தடுப்பூசிகளால் ஆபத்தா?
பவள சங்கரி
தலையங்கம்
ஈரோட்டில் சிறு குழந்தைக்கு தொடையில் அம்மை தடுப்பூசி போட்டதால், ஏற்பட்ட இரத்தக்கட்டி மூன்று கிலோ எடையுடன் கூடிய புற்று நோயாகிவிட்டது. பத்திரிக்கை செய்தியை வைத்து சென்னை உயர்நீதி மன்றம் (!) தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. தற்போது 6 வயதான அந்த சிறுவனுக்கு அடையாறு புற்று நோய் மருத்துவமனையில் சிகிச்சை வழங்கவேண்டும் என்றும் தமிழக சுகாதாரத் துறை செயலாளருக்கு தடுப்பூசியால் பாதிப்பு ஏற்பட்டதா என்று அறிக்கை சமர்ப்பிக்கும்படியும் உத்தரவிடப்பட்டது. இதற்கு பதிலளித்த சுகாதாரத் துறை செயலாளர் தடுப்பூசியால் புற்று நோய் வரவில்லை என்று கூறியுள்ளார். இதையடுத்து உயர்நீதி மன்ற நீதிபதிகள் சிறுவனின் அனைத்து மருத்துவ ஆவணங்களையும் தில்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் மும்பையிலுள்ள டாட்டா நினைவு மருத்துவமனைக்கும் அனுப்பி கருத்துகளை அறிக்கையாகப் பெற்று தாக்கல் செய்யும்படி ஆணை பிறப்பித்துள்ளது. பன்னாட்டு நிறுவனங்களால் பெருமளவில் விநியோகிக்கப்படும் ரூபெல்லா தடுப்பூசியானது மக்களின் பயன்பாட்டிற்கு அனுமதிப்பதற்கு முன்பே நம் உயர் மருத்துவமனைகளில் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டு அது குறித்த தெளிவான விவரங்களை பொதுமன்றில் அளிக்கப்படவேண்டியது அவசியம். மக்களின் இது குறித்த குழப்ப நிலையை தெளிவாக்க வேண்டியது சுகாதாரத் துறையின் கடமையாகும்.
உயர்நீதிமன்றம் பத்திரிக்கை செய்திகளை மட்டுமே கருத்தில்கொண்டு தாமாக முன்வந்து அக்கறையுடன் வழக்கு பதிவு செய்துள்ளது பாராட்டிற்குரியது!