இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . ( 230 )

0

அன்பினியவர்களே!

அன்பான வணக்கங்கள். இதோ அடுத்தொரு வராம், அடுத்தொரு மடல். ஒரு மாதகாலம் இங்கிலாந்திலிருந்து வெளியே இருந்து விட்டுத் திரும்பி வந்ததும் முதல் காதில் விழும் சொல் “ப்ரெக்ஸிட்” என்பதுவே! கடந்த வருடம் ஜூன் மாதம் 23ஆம் திகதி நடைபெற்ற சர்வஜன வாக்கெடுப்பில் இங்கிலாந்து மக்களின் பெரும்பான்மை வாக்களிப்பின் பிரகாரம் இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது என்பது முடிவாகியது அனைவரும் அறிந்ததே!

அவ்வெளியேற்றத்தைச் சுற்றிய சர்ச்சைகள் நாளுக்குநாள் வித்தியாசமான வடிவங்கள் எடுத்து வருகிறது என்பது உண்மையே!

அனைத்துக் கட்சிகளும் ஒரு விடயத்தை ஏற்றுக்கொள்கின்றன. அதாவது கொள்கையளவில் இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது தவிர்க்கப்பட முடியாதது என்பதுவே அது! ஆனால் அவ்வெளியேற்றத்தின் வடிவம் எதுவாக இருக்க வேண்டும் என்பதில் தான் கட்சிகளுக்கிடையிலும், மக்களுக்கிடையிலும் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. இங்கிலாந்து ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதனால் எவ்வகையான பிரதிகூலங்கள் ஏற்பட்டாலும் பரவாயில்லை வெளியேற வேண்டும் என்று தீவிரமான கருத்துடையவர்கள் நிர்ப்பந்திக்கின்றார்கள். வெளியேறத்தான் வேண்டும் ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்துடனான இங்கிலாந்தின் பொருளாதார நடைமுறைகளைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையிலான வியாபார ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொள்வது முக்கியம் என்று மிதவாதிகள் விவாதிக்கிறார்கள்.

பிரித்தானிய அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடனான பேச்சுவார்த்தைகளின் பின் எடுக்கும் முடிவுகள் பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுப் பாராளுமன்ற உறுப்பினர்களின் அங்கீகாரத்தைப் பெறவேண்டும் என்று எதிர்க்கட்சிகளும், சில அரசாங்கப் பாராளுமன்ற உறுப்பினர்களும் வலியுறுத்தினர். அது தவிர இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறப் போகிறோம் என்று உத்தியோகபூர்வமாக அறிவித்தலைப் பாராளுமன்ற அங்கீகாரத்தின் மூலம் சட்டமாக்க வேண்டும் என்று கோரினார்கள். அரசு இதற்கு சம்மதிக்கவில்லை. ஜீனா மில்லர் எனும் வழக்கறிஞராகிய பெண்மணி ஒருவர் அரசுக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் அரசுக்கு எதிரான தீர்ப்பை வழங்கியது. அதைத்தொடர்ந்து அது சட்டமூலமாக்கப்படும் பிரேரணை நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. ஆனால் அதில் சில திருத்தங்கள் அதாவது தற்போது இங்கிலாந்தில் வாழும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பிரஜைகள் இங்கிலாந்தில் தொடர்ந்து இருக்கலாம் எனும் உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என்று பிரபுக்கள் சபை அதை நிராகரித்தது.இங்கிலாந்தில் வாழும் ஜரோப்பிய ஒன்றிய பிரஜைகள் இங்கு வாழலாம் ஆனால் அதற்கான உத்தரவாதத்தை மற்றைய ஜரோப்பிய நாடுகளில் வாழும் பிரித்தானியப் பிரஜைகளுக்கு அவர்கள் அளிக்கும் போதே நாமும் அளிப்போம் என்றார் பிரதமர். பிரபுக்கள் சபை கொடுத்த திருத்தங்களை நாடாளுமன்றம் நிராகரித்ததினால் அது கடந்து திங்கட்கிழமை சட்டமூலமாகியது. இந்தச் சட்டத்தின் மூலம் பிரதம மந்திரி எப்போதும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறப் போகிறோம் எனும் அறிவித்தலை கொடுக்கும் அங்கீகாரத்தைப் பெறுகிறார். இந்த உத்தியோகபூர்வ அறிவித்தல் இம்மாத இறுதியில் ஐரோப்பிய யூனியனுக்கு கொடுக்கப்ப்படும் என்பதுவே அரசியல் அவதானிகளின் கணிப்பாகும்.

இது இவ்வாறிருக்க, இந்தப் பிரச்சனைக்குள் இன்னொரு பிரச்சனையை நுழைத்திருக்கிறார் ஸ்கொட்லாந்து முதலமைச்சர். கடந்த யூன் மாதம் நடந்த சர்வஜன வாக்கெடுப்பில் ஸ்கொட்லாந்து மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் நிலைத்திருக்க வேண்டும் என்றே பெரும்பான்மையாக வாக்களித்திருந்தார்கள். தனது நாட்டு மக்களின் விருப்பத்திற்கு எதிராக எப்படி எம்மை ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக்கலாம்? இது ஜனநாயகத்திற்குப் புறம்பான செயலென்றும் இத்தகைய சூழலில் ஸ்கொட்லாந்து தொடர்ந்தும் ஐக்கிய இராச்சியத்தின் அங்கத்தினராக இருக்க முடியாது என்றும், ஸ்கொட்லாந்து தனியாகப் பிரிந்து போவதற்கான இரண்டாவது சர்வஜன வாக்கெடுப்பை ஒரு வருடத்தில் நடத்த வேண்டும் என்றும் ஸ்கொட்லாந்து பாராளுமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் விலகிய பின்னரே அத்தகைய வாக்கெடுப்பு நடத்தப்படும் சாத்தியக்கூறு உள்ளதாகப் பிரதமர் கூறியுள்ளார். இப்போது இப்பிரச்சனை பலவிதமான கோணத்தில் விரிந்துள்ளது. இதன் முடிவுகள் இங்கிலாந்தைப் பொறுத்தவரை எத்தகைய முடிவுகளை நல்கப் போகிறது என்பது பலரது மனதிலும் ஒரு பெரிய பரபரப்பான வினாவாகவே இருக்கின்றது.

மீண்டும் அடுத்த மடலில்…

அன்புடன்,
சக்தி சக்திதாசன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *