செண்பக ஜெகதீசன்

 

புறத்துறுப் பெல்லா யெவன்செய்யும் யாக்கை

யகத்துறுப் பன்பி லவர்க்கு.

       –திருக்குறள் –79(அன்புடைமை)

 

புதுக் கவிதையில்…

 

மனித உடலிலுள்ள

புறத்துறுப்புக்களால்

பயனேதுமில்லை,

அகத்துறுப்பாம்

அன்பு இல்லையெனில்…!

 

குறும்பாவில்…

 

அன்பெனும் அகவுறுப்பில்லையேல்,    

மானிட உடலில்

புறவுறுப்புக்களால் பலனேதுமில்லை…!

 

மரபுக் கவிதையில்…

 

உயிருடன் மனிதன் உலவிடவே

     உடலது கொண்ட அங்கங்கள்

வயிறு முதலா பற்பலவும்

   வாய்த்தும் பலனாய் ஏதுமில்லை,

உயர்ந்த உண்மை அன்பதுதான்

  உள்ளே உறுப்பாய் அமைந்தால்தான்

உயர்வது பெற்றிடும் உடலதுவே,

   உண்மை இதுதான் உணர்வீரே…!

 

லிமரைக்கூ..

 

அகத்தினில் அன்புதான் அங்கமே,

அதுயிலாது புறவுறுப்புக்களால் பலனில்லை,  

அவற்றால் வாழ்வினில் பங்கமே…!

 

கிராமிய பாணியில்…

 

அன்புவேணும் அன்புவேணும்

உள்ளத்தில அன்புவேணும்,

அதுதான் ஒடம்புல

உள்ளுறுப்பா அமயவேணும்..

 

அதுயில்லாம

வெளியவுள்ள உறுப்பெல்லாம்

உண்மயில உறுப்பில்ல,

அதுகளால பயனுமில்ல..

 

அதால,

அன்புவேணும் அன்புவேணும்

உள்ளத்தில அன்புவேணும்…!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *