இறையின்பம் (1)
பவள சங்கரி
அன்பே சிவம்
“அன்பும் சிவமும் இரண்டென்பார் அறிவிலார்
அன்பே சிவமென்று ஆரும் அறிகிலார்
அன்பே சிவமென்று ஆரும் அறிந்த பின்
அன்பே சிவமென்று அமர்ந்திருந்தாரே. ” – திருமூலர்
3000 ஆண்டுகள் காற்றை மட்டும் உண்டு, அரச மரத்தடியில் தவக்கோலத்தில் வாழ்க்கையைக் கழித்தவர் திருமூலர். வருடம் ஒரு முறை கண்களைத் திறந்து ஒரு பாடல் மட்டும் பாடிவிட்டு மீண்டும் தியானத்தில் ஆழ்ந்துவிடுவார். இப்படி அவர் பாடிய அத்துணைப் பாடல்களும் மனிதர்களின் வாழ்வியல் விஞ்ஞானம் சார்ந்தது!
வாழ்க்கையில் நாமனைவரும் ஓடிக்கொண்டேயிருக்கிறோம். எதையெதையோ தேடி ஓடுகிறோம். பொன், பொருள், மண், சொத்து, சொந்தம், பந்தம், பாசம், உறவு, பதவி என்று இப்படி என்னவெல்லாமோ தேடித்தேடி, சிலவற்றை அடைந்தும், ஒரு கட்டத்தில் ஓய்ந்து உட்காரும்போது அப்போதும் மனதில் ஒரு நிறைவை உணர முடிவதில்லை. நம்முள் இருக்கும் ஏதோ ஒன்று நமக்குப் புலப்படாத ஒன்றை தேடுகிறோம். அந்த ஒன்றுதான் நம் ஆன்மா. இந்த ஆன்மாவைக் கட்டி ஆள்வதுதான் ஆன்மீகம் என்பது. நாம் அடிக்கடி அன்றாட வழக்கில் பயன்படுத்தும் ஒரு பழமொழி என்றாலும் அதன் பொருளை தவறாகவே புரிந்து கொண்டிருக்கிறோம்.
‘நாயைக் கண்டால் கல்லைக் காணோம், கல்லைக் கண்டால் நாயைக் காணோம் என்பதுதான்…
கருகருவென்று மரத்தினால் செய்யப்பட்ட ஒரு பெரிய யானை உருவம். அதைக்கண்ட ஒரு சிறு குழந்தை அச்சத்தினால் தன் அன்னையின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அரண்டுபோய் அழுகிறது. உடனே அந்தத் தாய் குழந்தையிடம், “இது யானையெல்லாம் இல்லை, வெறும் மரத்தினால் செய்யப்பட்ட உருவம் அதனால் நீ அச்சம் கொள்ளத் தேவையில்லை” என்று சமாதானம் செய்கிறாள்.
அந்தக் குழந்தைக்கு யானையாகத் தெரிந்த ஒன்று தாய்க்கு வெறும் மரப் பொம்மையாகத் தெரிகிறது. அதாவது யானையாகக் கண்ட குழந்தையின் கண்களுக்கு மர உருவம் தெரியவில்லை. மர உருவாகத் தெரிந்த தாயின் கண்களுக்கு யானையின் உருவம் தெரியவில்லை. இதைத்தான்
மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தின் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தின் மறைந்தது பார்முதல் பூதமே
என்கிறார் திருமூலர். இவர் சொன்ன இந்த பாடலின் பொருள்தான் நம் வாழ்வின் நிம்மதியை மீட்டெடுக்கும் மாபெரும் தத்துவம். அதாவது இந்த உலகின் புறப்பொருட்களின் மீது நாட்டம் கொண்டு அதன் பின்னாலேயே ஓடும் நமக்கு மாபெரும் சக்தியான இறையின்பத்தைக் காணத் தவறும் நிலை ஏற்பட்டுவிடுகிறது என்கிறார். மெய்ப்பொருளின் துணை கொண்டே மனக்குதிரையை கட்டுப்படுத்தி நல்வழி செலுத்த இயலும்.
பொதுவாகவே சித்தர் இலக்கியங்கள் பல்வேறு சங்கேத மொழிகளைக் கொண்டதாக இருக்கும். பெரும்பாலும் மனம் / பிராணன் / உயிர் மூச்சு என்பதை குதிரை என்றே குறிக்கப்பட்டிருக்கும்.
புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டால்
கள்ளுண்ண வேண்டாம், தானே களிதரும்,
துள்ளி நடப்பிக்கும், சோம்பு தவிர்ப்பிக்கும்,
உள்ளது சொன்னோம் உணர்வுடை யோர்க்கே
‘புள்ளினும் மிக்க புரவி’ என்பார் திருமூலர். புள் என்றால் பறவை. புரவி என்றால் குதிரை. அதாவது பறவையைக் காட்டிலும் வேகமாகப் பறக்கக்கூடியதாம் குதிரை. குதிரைக்கு இயற்கையாகவே வேகம், இடைவிடாத ஓட்டம், உறுதி ஆகிய குணங்கள் உண்டு. குதிரை தூங்கும்போது கூட படுப்பதில்லை. நின்றுகொண்டேதான் தூங்கும். உடல்நிலை பாதிக்கப்பட்டால் மட்டுமே அது முடியாமல் தரையில் வீழும். இது போலத்தான் நம் மனமும், மூச்சும். நிற்காமல் ஓடிக்கொண்டிருப்பது என்பதால் குதிரைக்கு ஒப்பிடுகிறார்கள். ஆனால் இந்த குதிரை அவ்வளவு எளிதாக அடங்கி விடாது. மிகவும் சிரமப்பட்டே இதன் பயிற்சியாளர் இதனை வழிக்குக் கொண்டுவருவார். இல்லையென்றால் ஒவ்வொரு முறை அதன் மேல் ஏறி சவாரி செய்ய முயலும்போதும் சண்டிக் குதிரை குப்புறத் தள்ளிவிடும். சற்றே சிரமம் மேற்கொண்டு அதைக் கட்டுக்குள் கொண்டுவந்து சேணத்தைப் பூட்டிவிட்டால் பின் அது தன் எசமானனுக்கு என்றும் விசுவாசம் உள்ளதாக கட்டுப்பட்டிருக்கும். இப்படித்தான் நம் மனமும் இறை சக்தியின் ஆற்றலுடன் கட்டுக்குள் கொண்டுவந்தால் பின் நம்மை ஆட்டிப் படைக்காமல் நல்ல முறையில் வாழ வழியமைத்துவிடும். இந்த இறை சக்தியே ஆன்மீகம் நமக்கு வழங்குகிறது. சித்தர்களின் சித்தாந்தம் தெளிந்த நீரோடை போன்றது. ஆழ்ந்து வாசித்து அதன் சாரங்களைக் கடைபிடிக்கும்போது வாழ்வின் சகல நலன்களையும் பெற முடியும் என்பது உறுதி!
இறையன்பில் ஊறித் திளைத்த அடியார்களின் மெய்ஞ்ஞான உரைகளைத் தொடர்ந்து தியானிப்போம்.
மிக அருமையான கருத்துக்கள். மனதில் நிற்கும் விளக்கங்கள்… வாழ்த்துக்கள் !