பெருவை பார்த்தசாரதி

 

தாலாட்டு

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

தந்தை உயிர்கொடுத்து தாயென் உருவமெடுத்தென்

சிந்தைமகிழ விந்தைமிகப் பிறந்தவனே தாலேலோ.!

 

சஷ்டியில் விரதமிருந்து கருப்பையில் உருவாகி

திருஷ்டி கழிக்கவந்தவனே ஆராரோ…ஆரிரரோ.!

 

அரசனும் வேம்பையும் பரவசமாய்ச் சுத்திவந்து

அரிதாயுதித்த அற்புதமே ஆராரோ ஆரிரரோ.!

 

சிரவண ஏகாதசி சித்ரா பெளர்ணமியில சீராகபல

விரதமிருந் தென்வயித்தில் உதித்தவனே தாலேலோ.!

 

மணமாகி பலவருஷம் மாவிளக்கு இட்டதாலே

வந்தென் வயிற்றிலுதித்த மின்னலேநீ கண்ணுறங்கு.!

 

நாவால்வேண்டி நவமுறைசுற்றி நவகிரக அருளால

நவரத்தினமெனப் பிறந்தயென் நித்திலமே நீயுறங்கு.!

 

மலைபோல வந்ததுன்பம் நொடியில மறையுவண்ணம்

அலைபோல தூளியிலே ஆடிநீயும் உறங்குதியோ.!

 

முண்டக்கண்ணி கோவிலிலே முழங்கால் முட்டிதேய

மண்டியிட்டு மடிப்பிச்ச கேட்டுப் பிறந்தபெரும்பேறே.!

 

கன்னக் கதுப்பினுள் குழிவிழும் சிரிப்பைக்காணநான்

என்ன தவம்செய்துனைப் பெற்றேனோ தாலேலோ.!

 

பத்தியம் பலவிருந்து பலசோற்றில் உப்புநீக்கி

வைத்தியம் செய்யாவந்துதித்த வண்ணமே நீயுறங்கு.!

 

பிஞ்சுக் கரம்நீட்டியென் கன்னம் தொட்டபோதென்

நெஞ்சு நிறைஞ்சுதடிநீ இமைமூடி உறங்குதியோ.!

 

சந்தியம்மங் கோவிலிலே சமகாலந் தவமிருந்து

சீதனமா நீயும்வந்து பொறந்தாயடி தாலேலோ.!

 

குட்டிவாய்மலர்ந்து குழறுமுன் மழலைமொழி கேட்க

எட்டிநீயுதைத்த என்வயிறு வாழ்த்துதடி தங்கமே.!

 

தாலிக்குத்தங்கம் தரும்தமிழ்த்திரு நாட்டிலே பிறந்த

தங்கமே தாலேலோ..!தூங்குகண்ணா தாலேலோ.!

 

அஞ்சனந்தீட்டி அருமைப் பொட்டிட்டு அழகாய்ப்

பஞ்சணைப் பட்டின்மேல்மலர் மொட்டாக நீயுறங்கு.!

 

வாங்கி வச்சிருக்கேன் சங்குபாலாடை வெள்ளியிலே

தூங்கி யெழுவாய்நீ துள்ளியெழுந்து பால்குடிக்க..

 

தூளிவாசம் துயில் நீப்பாயெம் செல்லமகனே

அள்ளி யணைக்கயிப்ப தாய்மாமன் வந்திடுவான்.!

 

எண்ணிலாச் சுமைகளை ஏந்திச் சுழன்றேனே..உனைப்

புண்ணியமாய்ப் பெற்று புகழடைந்தேன் பூமியிலே.!

 

நீரைநீக்கிப் பாலையருந்தும் அன்னம்போலே அன்னை

உயிரைப்போக்கும் மனச்சுமை யகற்றப் பிறந்தவனே.!

 

ஆராரோ… ஆரிரரோ…! ஆரிரரோ…! ஆராரோ…!

1 thought on “இன்றைய தாலாட்டு..!

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க