இலக்கியம்கிரேசி மொழிகள்சிறுகதைகள்திருமால் திருப்புகழ்

”ஒத்தனும் மத்தொருத்தனும்’’

கிரேசி மோகன்

இன்று உலக கதை நாள்….International Story Day….
———————————————————

பிரும்மாண்டமான கல்யாண மண்டபம்….உள்ளே மேடையில் மணமகன் ராமானுஜம்-மணமகள் ஜானகி….ஜானகி செக்கச் செவேலென்று வறுமையின் நிறம் சிவப்பில் ஜொலித்தாள்….ராமானுஜமோ நிறத்தில் வறுமையாக பெருமாள் கோயில் மூலவர் போல் இருந்தான்….இந்த அழகில் ஸிம்ஃபெனி வாசிக்கலாம் அளவுக்கு பியானோ பட்டன் ஸைஸ் பற்கள் தேங்காய் துறுவலாக வாயை விட்டு வெளியே விழாமல் ‘’பேய்ச் சிரிப்பு சிரித்த ‘’ முகமா வந்தவர்களுக்கு அழகு காட்டிக் கொண்டிருந்தது….காதலித்த ஜானகியை கைப்பற்றியதில் ராமானுஜத்திற்கு சந்தோஷம் தாங்காமல் எக்ஸ்ட்ரா ரெண்டு பல் முளைத்தது….காதலுக்கு கண் இல்லை, காதலித்த ஜானகிக்கும் கண்ணில்லை

அப்போது ஜானகியின் தந்தை ,ராமானுஜத்தின் மாமானுஜம் ஓடிவந்து’’ மாப்ளே….என்பொண்ண கண்கலங்காம பாத்துக்குங்க’’என்றார் கண்கலங்க’’மாமா…நான் ஒரு பெரிய சாஃப்ட்வேர் கம்பனில CEOவா இருக்கேன்….என் சம்பளத்தை சில்லறையா மாத்தினா சத்திரத்துல உள்ளவங்க கைநிறைய இருக்கும்….இதத் தவிர மெட்ராஸ்ல 4 வீடு இருக்கு’’என்று ஆறுதலாக பீத்திக் கொண்டவன் ‘’மாமா….உங்க பொண்ணுக்காக நான் வீட்டைக் கட்டிப் பாத்துட்டேன்….நீங்க உங்க பொண்ணு கல்யாணத்த பண்ணிப் பாக்கற வழியைப் பாருங்க’’ என்று ‘’எங்கே மனம் மாறி விடுவாரோ’’என்ற அச்சத்தில் அவசரப் படுத்தினான்….

மண்டபத்தின் வாசலில் கவுண்டமணி -செந்தில் போன்று இருவர் லுங்கியில்….
மத்தொருத்தன் (செந்தில்) -அண்ணே! இப்ப போய் கேக்கலாம் சந்தோஷத்துல தந்துருவான்….

ஒத்தன் (கவுண்டமணி) – இல்ல ….இப்ப வாணாம் ….வா போவலாம்….செந்தில் சலிப்போடு கவுண்டரை தொடர்கிறான்…

காட்சி-2
—————-

முதலிரவு அறை….ராமானுஜத்தின் எசகேடான பற்களில் டம்பளர் பட்டு ஜலதரங்கம் வாசிக்க, அவன் பாலை அருந்தி….பழங்களை மிக்ஸி போன்ற வாயிலிட்டு ஜூஸாக்கி குடித்து…,நாயகன் ராமானுஜம் நாயகி ஜானகியை வில்லன் போல நெருங்க, ஜானகி’’No நஹி’’ என்று தடுத்து ‘’என்னங்க எங்கப்பா கல்யாணத்துக்கு ஏகமா செலவு பண்ணிட்டார்…நீங்க கடனா….!’’ என்று கவர்ச்சிகரமாக கெஞ்ச’’ அசடே! அசடே!….எதுக்கு கடன் இந்தா ப்ளாங்-செக்….’’என்று தந்து ஸ்விட்சை அணைக்க அறையில் ராமானுஜ இருள் கும்மியது….

வீட்டு வாசலில் லாம்ப்-போஸ்ட் அருகில் ஒத்தன் -மத்தொருத்தன்….செந்தில்-அண்ணே….நம்பாள் உச்சகட்ட கிக்குல இருக்கான் …..இப்ப போய் கேட்டா நிச்சயமா தந்துருவான்….
கவுண்டமணி-இல்ல….இப்ப வாணாம்…வா போவலாம்….செந்தில் கவுண்டரை சபித்தபடி தொடர்கிறான்….

காட்சி-3
—————-

நர்சிங்-ஹோம்….நர்ஸ் கையில் ராமானுஜ ஜாடையில் பிறக்கும் போதே பல்லுடன் கருப்பு வெளுப்பில்(கலரில் கொஞ்சம் அம்மாவையும் கொண்டு பிறந்த) குழந்தை….கிருஷ்ண தேவ ராயருக்கு வாரிசு பிறந்தாற் போன்ற பூரிப்பில் ராமானுஜம் நர்ஸின் பர்ஸை நூறு ரூபாய் நோட்டுக்களால் நிரப்புகிறான்….

நர்சிங்-ஹோம் வாசல் வராண்டாவில் ஒத்தன் -மத்தொருத்தன்…செந்தில்- அண்ணே புள்ள பொறந்த குஷில பய இருக்கான்….இப்ப எத்த கேட்டாலும் தந்துருவான்….அடம் புடிக்காம வாங்கண்ணே’’

கவுண்டர்-இல்ல இப்ப வாணாம்…வா போவலாம்….தன் தலையில் அடித்துக் கொள்ளப் போன செந்தில் கைதவறுதலாய் கவுண்டர் தலையில் அடித்தபடி பின் தொடர்கிறான்….

காட்சி-4
—————-

பிரும்மாண்டமான கல்யாண மண்டபம்….மேடையில்….ஆறிலேயே பார்க்க சகிக்காத ராமானுஜம் அறுபதில் அடி பிடிச்ச கரிச் சட்டியாய், வாயில் வழுக்கையும் தலையில் பொக்கையுமாக அவதாரம் போல நிற்கிறான்….அருகில், மறுபடி ராமர் பார்த்தால் வில்லை உடைப்பார் என்னும் அளவுக்கு ஜானகி அதே அழகுடன் நிற்கிறாள்….ராமானுஜத்தின் 25 வயது மணமகன் லஷ்மணன்‘’அப்பனுக்கு தப்பாம’’ நிழல் போல(நிறத்தில்) தன்னருகே தேவதை போல நிற்கும் மைதிலிக்கு தாலி காட்டிக் கொண்டிருக்கிறான்(கட்டப் போகும் கட்டம்)….அப்போது ராமானுஜன் சம்பந்தி ஓடிவந்து ராமானுஜத்தின் கைகளைப் பற்றிக் கொண்டு ஏதோ சொல்ல ஆரம்பிக்க, ராமானுஜம்’’நீங்க ஒண்ணும் சொல்ல வேணாம்….என் சொத்து பூராவையும் உங்க பொண்ணு அதாவது என் மருமக மைதிலி பேர்ல எழுதிட்டேன்’’ என்று வீரவசனமாக பேசி பத்திரங்களை தாரை வார்த்தான்….

மண்டபத்தின் வாசலில்….ஒத்தன் -மத்தொருத்தன்….

செந்தில்-எண்ணன்ணே எல்லாத்தையும் கொடுத்துட்டான்….இப்ப நாம போய் கேட்டா….!

கவுண்டமணி-இப்பவும் இல்ல….எப்ப கேக்கணும்னு எனக்குத் தெரியும்….

செந்தில்-வா போவலாம் அதானே….நானே சொல்றேன்….வாங்க போவலாம்….

காட்சி-5
—————

மருமகள் மைதிலி வீட்டு வாசல் திண்ணையில் கிழிந்த பாயாக ராமானுஜம் புரண்டு கொண்டிருக்கிறான்….உள்ளே அறைச் சுவரில் ஊதுபத்தி மாலையோடு ஜானகியின் படம்….வெளியே வந்த மருமகள் மைதிலியிடம், ராமானுஜம் பரிதாபமாக’’அம்மா மைதிலி மணி பத்தாகுது இன்னும் நான் காப்பி சாப்பிடல’’என்று கெஞ்ச, எதையோ மிதித்தவள் போல மைதிலி மாமனாரைப் பார்த்து, சத்தம் கேட்கும் டெஸிபெலில் மோவாய் கட்டையை தோளில் இடித்து’’ஏ! கிழட்டுப் பொணமே….எப்பப்பாரு என்ன காப்பி காப்பினு….பித்தம் தலைக்கேறி பாயைத்தான் நீங்க பிறாண்ட போறீங்க’’என்று நாலு வீடு கேட்கும் அளவுக்கு கூவி விட்டு நகர்கிறாள்….அவளுக்கு பிறகு தயங்கி வந்த மகன் லஷ்மணன் மூணு கண்ணால் தந்தையை(ஏற்கனவே இவனுக்கு ஒன்றரைக் கண்…இப்ப ப்ளஸ் ஒன்றரை….ஆக மூணு)வாத்ஸல்யத்துடன் முறைத்துவிட்டு மைதிலி கிழித்த கோட்டை தாண்டாமல் வந்த நிதானத்தில் வீட்டுக்குள் சென்று மறைகிறான்….அப்பளத்து உருண்டையாய் திண்ணையில் சுருண்டு கிடந்த ராமானுஜம் சிலிர்த்து எழுந்து வானத்தைப் பார்த்து’’தெய்வமே ! பாத்துண்டு சும்மா இருக்கியே….என்ன ஏன் இந்த வயசுல இப்படி அல்லாட விடறே….என்ன அழைச்சிண்டு போக மாட்டியா…இது உனக்கே சரியா’’ என்று விசும்பி விசும்பி அழ….

தெருக்கோடியில் ஒத்தன் -மத்தொருத்தன்….

ஒத்தன் -வாடா இப்ப போய் கேக்கலாம்….என்று கூறி எமனுருவில் பாசக் கயிறை உருவ….மத்தொருத்தன் சித்ரகுப்தனாகி-என்ணண்னே….அப்பல்லம் வாணானுட்டு….!
உங்கள புரிஞ்சுக்கவே முடியல….!

எமன் -அடேய்….நானா போய் யார் உசுரையும் வாங்கறதில்ல….அவங்களா தர்மமா தந்தா எடுத்துப்பேன்….அதான் எம்பேர் தர்மராஜன்….இது பேர் பாசக் கயிறு….
சித்ரகுப்தன் -அப்ப எருமை….

எமன் -உன்ன மாதிரி உசுர வாங்க அவசரப்படாம பொறுமையை ஞாபகப் படுத்த எருமை….வா இப்பத்தான் போகலாம்….அடுத்த தெருல தற்கொலைக்கு பயந்துண்டு ஆக்ஸிடெண்டுக்காக நடுத்தெருல நிக்கறான்’’என்று கூறி திண்ணையை நெருங்க…..ராமானுஜம் மாரடைப்பில் கோமானுஜமாகி சாய்கிறான்….

—————————————————————————————————————————–

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க