கவிஞர் ஜவஹர்லால்

 

புள்ளினம் வானில் பறக்குதே ! – வானப்

பரப்பினில் வெளிச்சமும் பாயுதே !

நல்லதோர் காலைப் பொழுதென – இங்கு

நவின்றிட வேறெதும் வேண்டுமோ ?

 

கீச்செனக் குருவிகள் பாயுதே ! – அந்தக்

கீழ்வானம் ஒளியினில் தோயுதே !

ஆச்சிதோ காலைப் பொழுதென – இங்கே

அறைந்திட வேறெதும் வேண்டுமோ ?

 

உச்சியில் வெய்யில் எறிக்குதே ! – கால்கள்

ஓரிடம் நிற்க மறுக்குதே !

மெச்சியே நண்பகல் இதுவென – இங்கு

முழங்கிட வேறெதும் வேண்டுமோ ?

 

வேர்வையில் உடலெலாம் குளிக்குதே ! –மூச்சு

மேலுறக் கீழுற வாங்குதே !

சீறிடும் உச்சிப் பொழுதென – இங்குச்

செப்பிட வேறெதும் வேண்டுமோ ?

 

மாடுகள் வீடு திரும்புதே ! – வீட்டு

மல்லிகை முல்லை மலருதே !

தேடியே மாலைப் பொழுதென – இங்குச்

சொல்லிட வேறெதும் வேண்டுமோ ?

 

கதிரொளி மேற்கினில் வீழுதே ! – இருள்

கட்டியங் கூறி வருகுதே !

மதிவரும் மாலைப் பொழுதென – வாய்

மலர்ந்திட வேறெதும் வேண்டுமோ ?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *