க. பாலசுப்பிரமணியன்

சுய அடையாளத்தின் நெருக்கடிகளும் கற்றலும்

education

சுய அடையாளத்திற்கு ஏற்படும் நெருக்கடிகள் கற்றலை வெகுவாக பாதிப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இந்த நெருக்கடிகள் ஏற்படுவதற்கு ஒரு குழந்தையின் அல்லது மாணவனின் வீட்டு, குடும்பச் சூழ்நிலைகள், வாழ்க்கைப் பரிமாணங்கள் மற்றும் பள்ளி, சமுதாயத் தாக்கங்கள் காரணமாக அமையலாம். ஆகவே, இந்த மாதிரியான நெருக்கடிகள் எந்த ஒரு குழந்தைக்கும் மாணவனுக்கும் வராத சூழ்நிலைகள் உருவாக்குதல் அவர்களுடைய மனநலத்திக்ற்கும் அறிவின் வளர்ச்சிக்கும் ஏதுவாக அமையும்.

இந்த நெருக்கடிகளை உருவாக்குவதில் “பயம்” என்ற உணர்வு முதலாவது இடத்தைப் பிடித்துக் கொள்கின்றது. பிறந்தது முதற் கொண்டே “பயம்” என்ற உணர்வு  தெரிந்தோ தெரியாமலோ நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வீட்டில் உருவாக்கப்படுகின்றது. காலப் போக்கில் இந்த பய உணர்வு மனதில் வேர்விட்டு சுயஅடையாளத்தின் அடித்தளங்களை ஆட்டுவிக்கின்றது.

இந்த பய உணர்வு வருவதற்கு பல காரணங்களும் பரிமாணங்களும் உண்டு.  உதாரணமாக அன்பு, மரியாதை என்று இரண்டு முக்கிய உறவின் அடிப்படைகளை சரியாகப் பரிமாணிக்க விடாமல் பயம் என்ற முகமூடிக்குள் மறைத்து விடுகின்றோம். ஆகவே பெற்றோர்களிடம் அன்பு, மரியாதை, ஆசிரியர்களிடம் அன்பு, மரியாதை, மற்றும் இறைவனிடம் அன்பு மரியாதை என்ற உறவுப் பரிமாணங்களை விலக்கி இவை அனைத்துடன் ஒரு பய உணர்ச்சியை வளர்த்துவிடுகின்றோம். இதனால் வளரும் குழந்தைகள் தங்கள் உண்மையான நிலையை இவர்களுடன் பகிர்ந்து கொள்ள தயக்கம் காட்டி “பயத்தில்” ஒதுங்கி விடுகின்றனர். இதனால் உறவுகளின் அடிப்படைத் தளங்களில் உண்மையின் வண்ணங்கள் இருப்பதில்லை. .

அதே போல் பொருளாதார நிலைகளில் இருக்கின்ற வேறுபாடுகளை முன்னிறுத்தி ஏற்படுத்தப்படும் பய உணர்வுகள் ஒரு தனி மனிதனுடைய வளர்ச்சியில் வெறுப்புணர்ச்சிகளையும் கோபத்தையும் பழி மனப்பான்மைகளையும் வளர்க்கின்றன. இந்த வேறுபாடுகளை எவ்வாறு அறிவுபூர்வமாக ஏற்று இதில் உள்ள மேடு-பள்ளங்களை எவ்வாறு சரி செய்யலாம் என்ற மனப்பாங்கை உருவாக்குதல் அவசியம். “பணத்தைக்” கண்டோ “பணக்காரர்களைக்” கண்டோ பயம் கொண்டு ஒதுங்கி வாழ்தல் வளர்ச்சிப்பாதையில் ஒரு சாபக்கேடு.  கற்றலின் சில பாங்குகள் பணக்காரர்களுக்கே உகந்தவை என்ற பரவலான கருத்து மிகவும் தவறானது. எந்த ஒரு கற்றலுக்கு ஆர்வமும் தேடலும் ஈடுபாடும் மட்டும் தேவை. உதாரணமாக பணம் அதிகமாக செலவழித்து படிக்கும் பள்ளியைச் சார்ந்த மாணவர்கள் வாழ்க்கையில் சிறப்பாக முன்னேறுவார்கள் எனப்து ஒரு தவறான கருத்து. ஆனால், மாணவர்கள் எந்தப்பள்ளிகளில் படித்தாலும் கற்றலுக்கு ஏதுவானான மனநலம் மற்றும் சமுதாய விழிப்புணர்ச்சிகளைத் தூண்டிவிடக்கூடிய சூழ்நிலைகள் பள்ளிகளில் இருத்தல் அவசியம்.

இதே போல் சாதி மத கோட்பாடுகளில் தனி ஒருவரை உயர்வாகவோ தாழ்வாகவோ நினைத்து அதனால் ஏற்படுகின்ற பய உணர்வுகளால் சுய-அடையாளங்களை இழக்கின்றவர்கள் பலர். சாதி மதம் மற்றும் பிறப்பு வேறுபாடுகள் கல்வியின். கற்றலின் போக்கையோ தரத்தையோ அல்லது வெற்றியையோ நிர்ணயித்ததாக சரித்திரமே இல்லை. ஒரு தனி மனிதனின் மூளையின் வளர்ச்சி, செயல்பாடுகள் மற்றும் ஈடுபாடுகள் மட்டுமே அவர்களுடைய கற்றலின் மேம்பாட்டுக்கும் வெற்றிக்கும் அடிப்படை. ஆனால் உலகளாவிய பல சமூகங்களின் சிந்தனைப் போக்குகள் மற்றும் நெறிமுறைகள் அந்த சமூகத்தின் மாணவர்களின் கற்றலின் வழித்தடங்களை நிர்ணயித்ததற்கும் மாற்றியமைத்ததற்கும் சான்றுகள் உள்ளன.

“அப்பா” என்ற படத்திலே ஒரு மாணவனை அவன் தந்தை அடிக்கடி “இதெல்லாம் நமக்கு வேண்டாண்டா ..ஒதுங்கிப் போயிடுவோம் ” என்றும் ” அடக்கி வாசிக்கணும்” என்ற அறிவுரை வழங்கி அவன் அடையாளத்திக்கு நெருக்கடிகள் உண்டாக்கியதைப் பார்க்கலாம் “

மேற்கூறியது போன்ற பல காரணங்களால் ஒருவருக்கு பயம் கலந்த உணர்ச்சி வருவதற்கு முன்பு அவர்கள் மனதில் ஒரு தாழ்வு மனப்பான்மை வருவதற்கான வாய்ப்பு உண்டு. உதாரணமாக, பள்ளிகளில் சில மாணவர்கள் விலை உயர்ந்த வாகனங்களில் வரும் மாணவர்களைக் கண்டோ அல்லது தினம் அதிகப்படியான பணம்  கொண்டுவந்து செலவழிக்கின்ற சக மாணவர்களைக் கண்டு தங்களைத் தாழ்த்திக்கொண்டு தங்கள் சுய அடையாளங்களை வெளிப்படாமல் ஓரம்கட்டிவைப்பது போன்ற நிகழ்வுகள் நடப்பதுண்டு.

வறுமையும் ஏழ்மையும் இளமையில் சுயஅடையாளங்களை வளர்ப்பதற்கு  ஒரு பெரிய முட்டுக்கல்லாக அமைகின்றன. இதனால் கற்றலில் தாக்கங்கள் ஏற்பட வாய்ப்புக்கள் உண்டு.  ஆனால், மேற்கூறிய எந்த காரணமும் ஒரு மாணவனின், ஒரு தனி மனிதனின் அறிவுத்திறனையோ, சிந்திக்கும் திறனையோ, வல்லமைகளையோ  அவற்றின் தரத்தில் குறைப்பதில்லை. சரியான சந்தர்ப்பங்களும், சரியான சூழ்நிலைகளும் , சரியான பாதுகாப்பும் கொடுக்கப்பட்டால் எல்லாக் குழந்தைகளும் எல்லா மாணவர்களும் கற்றலில் சிறப்பாக வளர முடியும். சாதனைகள் படைக்க முடியும்.

