மீனாட்சி பாலகணேஷ்

மழலைச்சிறுமியர் தாலாட்டுரைக்கும் திருநெல்லை!

ame

சின்னஞ்சிறுமியர் மண்ணால் சிறுவீடுகட்டி, சிற்றிலிழைத்து, விளையாட்டாக, பாவனையாகச் சோறுசமைத்தும், பாவைகளை (பொம்மைகளை) குழந்தைகளாகக் கருதியும் விளையாடுவது வழக்கம். ஆண்பால் பிள்ளைத்தமிழ் நூல்களில் விளக்கப்படும் சிற்றில்பருவத்தில் சிறுவர்கள் வந்து இதனைக் காலால் எற்றி உதைத்து சிறுமியரை அழவைப்பார்கள் எனக் கூறப்படும். விந்தையாக, சிற்றில் இழைக்கும் சிறுமிகளின் இந்த அழகிய விளையாட்டும் பருவமும் பெண்பால் பிள்ளைத்தமிழில் பாடப்படவில்லை!

இருப்பினும் சில பெண்பால் பிள்ளைத்தமிழ் நூல்களில் கூர்ந்து நோக்கினால் வேறு ஏதேனும் பருவத்தில் ஓரிரு பாடல்கள் இக்கருத்தினைக் கோடிகாட்டிப் பாடப்பட்டிருக்கும்.

அவ்வகையில் இன்று நாம் காண்பது அழகிய சொக்கநாதப்பிள்ளை இயற்றியுள்ள திருநெல்வேலிக் காந்திமதியம்மை பிள்ளைத்தமிழிலிருந்து இரு பாடல்கள். வெவ்வேறு பருவங்களிலிருந்து எடுக்கப்பட்ட இப்பாடல்கள் சிற்றிலிழைத்துப் பாவைகளுடன் விளையாடும் சிறுமிகளைப் பற்றி நயம்பட உரைக்கின்றது.

****

திருநெல்வேலி எனும் திருத்தலம்! அவ்வூரின்கண் மரக்கிளைகளில் மலர்ந்து மணம்பரப்பும் மலர்களைக் கொண்டு சிறந்துவிளங்கும் சோலைகள்!

சிறுமிகள் விளையாடும் ஆரவாரம் நம்மை ஈர்க்கிறது! அருகே சென்று அவர்கள் விளையாட்டினை உற்று நோக்கலாமே!

கமலிக்கு ஐந்துபிராயமே நிரம்பியுள்ளது. தனது இடுப்பில் ஒரு பெரிய சங்கினைக் குழந்தைபோல இடுக்கிக்கொண்டு வருகிறாள். “தாமரையக்கா! எனக்குக் கொஞ்சம் குளத்துநீர் எடுத்துத் தாயேன். இந்தப் பிள்ளையைக் குளிக்க வைக்கோணும்,” என மழலை மாறாத கிளிக்குரலில் தாமரையிடம் வேண்டுகிறாள் கமலி! குளிப்பாட்டியாயிற்று! தனது பட்டுப்பாவாடையிலேயே குழந்தையின் உடலைத் துடைத்துவிடுகிறாள் அவள். கையோடு கொண்டுவந்துள்ள சிறிய மூட்டையிலிருந்து சிறு பட்டுத்துண்டுகளை எடுத்து, தனது கற்பனைக்குத் தோன்றியபடி, தனது சங்குக்குழவிக்கு அணிவித்து அலங்காரம்செய்து அழகு பார்க்கிறாள்.

ame2
குழந்தை சிணுங்குகிறதாம்! கவான் எனப்படும் தனது தொடைமீது அந்த மகவை இருத்திக்கொண்டு, “யாரடிச்சு நீ அழறே?” என்று தன் தாய் தம்பிப்பாப்பாவிற்குப் பாடுவதைப்போலத் தானும் பாடி மகிழ்கிறாள். பெரிய பெரிய மலர்களிலிருந்து ஒழுகும் தேனை, அப்படியே அந்த மலர்களின் அடிப்பாகத்தைக் குழந்தையின் வாயில் வைத்துப் புகட்டுகிறாள். “பாரடி! கமலியுடைய பிள்ளை உறங்கியே போச்சு,” என கண்ணம்மா வியக்கிறாள். சிறிது நேரம் சென்றதும், குழந்தை உறக்கத்திலிருந்து எழுந்து விட்டதாகப் பாவனைசெய்து, அதனைத் தன் இடையில் (ஒக்கலையில்) வைத்துக்கொண்டு உலவுகிறாள்: “பாப்பா, இங்கபாரு பட்டாம்பூச்சியை, இந்தப்பூ அழகா இருக்குதல்லவா? உனக்குப் பறிச்சுத் தரட்டுமா? அந்தக் கிளியைப் பாரடி கண்ணே!” என்றெல்லாம் ஆசைமொழிகளைக் குழந்தையிடம் பேசியபடி சோலையை வலம் வரும் கமலியைப்போல பல சிறுமிகள். குழந்தைகளுடன் உலவும் தாய்மார்கள் எனப் பல மழலைச் சிறுமிகள். ஆங்காங்கு நின்று தங்கள் குழந்தைகளின் அருமைபெருமைகள், வேடிக்கைவிளையாட்டுகளைப் பகிர்ந்து கொள்கிறர்கள்!

இல்லையில்லை! வாழ்க்கையைப் பழகிக் கொள்கின்றனர்.

ame1
இதுவே இந்தப் பாவை விளையாடலின் இரகசியம். தமது தாயைப் பார்த்துத் தாமும் இவைகளைச் செய்யக் கற்றுக் கொள்கின்றனர்.

பின்பு அக்குழவிகளை தமது மடியில் கிடத்திக்கொண்டு அழகு செய்கின்றனர். காதல்கணவனுடன் ஊடல்கொண்ட மகளிர் வெறுப்பில் அறித்தெறிந்த ஒளிமிகுந்த அணிகலன்கள் அங்கும் இங்கும் சிதறிக் கிடக்கின்றன! அவற்றைத் தேடி எடுத்து, அவற்றின் மணிகளைக் கோத்துத் தமது பாவைக்குழவிக்கு அணிவிக்கிறாள் பூங்குழலி. “அழகா இருக்கில்ல என் பாப்பா?” என்ற கேள்வி வேறு!

பின்பு, “உறங்கு கண்ணே!” எனத் தாலாட்டினையும் இசைக்கிறாள். இவ்வாறு தமது குழவிகளைக் கொஞ்சி விளையாடும் பல மழலைச் சிறுமியர் நிறைந்த ஊர் அன்னை காந்திமதி உறையும் நெல்லையம்பதியாம். அந்த அன்னையை ஒரு குழந்தையாக்கி அவளுக்கும் தாலாட்டு இசைக்கிறார் புலவர் அழகிய சொக்கநாதப்பிள்ளை. மலர்கள் நிறைந்த அழகிய கருங்கூந்தலை உடைய இக்காந்திமதியம்மை நெல்லைக்கே ஒரு அணிபோல ஒளிருகிறாள். அவளையும் ‘தாலோ! தாலேலோ!’ எனக் கண்வளர வேண்டுவது மிகப் பொருத்தமாக இல்லை?

கோட விர்சீர் செழுஞ்சோலைக் குறும்வால்
வளையைக் குழவியெனக்
கொண்டு புனைசிற் றாடைமன்னிக் குளிர்நீ
ராட்டிக் கவானிருத்திப்
பாடல் வரிப்பூ முளரியிதழ்ப் பசுந்தேன்
எடுத்து வாய்புகட்டிப்
பரிந்தொக் கலைவை த்துலவிநனி பாராட்
டுதம் மடிக்கிடத்தி
ஊடன் மடவார் வெறுத்தெறிய வொளிர்பன்
மணிகோத் தணிந்துகொஞ்சி
உறங்கா யுறங்கா யெனத்தாலாட் டுரைத்து
மழலைச் சிறுமியர்மிக்
காடல் புரியுந்திரு நெல்லைக்கணியே
தாலோ தாலேலோ
அலர்ப்பைங் கூந்தற் காந்தைமதி யம்மே
தாலோ தாலேலோ.

(நெல்லை காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்- அழகிய சொக்கநாதப்பிள்ளை- தாலப்பருவம்)

அனைத்துச் சிறுமிகளையும் போல அன்னை காந்திமதியும் சிறுமியாகிச் சிற்றிலிழைத்து, சிறு அடுப்பை மூட்டி, சோற்றினைச் சமைத்து மும்முரமாக விளையாடிக் கொண்டிருக்கிறாள். தாய் அவளுக்கு அலங்காரம் செய்ய ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறாள். குழந்தையை ஆசையாக அழைக்கிறாள்:

மும்முரமாக பாவனைச் சமையலில் ஈடுபட்டிருப்பவளின் நெற்றியில் வியர்வை அரும்பியுள்ளதாம். ‘அதனைத் துடைத்துவிடுகிறேன் வா அம்மா!’ என்கிறாள் தாய். ‘மணல்வீடமைத்து, உண்பதற்காக முத்துக்களைக்கொண்டு சோறு சமைத்திருக்கிறாயே கண்ணே! அதைக் கொஞ்சம் எனக்குத் தருவாயோ?’ என ஆசையாகக் கேட்கிறாள்.

‘விளையாட்டினால், உடலிலும், ஆடைகளிலும் புழுதித்தூள் படிந்துள்ளதே பாப்பா! அதைத் துடைத்து விடுகிறேன், வா,’ என்கிறாள். மேலும், ‘வாசனை மிகுந்த நீரில் உன்னை நீராட்டி, உனக்கு அலங்காரம் செய்து, நீண்ட அழகான கண்களில் மையிடுகிறேன் வா அம்மா! உயர்ந்ததும் மதிப்பே அறிய முடியாததுமான பலவிதமான ஒளிவிடும் அணிகலன்களை உனக்கு அணிவிக்கிறேன்,” என்று ஆசைகாட்டுகிறாள்.

‘என் மடியில் இனிதாக அமர்ந்து பாலமுதம் நீ விரும்பியமட்டும் பருகலாம்,’ எனவும் கூறுகிறாள். பெருமை மிகுந்த தமிழில் பாடும் பாடல்கள் பலவற்றையும் கேட்டு உள்ளம் மகிழ்பவள் காந்திமதி அன்னை. திருநெல்லையில் உறையும் அவளை இவ்வாறெல்லாம் வேண்டி வருமாறு அழைக்கிறாள் அன்னை. வாராதிருப்பாளா காந்திமதி அன்னை?

சிலையொத் தவிர்வா ணுதல்வரம்பிற்
செறிவேர் வகற்ற வருகமணற்
சிற்றி லிழைத்தட் டுணுந்தரளச் சிறுசோ
றெமக்குந் தரவருக
நிலையைத் தருநின் னுடன்முழுது
நிறைதூள் துடைக்க வருகவிரை
நீரிற் குளிப்பாட் டிடவருக நெடுங்கட்
கணிமை யிடவருக
விலையெத் திசைக்கும் அடங்காதுமிளிர்
பொற்பணி பூட்டிட வருக
மிகவென் மடிமீ திருந்தமுதம் விழைவிற்
பருக வருகவியன்
மலையத் தமிழ்கேட் டுளமகிழும் வாழ்வே
வருக வருகவே.
வரைமால் வனத்துத் திருநெல்லை வடிவே
வருக வருகவே.

(நெல்லை காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்- அழகிய சொக்கநாதப்பிள்ளை- வாரானைப்பருவம்)

பருவங்களாக வரையறுத்துப் பாடப்படாத இரு இனிய சிறுமிப்பருவ விளையாட்டுகளை இப்பிள்ளைத்தமிழில் பாடிச் சொக்கவைத்துள்ளார் சொக்கநாத பிள்ளையவர்கள். இன்னும் வரும் பகுதிகளில் இவை போன்றவற்றைக் கண்டு களிக்கலாம்.

மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
{முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
தமிழ்த்துறைத் தலைவர்.}

************

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *