Featuredஇலக்கியம்கட்டுரைகள்பத்திகள்

திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் .. (2)

க. பாலசுப்பிரமணியன்

இறைவன் எங்கே இருக்கின்றான்?

திருமூலர்-1

“தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் ” என்று இறைவனின் பெருமையை தந்தைக்கு மட்டுமின்றி, இந்த உலகுக் காட்டியவன்  பிரகலாதன்.  ஆனால் மனித மனத்தில் அடிக்கடி எழும் சந்தேகம் “ இறைவன் எந்த வடிவத்தில் இருக்கின்றான்?, .எந்த இடத்தில் இருக்கின்றான்? அவனை எந்த வடிவத்தில் வழிபட்டால் அவனுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டு நமக்கு அருள் புரிவான்? -சந்தேகத்தில் அலைகின்ற மனம் நிலைப்பட மறுக்கின்றது.

“தீக்குள் விரலை விட்டால் நந்தலாலா உன்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா  நந்தலாலா” என இறையுணர்வை பாரதி வெளிப்படுத்தினான்.  “காணும் இடமெல்லாம் உந்தன் வண்ணம் கண்டேன், அந்த வண்ணத்தை என்னுள்ளும் கண்டேன்” என்று கபீர்தாஸ் இறையோடு ஒன்றிய நிலையை ஆனந்தப் பரவசத்தில் அருளினார். அதே ஆனந்தப் பரவசத்தில் திளைக்கும் மாணிக்க வாசகரோ இறைவன் தரும் காட்சியை இவ்வாறு வருணிக்கிறார்:

பத்தி வலையிற் படுவோன் காண்க ‘

ஒருவ னென்னு மொருவன் காண்க

விரிபொழில் முழுதாய் விரிந்தோன் காண்க

அணுத்தருந் தன்மையில் ஐயோன் காண்க

இணைப்பரும் பெருமையி லீசன் காண்க

அரியதில் அரிய அரியோன் காண்க

மருவியெப்  பொருளும் வளர்ப்போன் காண்க.

திருமூலரிடம் இவையெல்லாம் கடந்த ஆன்மீக நிலையைப் பார்க்கின்றோம்.

அமைதியான ஆழ் சிந்தனையில் இறையின் பேராண்மையையும் ஒளிப்பரவாகத்தையும் உணர்ந்தவராக நாம் திருமூலரைக் காண்கின்றோம்.

“ஆதியு மாய் அரனாய் உடலுள் நின்ற

வேதியுமாய் விரிந்தார்த் திருந்தான் அருட்

சோதியுமாய்ச் சுருங்காதா தோர் தன்மையுள்

நீதியுமாய்  நித்தமாகி நின்றானே.”                         (15)

“ஆதியுமாய்” என்ற அவர் கூற்றில்  இறைவனுடைய முழுமுதல் நிலையை எந்த சந்தேகமுமின்றி ஆணித்தரமாக விளக்குகின்றார். “ஆதிபகவன் முதற்றே உலகு” என்று வள்ளுவன் கூறியதுபோல் எல்லாப் பிறப்பிற்கும் படைப்பிற்கும்   பிரபஞ்சத்திற்கும் அவனே முழுபொறுப்பேற்று முன் நிற்கின்றான். ஒன்றாய், ஒருவனாய் ஒளிமயமான அவன் எல்லா உலகங்களுக்கும் வழிகாட்டி நிற்கின்றான் . . இந்த நிலையில் “ஆதியாய்” இருப்பவன் யார் என்ற ஐயம் எழுந்திடா வண்ணம் “அரனாய்” என்று சிவனிடம் தான் கொண்டுள்ள அசைக்கமுடியாத நம்பிக்கையை முன்னிறுத்துகின்றார்.

“உடலுள் நின்ற வேதியுமாய்”- என்ற விளக்கத்தின் மூலம் இறைவனை எங்கும் தேடித் செல்லவேண்டிய அவசியம் இல்லை; அவன் ஒவ்வொரு உடலுக்குள்ளும் உறைந்திருக்கின்றான் என்ற பொருள் கொடுத்து சீவனுக்கும் சிவனுக்கும்  இருக்கும் நெருங்கிய தொடர்பை வெளிப்படுத்துகின்றார். இறைவனை உள்நிறுத்தி அலங்கரிப்பதால் உடலும் கோவில் போன்ற ஒரு புனிதத் தலமாகின்றது.. கஸ்தூரியின் மணத்தை நுகர்ந்த மான் எவ்வாறு அந்த வாசத்தில் மதியிழந்து, அது தன் நாபியின் உள்ளிருந்து வருகின்றது என்று அறியாமல் அதைத்தேடி இங்குமங்கும் அலைகின்றதோ, அதேபோல் என்னுள்ளேயே நீ இருக்கின்றாய் என்பதை மறந்து நான் எங்கெங்கோ அலைந்தேன்  என்று துயரப்படும் கபீரின் கூற்று இந்த இடத்தில நினைவுக்கு வருகின்றது, “சிந்தையெல்லாம் சிவனே: : மனத்துள் மகேசன்” என்று உணராமல் அலைகின்ற மாந்தருக்கு “உடலுள் நின்ற” என்ற கருத்து சிந்தனையைத் தூண்டுவதாக அமைகின்றது.

“விரிந்தார்த்திருந்தான்” – என திருமூலர் சொல்லும் பொழுது இறைவனின் உலகளாவிய தன்மையும், இருக்கின்ற உயிர்களிளெல்லாம் அவன் அமைதியின் வடிவாய் அமைந்துள்ள தன்மையையும் உணர முடிகின்றது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மாபெரும் மேதை வால்டைர் கூறுகின்றார் “இறைவன் எல்லாஇடத்திலும்  மையம் கொண்ட ஒரு வட்டம்; அந்த வட்டத்திற்கு சுற்றளவு கிடையாது”– “God is like a circle whose center is everywhere and circumference nowhere.” திருமூலரின் “விரிந்தார்ந்திருந்தான்” என்ற சொல்லாடல் இந்த உலகளாவிய பரந்த தன்மையை அழகாகக் காட்டுகின்றது.

அவன் எப்படி இவ்வாறு இருக்க முடியும் என்று நமது மனதில் எழுகின்ற வினாவிற்கு பதில் தரும் வகையில் முனிவர்  “அருட்சோதியுமாய் ” என்று சொல்லி நம்மைக் குழப்பங்களிளிருது விடுவிக்கின்றார். ஒளி மயமாக அவன் இருக்கும் பொழுதில் அந்த ஒளி எல்லா அசையும் அசையாப் பொருட்களிலும் ஊடுருவி நிற்கின்ற நிலை வெளிப்படுகிறது. “ஒங்காரத் துள்ளொளியாய் அவ்வொளிக்குள் ஒளியாய்” என்று வள்ளலார் “அருட்பெரும் சோதியை” கண்டவுடன் அடைந்த பரவசத்தில் இறையருளின் தன்மையை விளக்கியது முன் நிற்கின்றது.

மாணிக்கவாசகரின் கீழ்கண்ட பாடல் “விரிந்தார்த்திருந்தான்” என்ற சொல்லாடலுக்குப் பொருள் போல அமைந்துள்ளது :

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி

ஊனாகி உயிராகி உண்மையாய் இன்மையாய்க்

கோனாகி யான்எனதென் றவரைக் கூத்தாட்டு

வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே.!

“சுருங்காததோர் தன்மை “என மீண்டும் கூறி, ஒரு முறை அந்த ஒளி நம்மை ஆட்கொண்டால் அது சுருங்காது, குறையாது, மாறாது நிலைத்திருக்கும் நிலையைக் காட்டுகின்றார்.

“நீதியுமாய்” – எனச் சொல்லுகையில் அந்தப் பேரொளியின் பாரபட்சமற்ற குணத்தை வெளிப்படுத்தி நடுநிலைமைப் போக்கை எடுத்துரைக்கின்றார். அறத்தை முன்னிறுத்தி ஆள்பவன். அந்த அறத்துக்குத் தன்னையும் கட்டுபடுத்திக்கொண்டவன். அனைத்து உயிர்களுக்கும் சரி சமானமாய் அருள்பவன்.அரன்!

“நித்தமாகி நின்றானே”  – என்ற சொல்லாடல் தன்  விளக்கங்களுக்கு அவர் முற்றுப் புள்ளி வைப்பதைப் போல், இறைவனின் பேராண்மையையும் இணையற்ற நிலையையும் விளக்குகின்றது.

இன்னொரு பாடலில் “கடந்து நின்றான் எங்கும் கண்டு நின்றானே.” (14) எனத் திருமூலர் சொல்லும் பொழுது இறையாட்சியின் முழுநிலைக்கு ஒரு முகவுரை கிடைக்கின்றது.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

Print Friendly, PDF & Email
Download PDF
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க