நிர்மலா ராகவன்

உறவுகளும் நட்பும்

நலம்

உறவுகளை நாம் தேர்ந்தெடுக்க முடியாவிட்டாலும், நல்ல நண்பர்களையாவது பெறும் பாக்கியம் இருக்கிறது என்பது ஆறுதலளிக்கும் விஷயம்.

`குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை’ என்கிறார்கள். ஆனால், நம்மிடம் என்னென்ன குறைகள் இருக்கின்றன என்றே ஆராய்பவர்களிடம் போலியாகப் பழகினால்தான் அவர்களுடைய மதிப்பைப் பெறமுடியும். அப்போது நாம் நமக்கே உண்மையாக இருப்பது எப்படி நடக்கும்? நிறைவுதான் கிட்டுமா?

உறவினரோ, நண்பர்களோ நம்மால் ஏதாவது காரியம் ஆகவேண்டியிருந்தால், சிலர் துதி பாடுவார்கள். வேறு சிலர் பொறாமையால் நமது முன்னேற்றத்தைத் தடுக்க நைச்சியமாகப் பேசி நடப்பார்கள்.

இன்னொரு பிரிவினர், `இப்படி நடப்பதுதான் சிறந்தது,’ என்று தம் அபிப்ராயங்களைப் பிறரிடம் வலுக்கட்டாயமாகத் திணிப்பவர்கள். அவர்கள் அதிகாரத்தை விரும்புகிறார்களே தவிர, அறிவுரை அக்கறையால் இருக்காது. தனித்து இயங்கும் துணிவு குறைவானவர்கள்தாம் இப்படி நடக்கிறார்கள். தவிர்க்க முடியாவிட்டால், அவர்கள் எதிரில் தலையாட்டிவிட்டு, அவர்கள் சொல்வதை அலட்சியம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை.

இதனால்தான் தகாத நட்பினருடன் பழகுவதைவிடத் தனிமை சிறந்தது என்று சொல்கிறார்களோ!

தனிமையில் இனிமை

சிந்திப்பதற்குத் தனிமையைப்போல் வேறில்லை. வாய் மூடினால் காதும், கண்ணும் இன்னும் சிறப்பாக வேலை செய்ய, எதையும் பகுத்தறியும் தன்மை வளரும்.

இது புரியாதவர்கள்தாம் யாருடனாவது, எதைப்பற்றியாவது எப்போதும் பேச முனைகிறார்கள். தனிமையிலிருப்பவர்களைப் பார்த்து, `இவர்கள் ஏன் நம்மைப்போல் இல்லை?’ என்று அதிசயப்படுகிறார்கள். `ஒரு வேளை, நம்மை மதிக்கவில்லையோ!’ என்ற ஆத்திரமும் ஏற்படுகிறது. எப்போதும் பிறருடன் சேர்ந்து கலகலப்பாகப் பழகினால் மட்டுமே மகிழ்ச்சி என்றிருந்தால் ஆழ்ந்து யோசிப்பது எங்ஙனம்?

தனிமையில் பெரும்பொழுதைக் கழிப்பவர்களுக்கு உலகத்தினரின் போக்கு புரிந்துபோகிறது. அதிகம் பேசாது, பிறரது பிரச்னைகளை அவர்களே பகிர விரும்பும்போது உன்னிப்பாகக் கேட்க முடிகிறது. பிறருக்கு ஏற்ற ஆலோசனை அளித்து, ஆதரவாக இருக்கும் தன்மை வளர்கிறது.

விரும்புகிறார்களோ, இல்லையோ, எழுத்தாளர்கள் தனிமையில் கழிக்க வேண்டிய பொழுது அதிகம். அதற்காக, எல்லா நேரத்தையும் தனிமையில் கழிக்க வேண்டும் என்பதுமில்லை. மனிதன் தனியான தீவில்லை.

திருமணம் குறுகியகாலப் பயிரா?

ஒரே பார்வையில் ஒருவரை பிடித்துப்போனாலும், எந்த உறவும் பலப்படுவதற்கு நீண்ட அவகாசம் பிடிக்கும். இதனால்தான் திருமணம் ஆயிரங்காலத்துப் பயிர் என்று சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால், இன்றோ!

கதை

மணமகள் தேவை என்ற பகுதியில் விண்ணப்பம் செய்து மனைவியாகி இருந்தாள் காஞ்சனா. மணமகனான மகாதேவனுக்கு அப்போது நாற்பது வயதுக்குமேல் ஆகியிருந்தது.

நோயாளியான அண்ணனையும், சக்கர நாற்காலியில் வாசம் செய்த தாயையும் பொறுப்பாகப் பார்த்துக்கொண்டிருந்தவருக்கு ஒரு கல்யாணம் செய்துகொண்டால், தன் வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்ள, அதில் சிறிதாவது இன்பம் சேர்க்க ஒரு ஜீவன் கிடைக்குமே என்ற ஆசையில் விளம்பரம் செய்திருந்தார்.

திருமண நாள் குறிக்கப்பட்டதுமே கடன் வாங்கி, சொந்த வீட்டைப் புதுப்பிக்கும் முயற்சியில் உற்சாகமாக இறங்கினார்.

முதல் இரவிலேயே காஞ்சனா சில நிபந்தனைகளை விதித்தாள்: அண்ணன் அவர்களுடன் இருக்கக்கூடாது, சொந்த வீட்டைத் தன் பெயருக்கு எழுதிக்கொடுத்துவிட வேண்டும். `பெற்றோர் இருந்துவிட்டுப்போகட்டும்’ என்று `பெரிய மனது’(!) பண்ணினாள்.

புதுமனைவியா, நினைவு தெரிந்த நாள்முதல் இரட்டைப்பிறவிபோல் பழகிய அண்ணனா என்றெல்லாம் மகாதேவன் யோசிக்கவே இல்லை. உடனே அவ்விடத்தைவிட்டு வெளியேறினார்.

இப்போதெல்லாம், `திருமணம்’ செய்துகொண்டால், குறுக்கு வழியில் பணக்காரி ஆகலாம் என்று பல பெண்கள் நினைப்பதுபோலிருக்கிறது. இதுவும் தமிழ்நாட்டில் நடந்த கதைதான்.

முதலிரவன்றே உடல் நிலை சரியாக இல்லை என்று சாக்கு சொல்லிவிட்டு, தன் வீட்டுக்குப் போய்விட்டாள் சௌந்தரி. கணவன் எவ்வளவு முயன்றும் அவனுடன் வாழ ஒப்பவில்லை. வேறு வழியில்லாமல், `விவாகரத்து’ என்றபோது, `இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்தால்தான்!’ என்றாளாம் சௌந்தரி.

என்ன செய்வது என்று அவர்கள் திகைத்துக்கொண்டிருந்தபோது, “திருமணம் நிறைவு பெறவில்லை என்று காரணம் காட்டினால் கிடைக்கும்,” என்று ஓர் உபாயத்தைச் சொன்னேன்.

அவளிடமிருந்து விடுதலை கிடைத்தாலும், மன நிம்மதி போய்விட்டது அந்த அப்பாவிக் கணவனுக்கு. அதிகம் விசாரிக்காமல் பண்ணிக்கொண்டதன் விளைவு! ஒரு பெண்ணால் புறக்கணிக்கப்பட்டோம் என்ற அதிர்ச்சி மறக்கக்கூடிய ஒன்றா!

குறுகிய காலத்தில் பணக்காரியாக ஆகும் திட்டத்துடன் ஏமாற்றி, பொய்யுரைத்து, ஆண்களின் உணர்ச்சிகளுடன் விளையாடும் பெண்களும் நம்மில் இருக்கிறார்கள் என்கிற நிதரிசனமே அதிர்ச்சியாக, கசப்பாக இருக்கிறது.

ஏமாறுவதும் ஏமாற்றுவதும் இரு பாலருக்கும் உள்ள குணம்தான் என்றாலும், ஏமாற்றப்பட்டவர்களைப் பார்த்துப் பரிதாபப்படாமல் இருக்க முடியவில்லை.

கதை

நிறையப் படித்து, பெரிய வேலையிலிருந்த காரணத்தினாலேயே ரூபாவிற்குத் திருமணம் தடைபட்டுக்கொண்டே போயிற்று. அவளையும் ஒருவர் மணக்க முன்வந்தபோது, பூரித்துப்போனாள். கணவர் சொற்படி கேட்டு, வேலையை விட்டாள்.
`நல்ல வேலையை ஏன் விட்டாய்?’ என்று அங்கலாய்ப்புடன் கேட்டவர்களிடம், `எங்களுக்கு இன்னும் பணம் வந்து ஒன்றும் ஆகவேண்டாம். அவர் சம்பாதிக்காததா!’ என்று பெருமை பேசினாள் ரூபா.

`என் கணவர் என்னைவிட்டு ஒரு வருடம் பிரிந்திருந்தால்கூட இன்னொரு பெண்ணை நாடமாட்டார். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது!’ என்பாள் கர்வத்துடன்.

நாற்பதாண்டு இல்லறத்துக்குப்பின் அந்த நம்பிக்கை பொய்த்தபோது, அதன் தாக்கம் அதிகமாக இருந்தது: `மகனின் மனைவியிடமே தவறாக நடந்துகொள்பவனையா குணக்குன்று என்று நம்பினோம்!’ (விழாக்காலங்களில் அவளே கணவனை பழித்தபோதுதான் எல்லாருக்கும் உண்மை தெரிந்தது).

தான் எவ்வளவு முட்டாளாக இருந்திருக்கிறோம் என்ற ஏமாற்ற உணர்வில் அன்பாகப் பழகியவள் ஆத்திரக்காரியாக மாறினாள்.

எதுதான் நல்ல இல்லறம்?

கணவனும், மனைவியும் இரு தனி மனிதர்கள். இருவருக்கும் ஒரே மாதிரியான குணாதிசயங்கள் அமைய வேண்டுமானால், இரட்டையரைத்தான் தேர்வு செய்ய வேண்டும்.

இது புரியாது, ஒருவரோடு மற்றொருவர் போட்டி போட்டுக்கொண்டிருந்தாலோ, அல்லது, வித்தியாசமாக இருப்பதால் பழித்துக்கொண்டிருந்தாலோ, இருவருமே வீழும் சாத்தியக்கூறு அதிகம். கோபமாக இருக்கும்போது அதை அடக்கிக்கொண்டு யோசித்தாலும், பழைய குப்பைகளைக் கிளாறமலும் இருந்தாலே பல பிரச்னைகளைத் தவிர்த்துவிடலாமே!

ஒரு தமிழ்ப்படத்தில், `உனக்கு என்மேல் காதல்! அதை ஒப்புக்கொள்!’ என்று கதாநாயகன் ஒரு பெண்ணை கன்னத்தில் அறைகிறான், திரும்பத் திரும்ப! `அன்பு’ என்பது அடித்தால், மிரட்டினால், கெஞ்சினால் வருமா, என்ன?

ஒத்துப்போன சில விஷயங்களைப் பங்கு போட்டுக்கொண்டு, (உ-ம்: ஏதாவது பொழுதுபோக்கு), அவரவருக்குப் பிடித்ததைச் செய்தால், குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிலவும். இத்தகையச் சூழ்நிலையில் வளரும் குழந்தைகளும் மன ஆரோக்கியத்துடன் இருப்பார்கள்.

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *