பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

17409641_1266256516761878_528197070_n
62059640@N05_rகாயத்ரி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (25.03.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.

9 thoughts on “படக்கவிதைப் போட்டி – (104)

 1. நிம்மதி

  உள்ளநிறை இல்லாமல் இல்லையில்லை என்றெண்ண
  பஞ்சனையில் சாய்ந்தாலும் தூக்கமது வாராது
  உள்ளதுவே போதுமென்ற எண்ணமது கொண்டுவிட்டால்
  மண்தரையும் நல்மஞ்சம் ஆம்.

 2. 1. கொடத்த அணைச்சுக்கிட்டு கூடாரம் போட்டூக்கிட்டு
  படுத்தூக் கெடக்கிறியே தம்பி நீ
  பரதேசி ஆனாயோ வெம்பி!

  2. பாலவனத்தினிலே பரதேசியானவனே
  வேல கெடைக்கலையோ தம்பி – இந்த
  வெயிலும் சுடுகலையோ தம்பி

  3. கூடுகட்டித் தூக்காணாங் குருவியெல்லாம் வாழுகையில்
  கேடுகெட்டுப் போனாயே தம்பி இங்க
  கெடந்து வதங்குறியே தம்பி

  4. பாடூ… பட்டூப்பிட்டு பழஞ்சோத்தைக் கொட்டீப்பிட்டு
  வாடிப் போய்த் தூங்கிறியோ தம்பி – உன்
  வரலாறு தோணலையே தம்பி!

  5. ஆத்துக்காறி கட்டீத்தந்த சோத்த முழுங்கிப்பிட்டு
  வேர்த்துக்கொட்டத் தூங்கிறியோ தம்பி – நீ
  வேலையத் தொடங்கலையோ தம்பி

  6. கொடத்துல தண்ணீ மொண்டு கொண்டுவந்து வச்சீப்பிட்டு
  படங்கு கட்டித் தூங்கிறியோ! தம்பி – எதிர்
  பார்க்குதுன்ன ஒங்குடும்பம் நம்பி

  7. குப்பையில கண்டெடுத்த கொடம், வாளி, போத்தல்களை
  எப்ப நீ விற்கப் போறே தம்பி – கொஞ்சம்
  எணச் சாய இருக்கிறியோ! தம்பி.

  8. எணச்சாய இருப்பதற்கு ஏழைக்கு நேரமில்ல
  பணங்காசு வேணுமுண்ணாத் தம்பி – உன்
  படங்கச் சுருட்டிக்கோடா எம்பி

  9. சேர்த்ததெல்லாம் சீக்கிரமா, சில்லறைக்கு வித்தூப்பிட்டு,
  ஆத்துக்குப் போயிருடா தம்பி – நீ
  அங்க போயி தூங்கிக்கலாம் தம்பி

  10. தன்னான தானே நன்னே தானான தானே நன்னா
  தன்னானத் தானே தன்னே தானே நன்னானே – தன்னே
  தானானத் தானேதன்னே தன்னாந் தன்னானே!

 3. செல்வந்தன்…

  இருப்பதை வைத்து நிறைவுறாமல்
  இன்னும் வேண்டும் எனுமவாவில்
  அருகி லுள்ளதை நுகராதே
  அல்ல லுறுவோர் செல்வரல்லர்,
  இருக்கும் பொருளே போதுமென்ற
  இதய நிறைவுடன் உண்டுறங்கும்
  வருத்தம் மறந்த ஏழையேதான்
  வாழும் உண்மை செல்வந்தனே…!

  -செண்பக ஜெகதீசன்…

 4. தூக்கம், ஆண்டவன் தந்த அருட் கொடை தோழா!
  துக்கம் மறந்த நிலை, தூக்கம் என் தோழா!
  பாலுக்கு அழுது தூக்கத்தை தொலைத்தது
  சில காலம்!
  படித்துப் படித்து தூக்கத்தை தொலைத்தது
  சில காலம்!
  வேலை தேடி தூக்கத்தை தொலைத்தது
  சில காலம்!
  பருவ வயதில் துணையைத் தேடி
  தூக்கத்தைத் தொலைத்தது சில காலம்
  குடும்பச் சுமையில் தூக்கத்தை தொலைத்தது
  சில காலம்!
  பணத்தைத் தேடி தூக்கத்தை தொலைத்தது
  சில காலம்!
  தொலைத்த தூக்கத்தை தேடிப்
  பிடித்தாயோ என் தோழா!
  அன்னை வயிற்றில் தூங்கிய தூக்கம்!
  இன்று வரையில் மறந்த தூக்கம்!
  உன்னைப் பார்த்ததும் வந்தது ஏக்கம்!

 5. சிந்தனை உறக்கம்!
  =================

  இறைந்துண்டு வாழும் வாழ்க்கையானாலும்..
  இறவாப் பசியென்பதனைவர்க்கும் இயற்கைதானே..!

  சதைரத்தம் எலும்புடன் உடலென்றாலங்கே
  பசிமயக்கம் உறக்கமென்பதும் உடன்பிறப்பன்றோ?..

  உறக்கத்துக்கு உரிமைக்குரல் தேவையில்லை..
  ஊணுறக்க மில்லையேல் உயிர்களுமில்லையப்பா..!

  மாலைச் சூரியனின் கருணையினால்..
  மணற் படுக்கையிலென் கவலைமறந்துவிட..

  வெட்டாந்தரை இடம்தான் நானுறங்கும்
  கட்டாந்தரை..நீர்வற்றிருகிய நிலமேயென்சொர்க்கம்!

  துணிக்குடையின் கொடையால் தந்நிழல்தர..
  துயிலெழ மனமில்லா மதிமயக்கம்தனில்..

  உறவொன்றுமில்லையடா உறக்கம்தான் சொந்தமடா
  ஊர்திரிந்துஉடல் களைத்துறங்கிக் கிடக்கிறேன்..!

  அவனியில் படுமின்னலிலே யானும்..
  அகதியாகி அயர்ந்துறங்கிக் கிடக்கின்றேன்..!

  வண்டினம்வாழ பண்புடை மலர்போல..இங்கு
  வறியவர்க்குதவும் குணமுடை யோரில்லையப்பா,,!

  ஈகைமிகு தென்றலும் மேகமுடன்சேர்ந்ததால்..
  இதமாகவென் பசியும் அடங்கிப்போனதே..!

  இல்லாதவனைக் கண்டுகொளா தேசத்தின்..
  இனம்காணா நினைவலையில் உறங்குகிறேன்..!

  பசியுறக்கம் நிரந்தர வரமேயானாலும்..
  பாரிலில்லை ஆருக்கும்பசிபோக்கும் மனப்போக்கு..!

  பாவம்வயிறு செய்த தவறுதானென்ன..
  தினம்வறுமை தானெனை வாட்டிடுதே..!

  வயிற்றுக்குச் சோறிட வேண்டும்..
  இங்கும் வாழும் மனிதர்க்கெல்லாம்…என

  மஹாகவியின் கவிப்பசியறிந் தாங்கே..
  மகத்தான சிந்தனைக்கே அடிபணியவேண்டுமப்பா..!

  மண்குடிசை வாழ்வு நிலையென்றால்..
  மண்ணிலென் வறுமைதீரும் நாளெப்போது?..

  உறக்கத்தினாலென்னுடல் மண்ணைத் தொட்டாலும்..
  விழித்தெழும்போதென் சிந்தனைகள் விண்ணைத்தொடுமப்பா..!

  இல்லையெனும் சொல்லேயிலாமல் இருந்திருந்தால்..
  இயல்புவாழ்க்கை யாவர்க்கும் எளிதாகுமப்பா..

  நிறைவுடனே நானிலத்தில்நாம் வாழநித்தம்..
  இறைவனிட மதையேமண்டியிட்டு வேண்டிடுவோம்..!

 6. தலைக்கு மேலே துணியே கூரை! அனலாய் தகிக்கும் கோடை வெயில்!
  அலையின் சத்தமே தாலாட்டு
  நெருப்பாய் கொதிக்கும் கடற்கரை மணலில்!
  உன்னை மறந்து தூங்குகிறாய்!
  உழைத்த களைப்போ!
  பட்டினிப் பிணியோ!
  காரணம் எதுவாய் இருந்தாலும் !
  நிம்மதியாக தூங்குகிறாய்!
  ஆசை இல்லா காரணத்தால்
  அயர்ந்து நீயும் தூங்குகிறாய் !
  இருப்பதில் நிறைவைக் கண்டதினால் !
  மணலில் மகிழ்ச்சியாய் தூங்குகிறாய்!
  மனதில் இதனை நிறுத்திடுவேன் !
  இனி நிம்மதியாக தூங்கிடுவேன் !

 7. தவறவிட்ட தங்கம்

  கண்மூடி நானிருப்பது நல்ல கனவினிலல்லவே.
  கண்ணுக்குத் தெரியும் கானல் காட்சியன்றி நீருமல்லவே..

  “யாசித்தாலும் நிம்மதியான வாழ்க்கை! ”
  யாரோ சொல்லக் கேட்டிருக்கிறேன்
  யானும் வாழ்ந்தேன் அவ்விதவாழ்வை
  யாரும் மறுப்பதற்கல்லவே..

  உழைத்து நிதமும் உணவளிக்காவிடினும்
  உண்மையான பாசம் பொழிந்தாௗ்
  உண்டி உறையுௗ் எதுவுமின்றியும்
  உன்னத வாழ்வௗித்தது அவௗல்லவே..

  அறியவில்லை அவள் பாசம் அன்று
  அதிகாரம் கொண்டேன் ஆண்மகனென்று
  அதட்டி அவௗை விரட்டினாலும்
  அௗவில்லா மதிப்பௗித்தாலல்லவே..

  கடற்கரை மணலில் காண்கிறேன் பலரை
  கண்டதுமெனை விலகியே செல்கின்றனர்
  கடவுளே..நாய்க்கௗிக்கும் உணவு கூட நான் புசிக்க தருவதில்லை
  கண்னென எனைக்காத்தவௗ் விட்டுச்சென்றதுமே..

  ஊதாரியாய்த் திரிந்தாலும் எனக்கு
  ஊட்டி விட்டு மகிழ்ந்தா ௗே
  ஊரில் ஒருவர் கூட மதிப்பதில்லை
  உலகத்தை விட்டு அவௗ் சென்றதுமே..

  உதறிவிட்டேன் ஐயஹோ
  உயிர்கொடுத்த அவ ௗை
  ‘தொலைந்து போ நீ’ என விரட்டி
  தொலைத்து விட்டேன் என் தங்கத்தை.

  காரணமில்லாமல் காதலிப்பவௗ் பெற்றெடுத்தவௗ் மட்டுமே
  காலம் சென்ற பின்னரே உணர்கிறேன் என்றுமே
  மனிதனாய் மதிக்க கூட நாதியில்லை
  மண்ணை விட்டு மங்கையவௗ் பிரிந்ததுமே..

  பிரிந்தது உனதுயிர் – தாயே இங்கு
  பிணமானது நீ பெற்ற உயிர்
  பிரிவில் தான் உணர்கிறேன்
  பித்துப்பிடித்து நான் செய்த தவறுகளையே..

  “ஆண்டாண்டு காலம் அழுது புலம்பினார் மாண்டார் திரும்புவதில்லை”
  ஆண்டாண்டு காலம் நான் இனி வாழ்ந்தாலும்
  ஆதரவளிக்க எவருமில்லை..

  தவறவிட்ட தங்கத்தை எண்ணி ஏங்குகிறேன்
  தக்க வைத்துக் கொ‌ள்ளு‌ங்க‌ள் நீங்களாவது
  தங்கள் கையிலிருக்கும் தங்கத்தை
  தாயெனும் தெய்வத்தை..

 8. துரத்தப்பட்ட உறவு

  தேசமில்லை
  உன் தேசமில்லை
  ஓயாத ஓலம்….
  அவர்களுக்கோ
  நேசமில்லை
  நெஞ்சில் நேசமில்லை
  மீளாத சோகம்…
  அகதி எனும் கேலியாய்
  தூற்றும் தூவேசக் குரல்
  காற்றில் தெறிக்க
  தொலை தூர பயணத்தில்
  மண்ணில் விதைக்கப்பட்டவர்கள் ஏராளம்
  பாலியல் அத்துமீறல்கள் தாராளம்
  ஆண் என்றால் கணநேரம் துயிலலாம் தெருவோரம்
  பெண்ணென்றால் என் செய்ய?
  மணல்மேடுகள் சவக்குழிகளாக
  உறவுகளும் உடைமைகளும் சிதறவிட்டு
  அகதியாய் அலையவிடும்
  பாவிகளே
  என்று தீரும்
  எங்கள் சுதந்திர தாகம்.

 9. என் குடியிருப்பு

  சி. ஜெயபாரதன், கனடா

  கடற்கரையே என் குடியிருப்பு !
  கஞ்சி ஊத்த எனக்கு,
  காவல் காக்க எனக்கு
  கடற்தாயே துணையிருப்பு !
  காத்தாடி வேணாம்,
  கதவும் தேவை யில்லை !
  வாடகை தர வேணாம் !
  வரி கட்ட வேணாம் !
  போன சுனாமியிலே
  பொண்டாட்டி
  போய் விட்டாள் !
  படகும் போச்சு !
  அடுத்தடுத்த அலை அடிப்பில்
  குடிசையும் போச்சு !
  பிடிச்ச மீனெல்லாம் போச்சு !
  காசும் போச்சு !
  கட்டிய வேட்டியும் போச்சு
  கரையிலே கிடந்த
  போர்வையே கூரை யாச்சு !
  கோரமாய்த் தாக்கிய
  சுனாமி அழிவைக்
  காண வந்த
  முதல் அமைச்சர்
  குடிசை கட்டித் தருவதாய்
  உறுதி கூறினார் !
  இனிதாய்ப் பேசினார் !
  குடிசை கட்ட வந்த போது
  நிலம் விற்க மறுத்து விட்டார்
  நிலச் சொந்தக் காரர் !
  இந்தக் குடியிருப்பில்
  இனிப் பயமில்லை எனக்கு !
  சுனாமி அடித்தாலும்
  புயல் அடித்தாலும்
  புதுசாய்க் கட்ட
  ஓலைப் பாய் கிடைக்காதா ?
  ஒடிந்த கம்பு ஒன்று
  மிதக்காதா ?
  கடற்கரையிலே வாழ்ந்து
  கடலிலே புதையும்
  ஜடங்களுக்கு
  இறுதிச்
  சடங்கும் இல்லை !
  இரங்குவாரும்
  இல்லை !

  ++++++++++++++++

Leave a Reply

Your email address will not be published.