலாதன் வர்ணித்தது போல் அரனை எங்கே காணலாம் என்ற வினாவுக்கு திருமூலர் தெள்ளத் தெளிவாக பதில் அளிக்கின்றார்

அன்பின்உள் ளான்புறத்தான் உட லாயுளான்

முன்பின்உள் ளான்முனி வர்க்கும் பிரானவன்

அன்பின்உள் ளாகி அமரும் அரும்பொருள்

அன்பினுள் ளார்க்கே அணைதுணை யாமே.

(தொடரும்)

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.