தமிழகத்தில் 2000 இடங்களில் அகழாய்வுக்கான வாய்ப்புகள் உள்ளன

            

              தென்னிந்திய வரலாற்றுப் பேரவையின் மாநாட்டில்

                        த.ஸ்டாலின் குணசேகரன் உரை

as

                   தென்னிந்திய வரலாற்றுப் பேரவையின் 37 ஆவது மாநாடு மார்ச் 10, 11, 12 ஆகிய மூன்று நாட்கள் சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. மாநாட்டின் தொடக்கவிழாவுக்கு பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் சி.சுவாமிநாதன் தலைமையேற்றார். இம்மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் த. ஸ்டாலின் குணசேகரன் பங்கேற்று மாநாட்டு நிறைவுரை நிகழ்த்தினார். இவர் தனது உரையில் கூறியதாவது :

” தமிழக வரலாற்று ஆய்வில் அகழாய்வு முக்கிய இடத்தைப் பெறுகிறது. நாடு விடுதலை பெற்ற 1947 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை தமிழகத்தில் மொத்தம் 88 இடங்களில் அகழாய்வு நடைபெற்றுள்ளன. இந்திய தொல்லியல் ஆய்வுத்துறையின் சார்பில் 26 இடங்கள், தமிழ்நாடு அரசு தொல்லியல் ஆய்வுத்துறையின் சார்பில் 41 இடங்கள், சென்னைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் 8 இடங்கள், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் சார்பில் 7 இடங்கள், பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சார்பில் 2 இடங்கள் என்று மொத்தம் 88 இடங்களில் அகழாய்வுகள் நடைபெற்றுள்ளன.

இந்த அகழாய்வுகளின் மூலம் சங்கத்தமிழின் இருப்பும் சிறப்பும் நிறுவப்பட்டுள்ளது. ரோமாபுரி உட்பட சில மேலை நாடுகளோடு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழர்களுக்கு வணிகத் தொடர்பு இருந்தது நிரூபிக்கப்பட்டுள்ளது. அக்காலத்திலேயே இரும்பு தமிழனின் பயன்பாட்டில் இருந்தது போன்ற ஏராளமான வரலாற்று உண்மைகள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்த 88 இடங்களில் நடைபெற்ற அகழாய்வில் 34 இடங்களில் தான் எழுத்துப் பொறிப்புகளுள்ள தொன்மையான  பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இந்த 34 இடங்களிலும் கிடைக்கப்பெற்ற எழுத்துப் பொறிப்புள்ள பானை ஓடுகள் மொத்தம் 795 ஆகும். இதில் நொய்யலாற்றங்கரையில் உள்ள  கொடுமணல் அகழாய்வில் மட்டும் 551 பானை ஓடுகள் கிடைத்துள்ளன.

தொண்மையான பழந்தமிழ் இலக்கியங்களிலும் காப்பியங்களிலும் உள்ள வரலாற்றுச் சான்றுகளை விட அகழாய்வு போன்ற முற்றிலும் அறிவியல்பூர்வமான ஆய்வு முடிவுகளையே உலக வரலாற்றாளர்கள் முழுமையாக ஏற்பார்கள்.

நம்மில் பலர் பள்ளியில் படித்த காலத்திலிருந்து ’சிந்துவெளி நாகரிகம்’ பற்றி வரலாற்றுப் பாடங்களில் படித்துள்ளோம். ஆனால், ’நொய்யல்வெளி நாகரிகம்’ என்ற சொற்றொடரையே கடந்த 25 ஆண்டுகளாகத் தான் உச்சரித்து வருகிறோம். காரணம், நொய்யல் ஆற்றங்கரையிலுள்ள ’கொடுமணல்’ பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாகத் தான் அகழாய்வுகள் நடைபெற்று வருகின்றன.

