சிட்டுக்கு செல்லச் சிட்டுக்கு…
சித்ரப்ரியங்கா ராஜா
சிட்டே நீதான் எங்களை
விட்டுப் பிரியவில்லையே
சின்னஞ்சிறு மழலைபோல்
சிங்காரமாய் நீயுமே
தத்தித் தத்தி நடந்து வந்து
தாளம் கற்றுத் தருகிறாய்
உருட்டும் விழி பார்வையால்
சுற்றுமுற்றும் நீயுமே
ஒய்யாரமாய் பார்த்துப் பின்
ஓட எத்தனிப்ப தென்ன?
வைத்த அரிசி தன்னை நீ
கொத்தித் தின்னும் அழகையே
பெற்ற அன்னை போல் மனம்
பார்த்து ரசித்து மகிழுமே
கீச்சு கீச்சு என்று நீ
கூச்சலிடும் அழகைத்தான்
மூச்சு முட்ட நாங்களும்
ரசித்து மகிழ்ச்சி கொள்வோமே
அலைபேசி கோபுரங்கள் தாம்
உன்னை அசைய வைத்தாலும்
அசராது இன்னும் நீயே
எங்களுக்காய் வாழ்கிறாய்
அழகிய சிட்டே நீயும்தான்
எங்களின் அன்புச் செல்லமடி
எங்கள் அனைவரின் இதயமுமே
என்றும் உனக்கான அன்னை மடி.