மீனாட்சி பாலகணேஷ்

ab
திலகாவின் தாய் சைலாவின் நீண்ட தலைமுடியை குஞ்சலம் வைத்து வாரிப் பின்னி முல்லை, கனகாம்பரம் வைத்துத் தைத்து அலங்கரித்தாள். பட்டுப்பாயில் உட்கார்த்தி, பாட்டுப்பாடி, ஆரத்தி எடுத்து திருஷ்டி கழித்தாள். வெட்கம், பயம், கூச்சம், கொஞ்சம் கோபம் எல்லாமாக வாய் திறவாது, உதடுகள் துடிக்க, அவற்றை அழுந்தக் கடித்துக் கொண்டு, மையிட்ட பெரிய கண்கள் அலைபாய, அவற்றைக் கஷ்டப்பட்டுத் தரை நோக்கித் தாழ்த்திக் கொண்டு, கைவிரல்கள் புதிதாக அணிந்து கொண்ட கண்ணாடி வளையல்களை அடுக்குவதும் பிரிப்பதுமாகவோ, அல்லது புது தாவணித் தலைப்பை முறுக்குவதிலுமோ ஈடுபட்டுத் தவிக்கும் மகளின் நிலையை ஒரு ஓரமாக நின்று பார்த்து, தன் சின்னஞ்சிறு மகள் பெரிய மனுஷியாகி விட்ட பூரிப்பும், ஓடியாடும் மான்குட்டியை காலைக் கட்டி உட்கார்த்தி விட்டதற்கான பரிதவிப்புமாக இருந்தார் வெங்கடேசன்.

“ஸார், உங்களுக்குத் தந்தி வந்திருக்குது,” என்றபடி உள்ளே சங்கடத்துடன் எட்டிப் பார்த்து அறிவித்தான் ஆடலரசு. பெண்கள் சம்பந்தப்பட்ட இந்த சமாச்சாரங்கள் அவனுக்குப் புரியவுமில்லை, பிடிக்கவுமில்லை.

வெங்கடேசன் அவசரமாகக் கையெழுத்திட்டுத் தந்தியை வாங்கிப் படித்தார். “ஓ, இது தானா?” என்று நிம்மதிப் பெருமூச்சுடன் உள்ளே வந்து எல்லாருக்கும் கேட்கும்படி உரக்கச் சொன்னார், “அம்மா, ஜானகி அக்கா, அத்திம்பேர் ரெண்டு பேரும் பிள்ளை சீனுவோட அடுத்த வாரம் வருகிறார்களாம். ஒரு பத்து நாள் இங்கே இருப்பார்களாம்.”
இது சைலஜாவின் காதிலும் விழுந்தது. இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது. இந்த ஜானகி அவளுக்கு ஒரே அருமை அத்தை. அக்காள் ஜானகியும் தம்பி வெங்கடேசனும் சகோதரபாசம் மிக்கவர்களாக இருந்தனர். “உன் பெண்தான் என் மருமகள் வெங்கு,”என வாயாரக் கூறிக் கொள்வாள் ஜானகி. அவள் ஒரே பிள்ளை சீனு மெடிக்கல்காலேஜில் டாக்டருக்குப் படித்துக்கொண்டிருக்கிறான். ‘வெட வெட’வென்று உயரமாக, மீசையும் கண்ணாடியுமாக இருக்கும் அவனை ஒரு பொருட்டாகவே கருதியதில்லை சைலஜா இத்தனைநாள் வரை!

இப்போது மலர்ந்த உடலுடன் சேர்ந்து மலரும் மனதுமட்டும் அவசரமாக முரண்டிக் கொண்டு, அந்த ‘அவரு’க்கு ஒரு உருவம் தேடி உலவும் போது, அத்தையின் பேச்சுக்கள் காதில் ரீங்காரமிட்டன.

“அந்தி மயங்குதடி, ஆசை பெருகுதடி, கந்தன் வரக் காணேனே,” என்று தான் சிவகாமியாகவே மாறி (பார்த்திபன் கனவு திரைப் படத்தில் வந்த கமலாவைப் போல்) ஆடவேண்டும் என உள்ளம் துடித்தது. முகம் சிவந்து தலை பின்னும் தரை நோக்கிக் கவிழ்ந்தது.

“நல்ல முகூர்த்தம், அத்தைக்காரி பிள்ளையோட வராள். பிராப்தம் இருந்தா அவனுக்குத் தான் பண்ணிக்கட்டுமே எங்க சைலுவை,” என்று பாட்டி மகிழ்ச்சியோடு நீட்டி முழக்கி, திலகாவின் அம்மாவிடம் உரக்கக் கூறிக் கொண்டிருந்தாள்.
____________________%_____________________

4

‘ஆசை முகம் மறந்து போச்சே- இதை
ஆரிடம் சொல்வேனடி தோழி?
நேச மறக்கவில்லை நெஞ்சம்- எனில்
நினைவு முக மறக்கலாமோ?’
*************

வசதியாகக் காலை நீட்டியபடி இருக்கையில் சாய்ந்து கொண்டிருந்தாள் ஷீலா. ‘பியூட்டி பார்லர்’ உரிமையாளரான தாராவே அவளுடைய தலையில் இளஞ்சூடான எண்ணையைத் தேய்த்து மஸாஜ் செய்து கொண்டிருந்தாள். சுகானுபவமான அந்தப் பொழுதில் தன் உடலிலிருந்து அயர்வை எல்லாம் அவள் உருவியெடுத்து வெளியே எறிவது போல உணர்ந்தாள் ஷீலா.

“மாகஸின்ஸ் வேணுமா?” என்றாள் தாரா.

“நோ, தாங்க்ஸ்,” கைப்பையிலிருந்து எப்போதும் இந்த மாதிரிப் பொழுதுகளில் படிப்பதற்கென்றே வைத்திருந்த ஸிட்னி ஷெல்டனின் லேடஸ்ட் நாவலை எடுத்து, விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து படிக்க முற்பட்டாள் ஷீலா.

மனம் புத்தகத்தில் லயிக்கவில்லை. இத்தனை நேரமும் வேலையில் முனைப்பாக இருந்ததால், பின்னுக்கு ஒதுக்கித் தள்ளப்பட்ட கசப்பான நினைவுகள், முந்தைய இரவின் அவலங்கள் மெல்ல, இதயச் சிறையின் கதவை உந்தித் தள்ளிக் கொண்டு வந்து கண்முன் சுழல முற்பட்டன.

ஏதோ ஒரு போக்கில் அவற்றை சிரமப்பட்டு நினைவிலிருந்து ஒதுக்கித் தள்ள முயற்சிக்காமல் மெல்ல அசை போட்டு ஆராய ஆரம்பித்தாள்.

நேற்றிரவு நெருங்கிய நண்பர்கள் சிலரை ‘டின்னருக்கு’ அழைத்திருந்தாள். ராஜா எஸ்டேட்ஸ் உரிமையாளர் ராஜாராம், அவர் மனைவி, இண்டஸ்ட்ரியலிஸ்ட் ரஞ்சித்குமார், அவருடைய இளம் மனைவி ஷோபா- இவர்கள் எல்லாரும் தான்.

அருணுக்கு ஏற்கெனவே போதை ஏறி இருந்தது. வலது கையில் ‘பிரஷ்’ஷைப் பிடித்தால் இடது கரத்தில் குறைந்த பட்சமாக ஒரு ‘பீர்’ கிளாஸாவது இருக்கும். அப்போது தான் சித்திரம் வரைய ‘மூட்’ வரும் என்பது அவனுடைய (விதண்டா) வாதம்.

போதாதற்கு ‘பாரிஸ்’ ஓவியக் கண்காட்சிக்கு ஆறு சித்திரங்களைத் தர ஒத்துக் கொண்டிருந்தான். மூன்றாவதை வரைந்து கொண்டிருந்தான்.

மழையில் நனைந்தபடி, சிறு நீர்த் தேக்கங்களில் கால் பதித்து விளையாடும் நிர்வாணமான ஒரு சிறு குழந்தை. அதன் முகத்தில் அந்த எல்லையற்ற மகிழ்ச்சியையும், இளம் பிஞ்சு உள்ளத்தின் கவலையற்ற அடிவாரத்திலிருந்து பொங்கி எழும் வியப்பையும், நாக்கை நீட்டி மழைத்துளிகளைப் பிடிக்க முயலும் குறும்பையும் தூரிகை மூலம் வெளிக்கொணர அருண் ஒருவனால் தான் முடியும் என்பது ஷீலாவின் கருத்து.

இதனால் தானே தனக்குத் தானே விதித்துக் கொண்ட பொய்யான வேஷம் கலைந்த ஒரு போதில் அருண் சர்மாவின் மீது அன்பு கொண்டு, ஈர்க்கப்பட்டு, தன்னை விட பத்து வயது சிறியவனான அவனுடன் ஷீலா சில ஆண்டுகளாகச் சேர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறாள்!

எத்தனை நாட்கள் தனிமையான முன்னிரவு வேளையில் விஸ்கியை ருசித்த வண்ணம் அருண் தீட்டும் சித்திரங்களை ரசித்தபடி அமர்ந்து உருகி இருக்கிறாள். தன்னை மூடிக் கொண்டிருக்கும் போலித்திரை அவனுடைய சித்திரங்களைத் தான் ரசிக்கும் போது விலகி விடுவதை உணர்ந்து திகைத்தும் இருக்கிறாள். தன் மனக்கதவை பலவந்தமாகத் திறக்கும் அவனுடைய கலையையும் அவ்வாறு செய்ய இயலும் விதத்தில் அந்தக் கலையைத் தனக்கு அடிமைப் படுத்தி வைத்துக் கொண்டு இருந்ததாலேயே அவனையும் எவ்வளவு ஆழமாகத் தான் நேசிக்கிறோம் என்று உணர்ந்து, அந்த உணர்வே ‘இது எத்தனை நாள் நீடிக்கும்’ என்ற பயமாக மாறி இதயத்தைக் கவ்வி அழுத்த ‘அருண் போன்ற ஒரு கலைஞன் தன் எல்லைகளைத் தேடி விரைவில் பயணப்பட்டு விடுவான். அவனைத் தன் பணத்தாலோ, நாற்பது சொச்சம் வயதிலும் இருபத்தெட்டு வயது போலப் பொலியும் தன் இளமையாலோ, பதவியாலோ கட்டிப் போட்டு வைக்க முடியாது’ என அறிந்த இயலாமையும், அதனாலேயே பொங்கி எழுகின்ற ‘உள்ளபோதே ஆசை தீர அள்ளிக்கொள்’, என்கின்ற வேட்கையுடன் தழுவி, அன்னை போல அணைத்து, பிள்ளை போல விளையாடி, காதலி போல நேசம் காட்டி மகிழ்ந்திருக்கிறாள்.

ஆனால் அவனுடைய கலைக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருந்த அவலட்சணமான வேறொரு முகம் நேற்று மாலை தானே வெளிப்பட்டது. ‘நான் என்ன, பதினாறு வயதுப் பெண்ணைப் போல, என் காதல் மயக்கத்தில் இத்தனை நாட்கள் இவனைப் புரிந்து கொள்ள மறந்து விட்டேனா? சீச்சீ- இது மயக்கமல்ல- கண்களை விரியத் திறந்து கொண்டே இறங்கி விட்ட சாக்கடை- என் தனிமைக்குத் துணை தேடி, அந்தத் துணை மூலமாக என் உள்ளத்துக்கு விருந்தளித்ததில், பின் விளைவுகளை யோசியாமல் கண்மூடித்தனமான உறவில் கட்டுண்டு, உலகையே மறந்து பைத்தியமாக இருந்து விட்டேனா,’ என யோசித்தாள் ஷீலா. தலைக்குள் வண்டொன்று ரீங்காரம் இட்டபடி குடைவது போலத் தோன்றியது.

அவள் உணராதது, உணர்ந்தாலும் ஒப்புக் கொள்ளாதது என்னவென்றால். அருணின் அந்த ‘மழையில் நனையும் குழந்தை’ ஓவியம் அவளை மிகவும் பாதித்து இதயத்தின் நிலவறைக் கதவை ஓங்கி ஓங்கித் தட்டியதால் ஏற்பட்ட ரணத்தின் வலி அது என்று.

நாலு வயதில் தான் ‘ஜிம்’முடன் விட்டுவிட்டு வந்த குழந்தை கீதாவின் ஞாபகத்தைத் திரும்பக் கிளறியது அந்தச் சித்திரம். ஜிம் ஆண்டு தோறும் அனுப்பும் புகைப்படங்களைப் பார்த்து ஒரு சில நொடிகள் நெகிழ முற்படும் உள்ளத்தைத் தாழிட்டு அடைப்பாளே, அவ்வாறு செய்வது இந்தச் சித்திரம் பற்றிய விஷயத்தில் இயலாமல் போனது. தன் உணர்வுகளை வேண்டுமென்றே கிளறி விட்டு வேடிக்கை பார்க்கும் சித்திரத்தை வரைந்த அருணின் மீது சொல்லவியலாத கோபமா? தாபமா? ஏதோவொன்று பொங்கி எரிமலையாகக் குமுறக் காத்திருந்தது.

விருந்தினர்கள் எல்லாம் அந்தக் குழந்தையின் சித்திரத்தைச் சூழ்ந்து கொண்டு ரசித்தார்கள். ஷோபாவும் நவீனமான இளம் பெண்களுக்கே உரிய ஆர்வமான ரசனையுடன் புகழ்மாலைகளைத் தாராளமாக அள்ளி வீசிக் கொண்டிருந்தாள்.

“எப்படி நீங்கள் கண்முன் தத்ரூபமாக இந்தக் குழந்தையைக் கொண்டு வந்திருக்கிறீர்கள்!,” என வியந்தாள்.

கிளாசில் மிச்சம் இருந்த பியரைக் கடைசி வாயாகச் சப்தமிட்டுச் சுவைத்தவன், ” தட் இஸ் ஆர்ட். இந்த அருணின் ரத்த நாளங்களில் கலையுணர்வு கலந்து ஓடுகின்றது பேபி,” என்று தலையைச் சாய்த்தபடி கண்ணடித்தான்.

“கலையா? பியர் தான் கலந்து ஓடுகின்றது இப்போது,” என முனகிக் கொண்ட ஷீலாவுக்குக் கோபம் சுர்ரென்று தலைக்கேறியது. “அருண், என்ன இது வீண் கர்வம்? பி ஹம்பிள்,” என மேல் பூச்சாக ஒரு செல்லப் புன்னகையை வீசியபடி கண்டித்தாள்.

‘ஷீலா என் மீது கொண்ட அன்பினால் என் கலையுணர்வைத் தூண்டியெழச் செய்து வளர வைத்தாள். இந்த ஓவியம் உங்கள் உள்ளங்களை மகிழ்விலும் வியப்பிலும் ஆழ்த்தினால், இது ஷீலாவின் அன்புக்கு நான் தரும் காணிக்கை,’ என அருண் கூறியிருந்தால் ஷீலாவுக்குத்திருப்தியாக இருந்திருக்கும். உள்ளம் பெருமிதத்தில் விம்மி இருக்கும்.

தன்னுடைய பிஸினஸ் தொடர்புகளைப் பயன்படுத்திக் கொண்டு படிப்படியாக முன்னேறி, இன்று பாரிஸ் வரை போய் ஓவியக் கண்காட்சியில் பங்கெடுத்துக் கொள்வதற்கும் தன்னையே சார்ந்து நிற்கும் இந்தப் பஞ்சைப் பரதேசிக் கலைஞனுக்கு இருக்கும் திமிரைப் பார்,’ என்ற எரிச்சலில் தான் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் கண்டித்தாள் ஷீலா.

அருணுக்கு போதை தலைக்கேறியிருந்தது. “ஹேய், என்ன உளறுகிறாய்? யாரிடம் பேசுகிறோம் என்று நினைவிருக்கட்டும். நீ ‘ஹென்பெக்’ பண்ண நான் உன் கணவனல்ல. ஐ ஆம் எ ஜீனியஸ். என் உறவு உனக்குக் கிடைத்தது நீ செய்த அதிர்ஷ்டம்…..,” எனக் குழறியபடி கத்தினான்.

என்றைக்குப் பாரிஸிலிருந்து ஓவியக் கண்காட்சிக்கு அழைப்பு வந்ததோ, அன்றிலிருந்தே அருணின் மனதில் தற்பெருமை பொங்கிக் கொண்டிருந்தது. ஷீலாவின் பெருமுயற்சியால் தான் இது சாத்தியம் ஆயிற்று என்பது அருணுக்கும் தெரியும். மதுவின் போதை தான் எல்லாவற்றையும் மறைத்து விட்டதே.

(தொடரும்)

தாரகை இணைய இதழ்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *