தகாது தவிர்த்துநல் தக்கவை ஏற்று
யுகாதியில் எந்தரோக்க ளோடு -மகானுவாய்
சித்திறையை சேர்வதற்கு சாதகம் செய்திட
சித்திரையில் காண்பாய் ஜெயம்….கிரேசி மோகன்….!
Blog
-
யுகாதி வாழ்த்துக்கள்….!
-
’’படமும் பாடலும்’’
‘’முன்னாடி காட்டும் முகத்தை முழுநிலவாய்,
பின்னாடி காட்டும் பிறைதேய்ந்து: -கண்ணாடி
வீடு வரைகுமரி, வீதி வரக்கிழம்
காடுவரக் கூட்டும் கனல்’’….கிரேசி மோகன்….! -
மத்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை!
பவள சங்கரி
வரும் நாட்களில் கோடையின் தாக்கம் மிக அதிகமாக இருக்கப்போகிறது. இருக்கும் வெப்பத்தைவிட உணரக்கூடிய வெப்பம் மிக அதிகமாக இருக்கும் என்று மத்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் ஏற்படப்போகும் பாதிப்புகளை களைவதற்கு அனைத்து மாநிலங்களும் உடனடி நடவடிக்கைகள் எடுத்து அரசு மருத்துவமனைகளில் இதற்கென தனியாக சில படுக்கைகள் ஒதுக்க வேண்டும் என்றும் அவை நல்ல காற்றோட்டத்துடனும், குளிர் சாதன வசதி கொண்டதாகவும் இருக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பாகவே ஆந்திரா, தெலுங்கானா, குஜராத் போன்ற மாநிலங்கள் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துவிட்டன. ராஜஸ்தான், ஜெய்ப்பூர் போன்ற பகுதிகளில் உடனடி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நமது தமிழ்நாட்டில் இதுவரை இதற்கான முயற்சிகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என்பது வேதனைக்குரிய விசயம்.. சென்ற 5 ஆண்டில் மட்டும் 25,000 பேர் இதனால் உயிரிழந்துள்ளார்கள் என்பது நினைவில் கொள்ள வேண்டிய விசயம். இதுபோல நடவடிக்கைகள் எடுத்ததால் ஆந்திர மாநிலத்தில் 2015 ஆம் ஆண்டில் 2112 பேர் இறப்பு குறைந்து 2016 இல் 1000 ஆகியுள்ளதையும் கருத்தில் கொள்ளத்தக்கது
-
உமர் கயாம் ஈரடிப் பாக்கள்
பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத்
ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.
++++++++++++++++++
[40] ஒருகண நிறுத்தம், சில வினாடிச் சுவை,
கழிவுகளுக் கிடையே ஊருணி உள்ளது,
மெதுவாய்ச் செல்லும் குறியிலாப் பயணம்
எதையும் அடையாது, விரைவாய்ச் செல் !
[40]
A Moment’s Halt – a momentary taste
Of Being from the Well amid the Waste –
And Lo! the phantom Caravan has reach’d
The Nothing it set out from – Oh, make haste!+++++++++++++
[41] மனிதமா, தெய்வமா தர்க்கம் வேண்டாம்
நாளைய பிரச்சனை தனக்குள்ளே முடங்கும்
சைப்பிரஸ் அழுத்தத்தில் கைவிரல் இழக்கும்;
ஒயின் மது விற்பார் கனிவுடை அமைச்சர்.
[41]
Oh, plagued no more with Human or Divine,
To-morrow’s tangle to itself resign,
And lose your fingers in the tresses of
The Cypress-slender Minister of Wine.++++++++++++
[42] கால விரையம், வீண் முயற்சி தவிர்
இதையோ, அதையோ முயல்வதில் பிணக்கம்.
திராட்சை ரசம் குடித்தின் புறுதல் மேலாம்;
கவலை வேண்டாம் கசப்போ, இனிப்போ.
[42]
Waste not your Hour, nor in the vain pursuit
Of This and That endeavor and dispute;
Better be merry with the fruitful Grape
Than sadden after none, or bitter, fruit.++++++++++++
-
திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் .. (2)
க. பாலசுப்பிரமணியன்
இறைவன் எங்கே இருக்கின்றான்?
“தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் ” என்று இறைவனின் பெருமையை தந்தைக்கு மட்டுமின்றி, இந்த உலகுக் காட்டியவன் பிரகலாதன். ஆனால் மனித மனத்தில் அடிக்கடி எழும் சந்தேகம் “ இறைவன் எந்த வடிவத்தில் இருக்கின்றான்?, .எந்த இடத்தில் இருக்கின்றான்? அவனை எந்த வடிவத்தில் வழிபட்டால் அவனுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டு நமக்கு அருள் புரிவான்? -சந்தேகத்தில் அலைகின்ற மனம் நிலைப்பட மறுக்கின்றது.
“தீக்குள் விரலை விட்டால் நந்தலாலா உன்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா” என இறையுணர்வை பாரதி வெளிப்படுத்தினான். “காணும் இடமெல்லாம் உந்தன் வண்ணம் கண்டேன், அந்த வண்ணத்தை என்னுள்ளும் கண்டேன்” என்று கபீர்தாஸ் இறையோடு ஒன்றிய நிலையை ஆனந்தப் பரவசத்தில் அருளினார். அதே ஆனந்தப் பரவசத்தில் திளைக்கும் மாணிக்க வாசகரோ இறைவன் தரும் காட்சியை இவ்வாறு வருணிக்கிறார்:
பத்தி வலையிற் படுவோன் காண்க ‘
ஒருவ னென்னு மொருவன் காண்க
விரிபொழில் முழுதாய் விரிந்தோன் காண்க
அணுத்தருந் தன்மையில் ஐயோன் காண்க
இணைப்பரும் பெருமையி லீசன் காண்க
அரியதில் அரிய அரியோன் காண்க
மருவியெப் பொருளும் வளர்ப்போன் காண்க.
திருமூலரிடம் இவையெல்லாம் கடந்த ஆன்மீக நிலையைப் பார்க்கின்றோம்.
அமைதியான ஆழ் சிந்தனையில் இறையின் பேராண்மையையும் ஒளிப்பரவாகத்தையும் உணர்ந்தவராக நாம் திருமூலரைக் காண்கின்றோம்.
“ஆதியு மாய் அரனாய் உடலுள் நின்ற
வேதியுமாய் விரிந்தார்த் திருந்தான் அருட்
சோதியுமாய்ச் சுருங்காதா தோர் தன்மையுள்
நீதியுமாய் நித்தமாகி நின்றானே.” (15)
“ஆதியுமாய்” என்ற அவர் கூற்றில் இறைவனுடைய முழுமுதல் நிலையை எந்த சந்தேகமுமின்றி ஆணித்தரமாக விளக்குகின்றார். “ஆதிபகவன் முதற்றே உலகு” என்று வள்ளுவன் கூறியதுபோல் எல்லாப் பிறப்பிற்கும் படைப்பிற்கும் பிரபஞ்சத்திற்கும் அவனே முழுபொறுப்பேற்று முன் நிற்கின்றான். ஒன்றாய், ஒருவனாய் ஒளிமயமான அவன் எல்லா உலகங்களுக்கும் வழிகாட்டி நிற்கின்றான் . . இந்த நிலையில் “ஆதியாய்” இருப்பவன் யார் என்ற ஐயம் எழுந்திடா வண்ணம் “அரனாய்” என்று சிவனிடம் தான் கொண்டுள்ள அசைக்கமுடியாத நம்பிக்கையை முன்னிறுத்துகின்றார்.
“உடலுள் நின்ற வேதியுமாய்”- என்ற விளக்கத்தின் மூலம் இறைவனை எங்கும் தேடித் செல்லவேண்டிய அவசியம் இல்லை; அவன் ஒவ்வொரு உடலுக்குள்ளும் உறைந்திருக்கின்றான் என்ற பொருள் கொடுத்து சீவனுக்கும் சிவனுக்கும் இருக்கும் நெருங்கிய தொடர்பை வெளிப்படுத்துகின்றார். இறைவனை உள்நிறுத்தி அலங்கரிப்பதால் உடலும் கோவில் போன்ற ஒரு புனிதத் தலமாகின்றது.. கஸ்தூரியின் மணத்தை நுகர்ந்த மான் எவ்வாறு அந்த வாசத்தில் மதியிழந்து, அது தன் நாபியின் உள்ளிருந்து வருகின்றது என்று அறியாமல் அதைத்தேடி இங்குமங்கும் அலைகின்றதோ, அதேபோல் என்னுள்ளேயே நீ இருக்கின்றாய் என்பதை மறந்து நான் எங்கெங்கோ அலைந்தேன் என்று துயரப்படும் கபீரின் கூற்று இந்த இடத்தில நினைவுக்கு வருகின்றது, “சிந்தையெல்லாம் சிவனே: : மனத்துள் மகேசன்” என்று உணராமல் அலைகின்ற மாந்தருக்கு “உடலுள் நின்ற” என்ற கருத்து சிந்தனையைத் தூண்டுவதாக அமைகின்றது.
“விரிந்தார்த்திருந்தான்” – என திருமூலர் சொல்லும் பொழுது இறைவனின் உலகளாவிய தன்மையும், இருக்கின்ற உயிர்களிளெல்லாம் அவன் அமைதியின் வடிவாய் அமைந்துள்ள தன்மையையும் உணர முடிகின்றது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மாபெரும் மேதை வால்டைர் கூறுகின்றார் “இறைவன் எல்லாஇடத்திலும் மையம் கொண்ட ஒரு வட்டம்; அந்த வட்டத்திற்கு சுற்றளவு கிடையாது”– “God is like a circle whose center is everywhere and circumference nowhere.” திருமூலரின் “விரிந்தார்ந்திருந்தான்” என்ற சொல்லாடல் இந்த உலகளாவிய பரந்த தன்மையை அழகாகக் காட்டுகின்றது.
அவன் எப்படி இவ்வாறு இருக்க முடியும் என்று நமது மனதில் எழுகின்ற வினாவிற்கு பதில் தரும் வகையில் முனிவர் “அருட்சோதியுமாய் ” என்று சொல்லி நம்மைக் குழப்பங்களிளிருது விடுவிக்கின்றார். ஒளி மயமாக அவன் இருக்கும் பொழுதில் அந்த ஒளி எல்லா அசையும் அசையாப் பொருட்களிலும் ஊடுருவி நிற்கின்ற நிலை வெளிப்படுகிறது. “ஒங்காரத் துள்ளொளியாய் அவ்வொளிக்குள் ஒளியாய்” என்று வள்ளலார் “அருட்பெரும் சோதியை” கண்டவுடன் அடைந்த பரவசத்தில் இறையருளின் தன்மையை விளக்கியது முன் நிற்கின்றது.
மாணிக்கவாசகரின் கீழ்கண்ட பாடல் “விரிந்தார்த்திருந்தான்” என்ற சொல்லாடலுக்குப் பொருள் போல அமைந்துள்ளது :
வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையாய் இன்மையாய்க்
கோனாகி யான்எனதென் றவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே.!
“சுருங்காததோர் தன்மை “என மீண்டும் கூறி, ஒரு முறை அந்த ஒளி நம்மை ஆட்கொண்டால் அது சுருங்காது, குறையாது, மாறாது நிலைத்திருக்கும் நிலையைக் காட்டுகின்றார்.
“நீதியுமாய்” – எனச் சொல்லுகையில் அந்தப் பேரொளியின் பாரபட்சமற்ற குணத்தை வெளிப்படுத்தி நடுநிலைமைப் போக்கை எடுத்துரைக்கின்றார். அறத்தை முன்னிறுத்தி ஆள்பவன். அந்த அறத்துக்குத் தன்னையும் கட்டுபடுத்திக்கொண்டவன். அனைத்து உயிர்களுக்கும் சரி சமானமாய் அருள்பவன்.அரன்!
“நித்தமாகி நின்றானே” – என்ற சொல்லாடல் தன் விளக்கங்களுக்கு அவர் முற்றுப் புள்ளி வைப்பதைப் போல், இறைவனின் பேராண்மையையும் இணையற்ற நிலையையும் விளக்குகின்றது.
இன்னொரு பாடலில் “கடந்து நின்றான் எங்கும் கண்டு நின்றானே.” (14) எனத் திருமூலர் சொல்லும் பொழுது இறையாட்சியின் முழுநிலைக்கு ஒரு முகவுரை கிடைக்கின்றது.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
-
நாளொரு பக்கம்: 4: 2017
-இன்னம்பூரான்
மார்ச் 29, 2017நான்மணிக்கடிகை: 66
திரியழல் காணில் தொழுப விறகின்
எரியழல் காணின் இகழ்ப – ஒருகுடியில்
கல்லாது மூத்தானைக் கைவிட்டுக் கற்றான்
இளமைபா ராட்டும் உலகு.ஆண்டவன் சன்னதியில் சுடர் விட்டு எரியும் திரியுடன் பிரகாசிக்கும் விளக்கைக் கண்டவுடன் கை கூப்பித் தொழுவார்கள். திருமடைப்பள்ளியில் அடுப்பில் சமைக்க உதவும் விறகு கொழுந்து விட்டு எரிந்தாலும் அதை மதியார், மக்கள். அதே மாதிரி, ஒரே வீட்டில் மூத்தது மோழையாகவோ, கோழையாகவோ, அறிவிலியாகவோ இருந்து விட்டால், அதே வீட்டில் இளைய மகன் கல்விமானாகவும், தலைவனுக்குரிய பண்புள்ளவனாகவும் இருந்து விட்டால், அவனுக்குத் தான் மதிப்பு.
***
சித்திரத்துக்கு நன்றி:
http://eluthu.com/images/poemimages/f24/zjsoe_247061.jpg -
விடியலை நோக்கி
முல்லைஅமுதன்
வானத்தை மழைக்காக
நிமிர்ந்து பார்த்த ஒரு காலத்தில்
உணவு போட்டது ஒரு விமானம்.
பிறிதொரு நாளில்
சுற்றிவளைப்பு நடந்த மாலைப்பொழுதில்
குண்டு போட்டது.
நண்பனும் மடிந்தான்.
விமானம்
அமைச்சரை,
நாட்டின் தலைவரை
அழைத்துவந்த
விமானம் என
அவன்
அடையாளம் காட்டினான்.
விமானத்தில்
வந்தவர்கள்
நின்றவர்களுடன்
ஊருசனம்
மடியும் வரை
நின்றே இருந்தனர்.
இன்றுவரை
இனம்
அழியவிட்ட விமானம்
மீண்டும் வரலாம்.
கைகள்-
துருதுருத்தபடி
கற்களுடன் காத்தே நிற்கிறது.
-
வேறெதும் வேண்டுமோ ?
கவிஞர் ஜவஹர்லால்
புள்ளினம் வானில் பறக்குதே ! – வானப்
பரப்பினில் வெளிச்சமும் பாயுதே !
நல்லதோர் காலைப் பொழுதென – இங்கு
நவின்றிட வேறெதும் வேண்டுமோ ?
கீச்செனக் குருவிகள் பாயுதே ! – அந்தக்
கீழ்வானம் ஒளியினில் தோயுதே !
ஆச்சிதோ காலைப் பொழுதென – இங்கே
அறைந்திட வேறெதும் வேண்டுமோ ?
உச்சியில் வெய்யில் எறிக்குதே ! – கால்கள்
ஓரிடம் நிற்க மறுக்குதே !
மெச்சியே நண்பகல் இதுவென – இங்கு
முழங்கிட வேறெதும் வேண்டுமோ ?
வேர்வையில் உடலெலாம் குளிக்குதே ! –மூச்சு
மேலுறக் கீழுற வாங்குதே !
சீறிடும் உச்சிப் பொழுதென – இங்குச்
செப்பிட வேறெதும் வேண்டுமோ ?
மாடுகள் வீடு திரும்புதே ! – வீட்டு
மல்லிகை முல்லை மலருதே !
தேடியே மாலைப் பொழுதென – இங்குச்
சொல்லிட வேறெதும் வேண்டுமோ ?
கதிரொளி மேற்கினில் வீழுதே ! – இருள்
கட்டியங் கூறி வருகுதே !
மதிவரும் மாலைப் பொழுதென – வாய்
மலர்ந்திட வேறெதும் வேண்டுமோ ?
-
நாளொரு பக்கம்: 3: 2017
-இன்னம்பூரான்
மார்ச் 28, 2017பெரிய எழுத்து விக்ரமாதித்யன் கதை, கதைசொல்லி இலக்கியங்களில் முதன்மை வகிக்கிறது என்று அந்த காலத்துப் பெரிசுகள் சொல்லிக்கொள்வார்கள் அந்த விக்ரமாதித்யனின் அண்ணனாகக் கருதப்படும் ராஜரிஷி பர்த்ருஹரி உஜ்ஜெய்ன் சமஸ்தானத்தின் அரசர், அறிவாளிகளின் தலைவர், துறவு பூண்ட மாமனிதர். அவருடைய நீதிசதகம், வைராக்யசதகம், சிருங்கார சதகம் ஆகியவை புகழ் வாய்ந்தவை. ஒரு மாதிரி, இங்கே.
स्वल्पस्नायुवसावशेषमलिनं निर्मांसमप्यस्थिकम्
श्वा लब्ध्वा पारितोषमेति न तु तत्तस्य क्षुधः शान्तये ।
सिंहो जम्बुकमङ्कमागतमपि त्यक्त्वा निहन्ति द्विपम्
सर्वः कृच्छ्रगतोऽपि वाञ्छति जनः सत्त्वानुरूपं फलम् ॥ – नीतिशतकम्தனக்கு கிடைத்த எலும்புத்துண்டில் கொஞ்சம் கூட மாமிசப்பசை இல்லாவிடினும், கிடைத்ததை உண்டு, பசி தணியாவிடினும், மனநிறைவு கொள்ளும், நாய். கண்ணில் பட்ட நரியைக் கண்டும் காணாமல், யானையை வேட்டையாடும் சிங்கம். தன்னால் முடிந்தவரை நன்றாகவே இயங்கிப் பலனை அடைய எல்லாரும் முயல்வார்கள்.
எட்டாதாயினும் கிட்டாது என்றோ/ சீ! சீ! இந்தப் பழம் புளிக்கும் என்றோ/ போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்றோ நாம் இருப்பதில்லை.
#
சித்திரத்துக்கு நன்றி:
https://s-media-cache-ak0.pinimg.com/736x/f3/2a/c8/f32ac84414a4944737b611976086fb9d.jpg
-
ஈரோடு மாநகராட்சியில் மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் வார்டுதோறும் வாசகர்வட்டம்
த. ஸ்டாலின் குணசேகரன்
தலைவர், மக்கள் சிந்தனைப் பேரவை.
_______________________________________________________
ஈரோடு
27.03.2017
ஈரோடு மாநகராட்சியில்
மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில்
வார்டுதோறும் வாசகர்வட்டம்
மக்கள் சிந்தனைப் பேரவை தொடங்கப்பட்டு 18 ஆண்டுகளாகின்றன. பேரவை தொடங்கப்பட்டதிலிருந்தே கல்வி, வாசிப்பு, சமூகச்சிந்தனை, சமூகசேவை ஆகியவற்றில் முழுகவனம் செலுத்திபல செயல்திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.
ஈரோடு புத்தகத் திருவிழாவை கடந்த 12 ஆண்டுகளாக மக்கள் சிந்தனைப் பேரவை நடத்தி வருகிறது. வாசிப்பை வலியுறுத்தி 12,500 கல்லூரி மாணவர்களின் மராத்தான் ஓட்டம், ‘ ஈரோடு வாசிக்கிறது ’ என்ற தலைப்பில் 15,000 மாணவர்கள் ஒரே இடத்தில் ஒருமணி நேரம் புத்தகவாசிப்பு, 20,000 மாணவர்கள் தங்கள் இல்லங்களில் ஒரு நூலகத்தைத் தொடங்க உறுதியேற்பு போன்ற வாசிப்பை வலியுறுத்தும் பல நிகழ்வுகளை பேரவை நடத்தியுள்ளது.
அடுத்தகட்டமாக ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில் மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் ‘ வார்டுக்கு ஒரு வாசகர்வட்டம் ’ என்ற வகையில் தொடங்குவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.
வாசகர்வட்டம் தொடங்குவதற்கு குறைந்தபட்சம் 20 வாசகர்களும் அதிகபட்சம் 50 வாசகர்களும் இருக்கவேண்டும், மாதமொரு வாசகர்வட்டக் கூட்டம் நடைபெற்று மாதம் முழுவதும் உறுப்பினர்கள் வாசித்தவை குறித்து அதில் கலந்துரையாடுதல் போன்ற பல விதிமுறைகள் பேரவையால் வகுக்கப்பட்டுள்ளன.
தங்களது வார்டுகளில் வாசகர்வட்டம் தொடங்க எண்ணுவோர் அதற்கான படிவத்தைப் பெற A- 47, சம்பத் நகர், ஈரோடு – 638 011 என்ற முகவரியில் இயங்கும் மக்கள் சிந்தனைப் பேரவை அலுவலகத்தை அணுகி அதற்கான படிவங்களையும் ஆலோசனைகளையும் பெறலாம் என்று பேரவையின் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.
கூடுதல் விபரங்கள் www.makkalsinthanaiperavai.org என்ற இணையதளத்தில் உள்ளன. 0424 – 2269186, 88831 24443 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்புகொள்ளலாம்.
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”அதிகாலைப் போதினில் ஆவுக்(கு) அளிப்பு
குதிகாலை கோவிந்தக் கண்ணன் : -சதிகார
மாமன் அனுப்பிட மல்லாண்ட போதிலும்
காமம்(பிரியம்) இவருக்குக் கன்று’’….கட்டு மயிற்பீலி கொண்டை யிலணிந்து
பட்டுப்பீ தாம்பரம் பூண்டாவை -வெட்ட
வெளிதனில் மேய்க்க வேய்ங்குழல் ஊதும்
களிமிகு கண்ணனே காப்பு….கிரேசி மோகன்….! -
தடுப்பூசிகளால் ஆபத்தா?
பவள சங்கரி
தலையங்கம்
ஈரோட்டில் சிறு குழந்தைக்கு தொடையில் அம்மை தடுப்பூசி போட்டதால், ஏற்பட்ட இரத்தக்கட்டி மூன்று கிலோ எடையுடன் கூடிய புற்று நோயாகிவிட்டது. பத்திரிக்கை செய்தியை வைத்து சென்னை உயர்நீதி மன்றம் (!) தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. தற்போது 6 வயதான அந்த சிறுவனுக்கு அடையாறு புற்று நோய் மருத்துவமனையில் சிகிச்சை வழங்கவேண்டும் என்றும் தமிழக சுகாதாரத் துறை செயலாளருக்கு தடுப்பூசியால் பாதிப்பு ஏற்பட்டதா என்று அறிக்கை சமர்ப்பிக்கும்படியும் உத்தரவிடப்பட்டது. இதற்கு பதிலளித்த சுகாதாரத் துறை செயலாளர் தடுப்பூசியால் புற்று நோய் வரவில்லை என்று கூறியுள்ளார். இதையடுத்து உயர்நீதி மன்ற நீதிபதிகள் சிறுவனின் அனைத்து மருத்துவ ஆவணங்களையும் தில்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் மும்பையிலுள்ள டாட்டா நினைவு மருத்துவமனைக்கும் அனுப்பி கருத்துகளை அறிக்கையாகப் பெற்று தாக்கல் செய்யும்படி ஆணை பிறப்பித்துள்ளது. பன்னாட்டு நிறுவனங்களால் பெருமளவில் விநியோகிக்கப்படும் ரூபெல்லா தடுப்பூசியானது மக்களின் பயன்பாட்டிற்கு அனுமதிப்பதற்கு முன்பே நம் உயர் மருத்துவமனைகளில் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டு அது குறித்த தெளிவான விவரங்களை பொதுமன்றில் அளிக்கப்படவேண்டியது அவசியம். மக்களின் இது குறித்த குழப்ப நிலையை தெளிவாக்க வேண்டியது சுகாதாரத் துறையின் கடமையாகும்.
உயர்நீதிமன்றம் பத்திரிக்கை செய்திகளை மட்டுமே கருத்தில்கொண்டு தாமாக முன்வந்து அக்கறையுடன் வழக்கு பதிவு செய்துள்ளது பாராட்டிற்குரியது!
-
இறையின்பம் (1)
பவள சங்கரி
அன்பே சிவம்
“அன்பும் சிவமும் இரண்டென்பார் அறிவிலார்
அன்பே சிவமென்று ஆரும் அறிகிலார்
அன்பே சிவமென்று ஆரும் அறிந்த பின்
அன்பே சிவமென்று அமர்ந்திருந்தாரே. ” – திருமூலர்3000 ஆண்டுகள் காற்றை மட்டும் உண்டு, அரச மரத்தடியில் தவக்கோலத்தில் வாழ்க்கையைக் கழித்தவர் திருமூலர். வருடம் ஒரு முறை கண்களைத் திறந்து ஒரு பாடல் மட்டும் பாடிவிட்டு மீண்டும் தியானத்தில் ஆழ்ந்துவிடுவார். இப்படி அவர் பாடிய அத்துணைப் பாடல்களும் மனிதர்களின் வாழ்வியல் விஞ்ஞானம் சார்ந்தது!
வாழ்க்கையில் நாமனைவரும் ஓடிக்கொண்டேயிருக்கிறோம். எதையெதையோ தேடி ஓடுகிறோம். பொன், பொருள், மண், சொத்து, சொந்தம், பந்தம், பாசம், உறவு, பதவி என்று இப்படி என்னவெல்லாமோ தேடித்தேடி, சிலவற்றை அடைந்தும், ஒரு கட்டத்தில் ஓய்ந்து உட்காரும்போது அப்போதும் மனதில் ஒரு நிறைவை உணர முடிவதில்லை. நம்முள் இருக்கும் ஏதோ ஒன்று நமக்குப் புலப்படாத ஒன்றை தேடுகிறோம். அந்த ஒன்றுதான் நம் ஆன்மா. இந்த ஆன்மாவைக் கட்டி ஆள்வதுதான் ஆன்மீகம் என்பது. நாம் அடிக்கடி அன்றாட வழக்கில் பயன்படுத்தும் ஒரு பழமொழி என்றாலும் அதன் பொருளை தவறாகவே புரிந்து கொண்டிருக்கிறோம்.
‘நாயைக் கண்டால் கல்லைக் காணோம், கல்லைக் கண்டால் நாயைக் காணோம் என்பதுதான்…
கருகருவென்று மரத்தினால் செய்யப்பட்ட ஒரு பெரிய யானை உருவம். அதைக்கண்ட ஒரு சிறு குழந்தை அச்சத்தினால் தன் அன்னையின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அரண்டுபோய் அழுகிறது. உடனே அந்தத் தாய் குழந்தையிடம், “இது யானையெல்லாம் இல்லை, வெறும் மரத்தினால் செய்யப்பட்ட உருவம் அதனால் நீ அச்சம் கொள்ளத் தேவையில்லை” என்று சமாதானம் செய்கிறாள்.
அந்தக் குழந்தைக்கு யானையாகத் தெரிந்த ஒன்று தாய்க்கு வெறும் மரப் பொம்மையாகத் தெரிகிறது. அதாவது யானையாகக் கண்ட குழந்தையின் கண்களுக்கு மர உருவம் தெரியவில்லை. மர உருவாகத் தெரிந்த தாயின் கண்களுக்கு யானையின் உருவம் தெரியவில்லை. இதைத்தான்
மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தின் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தின் மறைந்தது பார்முதல் பூதமேஎன்கிறார் திருமூலர். இவர் சொன்ன இந்த பாடலின் பொருள்தான் நம் வாழ்வின் நிம்மதியை மீட்டெடுக்கும் மாபெரும் தத்துவம். அதாவது இந்த உலகின் புறப்பொருட்களின் மீது நாட்டம் கொண்டு அதன் பின்னாலேயே ஓடும் நமக்கு மாபெரும் சக்தியான இறையின்பத்தைக் காணத் தவறும் நிலை ஏற்பட்டுவிடுகிறது என்கிறார். மெய்ப்பொருளின் துணை கொண்டே மனக்குதிரையை கட்டுப்படுத்தி நல்வழி செலுத்த இயலும்.
பொதுவாகவே சித்தர் இலக்கியங்கள் பல்வேறு சங்கேத மொழிகளைக் கொண்டதாக இருக்கும். பெரும்பாலும் மனம் / பிராணன் / உயிர் மூச்சு என்பதை குதிரை என்றே குறிக்கப்பட்டிருக்கும்.
புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டால்
கள்ளுண்ண வேண்டாம், தானே களிதரும்,
துள்ளி நடப்பிக்கும், சோம்பு தவிர்ப்பிக்கும்,
உள்ளது சொன்னோம் உணர்வுடை யோர்க்கே‘புள்ளினும் மிக்க புரவி’ என்பார் திருமூலர். புள் என்றால் பறவை. புரவி என்றால் குதிரை. அதாவது பறவையைக் காட்டிலும் வேகமாகப் பறக்கக்கூடியதாம் குதிரை. குதிரைக்கு இயற்கையாகவே வேகம், இடைவிடாத ஓட்டம், உறுதி ஆகிய குணங்கள் உண்டு. குதிரை தூங்கும்போது கூட படுப்பதில்லை. நின்றுகொண்டேதான் தூங்கும். உடல்நிலை பாதிக்கப்பட்டால் மட்டுமே அது முடியாமல் தரையில் வீழும். இது போலத்தான் நம் மனமும், மூச்சும். நிற்காமல் ஓடிக்கொண்டிருப்பது என்பதால் குதிரைக்கு ஒப்பிடுகிறார்கள். ஆனால் இந்த குதிரை அவ்வளவு எளிதாக அடங்கி விடாது. மிகவும் சிரமப்பட்டே இதன் பயிற்சியாளர் இதனை வழிக்குக் கொண்டுவருவார். இல்லையென்றால் ஒவ்வொரு முறை அதன் மேல் ஏறி சவாரி செய்ய முயலும்போதும் சண்டிக் குதிரை குப்புறத் தள்ளிவிடும். சற்றே சிரமம் மேற்கொண்டு அதைக் கட்டுக்குள் கொண்டுவந்து சேணத்தைப் பூட்டிவிட்டால் பின் அது தன் எசமானனுக்கு என்றும் விசுவாசம் உள்ளதாக கட்டுப்பட்டிருக்கும். இப்படித்தான் நம் மனமும் இறை சக்தியின் ஆற்றலுடன் கட்டுக்குள் கொண்டுவந்தால் பின் நம்மை ஆட்டிப் படைக்காமல் நல்ல முறையில் வாழ வழியமைத்துவிடும். இந்த இறை சக்தியே ஆன்மீகம் நமக்கு வழங்குகிறது. சித்தர்களின் சித்தாந்தம் தெளிந்த நீரோடை போன்றது. ஆழ்ந்து வாசித்து அதன் சாரங்களைக் கடைபிடிக்கும்போது வாழ்வின் சகல நலன்களையும் பெற முடியும் என்பது உறுதி!
இறையன்பில் ஊறித் திளைத்த அடியார்களின் மெய்ஞ்ஞான உரைகளைத் தொடர்ந்து தியானிப்போம்.
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
’’ஆ’’பாஸம் பொங்கிட அர்த்த நிஸிவண்ணர்
பூபாளப் போதில் புலர்ந்திடுவார் -கோபாலர்
வண்ணத்தில் வந்துநம் எண்ணத்தில் மேய்ந்திடும்
கண்ணனை நெஞ்சே கருது’’….கிரேசி மோகன்….!










