10 இலட்சம் குழந்தைகளுக்கு பாதிப்பு!
பவள சங்கரி
தலையங்கம்
சுற்றுச்சூழல் மாசுபடுவதால் இந்தியாவில் ஆண்டிற்கு 10 இலட்சம் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். ஹெ.ஐ.வி. பாதிக்கப்பட்ட குழந்தைகள் இதனால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உயிரிழக்கிறார்கள். மொத்தமாக உலகளவில் பாதிக்கப்பட்டவர்களில், நைஜீரியாவிலும் இந்தியாவிலும் சேர்த்து 48% மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. காற்று மாசுபடுவதால் சீனாவிலும், இந்தியாவிலும், அதிகளவில் குழந்தைகள் பாதிக்கப்படுவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இரசாயண உற்பத்திகள் 28% உயர்ந்துள்ளதாகக் கூறப்பட்ட நிலையில் அதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் விழுக்காடு அதிகமாக உள்ளன. மேலை நாடுகள் அனைத்திலும் சேர்ந்தே 5%ற்கும் கீழாகவே பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், அங்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய தொழிற்சாலைகளை முற்றிலுமாக ஒழித்தோ அல்லது குறைத்தோ தங்களுடைய நாட்டின் குழந்தைகளை காப்பாற்றிவிடுகின்றனர். இந்தியாவில் தொடரும் இத்தகைய அவலங்களைக் களைவதற்கு மனித மேம்பாட்டு ஆணையமும், மத்திய அரசும் தக்க நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். இன்றைய குழந்தைகளே நாளைய நமது நாட்டின் செல்வங்களாகும். ஆரோக்கியமான குழந்தைகளை உருவாக்குவதே நமது நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
தீவிர முயற்சி எடுத்து போலியோ நோயை முற்றிலுமாக ஒழித்தது போல இந்தியாவில் பெரும்பாலான குழந்தைகளை சாவின் விளிம்பிற்கே கொண்டுசெல்லும் காச நோயையும் அரசு முற்றிலுமாக ஒழிக்கவேண்டும். இதை முற்றிலும் ஒழிக்கக்கூடிய அளவிற்கு தேவையான மருந்துகள் கையிருப்பில் இருந்தும், அவை சரியான முறையில் ஏழை மக்களையும் சென்றடையும்படி அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தகுந்த சத்துணவும் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதுமட்டுமே இதற்கான நிரந்தரத் தீர்வாக அமையும் என்பதில் ஐயமில்லை!
18 இலட்சம் பேர் காச நோயால் இந்தியா, இந்தோநேசியா, பாகிஸ்தான், நைஜீரியா, தென் ஆப்ரிக்கா சீனா போன்ற நாடுகளில் உயிரிழந்துள்ளனர். 2015 இன் கணக்கெடுப்பு இது. 2016 இல் இந்தியாவில் மட்டும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 17.5 இலட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 33,820 பேர் போதைப்பொருள் பழக்கத்தால் இந்த காச நோய் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். இந்தியாவில் மட்டும் காச நோயால் தினசரி 1,400 பேர் உயிரிழக்கிறார்கள்.
இந்தியாவில் இதை முற்றிலும் ஒழிப்பதற்காக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பாக தேசிய வரைவு செயல் திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது. அதன்படி தனியார் மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பதை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கப்படவேண்டும். காச நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகள் குறித்து அரசின் கவனத்திற்குக் கொண்டுவரும் மருத்துவர்களுக்கு ₹ 250 ஊக்கத்தொகை அளிக்க வேண்டும். மாதந்தோறும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு ₹250 இம், இது தொடர்பான அனைத்து சிகிச்சைகளும் நிறைவு செய்வதற்கு ₹500 அளிக்கவேண்டும் என்று திட்டமிடப்படுகிறது.
போதை பழக்கத்தால் பாதிக்கப்பட்ட காச நோய் நோயாளிகள் குறித்து கவனத்திற்குக் கொண்டுவருபவர்களுக்கு 6 முதல் 9 மாதங்களுக்கு ₹ 2,750 ஊக்கத் தொகையாக அளிக்கப்படவேண்டும். 24 மாதங்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தால் ₹6,750 ஊக்கத் தொகையாக வழங்கவேண்டும். இதே போல் காச நோய் சிகிச்சை எடுப்பதற்கு வசதி இல்லாதவர்களுக்கு, ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதை கவனத்தில் கொண்டு நேரடி மானியத் திட்டத்தின் மூலம் ₹2,000 அளிக்க வேண்டும் என்று வரைவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வரைவுத் திட்டம் நாடு முழுவதும் விரைவில் அமல்படுத்தப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு நட்டா அறிவித்துள்ளார்.