Blog

  • உச்சநீதி மன்றத்தை உதாசீனப்படுத்தும் கர்நாடக அரசு

    பவள சங்கரி

    நேற்று உச்சநீதிமன்றம் காவேரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 2000 கன அடி தண்ணீர் திறந்துவிட உத்திரவிட்டும் கர்நாடக அரசு மறுத்துவிட்டது. உச்சநீதி மன்றம் கர்நாடகத் தலைமை செயற்பொறியாளருக்கும், மத்திய அரசின் விவசாய செயல் அலுவலருக்கும் இது தொடர்பான ஆணையை ஏன் பிறபிக்கக்கூடாது? தமிழர்களின் உயிர் நாடியான குடிநீர் பிரச்சனையை எந்த வகையிலேனும் தீர்த்தாக வேண்டிய கடப்பாடு உச்சநீதி மன்றத்திற்கு உள்ளது.

    Share
  • படமும் பாடலும்….!

    கிரேசி மோகன்

    ——————————————————

    crazy
    ’’மால்செய்த கண்ணன் மயக்கம் தலைக்கேற
    வேல்விழியாள் தண்மேனி வெப்பமுற -மேல்சுமந்த
    பால்நழுவிப் பொங்கி பழமவள் மூங்கிலன்ன
    தோள்தழுவும் பூவான தே’’….கிரேசி மோகன்….!

    Share
  • சிட்டுக்கு செல்லச் சிட்டுக்கு…

    சித்ரப்ரியங்கா ராஜா

     

     

    சிட்டே நீதான் எங்களை

    விட்டுப் பிரியவில்லையே

    சின்னஞ்சிறு மழலைபோல்

    சிங்காரமாய் நீயுமே

    தத்தித் தத்தி நடந்து வந்து

    தாளம் கற்றுத் தருகிறாய்

    உருட்டும் விழி பார்வையால்

    சுற்றுமுற்றும் நீயுமே

    ஒய்யாரமாய் பார்த்துப் பின்

    ஓட எத்தனிப்ப தென்ன?

    வைத்த அரிசி தன்னை நீ

    கொத்தித் தின்னும் அழகையே

    பெற்ற அன்னை போல் மனம்

    பார்த்து ரசித்து மகிழுமே

    கீச்சு கீச்சு என்று நீ

    கூச்சலிடும் அழகைத்தான்

    மூச்சு முட்ட நாங்களும்

    ரசித்து மகிழ்ச்சி கொள்வோமே

    அலைபேசி கோபுரங்கள் தாம்

    உன்னை அசைய வைத்தாலும்

    அசராது இன்னும் நீயே

    எங்களுக்காய் வாழ்கிறாய்

    அழகிய சிட்டே நீயும்தான்

    எங்களின் அன்புச் செல்லமடி

    எங்கள் அனைவரின் இதயமுமே

    என்றும் உனக்கான அன்னை மடி.

     

     

    Share
  • பாவம்

    பொற்கிழிக்கவிஞர் டாக்டர். ச.சவகர்லால்

     

    பூவுலக மாந்தர்க்குக் கண்கள் வைத்தான்;

    பார்வையினால் மனம்மலர வழிகள் வைத்தான்;

    மேவிவரும் ஓசைநலம் கேட்டு நெஞ்சம்

    மேன்மையுற இருசெவிகள் அழகாய் வைத்தான்;

    காவினிலே பூத்தமலர் மணம்சு வைக்கக்

    கட்டழகு முகத்தினிலே மூக்கை வைத்தான்;

    நாவினையே உரையாட வைத்தான்; இன்ப

    நாட்டியங்கள் அரங்கேற மெய்யை வைத்தான்.

     

    வைத்தவனை மறந்துவிட்டோம்; கணமும் தீமை

    வளர்ப்பதற்கே ஐம்புலனைத் தீட்டிக் கொள்வோம்;

    சைத்தானின் ஆட்சிபீட மாக மெய்யைத்

    தாரைவார்த்துக் கொடுத்துவிட்டோம்; புலன்க ளெல்லாம்

    கைத்தாளம் போட்டதற்கே தொண்டு செய்யக்

    கடைப்பட்டு நைகின்றோம்; நல்ல பாதை

    சைத்தானும் காட்டாது; மனித நெஞ்சும்

    சரிபாதை கேட்காது;  கெட்டு  நையும்.

     

    கண்மடல்கள் தீமையினைப் பார்ப்ப தற்கே

    கணந்தோறும் திறக்கிறது; இரண்டு பக்கம்

    உண்டான செவிவழியோ தீமை வெள்ளம்

    ஓடிவர அழைக்கிறது; மூக்கோ நாற்றம்

    ஒன்றைத்தான் நுகர்கிறது; மெய்யோ என்றும்

    உருப்படாது போகிறது; உறவு கொள்ள

    உண்டான நாவதுவோ நுனியில் தீயை

    உண்டாக்கிச் சுடுகிறது; மனிதன் பாவம் !

    Share
  • கவிதை

    க.பாலசுப்பிரமணியன்

     

    உலகே ….

    நீயே ஒரு கவிதை…

     

    பகலென்றும் இரவென்றும்

    வண்ணங்கள் தீட்டி ..

    மகிழ்வினிலும் துயரத்திலும்

    கடல் நீரை விழியோரத்தில்

    வடிகட்டி..

     

    வார்த்தைகளில்லா வானவில்லாய் .

    நான் மௌனத்தில்..

    உலவிவர..

     

    உள்ளத்தில்..

    உன் மாயைகள்

    எனக்கு மட்டும்

    அரங்கேற்றம் !

     

    மொழிகள் மனதினில்

    வார்த்தைகளைத்  தேடி ..

    விதையில்லா மலராய் ..

    வாசங்கள் பெருக்கிட….

     

    ஒளியில்லா இதயத்தின்

    மூலைகளில் ஒளிந்திருக்கும் அன்பே.

     

    உனக்கு …. “கவிதை”

    நல்ல புனைப்பெயர்தான்

    Share
  • அன்புதனை அணையுங்கள்

    எம் . ஜெயராமசர்மா, மெல்பேண், அவுஸ்திரேலியா 

     

    ஓடிவரும் ஆறும் ஊற்றெடுக்கும் நீரும்

    ஆடிவரும் காற்றும் அனைவருக்கும் உதவும்

    கூவிநிற்கும் குயிலும் குதித்தோடும் முயலும்

    யாவருக்கும் இன்பம் நல்கிவிடும் நயமாய் !

     

    மயிலென்போம் குயிலென்போம்

    வண்ணமிகு கிளியென்போம்

    தனியான குணங்கொண்டால்

    அன்னமென உயர்த்திடுவோம்

    கருடனை வணங்கிடுவோம்

    காக்கைக்குச் சோறிடுவோம்

    பெருமைநிறை பறவையென

    உரிமையாய் உரைத்துநிற்போம் !

     

    கூவிநிற்கும் கோழியினை

    குழம்புவைத்துச் சுவைத்துவிட்டு

    கோழியது பொருமையை

    கொண்டாடி மகிழ்ந்திடுவர்

    வீட்டிலே வளர்த்தெடுக்கும்

    வெள்ளாடு தனைவெட்டி

    விருந்துண்டு மகிழ்ந்துவிட்டு

    விரிவுரைகள் செய்துநிற்பர் !

     

    அஃறிணை என்று

    அவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டு

    உயர்திணை என்று

    உவப்பாகப் பேசிநிற்கும்

    உலகத்து மனிதர்களின்

    உண்மைமுகம் வரும்பொழுது

    அஃறிணை எதுவென்று

    அப்போது  அறிந்திடலாம் !

     

    உயிர்கொன்று உயிர்வளர்த்தல்

    உயர்வான செயலன்று

    எனவுரைக்கும் வள்ளுவத்தை

    உயர்பீடம் வைக்கின்றோம்

    உயர்வான குறள்சொல்லும்

    உயர்வான தத்துவத்தை

    உள்ளமதில் பதிக்காமல்

    உதாசீனம் செய்கின்றோம் !

     

    கருணையைக் கடவுளென்போம்

    அன்புதான் அனைத்துமென்போம்

    உயிர்களைக் காப்போமென்று

    உறுதியும் எடுத்து நிற்போம்

    விலங்குக்குச் சங்கம்வைப்போம்

    வேள்விகள் வேண்டாமென்போம்

    நலம்பற்றி சொல்லிவிட்டு

    நாம்மட்டும் மாறமாட்டோம் !

     

    மனமுள்ள மனிதர்களே மாறிவிட முனையுங்கள்

    தினமுமே பாவமதை செய்துவிட முனையாதீர்

    அனுதினமும் நல்லவற்றை மனமெண்ணி ஆற்றுங்கள்

    ஆண்டவனின் அருள்கிடைக்க அன்புதனை அணையுங்கள் !

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 81

    முனைவர் சுபாஷிணி

    கடலாய்வு அருங்காட்சியகம், மோனாக்கோ

    ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லையென்றாலும் அதன் சட்டதிட்டங்களை ஏற்ற ஒரு நாடு மோனாக்கோ. ஒரே நாளில் சுற்றி வரக்கூடிய வகையில் மிகச் சிறிய நாடுகளில் ஒன்று தான் இது. உலகிலேயே இரண்டாவது சிறிய நாடு இது என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று. மோனாக்கோ நாட்டை ஒரே நாளில் ஒருவர் சுற்றிப்பார்த்து வந்துவிடலாம். அதிவேக கார் ரேஸ் பந்தயத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கு மோனாக்கோவைப் பற்றித் தெரிந்திருக்கலாம். ஏனெனில், இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் க்ரான் ப்ரீ கார் பந்தயம் உலகளாவிய அளவில்` மிகப் பிரபலமான ஒன்று. அதுமட்டுமல்ல. மோனாக்கோ கேசினோ எனப்படும் சூதாட்ட விளையாட்டிற்குப் புகழ் பெற்ற ஒரு நாடும் கூட. Never Say Never Again, Golden Eye போன்ற ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்கள் மோனாக்கோவின் கேசினோவில் எடுக்கப்பட்டவை தாம்.

    ​asu

    மோனாக்கோவை ஆட்சி செய்பவர் இளவரசர் 2ம் ஆல்பெர்ட். ப்ராசின் தென் கோடிப் பகுதியில் மெடிட்டரேனியன் கடலை ஒட்டியவாறு பக்கத்தில் இத்தாலிக்கு எல்லை நாடாக அமைந்திருக்கின்றது மோனாக்கோ. சிறிய நாடுதான் என்றாலும் கூட பிரம்மாண்டமான அருங்காட்சியகங்கள் இங்கே இருக்கின்றன என்பது ஒரு தனிச் சிறப்பு. அதில் கடலாய்வு அருங்காட்சியகத்திற்கு நான் செல்லும் வாய்ப்பு 2009ம் ஆண்டு அமைந்தது. கடலாய்வுகளைப் பற்றிய தகவல் களஞ்சியங்களின் சேகரமாக இந்த அருங்காட்சியகம் திகழ்கின்றது.

    ​asu1

    இளவரசர் முதலாம் ஆல்பெர்ட்டினால் 1910ஆம் ஆண்டு இந்தக் கடலாய்வு அருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகம் அமைந்திருக்கும் கட்டிடம் பாரோக் கலைவடிவத்தில் கட்டப்பட்டது. கடலை ஒட்டிய வகையில் அமைக்கப்பட்ட கோட்டை போன்ற வடிவிலான அமைப்புடன் இந்த அருங்காட்சியகக் கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. Temple of the Sea என ஆங்கிலத்தில் சிறப்புடன் அழைக்கப்படுகின்றது இந்த பிரமாண்டமானக் கட்டிடம்.

    கடல் வாழ் உயிரினங்களில் பல வகையானவை இங்குக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மீன்கள், கணவாய்கள், விதம் விதமான கடல் உயிரினங்கள் என இந்த அருங்காட்சியகம் விரிவான உயிரினங்களைக் காட்சிப்படுத்துகின்றது. அதுமட்டுமன்றி கடல் சார்ந்த விசயங்களை விளக்கும் வகையிலும் இங்குள்ள கண்காட்சிப் பொருட்கள் அமைந்துள்ளன. உதாரணமாக மாதிரி கப்பல்கள், கடல் உயிரினங்களின் எலும்புக் கூடுகள், கப்பல்கள், கடல் பயணங்களின் போது மாலுமிகள் பயன்படுத்தும் துணைக்கருவிகள் என்பனவற்றைக் குறிப்பிடலாம்.

    ​asu2

    இக்கட்டிடத்தின் கீழ்த்தளத்தில் உள்ள அக்குவாரியத்தில் கடல்வாழ் தாவரங்கள், மீன் வகைகள்,கடல் குதிரைகள், ஆமைகள், ஏனைய கடல் உயிரினங்கள் என்பவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

    ​asu3

    இக்கட்டிடத்தின் முதல் தளத்தில் ஒரு பயணியின் பயணப்பெட்டி என்ற பொருளில் அமைந்த கண்காட்சி இடம்பெறுகின்றது . இதில் இந்த அருங்காட்சியகத்தைத் தொடக்கிய இளவரசர் முதலாம் ஆல்பெர்ட் அவர்களின் கடல் பயணங்கள் தொடர்பான ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இளவரசர் முதலாம் ஆல்பெர்ட்டின் கூற்றுப்படி, மனிதர்கள் கடலை அறிந்து, அதனை நேசித்து அதனைப் பாதுகாக்க வேண்டும். தனது வாழ்வின் பெரும்பகுதியை இளவரசர் முதலாம் ஆல்பர்ட் கடலாய்வுகளிலேயே செலவிட்டார். ராணுவத்தில் சில ஆண்டுகள் சேவை செய்த பின்னர் தனது நெடுந்தூரக் கடல் ஆய்வுப் பயணங்களை அவர் 1885ஆம் ஆண்டு தொடங்கி மேற்கொண்டார். தனது நெடுங்கால ஆய்வுகளின் அடிப்படையில் சேகரித்த ஆவணங்களையெல்லாம் கொண்டு இந்தப் பிரமாண்டமான கடலாய்வு அருங்காட்சியகத்தை அவர் உருவாக்கினார்.

    ​asu4

    க்ரேண்ட் ப்ரீ அதிவேகக் கார் பந்தயம் நடைபெறும் நாளிலும் டிசம்பர் 25ஆம் தேதி தவிர்த்து வருடத்தில் ஏனைய எல்லா நாட்களும் இந்த அருங்காட்சியகம் திறக்கப்பட்டிருக்கும். உள்ளே சென்று காண்பதற்குக் கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. மோனாக்கோ நாட்டிற்குச் செல்பவர்கள் கேசினோவின் பக்கத்திலேயே அமைந்திருக்கும் இந்தப் பிரம்மாண்டமான அருங்காட்சியகக் கட்டிடத்தை தவறவிட வாய்ப்பில்லை. மோனாக்கோவில் பார்க்க வேண்டிய முக்கிய இடம் என்பதோடு ஆய்வில் ஈடுபாடு கொண்டோருக்கு தேவையான தகவல்களை வழங்கக்கூடிய கடல் சார் ஆய்வுக் களஞ்சியம் இந்த அருங்காட்சியகம்.

    Share
  • திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள்… (1)

    க. பாலசுப்பிரமணியன்

    இறைவன் எப்படிப்பட்டவன்?

    திருமூலர்-1

    திருமந்திரத்தைப் படித்து அதன் உட்பொருளை அறிந்து உள்வாங்கி வாழ்தல் என்பது வாழ்க்கையில் ஒருவருக்கு கிடைத்த மிகப்பெரிய வரம்.  வாழ்வின் மிகப் பெரிய தத்துவங்களை அவ்வளவு அழகாக சிறிய பாடல்கள் மூலம் நமக்கு தெள்ளத்தெளிவுற அளித்திருப்பது  நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத ஒரு அறிய செயல்.!!

    நமக்கு சில எதிர்பாராத நிகழ்வுகள் நடக்கும்போதும், நமக்கு விருப்பத்திற்கு மாறான செயல்கள் நடக்கும் போதும், துயரத்தில் சிக்கி நாம் வாடும் போதும் நாம் நம்முடைய விதியை மட்டும் நொந்துகொள்வதில்லை; கூடவே இறைவனையும் சேர்த்துச் சாடுகின்றோம்.

     “ஏன், எனக்கும் மட்டும் இப்படி ஏற்பட்டது? இறைவன் மற்றவர்களுக்கெல்லாம் நன்மையைச் செய்துவிட்டு எனக்கு மட்டும் ஏன் துயரத்தைத் தருகின்றான்? உண்மையிலே அவன் இருக்கின்றானா? அவன் நியாயமானவன் தானா? – என்றெல்லாம் மனத்துள் கேள்விகள் எழுகின்றன.

    மோனத்தில் உள்நின்று தன் தவச்சிறப்பால் இறைநிலையை உணர்ந்து அடைந்த திருமூலர், அந்த இறைவனின் கருணை வடிவத்தை  அழகாக எடுத்துரைக்கின்றார்.

    “தீயினும் வெய்யன், புனலினுந் தண்ணியன்

    ஆயினும் ஈசன் அருளறிவார் இல்லை

    சேயினும் நல்லன் அணியன் நல் அன்பர்க்குத்

    தாயினும் நல்லன் தாழ்சடை யோனே.”

    இறைவனின் கருணையை எடுத்துரைக்கும் திருமூலர், ஈசனை “சேயினும் நல்லன்” என்பது ஒரு மிகச்சிறப்பான வெளிப்பாடு. குழந்தைகளை  வெகுளித்தனத்திற்க்கும், உண்மைக்கும், நேர்மைக்கும் பிரதிபலிப்பாக நாம் பார்க்கிறோம். ஆனால் அந்தக் குழந்தைகளைவிட நல்லவன் என்று உணர்த்தும்போது இறையின் உண்மைநிலை வெளிச்சமிட்டுக் காட்டப்படுகின்றது.

    “அணியன் நல் அன்பர்க்கு” என்று சொல்லும்போழுதில், தன்பால் அன்பு செய்வோருக்கு அவர்களுடைய உள்ளத்திற்கு அணிகலனாகவும், அவர்கள் செய்யும் அன்பை அழகுபடுத்துவனாகவும் இறைவன் காட்டப்படுகின்றான்.

    “தாயிற் சிறந்ததோர் கோயிலுமில்லை” என்று எடுத்துறைக்கும் உலகில் இறைவனைத் “தாயினும் நல்லன்” என்று சொல்லி அவனைத் தாயுமானவனாக மட்டுமின்றி அதனிலும் சிறந்ததோர் நிலையில் நமக்கு முன் காட்டுகின்றார்.

    இவ்வளவு நல்ல குணங்களின் உறைவிடமாக இருக்கும் ஈசனை, நிலையற்ற மனம் கொண்ட மனித மனம் நம்பாமல் தன்னை மட்டும் நம்பி, இந்தப்  புவியில் இருக்கும் நிலையற்ற ஆசாபாசங்களளையும் செல்வத்தையும் நம்பி   கை விட்டு விடுகின்றது.!

    “ஈசன் அருளறிவாரில்லை”என்று வருந்தும் திருமூலர், நம் மனம் நிலைப்பெற கொடுத்த இந்த  நம் நல்வாழ்விற்கு ஒரு வழிகாட்டி.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav

    ”அம்மணக் கண்ணன் , ஆமணம் வீசிட
    சம்மணம் இட்டான் சகாவுடன்: -நம்மனக்
    கந்தையைக் கட்டி கசக்கி எறிந்திடுவார்:
    எந்தையின் ஆடை எழுத்து’’(கீதை, பாசுரம், திருப்பாவை போன்ற நூல் ஆடைகள்)….கிரேசி மோகன்….!

    Share
  • நீலம்

    கிரேசி மோகன்

    ——————————-

    தக்காளி ரசத்தில் கடுகைத் தாளித்துக் கொட்டினா மாதிரி, பகலை இரவு சந்தித்துக் கை குலுக்கும் சாயங்கால நேரத்து வானைப் பார்த்தபடி….ஸாரி பார்க்காதபடி கண்களை துணியால் கட்டிக்கொண்டு அண்ணாந்து பார்த்தபடி ” சரியா!….தப்பா!….சரியா!….தப்பா!” சொல்லிக் கொண்டே அந்த சிறுமி நொண்டியபடி பாண்டி ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தாள்… சக சிறுமிகளின் சத்தம் வராது போகவே, அவள் கண்கட்டை அவிழ்க்க….எதிரே தாடகை ராட்சஸி போல அவள் தாயார் சாமி ஆடிக் கொண்டிருந்தாள்….

    ” சரியில்லடி….தப்பு….நான் உன்னை பெத்தது தப்பு….உன்னை ஒங்கப்பன் வளத்த விதம் தப்பு” என்று தப்புக்களை அடுக்கியபடி, நிழலை உருவம் இழுத்துக் கொண்டு
    போல….தாய் மகளை அடித்தபடி தரதரவென்று இழுத்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள்….

    ” ஏண்டி பொண்ணை போட்டு இந்த அடி அடிக்குற….”காதை மயிலிறகால் குடைந்தபடி கட்டிலில் கரிசன நைனா….

    ” அடிக்காம….மடில போட்டு கொஞ்சவா சொல்றீங்க….அவ செஞ்ச….இல்ல செய்யாத காரியத்துக்கு கொன்னே போட்ருக்கணும்….பால்காரம்மா வூட்டுக்கு போய் தாம்பு
    கயிறு வாங்கிகினு வான்னு காலீலயே சொல்லியாச்சு….இந்த சிறுக்கி இன்னும் வாங்கிகிட்டு வரா…”

    ”ஆத்தா சொன்னத கேக்க வேண்டியதுதானே….ஏம்மா ழாழாத்தி…” குடைச்சல் சிலிர்ப்பில் ”ராசாத்தியை” ழாழாத்தி என்று நைனா….!

    ” அது என்ன எப்பப்பாரு ராசாத்தி ராசாத்தினு கொஞ்சல்….சிறுக்கிக்கு பேர் வச்சிருக்கீங்க இல்ல….அத சொல்லி கூப்பிடறது….”

    ”நாம என்ன பேர் வச்சாலும் அவ என்னிக்குமே ராசாத்திதாண்டி…. போன வருசம் ராமாயணக் கூத்துல எம் பொண்ணுதானே ராசாத்தி….

    ராமன் வில் ஒடைக்க வர சொல்ல ஒரு பாட்டு பாடுவியே…”ஈன்றாத போதும் பெரிதுவந்தார் நைனா….

    ”நீல வண்ண ராமா நில் நில்….நீ ஒடைக்க தோ பார் வில் வில்” கீச்சு மழலையில் சிறுமி கூவினாள்….!

    ”நிறுத்துரி ஒன் ஒப்பாரியை….நீல வண்ணமாம் நீல வண்ணம்….ராமன் கருப்புடி…”

    ” நைனா நைனா ராமனை எனக்கு கட்டி வை நைனா….எனக்கு இந்த சேப்பு புடிக்கல….அவனை கட்டிக்கிட்டு நானும் நீலமாயிடுவேன்” குடையும் மயிலிறகு மறுகாது வழியாக வரும் அளவுக்கு சிறுமி தன் தகப்பனை உலுக்கி ஆட்டுகிறாள்….

    ”நீயே நீலம் பாரிச்சுதாண்டி பொறந்த….நல்லவேளை ஒன் சினேகிதி நப்பின்னையோட ஆத்தா உன்னை தலகீளா தொங்கவிட்டு காப்பாத்தினா….எப்பபாரு நீல
    ஆலாபனைதான்….ராமனை கட்டிக்கிட்டா காட்டுக்குத்தான் போவனும்….”

    ”ராமன் இருக்க சொல்ல நான் தெகிரியமா காட்டுக்கு போவேன்….”

    ”காட்டுக்கு அப்பால போவலாம்….இப்ப பால்காரம்மா வூட்டுக்கு போய் தாம்பு கயிறு வாங்கியா…”

    ”தாம்பு கயிறு வாங்கிட்டு வந்தா ராமனை கட்டி வப்பியா….?”

    ” தாம்பு கயிறை வாங்கியா….ஆத்தாளும்,பொண்ணும் தூக்குல தொங்குவோம்….ஏங்க இவ சிறுக்கியா இல்ல கிறுக்கியா….”

    ”அவ ராசாத்திடி….ராமன் மாதிரி அவளுக்குனு ஒத்தன் பொறக்கத்தான் போறான் பாரு….!”என்றார் கிழிஞ்ச கட்டில் சனக மவராசா….!

    ”எப்ப பொறந்து….எப்ப வளந்து….எப்ப கல்யாணம்…. அய்யோ அப்பன் பொண்ணு ரெண்டு பேரும் இப்படி கனாலயே காலத்தை தள்ளறீங்களே….

    பெத்த வயிறு பத்திகிட்டு எரியுது….”

    ”ஏண்டி என்னையும் நீயா பெத்தே….?”

    ”கேலில ஒண்ணும் கொறைச்சலில்ல….தோ பாருங்க நீங்க ஒங்க பொண்ணுக்கு ரொம்ப செல்லம் கொடுத்து குட்டிச்சுவராக்கிட்டீங்க….படிப்பு கிடிப்பு ஒண்ணும் கிடையாது. எப்பப்பாரு ஆகாசத்தை பாக்கறா…. அன்னிக்கு வான வில்ல பாத்துட்டு ”ஆத்தா ராமன் இத ஒடக்க வருவானா” கேக்கறா….பட்டாம் பூச்சிக்கு பாட்டு சொல்லித் தரா….மல்லிப் பூவுக்கு, நீல கனகாம்பரத்தை கல்யாணம் பண்ணி வக்கறா….இது எங்க போய் முடியப் போவுதோ…!உங்களுக்கே கண்ணுல ஜலம் வருது பாருங்க….”

    ”தோ பார் சொகமா காது குடஞ்சா அப்படித்தான் கண்ணுல ஜலம் வரும், வாய்ல ஜொள்ளு ஒழுகும்….அது ஒரு புல்லரிப்புடி….”சனக மவராசா காது குடைஞ்சு குடைஞ்சு கைலாசத்துக்கெ போயிடுவார் போல கிறக்கத்துல இருந்தார்….பிறகு பெண்ணைப் பார்த்து” உங்காத்தா எதான உளறுவா….நீகாதுல போட்டுக்காதே….போய் சாப்டு தூங்கு….”

    ”நீங்க காதுல மயிலிறகை போடறதை மொதல்ல நிப்பாட்டுங்க” என்ற தாயார்காரி, சிறுமி உள்ளே செல்வதைப் பார்த்து ” எங்கடி நழுவுற…உன்னை வளக்கற விதத்துல வளத்தாத்தான் உருப்புடுவ….மயிலே மயிலேன்னா இறகு போடாது….அப்படியே போட்டாலும் உங்கப்பன் அதுல காது குடைய ஆரம்பிச்சுடுவார்….”

    சிறுமி தாயைப் பார்க்க ”என்னடி பாக்கற….கேட்டா பதில் சொல்ல மாட்டேங்கறே….அடிச்சா அழ மாட்டேங்கறே….மனசுல என்ன மாகாளின்னு நெனப்பா…
    போயி பால்காரம்மா வுட்டுலேந்து தாம்பு கயிறு வாங்கிகினு வா….அத்தாலா தயிரு கடையறது முன்னாடி உன்னை விளாசறேன்….அப்பத்தான் உனக்குப் புரியும்….”

    ”இருட்டிடுச்சு ஆத்தா….நாளைக்கு காலீல….”என்று சிறுமி இழுத்தாள்….”இருட்டினா என்ன….அதான் ஒனக்கு துணைக்கு அந்த நீலப் பய இருக்கானே…போடி”

    என்று மகளை தள்ளி கதவை சாத்துகிறாள்….” என்னம்மா இப்படி கல்நெஞ்சுக்காரியா கீறே….காத்து கருப்பு உலாவுற வேளைல….பச்சை புள்ளையைப் போய்”

    காது சொகம் அலுத்து மயிலிறகால் முதுகை சொரிந்தபடி நைனா செய்த சிபாரிசு எடுபடவில்லை….”உங்க பொண்ணுக்கு காத்தும் புடிக்கும்….கருப்பும் புடிக்கும்…. இவ வயசுல நான் உங்களை கட்டிகிட்டாச்சு….பச்சை புள்ளையாம் பச்ச புள்ள….மொதல்ல அந்த நீலப் புள்ளையை மறக்க சொல்லுங்க….”உள்ளே போகிறாள்….

    அன்று பார்த்து பிரளய கால இருட்டு….இரவு ஆரம்பமே அர்த்த ஜாமம் போல் இருண்டது….வரப்போகும் மழைக்கு பராக் பராக் சொல்வது போல சிலு சிலுவென
    காத்து…..வானத்தில் யாரோ தக்கிளி நூற்பது போல மின்னல் தோன்றி பூமியைத் தொட்டது….இடிச் சத்தம் சிறுமியின் காதில் ராமர் வில்லை உடைத்த சத்தமாகக்
    கேட்டது….சிறுமி பயத்தைப் போக்கிக் கொள்ள ”லட்சுமணா லட்சுமணா” என்று மனசுக்குள் சொல்லியபடி ஆத்தோரமாக பால்காரம்மா வீட்டுக்கு பயணித்தாள்….

    ”வானத்திலிருந்து மழை பெய்கிறதா இல்லை ஆத்துத் தண்ணீர் வானத்துக்குச் செல்கிறதா” என்று குழம்பும் அளவுக்கு வானத்துக்கும் ,பூமிக்கும் தண்ணீரால் தறி போட்டது போல மழை பத்தினி சொல்லாமலேயே பெய்யெனப் பெய்தது….துணைக்கு ”ராமனோ, லட்சுமணனோ” வில்லை ஏந்தி வரவில்லை….சிறுமிக்கு பயம் பிடித்துக் கொண்டது….

    ஆத்தோரமாக இருந்த அய்யனார் மண்டபத்திற்குள் ஒதுங்கினாள்….அந்த மண்டபத்தில் ஒருவர் படுக்கலாம் ,இருவர் அமரலாம் ,மூவர் நிற்கலாம்….வெளியே
    பேய் இருட்டு ,பொய்கை மழை ,பூதக் காத்து….அச்சத்திலும் , அசதியிலும் சிறுமி மண்டபத்தில் படுக்கிறாள்….அப்போது ஆத்துப் படிதுறையிலிருந்து ஒரு மாமா தலையில் துணி மூட்டையோடு மண்டபத்தை நோக்கி வருகிறார்….அவர் உள்ளே நுழைந்தவுடன் ”உஸ்” என்ற சத்தம் ஓய்கிறது….பெருமூச்சு விடுகிறார் பெரியவர் என்று சிறுமி நினைத்த வண்ணம், எழுந்து அமர்ந்து அந்த மாமாவுக்கு உட்கார இடம் அளிக்கிறாள்….பெரியவர் தலையிலிருந்த துணி மூட்டையை இறக்கி வைக்க இடம் இல்லாததால் சிறுமி எழுந்து நிற்கிறாள்….இப்போது மாமா, சிறுமி இருவரும் நிற்க காலி இடத்தில் துணி மூட்டை….

    ”அந்த மூட்டைல என்ன மாமா ?”….சிறுமிதான் மெளனத்தைக் கலைத்தாள்….!

    ” நான் செஞ்ச புண்ணியத்தை மூட்டையா கட்டிண்டு எடுத்துண்டு போறேன்” மாமா முகத்தில் கலவரம் நிரந்தர நிலவரமாகப் படர்ந்து இருந்தது….

    ” பாவ மூட்டை கேள்விபட்டுருக்கேன்….அது என்ன புண்ணிய மூட்டை ?” சிறுமி விடவில்லை….

    கையை நீட்டி மழை பெய்கிறதா என்று பார்ப்பது போல பெரியவர் சிறுமியின் கேள்வியைத் தவிர்த்தார்….

    சிறுமி விடுவதாக இல்லை ”உங்க பேர் என்ன மாமா ?”

    ”பேர்ல என்னம்மா இருக்கு….பேர் சொல்ல பிள்ளை இருந்தா போறாதா….?”பெரியவர் முகத்தில் பெருமிதம் கொப்பளித்தது…அது சரி உம் பேர் என்ன….?”

    பெரியவர் பேச்சை மாற்றினார்….!

    ”எங்காத்தாக்கு ஒரு அண்ணாத்த இருக்கார்….எனக்கு அவர் மாமா முற….அவுரு பேரையே உங்களுக்கு வக்கறேன்….சர்தானா….”

    ”உன் சவுகரியம் எப்படியோ அப்படியே கூப்பிடுமா….”பெரியவர் நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்குள்….” வாசு மாமா” என்று சிறுமி கூப்பிட

    ”என்ன சொன்ன ?” என்று திகைத்தார்….”என் மாமன் பேரு வாசு மாமா….உங்களுக்கும் என்ன மாதிரி அவரு பேர கேட்டாலே பயமா….?”

    இருவரும் சம்பாஷணையில் திருப்தி இல்லாததால் சிறிது நேரம் மெளனம் காத்தார்கள்….” எம் பேர் ராமி” என்றாள் சிறுமி….

    ” ராமியா….! கேள்விபடாத பேரா இருக்கே….!”

    ”ராமன் சம்சாரம் ராமிதானே….நான் ராமனைத்தான் கட்டிக்கப் போறேன்….ஏன்னு கேளுங்க….”

    வெளி மழையை விட இவள் கேள்வி மழையைத் தாங்க முடியாத பெரியவர் ” ஏன்?” என்று ஏனோ கேட்டு வைத்தார்….!

    ” எனக்கு நீலம் புடிக்கும்….ராமன் நீலமா இருப்பான்” பெரியவர் மூட்டையைப் பார்த்து விட்டு சிறுமியை மோகினிப் பிசாசைப் பார்ப்பது போல பார்த்தார்….

    ”அப்ப நான் கிளம்பறேன் தாயி” என்று பயபக்தியோடு அவளிடம் சொல்லிவிட்டு மூட்டையை எடுக்கக் குனிந்தார்….

    ”துணைக்கு வருவீங்கன்னு பாத்தா இப்படி தனியா வுட்டுட்டு போறீங்களே….பால்காரம்மா வூடு வர கூட வாங்க வாசு மாமா” என்றதும், பெரியவர்
    ஆச்சரியமா , அதிர்ச்சியா தெரியாத பாவத்தைக் காட்டியபடி ”என்ன….நீயும் பால்காரி வீட்டுக்குத்தான் போயிண்டுருக்கியா….?” என்று அவசரமாகக் கேட்டார்….

    ”ஆமாம்….நீங்க….?”

    ”நானும் அங்கதான்….!”

    ”உங்கம்மாவும் தாம்புக் கயிறு வாங்கிக்கிட்டு வர சொன்னாங்களா….?”

    ” நான் அங்க போறது தாம்புக்காக இல்ல தாயி….நோம்புக்காக….!”பெரியவர் பழையபடி தலையில் மூட்டையை சுமந்தபடி செல்ல ,அவர் தலைக்கு மேல்
    ”உஸ் உஸ்” என்ற சத்தம் வருவதைக் கேட்டபடி சிறுமி அவரைத் தொடர்ந்தாள்….” மாமா நீங்களும் எங்க நைனா மாதிரி மயிலிறகால காது குடைவீங்களா….?”

    ” ஏன் கேக்கற….?” என்று அவர் வெலவெலக்க, சிறுமி ”இந்தாங்க உங்க தலைல இருக்குற புண்ணிய மூட்டைலேந்து விழுந்துடிச்சு….” என்று ஒரு மயிலிறகை அவரிடம் தந்தாள்….மூட்டை மட்டும் நனையாமல், இருவரும் சொட்ட சொட்ட நனைந்தபடி பால்காரம்மா வீடு நோக்கி செல்ல ஆரம்பித்தனர்….!

    பால்கார அம்மா வசதியானவள்….வீடு தோப்பும் துரவுமாக பிரும்மாண்டமாக இருந்தது….சுற்றிலும் கோட்டை போல மதில் சுவர்….வந்த திருடன் வேறு வழியில்லாமல் மனம் திருந்தி நல்லவனாகும் அளவுக்கு வாசல் கதவு வீட்டையே மறைத்தது…..நாதாங்கியில் தொங்கும் பூட்டைத் திறந்து விட்டாலும் அதைக் கழட்டுவதற்குள் பொழுது விடிந்து விடும்….”எப்படி உள்ளே நுழைவது ” என்ற கவலையில் கதவையும், பூட்டையும் கவனித்த வாசு மாமாவின் முகம் மலர்ந்தது….கதவில் சிறுவர்,சிறுமியர்கள் மட்டும் போய் வருவதற்கு தோதாக ஒரு பொந்து இருந்தது….ஆஜானுபாகுவான வாசு மாமா அந்த பொந்தின் வழியாக மானசீகமாக நுழைய முயன்று பாதியில் மாட்டிக் கொண்டு பிதுங்கினார்….

    ”மாமா என்ன இது….உங்க கைல தாம்புக் கவுறு கட்டியிருக்கு….?” சிறுமி சொன்னதும்தான் பெரியவரே தன் பிழையை உணர்ந்தார்….

    அவசரமாகக் கிளம்பியதில் கை,கால்களில் கட்டப்பட்ட தாம்புக் கயிறுகளை அவிழ்க்க மறந்ததை எண்ணி அசடு வழிந்தார்….

    ”பால்காரம்மா தூங்கியிருப்பாங்க….அவங்கள எளுப்பி இந்நேரத்துல கவுறு கேட்டா என்ன கொன்னே போட்ருவாங்க….தாம்பு கவுறுஇல்லாம போனா எங்காத்தா என்ன அடிச்சே கொன்னுருவா….தயிரு கடைய இந்த அளவு கவுறு போதும்….” என்றவள், அவர் சம்மதத்துக்கு காத்திராமல் அவர் கையில் அரைகுறையாக கட்டித் தொங்கிக் கொண்டிருந்த தாம்புக் கயிறை உருவிக் கொண்டாள்….”அப்பால நான் வரேன்…. பொழுது விடியறதுக்குள்ளே ஊரு போய் சேரணும்” என்று கிளம்பியவளை பெரியவர் பிடித்து நிறுத்தி….” தோ பார்….உனக்கு நான் தாம்புக் கயிறு தந்தேன் இல்லையா….பதிலுக்கு நீ எனக்கு ஒரு உபகாரம் செய்யணும்” என்றார்….”என்ன?” என்பது போல பார்த்த சிறுமியிடம்,

    ”உள்ளே பால்காரம்மா தூங்கிகிடுருப்பாங்கா….அவங்க பக்கத்துல ஒரு பாப்பா தூங்கிகிட்டுருக்கும்” என்றவர் நாக்கைக் கடித்தபடி” அது தூங்கற குழந்தையா….!” என்று தனக்குள் முனகிக் கொண்டார்….தொடர்ந்து ”நீ என்ன பண்ணனும்….நான் இந்த மூட்டைல ஒரு பொருள் வச்சிருக்கேன்” என்றவர்

    மறுபடி நாக்கைக் கடித்தபடி….”வெறும் பொருளா அது” என்று முணுமுணுத்துவிட்டு….”நீ அந்த கதுவுல இருக்கற பொந்து வழியா வீட்டுக்குள்ள நுழைஞ்சு நான் கொடுக்கற இந்த பொருளை அங்க வச்சிட்டு, அங்க பால்காரம்மா பக்கத்துல தூங்கற பாப்பாவை நைஸா எடுத்திட்டு வந்து என் கைல கொடுக்கணும்…. புரிஞ்சுதா….”புரியாவிட்டாலும் தாம்பு கயிறு கிடைத்த சந்தோஷத்தில் சிறுமி பலமாக தலையாட்டினாள்….

    பெரியவர் மூட்டையைப் பிரிக்க, உள்ளே எட்டி அந்தப் பொருளைப் பார்த்த சிறுமியின் கண்கள் ஆச்சரியத்தில் ஆகாசமாக விரிந்தது…. ஆனந்தத்தில் ஆழ்கடலாக கொந்தளித்தது….” இப்ப புரிஞ்சு போச்சு….நீங்க தசரத மகாராசாதானே….?” என்றவள் பெரியவரைப் பேச விடாமல்,மூட்டைக்குள் மறுபடி பார்த்து ”அப்பா என்ன ஒரு நீலம்….கைகேசிக்கு பயந்துகினு நீல ராமனை காட்டுல வுட வந்தீங்க….மனசு கேக்கல….பத்திரமா வூட்டுல வுட்டுட்டு அதுக்கு பதிலா பால்காரம்மா பாப்பாவை….” என்று ஆரம்பித்தவள் நிறுத்தி….”ஆமாம் பால்காரம்மா பாப்பா உங்களுக்கு எதுக்கு….?”…..இனியும் இவளை பேசவிட்டால் ஊரையே எழுப்பிவிடுவாள் என்று பயந்த பெரியவர்….” மொதல்ல நான் சொன்னத செய்….அப்பத்தான் தாம்புக் கயிறு ”என்று அவளை அவசரப்படுத்தினார்….

    ”கஷ்க் முஷ்க் ” என்று கன்னங்கரேல் உருண்டையாய்(சிறுமி காதில் விழுந்தால் கோபிப்பாள்….நீல உருண்டையாய்) இருந்த அந்தப் பொருள் விளங்கா உருண்டையை கைகளில் பிரேமையாக ஏந்தியபடி பால்காரம்மா வூட்டுக் கதவை நோக்கி சென்றவள், திடீரென்று திரும்பி வந்து பெரியவரிடம்….”நீங்க எனக்கு ஒரு சத்தியம் செஞ்சு தரணும்….” என்ற அந்த சிறுமி….” இந்த நீல பாப்பா பெரியவன் ஆனப்பாடு இவன எனக்கு நீங்க கட்டி வக்கணும்….என்ன பதில் சொல்லாம முளிக்கறீங்க….” சூழ்நிலையின் தீராத விளையாட்டை எண்ணி தனக்குள் வேதாந்தமாக சிரித்துக் கொண்ட அந்தப் பெரியவர்….

    ” தாயி….உனக்கு என்ன வயசாகுது…?” ”மார்கழி பொறந்தா ஆறு….ஏன்….?” என்றவளை பரிவுடன் பார்த்து….”இது இப்பத்தான் பொறந்த பாப்பா….

    இவன் என்னதான் பெரிவனா ஆனாலும் உன்ன விட ஆறு வயசு சின்னவனாச்சே….எப்படி இவன கல்யாணம் பண்ணிப்பே….”என்று கூறி முடிப்பதற்குள்
    அந்த சிறுமி பாய்ந்து….” கவலையே படாதீங்க, இவன் பெரியவனா ஆறவரைக்கும் நான் ஆறுக்கு மேல என் வயசு ஆவாம பாத்துக்கறேன்” என்று சொல்லிவிட்டு பதிலுக்குக் கூட காத்திராமல் அந்த சிறுமி பால்காரம்மா வீட்டுக் கதவை நோக்கி நகர்ந்தாள்….

    தாயிடம் தாம்புக் கயிறை தந்து விட்டு, சிறுமி நடந்ததையெல்லாம் மூச்சு வாங்க சொல்லி முடித்து….” ஆத்தா….நீல பையன எனக்கு கட்டி வக்கறதா அவனோட நைனா எனக்கு வாக்கு கொடுத்துட்டார் ”…..மகளை ஏற இறங்கப் பார்த்த தாயார்….” அய்யோ பெருமாளே….ஏன் எனக்கு இப்படி ஒரு பைத்தியத்தை மவளா கொடுத்தே….” என்று ஒரு பாடு புலம்பிவிட்டு, அதே தாம்புக் கயிறால் நீலப் பிரேமையில் கட்டுண்ட மகளை தூணில் கட்டிப்
    போட்டு….” இனிமே இப்படீலாம் பேசுவியா….பேசுவியா….” என்று அழுதபடி கேட்டுக்கொண்டே அடிக்க ஆரம்பித்தாள்….அப்போது கட்டிலிலிருந்து
    தாவிக் குதித்து வந்து மனைவியைத் தடுத்த சிறுமியின் நைனா” உனக்கு என்ன புத்தி கித்தி கெட்டுப் போச்சா….எப்பப்பாரு ஏன் இப்படி போட்டு
    அடிச்சே கொல்ற….ராதைய….”என்றார்…..
    ——————————————————————————————————————————————————

    Share
  • தமிழகத்தில் 2000 இடங்களில் அகழாய்வுக்கான வாய்ப்புகள் உள்ளன

                

                  தென்னிந்திய வரலாற்றுப் பேரவையின் மாநாட்டில்

                            த.ஸ்டாலின் குணசேகரன் உரை

    as

                       தென்னிந்திய வரலாற்றுப் பேரவையின் 37 ஆவது மாநாடு மார்ச் 10, 11, 12 ஆகிய மூன்று நாட்கள் சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. மாநாட்டின் தொடக்கவிழாவுக்கு பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் சி.சுவாமிநாதன் தலைமையேற்றார். இம்மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் த. ஸ்டாலின் குணசேகரன் பங்கேற்று மாநாட்டு நிறைவுரை நிகழ்த்தினார். இவர் தனது உரையில் கூறியதாவது :

    ” தமிழக வரலாற்று ஆய்வில் அகழாய்வு முக்கிய இடத்தைப் பெறுகிறது. நாடு விடுதலை பெற்ற 1947 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை தமிழகத்தில் மொத்தம் 88 இடங்களில் அகழாய்வு நடைபெற்றுள்ளன. இந்திய தொல்லியல் ஆய்வுத்துறையின் சார்பில் 26 இடங்கள், தமிழ்நாடு அரசு தொல்லியல் ஆய்வுத்துறையின் சார்பில் 41 இடங்கள், சென்னைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் 8 இடங்கள், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் சார்பில் 7 இடங்கள், பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சார்பில் 2 இடங்கள் என்று மொத்தம் 88 இடங்களில் அகழாய்வுகள் நடைபெற்றுள்ளன.

    இந்த அகழாய்வுகளின் மூலம் சங்கத்தமிழின் இருப்பும் சிறப்பும் நிறுவப்பட்டுள்ளது. ரோமாபுரி உட்பட சில மேலை நாடுகளோடு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழர்களுக்கு வணிகத் தொடர்பு இருந்தது நிரூபிக்கப்பட்டுள்ளது. அக்காலத்திலேயே இரும்பு தமிழனின் பயன்பாட்டில் இருந்தது போன்ற ஏராளமான வரலாற்று உண்மைகள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன.

    இந்த 88 இடங்களில் நடைபெற்ற அகழாய்வில் 34 இடங்களில் தான் எழுத்துப் பொறிப்புகளுள்ள தொன்மையான  பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இந்த 34 இடங்களிலும் கிடைக்கப்பெற்ற எழுத்துப் பொறிப்புள்ள பானை ஓடுகள் மொத்தம் 795 ஆகும். இதில் நொய்யலாற்றங்கரையில் உள்ள  கொடுமணல் அகழாய்வில் மட்டும் 551 பானை ஓடுகள் கிடைத்துள்ளன.

    தொண்மையான பழந்தமிழ் இலக்கியங்களிலும் காப்பியங்களிலும் உள்ள வரலாற்றுச் சான்றுகளை விட அகழாய்வு போன்ற முற்றிலும் அறிவியல்பூர்வமான ஆய்வு முடிவுகளையே உலக வரலாற்றாளர்கள் முழுமையாக ஏற்பார்கள்.

    நம்மில் பலர் பள்ளியில் படித்த காலத்திலிருந்து ’சிந்துவெளி நாகரிகம்’ பற்றி வரலாற்றுப் பாடங்களில் படித்துள்ளோம். ஆனால், ’நொய்யல்வெளி நாகரிகம்’ என்ற சொற்றொடரையே கடந்த 25 ஆண்டுகளாகத் தான் உச்சரித்து வருகிறோம். காரணம், நொய்யல் ஆற்றங்கரையிலுள்ள ’கொடுமணல்’ பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாகத் தான் அகழாய்வுகள் நடைபெற்று வருகின்றன.

    பாண்டிச்சேரியிலுள்ள வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் கே.ராஜன் தலைமையில் மூன்று வரலாற்றாளர்கள் கொண்ட குழு 2009 இல் இரண்டு பாகங்கள் கொண்ட ஒரு முக்கியமான நூலைக் கொண்டு வந்தது. ‘ARCHAEOLOGICAL SITES IN TAMILNADU’ என்பது அந்த நூலின் பெயர். தமிழகம் முழுவதும் ஆய்வு செய்தும் ஏற்கனவே செய்யப்பட்ட ஆய்வினைப் பரிசீலித்தும் தமிழகத்தில் எந்தெந்த இடங்களெல்லாம் அகழாய்வுக்குரிய இடங்கள் என்று தொகுத்தும் வகுத்தும் மாவட்ட வாரியாக துல்லியமான விபரங்களுடன் ஒரு நீண்ட பட்டியலே வெளியிட்டுள்ளனர். மொத்தம் 2000 இடங்கள் தமிழகத்தில் அகழாய்வுக்குரிய இடங்கள் என்றும் மாவட்டம், வட்டம், ஊரின் பெயர், அந்த ஊரில் எந்த இடம் என்று எல்லா முக்கிய விபரங்களுடனும் அந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    மொத்தம் 2000 இடங்களில் இதுவரை 88 இடங்களில் மட்டும் தான் அகழாய்வு செய்யப்ப்பட்டுள்ளது என்பதை நாம் ஆழ்ந்து கவனிக்க வேண்டும். அந்த 88 இடங்களிலும் வெறும் 10 சதவிகிதம் பகுதிகளில் மட்டுமே அகழாய்வுப்பணி நடைபெற்றிருக்கிறது. இவ்வளவு குறைவான இடங்களில் நடைபெற்ற அகழாய்வுகளிலேயே தமிழர்களின் பழம் பெருமையைப் பறைசாற்றும் வரலாற்றுச் செல்வங்கள் கிடைத்திருக்கிறதென்றால்,  இந்த 88 இடங்களிலும் முழுமையாக வரலாற்று ஆய்வு நிறைவாக நடந்து முடிந்திருந்தால் நமக்கு இன்னும் எத்தனை வரலாற்று ஆதாரங்கள் கிடைத்திருக்கும்? அத்தோடு இன்னும் தமிழகத்தில் வாய்ப்பிருந்தும் அகழாய்வு தொடங்கப்படாமலேயே இருக்கும் 1900 இடங்களிலும் படிப்படியாக அகழாய்வு நடைபெற்றிருந்தால் உலகமே தமிழகத்தைத் திரும்பிப் பார்க்கக் கூடிய அளவில் தமிழகத்து வரலாற்று வளம் வெளிப்பட்டிருக்கும்.

    தமிழகத்தில் 1676 முதல் 1885 வரை மொத்தம் 13 மராட்டிய மன்னர்கள் ஆட்சி செய்துள்ளனர். இவர்கள் ஆட்சிக்காலத்தில் இருந்த அரசு ஆவணங்கள் அனைத்தும் கோடிக்கணக்கான காகிதத் தாள்களாக உள்ளன. எம்.ஜி.இராமச்சந்திரன் முதலமைச்சராக இருந்த காலத்தில் இந்த ஆவணங்களில் பெரும்பகுதி மராட்டிய எழுத்துகளில் இருப்பதால் அவற்றை மராட்டிய மாநிலத்திலுள்ள பூனே நகருக்கு அனுப்புவதாக முடிவு செய்யப்பட்டிருந்தது. ஈரோடு கல்வெட்டறிஞர் புலவர் செ.இராசு உள்ளிட்ட வரலாற்று அறிஞர்கள் தலையிட்டு, அந்த ஆவணங்கள் ஆய்வுப்பணிக்காக தமிழகத்திலேயே பாதுகாக்கப்பட வேண்டும் என்று அன்றைய அரசுச் செயலாளர் பரமசிவம் அவர்களிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டதற்கிணங்க அந்த ஆவணங்கள் அனைத்தும் தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஒரு பெரிய கிடங்கு போன்ற – குளிரூட்டப்பட்ட பெரிய அரங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

    இந்த ஆவணங்கள் பற்றி பூர்வாங்க ஆய்வுகளை மேற்கொள்ள கத்ரே என்ற மராட்டிய மொழி நிபுணர் தமிழக அரசால் தமிழகத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்.  அத்தனை காகித ஆவணங்களையும் ஆய்வு செய்த ஆய்வாளர்  கத்ரே, அந்த ஆவணங்களை A, B, C என்ற மூன்று பிரிவுகளாகப் பிரித்தார். A பிரிவை சென்னை எழும்பூர் ஆவணக் காப்பகத்தில் வைக்கலாம் என்றும், B பிரிவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கலாம் என்றும்,  C பிரிவு ஆவணங்களை அழித்து விடலாம் என்றும் அறிக்கை சமர்ப்பித்தார்.

    அந்த C பிரிவு ஆவணங்களைத் தான் அழிக்காமல் பாதுகாப்பதோடு அதிக ஆய்வும் செய்து வருகிறோம். மீதமுள்ள  பல லட்சக்கணக்கான A மற்றும் B பிரிவு காகித ஆவணங்களை ஆய்வு செய்தால் தமிழ்நாடு வரலாறு குறித்த ஏராளமான வியத்தகு வரலாற்றுக் குறிப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது.

    உலகளவில் வட்டார வரலாறு தற்காலத்தில் முக்கியத்துவம் பெற்று வருகிறது. இதைத்தான் உள்ளூர் வரலாறு என்கிறோம். சில சமயங்களில் உலக வரலாற்றைத் தெரிந்திருப்பவர்களுக்கு உள்ளூர் வரலாறு தெரிந்திருப்பதில்லை.

    இதே சேலத்தில் 1950 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் தேதி ஒரு வரலாற்று முக்கியத்துவம் மிக்க சம்பவம் நடைபெற்றது. அப்போது சேலம் சிறைச்சாலை அடக்க முடியாத கிரிமினல்களை அடைத்து வைப்பதற்கான சிறப்புச் சிறைச்சாலையாகக் கருதப்பட்டது. அந்தச் சிறையில் 300-க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகளை திட்டமிட்டு கொண்டு வந்து அடைத்தனர். பிரதான சிறைக்கு அருகில் உள்ள ANNEX JAIL என்கிற இணப்புச் சிறையில் மூன்று கொட்டடியில் இந்த அரசியல் கைதிகள் அடைக்கப்பட்டனர். இவர்கள் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

    சிறையில் இருந்த அரசியல் கைதிகள் கொடுமைப் படுத்தப்பட்டனர். குரங்குக் குல்லா அணிய வேண்டும்: அரைக்கால் டவுசர் மற்றும் கைதி நம்பர் போட்ட பனியன் அணிய வேண்டும்; கழுத்தில் விடுதலைத் தேதி எழுதப்பட்டுள்ள பலகையைத் தொங்க விட வேண்டும் போன்ற சிறை விதிகளையும் மீறி – சில எழுதப்படாத விதிகளையும் அமல் படுத்தினர். எல்லாவற்றையும் விட, திடீர் திடீரென வந்து ’வரிசையாக உட்கார வேண்டும்’ என்று கத்துவார்கள், அதிகாரிகள். உட்கார உட்கார லத்தியால் அடிப்பார்கள். இதை எதிர்த்து, சிறையில் அடைக்கப்பட்டிருந்த – நிராயுதபாணிகளான அரசியல் கைதிகள் போராடினார்கள். கைதிகளுக்கு ஆத்திரமூட்டுவதே சிறை அதிகாரிகளுக்கு வேலையாக இருந்தது.

    பிப்ரவரி 11 ஆம் தேதி, சிறைக் கைதிகளின் போராட்டத்தைப் பொறுக்க முடியாத சிறை அதிகாரிகள் சிறைக் கொட்டடிக்கு வெளியே நின்று கொண்டு இரண்டு கம்பிகளுக்கு இடையில் துப்பாக்கிகளை வைத்து கொட்டடிக்குள்ளே இருந்த அரசியல் கைதிகளை எச்சரிக்கை கூட செய்யாமல் சரமாரியாகச் சுட்டார்கள்.

    மொத்தம் 21 அரசியல் கைதிகள் சிறைச்சாலைக்குள்ளேயே ரத்தவெள்ளத்தில் மிதந்து துடிதுடித்துச் செத்து மடிந்தார்கள். இதில் 19 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். காவேரி முதலியார், ஷேக் தாவூத், ஆறுமுகம் ஆகிய மூவரும் தமிழர்கள். மற்றவர்களெல்லாம் கடும் காயங்களுடன் உயிர் தப்பினார்கள். இது , இதே சேலத்தில் நடந்தது தானே! குறைந்தபட்சம் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைவருக்கும் இந்த வட்டாரச் சம்பவம் தெரியுமா?

    உள்ளே காயமடைந்து உயிர் தப்பிய சேலம் மாவட்டம் பழையபாளையத்தைச் சேர்ந்த சுப்பு என்கிற ஒரு அரசியல் கைதியை  நேரில் சந்தித்துக் கேட்டும், அவ்வாறு இன்னும் சில கைதிகளை நேரடியாக விசாரித்தும், அதற்குப் பிறகு அப்போது வெளியான சில பழைய அறிக்கைகளைப் படித்தும் தான் இந்தச் சம்பவத்தை நாம் அறிந்து கொண்டோம். அதைக் கட்டுரையாக எழுதி வெளியிட்டோம். இது போன்று எத்தனையோ கோணங்களில் வரலாற்று ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளன.

    வரலாற்றுக்கு சாதி, மதம், அரசியல், மொழி என்ற எந்த சார்பும் கிடையாது. வரலாற்றை வரலாற்றுக் கண்கொண்டு மட்டுமல்லாது சமூகக் கண்ணோட்டத்தோடும் அறிவியல் கண்ணோட்டத்தோடும் அணுகுவது இன்றைய காலத்தின் தேவையாகும் ” என்று ஸ்டாலின் குணசேகரன் தனது உரையில் குறிப்பிட்டார்.

    மாநாட்டின் நிறைவுவிழா நிகழ்ச்சிக்கு கோவை சி.பி.எம். கல்லூரியின் வரலாற்றுத்துறை முன்னாள் தலைவர்  பேராசிரியர் முனைவர் என். பாலசுப்பிரமணியம் தலைமையேற்றார். பெரியார் பல்கலைக்கழக வரலாற்றுத்துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் எம். தமிழ்மாறன் வரவேற்புரை நிகழ்த்தினார். தென்னிந்திய வரலாற்றுப் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் முனைவர் என். ராஜேந்திரன் வாழ்த்துரை வழங்கினார். பெரியார் பல்கலைக்கழக வரலாற்றுத்துறைப் பேராசிரியரும் மாநாட்டுச் செயலாளருமான முனைவர் எஸ். ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

                                    நன்றி, ‘ஜனசக்தி’ வார இதழ் – 19.03.2017

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    தனத்தனந்த தானா தனன
    தனத்தனந்த தானா தனன
    தனத்தனந்த தானா தனன-தனதானா

    மதுரா
    ———–

    120429 -Bamboo notes -wmark -lores

    “மனத்தகந்தை நானார் அழிய சிவக்கொழுந்து சோணா சலனை
    அணைத்துணர்ந்த ஞானா சிரியன் -ரமணேசர்
    உரைத்தஅந்த தேகான் மவலை விரிப்பிலுழன்று மீனாய் புலனின்
    புழுக்களுண்டு சாகா வகையை -அருள்வாயே
    கனைத்தியங்கும் பாலா ழிவளர் பணத்தனந்தன் மீதே றிவள
    தனத்தணங்கு சீர்பா தமுற -துயில்வோனே,
    தவிப்படைந்த ஆய்பா டியரின், பொறுப்புணர்ந்து சேயாய் மழையில்
    பொருப்புகந்து வானோர் கருவம் -ஒழிமாலே.
    சினத்தகஞ்ச மாமா அழிய ,மதர்த்துவந்த மாவா னையுடன்
    எதிர்க்கவந்த கோமா ளிகளை -பலராமன்
    துணைக்கரங்கள் தோதா கநில வரைக்குள்சென்று தாயார் சமேத
    தகப்பன்விலங்கு தூளா கவட -மதுராவின்
    ஜனத்தரங்கின் ராஜா வெனஅ ரசுக்குகந்து பாமா உருகும்
    மணிக்கமைந்த தோளாய் வயதில் -பெரிதாகி
    வெளுத்தசங்கை வாயூ திகுரு களத்தில்நின்று பூபா ரமதை
    குறைக்கவந்த கீதா சிரிய -பெருமாளே”….கிரேசி மோகன்….!

    Share
  • படக்கவிதைப் போட்டி – (104)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    17409641_1266256516761878_528197070_n
    62059640@N05_rகாயத்ரி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (25.03.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.

    Share
  • படக்கவிதைப் போட்டி 103-இன் முடிவுகள்

    -மேகலா இராமமுர்த்தி

    தளும்பும் தண்ணீரைத் தத்ரூபமாகக் காட்சிப்படுத்தியிருக்கும் திரு. அவினாஷ் சேகரனின் புகைப்படத்தை இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்குத் தேர்வு செய்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். புகைப்படக் கலைஞருக்கும், தேர்வாளருக்கும் என் நன்றி.

    waterdrops

    விசும்பின் துளி தரையில் வீழாமற் போனால் பசும்புல்லின் தலையையும் காண்பது கடினம் என்றார் தெய்வப்புலவர்.

    நீலவண்ணத்தில் சாலம் காட்டும் இந்நீர், நம் கவிஞர்களின் கற்பனை ஊற்றைத் தளும்பச் செய்திருக்கும் என்று எண்ணுகிறேன். அதில் நாமும் நீந்திக்களித்து வருவோம்!

    ***

    ’வான்பொய்ப்பினும் தான்பொய்யா மலைத்தலைய கடற்காவிரியைக் கன்னடத்துப் பைங்கிளியென்று கருநாடகம் கருணையின்றி சிறைப்பிடித்ததால், வளமிழந்த தமிழ்நாடு வறட்சியில் தவிக்கின்றது. பாய்ந்துவந்த காவிரியைப் படத்தில் மட்டுமே காணும் அவலம் என்று மாறும்? என வேதனை மேலிட வினவுகின்றார் திரு. எஸ். கருணானந்தராஜா.

    நீரிற் குமிழி நீயே சாட்சி!

    பாய்ந்து வரும் காவிரியில் நீந்திவரும் நீர்க்குமிழி
    ஓய்ந்துவிட்டாய், உன்படத்தின் காட்சி – இன்று
    உலகுக்கு அதுதானே சாட்சி

    காப்பியங்கள் சொன்னதெல்லாம் கனவாய்ப் பழங்கதையாய்
    மூப்படைந்து செத்தொழிந்து போச்சு – இன்று
    முகமிழந்த காவிரியாயாச்சு

    வாழ்த்துரைக்கச் செம்புலவர் வளநாடன் தாரமென்று
    கீர்த்தியுடன் வாழ்ந்தனை காவேரி – இன்று
    கிடக்கிறதே வெள்ளை மணல் வாரி (கடல்)

    வண்டலள்ளித் தமிழர் மண்ணில் வளங்கொழிக்க நன்செயெங்கும்
    கொண்டு தந்தாய் எங்களின் காவேரி – இன்று
    மண்டிய மண் அள்ளுதற்கு வயல் வரப்புப் படுக்கையெனக்
    கண்ட இடமெங்கும் மணல் லாரி.

    கன்னடத்துப் பைங்கிளியென்றுன்னையவர் சிறை பிடிக்க
    அன்னவரின் சொத்தானாய் தேவி – நாம்
    உன்னையினிக் காண்பதற்கு உள்ளதெல்லாம் உன்படம் தான்
    என்ன செய்வோம் இத்துயரை மேவி!

    ***

    வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார் அன்று. தமிழ்மக்களின் பசிப்பிணி போக்கிய விவசாயிகளோ வாடிய பயிரைக் கண்ட அதிர்ச்சியில் தம் ஆருயிரையே துறந்துவருகின்றனர் இன்று! ஆறுகளில் வெள்ளம் ஆடிவந்த காலமெல்லாம் பழங்கதையாய்ப் போன வேதனையைக் கவிதையில் பதிவுசெய்திருக்கின்றார் திருமிகு. ஹரிதா.

    வாடிய பயிரைக்கண்டே
    வாடிமடிந்த மனிதனை அறிவாயோ,
    உனைக்காணாது உயிர்துறந்தோர்
    எத்துனையென்பதை அறியாயோ,
    பெருகிவழிந்தோடும் குழாயடிநீரோடு

    அலட்சியத்தினின்று மடிவற்றிப்போன
    ஆற்றுப்படுகைகளும் தூளிகட்டியாடிய
    ஆற்றங்கரை ஆலமரமும்
    நினைவுபடுத்துகிற பழைய நினைவுகளும்
    கடந்து வந்த பாதையினில் உணா்த்திவிட்டுபோகிறதுன் இழப்புகளைத்
    தாரைவார்க்க காத்திருக்கும் கார்ப்பரேட் எசமானா்கள் ஒருகோடி

    உனைத்தோடி நோன்பிருக்கும் ஜனங்கள்கோடி
    இனியேனும் இருப்பதைக் காப்போனோ
    இழந்ததை மீட்பேனோயெனும் ஏக்கத்தினிலே …

    ***

    நீரில்போடும் கோலங்கள் நிலைப்பதில்லை; ஆதலால், இல்லாததை நம்பி இருக்கும் காலத்தை வீணடிக்காதே; முயன்று செய் இயன்றதை!” என்று முயற்சியின் உயர்வைப் பேசுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    இன்றே செய்…

    நிலைப்பதில்லை
    நீர்க்கோலங்கள்-
    வாழ்க்கையாய்..

    குளத்தில் கல்லெறிந்து
    வளையங்களைத் தூதனுப்பினால்
    வராது நல்லகாலம்..

    இருக்கும் காலத்தில்
    இயன்றதைச் செய் முயன்று..

    இல்லாததை நம்பி
    ஏமாந்து
    இழந்துவிடாதே
    இருக்கும் காலத்தை…!

    ***

    ”கருவில் உயிர்கள் வளர்வது நீரில்; வயலில் பயிர்கள் வளர்வது நீரில். நீரின்றி அமையாது நிலவுலகு. எனவே உபரி நீரைப் பரிவோடு பகிர்ந்தளியுங்கள் உலகோருக்கு!” என்று நீர் சொல்லும் நீதியை திரு. பழ. செல்வமாணிக்கத்தின் கவிதையில் காண்கிறோம்.

    நீரும் நாமும் பஞ்ச பூதங்களில் நீர் இருப்பது முதலினிலே!
    ஈசனும் தந்தார் இடம் தன் தலையினிலே!
    கருவில் குழந்தை வளர்வது நீரினிலே!
    பயிர்கள் விளைவது நீரினிலே!
    பாவங்கள் கரைவது நீரினிலே!
    ஆனந்தம் தெரிவது நீரினிலே!
    அழுகையும் புரிவது நீரினிலே!
    நீரில்லா உலகம்!
    உயிரில்லா உடலாகும்!
    உயிர் வாழ உணவு வேண்டும்!
    உணவிற்கு நீர் வேண்டும்!
    இயற்கை தந்த செல்வம்
    அனைவருக்கும் பொதுவாகும்!
    அளவுக்கு மீறினால் அமுதமும்
    நஞ்சாகும் !
    உபரி நீரை பகிர்ந்தளித்தால்!
    உலகம் உயர்வாகும்!
    நீர்க் குமிழி வாழ்க்கையில்!
    உனது புகழ் நிலையாகும்!
    இது வண்ணக் குமிழ் சொன்ன
    எண்ணக் கதையாகும்!
    இதை நெஞ்சில் நிறுத்திடுங்கள்!
    நீடூழி வாழ்ந்திடுங்கள்!

    ***

    ”ஐந்தாம் பிள்ளையும் பெண்ணாய்ப் போனதால் மாமியார்க் கோபமும் மாமனார் சூழ்ச்சியும் பெண்குழந்தையை மிதக்கவிட்டது தண்ணீரில்; அதுகண்டு தாயோ மிதக்கிறாள் கண்ணீரில். பெண்ணாய்ப் பிறப்பதினும் நாயாய்ப் பிறப்பதே நல்லது போலும் இந்த நானிலத்தில்!” என்று நெஞ்சுநெகிழ்ந்து பேசுகின்றார் திரு. சி. ஜெயபாரதன்.

    தாயின் கண்ணீர்

    கண்ணீர் விடுகிறாள் அன்னை
    பத்து மாதம் சுமந்த சிசு
    தண்ணீரில் போகும் போது !
    ஐந்தாம் பிள்ளையும்
    பெண்ணாய்ப் போனதாம் !
    பெற்ற
    தந்தையின் சீற்றம் !
    மாமியார் கோபம் !
    மாமனார் சூழ்ச்சி !
    பெற்ற தாயிக்குத் துடிப்பு !
    இதய வெடிப்பு !
    வேதனை !
    ஐந்து பெண் குட்டி ஈன்ற
    எலும்பு நாயும்
    குட்டிகளைப் பேணுது;
    தாய்ப் பாலை
    ஊட்டுது !
    பெண்ணென்றால்
    பேயும் இரங்குமாம் !
    அழுது, அழுது
    அன்னையின் கண்ணீர்
    ஆறாய் ஓடுது !
    மானிட மாய்ப் பிறப்பதிலும்
    நாயாய்ப் பிறப்பது
    நல்லது !

    ***

    சேகரிக்க மறந்தோம் மழைத்துளி. அதனால் உழவரின்  கண்களில் நீர்த்துளி. மரங்கள் நிறைந்த கானை அழித்தோம்; வானை முட்டும் கட்டடங்கள் அமைத்தோம். விளைவு? வான் பொய்த்தது; நிலம் வறண்டது. இது மானிடப் பிழையேயன்றி வானின் பிழையன்று!” என்று சுட்டிக்காட்டுகின்றார் திருமிகு. மா. பத்ம பிரியா.

    துளிக்கு வலிமையுண்டு
    சிறுதுளி பெருவெள்ளமாவதை அறியாது
    உழலும் மானுடமே!
    துளிக்கும் வலிமையுண்டு
    உணர்வாய் நீ
    வானம் பார்த்த பூமிக்கு மறுக்கப்பட்ட மழைத்துளி
    மரம் நடாமையால் நமக்கான பதிலடி
    சேகரிக்க மறந்த மழைத்துளி
    வறண்ட பூமியென்னும் பேரிடி
    கான்கிரிட் கட்டடத்தின் சிரிப்பொலி
    விவசாயி கண்ணில் பெருக்கெடுக்குதே கண்ணீர்த் துளி

    தாரை வார்க்கும் நீர் வளமெல்லாம்
    நமக்கே விலையானது சேகரித்த நீர்த்துளியாக
    ஊழல் வளர்த்தெடுக்கும் ஓரிடத்துச் செழுமை
    தட்டிக் கேளாதவரின் இயலாமை
    உழைப்பாளி உடலில் பெருகும் வியர்வைத்துளி
    வன்கொடுமையால் வதைக்கப்படும் பிஞ்சுகளின் உதிரத் துளி
    சிறுதுளிதானே எக்காளமிடும் மனிதா
    எத்தனை எத்தனை சிறுதுளிகள்
    அத்தனை அத்தனை ஒன்றிணைந்து
    அசுரக்காட்சியாய் அச்சுறுத்தும்
    நிறமாறிய துளிகள்
    வஞ்சனையைச் சொல்லும்
    துளிக்குள் துளிர்க்கும் வலிமையே வெல்லும்

    ***

    வண்ணங்கள் காட்டும் மழைத்துளி, மானுட எண்ணங்களையெல்லாம் ஒன்றுகூட்டிப் பல்வேறு சிந்தனைத்துளிகளைச் சிதறவைக்கும் அதிசயத்தைப் பெருவை திரு. பார்த்தசாரதியின் கவிதையில் காணமுடிகின்றது.

    சிந்தனைத் துளி

    விண்ணுடன் முகிலாடும்
    விழிநீரில் தவழ்ந்தாடும்
    குளிர்நிலவின் முகத்துக்குள்
    பனித்துளிக்கு ஒப்பாகி
    கவிபாடும் சிந்தனைக்கோர் துளியானாய்!

    காதலர்கள் சேர்கையாலே
    களிப்பின் உச்சத்திலே
    விழிநான்கின் வழிவந்த
    வழிந்த கண்ணீராய்
    கவிபாடும் சிந்தனைக்கோர் துளியானாய்!

    பெண்மையின் கருப்பைக்குள்
    பனிக்குடத்தில் பக்குவமாக்
    படுத்துறங்கும் பிஞ்சு
    கருத்துளியின் உருவமாய்
    கவிபாடும் சிந்தனைக்கோர் துளியானாய்!

    கடல்நாயீன்ற குட்டிபோல்
    கண்ணுக்குள் மாயத்தோற்றமாய்
    பழுப்புநீல வண்ணத்தில்
    புதுஜனனம் எடுத்ததுபோல்
    கவிபாடும் சிந்தனைக்கோர் துளியானாய்!

    தாமரையிலை மீதிலென்றும்
    தங்காத தண்ணீர்முத்தென
    வெண்துளியாய் வீழ்ந்துபல
    மணித்துளி வண்ணமாய்த்தவழ்ந்து
    கவிபாடும் சிந்தனைக்கோர் துளியானாய்!

    நீருக்குமேல் மிதந்த
    நீலவண்ண நீர்த்துளியாய்
    மாயமாய்மதி மயக்கும்வண்ணமாய்
    மானுடச்சிந்தைக்கோர் விருந்தாகி
    கவிபாடும் சிந்தனைக்கோர் துளியானாய்!

    வண்ணம் பலகாட்டும்
    வண்ணத் துளியாய்
    எண்ணத்தைச் சிதறடித்த
    எண்ணத் துகளாய்
    கவிபாடும் சிந்தனைக்கோர் கவித்துளியானாய்!

    அப்பப்பா! துள்ளிக்குதிக்கும் நீர்த்துளியைக் கண்டதுதான் தாமதம், கவிதைப் பிரளயத்தையே உருவாக்கி அதன் சுழலில் என்னைத் திக்குமுக்காட வைத்துவிட்டனர் கவிஞர்கள். அவர்களின் சிந்தனைச் செறிவுக்கும், புலமையறிவுக்கும் என் பாராட்டுக்கள்!

    ***

    இனி இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய் நான் தேர்வுசெய்திருப்பது…

    பொங்கி வரும் பொக்கிஷம்!

    சிறுதுளி பெருவெள்ளம் என்றாய்
    பல துளிகள் உனக்களித்துவிட்டேன், இருப்பினும்
    பற்றாக்குறை பட்ஜெட்தான் வாசிக்கிறாய்!!

    சிக்கனமாய் வைத்திருந்தால் தான்
    சித்திரை வரை செலவழிக்க முடியுமென
    சில்லறை மட்டும் சேர்க்கிறாய்.

    வற்றாத ஜீவனாக இருந்த எனை
    வாரி இறைத்து வீணாக்கி
    வற்ற வைத்துத் தவிக்கிறாய்

    பொன்னும் பொருளும் மட்டுமல்ல
    பொத்திப் பொத்திப் பாதுகாக்க வேண்டியது
    பொங்கி வரும் நதியையும் தான்!

    ஊதாரியாய் இருந்துவிட்டு ஊரூராய்த் தேடாதே
    ஊற்றெடுக்கும் எனை நீ
    ஊமையாக்காதே!

    விழித்துக்கொள் இன்றாவது…!
    வீணடிக்காமல் சேமிக்கத் தொடங்கு
    விடியும் பொழுது வெளிச்சம் தரட்டும்!

    ’பொன்னையும் பொருளையும் கண்ணைப்போல் காக்கும் மனிதர், அதனினும் அரிய நீரை ஊதாரித்தனமாய்ச் செலவழிப்பது மடமையேயன்றி அறிவுடைமை ஆகாது. ‘பொங்கிவரும் பொக்கிஷம்’ நீர். அதனைத் தேக்கிவைத்தால் மட்டுமே உழவு செழிக்கும்; உயிர்கள் பிழைக்கும்’ எனும் அருங்கருத்தைத் தன் கவிதையில் பொதிந்து தந்திருக்கும் திருமிகு. சத்தியப்ரியா சூரியநாராயணனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

    ஒன்றல்ல இரண்டல்ல…பல கவிதைகளைப் படக்கவிதைப் போட்டிக்குச் சளைக்காமல் படைத்திருக்கும் அவரின் அளவில்லா ஆர்வத்துக்கும் என் பாராட்டுக்கள்!

    Share
  • ”ஒத்தனும் மத்தொருத்தனும்’’

    கிரேசி மோகன்

    இன்று உலக கதை நாள்….International Story Day….
    ———————————————————

    பிரும்மாண்டமான கல்யாண மண்டபம்….உள்ளே மேடையில் மணமகன் ராமானுஜம்-மணமகள் ஜானகி….ஜானகி செக்கச் செவேலென்று வறுமையின் நிறம் சிவப்பில் ஜொலித்தாள்….ராமானுஜமோ நிறத்தில் வறுமையாக பெருமாள் கோயில் மூலவர் போல் இருந்தான்….இந்த அழகில் ஸிம்ஃபெனி வாசிக்கலாம் அளவுக்கு பியானோ பட்டன் ஸைஸ் பற்கள் தேங்காய் துறுவலாக வாயை விட்டு வெளியே விழாமல் ‘’பேய்ச் சிரிப்பு சிரித்த ‘’ முகமா வந்தவர்களுக்கு அழகு காட்டிக் கொண்டிருந்தது….காதலித்த ஜானகியை கைப்பற்றியதில் ராமானுஜத்திற்கு சந்தோஷம் தாங்காமல் எக்ஸ்ட்ரா ரெண்டு பல் முளைத்தது….காதலுக்கு கண் இல்லை, காதலித்த ஜானகிக்கும் கண்ணில்லை

    அப்போது ஜானகியின் தந்தை ,ராமானுஜத்தின் மாமானுஜம் ஓடிவந்து’’ மாப்ளே….என்பொண்ண கண்கலங்காம பாத்துக்குங்க’’என்றார் கண்கலங்க’’மாமா…நான் ஒரு பெரிய சாஃப்ட்வேர் கம்பனில CEOவா இருக்கேன்….என் சம்பளத்தை சில்லறையா மாத்தினா சத்திரத்துல உள்ளவங்க கைநிறைய இருக்கும்….இதத் தவிர மெட்ராஸ்ல 4 வீடு இருக்கு’’என்று ஆறுதலாக பீத்திக் கொண்டவன் ‘’மாமா….உங்க பொண்ணுக்காக நான் வீட்டைக் கட்டிப் பாத்துட்டேன்….நீங்க உங்க பொண்ணு கல்யாணத்த பண்ணிப் பாக்கற வழியைப் பாருங்க’’ என்று ‘’எங்கே மனம் மாறி விடுவாரோ’’என்ற அச்சத்தில் அவசரப் படுத்தினான்….

    மண்டபத்தின் வாசலில் கவுண்டமணி -செந்தில் போன்று இருவர் லுங்கியில்….
    மத்தொருத்தன் (செந்தில்) -அண்ணே! இப்ப போய் கேக்கலாம் சந்தோஷத்துல தந்துருவான்….

    ஒத்தன் (கவுண்டமணி) – இல்ல ….இப்ப வாணாம் ….வா போவலாம்….செந்தில் சலிப்போடு கவுண்டரை தொடர்கிறான்…

    காட்சி-2
    —————-

    முதலிரவு அறை….ராமானுஜத்தின் எசகேடான பற்களில் டம்பளர் பட்டு ஜலதரங்கம் வாசிக்க, அவன் பாலை அருந்தி….பழங்களை மிக்ஸி போன்ற வாயிலிட்டு ஜூஸாக்கி குடித்து…,நாயகன் ராமானுஜம் நாயகி ஜானகியை வில்லன் போல நெருங்க, ஜானகி’’No நஹி’’ என்று தடுத்து ‘’என்னங்க எங்கப்பா கல்யாணத்துக்கு ஏகமா செலவு பண்ணிட்டார்…நீங்க கடனா….!’’ என்று கவர்ச்சிகரமாக கெஞ்ச’’ அசடே! அசடே!….எதுக்கு கடன் இந்தா ப்ளாங்-செக்….’’என்று தந்து ஸ்விட்சை அணைக்க அறையில் ராமானுஜ இருள் கும்மியது….

    வீட்டு வாசலில் லாம்ப்-போஸ்ட் அருகில் ஒத்தன் -மத்தொருத்தன்….செந்தில்-அண்ணே….நம்பாள் உச்சகட்ட கிக்குல இருக்கான் …..இப்ப போய் கேட்டா நிச்சயமா தந்துருவான்….
    கவுண்டமணி-இல்ல….இப்ப வாணாம்…வா போவலாம்….செந்தில் கவுண்டரை சபித்தபடி தொடர்கிறான்….

    காட்சி-3
    —————-

    நர்சிங்-ஹோம்….நர்ஸ் கையில் ராமானுஜ ஜாடையில் பிறக்கும் போதே பல்லுடன் கருப்பு வெளுப்பில்(கலரில் கொஞ்சம் அம்மாவையும் கொண்டு பிறந்த) குழந்தை….கிருஷ்ண தேவ ராயருக்கு வாரிசு பிறந்தாற் போன்ற பூரிப்பில் ராமானுஜம் நர்ஸின் பர்ஸை நூறு ரூபாய் நோட்டுக்களால் நிரப்புகிறான்….

    நர்சிங்-ஹோம் வாசல் வராண்டாவில் ஒத்தன் -மத்தொருத்தன்…செந்தில்- அண்ணே புள்ள பொறந்த குஷில பய இருக்கான்….இப்ப எத்த கேட்டாலும் தந்துருவான்….அடம் புடிக்காம வாங்கண்ணே’’

    கவுண்டர்-இல்ல இப்ப வாணாம்…வா போவலாம்….தன் தலையில் அடித்துக் கொள்ளப் போன செந்தில் கைதவறுதலாய் கவுண்டர் தலையில் அடித்தபடி பின் தொடர்கிறான்….

    காட்சி-4
    —————-

    பிரும்மாண்டமான கல்யாண மண்டபம்….மேடையில்….ஆறிலேயே பார்க்க சகிக்காத ராமானுஜம் அறுபதில் அடி பிடிச்ச கரிச் சட்டியாய், வாயில் வழுக்கையும் தலையில் பொக்கையுமாக அவதாரம் போல நிற்கிறான்….அருகில், மறுபடி ராமர் பார்த்தால் வில்லை உடைப்பார் என்னும் அளவுக்கு ஜானகி அதே அழகுடன் நிற்கிறாள்….ராமானுஜத்தின் 25 வயது மணமகன் லஷ்மணன்‘’அப்பனுக்கு தப்பாம’’ நிழல் போல(நிறத்தில்) தன்னருகே தேவதை போல நிற்கும் மைதிலிக்கு தாலி காட்டிக் கொண்டிருக்கிறான்(கட்டப் போகும் கட்டம்)….அப்போது ராமானுஜன் சம்பந்தி ஓடிவந்து ராமானுஜத்தின் கைகளைப் பற்றிக் கொண்டு ஏதோ சொல்ல ஆரம்பிக்க, ராமானுஜம்’’நீங்க ஒண்ணும் சொல்ல வேணாம்….என் சொத்து பூராவையும் உங்க பொண்ணு அதாவது என் மருமக மைதிலி பேர்ல எழுதிட்டேன்’’ என்று வீரவசனமாக பேசி பத்திரங்களை தாரை வார்த்தான்….

    மண்டபத்தின் வாசலில்….ஒத்தன் -மத்தொருத்தன்….

    செந்தில்-எண்ணன்ணே எல்லாத்தையும் கொடுத்துட்டான்….இப்ப நாம போய் கேட்டா….!

    கவுண்டமணி-இப்பவும் இல்ல….எப்ப கேக்கணும்னு எனக்குத் தெரியும்….

    செந்தில்-வா போவலாம் அதானே….நானே சொல்றேன்….வாங்க போவலாம்….

    காட்சி-5
    —————

    மருமகள் மைதிலி வீட்டு வாசல் திண்ணையில் கிழிந்த பாயாக ராமானுஜம் புரண்டு கொண்டிருக்கிறான்….உள்ளே அறைச் சுவரில் ஊதுபத்தி மாலையோடு ஜானகியின் படம்….வெளியே வந்த மருமகள் மைதிலியிடம், ராமானுஜம் பரிதாபமாக’’அம்மா மைதிலி மணி பத்தாகுது இன்னும் நான் காப்பி சாப்பிடல’’என்று கெஞ்ச, எதையோ மிதித்தவள் போல மைதிலி மாமனாரைப் பார்த்து, சத்தம் கேட்கும் டெஸிபெலில் மோவாய் கட்டையை தோளில் இடித்து’’ஏ! கிழட்டுப் பொணமே….எப்பப்பாரு என்ன காப்பி காப்பினு….பித்தம் தலைக்கேறி பாயைத்தான் நீங்க பிறாண்ட போறீங்க’’என்று நாலு வீடு கேட்கும் அளவுக்கு கூவி விட்டு நகர்கிறாள்….அவளுக்கு பிறகு தயங்கி வந்த மகன் லஷ்மணன் மூணு கண்ணால் தந்தையை(ஏற்கனவே இவனுக்கு ஒன்றரைக் கண்…இப்ப ப்ளஸ் ஒன்றரை….ஆக மூணு)வாத்ஸல்யத்துடன் முறைத்துவிட்டு மைதிலி கிழித்த கோட்டை தாண்டாமல் வந்த நிதானத்தில் வீட்டுக்குள் சென்று மறைகிறான்….அப்பளத்து உருண்டையாய் திண்ணையில் சுருண்டு கிடந்த ராமானுஜம் சிலிர்த்து எழுந்து வானத்தைப் பார்த்து’’தெய்வமே ! பாத்துண்டு சும்மா இருக்கியே….என்ன ஏன் இந்த வயசுல இப்படி அல்லாட விடறே….என்ன அழைச்சிண்டு போக மாட்டியா…இது உனக்கே சரியா’’ என்று விசும்பி விசும்பி அழ….

    தெருக்கோடியில் ஒத்தன் -மத்தொருத்தன்….

    ஒத்தன் -வாடா இப்ப போய் கேக்கலாம்….என்று கூறி எமனுருவில் பாசக் கயிறை உருவ….மத்தொருத்தன் சித்ரகுப்தனாகி-என்ணண்னே….அப்பல்லம் வாணானுட்டு….!
    உங்கள புரிஞ்சுக்கவே முடியல….!

    எமன் -அடேய்….நானா போய் யார் உசுரையும் வாங்கறதில்ல….அவங்களா தர்மமா தந்தா எடுத்துப்பேன்….அதான் எம்பேர் தர்மராஜன்….இது பேர் பாசக் கயிறு….
    சித்ரகுப்தன் -அப்ப எருமை….

    எமன் -உன்ன மாதிரி உசுர வாங்க அவசரப்படாம பொறுமையை ஞாபகப் படுத்த எருமை….வா இப்பத்தான் போகலாம்….அடுத்த தெருல தற்கொலைக்கு பயந்துண்டு ஆக்ஸிடெண்டுக்காக நடுத்தெருல நிக்கறான்’’என்று கூறி திண்ணையை நெருங்க…..ராமானுஜம் மாரடைப்பில் கோமானுஜமாகி சாய்கிறான்….

    —————————————————————————————————————————–

    Share