”மாம்பழ வாயர், மஹாகவி சேவகர்,
BambooNotes கீதம் பசுவுக்கு: -பூம்பூம்பூம்
மாடதன் பாடது வீடுறக் கண்ணனின்
ஜோடுறைக்(பாதுகைக்) காலை சுவைப்பு’’….கிரேசி மோகன்….!
Blog
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
-
வங்கிகளின் அறிவிப்பும், மத்திய வங்கியின் அமைதியும், நிதி அமைச்சரின் மௌனமும்
பவள சங்கரி
சமீபத்தில் ஸ்டேட் வங்கி ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மாதத்திற்கு 3 முறை மட்டும் பணம் எடுக்கலாம் அல்லது கட்டலாம் என்றும் அதற்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் செலுத்தவேண்டும் என்றும் அறிவித்துள்ளனர். இதற்கு முன்னதாகவே ஐசிஐசிஐ வங்கியும் , ஹெடிஎஃப்சி வங்கியும் இத்திட்டத்தை அறிவித்துவிட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது. மாதத்திற்கு 3 முறை மட்டும் பணப்பரிவர்த்தனைகள் செய்வதாக இருந்தால் வங்கியின் தேவையே இல்லாமல், அஞ்சலகத்திலேயே இந்தப் பரிமாற்றங்களைச் செய்துகொள்ளலாமே. இதன் பயனாக தேவி வங்கி போன்ற தனியார் அமைப்புகளை ஊக்குவிக்கும் நிலையும் உருவாகலாம். இதுமட்டுமன்றி சிறு சேமிப்பு கணக்குகளுக்கு ₹5000, ₹3000 என்றும் நடப்பு கணக்குகளுக்கு, குறைந்தபட்ச வைப்புத் தொகையாக இருக்கவேண்டிய,₹10,000, ₹25,000, 1 இலட்சம் என்பதும் குறையும் பட்சத்தில் அந்தத் தொகைக்குத் தகுந்தாற்போல், அந்தந்த வங்கிகள் கட்டணங்களை நிர்ணயித்து வாடிக்கையாளர்களின் கணக்கிலிருந்து அந்தத் தொகையை எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக இந்தியாவில் 130 கோடி மக்கள் தொகை என்று வைத்துக்கொண்டால், இதில் ஒரு குடும்பத்திற்கு சராசரியாக 4/5 நபர்கள் என்ற கணக்கில் மொத்தமாக 26 கோடி குடும்பங்கள் உள்ளன. இந்த 26 கோடி குடும்பங்களில் ஒரு குடும்பத்திற்கு 3 சிறு சேமிப்பு கணக்கு இருப்பதாக வைத்துக்கொள்வோம். அப்படியென்றால் 78 கோடி சிறு சேமிப்பு வங்கிக் கணக்குகள் இருக்கும். இதில் ஒரு வங்கிக் கணக்கிற்கு நிரந்தரத் தொகையாக ₹ 3000 என்று வைத்துக்கொண்டால், அதன்படி மொத்த நிரந்தரத் தொகையாக 2,34,000 கோடி உரூபாய்கள் இருக்கும். நடப்புக் கணக்கை எடுத்துக்கொண்டால், 130 கோடி மக்கள் தொகையில் வியாபாரத்திற்காக வங்கிக் கணக்குகள் வைத்திருப்போர் சராசரியாக 10 கோடி என்று வைத்துக்கொள்ளலாம். ஒருவர் கணக்கில் சராசரியாக ₹ 20,000 உள்ளதாக வைத்துக்கொண்டால் இதன் மொத்தத் தொகை 2,00000 கோடி உரூபாய் ஆகிறது. ஆக மொத்தம் 4,34,000 கோடி உரூபாய்கள் வங்கியில் நிரந்தரமாக வைக்கப்படுகின்றன. மத்திய வங்கியால் புழக்கத்திற்கு விடப்பட்டுள்ள மொத்தத் தொகையின் மதிப்பு 12,00000 கோடி உரூபாய். இதில் மூன்றில் ஒரு பங்கு தொகைக்குச் சற்று அதிகமானத் தொகையே நிரந்தர வைப்புத் தொகையாக வைக்க வேண்டுமென்றால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி எப்படி சாத்தியமாகும் என்பதே மக்களின் ஐயமாக உள்ளது. மேலும் இந்தத் தொகைக்கு எந்த வங்கிகளும் வட்டி அளிப்பதில்லை. ஆனால் அதே சமயம் இந்த வங்கிகள் ஒரு வியாபாரிக்கு ஆயிரம் உரூபாய் கடன் கொடுத்தால்கூட அதற்குரிய வட்டியை வசூலித்து விடுகின்றனர். இந்த 4,34,000 கோடி உரூபாயை தவிர்த்து வங்கிகளில் தினசரி பணப்பரிமாற்றங்கள் இல்லாமல் கணக்கில் இருக்கும் தொகைகள் 2,00000 கோடி இருக்கும். ஆக, புழக்கத்தில் விடப்பட்டதில் சரி பாதி தொகைகள் வங்கிகளிலேயே முடங்கி விடுகின்றன.
ஆக மொத்தம் இதனால் வட்டி வருவாயாக சுமார் 4,000 கோடி உரூபாய்களும், கட்டணங்கள் மூலமாக பல ஆயிரம் கோடி உரூபாய்களும் வங்கிகளுக்கு இலாபமாக கிடைக்கின்றன என்பதைத் தவிர இதனால் பொது மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. காரணமேயில்லாமல் சிறு சேமிப்புக் கணக்கில் ₹11.50, நடப்புக்கணக்கில் ₹15.50, வங்கிகளால் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. அதாவது சராசரியாக சேமிப்புக் கணக்கில் ₹800 கோடியும், நடப்புக்கணக்கில் ₹ 200 கோடியும், ஆக மொத்தம் 1000 கோடி உரூபாய் வங்கிகள் எடுத்துக்கொள்கின்றன என்பதே நிதர்சனம்.
பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டிய நிதியமைச்சகமும், மத்திய வங்கியும் இது குறித்து எந்தக் கருத்தையும் வெளியிடாமல் அமைதி காப்பது ஏன்? இதில் இருக்கக்கூடிய பிரச்சனைகளை நிதியமைச்சகமும், மத்திய வங்கியும் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவே நினைக்கத்தோன்றுகிறது. உதாரணமாக ஒரு வியாபாரி வசூலுக்காகச் செல்கிறார். பணம் கொடுப்பவர் பணமாகக் கொடுத்தால் வங்கியில் கட்ட முடியாது. காசோலை கொடுத்து விடுகிறார். அதை வாங்கி வங்கியில் நாம் டெபாசிட் செய்தால் அது நமது கணக்கில் மூன்றாவது நாள்தான் வரவு வைக்கப்படும். 3வது நாள் அந்த காசோலை திரும்பி வந்துவிட்டால் அந்தப் பணத்தை எப்படி வசூல் செய்வது. அந்த ஊரை விட்டு அடுத்த ஊருக்கு வசூலுக்குச் செல்லும் நேரத்தில் இந்த காசோலை திரும்பிவிடுகிறது என்றால் அந்த ஊரில் உள்ள வங்கி திரும்பி வந்த காசோலையை நமது வங்கிக் கணக்கு உள்ள இடத்திற்கு (ஹோம் பிராஞ்ச்) அனுப்பிவிடும். ஆக 10 நாட்களுக்குப் பிறகுதான் காசோலையின் கதி என்னவென்று நமக்குத் தெரியவரும். திரும்ப சம்பந்தப்பட்ட வியாபாரியிடம் தொகையைக் கேட்டால் வங்கி நடைமுறையைக் கூறி எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று கையை விரித்துவிடுவார்.
இப்படி பிரச்சனைகளை உருவாக்கும் வங்கிகளால் நேர்மையாக வியாபாரம் செய்யக்கூடிய வியாபாரிகளுக்கு சிரமம் மட்டுமே மிஞ்சுகிறது.
** மத்திய காசோலை பரிசீலனை செய்வதற்குப் (centralised clearing system) பதிலாக அந்தந்த ஊர்களிலேயே (local clearing system) காசோலைகளைப் பரிசீலனை செய்து அன்றைய தினம் வங்கி முடியும் நேரமான 4 மணிக்குள் வரவு வைத்துவிடலாம். இதனால் வியாபாரிகளின் பலவிதமான தொல்லைகளுக்கு தீர்வு ஏற்படலாம்.
** வங்கிகளிலிருந்து பணம் எடுப்பதற்கு கட்டுப்பாடு வைக்கலாம். ஆனால் பணத்தைச் செலுத்துவதற்கு ஊக்கம் கொடுக்கவேண்டியது அவசியம்.
மக்கள் மத்திய அரசின் மீதும் பொருளாதாரக் கொள்கைகள் மீதும் அதீத நம்பிக்கை வைத்து வாக்களித்து உ.பியில் 3/2 பங்கு வெற்றியைத் தந்துள்ளனர். மத்திய அரசின் இந்த வெற்றி பங்குச் சந்தைகளில் பிரதிபலித்துள்ளது. என்.எஸ்.சி, பி.எஸ்.சி ஆகியவற்றில் சென்செக்ஸ், நிஃப்டி, உச்சக்கட்ட நிலையை அடைந்துள்ளன. உரூபாயின் மதிப்பும் உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை குறைய ஆரம்பித்துள்ளது. பெட்ரோலியப் பொருட்களின் விலையும் குறைய ஆரம்பித்துள்ளன. மக்களின் ஆதரவு கிடைத்துள்ள இந்த நேரத்தில் நல்ல திட்டங்கள் கூட சரியாக நடைமுறைப்படுத்தப்படாவிட்டால் மிகப்பெரியத் தோல்வியைச் சந்திக்க நேரிடும் என்பதையும் அரசு கவனத்தில் கொள்ளவேண்டும்.
-
மன்னர்குடிப் பிறத்தல் துன்பமே!
-மேகலா இராமமூர்த்தி
சிலம்பின் உச்சகட்டம் மதுரை தீக்கிரையாவது! அதனை நிகழ்த்துகின்றாள் சிலம்பினால் மன்னனை வென்ற சேயிழையான கண்ணகி. பின்னர், வையைக் கரையோரமாய்ச் சென்று சேரநாட்டு நெடுவேள்குன்றம் எனும் மலைப்பகுதியை அடைகின்றாள். அதன்மீதேறி அங்கிருந்த வேங்கை மரநிழலில் நின்றவள், வானூர்தியில் தேவர்குழாம் சூழவந்த கோவலனோடு விண்ணாடு போயினள். தென்னாடு போற்றும் பத்தினித் தெய்வம் ஆயினள்.
மலைமீது நின்றவள் வான்சென்ற அதிசயத்தை அங்கிருந்த மலைநாட்டுக் குறவர் கண்டு மலைத்தனர். நம் குலக்கொடி வள்ளிபோன்றிருக்கும் இப்பெண்ணரசியை நாம் தெய்வமாய்ப் பூசிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வருகின்றனர்.
