வங்கிகளின் அறிவிப்பும், மத்திய வங்கியின் அமைதியும், நிதி அமைச்சரின் மௌனமும்

2

பவள சங்கரி

சமீபத்தில் ஸ்டேட் வங்கி ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மாதத்திற்கு 3 முறை மட்டும் பணம் எடுக்கலாம் அல்லது கட்டலாம் என்றும் அதற்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் செலுத்தவேண்டும் என்றும் அறிவித்துள்ளனர். இதற்கு முன்னதாகவே ஐசிஐசிஐ வங்கியும் , ஹெடிஎஃப்சி வங்கியும் இத்திட்டத்தை அறிவித்துவிட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது. மாதத்திற்கு 3 முறை மட்டும் பணப்பரிவர்த்தனைகள் செய்வதாக இருந்தால் வங்கியின் தேவையே இல்லாமல், அஞ்சலகத்திலேயே இந்தப் பரிமாற்றங்களைச் செய்துகொள்ளலாமே. இதன் பயனாக தேவி வங்கி போன்ற தனியார் அமைப்புகளை ஊக்குவிக்கும் நிலையும் உருவாகலாம். இதுமட்டுமன்றி சிறு சேமிப்பு கணக்குகளுக்கு ₹5000, ₹3000 என்றும் நடப்பு கணக்குகளுக்கு, குறைந்தபட்ச வைப்புத் தொகையாக இருக்கவேண்டிய,₹10,000, ₹25,000, 1 இலட்சம் என்பதும் குறையும் பட்சத்தில் அந்தத் தொகைக்குத் தகுந்தாற்போல், அந்தந்த வங்கிகள் கட்டணங்களை நிர்ணயித்து வாடிக்கையாளர்களின் கணக்கிலிருந்து அந்தத் தொகையை எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக இந்தியாவில் 130 கோடி மக்கள் தொகை என்று வைத்துக்கொண்டால், இதில் ஒரு குடும்பத்திற்கு சராசரியாக 4/5 நபர்கள் என்ற கணக்கில் மொத்தமாக 26 கோடி குடும்பங்கள் உள்ளன. இந்த 26 கோடி குடும்பங்களில் ஒரு குடும்பத்திற்கு 3 சிறு சேமிப்பு கணக்கு இருப்பதாக வைத்துக்கொள்வோம். அப்படியென்றால் 78 கோடி சிறு சேமிப்பு வங்கிக் கணக்குகள் இருக்கும். இதில் ஒரு வங்கிக் கணக்கிற்கு நிரந்தரத் தொகையாக ₹ 3000 என்று வைத்துக்கொண்டால், அதன்படி மொத்த நிரந்தரத் தொகையாக 2,34,000 கோடி உரூபாய்கள் இருக்கும். நடப்புக் கணக்கை எடுத்துக்கொண்டால், 130 கோடி மக்கள் தொகையில் வியாபாரத்திற்காக வங்கிக் கணக்குகள் வைத்திருப்போர் சராசரியாக 10 கோடி என்று வைத்துக்கொள்ளலாம். ஒருவர் கணக்கில் சராசரியாக ₹ 20,000 உள்ளதாக வைத்துக்கொண்டால் இதன் மொத்தத் தொகை 2,00000 கோடி உரூபாய் ஆகிறது. ஆக மொத்தம் 4,34,000 கோடி உரூபாய்கள் வங்கியில் நிரந்தரமாக வைக்கப்படுகின்றன. மத்திய வங்கியால் புழக்கத்திற்கு விடப்பட்டுள்ள மொத்தத் தொகையின் மதிப்பு 12,00000 கோடி உரூபாய். இதில் மூன்றில் ஒரு பங்கு தொகைக்குச் சற்று அதிகமானத் தொகையே நிரந்தர வைப்புத் தொகையாக வைக்க வேண்டுமென்றால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி எப்படி சாத்தியமாகும் என்பதே மக்களின் ஐயமாக உள்ளது. மேலும் இந்தத் தொகைக்கு எந்த வங்கிகளும் வட்டி அளிப்பதில்லை. ஆனால் அதே சமயம் இந்த வங்கிகள் ஒரு வியாபாரிக்கு ஆயிரம் உரூபாய் கடன் கொடுத்தால்கூட அதற்குரிய வட்டியை வசூலித்து விடுகின்றனர். இந்த 4,34,000 கோடி உரூபாயை தவிர்த்து வங்கிகளில் தினசரி பணப்பரிமாற்றங்கள் இல்லாமல் கணக்கில் இருக்கும் தொகைகள் 2,00000 கோடி இருக்கும். ஆக, புழக்கத்தில் விடப்பட்டதில் சரி பாதி தொகைகள் வங்கிகளிலேயே முடங்கி விடுகின்றன.

ஆக மொத்தம் இதனால் வட்டி வருவாயாக சுமார் 4,000 கோடி உரூபாய்களும், கட்டணங்கள் மூலமாக பல ஆயிரம் கோடி உரூபாய்களும் வங்கிகளுக்கு இலாபமாக கிடைக்கின்றன என்பதைத் தவிர இதனால் பொது மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. காரணமேயில்லாமல் சிறு சேமிப்புக் கணக்கில் ₹11.50, நடப்புக்கணக்கில் ₹15.50, வங்கிகளால் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. அதாவது சராசரியாக சேமிப்புக் கணக்கில் ₹800 கோடியும், நடப்புக்கணக்கில் ₹ 200 கோடியும், ஆக மொத்தம் 1000 கோடி உரூபாய் வங்கிகள் எடுத்துக்கொள்கின்றன என்பதே நிதர்சனம்.

பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டிய நிதியமைச்சகமும், மத்திய வங்கியும் இது குறித்து எந்தக் கருத்தையும் வெளியிடாமல் அமைதி காப்பது ஏன்? இதில் இருக்கக்கூடிய பிரச்சனைகளை நிதியமைச்சகமும், மத்திய வங்கியும் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவே நினைக்கத்தோன்றுகிறது. உதாரணமாக ஒரு வியாபாரி வசூலுக்காகச் செல்கிறார். பணம் கொடுப்பவர் பணமாகக் கொடுத்தால் வங்கியில் கட்ட முடியாது. காசோலை கொடுத்து விடுகிறார். அதை வாங்கி வங்கியில் நாம் டெபாசிட் செய்தால் அது நமது கணக்கில் மூன்றாவது நாள்தான் வரவு வைக்கப்படும். 3வது நாள் அந்த காசோலை திரும்பி வந்துவிட்டால் அந்தப் பணத்தை எப்படி வசூல் செய்வது. அந்த ஊரை விட்டு அடுத்த ஊருக்கு வசூலுக்குச் செல்லும் நேரத்தில் இந்த காசோலை திரும்பிவிடுகிறது என்றால் அந்த ஊரில் உள்ள வங்கி திரும்பி வந்த காசோலையை நமது வங்கிக் கணக்கு உள்ள இடத்திற்கு (ஹோம் பிராஞ்ச்) அனுப்பிவிடும். ஆக 10 நாட்களுக்குப் பிறகுதான் காசோலையின் கதி என்னவென்று நமக்குத் தெரியவரும். திரும்ப சம்பந்தப்பட்ட வியாபாரியிடம் தொகையைக் கேட்டால் வங்கி நடைமுறையைக் கூறி எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று கையை விரித்துவிடுவார்.

இப்படி பிரச்சனைகளை உருவாக்கும் வங்கிகளால் நேர்மையாக வியாபாரம் செய்யக்கூடிய வியாபாரிகளுக்கு சிரமம் மட்டுமே மிஞ்சுகிறது.

** மத்திய காசோலை பரிசீலனை செய்வதற்குப் (centralised clearing system) பதிலாக அந்தந்த ஊர்களிலேயே (local clearing system) காசோலைகளைப் பரிசீலனை செய்து அன்றைய தினம் வங்கி முடியும் நேரமான 4 மணிக்குள் வரவு வைத்துவிடலாம். இதனால் வியாபாரிகளின் பலவிதமான தொல்லைகளுக்கு தீர்வு ஏற்படலாம்.

** வங்கிகளிலிருந்து பணம் எடுப்பதற்கு கட்டுப்பாடு வைக்கலாம். ஆனால் பணத்தைச் செலுத்துவதற்கு ஊக்கம் கொடுக்கவேண்டியது அவசியம்.

மக்கள் மத்திய அரசின் மீதும் பொருளாதாரக் கொள்கைகள் மீதும் அதீத நம்பிக்கை வைத்து வாக்களித்து உ.பியில் 3/2 பங்கு வெற்றியைத் தந்துள்ளனர். மத்திய அரசின் இந்த வெற்றி பங்குச் சந்தைகளில் பிரதிபலித்துள்ளது. என்.எஸ்.சி, பி.எஸ்.சி ஆகியவற்றில் சென்செக்ஸ், நிஃப்டி, உச்சக்கட்ட நிலையை அடைந்துள்ளன. உரூபாயின் மதிப்பும் உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை குறைய ஆரம்பித்துள்ளது. பெட்ரோலியப் பொருட்களின் விலையும் குறைய ஆரம்பித்துள்ளன. மக்களின் ஆதரவு கிடைத்துள்ள இந்த நேரத்தில் நல்ல திட்டங்கள் கூட சரியாக நடைமுறைப்படுத்தப்படாவிட்டால் மிகப்பெரியத் தோல்வியைச் சந்திக்க நேரிடும் என்பதையும் அரசு கவனத்தில் கொள்ளவேண்டும்.

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on "வங்கிகளின் அறிவிப்பும், மத்திய வங்கியின் அமைதியும், நிதி அமைச்சரின் மௌனமும்"

  1. வங்கியில் கொள்ளை அடிப்பதை பார்த்திருக்கிறோம். வங்கியே கொள்ளையடிப்பதை இப்போதுதான் பார்க்கிறோம். இந்த வங்கிகள் எடுத்த நடவடிக்கையால் இந்தியா முழுவதும் உள்ள SBI வங்கிகளில் உள்ள கணக்குகளுக்கு குறைந்த கட்டாய இருப்பாக இருக்கும் தொகை மொத்தம் தொண்ணூற்று ஐந்தாயிரம் லட்சம் கோடி ரூபாய் வங்கிகளில் தேங்கும். இதை அந்த மோடி என்ன செய்வான்? மல்லையா போன்ற பணக்கார பொறுக்கிகளுக்கு அல்லது கே.டி. களுக்கு கடனாக கொடுத்துவிட்டு பிறகு அதில் ஒரு பகுதியை தான் லஞ்சமாக பெற்றுக்கொண்டு திரும்ப வரா கடன் என்ற தலைப்பின் கீழ் அந்த கடனை தள்ளுபடி செய்துவிடுவான். மக்களாகிய நாம் விரலை வாயில் வைத்து சப்பிகொண்டு போகவேண்டியதுதான். இதில் மத்திய வங்கியும், நிதி அமைச்சரும், மோடியும் மெளனமாக இருக்கிறார்கள் என்றால் இவர்கள் கூடி முடிவுசெய்துதான் வங்கிகளை இயக்கி கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் மெளனமாக இருக்கிறார்கள். இதற்கு தீர்வு தமிழக மக்கள்தான் தேடவேண்டும். பொதுமக்களும் மாணவ செல்வங்களும் அனைத்து SBI வங்கி வாசல்களிலும் ஒன்றுகூடி போராட வேண்டும். தீர்வு கிடைக்கும்வரை அதாவது இந்த அறிவிப்பை வாபஸ் பெரும் வரை தொடர்ந்து போராடவேண்டும். போராட தயங்கவே கூடாது. மக்களே வாருங்கள். ஓன்று திரளுங்கள். ஒன்றுபடுவோம் போராடுவோம்.

  2. நீங்கள் சொல்வது புரியவில்லை. என்ன செய்யவேண்டும் என்பதை தெளிவாக சொல்லவும். தப்பாக நினைக்கவேண்டாம். என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. மறுமொழி என்றால் என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.