க. பாலசுப்பிரமணியன்

மறைமுகமான பாடத்திட்டத்தின் சில குறிக்கோள்கள்  (Salient features of the Hidden curriculum)

education

வெளிப்படையான  பாடத்திட்டங்களைக் காட்டிலும் மறைமுகமான பாடத்திட்டத்தின் குறிக்கோள்கள் மிக முக்கியமானவையாகவும் அவசியமானவைகளாகவும் அமைகின்றன. வெளிப்படையான பாடத்திட்டத்தில் ஒரு மாணவனுக்குத் தேவையான பல கற்றல் துறைகளின் (disciplines  of  learning) அறிமுகமும்  அவைகளைச் சார்ந்த நல்லறிவும் திறனும்  கிடைக்கின்றது. உதாரணமாக கணிதம், இயற்பியல், வேதியல் , பொருளாதாரம், சரித்திரம், புவியியல் போன்ற  வாழ்க்கைக்கும் பிற்காலத்  தொழில்களுக்கும் தேவையான  அறிவும் பயிற்சிகளும் கிடைக்கின்றன. ஆனால் மறைமுக பாடத்திட்டத்தில் வாழ்க்கைக்கல்வி, பாரம்பரியங்கள் பற்றிய அறிவு, சமுதாயக் கண்ணோட்டம் , சிந்திக்கும் திறன்கள்,  முடிவெடுக்கும் திறன்கள், அரசியல் மற்றும் அறிவியல் கண்ணோட்டங்கள், சமூகச் சீரமைப்பு, நாட்டு நலன், தேசீய பண்பாட்டுக் கண்ணோட்டங்கள் போன்ற பல அறிவு சால் திறன்கள் வெளிப்படுகின்றன. இவைகள் பாடத்திட்டங்களில் வெளிப்படையாக இல்லாவிட்டாலும், வெளிப்படைப் பாடத்திட்டங்களின் உள்நோக்காக அமைகின்றன

வாழ்க்கைக் கல்வி

கற்றலில் வாழ்க்கைக் கல்வி மிக முக்கியமான மற்றும் அவசியமான பங்கு வகிக்கின்றது. கல்வியின் முக்கிய நோக்கமே வாழ்க்கையை சீராகவும் வெற்றிகரமாகவும் அமைதியாகவும் திறமையாகவும் நிர்வகிப்பதற்கான திறன்களை வளர்ப்பதாகக் கருதப்படுகின்றது. எனவே, ஒரு மாணவன் அறிவில் எவ்வளவு சாலச் சிறந்தவனாக  இருந்தாலும் வாழ்க்கையைத் திறனுடன் சமாளிப்பதற்கான அறிவினைப் பெற்றிருத்தல் மிக அவசியம்.

இதற்கான வித்துக்கள் இளமையில் பள்ளியின் ஆரம்ப நாட்கள் முதலிருந்தே விதைக்கப்படுகின்றன. இந்த வளரும் பருவத்தில் இளம் சிறார்களுக்கு தன்னைப் பற்றிய அறிவு (Self-concept) பெற்றுக்கொள்வதற்கான சூழ்நிலைகளை பள்ளிகளும் பெற்றோர்களும் உருவாக்க வேண்டும். இந்த நிலையில் அவர்கள் கற்றுக்கொள்ளவேண்டிய முக்கிய கருத்துக்கள்:

  1. நான் யார்?
  2. என் உறவுகள் யார்?
  3. குடும்பம் என்றால் என்ன?
  4. என்னைச் சுற்றி அமைந்திருக்கும் சூழ்நிலைகள் என்ன?
  5. நான் என்னை எவ்வாறு கவனித்துக்கொள்ள வேண்டும்?
  6. என்னைச் சார்ந்தவர்களிடமும் என்னோடு உறவாடுபவர்களிடமும் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும்?

இது போன்ற கருத்துக்கள் தன்னறிவை உருவாக்குவதற்கும் தன்னைப் பற்றிய சரியான உணர்வுகளையும் சிந்தனைகளையும்  ஏற்படுத்திக்கொள்ளுவதற்கும் ஏதுவாக இருக்கும்.

இதை அடுத்து இரண்டாவது படியாக அமைவது தன்னம்பிக்கை.(Self-confidence) வளரும் பருவத்தில் தன்னம்பிக்கையின் வித்துக்களை விதைத்தல் ஒரு வாழ்க்கைப் பயணத்திற்கு மிக அவசியமாகின்றது .தன்னம்பிக்கை வாழ்க்கையில் வெற்றிக்கு ஆணிவேர். பல நேரங்களில் அதிக அளவில் கல்வியில் வெற்றி பெற்றவர்கள் கூட வாழ்க்கையில் சாதிக்க முடியாமல் தோல்வியுற்றோ அல்லது துவண்ட உள்ளதோடு இருப்பதை நாம் கண்கூடாகக் காண்கின்றோம். இதற்கு எதிர்மாறாக கல்வியில் சிறப்பாகச் சாதிக்காதவர்கள் கூட வாழ்க்கையில் சாதனைகள் புரிந்திருப்பதை பார்க்கின்றோம். இவர்கள் வாழ்க்கைக் கல்வியில் அதிகத் தேர்ச்சி பெற்றவர்களாக விளங்குகின்றனர். பல நாடுகளில் இளம் பிராயம் முதற்கொண்டே மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்டக்கூடிய அறிவூட்டல்களையும் கைத்திறன்களையும் வளர்ப்பதற்கான சூழ்நிலைகளை உருவாக்கித் தருகின்றனர். இந்த தன்னம்பிக்கையை வளர்க்கும் சூழ்நிலைகளை சுமார் 7 அல்லது 8 வயது முதற் கொண்டே நாம் ஏற்படுத்த வேண்டும். இந்த சூழ்நிலைகளை கற்றல் நேரங்களிலும் கற்றல் நடக்கும் இடங்களிலும் எவ்வாறு ஏற்படுத்தலாம்?

  1. மாணவர்களை கற்றலில் பங்குதாரர்களாக ஆக்கவேண்டும். ஏதோ ஒரு மலை உச்சியில் இருந்து அறிவு பெருகி ஓடி வந்து அவர்களை அடைவது போன்ற ஆணவப் போக்கை வகுப்பறைகளிலிருந்து நீக்கி கற்றலை அவர்களின் முயற்சியாகவும் அவர்களின் ஆக்க சக்தியின் பலனாகவும் ஆக்கும்பொழுது அந்தக் கருத்துக்களுடன் அவர்களுடைய சொந்தமும் உரிமையும் அதிகமாகின்றது (Ownership in learning ). அந்த நேரங்களில் கற்றல் ஒரு அனுபவ பூர்வமான நிகழ்வாக மாறி  (Experiential  Learning) சிறப்படைகின்றது
  1. கற்றல் நடக்கும் நேரத்தில் மாணவர்களை கருத்துக்களை கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளாமல் அவைகளை கேள்விக்கணைகளால் துளைத்தும். அவைகளை அலசி ஆராய்ந்தும், அவற்றிற்கு எதிர்மறையான கருத்துக்களால் என்ன விளைவுகள் ஏற்படும் என்று விவாதித்தும் தங்கள் ஆர்வங்களை பகிர்ந்துகொண்டும் பங்கேற்றுக்கொள்ள அனுமதிக்க வேண்டும். பல நேரங்களில் வகுப்பறைகளில் மாணவர்கள் வினாக்களை எழுப்பும் பொழுது ஆசிரியர்கள் அவர்கள் தங்களை சோதிப்பதாகவோ அல்லது ர்ப்பதாகவோ அல்லது விளையாட்டுத்தனமாக நேரத்தை வீணடிப்பதாகவோ கருதி உதாசீனப் படுத்தி விடுகின்றனர். இது ஒரு தவறான போக்காகும். வகுப்பறையின் நோக்கமே வினாக்களை எழுப்பி அதற்க்கான தகுந்த பதில்களையும் தீர்வுகளையும் காண்பதுவே. இதற்கெல்லாம் நேரம் எங்கே கிடைக்கின்றது என்று பொதுவாக எழுப்பப்படும் கேள்வி சில நேரங்களில் விவாதத்திற்கும் நிர்வாக சீர்திருத்தங்களுக்கு தேவையானதாக இருந்தாலும் அவை மாணவர்களின் வாழ்க்கையில் அவர்களுடைய சீரிய சிந்தனைத் திறன்களை வளர்ப்பதற்கு உதவுவதாகத் தெரியவில்லை.
  1. மூன்றாவதாக, ஒரு கோட்பாட்டையோ அல்லது கருத்தையோ சொல்லிக்கொடுக்கும் நேரங்களிலும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளும் நேரங்களிலும், ஆசிரியர்கள் மாற்றுக கருத்துக்களை வரவேற்க வேண்டும். அவை தவறான கருத்துக்களாக இருந்தாலும், அவற்றை ஒதுக்காமல், அவற்றை கண்டனம் செய்யாமல், அந்தக் கருத்துக்கு அந்த மாணவர் வந்த வழியையும் போக்கையும் விளக்கி தவறுகளை திருத்துதல் அவசியம். பெரும்பாலும் நமது பள்ளிகளில் இருக்கும் “சரியான விடை” என்ற ஒரு போக்கு காலம்தொட்டு நிரந்தரமாக பின் போற்றப்பட்டு வந்தாலும் போற்றத்தக்கதாக பல கல்வியாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. வினாக்களுக்கு கொடுக்கப்படும் மாற்று விடைகள், மாற்றுச் சிந்தனைகளின் வடிவங்கள், மாற்று வழிமுறைகளை ஏற்றுக்கொண்டு பாராட்ட தயக்கம் காட்டக் கூடாது. மாற்றுச் சிந்தனைகளும், மாற்றுக கருத்துக்களும் தான் புதிய உத்திகளுக்கும் புதிய கண்டுபிடிஉப்புக்களுக்கும் முன்னோடியாக விளங்குகின்றன.

“நான் என்னுடைய மாணவர்களுக்கு எதையும் சொல்லிக்கொடுப்பதில்லை. அவர்கள் கற்றுக்கொள்ளுவதற்கான சூழ்நிலைகளை மட்டும் ஏற்படுத்துகின்றேன் “ – ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.