சுய அடையாளங்களுக்கு நெருக்கடி விளைவிக்கும் மற்றொரு காரணம் – ஒரு மாணவனை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசுதல் . வீடுகளில் பொதுவாக “உன் அண்ணனைப் பார்த்தாயா எப்படி படிக்கிறான்..” “பக்கத்து வீட்டுப் பையனை பார்த்தாயா ..” என்றெல்லாம் பேசும் பொழுது, அது இளைஞர்களின் தன்னம்பிக்கையைத் தோற்கடித்து அவர்களது மனதில் தங்களுடைய ‘திறனைப்” பற்றியே சந்தேகிக்கின்ற நிலைக்கு கொண்டு வந்து சேர்க்க்கின்றது. அவர்கள் தொடர் முயற்சிகள் வீணாகி வாழ்க்கையில் தோல்வியைத் தழுவும் நிலைக்குக் கொண்டு வருகின்றது. வாழ்க்கையில் இதுபோன்ற பல நிகழ்வுகளையும்  அதனால் பாதிக்கப் பட்ட மாணவச் செல்வங்களையும் நான் அறிவேன்.

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு மாணவனுக்கும் தனித்தன்மை உள்ளது. அதை அறிந்து அதை மேம்படுத்த உறவும் ஆசிரியர்களும் முன்வர வேண்டும்.

நான் படித்த ஒரு கதை :

காட்டில் வாழுகின்ற விலங்குகளெல்லாம் ஒரு முறை ஒன்றுகூடி தங்களுடைய திறன்களுக்கும் கற்றலுக்கும் ஒரு கல்விமுறையும் பாடத்திட்டமும் வகுக்கவேண்டும் என்று கருதி, இந்த அமைப்புக்கு சிங்கத்தை தலைவராக ஏற்றதாம். அந்தக்குழுவில் இருந்தவர்கள் கர்ஜனை, ஊளையிடுதல், மரம் ஏறுதல், பாய்தல், குழிதோண்டுதல் மற்றும் நீந்துதல் போன்ற பல திறன்களை பாடத்திட்டத்தில் வகுத்து அதற்க்கு ஒரு தேர்வுமுறையும் பரிந்துரைக்கப்பட்டதாம்.

தேர்வில் நாய்களைத் தவிர மற்ற விலங்குகள் பங்கேற்றன. நாய்கள் “குறைத்தல்” பாடத்திட்டத்தில் இல்லாததால் தேர்வை நிராகரித்தன. தேர்வின் முடிவில் சிங்கம் ‘கர்ஜனை”யில் 100 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றாலும் மரம் ஏறுதல் நீந்துதல் போன்றவற்றில் தோல்வியுற்றன. குரங்குகள் மரம் ஏறுதலில் 100 விழுக்காடு பெற்றும் நீந்துதல் கர்ஜனை போன்றவற்றில் தோல்வியுற்றன. மீன்கள் நீந்துவதில் 100 விழுக்காடு எடுத்தும் மரம் ஏறமுடியாமல் தோல்வியுற்றன. இது போல் ஒவ்வொரு விலங்கும் ஒரு திறனில் முழு மதிப்பெண்கள் பெற்றும் மற்றவற்றில் தோல்வியுற்றதால் தேர்வில் வெற்றிபெறமுடியவில்லை. ஒரே ஒரு நீர் வாழ் விலங்கு மட்டும் எல்லாவற்றையும் சிறுதளவு செய்ய முடிந்ததால் அனைத்திலும் 35 விழுக்காடுகள் பெற்று தேர்வுற்றது.

இந்தக்கதை தற்போதைய கல்விமுறையின் குறைகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில் எழுதப்பட்டது. ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்திறன் இருந்தாலும் ஒரு பொது பரிமாணத்தில் நம்முடைய சுய அடையாளங்கள் காயப்பட்டும் மறைக்கப்பட்டும் போகும் நிலை பற்றி இன்று சிந்திக்க வேண்டிய நேரம்.

(தொடரும் )

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *