Blog

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    அன்பு கேசவ் & கிருஷ்ணா ஸாரி….! நேற்று டிராமாக்காக வெளியூர் சென்று விட்டேன்….அதனால் தாமதம்….!

    170326 -Krishnapremi -Vanamali -lores

    ‘’மந்திக்கு காவலவர், மாட்டுக்கும் தோழனவர்,
    குந்தி மகனுக்குக் கீதையைத் -தந்தவர்:
    ஓங்கி உலகளந்த உத்தமர் பேர்பாடி
    சாங்கிய யோகத்தில் செல்’’….கிரேசி மோகன்….!

    Share
  • நாளொரு பக்கம்: 2: 2017

    -இன்னம்பூரான்

    innam

     

    மார்ச் 27, 2017

    பிரசுரம்:

    History is a novel whose author is the people. – Alfred de Vigny, poet, playwright, and novelist (27 Mar 1797-1863)

    கவிஞர் Alfred de Vigny அவர்களின் 220வது ஜன்மதினம் இன்று. அவரை முன்வைத்து எழுத நேர்ந்திருப்பதை கண்டு மகிழ்கிறேன்.

    ராஜாராணி கதைகளில் கைசரக்கு அதிகம் இருக்கும்; ஏனெனில் புகழ்ச்சி, தற்புகழ்ச்சி, முகஸ்துதி, மர்மங்கள் ஒளிந்து விளையாடுவது எல்லாம் சிம்மாசனத்தில் படிக்கட்டில் அமர்ந்து வேடிக்கை பார்க்கும் பதுமைகள். வரலாற்றின் பக்கங்களை முன்னும் பின்னுமாக பலமுறைப் புரட்டினாலும், பாமரகீர்த்தி காணக்கிடைப்பதில்லை. சரித்திரத்தில் வளைய வரும் மாந்தர்களில், விவசாயி, சக்கிலியன், தீவட்டிதூக்கி, தேசாந்திரி, தச்சன், கொல்லன், கடைக்காரன், தொழிலாளி போன்றோர் இருந்ததில்லை என்று தோற்றம். அப்படியிருந்தால், சக்கரவர்த்தித் திருமகன்கள் யாரை ஆண்டனராம்? சிலருக்குத் தவறு கண்டுபிடிக்காவிட்டால் உறக்கம் வராது. ஏன், சங்கத்தமிழில் இரவலர்களும், புரவலர்களும் வருகிறார்களே என்பார்கள். ஆடிப்பாடி மெய்கீர்த்தி இசைத்து ஆனையும், தேரும் ஆக, ரத்னமாலையும், முத்தங்கியும் பரிசிலாகப் பெறும் இசைவாணர்கள் மட்டும் தரணி வாழும் மாந்தர்கள் அல்ல. அதனால் தான், நாம் எல்லாரும் தற்காலத்து பாமரகீர்த்திகளை இயற்ற வேண்டும்.  மூன்று உதாரணங்கள் தருகிறேன்.

    மு.ராகவ ஐயங்கார் என்ற தமிழ் அறிஞர் தமிழாய்வு என்ற துறைக்கு வித்திட்டவர். அவர் வாழ்ந்த காலம் (1878-1960) அண்மையில்தான். அவருடைய தமிழ்த்தொண்டு வியக்கும் அளவு பெரிது. தற்காலம் இணைய தளம் மூலம் அத்தகைய சான்றோர்களின் கீர்த்தி பற்றி ஓரளவாவது அறிந்து கொள்ள முடியும் என்றாலும், ஷேக்ஸ்பியரை கரதலை பாடம் செய்தவர்களில், இவரை அறிந்து கொண்டவர் சொற்பம். இருவரையும் அறியாதவர்கள், பலர்.

    நடிகர் ரஜனிகாந்தையும், நடிகர் ஜோதிகாவையும் பற்றி யாவும் அறிந்த பலருக்கு சத்யஜித் ராய், பிருத்விராஜ் கபூர் யார் என்று தெரியாது. உங்களுக்கு தெரியுமானால், நல்லது. உங்களை உயர்திரு பாமரர் என்பேன்.

    மகவுகளின் படிப்புதான் முக்கியம் என்று ‘தியாகபூமி’ பெற்றோர்களை நான் அறிவேன். அவர்களின் பாமரகீர்த்தி மற்றவர்களுக்கு படிப்பினை அல்லவோ?

    சித்திரத்துக்கு நன்றி:

    https://images-na.ssl-images-amazon.com/images/I/51isHcvWscL._SX321_BO1,204,203,200_.jpg

    Share
  • படக்கவிதைப் போட்டி – (105)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    17577885_1272953816092148_15154307_n

    112795645@N05_rஷாமினி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (01.04.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.

    Share
  • 10 இலட்சம் குழந்தைகளுக்கு பாதிப்பு!

    பவள சங்கரி

    தலையங்கம்

    சுற்றுச்சூழல் மாசுபடுவதால் இந்தியாவில் ஆண்டிற்கு 10 இலட்சம் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். ஹெ.ஐ.வி. பாதிக்கப்பட்ட குழந்தைகள் இதனால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உயிரிழக்கிறார்கள். மொத்தமாக உலகளவில் பாதிக்கப்பட்டவர்களில், நைஜீரியாவிலும் இந்தியாவிலும் சேர்த்து 48% மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. காற்று மாசுபடுவதால் சீனாவிலும், இந்தியாவிலும், அதிகளவில் குழந்தைகள் பாதிக்கப்படுவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இரசாயண உற்பத்திகள் 28% உயர்ந்துள்ளதாகக் கூறப்பட்ட நிலையில் அதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் விழுக்காடு அதிகமாக உள்ளன. மேலை நாடுகள் அனைத்திலும் சேர்ந்தே 5%ற்கும் கீழாகவே பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், அங்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய தொழிற்சாலைகளை முற்றிலுமாக ஒழித்தோ அல்லது குறைத்தோ தங்களுடைய நாட்டின் குழந்தைகளை காப்பாற்றிவிடுகின்றனர். இந்தியாவில் தொடரும் இத்தகைய அவலங்களைக் களைவதற்கு மனித மேம்பாட்டு ஆணையமும், மத்திய அரசும் தக்க நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். இன்றைய குழந்தைகளே நாளைய நமது நாட்டின் செல்வங்களாகும். ஆரோக்கியமான குழந்தைகளை உருவாக்குவதே நமது நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

    தீவிர முயற்சி எடுத்து போலியோ நோயை முற்றிலுமாக ஒழித்தது போல இந்தியாவில் பெரும்பாலான குழந்தைகளை சாவின் விளிம்பிற்கே கொண்டுசெல்லும் காச நோயையும் அரசு முற்றிலுமாக ஒழிக்கவேண்டும். இதை முற்றிலும் ஒழிக்கக்கூடிய அளவிற்கு தேவையான மருந்துகள் கையிருப்பில் இருந்தும், அவை சரியான முறையில் ஏழை மக்களையும் சென்றடையும்படி அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தகுந்த சத்துணவும் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதுமட்டுமே இதற்கான நிரந்தரத் தீர்வாக அமையும் என்பதில் ஐயமில்லை!

    18 இலட்சம் பேர் காச நோயால் இந்தியா, இந்தோநேசியா, பாகிஸ்தான், நைஜீரியா, தென் ஆப்ரிக்கா சீனா போன்ற நாடுகளில் உயிரிழந்துள்ளனர். 2015 இன் கணக்கெடுப்பு இது. 2016 இல் இந்தியாவில் மட்டும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 17.5 இலட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 33,820 பேர் போதைப்பொருள் பழக்கத்தால் இந்த காச நோய் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். இந்தியாவில் மட்டும் காச நோயால் தினசரி 1,400 பேர் உயிரிழக்கிறார்கள்.

    இந்தியாவில் இதை முற்றிலும் ஒழிப்பதற்காக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பாக தேசிய வரைவு செயல் திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது. அதன்படி தனியார் மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பதை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கப்படவேண்டும். காச நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகள் குறித்து அரசின் கவனத்திற்குக் கொண்டுவரும் மருத்துவர்களுக்கு ₹ 250  ஊக்கத்தொகை அளிக்க வேண்டும். மாதந்தோறும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு  ₹250 இம், இது தொடர்பான அனைத்து சிகிச்சைகளும் நிறைவு செய்வதற்கு  ₹500 அளிக்கவேண்டும் என்று திட்டமிடப்படுகிறது.

    போதை பழக்கத்தால் பாதிக்கப்பட்ட காச நோய் நோயாளிகள் குறித்து கவனத்திற்குக் கொண்டுவருபவர்களுக்கு 6 முதல் 9 மாதங்களுக்கு  ₹ 2,750 ஊக்கத் தொகையாக அளிக்கப்படவேண்டும். 24 மாதங்கள் நோயாளிகளுக்கு   சிகிச்சை அளித்தால்  ₹6,750 ஊக்கத் தொகையாக வழங்கவேண்டும். இதே போல் காச நோய் சிகிச்சை எடுப்பதற்கு வசதி இல்லாதவர்களுக்கு, ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதை கவனத்தில் கொண்டு நேரடி மானியத் திட்டத்தின் மூலம் ₹2,000 அளிக்க வேண்டும் என்று வரைவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வரைவுத் திட்டம் நாடு முழுவதும் விரைவில் அமல்படுத்தப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு நட்டா அறிவித்துள்ளார்.

    Share
  • அழகென்னும் தெய்வம்

     

     

     

    கவிஞர் ஜவஹர்லால்

    fall image

     

     

     

     

     

     

     

     

    பூத்திருக்கும் மலரசைவில், கீழை வானில்

    புலர்ந்திருக்கும் கதிரொளியில், மாலை வாசல்

    காத்திருக்கும் கண்ணசைவில், தலையைத் தூக்கிக்

    கவிழ்ந்திருக்கும் சேயசைவில், நீர்க்கு டத்தைச்

    சேர்த்திருக்கும் இடுப்பசைவில், தெறித்த நீரில்

    திளைத்திருக்கும் உடலசைவில், கவிதை சிந்தி

    ஆர்த்திருக்கும் பெண்ணசைவில் மனங்கொ டுத்தேன்;

    அழகென்னும் தெய்வத்தின் அடிமை யானேன்.

     

    காலையிளங் கதிரவனை எழுப்பும் சேவற்

    கரகரத்த குரலினிலே அழகைக் கண்டேன்.

    சோலையிளந் தளிரினையே ஆட்டி வைக்கும்

    சுகமான தென்றலிலே அழகைக் கண்டேன்.

    காளையினத் திமிர்நடையில், அதைந டத்தும்

    கட்டுறுதித் தோளசைவில், அழகைக் கண்டேன்.

    மாலைவரும் புள்ளினத்தின் வரிசை தன்னில்

    மயக்குகிற அழகென்னும் தெய்வம் கண்டேன்.

     

    மலைமீது கொஞ்சுமிளம் பசுமை; அங்கே

    மலர்மாலை எனவீழும் அருவி, ஓடி

    மலையளக்கும் மான்கூட்ட அருமை, ஆளை

    மயக்குகிற காட்டுமர இசைகள், என்றே

    மலையெல்லாம் அழகுகொஞ்சி நிற்ப தால்தான்

    மனமகிழத் தமிழ்முருகன் மலையைக் கொண்டான்.

    மலைகண்டு குடிகொண்டு வாழு மந்த

    மலைக்கொழுந்தில் அழகென்னும் முழுமை கண்டேன்.

     

    தெய்வத்தைக் காணவெனில் தூய்மை கொஞ்சித்

    திகழ்கின்ற மனம்வேண்டும்; அதுபோ லத்தான்

    தெய்வமெனும் அழகினையே காண வேண்டின்

    செப்பமுற்ற கவிதைமனம் வேண்டும்; அந்தத்

    தெய்வத்தைக் கண்டுணரப் பழகி விட்டால்

    தெருவெல்லாம் அழகுநடம் மிளிரும்; அந்தத்

    தெய்வமனம் கவிதையுளங் கொண்ட வன்நான்

    தெய்வமெனும் அழகிற்கே அடிமை யானேன்.

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் – (49)

    நிர்மலா ராகவன்

    உறவுகளும் நட்பும்

    நலம்

    உறவுகளை நாம் தேர்ந்தெடுக்க முடியாவிட்டாலும், நல்ல நண்பர்களையாவது பெறும் பாக்கியம் இருக்கிறது என்பது ஆறுதலளிக்கும் விஷயம்.

    `குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை’ என்கிறார்கள். ஆனால், நம்மிடம் என்னென்ன குறைகள் இருக்கின்றன என்றே ஆராய்பவர்களிடம் போலியாகப் பழகினால்தான் அவர்களுடைய மதிப்பைப் பெறமுடியும். அப்போது நாம் நமக்கே உண்மையாக இருப்பது எப்படி நடக்கும்? நிறைவுதான் கிட்டுமா?

    உறவினரோ, நண்பர்களோ நம்மால் ஏதாவது காரியம் ஆகவேண்டியிருந்தால், சிலர் துதி பாடுவார்கள். வேறு சிலர் பொறாமையால் நமது முன்னேற்றத்தைத் தடுக்க நைச்சியமாகப் பேசி நடப்பார்கள்.

    இன்னொரு பிரிவினர், `இப்படி நடப்பதுதான் சிறந்தது,’ என்று தம் அபிப்ராயங்களைப் பிறரிடம் வலுக்கட்டாயமாகத் திணிப்பவர்கள். அவர்கள் அதிகாரத்தை விரும்புகிறார்களே தவிர, அறிவுரை அக்கறையால் இருக்காது. தனித்து இயங்கும் துணிவு குறைவானவர்கள்தாம் இப்படி நடக்கிறார்கள். தவிர்க்க முடியாவிட்டால், அவர்கள் எதிரில் தலையாட்டிவிட்டு, அவர்கள் சொல்வதை அலட்சியம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை.

    இதனால்தான் தகாத நட்பினருடன் பழகுவதைவிடத் தனிமை சிறந்தது என்று சொல்கிறார்களோ!

    தனிமையில் இனிமை

    சிந்திப்பதற்குத் தனிமையைப்போல் வேறில்லை. வாய் மூடினால் காதும், கண்ணும் இன்னும் சிறப்பாக வேலை செய்ய, எதையும் பகுத்தறியும் தன்மை வளரும்.

    இது புரியாதவர்கள்தாம் யாருடனாவது, எதைப்பற்றியாவது எப்போதும் பேச முனைகிறார்கள். தனிமையிலிருப்பவர்களைப் பார்த்து, `இவர்கள் ஏன் நம்மைப்போல் இல்லை?’ என்று அதிசயப்படுகிறார்கள். `ஒரு வேளை, நம்மை மதிக்கவில்லையோ!’ என்ற ஆத்திரமும் ஏற்படுகிறது. எப்போதும் பிறருடன் சேர்ந்து கலகலப்பாகப் பழகினால் மட்டுமே மகிழ்ச்சி என்றிருந்தால் ஆழ்ந்து யோசிப்பது எங்ஙனம்?

    தனிமையில் பெரும்பொழுதைக் கழிப்பவர்களுக்கு உலகத்தினரின் போக்கு புரிந்துபோகிறது. அதிகம் பேசாது, பிறரது பிரச்னைகளை அவர்களே பகிர விரும்பும்போது உன்னிப்பாகக் கேட்க முடிகிறது. பிறருக்கு ஏற்ற ஆலோசனை அளித்து, ஆதரவாக இருக்கும் தன்மை வளர்கிறது.

    விரும்புகிறார்களோ, இல்லையோ, எழுத்தாளர்கள் தனிமையில் கழிக்க வேண்டிய பொழுது அதிகம். அதற்காக, எல்லா நேரத்தையும் தனிமையில் கழிக்க வேண்டும் என்பதுமில்லை. மனிதன் தனியான தீவில்லை.

    திருமணம் குறுகியகாலப் பயிரா?

    ஒரே பார்வையில் ஒருவரை பிடித்துப்போனாலும், எந்த உறவும் பலப்படுவதற்கு நீண்ட அவகாசம் பிடிக்கும். இதனால்தான் திருமணம் ஆயிரங்காலத்துப் பயிர் என்று சொல்லியிருக்கிறார்கள்.

    ஆனால், இன்றோ!

    கதை

    மணமகள் தேவை என்ற பகுதியில் விண்ணப்பம் செய்து மனைவியாகி இருந்தாள் காஞ்சனா. மணமகனான மகாதேவனுக்கு அப்போது நாற்பது வயதுக்குமேல் ஆகியிருந்தது.

    நோயாளியான அண்ணனையும், சக்கர நாற்காலியில் வாசம் செய்த தாயையும் பொறுப்பாகப் பார்த்துக்கொண்டிருந்தவருக்கு ஒரு கல்யாணம் செய்துகொண்டால், தன் வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்ள, அதில் சிறிதாவது இன்பம் சேர்க்க ஒரு ஜீவன் கிடைக்குமே என்ற ஆசையில் விளம்பரம் செய்திருந்தார்.

    திருமண நாள் குறிக்கப்பட்டதுமே கடன் வாங்கி, சொந்த வீட்டைப் புதுப்பிக்கும் முயற்சியில் உற்சாகமாக இறங்கினார்.

    முதல் இரவிலேயே காஞ்சனா சில நிபந்தனைகளை விதித்தாள்: அண்ணன் அவர்களுடன் இருக்கக்கூடாது, சொந்த வீட்டைத் தன் பெயருக்கு எழுதிக்கொடுத்துவிட வேண்டும். `பெற்றோர் இருந்துவிட்டுப்போகட்டும்’ என்று `பெரிய மனது’(!) பண்ணினாள்.

    புதுமனைவியா, நினைவு தெரிந்த நாள்முதல் இரட்டைப்பிறவிபோல் பழகிய அண்ணனா என்றெல்லாம் மகாதேவன் யோசிக்கவே இல்லை. உடனே அவ்விடத்தைவிட்டு வெளியேறினார்.

    இப்போதெல்லாம், `திருமணம்’ செய்துகொண்டால், குறுக்கு வழியில் பணக்காரி ஆகலாம் என்று பல பெண்கள் நினைப்பதுபோலிருக்கிறது. இதுவும் தமிழ்நாட்டில் நடந்த கதைதான்.

    முதலிரவன்றே உடல் நிலை சரியாக இல்லை என்று சாக்கு சொல்லிவிட்டு, தன் வீட்டுக்குப் போய்விட்டாள் சௌந்தரி. கணவன் எவ்வளவு முயன்றும் அவனுடன் வாழ ஒப்பவில்லை. வேறு வழியில்லாமல், `விவாகரத்து’ என்றபோது, `இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்தால்தான்!’ என்றாளாம் சௌந்தரி.

    என்ன செய்வது என்று அவர்கள் திகைத்துக்கொண்டிருந்தபோது, “திருமணம் நிறைவு பெறவில்லை என்று காரணம் காட்டினால் கிடைக்கும்,” என்று ஓர் உபாயத்தைச் சொன்னேன்.

    அவளிடமிருந்து விடுதலை கிடைத்தாலும், மன நிம்மதி போய்விட்டது அந்த அப்பாவிக் கணவனுக்கு. அதிகம் விசாரிக்காமல் பண்ணிக்கொண்டதன் விளைவு! ஒரு பெண்ணால் புறக்கணிக்கப்பட்டோம் என்ற அதிர்ச்சி மறக்கக்கூடிய ஒன்றா!

    குறுகிய காலத்தில் பணக்காரியாக ஆகும் திட்டத்துடன் ஏமாற்றி, பொய்யுரைத்து, ஆண்களின் உணர்ச்சிகளுடன் விளையாடும் பெண்களும் நம்மில் இருக்கிறார்கள் என்கிற நிதரிசனமே அதிர்ச்சியாக, கசப்பாக இருக்கிறது.

    ஏமாறுவதும் ஏமாற்றுவதும் இரு பாலருக்கும் உள்ள குணம்தான் என்றாலும், ஏமாற்றப்பட்டவர்களைப் பார்த்துப் பரிதாபப்படாமல் இருக்க முடியவில்லை.

    கதை

    நிறையப் படித்து, பெரிய வேலையிலிருந்த காரணத்தினாலேயே ரூபாவிற்குத் திருமணம் தடைபட்டுக்கொண்டே போயிற்று. அவளையும் ஒருவர் மணக்க முன்வந்தபோது, பூரித்துப்போனாள். கணவர் சொற்படி கேட்டு, வேலையை விட்டாள்.
    `நல்ல வேலையை ஏன் விட்டாய்?’ என்று அங்கலாய்ப்புடன் கேட்டவர்களிடம், `எங்களுக்கு இன்னும் பணம் வந்து ஒன்றும் ஆகவேண்டாம். அவர் சம்பாதிக்காததா!’ என்று பெருமை பேசினாள் ரூபா.

    `என் கணவர் என்னைவிட்டு ஒரு வருடம் பிரிந்திருந்தால்கூட இன்னொரு பெண்ணை நாடமாட்டார். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது!’ என்பாள் கர்வத்துடன்.

    நாற்பதாண்டு இல்லறத்துக்குப்பின் அந்த நம்பிக்கை பொய்த்தபோது, அதன் தாக்கம் அதிகமாக இருந்தது: `மகனின் மனைவியிடமே தவறாக நடந்துகொள்பவனையா குணக்குன்று என்று நம்பினோம்!’ (விழாக்காலங்களில் அவளே கணவனை பழித்தபோதுதான் எல்லாருக்கும் உண்மை தெரிந்தது).

    தான் எவ்வளவு முட்டாளாக இருந்திருக்கிறோம் என்ற ஏமாற்ற உணர்வில் அன்பாகப் பழகியவள் ஆத்திரக்காரியாக மாறினாள்.

    எதுதான் நல்ல இல்லறம்?

    கணவனும், மனைவியும் இரு தனி மனிதர்கள். இருவருக்கும் ஒரே மாதிரியான குணாதிசயங்கள் அமைய வேண்டுமானால், இரட்டையரைத்தான் தேர்வு செய்ய வேண்டும்.

    இது புரியாது, ஒருவரோடு மற்றொருவர் போட்டி போட்டுக்கொண்டிருந்தாலோ, அல்லது, வித்தியாசமாக இருப்பதால் பழித்துக்கொண்டிருந்தாலோ, இருவருமே வீழும் சாத்தியக்கூறு அதிகம். கோபமாக இருக்கும்போது அதை அடக்கிக்கொண்டு யோசித்தாலும், பழைய குப்பைகளைக் கிளாறமலும் இருந்தாலே பல பிரச்னைகளைத் தவிர்த்துவிடலாமே!

    ஒரு தமிழ்ப்படத்தில், `உனக்கு என்மேல் காதல்! அதை ஒப்புக்கொள்!’ என்று கதாநாயகன் ஒரு பெண்ணை கன்னத்தில் அறைகிறான், திரும்பத் திரும்ப! `அன்பு’ என்பது அடித்தால், மிரட்டினால், கெஞ்சினால் வருமா, என்ன?

    ஒத்துப்போன சில விஷயங்களைப் பங்கு போட்டுக்கொண்டு, (உ-ம்: ஏதாவது பொழுதுபோக்கு), அவரவருக்குப் பிடித்ததைச் செய்தால், குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிலவும். இத்தகையச் சூழ்நிலையில் வளரும் குழந்தைகளும் மன ஆரோக்கியத்துடன் இருப்பார்கள்.

    தொடருவோம்

    Share
  • நாளொரு பக்கம்: 1: 2017

    இன்னம்பூரான்
    மார்ச் 26, 2017

    உலகநாதர் இயற்றிய நான்மணிக்கடிகை

    ai

    ஓதாம லொருநாளும் இருக்க *வேண்டாம்
    ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
    மாதாவை யொருநாளும் மறக்க வேண்டாம்
    வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்
    போகாத இடந்தனிலே போக வேண்டாம்
    போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்
    வாகாரும் குறவருடை வள்ளி பங்கன்
    மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே [1]

    அன்றாடம் படித்து வருவது நலம் பயக்கும்.

    ‘ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்’ என்று உதட்டளவில் நாட்தோறும் ஓதும் பலர், இதன் மூலம் உலகநாதர் இயற்றிய நான்மணிக்கடிகையிலிருந்து என்று அறிந்து இருப்பார்கள் என்று சொல்வதற்கில்லை.

    பொல்லாங்கு என்ற சொல் தீய சொற்கலை விட கொடியவை. தவிர்ப்பது நலம். அன்னையை மறக்கவே கூடாது. நமது வாழ்வின் ஆதார ஸ்ருதி அவளல்லவோ! துஷ்டனை கண்டால் தூரவிலகு என்கிறார், உலகநாதர். அது எளிதல்ல. ஆனாலும் அறிவுரை அபாரமானது தான். செல்லத்தகாத இடங்களுக்கு போகாதே என்கிறார். செல்லத்தகாத இடங்கள் இல்லை என்பது என்று எனகு தோன்றுகிறது. விலைமாதுகள் வசிக்கும் இடங்கள், குஷ்டரோகி வசிக்கம் இடங்கள் கூட செல்லத்தகாதவை என்பார்கள். ஆனல், அவர்களுக்கு உதவ அங்கு போகத்தானே வேண்டும். கவனித்து செயல்படு என்பது உலகநாதரின் அறிவுரை. ‘புறம்’ பேசுவதை பரவலாகக் காண்கிறோம். ஒருவரைக் கண்டபோது புகழ்ந்து பேசிக் காணாத விடத்தில் இகழ்ந்து பேசுதல் கூடாது. வாழ்நெறியின் அருமையான அறிவுரைகளை தெளிவாக உரைத்த நூலாசிரியர் வள்ளி மணாளனை துதித்து, தன் நான்மணிக்கடிகையை துவக்குகிறார். யாவரும் புரிந்துகொள்ளக்கூடிய பளிங்குநீர் தமிழ்.
    -#-

    சித்திரத்துக்கு நன்றி:

    https://s-media-cache-ak0.pinimg.com/564x/ca/4b/2e/ca4b2eead8e75ff61b532a999ea73667.jpg

    இன்னம்பூரான்

    http://innamburan.blogspot.co.uk

    http://innamburan.blogspot.de/view/magazine

    www.olitamizh.com

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் 71

    க. பாலசுப்பிரமணியன்

    சுய அடையாளங்களின் வல்லமைகள்

    education-1
    எப்படி ஒரு மனிதனின் உடல் அமைப்புக்கள் அவனுக்கு ஒரு உடல் பரிமாணத்தையும், உடல் அழகு மற்றும் திறன் என்ற வார்த்தைகளுக்கு ஒரு பொருளையும் கொடுக்கின்றனவோ, அதே போல் சுய அடையாளம் என்பது ஒரு மனிதனின் சிந்தனைக்கும், எண்ணங்களுக்கும், செயல்முறைகளுக்கும், வாழ்க்கைப் பாதைக்கும் ஒரு பொருளைக் கொடுக்கின்றது. ஆகவே, இளம் பருவத்திலிருந்தே கற்றலின் மூலமாகவும் அதைச் சார்ந்த பல இணைச் செயல்கள் மூலமாகவும் சுய அடையாளத்திற்கு ஒரு ஆரோக்கியமான பரிமாணத்தையும் பொருளையும் கொடுத்தல் மிக்க அவசியம். சிதைக்கப்பட்ட, கூறுபோடப்பட்ட அடையாளங்கள் ஒரு தனி மனிதனின் முழு வாழ்க்கையை பாதிப்பது மட்டுமின்றி சமூகத் தளங்களில் விபரீதமான சிந்தனைகளையும் செயல்களையும் உருவாக்க காரணமாக இருக்கின்றன. குற்றச் செயல்களில் ஈடுபடுதல், வன்முறைப் போக்குகளைக் கடைப்பிடித்தல், மற்றவர்களுடைய நலனைக் கண்டு அதைக் கெடுத்தல், வீணான வாக்குவாதங்களில் ஈடுபட்டு தன்மானப் பிரச்சனைகளை உருவாக்குதல் போன்ற பல நிகழ்வுகளுக்கு இந்த சிதைக்கப்பட்ட அல்லது கூறுபடப்பட்ட சுய அடையாளங்களே காரணமாக அமைகின்றன.

    “அவையத்து முந்தியிருப்பச் செயல்” என்று வள்ளுவம் கூறுவது மிக முக்கியமான மனநலம் பாராட்டத் தேவையான கருத்து. பெற்றோர்களும், பெற்றோர்களுக்கு இணையாக குழந்தைகளின் வளர்ப்பில் பங்கு பெரும் ஆசிரியர்களும் ஒவ்வொரு குழந்தையையும், மாணவனையும் “அவையத்து முந்தியிருக்க” உதவ வேண்டும். பொதுவாக “இது உன்னால் முடியாது”, “இது உனக்கு வராது” என்ற கருத்துக்களை முற்றிலும் நீக்கி :”உன்னால் முடியும் தம்பி ” என்ற நம்பிக்கை வித்தை வேரூன்ற உதவ வேண்டும். இந்த நம்பிக்கை தான் சுய-அடையாளங்களை வளர்ப்பதற்கான ஒரு வித்து. தன்னம்பிக்கை உள்ள குழந்தைகள் தங்கள் அடையாளங்களைத் தாங்களே தேடுவது மட்டுமின்றி அதற்க்கான மானசீக உருவகங்களைத் தயார் செய்யத் தயங்குவதில்லை. இந்த உருவகங்களே கனவுகளாக மாறி, உள்ளுணர்வுகளை உந்தி, முதல் அடியை எடுத்துவைக்க உதவுகின்றன.

    பிற்காலத்தில் பல திறன்களைத் தங்களிடம் தேக்கி வைத்துக்கொண்டு, இவைகளை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று அறியாத பல பேருக்கு இந்த சுய அடையாளங்களின் வளர்ச்சியில் பல தேக்கங்கள் ஏற்பட்டிருக்க வாய்ப்புண்டு. நல்ல ஆரோக்கியமான சுய அடையாளங்களை வளர்த்துக்கொண்டவர்கள் பல துறைகளிலும் “தொழில்-முனைவோர்”களாகவும் தொழில் முன்னோடிகளாகவும் வளர்ச்சியுற்றுள்ளனர்.

    பள்ளிகளில் இந்த சுய-அடையாளங்களை வளர்ப்பதற்கு புத்தகங்களோ வகுப்பறைகளோ போதுமானவை அல்ல. கல்விசார் பாடத்திட்டங்களைத் தவிர, இணை மற்றும் கூடுதல் கல்விசார் முறைகள் இந்த அடையாளங்களை வளர்ப்பதற்கு பெரிதும் உதவுகின்றன. பேச்சுத்திறன்கள், ஆளுமை, தலைமை, மேலாண்மை, கூட்டுறவு சமூக விழிப்புணர்வு, முயற்சி, தோல்வி கண்டு துவளாமை,பணிவு, முடிவெடுத்தல் போன்ற வாழ்க்கைக்குத் தேவையான செயல்களில் தங்களுடைய சுய-அடையாளங்களின் முத்திரைகளை பதிப்பதற்கு இணை மற்றும் கூடுதல் கல்விசார் முறைகள் மிகவும் அவசியமானவை. ஆகவேதான் பள்ளிகளில் சிறு வகுப்புகள் முதற்கொண்டே பாடங்களுடன் இந்தத் திட்டங்களுக்குத் தேவையான நேரமும் முக்கியத்துவமும் கொடுக்கப்படுகின்றன. ஆனால், தற்காலத்தில் குழந்தைப் பருவம் முதலே வருங்கால வாழ்க்கைத் தொழிலுக்குத் தேவையான படிப்பை மட்டும் கொடுப்பதில் பெற்றோர்களும் பள்ளிகளும் அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர் என்பது ஒரு வேதனையான நிலை. இது மாறவேண்டும்.

    சுய-அடையாளங்கள் தன்னம்பிக்கையை வளர்ப்பது மட்டுமின்றி முயற்சிக்கும் தேடலுக்கும், படைப்பாற்றலுக்கும் தேவையான சக்தியைக் கொடுக்கின்றன. அதே நேரத்தில் இந்த அடையாளங்களின் வளர்ச்சி முறைப்படுத்தப்பட வேண்டும். இது நிலைகளுக்கு அப்பாற்பட்ட அதீத நம்பிக்கைகளை உருவாக்கக் கூடாது. அதீதமான நம்பிக்கைகள் உருவாகும்பொழுது கற்றலிலும் மற்ற செயல்களிலும் தடுமாற்றங்க நிலைத்தவறுதலும் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆகவே பள்ளிகளிலும் வீடுகளிலும் குழந்தை வளர்ச்சியில் கவனம் வைத்து தன்னம்பிக்கையை வளர்க்கும் பொழுது அதை முறைப்படுத்தலும் தேவையாகின்றது.

    பொதுவாக பள்ளிகளிலும் வீடுகளிலும் கற்றலிலும் செயல்களிலும் குழந்தைகள் தவறுகள் செய்யும் பொழுது அதை சுட்டிக்காட்டுதல் ஒரு வழக்கமான செயல். ஆனால் அந்தத் தவறு ஏன் ஏற்பட்டது அதற்கான காரணங்கள் என்ன என்ற அலசலை விட்டுவிட்டு அதை அந்த குழந்தையின் அல்லது மாணவனின் தனிப்பட்ட தவறாக முன்னிறுத்தி குறை கூறும்பொழுது அது அவர்களின் சுய அடையாளத்தை பாதிக்கின்றது. “தோல்விகளின் காரணங்களை ஆராய்தல்” ஒரு பாரபட்சமில்லாத குறிக்கோள் வாய்ந்த செயலாக இருக்க வேண்டும். குறைகூறப்படும் சூழ்நிலைகளில் மாட்டும் வளர்கின்ற குழந்தைகள் நாளடைவில் அடையாளங்கள் சிதறுபட்டு தாழ்வுமனப்பான்மையுடன் சமூகத்தில் நடமாடுகின்றனர். அதே செயல் பாரபட்சமில்லா சூழ்நிலைகளில் செய்யப்பட்டால் அது அடையாளத்தின் வளர்ச்சிக்கும் உறுதிக்கும் நல்ல அடிப்படையாக அமைகின்றது.

    (தொடரும்)

    Share
  • தொன்னூல் விளக்கம் – வெண்பா யாப்பியல் கோட்பாடுகள்

    -ம.சிவபாலன்

    தொல்காப்பியர் காலம் முதல் தற்காலம் வரையில் இலக்கணக் கோட்பாடுகள் மரபுச்செய்யுள் வழியோ அல்லது உரைநடை வழியோ இவைதாம் இலக்கணங்கள் என்று இலக்கிய மரபை அறிவுறுத்திக் கொண்டே வருகின்றன. தமிழில் தோய்ந்தவர் அதனை முற்றும் அறிந்து இலக்கணம் யாப்பதில் சிக்கல்கள் இருப்பதற்கு வாய்ப்பில்லை எனலாம். அவ்வழியினின்று தமிழ் தாய்மொழியாக அல்லாதோர்  தமிழ் மொழியினைக் கற்று அதில் ஐந்திலக்கணம் படைக்கும் திறமையுடையோர் இயற்றிய முதல் நூலான தொன்னூல் விளக்கத்தின் வெண்பா யாப்பியல் கோட்பாடுகள் இக்கட்டுரையின் வழி ஆராயப்படுகிறது.

    தொன்னூல் விளக்கம்- நூல் அறிமுகம்

    ஐந்திலக்கணம் மரபுவழி இயற்றப்பட்ட நான்காவது இலக்கண நூலாகும். இந்நூல் 18ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கி.பி 1730இல் எழுதப்பெற்றதாகும்.

    எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என ஐந்து அதிகாரங்களில் 370 நூற்பாக்களைக் கொண்டது. 18 இயல்களைக் கொண்டதாகவும் அமைகிறது.

    தொன்னூல் விளக்கம்

     

    எழுத்ததிகாரம் சொல்லதிகாரம் பொருளதிகாரம்

     

    யாப்பதிகாரம் அணியதிகாரம்
    எழுத்தியல்

     

    எழுத்தின் பகுப்பு

     

    எழுத்தின் விகாரம்

     

    சொற்பொதுவியல்

    பெயர்

     

    வினைச்சொல்லியல்

    இடைச்சொல்லியல்

    உரிச்சொல்லியல்

    பதிகம்

    காரணம்

     

    பா

    தொகை

    துணிவு

    செய்யுளுறுப்பு

    செய்யுளியல்

     

    செய்யுள் மரபியல்

     

    சொல்லணியியல்

     

    பொருளணியியல்

     

    பதிப்பு வரலாறு

    • 1838இல் புதுவையில் முதற்பதிப்பு.
    • 1864இல் அமிர்தநாதர் நாகையில் பதிப்பித்துள்ளார்.
    • 1891இல் ஜி.மென்கன்சி காபின் அய்யர் பதிப்பித்துள்ளார்.
    • மேலும் செயிண்ட் ஜோசப் அச்சகத்தின் யாகப் பிள்ளையால் அச்சிடப்பட்டுள்ளது.
    • 1978இல் ச.வே.சுப்பிரமணியன் அச்சிட்டு பதிப்பு அடிப்படையாக வெளிவந்துள்ளது.

    வீரமாமுனிவர்

    1680ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் நாள் இத்தாலி நாட்டு வெனிஸ் மாகாணத்தில் காஸ்திகியோன் என்ற சிற்றூரில் பிறந்தவர். மதப்பணி நோக்கத்திற்காக 1710இல் தமிழகத்திற்க்கு வந்து, பின்னர், தமிழைக் கற்று பல்வேறு இலக்கிய இலக்கண அகராதிகள், மொழிபெயர்ப்பு நூல்கள், மருத்துவ நூல்கள் போன்றவற்றைத் தமிழுக்குத் தந்துள்ளார்.

    காலம்

    பெரும்பாலும் நாயக்கர்கள் அனைவரும் தெலுங்கு மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். இருப்பினும் “விஜயரங்க சொக்கநாத நாயக்கர் (1706-1732) காலத்தில் தான் வீரமாமுனிவரால் இந்நூல் எழுதப்பட்டுள்ளது”1 என்பதை வரலாற்றாசிரியர் சுவாமிநாதன் குறிப்பிடுகின்றார்.

    யாப்பதிகாரம்

    நான்காவது அதிகாரமாக அமைந்த இது மூன்று பெரும் பிரிவுகளை உள்ளடக்கியதாகும்.

    1. செய்யுளுறுப்பு
    2. செய்யுளியல்
    3. செய்யுள் மரபியல்

    மொத்தம் 100 நூற்பாக்களைக் கொண்டதாகவும், இதில் முந்தைய 50 நூற்பாக்கள் செய்யுளுறுப்பு மற்றும் செய்யுளியல் பற்றியும் ஏனைய நூற்பாக்கள் பாட்டியல் மரபையும் உணர்த்துகின்றன.

    செய்யுளுறுப்பு

    செய்யுள் என்றால் என்ன? என்ற கேள்விக்குப் பொதுவான நேரடியான விடையை எந்தவித யாப்பு நூலும் கூறவில்லை. ஆயினும் கி.பி.10ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட அமுதசாகரம் என்ற நூலே இதனைப் பற்றி விளக்கம் தந்துள்ளது எனலாம்.

    “உள்ளப் பரவையின் நூல்வரை நாட்டிஒண் கேள்விதாம்பா
    என்னப் படாமல் இயையக் கடையின் இசைபெருக்கும்
    வள்ளல் குணநாவல் வானோர்களை வளமைப்படுக்கும்
    வெள்ளக் கவிதை அமிழ்தம் எல்லார்க்கும் வெளிப்படுமே” (யாப்பருங்கல விருத்தி நூற்பா மேற்கோள், 95)

    எனக் கவிதை என்பதற்கு அமிழ்தம் என்று பொருள்படக் கூறுகின்றார்.

    ”பல்வகைத் தாதுவின் உயிர்க்கு உடல்போல் பல
    சொல்லால் பொருட்கு இடனாக உணர்வினில்
    வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுள்” (நன்னூல், நூற்பா, 268)

    இதற்கு உரையாசிரியர்கள் “தோல், இரத்தம், இறைச்சி,மேதை, எலும்பு, மச்சை,சு வேதநீர் என்னும் எழுவகைத் தாதுக்களினாலும் உயிர்க்கு இடனாக இயற்றப்பட்ட உடம்பு போல, இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்னும் நால்வகைச் சொற்களால் பொருட்கு இடனாகக் கல்வியறிவில் செய்யுளியற்ற வல்லோர் அலங்காரம் பெற இயற்றுவன செய்யுளாம்”2 என்று குறிப்பிடுகின்றார்.

    ”சிரைமுதல் யாப்பு உறச்சேர் உயிர்க்கு உடல்போல்
    உரைமுதல் யாப்பு உற உணர்பொருட்டு உடலாச்
    சிறப்பில் செய்வன செய்யுளாம்” (நூற்பா, 202)

    நரம்பின் பிணிப்போடு ஒழுங்குபட நிரைத்து இணைத்திய பல எலும்புகளைப் பின்னித் தசையை நிரப்பிக் குருதியைத் தோய்த்துத் தோலை மூடி மயிர்மேல் பரப்பி அழகுபெற உயிர்க்கு கடனாகச் செய்யப்பட்ட உடலைப்போலப் பலவகை மொழிகள் ஒருப்பட எடுத்து அசை, சீர், அடி, தொடை என்று இவற்றானும் யாப்புறவீக்கி உணர்ந்த பொருட்கு இடனாகப் பல அலங்கார வகையால் சிறப்புறச் செய்யப்படுவன செய்யுள் எனப்படும்”3 எனச் செய்யுளுக்கு யாப்பினைக் கூறும் நூல்களினுள் இரண்டாவதாக விளக்கம் தருவதாக இந்நூல் அமைகின்றது. மேலும் நன்னூல் கூறிய விளக்கத்தினை அடியொற்றியே தொன்னூல் விளக்கமும் செய்யுள் என்பதற்கு விளக்கம் அளிப்பதைக் காணமுடிகிறது.

    உறுப்பு வேறுபாடு

    தொல்காப்பியம் முதல் இன்றளவும் யாக்கப்பெறும் யாப்பிலக்கண நூல்கள் வரையிலும் செய்யுள் உறுப்பு அளவில் வேறுபாடு கொண்டதாகக் காணப்படுகிறது.

    தொல்காப்பியம் 344 எனவும், காக்கைப்பாடினியம் நூற்பாவை வைத்துக்கூறாவிடினும், அதன் உறுப்புக்கள் ஆறு என அறியமுடிகிறது.

    இலக்கண விளக்கம்

    “எழுத்தசை சீர்தளை அடிதொடை என்ற
    மூஇரண்டு உறுப்பும் மேவரச் சிவணிப் 5

    என்பதால் ஆறு உறுப்புகள் என்றும், யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை எட்டு என்றும் கூறிய முடிவு இந்நூலில்,

    “எழுத்தசை சீர்தளை அடிதொடை ஆறும்
    வழுத்திய செய்யுள் மருவு உறுப்பு எனவே”     (நூற்பா, 203)

    என்று செய்யுளுக்கான உறுப்புக்களாக ஆறினையே முன்மொழிகின்றார். மேலும் எழுத்தினைப் பற்றி எழுத்ததிகாரத்துள் விரிவாக கூறியுள்ளபடியால் யாப்பதிகாரத்தில் அதனை விளக்கவில்லை.

    அசை

    தொல்காப்பியரின் நான்கசைக் கோட்பாட்டினின்று விலகி ஈரசைக் கோட்பாட்டினை வெளிப்படுத்துகின்றது.

    “அசையே நேர் நிரையாம் இருவகைய” (நூற்பா, 204)

    சீர்

    ஈரசைச் சீர் நேர்நேர், நிரைநேர், நிரைநிரை, நேர்நிரை ஆகிய நான்கும் இயற்சீர் எனவும், இதன் பின்னர் முறையே நேரும் நிரையும் வரின் உரிச்சீர் எனவும், அவற்றில் நேர் என முடிந்தவை வெண்சீர் எனவும், நிரை வரின் வஞ்சிச்சீர் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் பொதுச்சீர் என்பன நாலசைச்சீர் பதினாறாகும்.

    “பொதுச்சீர் வெள்ளையுள் புணரா” (நூற்பா, 206. வரி, 3)

    என்பதினால் பொதுச்சீர் வெண்பாவில் வராது என்றும் கூறப்பட்டுள்ளது.

    தளை:

    தளை ஏழு என்ற பொதுக் கொள்கையிலிருந்து வழுவாமல் இலக்கணம் வகுக்கின்றது.

    “தளையாம் சீர் தம்முன் தலைப்படும் சுட்டே
    அவை ஏழ் வகைய ஆகும்”   
    (நூற்பா, 207 வரி.1-2)

    ”வெண்டளை என்பது வெண்சீர் ஒன்றலும்
     இயற்சீர் விகற்பமும் என இரு வகைத்தே” (நூற்பா, 208)

    இருவகை வெண்டளையை உணர்த்துகின்றார். 1.காய் முன் நேர் 2.மா முன் நிரை ஆகும்.

    அடி

    பொதுவாக எவ்வுறுப்பையும் விளக்கிவிட்டுப் பின் அதன் வகைகளை விளக்கிச் செல்வது தொன்னூல் விளக்கத்தில் இயல்பு. அதனடிப்படையில்,

    “அடி என்ப தளைத்த அம்சீரா நடைஅவை
    குறளடி இருசீர் சிந்தடி முச்சீர்
    அளவடி நாற்சீர் ஐஞ்சீர் நெடிலடி
    கழிநெடிலடி ஐந்தே கடந்த சீர் இவற்றுள்
    எண்சீர் மிக்க அடி எனில் சிறப்பு அன்றே
    (நூற்பா, 211)

    தளையால் பிணிக்கப்பட்ட சீரோடு வருவன அடி. குறளடி முதல் கழிநெடிலடி வரை ஐந்து வகைப்படும். ஓரடியின்கண் இரண்டு சீர் முதல் எட்டு சீர்வரை வரலாம். எட்டு மிக்கது சிறப்பினவன்று என்று அடி இலக்கணம் உணர்த்துகின்றார்.

    தொடை

    “தொடை என்பது ஈரடி தொடுப்பதாம் அவை
    அடைமுதல் மோனை அந்தம் இயைபே
    இடையே எதுகை எதிர்மொழி முரண் அள
    பெடையே அளபாம் என ஐ வகையே”     (நூற்பா, 212)

    எனத் தொடை பற்றியும் அதன் விகற்பம் பற்றியும் உணர்த்துகின்றார். தொடை ஐந்து வகைப்படும் எனவும், அந்த ஐவகையும் எட்டு வகையாக விகற்பம் பெறும் எனவும் குறிப்பிடுகின்றார். மேலும் அந்தாதி, இரட்டை,செந்தொடை என் மூன்றனையும் சேர்த்து தொடையும் தொடை விகற்பமும் நாற்பத்து மூன்று எனத் தொகையாக தொன்னூல் விளக்கம் உரைக்கின்றது.

    வெண்பா

    பா நான்கு என்ற கருத்திருக்க இந்நூல் ஐந்து என்று எடுத்துரைக்கிறது.

    “வெண்பா அகவல் விரி கலி வஞ்சி
    மருட்பா என ஐவகைப்பா அன்றியும்
    துறை தாழிசை விருத்தம் தூக்கினம் மூன்றே” (நூற்பா, 219)

    என ஐந்து வகைப்பா மற்றும் மூன்று பா இனம் பற்றியும் உணர்த்துகிறது. தூக்கு என்ற சொல் ’பா’ என்று முதன்முதலில் இந்நூலில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    வெண்பா – இலக்கணம்

    வீரமாமுனிவர் வெண்பாவின் இலக்கணத்தை,

    “வெள்ளைக்கு இயற்சீர் வெண்சீர் விரவி
    ஏற்கும் அளவடி ஈற்றடி சிந்தடி
    ஈற்றுச்சீர் அசைச்சீர் உக்குறள் மிகலுமாம்” (நூற்பா, 220)

    என்று கூறுகிறார். வெண்பா, இயற்சீரும் வெண்சீரும் பயின்றும் வரும். ஈற்றடிக்கு முந்தைய அடிகள் நான்கு சீர் கொண்ட அளவடியாகவும், ஈற்றடி சிந்தடியாகவும், ஈற்றடி ஈற்றுச்சீர் அசைச்சீராகவும் வரும். அசைச்சீர் குற்றியலுகரம் மிகுந்தும் வரும்.

    கற்க கசடறக் கற்பவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக  (குறள் 391)

    ஓசை

    ”வெள்ளையுள் பிறதளை விரவா வெண்டளை
    ஒன்றாய்ச் செயல் ஓசையாம் அஃதே”     (நூற்பா, 221, வரி. 1-2)

    வெண்பாவினுள் பிறதளைகள் வராது என்றும், வெண்தளை வருவதால் அஃது செப்பலோசை பெற்றது எனவும் அறிவுறுத்துகின்றார்.

    ”ஏத்திசை வெண்சீர் இயற்சீர் தூங்கிசை
    ஒழுகிசை இரண்டும் உள எனில் ஆகும்”  (நூற்பா,221, வரி 3-4)

    தூங்கிசை, ஏந்திசை ஆகிய இரண்டும் கலந்து வருவது ஒழுங்கிசைச் செப்பல் ஆகும்.

    ”எதுவும் சிலகாலம் என்ப தறிந்தேன்
    இதுவும் கடக்கும் இழப்பில்லை – எத்துணை
    மாற்றம் அடைந்தாலும் மாற்றம் எனும்மொன்றே
    மாறிடாத் தன்மையாம் மெய்” (அதி அந்தாதி- அதி மெய்ப்பொருள்)

    யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை நூற்கள் செப்பலோசை மூன்றாகப் பிரிகின்ற பொழுது பாடலில் இடம்பெற்றுள்ள எதுகையின் எண்ணிக்கையை வைத்தே ஏந்திசை, தூங்கிசை, ஒழுங்கிசை என்று பொருள் படுத்துவர்.

    வெண்பா-வகைகள்

    யாப்பெருங்கலம் வெண்பா வகையினை ஐந்து என்றே குறிப்பிடுகிறது. இதனை அமிர்தசாகரர்

    “குறள்சிந் தின்னிசை நேரிசை பஃறொடை
    என்வைந் தாகும் வெண்பாத் தானே” (யாப்பருங்கலம், நூற்பா, 58)

    என்றும், வீரசோழியம் ஐவகையுடன் ஆறாக,

    ”வேண்டிய ஈறடி யாற்குறள் ஆம்:மிக்க மூவடியால்
    தூண்டிய சிந்தியல்:நான்கடி நேரிசை;தொக்கதனின்
    நீண்டிய பாதத்துப் பஃறொடையாம்;இதனேரிசையே
    நீண்டிசை யாங்கலி;நேரிசை பேதிக்கி லின்னிசையே

    (வீர. யாப்பு, நூற்பா,111)

    என ஐவகைப் பாக்களுடன் ஆறாவதாக “சவலை” என்ற பாவிகற்ப வகையை இணைத்து ஆறு என்றே குறிப்பிடுகிறது.

    ”குறள் சிந்து இன்னிசை நேரிசை சவலை
    பஃறொடை என வெண்பா ஆறு அவற்றுள்
    ஈரடி குறளே இருகுறள் சவலை”         (நூற்பா, 222, வரி1-3)

    இருகுறள் இணைந்து இடையே தனிச்சொல்லின்றி வருமேயாயின் அது ’சவலை’ எனப்படுகிறது.

    பாவினம்

    பாவினம் மூன்றனுள் குறள் வெண்பாவின் இனம் வெண்செந்துறை. எச்சீரானும், எத்தளையாயினும், எவ்வடியாயினும் வந்து இரு அடி தம்முள் அளவொத்து வரும் என்று உணர்த்துகின்றார். வெண்துறை, சீர், தளை, அடி, விரவி மூன்றடி முதல் ஏழடி வரைவந்து, ஈற்றடி சிலஅளவு குறைந்து வரும்.

    முடிவுகள்

    ஏனைய இலக்கண நூல்களில் செய்யுளுக்கான உறுப்புகள் ஆறு, எட்டு, முப்பத்திநான்கு என்ற வேறுபாடு இருப்பினும், தொன்னூல் விளக்கம் ஆறு என்றே கூறுகின்றது. தளை ஏழு என முந்தைய மரபிலக்கணம் மாறாமல் வகுத்துள்ளார். அடி வகையினை ஐந்து எனவும், சீர் நான்கு எனவும் முறைப்படுத்தியுள்ளார். செய்யுள் என்பதற்கான நேரடிப்பொருள் விளக்கமும் இந்நூலின்கண் காணமுடிகிறது. வெண்பாவிற்காக யாப்புக் கோட்பாட்டை வகுக்கின்றபொழுது அதன் ஓசை வகைகள் எவ்வாறு பயின்றுவரும் என்பதினையும் கூறியுள்ளார். வெண்பாவின் வகைகள் தொல்காப்பியத்தினின்று வேறுபட்டு ஐந்து என்ற வீரசோழிய முறையை ஒத்துப்போவதாக அமைகின்றது. தூக்கு என்ற சொல்லினைப் பா என்பதற்குப் பொருளாக பயன்படுத்தியுள்ளதையும் அறிய முடிகிறது.

    குறிப்புகள்

    1. தமிழக வரலாறு (2000 வரை), சுவாமிநாதன் ப.65
    2. நன்னூல் விருத்தியுரை, நூற்பா-268, உரை.ப.214
    3. தொன்னூல் விளக்கம் நூற்பா-202, உரை.ப.125
    4. தொல்காப்பியம், பொருளதிகாரம். செய்யுள்.1
    5. இலக்கண விளக்கம், பொருளதிகாரம், செய்யுளியல்-1-34
    6. வீரசோழியம், யாப்பதிகாரம்-நூ-128, ப.175

    துணை நின்றவை

    1. இளம்பூரணர் (உ.ஆ), தொல்காப்பியம், (2011), சாரதா பதிப்பகம், ஜி-4. சாந்தி அடுக்ககம், ராயப்பேட்டை, சென்னை – 600014
    2. சங்கரநமச்சிவாயப்புலவர், சிவஞான முனிவர் (உ.ஆ), நன்னூல் விருத்தியுரை, (2014), சாரதா பதிப்பகம், ஜி-4. சாந்தி அடுக்ககம், ராயப்பேட்டை, சென்னை – 600014
    3. சுப்பிரமணியன் ச.வே, தமிழ் இலக்கண நூல்கள், (2009), மெய்யப்பன் பதிப்பகம், 15, புதுத்தெரு, சிதம்பரம் – 608001
    4. சுப்பிரமணியன் ச.வே, (ப.ஆ), தொன்னூல் விளக்கம், (1978), தமிழ் பதிப்பகம், கஸ்தூரிபாய் நகர், அடையார், சென்னை – 600020
    5. சுவாமிநாதன். பேராசிரியர், தமிழக வரலாறு (2000 வரை), தீபா பதிப்பகம், 99, வீர வாஞ்சிநாதன் தெரு, பெருங்குடி, சென்னை – 600096
    6. நெடுஞ்செழியன். தே (ப.ஆ), திருக்குறள், (1985), தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
    7. புத்தமித்திரனார், வீரசோழியம், (2011), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி)லிட், 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை – 600098

    *****

    ம.சிவபாலன்
    முனைவர் பட்ட ஆய்வாளர்,
    தமிழ்த்துறை,
    பாரதியார் பல்கலைக்கழகம்,
    கோயம்புத்தூர் – 641046

     

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 104-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    man lying on seashore

    இவ்வாரப்போட்டிக்கு வல்லமை ஃபிளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தெரிவு செய்திருக்கும் இந்தப் படம் திருமிகு. காயத்ரி எடுத்தது. இவ்விருவருக்கும் என் நன்றி!

    தணல்போலத் தகிக்கும் மணலிலே துணிக்குடையின் அடியிலே சாய்ந்திருக்கும் இந்த மனிதரைக் காண்கையில், மாடமாளிகையில் நெஞ்சினிக்கும் பஞ்சணையில் துயிலும் பேறு எல்லார்க்கும் வாய்ப்பதில்லை; வெட்டவெளியில் பாயுமின்றிப் படுத்துறங்கும் பேர்களுக்கும் பாரினிலே பஞ்சமில்லை எனும் உண்மை உறைக்கிறது; நெஞ்சம் வேதனையில் உறைகிறது!

    இந்தப்படம், நம் கவிஞர்களின் நெஞ்சில் எண்ணற்ற எண்ண அலைகளைத் தோற்றுவித்திருக்கும் என்றே எண்ணுகிறேன். அவ் அலைகளில் நாமும் நீந்தி வருவோம்! கவிச்சுவை மாந்திவருவோம்!

    ***

    ”சிந்தையில் நிறைவிருந்தால் பஞ்சணை தேவையில்லை; மண்தரையும் மனங்கவரும் மஞ்சமே” என்று எளிமையின் இனிமை பேசியிருக்கிறார் திரு. பிரசாத் வேணுகோபால். 

    நிம்மதி

    உள்ளநிறை இல்லாமல் இல்லையில்லை என்றெண்ணப்
    பஞ்சணையில் சாய்ந்தாலும் தூக்கமது வாராது
    உள்ளதுவே போதுமென்ற எண்ணமது கொண்டுவிட்டால்
    மண்தரையும் நல்மஞ்சம் ஆம்.

    *** 

    கொடத்த அணைச்சுகிட்டுக் கூடாரம் போட்டுக்கிட்டுப் படுத்துக்கிடக்கும் தம்பியிடம், அவருடைய இந்த நிலைக்குக் காரணமென்ன என்று கனிவோடு விசாரிக்கிறார் திரு. கருணானந்தராஜா. 

    1. கொடத்த அணைச்சுக்கிட்டு கூடாரம் போட்டூக்கிட்டு
      படுத்தூக் கெடக்கிறியே தம்பி நீ
      பரதேசி ஆனாயோ வெம்பி!
    2. பாலவனத்தினிலே பரதேசியானவனே
      வேல கெடைக்கலையோ தம்பி – இந்த
      வெயிலும் சுடுகலையோ தம்பி
    3. கூடுகட்டித் தூக்காணாங் குருவியெல்லாம் வாழுகையில்
      கேடுகெட்டுப் போனாயே தம்பி இங்க
      கெடந்து வதங்குறியே தம்பி
    4. பாடு… பட்டுப்பிட்டு பழஞ்சோத்தைக் கொட்டிப்பிட்டு
      வாடிப் போய்த் தூங்கிறியோ தம்பி – உன்
      வரலாறு தோணலையே தம்பி!
    5. ஆத்துக்காரி கட்டித்தந்த சோத்த முழுங்கிப்பிட்டு
      வேர்த்துக்கொட்டத் தூங்கிறியோ தம்பி – நீ
      வேலையத் தொடங்கலையோ தம்பி!
    6. கொடத்துல தண்ணி மொண்டு கொண்டுவந்து வச்சிப்பிட்டு
      படங்கு கட்டித் தூங்கிறியோ! தம்பி – எதிர்
      பார்க்குதுன்ன ஒங்குடும்பம் நம்பி
    7. குப்பையில கண்டெடுத்த கொடம், வாளி, போத்தல்களை
      எப்ப நீ விற்கப் போறே தம்பி – கொஞ்சம்
      எணச் சாய இருக்கிறியோ! தம்பி.
    8. எணச்சாய இருப்பதற்கு ஏழைக்கு நேரமில்ல
      பணங்காசு வேணுமுன்னாத் தம்பி – உன்
      படங்கச் சுருட்டிக்கோடா எம்பி
    9. சேர்த்ததெல்லாம் சீக்கிரமா, சில்லறைக்கு வித்தூப்பிட்டு,
      ஆத்துக்குப் போயிருடா தம்பி – நீ
      அங்க போயி தூங்கிக்கலாம் தம்பி
    10. தன்னான தானே நன்னே தானான தானே நன்னா
      தன்னானத் தானே தன்னே தானே நன்னானே – தன்னே
      தானானத் தானேதன்னே தன்னாந் தன்னானே!
       

     ***

    ”செல்வந்தன் யார்? கோடிப்பணம் இருந்தும் போதாதென்று மேன்மேலும் தேடுபவனா? இல்லை! இருக்கும் பொருளில் நிறைவுகண்டு வருத்தமின்றி வாழும் ஏழையே உண்மைச் செல்வந்தன்!” என்று செல்வத்துக்குச் சிறந்ததோர் விளக்கம் தருகிறார் திரு. செண்பக ஜெகதீசன். ”செல்வம் என்பது சிந்தையின் நிறைவே” என்றுதான் குமரகுருபரரும் கூறியிருக்கின்றார்.

    செல்வந்தன்…

    இருப்பதை வைத்து நிறைவுறாமல்
    இன்னும் வேண்டும் எனுமவாவில்
    அருகி லுள்ளதை நுகராதே
    அல்ல லுறுவோர் செல்வரல்லர்,
    இருக்கும் பொருளே போதுமென்ற
    இதய நிறைவுடன் உண்டுறங்கும்
    வருத்தம் மறந்த ஏழையேதான்
    வாழும் உண்மை செல்வந்தனே…!

    ***

    ”இறைவன் தந்த அருட்கொடையாம் உறக்கத்தை, உலகியல் தேவைகளைத்  தேடித்தேடித் தொலைத்துவிட்டான் மனிதன். ஆகவே நிம்மதியாய்த் தூங்கும் உனைக்கண்டால் என்னுள் எழுகிறதே ஏக்கம்!” என்று துணிக்குடைக்கீழ் தூங்கும் மனிதனைக் கண்டு ஏங்கிப் பாடுகிறார் திரு. பழ. செல்வமாணிக்கம். 

    தூக்கம், ஆண்டவன் தந்த அருட் கொடை தோழா!
    துக்கம் மறந்த நிலை, தூக்கம் என் தோழா!
    பாலுக்கு அழுது தூக்கத்தை தொலைத்தது
    சில காலம்!
    படித்துப் படித்து தூக்கத்தை தொலைத்தது
    சில காலம்!
    வேலை தேடி தூக்கத்தை தொலைத்தது
    சில காலம்!
    பருவ வயதில் துணையைத் தேடி
    தூக்கத்தைத் தொலைத்தது சில காலம்
    குடும்பச் சுமையில் தூக்கத்தை தொலைத்தது
    சில காலம்!
    பணத்தைத் தேடி தூக்கத்தை தொலைத்தது
    சில காலம்!
    தொலைத்த தூக்கத்தை தேடிப்
    பிடித்தாயோ என் தோழா!
    அன்னை வயிற்றில் தூங்கிய தூக்கம்!
    இன்று வரையில் மறந்த தூக்கம்!
    உன்னைப் பார்த்ததும் வந்தது ஏக்கம்!

    *** 

    ”என் அழிபசி போக்கியெனை ஆதரிக்க ஆருமில்லை என்றாலும் துணிக்குடையின் கொடையாலே நானயர்ந்து தூங்குகின்றேன்” என்று உறங்கும் மனிதரிவர் தன்னிலையைச் சொல்வதாய்க் கவி வடித்திருக்கின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி. பசிப்பிணி போக்கும் மருத்துவர்களுக்குப் பாரில் எப்போதும் பஞ்சமே…என்ன செய்வது?

    சிந்தனை உறக்கம்!

    இறைந்துண்டு வாழும் வாழ்க்கையானாலும்..
    இறவாப் பசியென்பதனைவர்க்கும் இயற்கைதானே..!

    சதைரத்தம் எலும்புடன் உடலென்றாலங்கே
    பசிமயக்கம் உறக்கமென்பதும் உடன்பிறப்பன்றோ?..

    உறக்கத்துக்கு உரிமைக்குரல் தேவையில்லை..
    ஊணுறக்க மில்லையேல் உயிர்களுமில்லையப்பா..!

    மாலைச் சூரியனின் கருணையினால்..
    மணற் படுக்கையிலென் கவலைமறந்துவிட..

    வெட்டாந்தரை இடம்தான் நானுறங்கும்
    கட்டாந்தரை..நீர்வற்றிருகிய நிலமேயென்சொர்க்கம்!

    துணிக்குடையின் கொடையால் தந்நிழல்தர..
    துயிலெழ மனமில்லா மதிமயக்கம்தனில்..

    உறவொன்றுமில்லையடா உறக்கம்தான் சொந்தமடா
    ஊர்திரிந்துஉடல் களைத்துறங்கிக் கிடக்கிறேன்..!

    அவனியில் படுமின்னலிலே யானும்..
    அகதியாகி அயர்ந்துறங்கிக் கிடக்கின்றேன்..!

    வண்டினம்வாழ பண்புடை மலர்போல..இங்கு
    வறியவர்க்குதவும் குணமுடை யோரில்லையப்பா,,!

    ஈகைமிகு தென்றலும் மேகமுடன்சேர்ந்ததால்..
    இதமாகவென் பசியும் அடங்கிப்போனதே..!

    இல்லாதவனைக் கண்டுகொளா தேசத்தின்..
    இனம்காணா நினைவலையில் உறங்குகிறேன்..!

    பசியுறக்கம் நிரந்தர வரமேயானாலும்..
    பாரிலில்லை ஆருக்கும்பசிபோக்கும் மனப்போக்கு..!

    பாவம்வயிறு செய்த தவறுதானென்ன..
    தினம்வறுமை தானெனை வாட்டிடுதே..!

    வயிற்றுக்குச் சோறிட வேண்டும்..
    இங்கும் வாழும் மனிதர்க்கெல்லாம்…என

    மஹாகவியின் கவிப்பசியறிந் தாங்கே..
    மகத்தான சிந்தனைக்கே அடிபணியவேண்டுமப்பா..!

    மண்குடிசை வாழ்வு நிலையென்றால்..
    மண்ணிலென் வறுமைதீரும் நாளெப்போது?..

    உறக்கத்தினாலென்னுடல் மண்ணைத் தொட்டாலும்..
    விழித்தெழும்போதென் சிந்தனைகள் விண்ணைத்தொடுமப்பா..!

    இல்லையெனும் சொல்லேயிலாமல் இருந்திருந்தால்..
    இயல்புவாழ்க்கை யாவர்க்கும் எளிதாகுமப்பா..

    நிறைவுடனே நானிலத்தில்நாம் வாழநித்தம்..
    இறைவனிட மதையேமண்டியிட்டு வேண்டிடுவோம்..!

    *** 

    ”என்னைத் தாங்கிவளர்த்த தாயெனும் தெய்வத்தின் அருமைஅறியாது துரத்தினேன் அன்று. நாதியற்று நடுத்தெருவில் நிற்கின்றேன் இன்று! நீங்களேனும் உங்கள் தாயைப் பேணுங்கள் நன்கு!” என்று தன் அனுபவங்களை வேதனையோடு விளம்பும் மனிதரைக் காண்கிறோம் திருமிகு. சத்தியப்ரியா சூரியநாராயணனின் கவிதையில்.

    தவறவிட்ட தங்கம்

    கண்மூடி நானிருப்பது நல்ல கனவினிலல்லவே.
    கண்ணுக்குத் தெரியும் கானல் காட்சியன்றி நீருமல்லவே..

    “யாசித்தாலும் நிம்மதியான வாழ்க்கை! ”
    யாரோ சொல்லக் கேட்டிருக்கிறேன்
    யானும் வாழ்ந்தேன் அவ்வித வாழ்வை
    யாரும் மறுப்பதற்கல்லவே..

    உழைத்து நிதமும் உணவளிக்காவிடினும்
    உண்மையான பாசம் பொழிந்தாள்
    உண்டி உறையுௗ் எதுவுமின்றியும்
    உன்னத வாழ்வளித்தது அவௗல்லவே..

    அறியவில்லை அவள் பாசம் அன்று
    அதிகாரம் கொண்டேன் ஆண்மகனென்று
    அதட்டி அவளை விரட்டினாலும்
    அௗவில்லா மதிப்பளித்தாலல்லவே..
    கடற்கரை மணலில் காண்கிறேன் பலரைக்
    கண்டதுமெனை விலகியே செல்கின்றனர்
    கடவுளே..! நாய்க்களிக்கும் உணவு கூட
    நான் புசிக்கத் தருவதில்லை!
    கண்னென எனைக்காத்தவௗ் விட்டுச்சென்றதுமே..

    ஊதாரியாய்த் திரிந்தாலும் எனக்கு
    ஊட்டி விட்டு மகிழ்ந்தாளே
    ஊரில் ஒருவர் கூட மதிப்பதில்லை
    உலகத்தை விட்டு அவௗ் சென்றதுமே..

    உதறிவிட்டேன் ஐயகோ
    உயிர்கொடுத்த அவளை
    ‘தொலைந்து போ நீ’ என விரட்டித்
    தொலைத்து விட்டேன் என் தங்கத்தை.

    காரணமில்லாமல் காதலிப்பவௗ் பெற்றெடுத்தவௗ் மட்டுமே
    காலம் சென்ற பின்னரே உணர்கிறேன் என்றுமே
    மனிதனாய் மதிக்க கூட நாதியில்லை
    மண்ணை விட்டு மங்கையவள் பிரிந்ததுமே..

    பிரிந்தது உனதுயிர் – தாயே இங்கு
    பிணமானது நீ பெற்ற உயிர்
    பிரிவில் தான் உணர்கிறேன்
    பித்துப்பிடித்து நான் செய்த தவறுகளையே..

    “ஆண்டாண்டு காலம் அழுது புலம்பினார் மாண்டார் திரும்புவதில்லை”
    ஆண்டாண்டு காலம் நான் இனி வாழ்ந்தாலும்
    ஆதரவளிக்க எவருமில்லை..

    தவறவிட்ட தங்கத்தை எண்ணி ஏங்குகிறேன்
    தக்க வைத்துக் கொ‌ள்ளு‌ங்க‌ள் நீங்களாவது
    தங்கள் கையிலிருக்கும் தங்கத்தை
    தாயெனும் தெய்வத்தை..!

    *** 

    ”அந்தோ! தேசமில்லை அவர்கள் வசிக்க; நேசமில்லை அவர்கள் சுகிக்க” என்று கதியற்று அகதியாய் அலையும் மனிதரின் அவதியை உணர்வுபூர்வமாய்த் தன் கவிதையில் பொதிந்து தந்திருக்கின்றார் திருமிகு. மா. பத்ம பிரியா.

    துரத்தப்பட்ட உறவு

    தேசமில்லை
    உன் தேசமில்லை
    ஓயாத ஓலம்….
    அவர்களுக்கோ
    நேசமில்லை
    நெஞ்சில் நேசமில்லை
    மீளாத சோகம்…
    அகதி எனும் கேலியாய்
    தூற்றும் தூவேசக் குரல்
    காற்றில் தெறிக்க
    தொலை தூர பயணத்தில்
    மண்ணில் விதைக்கப்பட்டவர்கள் ஏராளம்
    பாலியல் அத்துமீறல்கள் தாராளம்
    ஆண் என்றால் கணநேரம் துயிலலாம் தெருவோரம்
    பெண்ணென்றால் என் செய்ய?
    மணல்மேடுகள் சவக்குழிகளாக
    உறவுகளும் உடைமைகளும் சிதறவிட்டு
    அகதியாய் அலையவிடும்
    பாவிகளே
    என்று தீரும்
    எங்கள் சுதந்திர தாகம்.

    ***

    படத்தின் வழியே வாழ்க்கைப் பாடத்தினைப் போதித்திருக்கிறார்கள் நம் கவிஞர்கள். கருத்துச் செறிவுமிக்க அவர்களின் கவிதைகளுக்கு என் நன்றியும் பாராட்டும்!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதையாக நான் தேர்வுசெய்திருக்கும் கவிதை இனி!

    என் குடியிருப்பு

    கடற்கரையே என் குடியிருப்பு!
    கஞ்சி ஊத்த எனக்கு,
    காவல் காக்க எனக்கு
    கடற்தாயே துணையிருப்பு!
    காத்தாடி வேணாம்,
    கதவும் தேவை யில்லை!
    வாடகை தர வேணாம்!
    வரி கட்ட வேணாம்!
    போன சுனாமியிலே
    பொண்டாட்டி
    போய் விட்டாள்!
    படகும் போச்சு!
    அடுத்தடுத்த அலை அடிப்பில்
    குடிசையும் போச்சு!
    பிடிச்ச மீனெல்லாம் போச்சு!
    காசும் போச்சு!
    கட்டிய வேட்டியும் போச்சு!
    கரையிலே கிடந்த
    போர்வையே கூரை யாச்சு!
    கோரமாய்த் தாக்கிய
    சுனாமி அழிவைக்
    காண வந்த
    முதல் அமைச்சர்
    குடிசை கட்டித் தருவதாய்
    உறுதி கூறினார்!
    இனிதாய்ப் பேசினார்!
    குடிசை கட்ட வந்த போது
    நிலம் விற்க மறுத்து விட்டார்
    நிலச் சொந்தக் காரர்!
    இந்தக் குடியிருப்பில்
    இனிப் பயமில்லை எனக்கு!
    சுனாமி அடித்தாலும்
    புயல் அடித்தாலும்
    புதுசாய்க் கட்ட
    ஓலைப் பாய் கிடைக்காதா?
    ஒடிந்த கம்பு ஒன்று
    மிதக்காதா?
    கடற்கரையிலே வாழ்ந்து
    கடலிலே புதையும்
    ஜடங்களுக்கு
    இறுதிச்
    சடங்கும் இல்லை!
    இரங்குவாரும்
    இல்லை!

    கடற்கரையே என் குடியிருப்பு; கடலன்னையே என் துணையிருப்பு; வானமே என் மேற்கூரை; பூமியே என் பஞ்சணை! என எதை இழந்தாலும் நம்பிக்கை இழக்காது வறுமையிலும் செம்மையாய் வாழும் மனிதனைக் காணமுடிகின்றது இக்கவிதையில்.

    ”எதைக்கொண்டு வந்தோம் நாம் இழக்க?” எனும் விட்டேற்றியான மனப்பாங்கோடு, துள்ளிவரும் கடலோரம் பள்ளிகொண்டிருக்கும் இந்த மனிதரைப் போல் கவலையின்றி வாழும் கலையை அனைவரும் கற்றுவிட்டால் வாழ்வில் துன்பமில்லை; ஒரு துயரமில்லை!

    ஏழையின் எதிர்பார்ப்பில்லா மனநிலையை எளிமையாய் எடுத்தியம்பியிருக்கும் திரு. சி. ஜெயபாரதன் இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்வாகின்றார். அவருக்கு என் பாராட்டுக்கள்!

    Share
  • குறளின் கதிர்களாய்…(161)

     

    செண்பக ஜெகதீசன்

     

    செய்தக்க வல்ல செயக்கெடுஞ் செய்தக்க

    செய்யாமை யானுங் கெடும்.

           –திருக்குறள் –466(தெரிந்து செயல்வகை)

     

    புதுக் கவிதையில்…

     

    நாடு நலம்பெற மன்னன்,

    செய்யக்கூடாதவற்றைச்

    செய்தால் கெடுவான்..

     

    நல்லாட்சிக்குச்

    செய்யவேண்டியதைச்

    செய்யாமல் விட்டாலும்

    கேடுதான் வரும்…!

     

    குறும்பாவில்…

     

    செய்யக்கூடாதவற்றை மன்னன் செய்தாலும், 

    செய்யவேண்டியதைச் செய்யாமல் விட்டாலும்

    கேடுதான் வரும் அரசினுக்கே…!

     

    மரபுக் கவிதையில்…

     

    செய்யும் செயல்வகை தெரிந்தேதான்

         செயல்பட வேண்டும் மன்னவனும்,

    செய்யக் கூடா செயல்களையே

       செய்தால் கெடுவான் அன்னவனே,

    செய்ய வேண்டிய செயல்களையும்

      செய்யா தவனே விட்டுவிட்டால்,

    உய்யும் வகைதான் ஏதுமில்லை

      உறுதியாய் வந்திடும் கேடுதானே…!

     

    லிமரைக்கூ..

     

    செய்யக் கூடாததைச் செய்யாதே,

    செய்தாலும், செய்யவேண்டியதை விட்டாலும்

    சேர்ந்திடும் கேடுதான் பொய்யாதே…!

     

    கிராமிய பாணியில்…

     

    தெரிஞ்சிக்கோ தெரிஞ்சிக்கோ

    செய்யவேண்டியதத் தெரிஞ்சிக்கோ,

    செய்யுமுன்னே தெரிஞ்சிக்கோ

    தெரிஞ்சபடி நடந்துக்கோ..

     

    செய்யக்கூடாததச் செஞ்சாலே

    செய்யிறவனுக்குக் கேடுதான்,

    ராசாவோடச்

    சேந்தே அழியும் நாடுதான்..

     

    அதுபோல

    செய்யவேண்டியதச் செய்யாமவுட்டாலும்

    சேந்துவருமே கேடுதான்..

     

    அதால,

    தெரிஞ்சிக்கோ தெரிஞ்சிக்கோ

    செய்யவேண்டியதத் தெரிஞ்சிக்கோ,

    செய்யுமுன்னே தெரிஞ்சிக்கோ

    தெரிஞ்சபடி நடந்துக்கோ…!

     

     

    Share
  • கோப்புக்கூட்டல்: இன்றைய கோப்பு: [5]

    -இன்னம்பூரான்

    ஆங்கிலத்தில் ‘எல்லாவற்றையும் உட்படுத்திய’ என்ற பொருள் கூறும் ecumenical என்ற சொல் உணர்த்தும் இலக்கை, ஒரு பெரிய கோரிக்கையாக முன்வைக்கிறேன். அதன்பொருட்டு, ஒரு கோப்புக்கூட்டல் செய்ய விரும்புகிறேன்.

    innam

     

    இன்றைய கோப்பு: [5]
    மார்ச் 25, 2017

    இந்தியாவில் ஜனநாயக ஆட்சி நடக்கிறது. பொதுமக்களில் பெரும்பாலோர் வாக்காளர்கள். அவர்களின் பொன்னான வாக்கைப் பெற்றோ/கைப்பற்றியோ/அபகரித்தோ/ விலைக்கு வாங்கியோ/மற்றும் பல உத்திகளில் ஒன்றின் மூலமாகவோ அடைந்து, மாநிலச் சட்டசபைகளிலோ அல்லது நாடாளும் மன்றதிலோ மக்களின் பிரதிநிதிகள் சட்டம் இயற்றுகிறார்கள், அரசாளும் அமைச்சரவையை அமைக்கிறார்கள், அரசு இயந்திரத்தை மக்கள் நலத்துக்கோ சுயநலத்துக்கோ பயன்படுத்துகிறார்கள். முதல் தேர்தலில் போட்டியிட்டவர்களில் பெரும்பாலோர் செல்வந்தர்கள் அல்ல. இன்றைய நிலை வேறு. மேற்படி மன்றங்களில் கோடீஸ்வர்கள் கோலோச்சுகிறார்கள். அவர்களுக்கு எக்கச்சக்கமான ஊதியம், சலுகைகள், மான்யங்கள்; மேலும் சமுதாய மேன்மைக்குத் தன்னிச்சையாக உதவ, கோடிக்கணக்கான செல்வத்தின் மேல் உரிமை. அண்மையில் ஒரு எம்.பி. ஒரு விமான நிறுவனத்தின் நிர்வாகியைப் பொதுஇடத்தில் செருப்பால் பலமுறை அடித்து, அவருடைய மூக்குக்கண்ணாடியை உடைத்து, வசைகள் பல பாடி அவமதித்தார். அவர்மீது வழக்கு. விமான நிறுவனங்கள் அவரை ஏற்றுக்கொள்ளாததால், அரசு நடத்தும் ரயிலில் பயணித்தார். அதில் அவருக்கு இடம் கொடுத்தது, வழக்கு நிலுவையில் இருக்கும்போது, நியாயமா? அதுவும் அதுபற்றி மார்தட்டி அகம்பாவத்துடன் பேசும்போது. அவரை நம்பி நட்டாற்றில் இறக்கப்பட்ட வாக்காளர்கள் அவரை உதற முடியுமா? இது ஒருபுறம் இருக்க.

    ஒரு நாள் எம்.பி. ஆக இருந்தாலும் ஆயுள் முழுதும் ஓய்வூதியம் உண்டு என்ற தோற்றம் நிலவுகிறது. உச்ச நீதிமன்றம் இந்த ஆனானப்பட்ட எம்.பி.கள் பெறும் சலுகைகள்தான் என்ன என்று ஒரு பொதுவழக்கை விசாரிக்கும்போது, மத்திய அரசை/தேர்தல் அதிகாரமையத்தை வினவ முயன்றவுடன், எல்லாக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.மகாஜனங்கள் சினம் மிகுந்து சண்டைக்கோழி மாதிரி சிலிர்த்துக்கொண்டனர். ஜெயராம் ரமேஷ் காங்கிரஸார். அவர் ஒரு உச்சமன்ற நீதிபதி 80% எம்.பி. கள் கோடீஸ்வரர்கள் என்று சொன்னதுக்கு ஆக்ஷேபிக்கிறார். சினம் மிகுந்த நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ‘பார்லிமெண்ட் அங்கத்தினர்களின் ஊதியம், படிகள், சலுகைகள் வகையறா பற்றி விவாதிக்க, முடிவுஎடுக்க பார்லிமெண்ட் மட்டும்தான் அதிகாரம் வகிக்கும் என்கிறார். அதாவது, ‘வாக்காளர்களின் பிரதிநிதிகள் தங்கள் சலுகைகளைத் தாங்களேதான் நிர்ணயிக்க உரிமை உண்டு. மற்றவர் வந்து புகல இங்கு என்ன நீதி’ என்கிறார். பேஷ்!

    ஒரு சின்னக் கணக்கு. அது பூரணமானது இல்லை என்றாலும், விஷயத்தை பிட்டுப் பிட்டு வைக்கிறது.17 கட்சிகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. அதில் கோடீஸ்வர தி.மு.க. இல்லை. அந்தஸ்து விஷயம் பின்னர் நோக்கலாம். நாடாளுமன்றத்தில்  2009இல் 521 எம்.பி.களின் செல்வநிலை: 58% கோடீஸ்வரர்கள். 2014இல் 542 எம்.பி.களின் செல்வநிலை: 82% கோடீஸ்வரர்கள்.

    பிஜேபி:

    2009: 110 எம்.பி.களின் செல்வநிலை: 50% கோடீஸ்வரர்கள். 2014இல் 251 எம்.பி.களில் 84% கோடீஸ்வரர்கள்.

    காங்கிரஸ் 2009இல் 199 எம்.பி.களின் செல்வநிலை: 71% கோடீஸ்வரர்கள். 2014இல் 44 எம்.பி.களில் 80% கோடீஸ்வரர்கள்

    ஏடிஎம்கே 9 எம்.பி.களின் செல்வநிலை: 56% கோடீஸ்வரர்கள். 2014இல் 37 எம்.பி.களில் 78% கோடீஸ்வரர்கள்.

    தி.முக. மாஜி எம்.பிகள் ஒரு கூட்டணி வைத்தால் கோடீஸ்வரர் கும்பலாக இருக்கும் என்பவர்களும் உண்டு.

    அரசியல் சாஸனப்படி நாடாளும் மன்றம் ஒரு செல்வந்தர்கள் நிலையமாக அமைந்தாலும், அவர்களை மேம்படுத்திய பாமரமக்களுக்கு வாய்ஸ் கிடையாதா?

    என்னத்தைச் சொல்ல? அந்த நீதிபதியையும், இந்தக் கட்டுரையாளரையும் பார்லிமெண்டார் வாட்டி எடுக்கலாம். அந்த கெய்க்வாட் அதற்கு ஆதரவு தெரிவிப்பார். அவர் தான் செருப்படி மக்கள் பிரதிநிதி மன்னர்பிரான்.

    எனக்கு ஓர் ஐயம் எழுகிறது. இங்கிலாந்து அரசியல் சாஸனப்படி மஹாராணி தான் சகல மேலாண்மை; நடைமுறையில் இல்லை என்பது வேறு விஷயம். ஸர் ஹென்ரி போல்லக் என்ற அரசியல் ஆய்வாளரின் பொன் வாக்கு:

    “மேலாண்மை ( Sovereign) எல்லா நீலக்கண் கொண்ட சிசுக்களை கொல்லவேண்டும் என்று ஆணையிட்டால், அதற்கு அப்பீல் இல்லை. ஆனால், அவர் அரியணையிலிருந்து இறங்கவேண்டும்.’

    இந்தப் பொன்வாக்கு இங்கு செல்லுபடிஆகுமா?

    -#-

    சித்திரத்துக்கு நன்றி:

    https://img.clipartfest.com/337e687de3a0fa4294d85e864d70b202_sovereignty20clipart-popular-sovereignty-clipart_450-335.jpeg

     

     

     

    Share
  • உதிரிப்பூக்கள்

    ரா.பார்த்தசாரதி

     

    இறைவனிடத்தில் அர்ச்சனைப் பூக்களாய் வீழ்கின்றோம்

    மனிதனின் இறப்பின் போது காலடியில் மிதிப்படுகின்றோம்

    யாரோ இறந்ததிற்கு  எங்களை மிதித்து கொல்கின்றனரே

    மணமானாலும், பிணமானாலும் கடைசியில் வீசி எறிகின்றனரே !

     

    நாங்கள் பல நிறங்களில் இருந்தாலும் எங்களுக்கு ஜாதி இல்லை

    எங்களின் மணம் பலவிருந்தாலும் எங்களிடத்தில் போலி இல்லை

    உதிரிப்பூவானாலும், மாலையானாலும் எங்கள் அழகே ஒரு கவர்ச்சி !

    எங்களை சூடியவர்களும்  அடைவதோ பெருமிதத்தில் மகிழ்ச்சி !

     

    மணமகன், மணமகள் கழுத்தில் அடையாளமாக தொங்குகிறோம்

    அரசியல் தலைவர்கள் கழுத்தையும் பகடிற்காக  அலங்கரிக்கின்றோம்

    பாலியில் செய்யும் வேசியும் எங்களால் தன் அழகினை காண்பிக்கிறாள்

    எங்கள் நறுமணத்தை உடலுக்கு நறுமண திரவியமாய்  பூசுகிறார்கள் !

     

    பல உதிரிப்பூக்கள் நாறுடன் சேர்த்து  பூமாலையாகிறது

    பல கைகள் சேர்ந்தால்தான் ஒரு திட்டம் முடிவாகிறது

    வாசமில்லா  மலருக்கு  என்றும் மதிப்பு  கிடையாது

    நேசமில்லா உறவிற்கு என்றும் உயர்வு கிடையாது !

     

    முதலிரவில் படுக்கையில் கிடப்போம்,மறுநாள் குப்பைத் தொட்டியில்

    காகித பூவிற்கு தரும் கவர்ச்சி  எங்கள் உண்மை தன்மைக்கு கிடைப்பதில்லை

    எங்களை மிதிப்பவர்களே  நீங்கள் இறந்தால் மீண்டும் பிறப்பதில்லை

    நாங்கள் உதிர்வதே மீண்டும், பிறப்பதற்குத்தான் என்று  எவருமறியவில்லை

     

     

     

    Share
  • சூரிய குடும்பத்தில் முன்பு விலக்கப்பட்ட புறக்கோள் புளுடோ மீண்டும் ஒன்பதாம் கோள் தகுதி பெறுகிறது

     aj
    குள்ளக்கோள்  புளுடோ 

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    ++++++++

    புளுடோ வுக்கு மீண்டும்
    சூரிய மண்டலக் கோள் மதிப்பீடு  !
    பரிதியைச் சுற்றும் கோள்கள் மீண்டும்
    ஒன்பது என்று மாறியது !
    புதன் முதல் புளுட்டோ வரை
    விதவிதப் பாறை, வாயுக் கோள்களில்
    விலக்கப்  பட்டது புளுடோ !
    நெப்டியூன் இறுதிக்கோள் என்பது மாறி
    இப்போது மீண்டும் புளுடோ
    ஒன்பதாம் கோள் தகுதி பெற்றது
    அறிவிக்கப் பட்டது  !
    குள்ளக் கோள் புளுடோ
    கோளாய் உயர்நிலை பெறும் !
    வடிவத்தில் புதன் கோளுக்குப்
    பாதி விட்டம்  !
    எட்டுக் கோள்கள் பரிதியை ஒரே
    மட்டத்தில்
    சுற்றி வரும் போது
    குள்ளக் கோள் புளுடோ
    கோணச் சாய்வு  நீள்வட்டத்தில்
    சுற்றி வரும்  தனித்து!

    +++++++++++++++

    “நான் கெஞ்சிக் கேட்கிறேன் : (பரிதிக்கு) எத்தனைக் கோள்கள் உள்ளன வென்று உறுதியாகக் காரணங்கள் கூற முடியாதா உங்களுக்கு ?  (இப்போது) அந்தப் பிரச்சனை தீர்க்கப்பட்டு விட்டது . . !”

    ஜொஹான்னெஸ் கெப்ளர் (1571-1630)

    ஒன்றை மட்டும் உறுதி செய்வேன்.  ஒப்பில்லா எந்த ஓர் விஞ்ஞான ஆணையகம் செப்பியதற்கும் மாறாக, புளுடோ ஒரு கோள் தகுதி கொண்டது நான் சொல்கிறேன்.  அதுபோல் பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் ஈரோப்பாவும், பூமியின் நிலவும்  கோள்களே.

    கிர்பி ருனியான்  [Scientist, Johns Hopkins University] 

    புளுடோவின்  சாய்வு நீள்வட்டச் சுற்றுப்பாதை
    [சிவப்பு நிறத்தில்]
    2006 இல் புகழ்பெற்ற அகிலநாட்டு வானியல் கூட்டகம்  [International Astronomical Union (IAU)] புளுடோவின் கோள் தகுதியை நீக்கி, சூரிய குடும்பக் கோள்கள் ஒன்பதிலிருந்து எட்டான விளக்கம் அனுமதி பெற்றாலும்,  அந்த மாற்ற முடிவும் விஞ்ஞானத் தர்க்கத்துக்குள் மாட்டிக் கொண்டது.  அது பொருளற்ற முடிவென்று, புளுடோவைப் பற்றிச் சாதமாக, அடுத்த வார [மார்ச்சு 21, 2017] வானியல் பேருரையில் மாற்றி அறிவிக்கப் போகிறேன்.

    கிர்பி ருனியான்  [Scientist, Johns Hopkins University] 

    பனிப்பாறைக் கோள் புளுடோ பரிதியின் ஒன்பது கோள்களில் சிறியது. நமது நிலவில் முக்கால் அளவு விட்டம்.  ஆயினும் அதன் மேற்தளத்தில் நிகழ்பவை யாவும் கோளைச் சார்ந்த குணப்பாடை ஒத்தவை.  கோளுக்கு மாறாக எதுவும் புளுடோவுக்கு இல்லை.
    கிர்பி ருனியான்  [Scientist, Johns Hopkins University] 

    +++++++++++++++

    புறக்கோள் புளுடோவுக்கு மீண்டும் சூரிய மண்டலக் கோள் தகுதி

    2006 ஆம் ஆண்டில் அகிலநாட்டு வானியல் பேரவை விஞ்ஞானிகள் [International Astronomical Union (IAU)] கூடிக் குள்ளக்கோள் புளுடோ, சூரிய மண்டலக் கோள் தகுதி பெறாது என்று  முடிவு செய்தது, தற்போது 2017 மார்ச்சில் தர்க்கத்துள் சிக்கியுள்ளது.  அதாவது சூரிய மண்டலக் கோள்கள் எட்டு, ஒன்பது அல்ல என்னும் கோட்பாடு ஏற்றுக் கொள்ளப்படவில்லை, இப்போது.  புகழ்பெற்ற விஞ்ஞானப் பேரவை கூற்றுக்கு மாறாகப் பரிதியின் புறக்கோள் புளுடோ சூரிய மண்டலக் கோள் தகுதி பெற்றது என்று உறுதியாகச் சொல்கிறார், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி கிர்பி ருனியான் [Kirby Runyon].  நமது  பூமியைப் போல் புளுடோவும் ஒரு கோள், அடுத்து பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் ஈரோப்பாவும் ஒரு கோள், பூமியின் நிலவும் ஒரு கோள், அவைபோல் சூரிய மண்டலத்தில் மறுக்கப்பட்டுள்ள 100 மேற்பட்ட அண்டங்களும் கோள்களே என்று வெகு அழுத்தமுடன் கூறுகிறார், கிர்பி ருனியான்.

    சமீபத்தில் நாசாவின் தொடுவான் விண்ணுளவி [New Horizon Space Probe] புளுடோவை 8000 மைல் தூரத்தில் நெருங்கிப் பற்பல புதிய தகவலை அனுப்பியுள்ளது.  புறக்கோள் புளுடோ நமது பூமியிலிருந்து சுமார் 4.67 பில்லியன் மைல் தூரத்தில் உள்ளது.  அந்தக் கோளுக்குப் புதியதாக ஒரு விளக்கமும், அதற்கு நியாயப்பாடும் அளிக்கிறார் கிர்பி ருனியான்.  அவரது தலைமைக்குக் கீழ் ஐந்து அகில நாட்டு விஞ்ஞானிகள் ஒப்புமை தந்து இப்போது அந்தக் கோட்பாடு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

    1. அலன் ஸ்டெர்ன் & கெல்ஸி சிங்கர் [Southwest Research Institute, Boulder, Colarado]
    2. டாட் லௌவர் [National Optical Astronomy Observatory, Tucson, Arizona ]
    3. வில்லியம் கிரண்டி [Lowell Observatory, Flagstaff, Arizona]
    4. மைக்கேல் சம்மர்ஸ் [George Mason University, Fairfax, Virginia]

    அந்தக் கூட்டறிக்கை 2017 மார்ச் 21 இல் நடக்கும் நிலவு & கோள் விஞ்ஞானப் பேரரங்கில்  [Lunar & Planetary Science Conference] வெளியாகப் போகிறது.  கிர்பி ருனியான் தர்க்க வினாக்களுக்குப் பதிலும் கூறுவார்.

    ++++++++++++++

    பூமியும் மற்ற எல்லாக் கோள்களும் தம்தம் இடங்களில் தங்கி இருக்க வேண்டும் என்பதும், பிரளயம் ஏற்படாத வரை அவை இருப்பிடத்திலிருந்து மாறிச் செல்லா என்பதும் இயற்கை நியதி !

    அரிஸ்டாட்டில் (கி.மு. 382-322)

    “இப்போது நான் குள்ளிக் கோள் புளுடோவைக் (Dwarf Planet Pluto) கண்டுபிடித்த விஞ்ஞானியின் மனைவி”

    பாட்ரீஷியா, புளுடோவைக் கண்டுபிடித்த டாம் டாம்பாஹின் மனைவி (2006)

    பரிதியின் கோள்கள் வெவ்வேறு கட்டங்களில் விருத்தியான போது, பூமியை வடித்த ஒரே மாதிரி விசைகளால் அவையும் செதுக்கப்பட்டன.  ஆதலால் ஒரே மாதிரி தள வடிவமைப்பு, உயிரினத் தோற்றம், நமது கடந்த காலம், எதிர்காலம் அவற்றிலும் நிகழலாம் !

    அமெரிக்க ராக்கெட் விஞ்ஞானி ராபர்ட் கோடார்டு (1882-1945)

    புளுடோவின் நிகழ் காலம் இறந்த காலமானது !

    1930 ஆம் ஆண்டு புளுடோ கண்டுபிடிக்கப்பட்ட காலம் முதலே அது பரிதி மண்டலத்தின் ஓர் அண்டக் கோள் என்னும் கருத்தில் அடிப்படை ஐயப்பாடுகள் விஞ்ஞானிகளிடையே எழுந்தன !  2006 ஆம் ஆண்டில் புளுடோ உலக விஞ்ஞானிகளால் பரிதிக் குடும்பத்திலிருந்து நீக்கப் பட்டு, புதிய கோள் குழுவில் ஒன்றாகக் “குள்ளிக் கோள்” (Dwarf Planet) என்று அழைக்கப் படுகிறது !  ஒன்பதாவது கோள் புளுடோவை முதன்முதல் கண்டுபிடித்த வானியல் நிபுணர் கிளைடு டாம்பாஹ் (Clyde Tombaugh) தனது 90 ஆவது வயதில் (1997) காலமானார்.  அவரை எரித்த சாம்பலைப் “புதிய தொடுவானம் விண்ணுளவியில்” (New Horizon Space Probe) வைத்து விண்வெளி எங்கும் நாசா விஞ்ஞானிகள் தூவினர்.  2015 இல் திட்டப்படிப் புதிய தொடுவானம் விண்கப்பல் பயணம் செய்து, புளுடோவை உளவுவதற்கு முன்னமே புளுடோ பரிதி மண்டலத்தின் பட்டியலிலிருந்து நீக்கப் பட்டது குறித்து மிகவும் மனமுடைகிறார் 93 வயதான அவரது விதவை மனைவி பெட்ரீஷியா (Patricia) !  “இப்போது நான் குள்ளிக் கோள் புளுடோவைக் கண்டுபிடித்த விஞ்ஞானியின் மனைவி” என்று தனது பெயர் தாழ்ந்து போய் விட்டதென்று அவர் கலங்குகிறார் !

    புளுடோ ஏன் பரிதி குடும்பத்திலிருந்து நீக்கப்பட்டது ?

    2006 ஆம் ஆண்டில் உலக வானியல் விஞ்ஞானிகள் [International Astronomical Union (IAU)] பிரேகில் (Prague) ஒன்றுகூடி, புளுடோ அண்டக் கோள்களின் பண்பாட்டு நிலையை ஒத்திருக்க வில்லை என்று முடிவு செய்து அதைப் பரிதிக் குடும்பத்திலிருந்து நீக்கி விட்டார்கள்.  பிறகு அதைக் கோளின் மதிப்பு நிலையிலிருந்து தாழ்த்திக் “குள்ளிக் கோள்” (Dwarf Planet) என்னும் புதிய குழுவில் தள்ளினார்கள் !  1992 இல் கியூபெர் வளையத்துக் கோள் (Kuiper Belt Object) ஒன்றைக் கண்டுபிடித்த பிறகு, டேவிட் ஜெவிட், ஜேன் லு (David Jewitt & Jame Luu) மற்றும் சில வானியல் நிபுணர்கள், வளையத்துக்கு அருகிலே சூரிய மண்டலத்தில் ஏராளமான புதிய அண்டக் குள்ளிகளைக் (70,000 Small Planet Bodies) கண்டார்கள். அவற்றில் எரிந்து போன வால்மீன்கள், விண்கற்கள் நெப்டியூன் கோளுக்கு அப்பால் பரிதியிலிருந்து 2.8-4.5 பில்லியன் மைல் தூரத்தில் இருப்பதை நோக்கினார்கள் !  அத்தகைய புதிய கோள் குள்ளிகளைக் கியூபெர் வளையத்தில் கண்டுபிடித்தது விஞ்ஞானிகளுக்குக் கோள்களைப் பற்றிய புதியதோர் கருத்தை உருவாக்கியது.

    புதிய கண்ணோட்டத்தில் கோள்கள் என விஞ்ஞானிகள் குறிப்பிடுபவை எவை ?  2006 இல் பிரேகில் கூடிய உலக வானியல் விஞ்ஞானிகள் கோளுக்கு ஒரு புதிய குறிவிளக்கம் (Definition of a Planet) தந்தனர்.

    முதன்முறை வந்த குறிவிளக்கம் :

    முதலாவது : கோள் என்பது விண்வெளியில் ஒரு விண்மீனைச் சுற்றி வருவது.  அது விண்மீனும் இல்லை.  வேறு ஒரு கோளின் துணைக்கோளும் இல்லை.

    இரண்டாவது : அதன் நிறை முழுவதும் ஈர்ப்பாற்றலால் இழுத்துச் சுருக்கப்பட்டுக் கோளமாய் உருட்டி யிருக்க வேண்டும்.

    மூன்றாவது :  அதன் வடிவம் பெரிதாக இருந்து சுற்றுவீதியில் எதுமில்லாது விலக்கப் பட்டிருக்க வேண்டும்.

    கோள் குறிவிளக்கம் தர்க்கத்துக்குள் சிக்கியது !

    உலக விஞ்ஞானிகள் பலர் முடிவு செய்த குறிவிளக்கத்தை ஏற்றுக் கொள்ளாத விஞ்ஞானிகள் சிலர் இருக்கிறார்கள்.  நாசாவின் “புதிய தொடுவான் விண்ணுளவிக் குறிப்பணியின் தலைவர் (New Horizon Space Probe Mission Leader) அலன் ஸ்டெர்ன் (Alan Stern) IAU விஞ்ஞானிகள் கூறிய மூன்றாவது விளக்கம் தவறு என்று சொல்கிறார்.  ஆகவே மூன்றாவது விளக்கம் தர்க்கமுள்ளதாக ஆகிவிட்டது. எப்படி ?  பூமி, செவ்வாய், வியாழக் கோள், நெப்டியூன் ஆகிய நான்கும் மூன்றாவது விதிக்கு முரணாக உள்ளன.  அந்த நான்கு கோள்களைச் சுற்றிலும் உள்ள தளப் பாதைகளில் எண்ணற்ற விண்கற்களின் குறுக்கீடுகள் உள்ளதால் கோள்கள் எனப்படும் குறிவிளக்கத்திற்கு அவை முரண் படுகின்றன என்று அலன் ஸ்டெர்ன் போல் எதிர்ப்பவரும் சிலர் இருக்கிறார்கள்.  பின்னால் IAU விஞ்ஞானிகளின் குறிவிளக்கத்துக்கு மேம்பட்ட செம்மை விளக்கமும் வெளிவந்தது.

    மேம்பட்ட குறிவிளக்கம் :

    1.  விண்மீன் ஒன்றைச் சுற்றி வருவது கோள்.

    2.  பெரிதாக உருண்டை வடிவில் இருப்பது கோள்.

    3.  அது பழுப்புக் குள்ளிபோல் (Brown Dwarf) ஆகப் பெரிதாக இருக்கக் கூடாது.  13-75 மடங்கு நிறையுள்ள வியாழக் கோள் அல்லது விண்மீன் போல “தவறிய விண்மீனாக (Failed Star) இருக்கக் கூடாது.

    கோள்களின் குறிவிளக்கம் எதிர்காலத்தில் நுட்பமாக இன்னும் செம்மைப்படலாம் அல்லது மாறலாம்.  21 ஆம் நூற்றாண்டு புதுக் குறிவிளக்கப்படி மைய நிறையுடைய பரிதியை எட்டுக் கோள்களும், நான்கு குள்ளிக் கோள்களும், மற்றும் எண்ணற்ற சிறு அண்டங்களும் (Small Bodies) சுற்றி வருகின்றன !

    புளுடோவின் நீள்வட்டக் கோணச் சுற்றுவீதி !

    பரிதியைச் சுற்றி வரும் புளுடோவின் நீள்வட்டச் சுற்றுவீதி மட்டும் மற்ற கோள்களின் சீர் மட்ட வீதிகள் போலின்றி 17 டிகிரிக் கோணத்தில் சாய்ந்துள்ளது.  மேலும் அதன் சுற்று வீதி நெப்டியூன் சுற்றுவீதியைத் தனித்துவ நிலையில் இரண்டு இடங்களில் வெட்டிக் குறுக்கிடுகிறது !  மேலும் புளுடோவின் நீள்வட்ட வீதி கியூபெர் வளையத்தை ஊடுருவிச் சென்று மீள்கிறது.  நெப்டியூனும், புளுடோவும் தம் பாதைகளில் சுற்றிவரும் போது எப்போதாவது இரண்டும் ஒன்றை ஒன்று நெருங்கும் தருணத்தில் புளுடோ நெப்டியூனில் மோதித் தகர்ந்து போய் விடலாம்.  அல்லது நெப்டியூன் ஈர்ப்பு மண்டலத்தில் புளுடோ சிக்கிக் கொண்டு, நிரந்தரமாய் அதன் துணைக்கோளாகி விடலாம் !  அத்தகையதோர் விந்தைக் காட்சி எப்போது நிகழும் என்று கணனி மூலம் நுட்பமாகக் காலத்தைக் கண்டு விடலாம் !

    ஒளிநிறப் பட்டை ஆய்வில் [Spectroscopic Analysis] புளுடோவில் எந்த வித வாயும் இருப்பதாக அறிய முடிய வில்லை. புளுடோவின் வாயு அழுத்தம் மிக மிக பலவீன மானது. காரணம், புளுடோ மண்டலத்தின் கடும் குளிரில் [-230 டிகிரி C] ஹைடிரஜன், ஹீலியம் தவிர மற்ற எல்லா வாயுக்களும் குளிர்த் திரவமாகும்; அல்லது தணிவு [Liquefied or Frozen] நிலை பெறும்! புளுடோ வலுவற்ற ஈர்ப்பு சக்தி கொண்டுள்ளதால், தணிவாகாத வாயுக்கள் விண்வெளியில் பறந்து போய்விடும்! புளுடோ ஒரு காலத்தில் நெப்டியூன் கோளுக்குச் சந்திரனாய் இருந்து, ஓடுகாலித் துணைக் கோளாய்த் [Runaway Satellite] தன்னை விடுவித்துக் கொண்டு பின்னல் பிரிந்திருக்கக் கூடும் என்று எண்ணப் படுகிறது!

    சூரிய மண்டலம் எப்போது தோன்றியது ?

    வானியல் விஞ்ஞானிகளும், பூதளவாதிகளும் (Astronomers & Geologists) பூமியின் வயதைக் கணித்து அதிலிருந்து பரிதி மண்டலத்தின் தோற்ற வயதை அறியப் பல்வேறு முறைகளைக் கையாள்கிறார்.  நாமறிந்த பூமிப் பாறைகளின் கதிரியக்கத் தேய்வு வீதங்களைப் “பாறைக் கதிரளப்புக் காலக் கணிப்பு” மூலம் (Radiometric Dating of Rocks) கணக்கிட்டுச் சூரிய குடும்பம் சுமார் 4.6 பில்லியன் ஆண்டுக்கு முன்பு தோன்றியிருக்கலாம் என்று கருதுகிறார்கள்.  பூமியின் பூர்வீகப் பாறை வயது கதிரியக்கத் தேய்வு வீதக் கணிப்பில் 3.9 பில்லியன் ஆண்டுகள் என்பது தெரிய வருகிறது !  பூதளத்தட்டு நகர்ச்சிகள் (Plate Tectonics) தூண்டி பூமியில் எழும் பூகம்ப எரிமலை நிகழ்ச்சிகளால் பூர்வீகப் பாறைகள் நிலைமாறி அவற்றைக் காண முடியாமல் சிதைத்து விடுகின்றன !

    பூமியின் பூர்வீகப் பாறைகளைத் தவிர விண்வெளிக் கற்கள், எரிகற்கள், நிலவிலிருந்து அல்லது செவ்வாய்க் கோளிலிருந்து வீழும் விண்கற்கள் மிகத் துல்லியமாகப் பரிதி மண்டல வயதுக் காலத்தை நிர்ணயம் செய்ய உதவுகின்றன.  அந்த மாதிரிகளின் கதிரியக்கத் தேய்வு வீதத்தைக் கணித்ததில் அவை 4.6 பில்லியன் ஆண்டு வயதைக் கொண்டவை என்று அறியப்பட்டு, பரிதி மண்டலம் அந்த வயதை ஒட்டி உண்டாகி இருக்க வேண்டும் என்று யூகிக்கப்படுகிறது.

    சூரிய குடும்பத்திலே மிகச் சிறிய புறக்கோள் புளுடோ!

    இருபதாம் நூற்றாண்டில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்த இரண்டு புறக்கோள்களில் [Outer Planets] ஒன்று, புளுடோ. மற்றொன்று அதைச் சுற்றி வரும் அதன் துணைக்கோள், சாரன் (Charon). இரண்டும் விண்வெளியில் வெகு தூரத்தில் மிகவும் மங்கிப்போய் தெரியும் கோள்கள். சூரிய குடும்பத்தின் ஒன்பதாவது கோளான புளுடோவை, அமெரிக்க வானியல் விஞ்ஞானி, கிளைடு டாம்பாக் [Clyde Tombaugh] 1930 ஆம் ஆண்டில் கண்டு பிடித்தார். ரோமானியக் ‘கீழுலகக் கடவுள்’ [God of the Underworld] புளுடோவின் பெயரால், புதுக் கோள் பெயரிடப் பட்டது.

    நெப்டியூன் கண்டுபிடிக்கப் பட்டதுபோல், புளுடோவும் வானியல் கணித முறைப்படி ஊகித்துக் கண்டு பிடிக்கப் பட்ட ஒரு கோள்!  நெப்டியூன் சுற்றி வரும் வீதி, எதிர்பார்த்த பாதை போல் இல்லாமல் புதிராக இருந்தது! இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் [1905-1916] அமெரிக்க வானியல் விஞ்ஞானிகள், பெர்ஸிவல் லோவெல் [Percival Lowell], வில்லியம் பிக்கரிங் [William Pickering] இருவரும், ஒளிந்து கொண்டுள்ள ஏதோ ஒரு புறக்கோள் பாதைத் திரிபு [Straying from the Path] செய்து வருகிறது, என்று உறுதியாக நம்பினார்கள்! அந்த நம்பிக்கையில் ஜமெய்கா மண்டவில் நோக்ககத்தில் [Observatory Mandeville, Jamaica] பிக்கரிங், புதுக் கோள் இருப்பிடத்தைக் கணித்துக், குறிப்பிட்ட விண்வெளியில் தொலை நோக்கி மூலம் தேடினார். அதே போல் லோவெல், பிளாக்ஸ்டாஃப், அரிஸோனா நோக்ககத்தில் [Observatory Flagstaff, Arizona] முயன்றார். பல வருடங்கள் தேடியும், இரண்டு விஞ்ஞானிகளும் புதுக்கோளைக் கண்டு பிடிக்க முடியவில்லை!

    இருவரும் காலஞ் சென்றபின், 1930 இல் அவரது கணிதக் குறிப்புக்களைப் பயன்படுத்தி ஓரிளைய வானியல் விஞ்ஞானி கிளைடு டாம்பாஹ் [Clyde Tombaugh], தனது புதிய தொலை நோக்கி மூலம், பல இரவுகள் தொடர்ந்து வானத்தை வேட்டையாடிக் களைத்துக் கடைசியில் [Feb 18, 1930] புதிர்க் கோளைக் கண்டு பிடித்தார். ஆனால் சில நாட்கள் பொறுத்து லோவெல் பிறந்த நாளன்று, 1930 மார்ச் 13 இல் புதுக்கோள் புளுடோ கண்டு பிடிப்பை உலகுக்கு அறிவித்தார்.

    புளுடோவைப் பற்றிய வானியல் தகவல்

    புளுடோவின் துணைக்கோள் சாரன் [Charon] 1977 இல் கண்டு பிடிக்கப் பட்டது. புளுடோவை 12,000 மைல் தூரத்தில் சுற்றி வருகிறது சாரன். மங்கலான புளுடோவின் விட்டத்தைக் கணக்கிடுவது மிகவும் கடினம்! 1994 இல் பூமியின் வட்ட வீதியில் சுற்றி வரும் ஹப்பிள் விண்தொலை நோக்கி [Hubble Space Telescope] புளுடோ [1410 மைல்], சாரன் [790 மைல்] என்று இரண்டு கோள்களின் விட்டங்களை மிகவும் துள்ளியமாக கணக்கிட உதவியது.  புளுடோவின் வடிவை ஒப்பு நோக்கினால், புதன் கோளின் விட்டம் 3030 மைல், பூமி நிலவின் விட்டம் 2100 மைல்.

    பரிதிலிருந்து 3.7 பில்லியன் மைல் தூரத்தில் சூரிய குடும்பத்தின் புறவெளிக் கோளாக யுரேனஸ், நெப்டியூன் இரண்டுக்கும் அப்பால், புளுடோ சுமார் 248 ஆண்டுகளுக்கு ஒரு முறைப் பரிதியைச் சுற்றி வருகிறது.  புளுடோ தன்னைத் தானே ஒருமுறைச் சுற்ற சுமார் 6 நாட்கள் எடுக்கிறது.  புதுக்கோள் புளுடோ பரிதியைச் சுற்றி வரும் நீண்ட நீள்வட்ட வீதி மட்டம் [Elongated Elliptical Orbital Plane], மற்ற சூரியக் கோள்கள் சுற்றும் நீள்வட்ட வீதி மட்டத்திற்கு 17 டிகிரி சாய்ந்துள்ளது, ஒரு சிறப்பான வேறுபாடு! நீண்ட நீள்வட்டத்தில் சுற்றும் புளுடோ ஒரே ஒரு கோள்தான் பரிதிக்கருகில் வரும் போது, நெப்டியூன் வீதியைக் குறுக்கிட்டு [Transit], நெப்டியூனுக்கும் முன்னே புகுந்து, பரிதியை மிகவும் நெருங்குகிறது! 1989 இல் புளுடோ அவ்வாறு நீண்ட நீள்வட்டத்தில் பவனி வந்து குறுக்கீடு செய்து, பரிதியைச் சிறு ஆரத்தில் [Perihelion] மிகவும் நெருங்கியது. பிறகு 124 ஆண்டுகள் [248/2=124] கழித்து 2113 இல் புளுடோ பரிதிக்கு உச்ச தூரத்தில், [நீள் ஆரத்தில் Aphelion] பயணம் செய்து திரும்பி, அடுத்து 124 ஆண்கள் தாண்டி கி.பி 2237 இல் மீண்டும் பரிதிக்கு அருகே வரும்!

    பரிதி மண்டலப் படைப்பில் தீர்க்கப்படாத சில புதிர்கள் !

    அண்டக் கோள்கள் ஏன் பரிதியை நீள்வட்ட வீதிகளில் ஒரே தளமட்டத்தில் சுற்றுகின்றன ?  அவற்றின் சீரொழுக்க இயக்க முறைக்கு என்ன காரணிகள் உள்ளன ?  அகக்கோள்களும், புறக்கோள்களும் சூரியனை ஏன் எதிர்க் கடிகார முறையில் காலம் மாறாமல் சுற்றி வருகின்றன ? சூரியனை மற்ற கோள்கள் போலின்றித் தன்னச்சில் சுக்கிரன் மட்டும் ஏன் நேர்க் கடிகார வக்கிர திசையில் சுற்றி வருகிறது ? பூமியின் நிலவு தன்னச்சில் சுழாது ஏன் ஒரே முகத்தைக் காட்டிக் கொண்டு புது மாதிரிச் சுற்றி வருகிறது ? தன்னச்சில் கோள்களும் எதிர்க் கடிகாரச் சுழற்சியில் சுழல்வது ஏன் ?  கோள்களின் துணைக்கோள்களும் எதிர்க் கடிகாரச் சுழற்சியில் சுற்றுவது ஏன் ?  இந்த விந்தைகள் அனைத்தும் நிபுளாக் கோட்பாடு கூறும் “சுழற்தட்டு அமைப்பு” விதியைப் பெரும்பாலும் நிரூபிக்கின்றன.

    (தொடரும்)

    ++++++++++++++++++++++++++

    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – How Many Planets are in the Solar System ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world [1998]
    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
    10 Hyperspace By : Michio kaku (1994)
    11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
    13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
    15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
    16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
    17 The Geographical Atlas of the World, University of London (1993).
    18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
    19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)
    20 Astronomy Magazine – What Secrets Lurk in the Brightest Galaxies ? By Bruce Dorminey (March 2007)
    21 National Geographic Magazine – Dicovering the First Galaxies By : Ron Cowen (Feb 2003)
    22 Astronomy Magazine Cosmos – The First Planet By : Ray Villard & Adolf Schaller & Searching for Other Earths By : Ray Jayawardhana [Jan 2007]
    23 Discover Magazine – Unseen Universe Solar System Confidential [Jan 2007]
    24 A Discover Special – Unseen Universe – Comets Captured By : Jack McClintock (Jan 31, 2007)
    25 Newsweek Magazine : The New Solar System – Our Changing View of the Universe – Requiem for a Planet Pluto (1930-2006) By : Jerry Adler
    26 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40804172&format=html(Creation of Solar System Planets)
    27 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40207221&format=html(புதனும், புளுடோவும்)
    28 Solar System Formation By Jeff Scott (October 16, 2005)
    29 New Scientist Magazine – New Planet Definition Sparks Furore (August 25, 2006)

    29(a) http://www.bizjournals.com/houston/prnewswire/press_releases/Texas/2017/03/13/DC35759

    30. http://www.space.com/43-pluto-the-ninth-planet-that-was-a-dwarf.html  [March 22, 2015]

    31. http://sci-techuniverse.blogspot.ca/2017/03/scientists-make-case-to-restore-plutos.html

    32. http://www.spacedaily.com/reports/Scientists_make_the_case_to_restore_Plutos_planet_status_999.html  [March 21, 2017]

    33.  https://en.wikipedia.org/wiki/Pluto  [March 23, 2017]

    34. http://10times.com/planetary-science-conference [March 20-24, 2017]

    35.  http://www.hou.usra.edu/meetings/lpsc2017/events/education/ [March 20-24, 2017]

    ******************
    S. Jayabarathan [jayabarathans@gmail.com]  (March 24, 2017) [R-1]

    Share
  • அகில உலக ஆன்மீக மாநாடு – மலேசியா

    பவள சங்கரி

    17424710_10208579031979839_4494339864334405030_n

    17457310_10208579030419800_3512317497006398219_n

    ஆன்மீகம் பேசும்போது ஆன்மா ஒளி பெறுவதால் அளவிலா ஆனந்தமும், ஓர் ஆழ்ந்த அமைதியும் பேச்சில் கூட வெளிப்படும் போல.. தாவரத்தின் வளர்ச்சிக்கு நீர், காற்று, ஒளி தேவை. நீர், காற்று, உணவு, சூரிய ஒளியுடன் வளரும் நம் ஜீவ உடல். நம் ஆத்மாவின் வளர்ச்சிக்கு நாம் அளிக்க வேண்டிய சக்தி எது?
    17458378_10208578885096167_6645825901139891819_n
    17425066_10208579034659906_5768972564292457908_n
    17499475_1471401082871622_6766319080233469152_n
    17342995_1471401689538228_4721280761605275778_n
    பவானி, சத்தியத்தின் சக்திநிலைச் சங்கம் , மெய்ஞ்ஞான தியான மையத்தின் தலைவர் கவாலியர் முனைவர் மதிவாணன் அவர்கள்  சார்பில் ஸ்ரீலஸ்ரீ வாலைச்சித்தர் சுவாமிகள் மலேசிய நாட்டிலிருந்து வந்திருந்து, ஜூன் 9,10,11 ஆகிய நாட்களில் மலேசியா, கோலாலம்பூர், பத்துமலை, சுப்பிரமணியர் திருக்கோவிலில் நடைபெறும் அகில உலக ஆன்மீக மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்புவிடுக்கும் பொருட்டும் ஈரோடு செங்குந்தர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டு ஆசி வழங்கினார்கள். இத்தகையதொரு அற்புதமான மேடையில் எனக்கும் ஒரு இடம் கிடைத்தது இறையருள் என்றே கொள்ளமுடிகிறது!. ஆன்மீக மாநாட்டில் கலந்துகொள்ள விரும்புவோர் கிழ்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்.
    98940 64755, 99440 77789.
    Share