அச்சமயத்தில், தன் மனைவி வேண்மாளோடும் சுற்றத்தினரோடும் மலைவளம் காணவருகின்றான் சேரமன்னன் செங்குட்டுவன். தாம் கண்ட இந்த அதிசய நிகழ்வை குன்றக்குறவர் அவனிடம் விழிகள் விரிய விவரித்தனர். கானவேங்கையின் கீழ்நின்ற மானுடப் பெண்ணொருத்தி வானகம் சென்றதை அறிந்த செங்குட்டுவன் வியப்பிலாழ்ந்தான். அதுகுறித்து அவன் சிந்தித்திருந்த வேளையில், ”மன்னவா!” எனும் குரல் அவன் எண்ணம் கலைத்தது.
குரல்வந்த திக்கை நோக்கினான்.
மலைவளம் காண அவனோடு வந்திருந்த மதுரைப் புலவர் சாத்தனார் அங்கே நின்றிருந்தார்.
”புலவர் தோழ! ஏன் என்னை அழைத்தீர்…? வானகம் சென்ற அப்பெண் குறித்துத் தங்களுக்கு ஏதேனும் தெரியுமா?” என்று ஆவலோடு கேட்டான் வேந்தன்.
”ஆம் மன்னா! நடந்தவை அனைத்தும் நானறிவேன்” என்றார் தண்டமிழ் ஆசான்.
பரபரப்படைந்த செங்குட்டுவன், ”அப்படியா? சீக்கிரம் சொல்லுங்கள்! யார் அந்தப் பெண்? அவள் நம் நாடு வந்தது ஏன்? வானுலகம் சென்றது எப்படி?” என்று கேள்விகளை அடுக்கினான்.
மன்னனின் பதற்றம் கண்ட புலவரின் முகத்தில் முறுவல் முகிழ்த்தது.
”வேந்தே…கேள்! தன் மணாளனோடு புகாரினின்று புறப்பட்டு மதுரை வந்தாள் அந்த மங்கை. அவளுடைய போதாத காலம், சிலம்பை விற்கக் கொல்லனிடம் சென்ற அவள் கணவன் கோவலன், கள்வன் கொன்று பொய்க்குற்றம் சாட்டப்பட்டுக் கொல்லப்பட்டான் பாண்டிய மன்னனால். விவரமறிந்த அம்மாதரசி சினந்தாள்; சீறினாள். தேரா மன்னனின் ஆராயாத தீர்ப்பைத் திருத்த அவன் அவைநோக்கி விரைந்தாள். தன் காற்சிலம்பு மாணிக்கப் பரல்களால் ஆனது; கோப்பெருந்தேவியின் சிலம்பைப்போல் முத்துக்களால் ஆனதன்று என்பதைச் சிலம்பை உடைத்துப் புலப்படுத்தினாள்.
”பொன்செய் கொல்லன் தன்சொல் கேட்ட யானோ அரசன்? யானே கள்வன்!” என்று நொந்தான் மன்னன். செங்கோல் தவறிய அதிர்ச்சி அவனை உறைய வைத்தது. மண்ணைவிட்டே மறைய வைத்தது. அவன் தேவியும் கணவன் ஆவிதேடி அவன் பின்னே பயணமானாள். அதன்பின்னரும் தணியவில்லை கண்ணகியின் கடுங்கோபம். அரண்மனையைவிட்டு வெளியே வந்தவள், மதுரை நகரைப் பார்வையால் சுட்டாள்; இங்குள்ள தீத்திறத்தாரை அழித்திடுக!” என்று அங்கியக் கடவுளுக்கு (அக்னி தேவன்) ஆணையிட்டாள்.
அங்கிருந்து புறப்பட்ட அவ் வஞ்சி, வையைக் கரையோரமாய் மேடென்றும் பள்ளமென்றும் பாராது விரைந்து வந்தாள் உன் வஞ்சி (நகர்) நோக்கி! தன் கதையைச் சேரன் அறியவேண்டும் என்றெண்ணித்தான் உன்னாடு வந்து விண்ணாடு சென்றாள்போலும்!” என்று அவள் வரலாற்றைச் சாத்தனார் உரைத்திட, “அதுவரைத் தன்னிலை மறந்து கதைகேட்டிருந்த குட்டுவன் சுயவுணர்வு மீண்டான்.”
’சிலம்பின் வென்ற சேயிழை’யின் கதை அவனைத் திகைக்கவைத்தது!
தன் செங்கோல் வளையக் காரணமாயிருந்த தீவினையைத் தன் உயிரைக் கொடுத்து நிமிர்த்திய பாண்டிய மன்னனின் துயரமுடிவு அவனை வேதனையில் ஆழ்த்தியது.
”மன்னனாயிருப்பதில்தான் எத்தனை எத்தனை இன்னல்கள்?!”
மழைவளங் கரப்பின் வான்பே ரச்சம்
பிழையுயி ரெய்திற் பெரும்பே ரச்சம்
குடிபுர வுண்டுங் கொடுங்கோ லஞ்சி
மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல்
துன்ப மல்லது தொழுதக வில்… (சிலப்: வஞ்சிக்காண்டம் – காட்சிக்காதை)நாட்டில் மழை பொய்த்துவிட்டால்… ”மன்னன் கொடுங்கோலன்! அதனால்தான் மழைபெய்யவில்லை!” என்று மக்கள் பழிப்பரோ என்றோர் அச்சம்; மன்னுயிர்களுக்கு யாதுகாரணத்தினாலோ துன்பம் நேர்ந்துவிட்டால்… ”மன்னனின் ஆட்சி சரியில்லை; அதனால்தான் மக்களுக்குத் துன்பம்” எனும் அவச்சொல் வந்துவிடுமோ எனும் பேரச்சம். குடிகளைப் புரந்து, கொடுங்கோலுக்கஞ்சி மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல் (மன்னர்குடியில் பிறத்தல்) துன்பமே! இதனைப் போற்றத்தக்கதெனச் சாற்றியவர் யார்?” என்றெண்ணி வருந்தினான் அவன்.
”ஆகா! பாண்டியன் தொலைந்தான்! பகைவர் எண்ணிக்கையில் ஒன்று குறைந்தது!” என்று மகிழ்ச்சியில் துள்ளவில்லை சேரன். மாறாக, செங்கோன்மை தவறினால் மன்னர்க்கு நேரும் சங்கடங்களையே சிந்தித்திருந்தது அவன் உள்ளம். ஒரு மன்னனின் தவறான செய்கையும் அதனால் அவனடைந்த கேடும் இன்னொரு மன்னனுக்குப் பாடமாகின்றது இங்கே!
சிலம்பு செப்பும் அறங்களில் ஒன்றான ”அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்” என்பதை மெய்ப்பித்துவிடுகின்றது பாண்டிய நெடுஞ்செழியனின் மறைவு.
”அரசியலார் தவறிழைத்தால் அறம் அவர்களைத் தண்டிக்கும்; அதிலிருந்து அவர்கள் தப்பமுடியாது” எனும் அடிகளின் அமுதவாக்கு எல்லாக் காலத்துக்கும் பொருந்தக்கூடியதுதானே?
-
உமர் கயாம் ஈரடிப் பாக்கள்
சி.ஜெயபாரதன்
பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத்
ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.
[37] அந்திப் பொழுது அங்காடிச் சந்தையில்
குயவன் கரங்கள் ஈரக் களிமண் பிசையும்.
எதற்கும் அடங்கா நாக்கு முணுமுணுத்து,
மெதுவாய் தம்பி ! மெதுவாய் எனக்கெஞ்சும்.
[37]
For in the Market-place, one Dusk of Day,
I watch’d the Potter thumping his wet Clay:
And with its all obliterated Tongue
It murmur’d – ‘Gently, Brother, gently, pray! ‘
[38] பண்டை முதல் அதுபோல் கதையாய்
அடுத்தடுத்த மானிட வம்சா வழியே மீண்டு,
அந்த மண்கட்டி பூமியை நிரப்பிய வண்ணம்
படைப்பாளி மானிடமாய் வடிக்க விலையா ?
[38]
And has not such a Story from of Old
Down Man’s successive generations roll’d
Of such a clod of saturated Earth
Cast by the Maker into Human mould?
[39] கிண்ணம் நிரப்பு; அது மீள எது தூண்டும்
காலம் எப்படிக் கடக்குது நம் கண்முன்னால்
நாளை பிறந்திலது, நேற்று கடந்துளது
ஏன் கவலை அவற்றால் இன்றினிக்கும் போது
[39]
Ah, fill the Cup: – what boots it to repeat
How Time is slipping underneath our Feet:
Unborn To-morrow, and dead Yesterday,
Why fret about them if To-day be sweet!
-
இலக்கியச்சித்திரம் – இனிய பிள்ளைத்தமிழ் – 38
மீனாட்சி பாலகணேஷ்
மழலைச்சிறுமியர் தாலாட்டுரைக்கும் திருநெல்லை!
சின்னஞ்சிறுமியர் மண்ணால் சிறுவீடுகட்டி, சிற்றிலிழைத்து, விளையாட்டாக, பாவனையாகச் சோறுசமைத்தும், பாவைகளை (பொம்மைகளை) குழந்தைகளாகக் கருதியும் விளையாடுவது வழக்கம். ஆண்பால் பிள்ளைத்தமிழ் நூல்களில் விளக்கப்படும் சிற்றில்பருவத்தில் சிறுவர்கள் வந்து இதனைக் காலால் எற்றி உதைத்து சிறுமியரை அழவைப்பார்கள் எனக் கூறப்படும். விந்தையாக, சிற்றில் இழைக்கும் சிறுமிகளின் இந்த அழகிய விளையாட்டும் பருவமும் பெண்பால் பிள்ளைத்தமிழில் பாடப்படவில்லை!
இருப்பினும் சில பெண்பால் பிள்ளைத்தமிழ் நூல்களில் கூர்ந்து நோக்கினால் வேறு ஏதேனும் பருவத்தில் ஓரிரு பாடல்கள் இக்கருத்தினைக் கோடிகாட்டிப் பாடப்பட்டிருக்கும்.
அவ்வகையில் இன்று நாம் காண்பது அழகிய சொக்கநாதப்பிள்ளை இயற்றியுள்ள திருநெல்வேலிக் காந்திமதியம்மை பிள்ளைத்தமிழிலிருந்து இரு பாடல்கள். வெவ்வேறு பருவங்களிலிருந்து எடுக்கப்பட்ட இப்பாடல்கள் சிற்றிலிழைத்துப் பாவைகளுடன் விளையாடும் சிறுமிகளைப் பற்றி நயம்பட உரைக்கின்றது.
****
திருநெல்வேலி எனும் திருத்தலம்! அவ்வூரின்கண் மரக்கிளைகளில் மலர்ந்து மணம்பரப்பும் மலர்களைக் கொண்டு சிறந்துவிளங்கும் சோலைகள்!
சிறுமிகள் விளையாடும் ஆரவாரம் நம்மை ஈர்க்கிறது! அருகே சென்று அவர்கள் விளையாட்டினை உற்று நோக்கலாமே!
கமலிக்கு ஐந்துபிராயமே நிரம்பியுள்ளது. தனது இடுப்பில் ஒரு பெரிய சங்கினைக் குழந்தைபோல இடுக்கிக்கொண்டு வருகிறாள். “தாமரையக்கா! எனக்குக் கொஞ்சம் குளத்துநீர் எடுத்துத் தாயேன். இந்தப் பிள்ளையைக் குளிக்க வைக்கோணும்,” என மழலை மாறாத கிளிக்குரலில் தாமரையிடம் வேண்டுகிறாள் கமலி! குளிப்பாட்டியாயிற்று! தனது பட்டுப்பாவாடையிலேயே குழந்தையின் உடலைத் துடைத்துவிடுகிறாள் அவள். கையோடு கொண்டுவந்துள்ள சிறிய மூட்டையிலிருந்து சிறு பட்டுத்துண்டுகளை எடுத்து, தனது கற்பனைக்குத் தோன்றியபடி, தனது சங்குக்குழவிக்கு அணிவித்து அலங்காரம்செய்து அழகு பார்க்கிறாள்.

குழந்தை சிணுங்குகிறதாம்! கவான் எனப்படும் தனது தொடைமீது அந்த மகவை இருத்திக்கொண்டு, “யாரடிச்சு நீ அழறே?” என்று தன் தாய் தம்பிப்பாப்பாவிற்குப் பாடுவதைப்போலத் தானும் பாடி மகிழ்கிறாள். பெரிய பெரிய மலர்களிலிருந்து ஒழுகும் தேனை, அப்படியே அந்த மலர்களின் அடிப்பாகத்தைக் குழந்தையின் வாயில் வைத்துப் புகட்டுகிறாள். “பாரடி! கமலியுடைய பிள்ளை உறங்கியே போச்சு,” என கண்ணம்மா வியக்கிறாள். சிறிது நேரம் சென்றதும், குழந்தை உறக்கத்திலிருந்து எழுந்து விட்டதாகப் பாவனைசெய்து, அதனைத் தன் இடையில் (ஒக்கலையில்) வைத்துக்கொண்டு உலவுகிறாள்: “பாப்பா, இங்கபாரு பட்டாம்பூச்சியை, இந்தப்பூ அழகா இருக்குதல்லவா? உனக்குப் பறிச்சுத் தரட்டுமா? அந்தக் கிளியைப் பாரடி கண்ணே!” என்றெல்லாம் ஆசைமொழிகளைக் குழந்தையிடம் பேசியபடி சோலையை வலம் வரும் கமலியைப்போல பல சிறுமிகள். குழந்தைகளுடன் உலவும் தாய்மார்கள் எனப் பல மழலைச் சிறுமிகள். ஆங்காங்கு நின்று தங்கள் குழந்தைகளின் அருமைபெருமைகள், வேடிக்கைவிளையாட்டுகளைப் பகிர்ந்து கொள்கிறர்கள்!இல்லையில்லை! வாழ்க்கையைப் பழகிக் கொள்கின்றனர்.

இதுவே இந்தப் பாவை விளையாடலின் இரகசியம். தமது தாயைப் பார்த்துத் தாமும் இவைகளைச் செய்யக் கற்றுக் கொள்கின்றனர்.பின்பு அக்குழவிகளை தமது மடியில் கிடத்திக்கொண்டு அழகு செய்கின்றனர். காதல்கணவனுடன் ஊடல்கொண்ட மகளிர் வெறுப்பில் அறித்தெறிந்த ஒளிமிகுந்த அணிகலன்கள் அங்கும் இங்கும் சிதறிக் கிடக்கின்றன! அவற்றைத் தேடி எடுத்து, அவற்றின் மணிகளைக் கோத்துத் தமது பாவைக்குழவிக்கு அணிவிக்கிறாள் பூங்குழலி. “அழகா இருக்கில்ல என் பாப்பா?” என்ற கேள்வி வேறு!
பின்பு, “உறங்கு கண்ணே!” எனத் தாலாட்டினையும் இசைக்கிறாள். இவ்வாறு தமது குழவிகளைக் கொஞ்சி விளையாடும் பல மழலைச் சிறுமியர் நிறைந்த ஊர் அன்னை காந்திமதி உறையும் நெல்லையம்பதியாம். அந்த அன்னையை ஒரு குழந்தையாக்கி அவளுக்கும் தாலாட்டு இசைக்கிறார் புலவர் அழகிய சொக்கநாதப்பிள்ளை. மலர்கள் நிறைந்த அழகிய கருங்கூந்தலை உடைய இக்காந்திமதியம்மை நெல்லைக்கே ஒரு அணிபோல ஒளிருகிறாள். அவளையும் ‘தாலோ! தாலேலோ!’ எனக் கண்வளர வேண்டுவது மிகப் பொருத்தமாக இல்லை?
கோட விர்சீர் செழுஞ்சோலைக் குறும்வால்
வளையைக் குழவியெனக்
கொண்டு புனைசிற் றாடைமன்னிக் குளிர்நீ
ராட்டிக் கவானிருத்திப்
பாடல் வரிப்பூ முளரியிதழ்ப் பசுந்தேன்
எடுத்து வாய்புகட்டிப்
பரிந்தொக் கலைவை த்துலவிநனி பாராட்
டுதம் மடிக்கிடத்தி
ஊடன் மடவார் வெறுத்தெறிய வொளிர்பன்
மணிகோத் தணிந்துகொஞ்சி
உறங்கா யுறங்கா யெனத்தாலாட் டுரைத்து
மழலைச் சிறுமியர்மிக்
காடல் புரியுந்திரு நெல்லைக்கணியே
தாலோ தாலேலோ
அலர்ப்பைங் கூந்தற் காந்தைமதி யம்மே
தாலோ தாலேலோ.(நெல்லை காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்- அழகிய சொக்கநாதப்பிள்ளை- தாலப்பருவம்)
அனைத்துச் சிறுமிகளையும் போல அன்னை காந்திமதியும் சிறுமியாகிச் சிற்றிலிழைத்து, சிறு அடுப்பை மூட்டி, சோற்றினைச் சமைத்து மும்முரமாக விளையாடிக் கொண்டிருக்கிறாள். தாய் அவளுக்கு அலங்காரம் செய்ய ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறாள். குழந்தையை ஆசையாக அழைக்கிறாள்:
மும்முரமாக பாவனைச் சமையலில் ஈடுபட்டிருப்பவளின் நெற்றியில் வியர்வை அரும்பியுள்ளதாம். ‘அதனைத் துடைத்துவிடுகிறேன் வா அம்மா!’ என்கிறாள் தாய். ‘மணல்வீடமைத்து, உண்பதற்காக முத்துக்களைக்கொண்டு சோறு சமைத்திருக்கிறாயே கண்ணே! அதைக் கொஞ்சம் எனக்குத் தருவாயோ?’ என ஆசையாகக் கேட்கிறாள்.
‘விளையாட்டினால், உடலிலும், ஆடைகளிலும் புழுதித்தூள் படிந்துள்ளதே பாப்பா! அதைத் துடைத்து விடுகிறேன், வா,’ என்கிறாள். மேலும், ‘வாசனை மிகுந்த நீரில் உன்னை நீராட்டி, உனக்கு அலங்காரம் செய்து, நீண்ட அழகான கண்களில் மையிடுகிறேன் வா அம்மா! உயர்ந்ததும் மதிப்பே அறிய முடியாததுமான பலவிதமான ஒளிவிடும் அணிகலன்களை உனக்கு அணிவிக்கிறேன்,” என்று ஆசைகாட்டுகிறாள்.
‘என் மடியில் இனிதாக அமர்ந்து பாலமுதம் நீ விரும்பியமட்டும் பருகலாம்,’ எனவும் கூறுகிறாள். பெருமை மிகுந்த தமிழில் பாடும் பாடல்கள் பலவற்றையும் கேட்டு உள்ளம் மகிழ்பவள் காந்திமதி அன்னை. திருநெல்லையில் உறையும் அவளை இவ்வாறெல்லாம் வேண்டி வருமாறு அழைக்கிறாள் அன்னை. வாராதிருப்பாளா காந்திமதி அன்னை?
சிலையொத் தவிர்வா ணுதல்வரம்பிற்
செறிவேர் வகற்ற வருகமணற்
சிற்றி லிழைத்தட் டுணுந்தரளச் சிறுசோ
றெமக்குந் தரவருக
நிலையைத் தருநின் னுடன்முழுது
நிறைதூள் துடைக்க வருகவிரை
நீரிற் குளிப்பாட் டிடவருக நெடுங்கட்
கணிமை யிடவருக
விலையெத் திசைக்கும் அடங்காதுமிளிர்
பொற்பணி பூட்டிட வருக
மிகவென் மடிமீ திருந்தமுதம் விழைவிற்
பருக வருகவியன்
மலையத் தமிழ்கேட் டுளமகிழும் வாழ்வே
வருக வருகவே.
வரைமால் வனத்துத் திருநெல்லை வடிவே
வருக வருகவே.(நெல்லை காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்- அழகிய சொக்கநாதப்பிள்ளை- வாரானைப்பருவம்)
பருவங்களாக வரையறுத்துப் பாடப்படாத இரு இனிய சிறுமிப்பருவ விளையாட்டுகளை இப்பிள்ளைத்தமிழில் பாடிச் சொக்கவைத்துள்ளார் சொக்கநாத பிள்ளையவர்கள். இன்னும் வரும் பகுதிகளில் இவை போன்றவற்றைக் கண்டு களிக்கலாம்.
மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
{முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
தமிழ்த்துறைத் தலைவர்.}************
-
அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 80
முனைவர். சுபாஷிணி
அனைத்துலக செய்தித்தாள் அருங்காட்சியகம், ஆகன், ஜெர்மனி
உலகச் செய்திகளை உடனுக்குடன் வாசித்தால் தான் நம்மில் பலருக்கு அன்றாட கடமைகளைச் செய்த மன திருப்தி ஏற்படும். அந்த அளவிற்கு நமது சிந்தனையானது உலக விசயங்களில் மிகுந்த ஈடுபாட்டுடன் இணைந்தே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. இன்றைய சூழலில் உலகச் செய்திகளாகட்டும், உள்ளூர் செய்திகளாகட்டும், எதுவாகினும் செய்தித்தாட்களை வாசிக்கின்றோமோ இல்லையோ இணையத்தின் வழியாகச் செய்தி ஊடகங்கள் பலவற்றிலிருந்து உலக நடப்புகளை அறிந்து கொள்வது போலவே சமூக ஊடகங்களின் வழியாகவும் தகவல் பரிமாற்றம் நிகழ்வதை சாத்தியப்படுத்தியிருக்கின்றோம். இதுதான் இன்றைய தகவல் தொழில்நுட்பம் அளித்திருக்கும் மிகப்பெரிய வாய்ப்பு.
உலக நாடுகள் சிலவற்றில் செய்தித்தாட்களின் சேகரிப்புகள் கொண்ட அருங்காட்சியகங்கள் இருக்கின்றன. சில, தனியார் ஏற்படுத்தியிருக்கும் அருங்காட்சியகங்கள். ஏனைய சில அரசாங்கமே அமைத்த அருங்காட்சியகங்களாக உள்ளன. ஜெர்மனியின் ஆகன் நகரிலும் ஒரு அனைத்துலக செய்தித்தாட்கள் அருங்காட்சியகம் உள்ளது. இது தனியார் ஒருவரின் சேகரிப்பில் உருவான பிரமாண்டமான சேகரிப்புகள் நிறைந்த ஒரு அருங்காட்சியகம்.
ஆகன் நகரம் ஜெர்மனியின் மிகப் பழமையான நகரங்களில் ஒன்று. இதன் முக்கிய வரலாற்றுச் சிறப்பு இது பேரரசர் கார்ல் அவர்கள் வாழ்ந்த நகர் என்பதுதான். பேரரசின் தலைநகராக முன்னர் இருந்ததன் அடையாளமாக இன்றும் இங்குள்ள பெரிய தேவாலயத்தில் மட்டுமல்ல இங்குள்ள பல மூலைகளிலும் பேரரசர் கார்ல் அவர்களை நினைவு கூறும் சின்னங்களைக் காணலாம்.
இந்த அனைத்துலக செய்தித்தாட்கள் அருங்காட்சியகம் ஆகன் பழைய நகரின் மையப்பகுதியிலேயே அமைந்திருக்கின்றது. அதாவது நகரின் மாநகர மையம் அமைந்துள்ள Pontstrasse சாலையிலேயே கட்டிடங்களின் வரிசையிலேயே ஒரு கட்டிடமாக இருக்கின்றது. ஆகன் நகரிலேயே பிறந்தவரான திரு.ஓஸ்கார் ஃபோன் ஃபோர்க்கென்பெக் (1822 – 1898) அவர்களது சேகரிப்புகள் தான் இங்குள்ளவை. உள்ளூர் சேகரிப்புகளோடு அவரது பல்வேறு பயணங்களின் போது அவர் சேகரித்து வந்த செய்தித்தாட்களின் ஏடுகள் இங்கே மிகச் சிறப்பாகப் பாதுகாக்கப்படுகின்றன. உலகின் மிக அதிகமான செய்தித்தாட்களின் சேகரிப்பு உள்ள ஒரு அருங்காட்சியகமாகவும் இது திகழ்கின்றது என்பது ஒரு சிறப்பல்லவா? அதாவது, 17ஆம் நூற்றாண்டு தொடங்கி 21ஆம் நூற்றாண்டு வரையிலான செய்தித்தாட்கள் 200,000க்கும் மேற்பட்டவை இங்கிருக்கின்றன.
இங்கே உள்ளே நாம் நுழையும் போது முதலில் நம்மை வரவேற்பது பவுல் ஜூலியஸ் ரோய்ட்டர் அவர்களது பெரிய புகைப்படமும் அவரைப் பற்றிய சிறிய வாழ்க்கைக் குறிப்புமாகும். ரோய்ட்டர் என்ற பெயரைக் கேட்டாலே உலகம் முழுமைக்கும் செய்தி அனுப்பும் ரோய்ட்டர் சேவை நம் நினைவுக்கு வரலாம். அந்தச் சேவையை உருவாக்கிய நிறுவனத்தை உருவாக்கியவர் தான் திரு. ரோய்ட்டர். இவர் முதலில் 1850ஆம் ஆண்டு ஜெர்மனியின் இந்த ஆகன் நகரில் தனது செய்தி சேகரித்துப் பரிமாறும் ஒரு சோதனை முயற்சியைத் தொடங்கி ரோய்ட்டர் நிறுவனத்தை உருவாக்கினார்.
பின்னர் அடுத்த ஆண்டு, 1851இல் ரோய்ட்டர் ஏஜென்சியை லண்டன் நகரில் விரிவாக்கினார். ஆரம்பத்தில் புத்தக வெளியீட்டாளர்களாகவும் சீர்திருத்தக் கருத்துகளைப் பரவலாக்கும் நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்தி வந்த ரோய்ட்டர் ஏஜென்சி பின்னர் ரோய்ட்டர் டெலிக்ராம் நிறுவனமாக 1851ஆம் ஆண்டிலேயே விரிவடைந்தது. இந்த நிறுவனத்துக்கு முதல் உறுப்பினராக லண்டன் மோர்னிங் அட்வடைசர் பத்திரிக்கை அமைந்தது. பின்னர் படிப்படியாக இந்த நிறுவனத்தின் சேவையை உலகளாவிய நிலையில் பல பத்திரிக்கைகள் பயன்படுத்தத் தொடங்கின. இந்தச் செய்திகளை வாசித்தவாறே நாம் இந்த அருங்காட்சியகத்தின் ஏனைய பகுதிகளுக்குச் செல்லலாம்.
இந்த அருங்காட்சியகத்தில் உள்ள காட்சிப்பொருட்கள் ஐந்து வெவ்வேறு வகைகளில் உருவாக்கப்பட்டுள்ளன.
முதலில் செய்தி சேகரிக்கும் நிறுவனங்களின் செயல்பாடுகள், நிருபர்களின் செயல்பாடுகள் என்பது பற்றி விளக்கும் காட்சிப்பொருட்கள் உள்ளன. இந்தப்பகுதியில் வருகையாளர்கள் ஒரு நிகழ்வு என்பது எவ்வாறு ஒரு செய்தியாக வடிவமைக்கப்படுகின்றது என்ற விசயத்தை அறிந்து கொள்ளலாம்.

அடுத்ததாகச் செய்தி ஊடகங்களின் பண்பு, பலன்கள் ஆகியவற்றோடு அவற்றினால் ஏற்படும் சமுதாயத் தாக்கங்கள் யாவை என்பதை விளக்கும் காட்சிப்பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. இதற்கடுத்தார்போல எழுதுவதும் வாசித்தலும் என்பது பற்றிய வரலாற்றுப் பார்வையில் அமைந்த காட்சிப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதற்கடுத்து, செய்திகளில் உள்ள நம்பகத்தன்மையை கேள்வி எழுப்பும் விசயங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. செய்தி தயாரிப்பில் உண்மையும் பொய்யும் கலந்திருக்கும் என்றும், எவ்வாறு முக்கியச் செய்திகள் திரிக்கப்பட்டு அவை மக்களைச் சென்றடைகின்றன என்ற விசயத்தைத் தக்க ஆதாரங்களோடு காட்சிப்படுத்தியிருக்கின்றனர். மிகச் சுவாரசியமான தகவல்கள் இப்பகுதியில் உள்ளன. இறுதியாக வருவது செய்தி ஊடகங்களின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும் என்பதைக் காட்டும் கண்காட்சிப் பகுதி.இந்தக்காட்சிப்பொருட்கள் மட்டுமன்றி இங்குள்ள செய்தித்தாட்களின் சேகரிப்புகளும் வருகை தருவோர் பார்வையிடக் கூடிய வகையில் உள்ளன.
இந்த அருங்காட்சியகத்தின் உள்ளே நுழையும்போது சிறிய கட்டிடத்திற்குள்ளே நுழைகின்றோமோ என்ற சிந்தனை வந்தாலும் இங்குள்ள எல்லாப் பகுதிகளையும் பார்த்து முடித்து வருவதற்குள் குறைந்தது மூன்று மணி நேரங்களாவது ஆகிவிடும். வரலாற்றுப்பிரியர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் மிகப்பல தகவல்களை வழங்கக்கூடிய ஒரு அனைத்துலக அருங்காட்சியகம் இது. ஜெர்மனிக்கு வருபவர்கள், அதிலும் குறிப்பாக ஆகன் நகருக்கு வருவோர் தவறாமல் இந்த அருங்காட்சியகத்தையும் சென்று பார்த்து வர மறக்க வேண்டாம்.
-
எழிலரசி கிளியோபாத்ரா – 6
எழிலரசி கிளியோபாத்ரா
[பேரங்க நாடகம்]
மூலம்: ஷேக்ஸ்பியர் & பெர்னாட்ஷா
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடாஅங்கம் -2 பாகம் -6
தேன்மொழி நாவால் நெகிழ வைப்பவள்!
மீன்விழிக் கணையால் நெஞ்சைப் பிளப்பவள்!
சூழ்ந்த கவர்ச்சி காந்த மண்டலம்! அவ்வலையில்
வீழ்ந்தவர் மீண்டும் உயிர்தெழ மாட்டார்!
வனப்பினில் மயங்கிக் கனவில் அணைப்போர்
மனதினில் நீங்கா ஓவியம் வரைபவள்!கிளியோபாத்ராவைப் பற்றி …
“அவளது கனிவுக்குரல் மொழிகள் வாத்திய இசைக் கருவியின் பல்வேறு நாண் கம்பிகள் போன்றவை. மாந்தரின் முகப்புகழ்ச்சி மொழிகள் நான்கு தரப்பின; ஆனால் அவளிட மிருந்தவையோ ஆயிரம்!”
புளூடார்க், கிரேக்க வரலாற்றுப் பதிவாளர் [Plutarch (46-120) A.D.]
நேரம், இடம்:
அலெக்ஸாண்டிரியாவில் எகிப்த் மன்னர் அரண்மனை. ·பாரோ மன்னர் வரலாற்று ஓவியங்கள் உயர்ந்த சுவர்களை அலங்கரிக்கின்றன. பகல் வேளை.
நாடகப் பாத்திரங்கள்: பால்ய அரசன் டாலமி, போதினஸ், தியோடோடஸ், அக்கில்லஸ், ஜூலியஸ் சீஸர், ரூபியோ, ரோமானியக் காவலர், எகிப்தின் படையினர், கிளியோபாத்ரா, கம்பள வணிகர்.
காட்சி அமைப்பு:
[காவலன் ஒருவன் ஒரு ரத்தினக் கம்பள வணிகனை அழைத்து வருகிறான். வணிகனைத் தொடர்ந்து, மூச்சுத் திணறி அவனது கையாள் கனமான கம்பளத்தைத் தோளில் தூக்கிக் கொண்டு வருகிறான்.]
வாயிற் காவலன்: [வாளை நீட்டி] நில்! யார் நீ? தோளில் எதைத் தூக்கிக் கொண்டு வருகிறீர்?
கம்பள வணிகன்: நான் கம்பள வணிகன்! சிரியாவிலிருந்து வருகிறேன்! சிரியா மன்னர் விலை மதிப்பில்லா ஒரு கம்பளத்தை ரோமாபுரித் தளபதி சீஸருக்கு அனுப்பி யுள்ளார்! சீஸரிங்கு வந்துள்ளாய் நான் அறிந்தேன்! சிறப்பாக நெய்யப்பட்ட இந்தக் கம்பளத்தை நான் நேராக அவரிடம் சேர்க்க வேண்டியது என் பொறுப்பு.
வாயிற் காவலன்: அப்படியா? சற்று பொறு! நாங்கள் சீஸரிடம் வினாவி வருகிறோம். [உள்ளே ஒரு காவலன் செல்கிறான். சிறிது நாழி கழித்து வெளியே வருகிறான்]
இரண்டாம் காவலன்: ரோபாபுரித் தளபதி கம்பளக் கொடையாளியை அழைத்து வரச் சொல்கிறார். [காவலன் கம்பள வணிகனையும், பணியாளியையும் உள்ளே சீஸர் முன்பாக அழைத்து வருகிறான்]
கம்பளி வணிகன்: மகாமகா மேன்மை தங்கிய ஜெனரல் சீஸர் அவர்களுக்கு எனது பணிவான வணக்கம். எங்கள் சிரியாவின் மன்னர் விலைமிக்க இந்த கம்பளத்தைத் தங்களுக்கு அளித்துள்ளார்! ஏற்றுக் கொள்வீரா? முதன்முதல் தங்க கம்பிகளைப் பயன்படுத்தி நெய்த கம்பளமிது! ரோம சாம்ராஜியம் காணாத கம்பளமிது!
ஜூலியஸ் சீஸர்: [கம்பளத்தை உற்று நோக்கி] அப்படியா? ஏற்று கொள்கிறேன். வெகு அழகான வேலைப்பாட்டைக் காண்கிறேன். இறக்கி வைத்துச் செல்! சீஸர் நன்றி கூறியதாக சிரியா மன்னருக்குச் சொல்! [ரூபியோவைப் பார்த்து] ரூபியோ கம்பளத்தை வாங்கி என்னறையில் வை! ரோமுக்கு மீளும் போது, மறக்காமல் படகில் ஏற்றிவிடு!
கம்பளி வணிகன்: ஜெனரல் அவர்களே! இது ரோமாபுரிக்குப் போகும் கம்பளமில்லை! தங்கள் அலெக்ஸாண்டிரியா அறையை அலங்கரிக்க வேண்டியது! கம்பளத்தின் வெளிப்படைப்பு வேலைப்பாட்டைப் புகழ்ந்தீர்! அதன் உள்ளழகு வெளியழகை மிஞ்சுவது! நான் விரித்துக் காட்டலாமா? பார்த்தால் பூரித்துப் போவீர்!
ஜூலியஸ் சீஸர்: வேண்டாம்! எனக்கு வேலை உள்ளது! சும்மா வைத்து விட்டுப் போ!
கம்பளி வணிகன்: [பணியாள் கம்பளத்தைக் கீழிறக்கி வைக்க வணிகன் கவனமாக, மெதுவாகத் தரையில் அதை விரிக்கிறான். கம்பளத்துக் குள்ளிருந்து ஓரிளம் மங்கை புன்னகையுடன் உடலை முறித்துக் கொண்டு எழுகிறாள்! [அனைவரும் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைகிறார்]
ஜூலியஸ் சீஸர்: [சினத்துடன்] என்ன வேடிக்கையிது? பெண்ணை ஒளித்து வைத்து என்னோடு சிரியா மன்னர் பகடை ஆடுகிறாரா? ஈதென்ன கோமாளித்தனமாக உள்ளது? முதலில் இந்தப் பெண் யாரென்று சொல்ல வேண்டும்! எதற்காக இப்படி ஒளிமறைவில் என்னைக் காண வருகிறாள்? என்னால் இவளுக்கு ஆவதென்ன? அல்லது அவளால் எனக்கு கிடைப்பதென்ன? …யார் நீ? சொல்! கள்ளத்தனமாக கம்பளத்துக்குள்ளே ஏன் ஒளிந்து வந்தாய்? மாயக்காரியா? மந்திரக்காரியா? அல்லது சூனியக்காரியா? யார் நீ?
கிளியோபாத்ரா: [எழுந்து ஒய்யாரமாக நின்று, புன்சிரிப்புடன்] மகாமகா சீஸர் அவர்களே! என்னை யாரென்று தெரியவில்லையா? அரச வம்சத்தில் பிறந்து அரசை யிழந்துவிட்ட அரசியைத் தெரிய வில்லையா?
ஜூலியஸ் சீஸர்: [ஆச்சரியம் பொங்க] யார்? கிளியோபாத்ராவா? நம்ப முடியவில்லையே!
டாலமி: [சினத்துடன்] ஜெனரல்! இவளொரு ஜிப்ஸி! நாடோடி! இவள் கிளியோபாத்ரா இல்லை! நிச்சயமாகக் கிளியோபாத்ரா இத்தனைக் கீழ்த்தரமாகக் கம்பளச் சுருளில் ஒளிந்து வரமாட்டாள்! அவள் நேராக வரும் ஒரு வீர மங்கை! இந்தக் கோமாளி வணிகன் யாரையோ பிடித்து வந்து எகிப்தின் அரசி கிளியோபாத்ரா வென்று ஏமாற்றுகிறான்! [அக்கிலஸைப் பார்த்து] வணிகனைச் சவுக்கால் அடி! அயோக்கியன்! [சீஸரைப் பார்த்து] ஜெனரல்! இந்த கூத்தாடிப் பெண்ணை என்னிடம் ஒப்படைத்து விடுங்கள்! அவளை நான் தண்டிக்கிறேன்! [அக்கிலஸைப் பார்த்து] அக்கிலஸ்! அந்த நாடோடிப் பெண், அவள் கைக்கூலி வணிகன், பணியாள் மூவரையும் கைது செய் உடனே! யாரை ஏமாற்ற இந்த நாடகம்?
கிளியோபாத்ரா: [எழுந்தோடி சீஸரின் பின்புறம் நின்று கொள்கிறாள்] மேன்மை மிகு சீஸர் அவர்களே! நான் நாடோடி யில்லை! நாடகம் போடவு மில்லை! நான் கிளியோபாத்ரா! அதோ! அந்தப் பாலகன் டாலமி! என் தமையன் அவன்! நான் மணம் புரிந்து கொண்டவன்! என்னைக் கொலை செய்ய எகிப்தியப் படைகளை அனுப்பிய என்னருமைக் கணவன்! நான் யாரென்று குருநாதர் தியோடோஸைக் கேளுங்கள்! அவர் உண்மை பேசுபவர்! நான் யாரென்று பாதுகாப்பாளி போதினஸைக் கேளுங்கள்! படைத் தளபதி அக்கிலஸைக் கேளுங்கள்! எப்போதும் டாலமி பொய் பேசியே ஏமாற்றுபவன்!
ஜூலியஸ் சீஸர்: [தியோடோடஸைப் பார்த்து] யாரிந்த மங்கை? சொல்! [போதினஸைப் பார்த்து] யாரிந்தக் குமரி? சொல்! [அக்கிலஸைப் பார்த்து] யாரிந்த வாலிப மங்கை? சொல்!
தியோடோடஸ்: ஜெனரல்! அவர் மகாராணி கிளியோபாத்ரா!
போதினஸ்: ஆம் ஜெனரல்! அவர் எகிப்தின் அரசி கிளியோபாத்ரா!
அக்கிலஸ்: மேன்மை மிகு சீஸர் அவர்களே! அவர் எங்கள் டாலமி மன்னரின் மனைவி கிளியோபாத்ரா!
ஜூலியஸ் சீஸர்: [டாலமியைப் பார்த்து] பாலகனே! உன் கண்ணில் கோளாறா? அல்லது மூளையில் கோளாறா? உன் தமக்கையை நாடோடி என்று ஒதுக்கி விட்டாயே! ஏன் அவளைக் கூத்தாடி என்றுக் கேலி செய்தாய்? தந்தத்தில் செதுக்கிய இந்த அழகுச் சிலையா கூத்தாடி?
டாலமி: [கெஞ்சலுடன்] கண்ணே கிளியோபாத்ரா! நலமா? சந்தனத் தண்டுபோல் தளதள வென்றிருந்த நீ எப்படித் தளர்ந்துபோய் மெலிவா யிருக்கிறாய்? பாலை வனத்தில் ஈச்சம் பழத்தைத் தின்று, நீரைக் குடித்தே வாழ்ந்தாயா? பாவம், உன்னைப் பாலை வனத்துக்கு அனுப்பாமல், அரண்மனைச் சிறையிலே நான் பூட்டி வைத்திருக்கலாம்! அரச குமாரியை அனாதை போல் திரிய விட்டது எனது தவறுதான்!
கிளியோபாத்ரா: [சீஸரின் உடை வாளை உருவி, நேரே டாலமியை அருகி அதட்டலுடன்] அடே! அயோக்கியா! போதும் உன் பாசாங்கு! போதும் உன் பரிவு! என்னைக் கண்டு பாகாய் உருகாதே! உன்னைக் கண்டு என் நெஞ்சம் கொதிக்கிறது! இறங்குடா கீழே ஆசனத்தை விட்டு! இந்த தங்க ஆசனம் என் ஆசனம்! நான் அமர்ந்து எகிப்த் ராணியாய் அரசாண்டது! [டாலமி பயந்து நடுங்கி ஆசனத்தை விட்டு எழுகிறான். கிளியோபாத்ரா ஆசனத்தின் முன் நின்று வாளை ஓங்கி விரட்டுகிறாள்] டாலமி! ஓடுடா! உன் கழுத்தைக் காப்பாற்றிக் கொள்! [டாலமி ஓடிப்போய் சீஸரின் பின்னால் ஒளிந்து கொள்கிறான்] … உயிருக்குப் பயந்து ஓடும் ஓணான் நீ! என்னைச் சாகடிக்க நீ அனுப்பிய அதே பாலை வனத்துக்கு நான் உன்னைத் துரத்துகிறேன்! உலக அனுபவம் உண்டாகும் உனக்கு!
டாலமி: [சீஸர் கையைப் பற்றிக் கொண்டு] தளபதி! என்னைக் காப்பாற்றுங்கள்! நான் பாலகன்! இந்தப் பாதகி என்னைப் பாலை வனத்துக்கு அனுப்புவதைப் பார்த்துக் கொண்டு நிற்காதீர்! ஐயோ! கருந்தேள் என்னைக் கடிக்கும்! கருநாகம் என்னைக் கொட்டிவிடும்! நான் ஆளா விட்டாலும், சாக விரும்பவில்லை! காப்பாற்றுவீர் என்னை!
ஜூலியஸ் சீஸர்: [முகத்தைத் தடவி] டாலமி! நீ பாலகன்! உன்னைப் பாதுகாப்பது எம்பணி! கிளியோபாத்ராவை நீ பாலைக்கு ஏன் துரத்தினாய்? அவள் உன் உடன்பிறந்த தமக்கை! நீங்கள் இருவரும் கணவன் மனைவி வேறு! எகிப்தை ராஜா ராணியாய் நீங்களிருவரும் ஒன்றாக ஆள்வதையே நான் விரும்புகிறேன். அதற்காகதான் நான் அலெக்ஸாண்டிரியாவுக்கு வந்துள்ளேன்!
கிளியோபாத்ரா: [கோபத்துடன் சீஸரை நோக்கி] தளபதி சீஸர் அவர்களே! உங்கள் ஆசை நிறைவேறாது! டாலமி! பாலகன் வடிவத்தில் காணப்படும் அயோக்கியன்! நாங்கள் இருவரும் ஒரே அரண்மனையில் நிம்மதியாகத் தூங்க முடியாது! எகிப்தை ஈரரசர் ஆள முடியும் என்று கனவு காணாதீர்! எகிப்தியர் இரண்டு அரசருக்குப் பணி புரிய இயலாது! ஒருவர் கழுத்தை ஒருவர் தேடும் இந்தக் கண்ணாமூச்சிப் போராட்டத்தில் யாராவது ஒருவர் கண்மூட வேண்டும்! நிச்சயம் அந்தப் பிறவி நானில்லை!
ஜூலியஸ் சீஸர்: [சினத்துடன்] கிளியோபாத்ரா! போதும் நிறுத்து உன் பேச்சை! டாலமியைப் பலிவாங்க நீ புறப்பட்டு விட்டாய்! உங்களுக்குள் பிரிவும், போரும் நேர்வதை எகிப்தியர் யாரும் விரும்பார்! உள்நாட்டுக் கலவரம் உங்களால் நிகழ்வதை ரோமாபுரியும் விரும்பாது! நீங்கள் இருவரும் எப்படிச் சேர்ந்து நாடாள்வீர் என்பதைப் பற்றி வாதிப்போம்! முடிவு செய்வோம்! டாலமி! என்ன சொல்கிறாய் அதற்கு?
டாலமி: இரட்டையர் ஆட்சிக்கு நான் ஒப்புக் கொள்கிறேன்! ஆனால் கிளியோபாத்ரா அதற்குத் தயாரில்லை! நாட்டை இரண்டாக வெட்டினால் நாங்கள் தனித்தனியாக அரசாட்சி நடத்தலாம்! நிம்மதியாக இரவில் தூங்கலாம்! ஒரே அரண்மனையில் தலைக்குமேல் கத்தி தொங்கும் போது நாங்கள் எப்படி உறங்க முடியும்?
கிளியோபாத்ரா: எகிப்தைத் துண்டாட நான் விடமாட்டேன்! எகிப்து ஒரு நாடு! அதை ஆள்பவர் ஒருவரே! அதுவும் கிளியோபாத்ரா ஒருத்திதான்!
ஜூலியஸ் சீஸர்: தனித்தனி மாளிகையில் குடித்தனம் நடத்துங்கள்! நீங்களிருவரும் சேர்ந்தாண்டால், சைப்பிரஸ் தீவை உங்களுக்குச் சன்மானமாக அளிக்கிறேன்!
போதினஸ்: சைப்பிரஸ் தீவா? ஒன்றும் விளையாத பன்றித் தீவு சைப்பிரஸா? எமக்கு வேண்டாம் அது!
கிளியோபாத்ரா: [முகமலர்ச்சியுடன்] நல்ல நன்கொடை சீஸர்! சைப்பிரஸ் தீவில் நூற்றுக் கணக்கானத் திராட்சைத் தோட்டங்கள் உண்டே! ஒயின் உற்பத்தி செய்து எகிப்து ரோமாபுரிக்கு விற்கலாமே!
ஜூலியஸ் சீஸர்: ஒயினை ஏன் விற்க வேண்டும்? ரோமாபுரி ஆண்டுக் கப்பத்துக்கு ஈடாக அனுப்பலாமே!
டாலமி: கள்ள ராணி! கப்பம் என்றதும் களவு போன பொக்கிசம் நினைவுக்கு வருகிறது! எங்கே பொக்கிச நிதி? கப்பம் கட்டும் நிதியைக் களவாடிப் போனாயே! கொடு அதைச் சீஸர் கையில்! எங்கே ஒளித்து வைத்திருக்கிறாய், சொல்?
கிளியோபாத்ரா: டாலமி! அது என் நிதி! தந்தையார் சாகும் போது எனக்கு அளித்தது! அது உன் நிதி என்று யார் சொன்னார்? கணக்கு விபரம் தெரியாத அறிவிலி நீ! வரவு செலவு புரியாத அறிவாளி நீ! என்னைத் துரத்திவிட்டு வரிப்பணத்தை வாங்கத் தவறியவன் நீ! அரசனாகக் காலம் கடத்திய நீதான் சீஸருக்குக் கப்பம் செலுத்த வேண்டும்! நாடு கடத்தப்பட்ட நான் ஏன் தர வேண்டும்?
டாலமி: சீஸர் அவர்களே! உமது கப்பப் பணம் கிளியோபாத்ராவிடம் உள்ளது! அந்தக் கள்ளியிடம் பெற்றுக் கொள்ளுங்கள்! விடாதீர் அந்த வேடக்காரியை! எங்களிடம் பணம் கைவசமில்லை!
கிளியோபாத்ரா: [கனிவுடன் சீஸரைப் பார்த்து] தளபதி! கப்ப நிதி நான் கட்டத் தயார், ஏகப் பெரும் பட்டத்து ராணியாய் நான் மகுடம் சூட்டப் பட்டால்! டாலமி அகற்றப்பட வேண்டும்! நான் தனி ராணியாக ஆசனத்தில் அமர வேண்டும்! சீஸரே! நாமிருவரும் ஒன்று சேர்ந்தால் உலகையே கைப்பற்றலாம்! எனது பெரியப்பா மகா அலெக்ஸாண்டர் கிழக்கே சென்று இந்தியாவைக் கைப்பற்றினார்! எனக்கு அந்தப் பாதை நன்கு தெரியும்! நாமிருவரும் சேர்ந்தால் நமது பராக்கிரமத்தால் சீனாவைக் கூடப் பிடித்து விடலாம்!
*********************
-
இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . ( 230 )
அன்பினியவர்களே!
அன்பான வணக்கங்கள். இதோ அடுத்தொரு வராம், அடுத்தொரு மடல். ஒரு மாதகாலம் இங்கிலாந்திலிருந்து வெளியே இருந்து விட்டுத் திரும்பி வந்ததும் முதல் காதில் விழும் சொல் “ப்ரெக்ஸிட்” என்பதுவே! கடந்த வருடம் ஜூன் மாதம் 23ஆம் திகதி நடைபெற்ற சர்வஜன வாக்கெடுப்பில் இங்கிலாந்து மக்களின் பெரும்பான்மை வாக்களிப்பின் பிரகாரம் இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது என்பது முடிவாகியது அனைவரும் அறிந்ததே!
அவ்வெளியேற்றத்தைச் சுற்றிய சர்ச்சைகள் நாளுக்குநாள் வித்தியாசமான வடிவங்கள் எடுத்து வருகிறது என்பது உண்மையே!
அனைத்துக் கட்சிகளும் ஒரு விடயத்தை ஏற்றுக்கொள்கின்றன. அதாவது கொள்கையளவில் இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது தவிர்க்கப்பட முடியாதது என்பதுவே அது! ஆனால் அவ்வெளியேற்றத்தின் வடிவம் எதுவாக இருக்க வேண்டும் என்பதில் தான் கட்சிகளுக்கிடையிலும், மக்களுக்கிடையிலும் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. இங்கிலாந்து ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதனால் எவ்வகையான பிரதிகூலங்கள் ஏற்பட்டாலும் பரவாயில்லை வெளியேற வேண்டும் என்று தீவிரமான கருத்துடையவர்கள் நிர்ப்பந்திக்கின்றார்கள். வெளியேறத்தான் வேண்டும் ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்துடனான இங்கிலாந்தின் பொருளாதார நடைமுறைகளைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையிலான வியாபார ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொள்வது முக்கியம் என்று மிதவாதிகள் விவாதிக்கிறார்கள்.
பிரித்தானிய அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடனான பேச்சுவார்த்தைகளின் பின் எடுக்கும் முடிவுகள் பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுப் பாராளுமன்ற உறுப்பினர்களின் அங்கீகாரத்தைப் பெறவேண்டும் என்று எதிர்க்கட்சிகளும், சில அரசாங்கப் பாராளுமன்ற உறுப்பினர்களும் வலியுறுத்தினர். அது தவிர இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறப் போகிறோம் என்று உத்தியோகபூர்வமாக அறிவித்தலைப் பாராளுமன்ற அங்கீகாரத்தின் மூலம் சட்டமாக்க வேண்டும் என்று கோரினார்கள். அரசு இதற்கு சம்மதிக்கவில்லை. ஜீனா மில்லர் எனும் வழக்கறிஞராகிய பெண்மணி ஒருவர் அரசுக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் அரசுக்கு எதிரான தீர்ப்பை வழங்கியது. அதைத்தொடர்ந்து அது சட்டமூலமாக்கப்படும் பிரேரணை நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. ஆனால் அதில் சில திருத்தங்கள் அதாவது தற்போது இங்கிலாந்தில் வாழும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பிரஜைகள் இங்கிலாந்தில் தொடர்ந்து இருக்கலாம் எனும் உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என்று பிரபுக்கள் சபை அதை நிராகரித்தது.இங்கிலாந்தில் வாழும் ஜரோப்பிய ஒன்றிய பிரஜைகள் இங்கு வாழலாம் ஆனால் அதற்கான உத்தரவாதத்தை மற்றைய ஜரோப்பிய நாடுகளில் வாழும் பிரித்தானியப் பிரஜைகளுக்கு அவர்கள் அளிக்கும் போதே நாமும் அளிப்போம் என்றார் பிரதமர். பிரபுக்கள் சபை கொடுத்த திருத்தங்களை நாடாளுமன்றம் நிராகரித்ததினால் அது கடந்து திங்கட்கிழமை சட்டமூலமாகியது. இந்தச் சட்டத்தின் மூலம் பிரதம மந்திரி எப்போதும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறப் போகிறோம் எனும் அறிவித்தலை கொடுக்கும் அங்கீகாரத்தைப் பெறுகிறார். இந்த உத்தியோகபூர்வ அறிவித்தல் இம்மாத இறுதியில் ஐரோப்பிய யூனியனுக்கு கொடுக்கப்ப்படும் என்பதுவே அரசியல் அவதானிகளின் கணிப்பாகும்.
இது இவ்வாறிருக்க, இந்தப் பிரச்சனைக்குள் இன்னொரு பிரச்சனையை நுழைத்திருக்கிறார் ஸ்கொட்லாந்து முதலமைச்சர். கடந்த யூன் மாதம் நடந்த சர்வஜன வாக்கெடுப்பில் ஸ்கொட்லாந்து மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் நிலைத்திருக்க வேண்டும் என்றே பெரும்பான்மையாக வாக்களித்திருந்தார்கள். தனது நாட்டு மக்களின் விருப்பத்திற்கு எதிராக எப்படி எம்மை ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக்கலாம்? இது ஜனநாயகத்திற்குப் புறம்பான செயலென்றும் இத்தகைய சூழலில் ஸ்கொட்லாந்து தொடர்ந்தும் ஐக்கிய இராச்சியத்தின் அங்கத்தினராக இருக்க முடியாது என்றும், ஸ்கொட்லாந்து தனியாகப் பிரிந்து போவதற்கான இரண்டாவது சர்வஜன வாக்கெடுப்பை ஒரு வருடத்தில் நடத்த வேண்டும் என்றும் ஸ்கொட்லாந்து பாராளுமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் விலகிய பின்னரே அத்தகைய வாக்கெடுப்பு நடத்தப்படும் சாத்தியக்கூறு உள்ளதாகப் பிரதமர் கூறியுள்ளார். இப்போது இப்பிரச்சனை பலவிதமான கோணத்தில் விரிந்துள்ளது. இதன் முடிவுகள் இங்கிலாந்தைப் பொறுத்தவரை எத்தகைய முடிவுகளை நல்கப் போகிறது என்பது பலரது மனதிலும் ஒரு பெரிய பரபரப்பான வினாவாகவே இருக்கின்றது.
மீண்டும் அடுத்த மடலில்…
அன்புடன்,
சக்தி சக்திதாசன் -
அன்றும், இன்றும்
ரா.பார்த்தசாரதி
பெற்றோர்களே பிள்ளைகளின் திருமணம் தீர்மானிக்கப்பட்டதே
மகன் , மகளின் வாழ்க்கையும் சிறப்பாக அமைந்ததே
நிலைமையறிந்து, குலமறிந்து, திருமணம் நிச்சயக்கப்பட்டதே
இன்றோ ஆணும், பெண்ணும்,பேசி திருமணம் முடிவடைந்ததே !
திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிரா,
பழமை மாறாமல் காத்தவர்களின் தவறா,
அக்கால திருமணம் பந்தத்தினால் ஏற்பட்டதே
இக்கால திருமணம் பணத்தினால் தீர்மானிக்கப்பட்டதே !
அன்பு, பாசம், தியாகம் இவற்றிற்கு அர்த்தம்முண்டு
இன்று இவற்றிற்கு எல்லாம் ஓர் அளவுண்டு
சேர்ந்து வாழ்ந்தால் கோடி நன்மை என சொல்வதுண்டு
இன்றோ பிரிந்து வாழ நினைப்பதுண்டு !
வாழ்வின் காலச்சக்கரம் அன்று உறுதியாயிருந்ததே
வாழ்க்கை வாழ்வதற்கே என சொல்லப்பட்டதே
வாழ்க்கை அன்று சொர்க்கமாய் அமைந்ததே
இன்றோ வாழ்க்கை நரகமாய் மாறியதே !
பழமைப்பேசி இளந்தலைமுறையினரை திருத்தமுடியுமா
புத்திமதி கூறினாலும், அவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியுமா
நானே ராஜா என்று நினைப்பவர்களை திருத்தமுடியுமா
அழிவு பாதையில் செல்பவர்களை தடுக்கமுடியுமா !
உலகத்தோடு ஒட்டி வாழ்வதே வாழ்வு
காலத்திற்கு ஏற்ப வாழ்வதே இதற்கு தீர்வு
விட்டுக்கொடுத்து வாழ்வதில்தான் என்றும் நன்மை
இதனை மறந்து வாழ்ந்தால் வாழ்வே தனிமை !
-
இசைக்கவியின் மார்ச் மாத நிகழ்வுகள்!
தத்வாலோகா – குரு கேஸ் கம்பெனி
இணைந்து வழங்கும்
கேள்விக்கென்ன பதில்?
தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி
வழங்குபவர் : இசைக்கவி ரமணன்
(கடோபநிடதம் குறித்த விளக்கம் தொடர்கிறது)
நாள்/தேதி : சனிக்கிழமை, மார்ச் 18, 2017
மாலை : 6.00 – 7.30
தத்வாலோகா அரங்கம்
(78, எல்டாம்ஸ் சாலை, தேனாம்பேட்டை, சென்னை 18)
அனைவரும் வருக! -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
நாமடைதல் சிற்றின்பம் நாமாதல் பேரின்பம்
நாமாதல் நாமடைய நாடுவீர் -நாமா
வளிசொல்லி வேணு விட்டலனை வாழ்த்தி
களிகொள் அடியார்தம் கூட்டு….’’பாற்குடம் மீதேறி புல்லாங் குழலூதும்
பாற்கடல் கண்ணன் பதங்களை, -யார்கடன்
பட்டார்போல் மேயும் பசுவின் விடாமுயற்சி:
கெட்டாலும் மேன்மக்கள் கன்று’’….கிரேசி மோகன்….!”பாலுக்(கு) அழும்பாலன் பாவை களின்லோலன்
ஞாலத் துயர்தீர்க்கும் நாயகன் -மாலுக்குள்
எண்ணமாய்த் தோன்றி இடைசாதி வந்தவன்
கண்ணனை நெஞ்சே கருது”….கிரேசி மோகன்….! -
கபாலீஸ்வரர் கோயில் உற்சவம்….
“மயிலை கபாலி-கற்பகாம்பாள் கோயில் உற்சவம்’’….ஏப்ரல் 2 கொடியேற்றம்….!
“பிட்டுக்கு மண்சுமந்தாய் ,பங்களித்து பெண்சுமந்தாய்
ஜிட்டுக்குள் கங்கை ஜலம்சுமந்தாய் -பிட்ஷைக்கு
ஓடும் சுமந்தாய் ,உனையறியா நானய்யப்
பாடைச் சுமக்கின்றேன் பார்”….அறுபத்து மூவர்….’’வேண்டுதல் வெண்பா’’….!
————————————————————————————–‘’ஆசு கவியாகி ,ஆலயம் ஆலயமாய்,
ஈசன், இறைவியை பூசித்து -ஓசை
நயத்துடன் பண்களைப் பாட அருள்வீர்
வியத்தகு ஒன்பத்தேழ் வர்’’….இரவு ஜாமத்தில் வெள்விடையேறி கபாலீஸ்வரர் வலம் வருகிறார்….
“வெள்ளை விடையேறி வாமத்தில் கற்பக
வல்லி மயிலாட நள்ளிரவில் -வள்ளல்
கபாலியைக் காணக்கண் கோடிகள் வேண்டும்
உபாயம் (பாபநாச) சிவனார் உரைப்பு”….ரிஷப வாகன அம்பாளை வேண்டி….
———————————————
“புள்ளி மயிலாக புன்னை வனநாதர்
பள்ளியறை வாழ்பரம பத்தினியே -வெள்ளி
விடையேறும் ஈசர் இடபாக ஈஷி
மடையோன்என் நாவில் மலர்”….பிக்ஷாடனர் கோலம்….
——————————
“மெய்யடி யார்கள் மிகுந்த மயிலையில்
ஐயம் எடுப்பதேன் அய்யனே -ஐயம்
விடுத்து கரத்தில் எடுத்திடு மாலை
இடத்து உமைதோள் இட”….“மாடேந்த வந்தாய் மகிழ்ந்தோம் வரவேற்று
ஓடேந்து கோலம் உனக்கெதற்கு -தோடேந்தும்
பாகத்தாள், அன்னமா பூர்ணி, அருஞ்சுவை
பாகத்தாள் வாய்த்துமேன் பாடு”….“ஓங்கி உலகளந்து உத்தமர் மூன்றுவரம்
வாங்கிய பிச்சை வடிவையும் -தாங்கிய
கப்பரை யோடரன் கோலத்தைக் கண்டதும்
ஒப்பறிந்தேன் மாலீசன் ஒன்று”….“அட்சதை போடயிங்(கு) ஆயிரம் பேரிருக்க
பிட்ஷை எடுப்பதேன் பித்தரே -சச்சைய் !(விளிச்சொல்)
இரந்தது போதும் இறைகபா லீஸா
மறந்தனையோ நாளை மணம்”….மாப்பிள்ளை அழைப்பு…
“எந்தையும் தாயும் இணைந்து குலாவிட,
முந்தைய ஆண்டுபோல் ,மாங்கல்யம் -தந்துனாவை
மீண்டும் மயிலைவாழ் மக்கள் நடத்திட
வேண்டுகிறோம் மாப்பிள்ளை வாள்”….
திருமயிலை திருக்கல்யாண அழைப்பிதழ்….
——————————————————
“செல்வன் கபாலியை செல்வியுமை கற்பகம்
கல்யாணம் செய்தவன் கைத்தலம்-செல்லும்
தினம்நாளை சேர்வீர் திருமயிலாப் பூர்க்கு
இனம்ஜாதி இல்லை இதற்கு”….“கைத்தலம் பற்றி கபாலியும் கற்பகமும்
நெய்த்தலம் சுற்றி நடந்தனர் -மெய்த்தவ
வேதியர் ,மாலயன் ,வானோர் குழுமிட
ஆதியின் பாதி அளிப்பு”….“அன்னைக்கும் தந்தைக்கும் ,அர்த்தமதன் சொல்லுக்கும்
புன்னைக்கும் பூங்கொடி பெண்ணுக்கும் -இன்னைக்கு
கையோடு கைகோர்க்கும் கல்யாண உற்ச்சவம்
மொய்யெழுதும் நேரமிது மெய்க்கு”….“குங்குமமும் வெண்ணீறும் கூடிக் கலந்தின்று
சங்கமம் ஆகுது சன்னிதியில் -தங்களை
வாயாரக் கேட்கிறேன் வந்திதைக் காணவினை
நோயாறிப் போகும் நொடித்து”….“பங்குனி உத்திரத்தில் சங்க ரனுமையாள்
பங்குநீ என்றுதன் பாகத்தை -மங்களமாய்
தந்த மணநாளாம் இன்று மயிலையில்
வந்து வடுக்களை வாழ்த்து”….பலன்….
————–
“கைத்தலம் பற்றிய கற்பகத்தின் காதலால்
மெய்தலப் பாதி மகிழ்ந்தளித்த -வைத்திய
பாகனின் பாதம் பணிய சனிபகவான்
நோகான்நம் பாகம் நளன்”….கிரேசி மோகன்….! -
படவாகினி
-இன்னம்பூரான்
15 03 2017உங்களுக்கு ‘சிவமயம்’ வில்வநாதக் குருக்களை தெரிந்திருக்க நியாயமில்லை. அந்தக் காலத்தில், துக்ளக்கின் ‘எங்கே பிராமணன்?’ என்ற சர்ச்சைக்குரிய நூல் வெளியாகி விடவில்லை என்றாலும், குருக்கள் மாமாவை பார்த்தால் போதும்; எல்லாம் விளங்கிவிடும். பஞ்சகச்சம் பரமானந்தம் என்று, பட்டை வீபூதியை பரம ஒளஷதமாக அணிந்து, தங்கப்பூண் போட்ட ருத்ராக்ஷமாலை மார்பில் துலங்க, திண்ணையில் உட்கார்ந்து விட்டாரென்றால், ஊர் முழுதும் ‘டுங்க்ருங்சரணே’ பீதி பரவும். அவரோ சுகஜீவி.
பத்தமடை, சேர்மாதேவி, வீரவநல்லூர் மாதிரியான போன்ற தலங்களில், ஆலயங்கள், வழிபாடுகள், குருக்கள் வாழ்நெறி ஆகியவை நிறைந்திருக்கும். வானமாமலை, ஶ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி ஆகிய வைணவத் தலங்களுக்கு சென்றால், மாட்டு வண்டிக்காரன் கூட நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடிக்கொண்டே வண்டி ஓட்டுவான். மாடும் தலையாட்டிக்கொண்டே செல்லும். தார்க்கோல் போடவேண்டிய அவசியமில்லை. அருகே உள்ள நாசரேத் என்ற ஊரில் ஏசு கிருஸ்து பிரார்த்தனையும், ஆங்காங்கே அமைந்துள்ள மசூதிகளின் அதிகாலை உரத்த குரல் அரபித் தொழுகையும் தடைபடாது. 1647இல் கட்டப்பட்ட பொட்டல் புதூர் தர்காவில் இந்துக்களின் சாயலை ஒத்த வழிபாடு. கந்தூரி திருவிழாவில் எல்லா மதத்தினரும் கலந்து கொள்வார்கள். இனபேதம், மதபேதம், பேதபேதம் எல்லாம் உண்டு; ஆனால், இல்லை. அப்படி ஒருவிதமான இணக்கமான வாழ்க்கைப்படகு. தற்காலம்போல் வெறித்தனம் கிடையாது. நாத்திகம் பேசிக்கொண்டே நேர்த்திக்கடன் செய்வது கிடையாது. வரட்டு சம்பிரதாயம் கிடையாது. எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ போகிறேன். இது என்ன திருநெல்வேலி ஜில்லா சொக்கிப்பீடியாவா என்ன? இது நிற்க.
குருக்களோட அப்பாவோட கீர்த்திதான் வம்சத்துக்கே கவசமாக இருந்தது. சிவாசாரியார் ‘மங்களம் மாமா’ ( அவர் ரொம்பப் பெரியவர்; பெயர் தெரியாது.) அற்புதமா, மனப்பூர்வமாக அர்ச்சனை செய்வார். சாயரக்ஷை அவருடைய பிரவசனத்துக்கு, வண்டிக்கட்டிண்டு கல்லிடைக்குறிச்சி பெரிய பண்ணை வருவார். ஆனால், ஏகபுத்திரன் ஆன ‘வில்லுவை’ சம்ரக்ஷணை செய்ய அவருக்கு நேரம் இல்லை. ஆகவே ‘வில்லு’ எனப்படும் வில்வநாதக் குருக்கள் ஒரு நிரக்ஷரகுக்ஷி. ஆனால் அதிகம் படித்த மேதாவி என்று மிதப்பு காலாகாலத்தில் கல்யாணம் பண்ணி வைங்கோ என்று ஊருக்கு உபதேசி வைத்தியோட அட்வைஸ். சங்கீத மேளகர்த்தா ஸ்ரீ சேர்மாதேவி சுப்ரமண்ய சாஸ்திரிகள் வம்சத்தில் வந்த குந்தளாம்பிகை தான் ‘வில்லுக்கு’ வந்து வாய்த்தாள். வாய்த்துடுக்கு. மாமி போனபிறகு தனித்து விடப்பட்ட முதியவர் மங்களம் மாமாவை உதாசீனம் பண்ணி, அவரை ‘உண்டு இல்லை’ என்று செய்துவிட்டாள். அவரும், ஏற்கனவே சாந்தஸ்வரூபி, விட்டேற்றியாக, கோவிலே கதி என்று இருந்துவிட்டார்.
சுகஜீவி ‘வில்லும்’ ‘பளார்! பளார்’ குந்தளாவும் நடத்திய இல்லறத்தில் புழு, பூச்சி ஒன்றும் வரவில்லையே என்று இருவரும் அங்கலாய்த்தாலும், காலாகாலத்தில் நான்கு பிள்ளைகள் பிறந்தன. காலம் நிற்கிறதா என்ன? வயதாக ஆக, ‘வில்லுக்கு’ பிடிவாதம் ஏறியது. குந்தளாம்பிகையின் கொம்மாளம் எல்லை மீறிப்போயிற்று. வேலை வெட்டி இல்லாமல் இருந்த ‘ஜபர்தஸ்து’ மணிக்கு (தலைமகன்) அத்தை பெண் மீனாக்ஷியை கல்யாணம் செய்து வைத்தது, ‘வில்லுக்கு’ அவ்வளவாக சம்மதம் இல்லை. ஆனால் குடும்பநிலை அப்படி. இரண்டு பக்கமும் நல்ல பணம். அது பிரியக்கூடாது என்பது குந்தளாவின் அரசியல் சாஸனம். ஆச்சுப்போச்சு கல்யாணம் என்றாலும் பத்து வருஷம் ஆனபிறகும் குஞ்சும் கிடையாது; குளுவானும் கிடையாது; ஹோப்பும் கிடையாது. பழி வாங்கிறதற்கு அகப்பட்டுக்கொண்டாள், இரண்டாவது மாட்டுப்பெண், சுந்தரி. நல்ல இடம். இரண்டாவது பிள்ளை மாதவன் தான் வீட்டுக்குத் தூண். நல்ல உத்யோகம். கைநிறைய சம்பளம். கொடுக்கிற மனசு.
சுந்தரியும் நல்ல குடும்பத்திலிருந்து வந்தவள்தான். அப்பா சுந்தரராமன், வீரவநல்லூரில் நல்ல பெயர் வாங்கின கவர்ன்மெண்ட் டாக்டர். ஆந்திராவுக்கு மாற்றி விடவே, வேலையை உதறிவிட்டு, அங்கேயே ப்ராக்டீஸ். செல்வாக்கு. பங்கமில்லா வருமானம். ஏழைபங்காளன் என்பதால் சொத்து. சொதந்திரம் என்று சொல்லிக்கொள்ளும்படியாக இல்லாவிட்டாலும், சீரான வாழ்க்கை. பெரிய பையன் சங்கரன் ஒரு மாதிரி. கண்ட இடங்களில் பணத்தைக்கட்டி, படிச்சேன் என்று பேர் பண்ணி ஐஏஎஸ் எழுதினான். இண்டெர்வ்யூவில் பிச்சுண்டுடுத்து. அவாள்ளாம் இனம் காண்றதிலெ கெட்டி. இவனுடைய கோழைத்தனத்தைக் கண்டு கொண்டார்கள். பாசாகவில்லை. நாடு தப்பியது. எல்லார் மீதும் இவனுக்கு கோபம். நாள்தோறும் அப்பாவோட சண்டை. பணம் கறப்பான். பொறுப்பு நில். இதையெல்லாம் பார்த்த அடுத்தவன் ஆம்படையாளைக் கூட்டிக்கொண்டு அயல்தேசம் போய்விட்டான். நூல் அறுந்தது.
இந்தக் கூட்டுக்குடும்பத்து சிலந்தி வலையில் சிக்கிக்கொண்டது, மாதவனும் சுந்தரியும்தான். இத்தனைக்கும் வரதக்ஷிணை பேரம் நடத்திய குந்தளாவுக்கு, தன் ஒரே பெண் சுந்தரியின் நலன் கருதி, டாக்டர் சுந்தரராமன் வளைந்து கொடுத்தார். வில் மோட்டுவளையை பார்த்துக்கொண்டிருந்தபோது, குந்தளா கையில் பத்தாயிரம் ரூபாய் சொளையா அழுத்தினார். ஐந்து கிலோ வெள்ளி, வைரத்தோடு, கணிசமா ஆறு பவுனுக்கு ஆபரணங்கள், காஸ்ட்லி பட்டுப்புடவைகள் இத்யாதி. தடபுடலா கல்யாணம். ஆனால், சுந்தரி வீட்டுக்குச் சேர்த்தி இல்லை. எல்லாரிடம், கூசாமல், இவளுடைய அப்பா ஒன்றுமே தரவில்லை என்று அங்கலாய்ப்பாள், குந்தளா.
குடித்தனம் எல்லாம் தடித்தனம்தான். வந்த சீர் எது என்ன என்று மாதவனுக்கே தெரியாதபடி, எல்லா நகையும் பூட்டி வைத்துக்கொண்டு, சுந்தரியை மஞ்சக்கயிறுடன் தான் வளைய விட்டாள். அந்தக் காலத்து வீடா? புருஷன் பொண்டாட்டி பேசிக்கொள்ளக்கூட வாய்ப்பு கிடையாது. பணங்காய்ச்சி மரம் மாதவன் செலவில்தான் குடித்தனம், சின்னவர்கள் படிப்பு எல்லாம். முறைப்பொண்ணை கல்யாணம் செய்துகொண்ட மணிக்கு நோ வாரிசு, கொடுக்க ஒன்றும் இல்லை என்றாலும். படிப்பும் இல்லை; வேலையும் இல்லை. அவனொரு விருதா.
ஒருநாள் சுந்தரிக்கு கொஞ்சம் பூசினமாதிரி இருந்தது. கழுகுக்கண்ணா! குந்தளா தொளைத்து எடுத்து விட்டாள். அழுதுகொண்டே, சுந்தரி தன் அபிலாஷையைச் சொன்னாள். தொலைந்தது. பெரிய மாட்டுப்பெண் இப்படி இருக்கும்போது, உனக்கு இது ஒரு கேடா என்றாள். சிலபேருடைய சாபம் பலிக்கும். கலியுகம் அல்லவா? கருச்சிதைவு ஆகிவிட்டது. குந்தளா பாயசம் வச்சு சாப்பிட்டாளாம். என்னை வந்து யார் கேட்டார்கள்? கேட்டால், சொல்லியிருப்பேன், “ குந்தளா மாமி. நீங்க தாடகை அவதாரமோ, சூர்ப்பனகை அவதாரமோ, பூதகி அவதாரமோ! யார் கண்டா? பெரிய மாட்டுப்பெண்ணுக்கு பதினாறு பிறந்தபின், அடுத்தவனுக்குக் கல்யாணம் செய்திருக்கலாமே? உங்கள் அழிச்சாட்டியம் இந்த அருள்மிகு வில்வநாதேஸ்வரனுக்கே பொறுக்காது.’ என்று.
கதை நீண்டுண்டு போறது. மறுபக்கமும் சொல்லவேண்டும். பிறந்த வீட்டில் சுந்தரிக்குச் சலுகை குறைந்துவருகிறது. எல்லா பணம் உனக்குத்தான் செலவாச்சு என்று சங்கரன் அவளை உதறி விட்டுட்டான். ‘வில்’லுக்கு டயாபிடீஸ். எல்லாச் செலவும் மாதவன் தலையில். ஏதோ நல்ல காலம். மாதவனும், சுந்தரியும் உயிருக்கு உயிராக ஒருவரை ஒருவர் நேசித்தார்கள். ஆனாலும், மாதவனுக்கு டெஸ்ட் செய்துகொள்ள இஷ்டமில்லை. அம்மாக்காரி விவாகரத்துவரை கொண்டு போய்விடுவாள். வில் தலையாட்டும் என்ற பயம். எனக்கு அது சரியாகப் படவில்லை. என்னை மாதவன் ஆலோசனை கேட்கவில்லையே. திடீரென்று ஒருநாள் போய்விட்டார். இப்போது சுந்தரிக்குத் துணை பெருமாள்தான். ஏதோ புத்திசாலித்தனமோ கொஞ்சம் வைத்து விட்டு போய்விட்டார், மஹானுபாவன். அதை பிடுங்க ஆயிரம் பேர். எல்லாம் சொந்தக்காரர்கள் தான்.
நேற்று சுந்தரி என்னிடம் கேட்டாள். எச்சக்கையால் காக்காய் ஓட்டாதே. உள்ளதை காபந்து செய்துகொள். என்றேன்.
என்னமோ போங்கோ சார்! கூட்டுக்குடும்பத்தில் உழைத்து சம்பாதிக்கிற பையன் உழவு மாடு. அவனுடைய பார்யாள் கறவை மாடு. அவாளோட இளமை காணாமல் போனது. அவர்களுக்கு வயது காலத்திலே, நிர்க்கதி. என்ன வேண்டிக்கிடக்கு, இந்த கூட்டுக்குடும்பம், நல்ல பையனை கூட்டுகிற விளக்குமாறாக வைத்துக்கொண்டு!
எனக்குத் தெரியும், ‘படவாகினி’ என்றால் என்ன என்று கேட்பீர்கள். அது ஒரு வட்டார மொழி. பொருள்: குந்தளா குணாதிசயமுள்ள பெண்மணிகள்.
#####
சித்திரத்துக்கு நன்றி:
http://brivbridis.lv/wp-content/uploads/2014/12/k12.jpg -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
’’உள்ளத்தில் நல்லவுள்ளம் உள்ளதைக் காட்டிடும்,
கள்ளமில் லாக்கலர் கண்ணாடி -பல்குனா(அருச்சுனா)
வந்ததை ஏற்றதன்மேல் வில்லம்பு வீசடா
பந்தங்கள் ,சொந்தங்கள் பொய்’’….கிரேசி மோகன்….!



