பாண்டிச்சேரியிலுள்ள வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் கே.ராஜன் தலைமையில் மூன்று வரலாற்றாளர்கள் கொண்ட குழு 2009 இல் இரண்டு பாகங்கள் கொண்ட ஒரு முக்கியமான நூலைக் கொண்டு வந்தது. ‘ARCHAEOLOGICAL SITES IN TAMILNADU’ என்பது அந்த நூலின் பெயர். தமிழகம் முழுவதும் ஆய்வு செய்தும் ஏற்கனவே செய்யப்பட்ட ஆய்வினைப் பரிசீலித்தும் தமிழகத்தில் எந்தெந்த இடங்களெல்லாம் அகழாய்வுக்குரிய இடங்கள் என்று தொகுத்தும் வகுத்தும் மாவட்ட வாரியாக துல்லியமான விபரங்களுடன் ஒரு நீண்ட பட்டியலே வெளியிட்டுள்ளனர். மொத்தம் 2000 இடங்கள் தமிழகத்தில் அகழாய்வுக்குரிய இடங்கள் என்றும் மாவட்டம், வட்டம், ஊரின் பெயர், அந்த ஊரில் எந்த இடம் என்று எல்லா முக்கிய விபரங்களுடனும் அந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மொத்தம் 2000 இடங்களில் இதுவரை 88 இடங்களில் மட்டும் தான் அகழாய்வு செய்யப்ப்பட்டுள்ளது என்பதை நாம் ஆழ்ந்து கவனிக்க வேண்டும். அந்த 88 இடங்களிலும் வெறும் 10 சதவிகிதம் பகுதிகளில் மட்டுமே அகழாய்வுப்பணி நடைபெற்றிருக்கிறது. இவ்வளவு குறைவான இடங்களில் நடைபெற்ற அகழாய்வுகளிலேயே தமிழர்களின் பழம் பெருமையைப் பறைசாற்றும் வரலாற்றுச் செல்வங்கள் கிடைத்திருக்கிறதென்றால்,  இந்த 88 இடங்களிலும் முழுமையாக வரலாற்று ஆய்வு நிறைவாக நடந்து முடிந்திருந்தால் நமக்கு இன்னும் எத்தனை வரலாற்று ஆதாரங்கள் கிடைத்திருக்கும்? அத்தோடு இன்னும் தமிழகத்தில் வாய்ப்பிருந்தும் அகழாய்வு தொடங்கப்படாமலேயே இருக்கும் 1900 இடங்களிலும் படிப்படியாக அகழாய்வு நடைபெற்றிருந்தால் உலகமே தமிழகத்தைத் திரும்பிப் பார்க்கக் கூடிய அளவில் தமிழகத்து வரலாற்று வளம் வெளிப்பட்டிருக்கும்.

தமிழகத்தில் 1676 முதல் 1885 வரை மொத்தம் 13 மராட்டிய மன்னர்கள் ஆட்சி செய்துள்ளனர். இவர்கள் ஆட்சிக்காலத்தில் இருந்த அரசு ஆவணங்கள் அனைத்தும் கோடிக்கணக்கான காகிதத் தாள்களாக உள்ளன. எம்.ஜி.இராமச்சந்திரன் முதலமைச்சராக இருந்த காலத்தில் இந்த ஆவணங்களில் பெரும்பகுதி மராட்டிய எழுத்துகளில் இருப்பதால் அவற்றை மராட்டிய மாநிலத்திலுள்ள பூனே நகருக்கு அனுப்புவதாக முடிவு செய்யப்பட்டிருந்தது. ஈரோடு கல்வெட்டறிஞர் புலவர் செ.இராசு உள்ளிட்ட வரலாற்று அறிஞர்கள் தலையிட்டு, அந்த ஆவணங்கள் ஆய்வுப்பணிக்காக தமிழகத்திலேயே பாதுகாக்கப்பட வேண்டும் என்று அன்றைய அரசுச் செயலாளர் பரமசிவம் அவர்களிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டதற்கிணங்க அந்த ஆவணங்கள் அனைத்தும் தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஒரு பெரிய கிடங்கு போன்ற – குளிரூட்டப்பட்ட பெரிய அரங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இந்த ஆவணங்கள் பற்றி பூர்வாங்க ஆய்வுகளை மேற்கொள்ள கத்ரே என்ற மராட்டிய மொழி நிபுணர் தமிழக அரசால் தமிழகத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்.  அத்தனை காகித ஆவணங்களையும் ஆய்வு செய்த ஆய்வாளர்  கத்ரே, அந்த ஆவணங்களை A, B, C என்ற மூன்று பிரிவுகளாகப் பிரித்தார். A பிரிவை சென்னை எழும்பூர் ஆவணக் காப்பகத்தில் வைக்கலாம் என்றும், B பிரிவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கலாம் என்றும்,  C பிரிவு ஆவணங்களை அழித்து விடலாம் என்றும் அறிக்கை சமர்ப்பித்தார்.

அந்த C பிரிவு ஆவணங்களைத் தான் அழிக்காமல் பாதுகாப்பதோடு அதிக ஆய்வும் செய்து வருகிறோம். மீதமுள்ள  பல லட்சக்கணக்கான A மற்றும் B பிரிவு காகித ஆவணங்களை ஆய்வு செய்தால் தமிழ்நாடு வரலாறு குறித்த ஏராளமான வியத்தகு வரலாற்றுக் குறிப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது.

உலகளவில் வட்டார வரலாறு தற்காலத்தில் முக்கியத்துவம் பெற்று வருகிறது. இதைத்தான் உள்ளூர் வரலாறு என்கிறோம். சில சமயங்களில் உலக வரலாற்றைத் தெரிந்திருப்பவர்களுக்கு உள்ளூர் வரலாறு தெரிந்திருப்பதில்லை.

இதே சேலத்தில் 1950 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் தேதி ஒரு வரலாற்று முக்கியத்துவம் மிக்க சம்பவம் நடைபெற்றது. அப்போது சேலம் சிறைச்சாலை அடக்க முடியாத கிரிமினல்களை அடைத்து வைப்பதற்கான சிறப்புச் சிறைச்சாலையாகக் கருதப்பட்டது. அந்தச் சிறையில் 300-க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகளை திட்டமிட்டு கொண்டு வந்து அடைத்தனர். பிரதான சிறைக்கு அருகில் உள்ள ANNEX JAIL என்கிற இணப்புச் சிறையில் மூன்று கொட்டடியில் இந்த அரசியல் கைதிகள் அடைக்கப்பட்டனர். இவர்கள் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

சிறையில் இருந்த அரசியல் கைதிகள் கொடுமைப் படுத்தப்பட்டனர். குரங்குக் குல்லா அணிய வேண்டும்: அரைக்கால் டவுசர் மற்றும் கைதி நம்பர் போட்ட பனியன் அணிய வேண்டும்; கழுத்தில் விடுதலைத் தேதி எழுதப்பட்டுள்ள பலகையைத் தொங்க விட வேண்டும் போன்ற சிறை விதிகளையும் மீறி – சில எழுதப்படாத விதிகளையும் அமல் படுத்தினர். எல்லாவற்றையும் விட, திடீர் திடீரென வந்து ’வரிசையாக உட்கார வேண்டும்’ என்று கத்துவார்கள், அதிகாரிகள். உட்கார உட்கார லத்தியால் அடிப்பார்கள். இதை எதிர்த்து, சிறையில் அடைக்கப்பட்டிருந்த – நிராயுதபாணிகளான அரசியல் கைதிகள் போராடினார்கள். கைதிகளுக்கு ஆத்திரமூட்டுவதே சிறை அதிகாரிகளுக்கு வேலையாக இருந்தது.

பிப்ரவரி 11 ஆம் தேதி, சிறைக் கைதிகளின் போராட்டத்தைப் பொறுக்க முடியாத சிறை அதிகாரிகள் சிறைக் கொட்டடிக்கு வெளியே நின்று கொண்டு இரண்டு கம்பிகளுக்கு இடையில் துப்பாக்கிகளை வைத்து கொட்டடிக்குள்ளே இருந்த அரசியல் கைதிகளை எச்சரிக்கை கூட செய்யாமல் சரமாரியாகச் சுட்டார்கள்.

மொத்தம் 21 அரசியல் கைதிகள் சிறைச்சாலைக்குள்ளேயே ரத்தவெள்ளத்தில் மிதந்து துடிதுடித்துச் செத்து மடிந்தார்கள். இதில் 19 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். காவேரி முதலியார், ஷேக் தாவூத், ஆறுமுகம் ஆகிய மூவரும் தமிழர்கள். மற்றவர்களெல்லாம் கடும் காயங்களுடன் உயிர் தப்பினார்கள். இது , இதே சேலத்தில் நடந்தது தானே! குறைந்தபட்சம் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைவருக்கும் இந்த வட்டாரச் சம்பவம் தெரியுமா?

உள்ளே காயமடைந்து உயிர் தப்பிய சேலம் மாவட்டம் பழையபாளையத்தைச் சேர்ந்த சுப்பு என்கிற ஒரு அரசியல் கைதியை  நேரில் சந்தித்துக் கேட்டும், அவ்வாறு இன்னும் சில கைதிகளை நேரடியாக விசாரித்தும், அதற்குப் பிறகு அப்போது வெளியான சில பழைய அறிக்கைகளைப் படித்தும் தான் இந்தச் சம்பவத்தை நாம் அறிந்து கொண்டோம். அதைக் கட்டுரையாக எழுதி வெளியிட்டோம். இது போன்று எத்தனையோ கோணங்களில் வரலாற்று ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளன.

வரலாற்றுக்கு சாதி, மதம், அரசியல், மொழி என்ற எந்த சார்பும் கிடையாது. வரலாற்றை வரலாற்றுக் கண்கொண்டு மட்டுமல்லாது சமூகக் கண்ணோட்டத்தோடும் அறிவியல் கண்ணோட்டத்தோடும் அணுகுவது இன்றைய காலத்தின் தேவையாகும் ” என்று ஸ்டாலின் குணசேகரன் தனது உரையில் குறிப்பிட்டார்.

மாநாட்டின் நிறைவுவிழா நிகழ்ச்சிக்கு கோவை சி.பி.எம். கல்லூரியின் வரலாற்றுத்துறை முன்னாள் தலைவர்  பேராசிரியர் முனைவர் என். பாலசுப்பிரமணியம் தலைமையேற்றார். பெரியார் பல்கலைக்கழக வரலாற்றுத்துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் எம். தமிழ்மாறன் வரவேற்புரை நிகழ்த்தினார். தென்னிந்திய வரலாற்றுப் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் முனைவர் என். ராஜேந்திரன் வாழ்த்துரை வழங்கினார். பெரியார் பல்கலைக்கழக வரலாற்றுத்துறைப் பேராசிரியரும் மாநாட்டுச் செயலாளருமான முனைவர் எஸ். ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

                                நன்றி, ‘ஜனசக்தி’ வார இதழ் – 19.03.2017

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *