Blog

  • கற்றல் ஒரு ஆற்றல் -64

    க. பாலசுப்பிரமணியன்

    மழலையர்களும் கற்றலும்

    education

    மழலையர்கள் எவ்வாறு கற்றுக்கொள்கிறார்கள் என்பது பற்றிய விரிவான ஆராய்ச்சிகள் உலகின் பல நாடுகளில் செய்யப்பட்டுள்ளன. இதைப் பற்றிய ஆராய்ச்சிகளின் ஒட்டுமொத்தமான கருத்து என்னவெனில் –

    1.மழலையர்களின் கற்றல் ஒருமுகமானதாகவோ அல்லது ஒருமுனைப்பட்டதாகவோ இருப்பதில்லை.

    1. மழலையர்களின் கவனயீர்ப்புக்களின் நேரம் மிகக்குறைவு.
    2. மழலையர்களின் அறிவுத்தேடல் அபரிமிதமானது.
    3. சுற்றுச்சூழலின் பல்முனை ஈர்ப்புக்கள் தேடலையும் கற்றலையும் அதிகமாக பாதிக்கின்றது.
    4. வண்ணங்கள், ஒலிகள், ஒளிப்பரிமாணங்கள், அளவுப்பரிமாணங்கள் ஆகியவை கவனத்தையும் தேடலையும் அதிகப்படுத்துவது மட்டுமின்றி ஆர்வப்படுத்துகின்றன.
    5. தேடலிலும், கற்றலிலும் உணர்வுபூர்வமான, செயல்சார்ந்த கற்றல் வகைகள் அதிகம் ஈர்க்கப்படுகின்றன.
    6. மாறும் வெப்பச்சூழ்நிலைகள், பசி, தாகம், தூக்கம், உறவுகளின் தாக்கங்கள் ஆகியவை கற்றலின் நேரத்தையும், தாக்கத்தையும் பாதிக்கின்றன.
    7. பயமான, மனஅழுத்தங்களை உடைய சூழ்நிலைகளில் கற்றல் மிகக் குறைவாகவோ அல்லது இல்லாமல் போகவோ வாய்ப்புக்கள் அதிகம்.
    8. விளையாட்டான போக்கில் கற்றலின் ஆர்வமும் தாக்கமும் அதிகமாக இருப்பது மட்டுமின்றி, வளர்கின்றது.
    9. கற்றலின் பரிமாணங்கள் சிறிய அளவிலும் கால அவகாசங்களுக்கு இடையிலும் மாறவும் மற்றும் தொடரவும் வாய்ப்புக்கள் உள்ளன.

    இந்த கருத்துக்களை வலுப்படுத்தும் வகையிலும் அதனை முன்னிறுத்தியும் கல்வி முறைகள் வழிவகுக்கப்பட்டு கடைப்பிடிக்கப்படுகின்றன. ஆனால் பல சிறிய வியாபார நோக்கத்தில் நடத்தப்படும் பள்ளிகளில் மேற்கொண்ட எந்தக்கருத்தும் முன்னிலை படுத்தப்படுவதில்லை. அவை குழந்தைகளின் காப்பகங்களாக மட்டும் இருப்பது மட்டுமின்றி, உடல்- மன நலன்களை பேணும் கல்வியாக இருப்பதில்லை. பல இடங்களில் வேலைகளில் அமர்த்தப்படும் ஆசிரியர்களுக்கு இதை பற்றிய போதுமான அறிவோ அல்லது இதனைச் சார்ந்த கற்பித்தல் திறனோ இருப்பதில்லை.

    பொதுவாக மழலைகளின் கற்றலில் ஒளி. ஒலி மற்றும் செயல்களின் தாக்கங்கள் அதிகமாக இருப்பதால் – பார்வைகள், கேட்டல் மற்றும் உணர்வு சார்ந்த செயல்களால் கற்றல் அதிகமாக நிகழ்வது மட்டுமின்றி உணர்வு சார்ந்த கற்றலாக மாறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம்.

    வண்ணங்கள், பெரியது- சிறியது போன்ற மாற்றத் தோற்றங்கள், நீண்டது – குறுகியது போன்ற அமைப்புக்கள், வளைவுகள், வட்டம்-சதுரம் போன்ற பரிமாண மாற்றங்கள் பார்வைகளால் ஈர்க்கப்பட்டு தேடலை ஊக்குவிக்கின்றது.

    அதேபோல் இசை, அதிர்வுகள், ஒலிகளின் மாறும் போக்குகள், ஒலிப்படுத்தும் பொருள்கள், இசைக்கருவிகள், பேசும் முறைகள் ஆகியவை கற்றலை வளர்ப்பதுமட்டுமின்றி அதன் பரிமாணங்களை பாதிக்கின்றன.

    அதேபோல் விளையாட்டுப் பொருள்கள், விளையாட்டு முறைகள், ஆட்டங்கள், உடலின் செயல் சார்ந்த ஈடுப்பாடுகள் ஆகியவை கற்றலை பாதிக்கின்றன.

    ஒரு தவழும் குழந்தை விளையாடும் போக்கை சற்றே உன்னிப்பாகவும கவனமாகவும் பார்த்தால் முதலில் குழந்தை அருகிலுள்ள ஒரு விளையாட்டு பொருளைத்  தேடும் பொழுது வண்ணங்கள் மிக்க பொருளைத் தேடுவதோ அல்லது, பெரிய பொருட்களால் ஈர்க்கப்படுவதோ சாதாரண நிகழ்வு. அந்தப்பொருளை நோக்கி நகரும் அந்தக் குழந்தை அடுத்து அதனை நகர்த்தியோ அல்லது அசைத்தோ வரும் ஒலிகளில் கவனம் செலுத்துகின்றது. சிறிது நேரத்தில் அந்தப்பொருளை வாயினில் வைத்து விளையாடுகின்றது. இத்தனை போக்குகளும் அதன் மூளையினாலும் உள்மனதினாலும் உந்தப்பட்டு நடக்கும் செயல்களே.

    ஆகவேதான்,மழலையர் பள்ளிகளில் இந்த மூன்றையும் இணைப்படுத்தியோ தேவைக்கும் நேரத்திற்கும் உகந்தாற்போல் முன்னிலைப்படுத்தியோ கற்றல்களுக்கான சூழ்நிலைகளை ஏற்படுத்தல் அவசியமாகின்றது.

    கற்றலின் முக்கியமான அம்சம் – புரிதல். கற்றுக்கொள்கின்ற மாணவனுக்கு சொல்லப்படுகின்ற, பார்க்கப்படுகின்ற அல்லது செயல்படுத்தப்படுகின்ற கற்றலின் பொருள் புரியாதவரை கற்றல் நிறைவுபடுவதில்லை. இது சிறப்பாவதற்கு மொழி மிகத்தேவையானது. இதனால்தான் கற்றலின் முதல் தேடல்கள் தாய்மொழியில் மட்டும் இருக்கவேண்டும் என்று சொல்லப்படுகின்றது. பொதுவாக, ஆராய்ச்சியின்படி மனித மூளையின் வளர்ச்சியின் முதல் சில ஆண்டுகளில் மூன்று அல்லது நான்கு மொழிகள் கற்றுக்கொள்வதற்கான வாப்புக்கள் அதிகம் இருந்தாலும், தாய்மொழியில் கற்றல் ஏற்படும்பொழுது அதன் தரமும் வலுவும் சிறப்பாக உள்ளதாக ஆரய்ச்சிகள் கூறுகின்றன. மற்றும் கற்றலின் பொது மூளையுடன் உடலின் பல உறுப்புக்கள் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. இந்த ஒருங்கிணைப்பின் தாக்கத்தினால் கற்றலின் பரிமாணங்களும், திசைகளும் வழிகளும் அவ்வப்போது மாறுபடுகின்றன. பொதுவாக மழலைப் பருவத்தில் இப்படிப்பட்ட ஒருங்கிணைப்பை கீழ்கண்டவாறு வகைப்படுத்துவர்:

    1. கண் – மனம் ஒருங்கிணைப்பு (eye-mind coordination)
    2. செவி- மனம் ஒருங்கிணைப்பு (Ear-mind coordination)
    3. செயல்(கை) -மனம் ஒருங்கிணைப்பு (Hand- mind coordination)
    4. கண்-செவி ஒருங்கிணைப்பு’ (Eye-Ear coordination)
    5. கண் -செயல் (கை) ஒருங்கிணைப்பு (Eye-hand coordination)
    6. செவி-செயல் ஒருங்கிணைப்பு (Ear-hand coordination)
    7. கண்-கண் ஒருங்கிணைப்பு (Eye-Eye coordination)

    இப்படிப்பட்ட ஒருங்கிணைந்த கற்றலினால் வாழ்க்கைமுறையில் செயல்களும் திறன்களும் ஒருங்கிணைந்ததாகவும், திறன்படைத்ததாகவும் நேர-கால பரிமாணங்களை மேன்மைப்படுத்துவதாகவும் அமைகின்றன..

    (தொடரும் )

    Share
  • குறளின் கதிர்களாய்…(154)

    –செண்பக ஜெகதீசன்

    அழக்கொண்ட வெல்லா மழப்போ மிழப்பினும்
     பிற்பயக்கும் நற்பா லவை. (திருக்குறள் -659:வினைத் தூய்மை) 

    புதுக் கவிதையில்…

    அடுத்தவரை ஒருவன்
    அழவைத்து
    சேர்த்த செல்வமெல்லாம்,
    அழிந்திடும்
    அவனை அழவிட்டே… 

    நற்செயலால் பெற்ற
    பொருளை இழப்பினும்,
    பின்னர்
    நற்பயனே கிட்டும்…! 

    குறும்பாவில்…

    பிறரைத் துன்புறுத்தி பெற்றசெல்வம்
    போய்விடும் அவனை அழவிட்டு,
    இழப்பிலும் நல்வழிச்செல்வம் நன்மையே தரும்…! 

    மரபுக் கவிதையில்…

    பிறரை ஒருவன் அழவைத்துப்
      பொருளைச் சேர்த்தால் போகுமது
    துறந்தே யவனை அழவிட்டே
      துயரில் அவனை விழவிட்டே,
    சிறந்த வழியில் வந்தபொருள்
      சென்றா லதுவும் இழப்பில்லை,
    அறத்தால் வந்திடும் நற்பயனை
      அதுவே கொண்டு சேர்த்திடுமே…! 

    லிமரைக்கூ…

    பிறரழச் செல்வமதைச் சேர்க்காதே,
    போய்விடுமுனை அழவிட்டே, நல்வழிச் செல்வந்தரும்
    நற்பலனே, போனதெனப் பார்க்காதே…! 

    கிராமிய பாணியில்…

    சேக்காத சேக்காத
    செல்வத்தத்தான் சேக்காத,
    அடுத்தவன அழவுட்டு
    ஆசப்பட்டு சேக்காத… 

    அது ஒன்ன அழவுட்டு
    அத்தினயும் போயிடுமே
    அழிஞ்சிதான் போயிடுமே…
    நல்லவழியில சேத்தபணம்
    நம்மவுட்டுப் போனாலும்
    நட்டமில்ல நட்டமில்ல
    நல்லபலனக் கொண்டுவரும்… 

    அதால,
    சேக்காத சேக்காத
    செல்வத்தத்தான் சேக்காத,
    அடுத்தவன அழவுட்டு
    ஆசப்பட்டு சேக்காத…!

     

     

     

    Share
  • சிலப்பதிகாரத்தில் சமூக அவலம்

    -முனைவர் சு.இரமேஷ்

    அறிமுகம்

    பன்முகத்தன்மை கொண்ட நவீனத்துவத்துடன் விளங்கும் காப்பியம் சிலப்பதிகாரம் ஆகும். பல்வேறுபட்ட குடிமாந்தர்களின் வாழ்க்கை முறைமைகளைப் பிரதிபலிப்பது மட்டுமல்லாது பண்பாட்டுக்கூறுகளின் வடிவங்களையும் தன்னகத்தே பொதித்துள்ள கருவூலமாகத் திகழ்கிறது. அத்தகைய காப்பியத்தை எழுதிய இளங்கோ அரச மரபில் வந்தவர் என்பதோடு துறவு மேற்கொண்டவர் என்பதால் குறிப்பிடத்தக்க அம்சத்தை இக்காப்பியம் பெற்றிருக்கிறது. அன்றைய நிலையிலான அரசியல், பொருளாதாரம், சமூகம் ஆகியவற்றின் நிலையிலிருந்து உணர்த்தி நீதி, அறம், ஊழ்வினை, துறவு போன்றவற்றை போதிக்கின்ற அதேநேரத்தில்  சமூக அநீதி, கொடுமைகளும் நிகழ்ந்தேறியிருப்பது பதிவாகியிருப்பதை  இக்கட்டுரை ஆராய்கிறது. 

    பொன்தொழிலாளர்கள் படுகொலை

    கோவலன் கொலைசெய்யப்பட்ட நாளிலிருந்து பாண்டிய நாட்டில் மழை வளம்குன்றி பூமி வறண்டு பஞ்சம் பசி தலைதூக்கியது. வெக்கை நோய்களும் பரவின. இவற்றைக் கண்ட கொற்கையிலிருந்த வெற்றிவேற்செழியன் பாண்டிய மன்னனானதும் நாட்டின் இந்த நிலைமைக்குக் காரணம் கண்ணகியின் கடுங்கோபம்தான் எனக்கருதி ஆயிரம் பொற்கொல்லர்களை பலியிட்டுப் பூசை செய்தான். அதன்பிறகு நல்லமழை பெய்து நோய்களும் நீங்கின. மக்கள் நலம் பெற்றனர் என்பதை, இளங்கோ,

    ”அன்று தொட்டு பாண்டிய நாடு மழைவறம்
    கூர்ந்து வறுமை எய்தி, வெப்பு நோயும்|குருவும் தொடர, கொற்கையில் இருந்த
    வெற்றி வேற் செழியன், நங்கைக்கு
    பொற்கொல்லர் ஆயிரவரைக் கொன்று,
    நாடு மலிய மழை பெய்து நோயும் துன்பமும்
    நீங்கியது”             (உரைபெறு கட்டுரை)

    என்று குறிப்பிடுகின்றார். எவ்வித விசாரணையும் இல்லாமல் கோவலன் கொலை செய்யப்பட்ட நாளில் இருந்து பாண்டிய நாடு வளம் பெறாமைக்குக் காரணம் கண்ணகியின் கடுங்கோபமேயாகும் என்று இதற்குப் பரிகாரமாக பொன்வேலை செய்யும் ஆயிரம் தொழிலாளர்களை (பொற்கொல்லர்களை) பலி என்ற பெயரில் படுகொலை செய்தது இதயத்தை உலுக்குகின்ற கொடுமையாக இருக்கிறது. ஒரு மன்னனுக்கு இருக்கக்கூடாத பெரும் மூடநம்பிக்கையுடன் தான் தோன்றித்தனமாக செயல்படும் ஹிட்லரிசத்தின் முன்மாதிரியாகவும் பார்க்கமுடிகிறது. இத்தகைய கொடுமை இவனோடு முடியாமல் பரவலாக்கல் என்னும் நோக்கத்தில் கொங்குநாட்டின் இளவரசர் இளங்கோசர் என்பானும் இலங்கைத் தீவின் கயவாகு மன்னனும் பலியிட்டு பூசைகள் செய்திருக்கின்றனர் என்பதை உரைபெறு கட்டுரையின் வாயிலாக அறிந்துகொள்ள முடிகிறது. நீதிகேட்டுப் போராடிய கண்ணகி, தெய்வமாகிப் உயிர்பலி கேட்பதாகக் கருதி  பலியிட்டிருப்பது வேத ஆகம விதிப்படி பார்ப்பனிய முறையில் நிகழ்த்தப்பட்டிருக்கிறது என்பது திண்ணமாகிறது. மனித பலியிடுதலை ‘நரபலி’ என்பர். இவ்வழக்கமானது தொன்மைக்காலத்திலிருந்தே வருகிறது. பலியிடுதல் பற்றிய சடங்கு முறையை யசூர் வேதத்தில் (பலிச்சடங்கு வேதம்) கூறப்படுகிறது. “யசூர் வேதத்தில் புனித அதிகாரத்தின் (பிராமணர்கள்) ஆயுதம் பலிகள் ஆகும்” என்பதை எடுத்துரைக்கிறார் எஸ்.ஜி.சர்தேசாய் (2012:184).   “கடவுளின் அருளைப்பெருவதுதான் சடங்குகளின் நோக்கம்” என்பதை எடுத்துரைக்கிறார் வி.புரோதோவ் (1988:60). பலி அக்னியில் பிறந்தது தெய்வ சோதியில் ஒன்றான அக்னி பலியிடுகிறவனின் பாவத்தை பட்சித்துப் போகும் அக்னியின் புண்ணியத்தால் பரலோகத்தில் சுடராவான்” என்று சதபத பிராமணம் குறிப்பிடுவதாக எடுத்துரைக்கிறார் தே.ஞானசேகரன்(2000:93). ஆகவே பலியிடுதல் தமிழ்ப்பண்பாட்டின் அடையாளமாகக் கருதமுடியாது. 

    மாதவிக்குக் கோவலன் இழைத்த கொடுமை

    மாதவி, முறைப்படியான ஆடல்கலையை நிகழ்த்தியமைக்குச் சோழ மன்னன் பச்சை மாலையையும் தலைக்கோல் பட்டமும் அதனோடு ஆயிரத்தெட்டு பொன் கழஞ்சுமாலையும் பரிசாகத் தந்தான். அம்மாலையை விலைகொடுத்து வாங்குபவர் மாதவிக்கு ஏற்ற கணவனாகலாம் என நகரின் இளைஞர்கள் கூடுமிடத்தில் ஒரு கூனிப்பெண் கூறியதைக்கேட்ட கோவலன் அதற்குண்டான விலையைக் கொடுத்து கூனியின் பின்னால் மாதவியுடன் சென்றுவிட்டான் என்பதை, 

    மாமலர் நெடுங்கண் மாதவி மாலை
    கோவலன் வாங்கிக் கூனி தன்னோடு
    மணமனை புக்கு மாதவி தன்னோடு   (அரங்கேற்று காதை 170-172) 

    என்று இளங்கோ குறிப்பிடுகிறார். ஆயிரத்தெட்டு பொன்கழஞ்சு மாலையை விலை கொடுத்து வாங்கும் பணபலமும் மனவலிமையும் பெற்றிருந்த கோவலன், அன்பு மிக்க குற்றமற்ற கண்ணகியை மணந்து சிலகாலம் மட்டுமே ஆகியிருந்தது. சந்தையில் ஒருபொருளை ஏலம் எடுப்பதுபோல் ஏதுமறியாத ஆடல் நங்கையாகிய மாதவியை போகப்பொருளாக எண்ணித் தேவைக்கேற்பப் பயன்படுத்திவிட்டுத் தூக்கியெறிந்துவிடலாம் என்ற யதேச்சதிகார எண்ணத்திலேயே கோவலன் மாதவியை விலை கொடுத்து வாங்கியிருக்கலாமென்று கருதமுடிகிறது. மேலும், மாதவி கணிகையர் குலம் என்பதை அறிந்து கோவலன் விலைமாதர் நோக்கில் இதை செய்திருக்கக்கூடும் என்பது புலனாகிறது.

    மாதவி ஒரு பெண்குழந்தையை பெற்றெடுத்தப் பிறகு தாயையும் பிள்ளையையும் பரிதவிக்க விட்டுவிட்டு கண்ணகியிடம், “வஞ்சகமும் பொய்யும் நிறைந்த ஒருத்தியோடு உறவாடி நற்குடியில் பிறந்த பெரியோர்கள் உருவாக்கி வைத்த செல்வத்தைத் தொலைத்து விட்டு நிற்கிறேன்” என்பதை

    சலம் புணர் கொள்கைச் சலதியொடு ஆடி
    குலம் தருவான் பொருள் குன்றம் தொலைந்த
    இலம்பாடு நாணுத் தரும் எனக்கு என்ன…  (கனாத்திறம் உரைத்த காதை- 69-71)

    என்று கோவலன் கூறுகிறான். இது தன் தவற்றை, தனது ஒழுக்கமின்மையை,  தன்னால் உண்டான குடும்பச்சிதைவை, மாதவியை விலைகொடுத்தேனும் வாங்கி நுகர்ந்து மீண்டும் கண்ணகியிடம் வந்துவிடலாம் என்ற இழிவான போக்கை மறைப்பதற்கான முயற்சியில் கண்ணகியைச் சாந்தப்படுத்திட ‘வஞ்சகமும் பொய்யும் நிறைந்த ஒருத்தியோடு’ என்று மாதவியைப் பழித்துரைக்கும் அவனின் கூற்று  மாதவிக்கு இழைத்த அநீதியைக்காட்டுகிறது.

    பிறன்மனை நோக்குகின்றவனைக் கொல்லும் சதுக்கப்பூதம் தன்மனைக்கு துரோகம் இழைக்கும் நயவஞ்சகரைத் தண்டிக்காமல் விட்டிருப்பது அரசர், அந்தணர், அடுத்து வணிகரையும் பூதம் தண்டிக்காமல் இருந்திருப்பதை இது காட்டுகிறது. மாதவியை தவறானவள் என்று கூறிய கோவலனின் நாக்கு மாதவியின் கடிதத்தைக் கோசிகமாணியிடம் வாங்கிப் படித்த பின்பு,

    தன்தீது இலள் எனத் தளர்ச்சி நீங்கி
    என்தீது என்றே எய்தியது உணர்ந்து ஆங்கு (புறஞ்சேரியிருத்த காதை 94-95)

    என்ற பாடல் வரிகள் மூலம் ‘மாதவி குற்றமற்றவள் எல்லாம் என் தவறே’ என்று கோவலன் மனம் பிறழ்ந்து பேசியது மாதவிக்கு இழைத்த கொடுமை மட்டுமல்லாமல் இழந்த செல்வத்தைக் கண்ணகியின் வாயிலாகப் பெற்றுவிடலாம் என்ற எண்ணத்துடன் தன்வழிக்கு நடத்த முற்பட்டிருக்கிறான் என்பது தெளிவாகிறது. 

    ஊழ் எனும் பெயரில் கொடுமை    

    கண்ணகியின் கதை முழுதும் சாத்தனார் கூறக் கேட்ட இளங்கோவடிகள், ஊழ்வினையை முன்வைத்தே எழுதப்படுவதை,

    அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதும்
    உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்
    ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதுஉம்
    சூழ்வினைச் சிலம்பு காரணமாகச்
    சிலப்பதிகாரம் என்னும் பெயரால்
    நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள் (பதிகம் 55-60)  

    எனக் குறிப்பிடுகிறார். சாத்தனார் கூறிய கதையை வைத்துக்கொண்டு மனித எதார்த்த அல்லது திட்டமிட்டு நடத்திய தவறுகளுக்கெல்லாம் ஊழ்தான் என்பதை அவ்வப்போது நினைவுப்படுத்திக் கொண்டிருக்கிறார். புகார் நகரத்தின் வணிகனான கோவலன் கண்ணகியைப் பிரிந்து நாட்டிய நங்கை மாதவியுடன் சில காலம் வாழ்ந்து துன்பப்பட்டுக் கண்ணகியுடன் மதுரைக்குச் சென்று கொலையுண்டதும் அதனால் கண்ணகி மதுரையை அழித்தது மட்டுமல்லாமல் பாண்டிய மன்னனும் கோப்பெருந்தேவியும் உயிர்நீத்தனர். இவை அனைத்திற்கும் அவரவர் செய்த ‘ஊழ்வினையைக்’ காரணம் காட்டுகிறார். 

    கனாத்திறம் உரைத்த காதையில், தேவந்தி தன் கணவன் பாசண்டச்சாத்தனால்  கைவிடப்பட்ட நிலையில் கணவனிடம் மீண்டும்  சேர்வதற்குக் கோயில் கோயிலாக வேண்டி அலைகிறாள். அந்த வேளையில் கண்ணகியைச் சந்தித்து “நீ உன் கணவனால் வெறுத்து ஒதுக்கப்பட்டவள் அல்ல, பின் ஏன் பிரிய நேரிட்டது என்றால், முற்பிறப்பில் உன் கணவனுக்காக செய்ய வேண்டிய நோன்பினை செய்யத் தவறிவிட்டாய். அது நீங்கிடவேண்டுமானால் பூம்புகார் நகரிலே இருக்கும் சோம குண்டம், சூரிய குண்டம் என்னும் இரு பொய்கையில் மூழ்கிப் பின்பு மன்மதக்கடவுளை வணங்கினால் இம்மையிலும் மறுமையிலும் உன் கணவனைப் பிரியாமல் வாழலாம்” என்று கூறினாள் என்பதைக் கூறுகிறார். முற்பிறப்பில் கண்ணகி நோன்பு மேற்கொள்ளவில்லை என்பதால் இப்பிறவியில் கணவனைப் பிரிய நேர்ந்தது என்னும் கருத்தானது நோன்பு என்னும் பெயரில் குடும்பம், வீடு என்ற நிலையில் பெண்களை மரபு மீறாமல் புற உலகைப்பற்றி அறியச்செய்யாமல் அடக்குமுறை ஏவப்பட்டிருக்கிறது என்பது புலனாகிறது. 

    மதிமயக்கத்தில் கோப்பெருந்தேவியின் பின்னால் ஓடிய மன்னன் பொற்கொல்லனின் பொய்க்குற்றத்தை ஆராயாமல் போகிற போக்கில்  ‘கொன்று வருக’ என்று கூறியது முன்செய்த தீவினை பயன்முற்றி மூளப்போகிற நேரம் வந்தது என்பதை, 

    வினைவிளை காலம் ஆதலின் யாவதும்
    சினை அலர் வேம்பன் தேரான் ஆகி
    ஊர் காப்பாளரைக் கூவி ஈங்குஎன
    தாழ் பூங்கோதை தன்கால் சிலம்பு
    கன்றிய கள்வன் கையது ஆகின்
    கொன்று அச்சிலம்பு கொணர்க ஈங்குஎன (கொலைக்களக் காதை 148-151)

    இளங்கோ கூறுகிறார்.

    கோவலன் வெட்டுண்டு கிடக்கும் பொழுது அநாதையாகிய கண்ணகி அழுது புரண்டு இத்தகைய பெரும் துன்பத்தை உண்டாக்கிய அரசன் இவ்வாறு செய்திட காரணம் தெரியாமல் தவிக்கும் எனக்கு நான் செய்த தீவினைதான் என்ன? என்பதை யாராவது சொல்ல மாட்டார்களா? என்று அழுது புலம்புவதை,

    மன்னுறு துயர்செய்த மறவினை அறியாதேற்கு
    என்னுறு வினைகாண் ஆ! இதுஎன உரையாரோ
    பார்மிகு பழிதூற்ற பாண்டியன் தவறிழைப்ப
    ஈர்வது ஓர்வினை காண் ஆ! இதுயென உரையாரோ
    கண்பொழி புனல்சோரும் கடுவினை உடையேன்முன் (ஊர்சூழ்வரி 41-47)

    எனக் குறிப்பிடுகிறார்.

    கட்டுரைக்காதையில் (155-170) கண்ணகி முன்பாக தோன்றிய மதுராபதித் தெய்வம் பாண்டியனும் கோவலனும் தவறு செய்யாதவர்கள். ஆனாலும், முன்செய்த தீவினை காரணமாக பழி ஒன்று உண்டு கேள் என்று கூறலானது. “சங்கமன் என்னும் வணிகன் சிங்கபுரத்துக் கடை வீதியில் தான் கொண்டு வந்திருந்த அணிமணிகளை விற்றுக்கொண்டிருந்த போது அப்பிறப்பில் பரதன் என்னும் பெயருடன் இருந்த உன் கணவன் கோவலன் அவனை அரசனிடம் கொண்டு சென்று இவன் பகை நாட்டு ஒற்றன் எனக் கூறி கொலை செய்தான். கணவனை கொன்ற செய்தியைக் கேள்வியுற்ற நீலி பதறித்துடித்து வீதியில் அழுதுபுரண்டு இது அரச நீதியோ எனக்கேட்டு வேதனையுடன் ஒரு மலை மீது ஏறி நின்று உயிர் துறக்கும்முன் எனக்கு இத்தகைய நிலைமையைச் செய்தவர்கள் யாரானாலும் நான் அடைந்த இத்துன்பத்தை அடைந்து மடிவார்கள்” எனக்கூறி உயிரை மாய்த்துக்கொண்டாள். இதுவரைப் பட்ட துன்பத்திற்கெல்லாம் காரணம் இதுவே. நான் சொல்ல வந்த உண்மைப்பொருளும் இதுவே  என்று கூறியதாக இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார்.

    இவ்வாறு நடப்பதற்கெல்லாம் காரணம் கோவலன் மற்றும் பாண்டியமன்னன்  செய்த தீவினைதான் எனக்கூறும் இளங்கோ, பாண்டிமா தேவியின் இறப்பு, கோவலனின் தந்தை, கண்ணகியின் தந்தை ஆகிய இருவரும் துறவு கொண்டது, கோவலன் தாயும் கண்ணகியின் தாயும் இறந்து போனது, மாதரி தீயிட்டுத் தற்கொலை செய்து கொண்டது, வழித்துணையாக வந்த கவுந்தியடிகள் நோன்பிருந்து இறந்தது, மாதவியும் மணிமேகலையும் துறவு கொண்டது, கோயிலில் ஆயிரம் பொற்கொல்லத் தொழிலாளிகள்  பலியானது இவைகளுக்கெல்லாம் என்ன முன்வினை காரணமாக இருக்கிறது என்று கூறவில்லை என்பது நோக்கத்தக்கது. 

    திருட்டு வழக்கில் மன்னன் இழைத்த அநீதி 

    நாடக நங்கையர் ஆடிய ஆட்டத்திலும் பாடிய பாட்டினிலும் தன்னை மறந்து லயித்திருந்த பாண்டிய மன்னனைக் கண்ட கோப்பெருந்தேவி காணப்பொறுக்காதவளாகி மன்னனுடன் ஊடல் கொண்டு அதை வெளிக்காட்டாமல் தனக்குத் தலைவலி வந்ததென்று பொய் சொல்லி அரங்கை விட்டு வெளியேறி அந்தப்புரம் நோக்கி சென்றாள். இதையறிந்த மன்னனும் சமாதானம் செய்ய அந்தப்புரம் நோக்கி விரைந்தான். அந்த நேரத்தில் மன்னரின் காலைப்பிடித்து வணங்கி அரசியின் காற்சிலம்பைத் திருடிய கள்வன் என்னுடைய வீட்டருகில் இருக்கிறான் என்று பொற்கொல்லன் கூறியதைக்கேட்ட மன்னன்,

    தாழ் பூங்கோதை தன்கால் சிலம்பு
    கன்றிய கள்வன் கையது ஆகின்
    கொன்று அச்சிலம்பு கொணர்க ஈங்கு (கொலைக்களக் காதை 151-153) 

    ‘கள்வனைக் கொன்று சிலம்பைக் கொண்டுவா’ என்று உத்தரவிட்டான். ஆனால், இவ்வாறு கூறும் பொற்கொல்லனின் பேச்சைக்கேட்ட மன்னன் குற்றச்சாட்டின் உண்மைத் தன்மையை ஆராயாமலும்  குற்றவாளியிடம் விசாரணை நடத்தாமலும்  கொலை செய்ய ஆணையிட்டது அரசனென்ற முறையில் நீதி தவறியிருப்பதைக் காட்டுகிறது. திருவள்ளுவர் செங்கோன்மை அதிகாரத்தில்,

    ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
    தேர்ந்துசெய் வஃதே முறை. (குறள்.541)

    என்றவழி, தன் குடிமக்கள் ஏதேனும் குற்றம் இழைத்தால் குற்றத்தின் தன்மையை ஆராய்ந்து ஒரு பக்கம் சாராது நடுவுநிலைமையுடன் உரிய தண்டனை வழங்குவதே முறையாகும் என்று கூறுகிறார்.

    கட்டுரைக்காதையில் கணவனை இழந்த நிலையில் கோபமும் ஆவேசமும் கொண்டிருந்த கண்ணகியின் முன்பாக மதுராபதித் தெய்வம் தோன்றி பாண்டிய மன்னன் குற்றமற்றவன் என்பதற்குச் சான்றாக ஒரு கதை கூறியது. “வார்த்திகன் மகன் தட்சிணாமூர்த்தி என்னும் அந்தணச்சிறுவன் பராசரனிடம் அணிமணிகளைப் பரிசாகப் பெற்று வருகிறான். அணிமணிகளோடு அவன் இருப்பதைக் கண்ட காவலர்கள், பாண்டிய மன்னனின் ஆபரணங்களை வார்த்திகன் திருடிவிட்டதாகக்கூறி அவனைக் கொடுஞ்சிறையில் அடைத்தனர். இதைக்கேள்வியுற்ற அவனது மனைவி கார்த்திகை அழுதுபுரண்டு வீதியில் புலம்பி அழுதாள். இந்தக்கொடுமையை தாங்காமல் துர்க்கை, ஐயைக்கோயில்களின் கதவுகள் தாமாக மூடிக்கொண்டன. இதைக்கேள்வியுற்ற பாண்டிய மன்னன் தீர விசாரித்ததில் வார்த்திகன் மீது தவறு இல்லாததை உணர்ந்து, 

    நீர்த்தன்று இது என நெடுமொழி கூறி
    அறியா மாக்களின் முறை நிலைத் திரிந்தவென்
    இறைமுறை பிழைத்தது  பொறுத்தல் நும்கடன் என  (115-117) 

    என்று கூறினான். ஆராயும் அறிவற்ற காவல் மக்களால் என்னுடைய அரச நீதி கெட்டுவிட்டது. என் தவறு பொறுத்தருள வேண்டும் தாயே! என்று கூறி நீர்வளம் மிக்க திருத்தங்கால் என்னும் ஊரையும் செல்வம் கொழிக்கும் வயலூரையும் பரிசாகத் தந்ததோடு வேந்தனானவன் நிலத்தில் விழுந்து வணங்குதல் என்ற மரபு இல்லை என்றாலும் வார்த்திகன் முன்பாக வீழ்ந்து வணங்கினான் என்ற கதையை கண்ணகியிடம் சொன்னது. ஆனாலும், திருட்டு வழக்கில் கோவலனுக்கு அநீதியும் வார்த்திகனுக்கு சன்மானமும் கொடுக்கப்பட்டிருப்பது அரச அநீதியாகும். கோவலன் வணிகன் என்பதாலும் வார்த்திகன் அந்தணன் என்பதாலும் அரச நீதி மாறுபடுவதைச் சிலம்பில் காணமுடிகிறது. 

    பூதங்கள் இழைத்த அநீதி 

    இந்திரவிழவூரெடுத்த காதையில் பூம்புகார் நகரின் சிறப்பைப்பற்றிக் குறிப்பிடுகையில் பொதுமக்கள் தவறு செய்கின்றபோது குறிப்பாகத் தவநெறியிலிருந்து தவறு செய்கின்றவர்களையும் மறைவாகத் தவறுசெய்கின்ற இழிந்த குணமுடைய பெண்களும் மன்னருக்கு துரோகம் இழைக்கும் அமைச்சர்களும் பொய்சாட்சி சொல்பவர்களும் புறங்கூறுபவர்களும், பிறன்மனை நோக்குபவர்களும் என் பாசக்கயிறுக்கு பலியாவார்கள் என்று நான்கு காத தூரம் கேட்கும்படி கொடிய குரலெழுப்பி கூவும். தவறு செய்பவர்களை அடித்துக்கொன்று தின்னும் சதுக்கப்பூதம் பூம்புகார் நகரில் இருந்தது. ஆனால், அரசன் செங்கோல் தவறினாலும் வழக்குரை மன்றத்தில் தீர்ப்புரைக்கும் நீதிபதி நடுவுநிலை மாறி ஒருபக்கமாக தீர்ப்புக்கூறினாலும் ஆங்கே தவறு நடந்ததை வாய்பேசாமல் அழுது வடிக்கும், கண்ணீர்க்குறிப்பால் உணர்த்தும் பாவைபூதம் மன்றமும் இருந்தது. பொதுமக்கள் தவறு இழைத்தால் சதுக்கப்பூதம் கொன்று தின்னும். ஆனால், மன்னனோ நீதிபதிகளோ தவறு செய்தால் பாவை பூதம் எதிர்த்துப்பேசாமல் தண்டிக்காமல் அழுதுபுலம்புவது என்பது பொதுமக்களுக்கு ஒரு நீதியும், அரசர், அந்தணர் போன்றோருக்கு மற்றொரு நீதியும் பூதங்களின் வடிவில்  வழங்கப்பட்டிருப்பது சிலம்பில் பதிவாகியிருக்கிறது. 

    முடிவு 

    *     பொய் சொன்ன குற்றத்திற்கு பொற்கொல்லர்களுக்கு மரண தண்டனை ஆனால் கொலை நிகழ்த்திய காவலர்கள் தண்டிக்கப்படவில்லை ஏனெனில் அதிகார  வர்க்கத்தின் சமூக விரோதப்போக்கை நிறைவேற்றித் தருவதால் காலங்காலமாக இன்றளவும் காக்கப்பட்டு வருகிறார்கள்.

    *     பூதமாகினும் சட்டமாகினும் அரசனையும் அந்தணனையும் தண்டிக்க வலிமை கிடையாது. இவர்களுக்கு உட்பட்டே இயங்கும் என்பது புலனாகிறது. இன்றளவும் இம்முறை நீடிக்கிறது.

    *     மாதவியைப் போகப்பொருளாகவும் கண்ணகியை வணிக நோக்குடனும் நடத்திய கோவலன் இருவருக்கும் அநீதி இழைத்திருப்பது  நடைமுறை மனித வாழ்வுக்கு உகந்ததில்லை.

    *     மனிதனின் தவற்றுக்கெல்லாம் முற்பிறவி, தீவினை, ஊழ்வினை என்று காரணம் கற்பிப்பது,  குறிப்பாக அரசர், அந்தணர், வணிகர் தவற்றை மறைப்பதற்கான ஒரு முயற்சியாகக் கருதப்படுகிறது.

    *     அரசருக்கும் வணிகருக்கும் நடக்கும் வர்க்க முரண்பாடாகச் சங்கமன் கொலையும், கோவலன் கொலையும் அமைந்திருக்கிறது.

    *     கோவலன் ஆடல் கலையிலும் ஆடலழகியிடமும் லயித்துப்போனதால் பொருளோடு வாழ்வையும் உயிரையும் இழந்தான். கண்ணகியைப் பரிதவிக்கவும் விட்டான். பாண்டிய மன்னனும் ஆடல் கலையிலும் ஆடலழகியிடமும்  லயித்து போனதால்தான் பெரும் உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் இழக்க நேரிட்டது. இது மன்னர்களுக்கும் வணிகர்களுக்கும் பொறுப்பில் இருக்கும் எவரும் நெறிதவறி நடந்தால் நாட்டில் குற்றங்கள் மட்டுமே நடக்கும். இவர்களுக்கு ஏற்படும் இச்சையை அதிகாரத் தவறென்று சொல்லலாமேயொழிய ஊழ் என்று கருதமுடியாது.

    *** 

    பார்வை நூல்கள்:

    1.ஞா.மாணிக்கவாசகன் (உ.ஆ), சிலப்பதிகாரம் தெளிவுரை, உமா  பதிப்பகம்1995.

    2.ந.மு.வேங்கடசாமி நாட்டார்(உ.ஆ.) கழகவெளியீடு,1942.

    3.க.ப.அறவாணன் (உ.ஆ.), திருக்குறள் தெளிவும் உரையும்,  தமிழ்க்கோட்டம்,2007.

    4.வி.புரோத்தோவ், இக்கால இந்திய மெய்ப்பொருளியல், நியூசெஞ்சுரி புக்  ஹவுஸ்,1998.

    5.எஸ்.ஜி.சர்தேசாய், பண்டைய இந்தியாவில் முற்போக்கும் பிற்போக்கும்,  நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்,2012.

    6.தே.ஞானசேகரன், மந்திரம் சடங்குகள் சமயம்,பார்த்திபன் பதிப்பகம்,2000.

    7.வெ.பெருமாள்சாமி, சிலப்பதிகாரம் மறுக்கப்பட்ட நீதியும் மறைக்கப்பட்ட  உண்மையும்,பாரதி புத்தகாலயம், 2008.

     

     

     

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    161130 -Navneet Krishna - KFT -watermark -acrylic/oil on canvas -lores

    ”நவனீதக் காரர், நதியமுனா தீரர்,
    அவனியதன் பாரம் அகற்ற , -கவனமாய்
    வெண்ணை கடைந்தான் விஜயர்க்கு கீதைஅக்
    கண்ணனை நெஞ்சே கருது’’….

    கலிமுடிவில் ஓரடியை ஆலிலையில் உண்டாய்
    பலிமுடியில் வேறடியை வைத்தாய் -தெளிவடைய
    நூற்றிடுவேன் வெண்பா நவனீதா ஏற்றிடுவீர்
    ஈற்றடி யாக இருந்து….கிரேசி மோகன்….!

    Share
  • ஆணேறு தழுவும் வீரனின் நடுகல்!

    பவள சங்கரி

    IMG_20170204_152451391

    சேலம் அரசு அருங்காட்சியகத்தில் கிடைத்த பண்டைய தமிழர் வீர விளையாட்டிற்கான மற்றுமொரு ஆதாரம் – ஆணேறு தழுவும் சிற்பம்.  தமி வீரன் ஒருவன் காளையின் இரு கொம்புகளையும் பிடித்து அடக்குவது போன்று அமைந்த அற்புதமான சிற்ப வேலைபாடுகள் கொண்ட நடுகல் இது! 14 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த நடுகல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    Share
  • விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு மற்றுமொரு தடைக்கல்?

    பவள சங்கரி

    சென்ற ஆண்டு 28 சணல் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 48 ஆலைகள் மூடப்பட்டுள்ளன. விவசாயப் பொருட்களிலிருந்து உற்பத்திப்பொருள் தயாரிப்புகளை நிறுத்தினால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை ஏற்படும். மக்கிப்போகும் சணல் உற்பத்தியை நிறுத்திவிட்டு பெட்ரோலியப் பொருட்களான நெமிலிப் (பாலிதின் பைகள்) பைகளுக்கு அரசு ஆதரவு தெரிவித்து நீர் பிடிப்பு ஆதாரங்களில் பாதிப்பு உண்டாக்கிவிடுமோ என்று சமூக ஆர்வலர்களின் கவலைக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? விவசாய வேலை வாய்ப்புகளிலும் பாதிப்பு ஏற்படும் என்பதும் மறுக்கவியலாது. வங்க முதல்வர் சகோதரி மம்தா பானர்ஜி அவர்கள் இதில் தலையிட்டு தக்க நடவடிக்கைகள் எடுப்பார் என்று நம்புவோமாக!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav

    ”துடுப்பில்லாத் தோணியில் தூரத்தே தீயும்,
    அடுப்பில்லா பால்வெளியில் ஆறவைத்து-உடுப்பியில்
    கீதாவை மத்தால் ,கடைந்து வினியோகம்:
    மாதாவாய் கண்ணன்ந மக்கு’’….கிரேசி மோகன்….!

    Share
  • பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள். 780,000 ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் கடந்து சென்ற காந்தத் துருவத் திசை மாற்றம் நிகழ்ந்தது

    aj
     
    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
    +++++++++++++

    பூகோளப் பூகாந்த துருவங்கள்
    புதிராய்த் திசைமாறும் !
    ஆமை வேகத்தில் வட துருவம்
    தென் துருவம் இடம்மாறிக் கொள்ளும் !
    பூமியின் சுழற்சி அப்போது
    எதிர்த்  திசையில் ஓடுமா ?
    பரிதியின்  உதய திசை அப்போது
    கிழக்கா ? மேற்கா ?
    உயிரினம்,  மனித  இனம்  என்ன வாகும் ?
    மணிக்கு ஆயிரம் மைல் வேகத்தில்
    மனிதர் எறியப் படுவாரா ?
    சூழ்வெளி மண்டலம் முறிந்து
    பாழ்வெளி ஆகுமா ?
    நீர் மண்டலம் ஆவியாகி
    நிலம் பாலை ஆகுமா ? சூடேறி
    உயிரினங்கள் தவிக்குமா ?
    பயிரினங்கள்
    பசுமை இழக்குமா ?
    அரை மில்லியன் ஆண்டுகட்கு
    ஒருமுறை நேர்ந்திடும்
    துருவத் திருப்பம்,
    பிறகு மீளுமா ?
    இயற்கை நியதி முறை புரியும்
    திருவிளை யாடல் !
    பருவ காலம் தாறுமாறாகி
    வாழ்க்கைப் போக்கு பாழாகுமா ?
    துருவ மாற்றம்
    பிரளய நர்த்தனப் பயிற்சியை
    அரங்கேற்றுமா ?

    +++++++++++++

    Earth's Pole Reversal
    பூமியின் கடந்த காலக் காந்தத் துருவ மாற்றம்  எப்போது நேர்ந்தது ?
    புவியின் தொடர்ந்த பூகாந்த மாற்றம் கோளைச் சுற்றிக் கண்ணுக்குப் புலப்படாத விசையாய், சூரியத் தீக்கதிர்த் தாக்குதலைத் தணித்து மனிதரைப் பாதுகாத்து வருகிறது.  துருவத் திசை மாற்றம் ஓர் இயற்கை நியதி.  கடந்த 20 மில்லியன் ஆண்டுகளாய், துருவத் திசை மாற்றம் 200,000 முதல் 300,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு சீரிய நெறிப்படி நிகழ்ந்து வருகிறது. ஆயினும் கடந்து சென்ற பூகாந்தத் திசைமாற்றம் [Brunhes-Matuyama Reversal] 780,000 ஆண்டுக்கு முன்பு நேர்ந்துள்ளது.  இடையே தற்காலியமாக 41,000 ஆண்டுகளுக்கு முன்பு[Laschamp Event] ஒரு திசைமாற்றம் நிகழ்ந்துள்ளது. அந்தத் திசை மாற்றம் சுமார் ஆயிரம் ஆண்டுகள் நீடித்து, மெய்யாகத் துருவங்கள் 250 ஆண்டுகளாய் நிலைத்து வந்துள்ளன.

    Earth magnetic field

    வடதுருவம், தென்துருவம் இடம் மாறிப் பன்னூறு முறைகள் திசை மாற்றங்கள் நமது பூகோள வரலாற்றில் நிகழ்ந்துள்ளன.  அப்போது பூகாந்த விசை  குறைந்து, மிகச் சிக்கல் வடிவம் அடைந்து, துருவங்கள், புவி மையக் கோட்டுப் [Equator] பகுதியில் புலம் பெயர்ந்து, தற்போதைய பூகாந்த விசை வலுவில் 10% தணிந்து விட்டது.  அல்லது, ஒரே தருணத்தில் பன்முக வடதுருவ, தென் துருவ அமைப்புகள் [Multiple Poles] பூகோளத்தில் தோன்றியுள்ளன.

    இம்மாதிரிப் பூகோளத் திசைமாற்றங்கள் [Geomagnetic Reversals]  ஒவ்வோர் மில்லியன் ஆண்டுகளில் ஒருசில முறைகள் சராசரியாக நேர்துள்ளன. அப்படி நேர்ந்தாலும்,  திசைமாற்ற இடைவெளிகள் ஒழுங்கற்ற முறையில் தான் நிகழ்ந்திருக்கின்றன.  இடைவெளி பல மில்லியன் ஆண்டுகளாகவும் ஏற்பட்டிருக்கலாம்.  முழுமை பெறாமல் அரைகுறைத் திசைமாற்றங்கள், தற்காலிய நிலைபெறாத, திசை மாற்றங்கள் கூட நேர்திருக்கலாம்.  அந்தச் சமயங்களில் பூகாந்த துருவங்கள் [Magnetic Poles] பூகோளத் துருவ முனை களை [Geographic Poles] விட்டுப் புலம் பெயர்ந்து, புவி மையக் கோட்டைக் [Equator] கடந்து, மீண்டும் பழைய இடங்களுக்கே திரும்பலாம்.

    Image result for brunhes-matuyama reversal

    பிரளயக் கேடுகளை முன்கூறும் வேதியர் [Doomsday Theorists] இந்தப் பூகோளத் திசைமாற்ற நிகழ்ச்சியை எடுத்துக் கொண்டு, இது உலகை அழிக்கப் போகிறது என்று அச்சம் ஊட்டுவார்.  ஆனால் அவ்விதம் பேரழிவுச் சீர்கேடுகள் பூமியில் வாழும் உயிரினங்களுக்கு நேருமா ? பயிரினங்களுக்கு நேருமா ?  இவ்வினாக்களுக்கு நாசா கூறும் பதில் என்ன?  பூதளவியல், பூர்வ புதைபடிவப் பதிவுகளிலிருந்து, [Geologic & Fossil Records] கடந்த நூற்றுக் கணக்கான பூகாந்த திசைமாற்ற விளைவு களை ஆராய்ந்த போது, “சீர்கேடுகள்  இல்லை”  என்பதே தெரிகிறது. பூமியில் பூகாந்தத் திசை மாற்றம் மெதுவாக மாறும் போது,  பூகோளத்தின் சுழற்சி வேகம் [சுமார் : மணிக்கு 1000 மைல்] தளர்ந்து சுழற்சியின் திசை மாறுமா ? அப்போது பூமியில் உயிரினங்களுக்கு என்ன நேரிடும் ?  கிழக்கை விட்டுச் சூரியன் மேற்கே உதிக்குமா ?  இவை போன்ற குதர்க்க வினாக்களுக்குப் பதில் இதுவரைக் கிடைக்கவில்லை !

    இப்போது மெய்யாகத் [2017] துருவம் வடதிசை நோக்கி ஆண்டுக்கு 40 மைல் வேகத்தில் புலம் பெயர்வதாக விஞ்ஞானிகள் மதிப்பிடுகிறார். போன 20 ஆம் நூற்றாண்டின் துவக்க சமயத்தில் ஆண்டுக்கு 10 மைல் வேகத்தில் துருவ வடப் பெயர்ச்சி நேர்ந்திருக்கிறது.  இந்தப் பூகாந்தத் துருவங்கள் திசைமாற்றம் ஜப்பானிய விஞ்ஞானிகள் பெயரில் ” புருனெஸ் -மட்டுயமா திசைமாற்றம் ”  [Brunhes- Matuyama Reversal] என்று குறிப்பிடப் படுகிறது.   இத்திசை மாற்றத்தால் எந்த வித மாறுதல்கள், தீங்குகள் பயிரின- உயிரினப் பிறப்புகளுக்குத் தீவிரமாய் இல்லை என்று பூர்வப் புதைப்படிவப் பதிவுகள் [Fossil Records] மூலம் அறியப்படுகின்றன.

    இந்த ஆண்டுகளில் [2000 – 2016] ஆண்டுகளில் எடுத்துச் சோதித்த ஆழ்கடற் படிவுகள் உள்ளே [Sediments Cores], ஆக்சிஜென் ஏகமூலங்களில் [Oxygen Isotopes ] எந்த வித மாறுதலும் இல்லை.  பூகாந்தத் திசைமாற்றத்தால், புவிச் சுழற்சி அச்சுக்குப் [Earth’s Rotation Axis] பாதிப்பு இல்லை. காரணம் புவி அச்சுச் சரிவு காலப் பருவ நிலை, பனித்திரட்சிக்குப் [Climate & Glaciation] பாதிப்பை உண்டாக்குகிறது.  அவ்விதம் திசை மாற்றத்தால் பனித்திரட்சி பாதிக்கப் பட்டிருந்தால், பதிவுகளில் பதிவாகி யிருக்கும்.

    ஆயிரக்கணக்கான ஆண்டு காலத்தில் மெதுவாகப் பூமியில் பூகாந்தத் திசைமாற்றம் நேர்வதால், துருவ இடமாற்றம் ஒரு தாவலில் நேர்வ தில்லை.  கடந்த 3 பில்லியன் ஆண்டுகளில், குறைந்தது நூறு முறை பூகாந்தத் திசைமாற்றம்  நேர்திருப்பதைத் தெரிய வருகிறது.   பூகாந்தத் திசைமாற்றம் ஆழ்கடலடிப் புழுதிப் படிவுகளில் [Sediments] பதிவாகிறது. அவற்றை விஞ்ஞானிகள் தொடர்ந்து சோதனை செய்து வருகிறார்.

    ++++++++++

    “பூர்வ எரிமலைப் பாறை மாதிரிகளைப் புதிதாக ஆராய்ந்த போது இரண்டாவது காந்த மூலச் சேமிப்பு (Secondary Magnetic Source) பிரதம காந்த முனைத் திருப்பம் ஏற்படுத்துமா அல்லது எப்படி நிகழ்த்துகிறது என்று கண்டுபிடிக்க உதவி செய்யும்.  வடதென் துருவங்களை நோக்கும் பிரதமக் காந்தத் தளம் தளர்ச்சியுறும் போது, பூமியின் ஆழமற்ற உட்கருவில் அடித்தட்டுப் பாறைக்குக் கீழாகத் தோன்றிவரும் இரண்டாவது காந்தத் தளம் முக்கியத்துவம் அடைகிறது !”

    பிராடு ஸிங்கர், பூதளவியல் பேராசிரியர் விஸ்கான்சின்-மாடிஸன் பல்கலைக் கழகம்

    Image result for brunhes-matuyama reversal

    பூகாந்த தளம் திருப்பிக் கொள்ள [Earth’s Magnetic Pole Reversal] 1000 முதல் 10,000 ஆண்டுகள் எடுக்கலாம்.  அந்த திருப்ப இயக்கத்தில் நேரிணைப்பாகும் [Realignment] முன்பு,  காந்த சக்தி மிகவும் தளர்ச்சி அடைகிறது.  அது திடீர்த் திருப்பம் ஆகினும், மெதுவாகவே [Sudden Flip; but a Slow Process] அது நிகழ்கிறது.  அத்தருணத்தில் பூகாந்த சக்தியின் ஆற்றல் பலவீனம் அடைகிறது.   காந்த தளம் சிக்கலாகிச் சில சமயம் இரு துருவங்களுக்கு மேலாகவும் காணப் பட்டு, மீண்டும் காந்த சக்தி வலுவேற்றிக் கொள்கிறது.   அந்த நிலையில் துருவங்கள் எதிராக மாற்றமாகி நேரிணைப்பு [Realigns in the Opposite Direction] செய்து கொள்ளும்

    மோனிகா கோர்ட்டே  [Scientific Director, Niemegk Geomagnetic Observatory, Germany]

    Iside the Earth

    கடந்த வரலாற்றுப் பதிவுகள் பூமியின் அடுத்த துருவத் திருப்பம் வரப் போவதை வழிமொழிகின்றன.  சராசரியாக 400,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூதளக் காந்த துருவ மாற்றம் நிகழ்கிறது.  அந்தக் கால எண்ணிக்கைத் தாறுமாறாகவும் வேறுபடுகின்றது.  பூமியின் சென்ற துருவத் திருப்பம் சுமார் 800,000 ஆண்டுகளுக்கு முன்பு நேர்ந்திருப்ப தாகப் பூதளவியல் வரலாற்றுப் பதிப்புகள் கூறுகின்றன.  துருவத் திருப்பங்கள் எதிர்பாராத கால வேறுபாடுகளில் தோன்றுபவை.  அந்தத் துருவ மாற்றம் இன்னும் சில நூற்றாண்டுகளில் வரலாம்.  அல்லது சில மில்லியன் ஆண்டுகள் கழிந்தும் ஆகலாம்.”

    ஆன்ரு பிக்கின், நெதர்லாந்து உட்ரெக் (Utrecht) பல்கலைக் கழகம்

    பூமி அடுத்து எப்போது துருவங்களை மாற்றிக் கொள்ளும் ?

    நமது பூகோளத்தின் ஆயுட் காலத்திற்குள் பன்முறைத் துருவ மாற்றங்கள் நேர்ந்துள்ளதாகப் பூதள விஞ்ஞானிகள் கருதுகிறார்.   அப்படிக் கூறுவதற்கு எரிமலை அடுக்குப் பாறைப் பதிவுகளே  தக்க நிரூபணம் தருகின்றன.   முந்தைய பூகாந்த மாற்றம் சுமார் 780,000 ஆண்டுகட்கு முன்பு நிகழ்ந்த தாகப் பாறைப் பதிவுகள் மூலம் அறியப் படுகின்றது.   அப்போது தான் கற்கால மனிதன் சிக்கி முக்கிக் கற்களைத் தட்டி  அக்கினி உண்டாக்கும் “கனல் சக்தி” [Fire Power] திறன் கண்டுபிடிக்கப் பட்டது.

    Earth's Core

    அமெரிக்காவின் மேரிலாண்டு பல்கலைக் கழகத்தில் பூகோள உள்ளமைப்பைக் காட்டும்,  உலகிலேயே பெரிய சுழற்சி கோளம் அமைக்கப் பட்டுள்ளது.  துருப்பிடிக்கா இரும்பில் 10 அடி விட்டத்தில் வடிக்கப் பட்டிருக்கிறது.   அதற்குள் சிறு கோளம் ஒன்றும் உள்ளது.  இரு கோளங்களுக்கும் இடையில் 250 டிகிரி F உஷ்ணத்தில் சூடாக்கப் பட்ட , 12 டன் திரவ சோடியம் நிரப்பப் பட்டுள்ளது.  அதுவே திரவ உலோகமுள்ள பூமியின் உள்ளே இருக்கும் மேல் உட்கருவாகக் [Liquid Iron Outer Core] கருதப் படுகிறது.  மிக வேகமாய்ச் சுழலக் கூடிய அந்தக் கோளத்தில் பல்வேறு பூதளப் பௌதிகச் சோதனைகள் செய்து காட்ட முடியும்.   அச்சோதனை களில் ஒன்றுதான் பூதளப் பௌதிக விஞ்ஞானி, டானியல் லாத்திரப் [Geophysicist Daniel Lathrop] முன்னறி விக்க முயலும், அடுத்து எப்போது பூகோளத் துருவமாற்றம்  நிகழப் போகிறது எனப்படுவது.  இந்த முன்னறிப்பை வெளியிட்டது ரஷ்யக் குரல் எனப்படும் “வாய்ஸ் ஆஃப்  ரஷ்யா” [Voice of Russia].   அறிவித்த நாள் :  ஏப்ரல் 29, 2014.

    பூகோளத் துருவ மாற்றத்தால் என்ன கேடுகள் விளையும் என்பது யாருக்கும் தெரியாது.   அடுத்த துருவ மாற்றத்தில் மனித இனத்துக்கு தீங்கு எதுவும் நேராது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்.  சென்ற துருவ மாற்றம் 780,000 ஆண்டுக்கு முன்னர் நேர்ந்திருக்கிறது.   துருவ மாற்றம் மிகவும் மெதுவாக நிகழ்கிறது.  அது முடிய ஆயிரக் கணக்கான ஆண்டுகள் [1000 முதல் 10,000 வரை] ஆகலாம்.  துருவ மாற்றம் நிகழ்ந்தால் பூமியின் சுழற்சி நின்று எதிர்ப்புறம் சுற்றுமா ?  பரிதி உதயமாகும் கிழக்குத் திசை வேறுபடுமா ?  எதிர்ர்பாராத இந்த மாறுபாட்டுகளால் பருவ மாற்றங்கள் நேருமா ?  இவை போன்ற கேள்விகள் எழுகின்றன ! ஆனால் இவற்றுக்குச் செம்மையான பதில் இதுவரை கிடைக்க வில்லை.  அடுத்த பூகோளத் துருவ மாற்றம் 400,000 வருடங்கள் கடந்து நிகழும் என்று அனுமானிக்கப் படுகிறது.

    Fig 1 Polat Shift in Earth

    “பூமியின் காந்தத் தளம் நமக்கும், நமது சூழ்வெளிக்கும் பரிதியின் தீவிரப் புயலிலிருந்து (Solar Wind) கேடுகள் விளையாதபடிக் கவசமாய்ப் பாதுகாப்பாக இருக்கும் ஓர் இயற்கை ஆற்றல்.  பறவை இனத்துக்கும், மனித இனத்துக்கும் கடற் பயண முறைக்குத் திசைகாட்டும் (Navigational Direction) ஓர் அரிய ஆற்றல் அது !  பரிதிப் புயல்கள் தீவிரமாய் அடிக்கும் போது மின்சாரப் பரிமாற்றமும், தொலைத் தொடர்புச் சாதனங்களும் பழுதடைந்து போகும்.”

    ஆன்ரு பிக்கின், நெதர்லாந்து உட்ரெக் (Utrecht) பல்கலைக் கழகம்

    “கடந்த ஆண்டுகளில் சில பறவை இனங்கள் துருவத் திருப்பக் காலங்களில் கடற் பயணம் புரிந்த போது திசை தடுமாறிப் போயுள்ளன !  ஒற்றைச் செல் உயிர் ஜந்துகள் (Single-celled Organisms) சில மேல், கீழ் நிலை அறிய முடியாதபடி அழிந்து போயிருக்கின்றன !  கடந்த காந்த முனை மாற்ற காலங்களில் மனித இனம் பிழைத்து எழுந்திருப்பதாகத் தெரிகிறது.  ஆகவே அடுத்து வரப் போகும் புதியத் துருவத் திருப்பத்தில் மனித இனம் பாதகம் அடையாமல் மீட்சி பெறலாம் !”

    டேவிட் குப்பின்ஸ், லீட்ஸ் பல்கலைக் கழகம், இங்கிலாந்து.

    Fig 1B Magnetic Pole Shift

    “பூமியின் காந்த தளத்தின் மீது எரிமலைக் குழம்பு குளிர்ந்து படிந்ததும் அப்போதுள்ள புதிய காந்த தளத்தின் பதிவு நினைவு பற்றிக் கொள்கிறது.  அவ்விதம் உண்டான எரிமலைக் குழம்பின் நினைவை அழிப்பது மிகக் கடினம்.  அதுவே பூகாந்தத்தின் பூர்வத் திசை அமைப்பின் (Paleomagnetic Direction) பதிவாகி விடுகிறது.”

    பேராசிரியர் பிராடு ஸிங்கர்.

    பூகோள வரலாற்றில் நேர்ந்துள்ள வடதென் துருவ மாற்றங்கள் !

    பூமியின் வடதென் காந்தத் துருவங்கள் எப்போதும் ஒரே திசை நோக்கி இருப்பவை அல்ல !  அவை சிறுகச் சிறுக கோணம் மாறி பல்லாயிரம் [1000 – 10,000] ஆண்டுகள் படிப்படியாக நகர்ந்து பிறகு வடதுருவம் தென் துருவமாகவும், தென் துருவம் வடதுருவமாகவும் மாறிவிடுகின்றன !  பூகோளத்தின் துருவங்கள் கடந்த 65 மில்லியன் ஆண்டுகளாக 130 தடவைகள் மாறி வந்துள்ளன என்று பூதளவியல் விஞ்ஞானிகள் (Geologists) கணித்துள்ளார்கள் !  அதாவது சராசரி அரை மில்லியன் ஆண்டுகளுக்கு ஒருமுறை முழுத் துருவ மாற்றம் நேர்ந்திருக்கிறது !  பூமியில் முதன்முதல் பாறைகள் உருவான போது அவை யாவும் வியப்பூட்டும் வண்ணம் அப்போதையப் பூகாந்தத் திசை அமைப்பைப் (Orientation of Earth’s Magnetic Field) பதிவு செய்துள்ளன !

    Fig 1C Structure of Earth

    பூதளவியல் விஞ்ஞானிகள் பல்வேறு யுகத்தில் பல்வேறு இடங்களில் உண்டான பாறை மாதிரிகளைச் சேகரித்து அவ்விதத் துருவ மாற்றங்கள் நிகழ்ந்திருப் பதைக் காட்டியிருப்பது ஆச்சரியமாக உள்ளது !  பூமியில் இப்போதிருக்கும் வடதென் துருவத் திசை அமைப்பு “நேர் அமைப்பு” (Normal Direction) என்றும் அதற்கு எதிரான திசை அமைப்பு “திருப்ப அமைப்பு” (Reversal Direction) என்றும் விஞ்ஞானிகளால் குறிப்பிடப் படுகின்றன !  கடந்த 150 ஆண்டுகளாக (1985 Factual) பூகாந்தத் திசைக் கோணம் ஒரே மட்டக் கோட்டில் (Latitude) (79 டிகிரி) இருந்திருக்கிறது !  அதே சமயத்தில் அதன் நேரியல் கோடு (Longitude) ஆண்டுக்கு 0. 042 டிகிரி கோண வீதத்தில் மாறி வந்துள்ளது !  மேலும் இதற்கு முன்பு பூகாந்தத் துருவத் திசை நீடிப்புக் குறைந்தது 2.6 பில்லியன் ஆண்டுகள் கூட இருந்துள்ளது என்று அறிப் படுகின்றது !

    Fig 1E Relative Size of Sunspots

    2004 டிசம்பர் 26 ஆம் தேதி தென்னாசியக் கடற்கரையில் படையெடுத்த அசுரச் சுனாமியை எழச் செய்த கடற் பூகம்பம் எவ்விதம் உண்டானது என்பதற்குப் பூமி அடித்தட்டின் (Earth’s Tectonic Plate Crust) நிலையற்ற தன்மையே என்று ஊகிக்கப் படுகிறது.  அத்தகைய நிலையற்ற கொந்தளிப்புக்குப் பூகாந்தத் திசை மாற்ற நகர்ச்சி ஒரு காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகளால் கருதப்படுகிறது.  சூரியன் 11 ஆண்டுகளுக்கு ஒருமுறைத் தவறாது அதன் “பரிதித் தழும்பு மீட்சி” உச்சத்தில் (Peak Sunspot Cycle) தனது துருவத் திசையை மாற்றுகிறது !  அவ்விதப் “பரிதித் துருவத் திருப்பம்” அடுத்து 2012 ஆம் ஆண்டில் நேரப் போகிறது !  தென்திசை நோக்கிய காந்தத் திரட்சி (Magnetic Flux) மைய ரேகையில் (Solar Equator) செழித்த பரிதித் தழும்புகளிலிருந்து நகர்ந்து வடப்புறம் திரும்புகிறது.  ஆனால் பூமியின் துருவ மாற்றம் பரிதியில் நேர்வது போல் ஒரு சில குறுகிய ஆண்டுகளில் நிகழ்வதில்லை !

    Fig 1 Polat Shift in Earth

    பூமியின் துருவ மாற்றங்கள் எப்படி நிகழ்கின்றன ?

    பூகோளத்தின் துருவ மாற்றங்கள் தாறுமாறான கால இடைவெளிகளில் இதுவரை நேர்ந்துள்ளன.  சமீபத்தில் உண்டான துருவ மாற்றம் 780,000 ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்திருக்கிறது.  ஆயினும் ஏன் அவ்விதம் நேர்கிறது என்று விஞ்ஞானிகள் வியப்புறுகிறார்கள்.  வெப்பக்கனல் திரவ இரும்புள்ள உட்கருவில் கொந்தளிக்கும் மின்னோட்டம் (Electric Current) உண்டாக்கும் பூமியின் பிரதமக் காந்தத் தளம் துருவ முனைத் திசையைத் திருப்புகிறது !  அப்போது ஒரு காந்தத் திசைகாட்டி முள் (Needle of the Magnetic Compass) வட திசைக்குப் பதிலாகத் தென் திசையைக் காட்டும் !  பூமியின் வரலாற்றில் முரணான கால இடை வெளிகளில் அவ்விதத் துருவத் திருப்பம் 100 மேலான தடவைகளில் நிகழ்ந்துள்ளன. “பூர்வ எரிமலைப் பாறை மாதிரிகளைப் புதிதாக ஆராய்ந்த போது இரண்டாவது காந்த மூலச் சேமிப்பு (Secondary Magnetic Source) பிரதம காந்த முனைத் திருப்பம் ஏற்படுத்துமா அல்லது எப்படி நிகழ்த்துகிறது என்று கண்டுபிடிக்க உதவி செய்யும்.  வடதென் துருவங்களை நோக்கும் பிரதமக் காந்தத் தளம் தளர்ச்சியுறும் போது, பூமியின் ஆழமற்ற உட்கருவில் அடித்தட்டுப் பாறைக்குக் கீழாகத் தோன்றி வரும் இரண்டாவது காந்தத் தளம் முக்கியத்துவம் அடைகிறது !” என்று விஸ்கான்சின்-மாடிஸன் பல்கலைக் கழகப் பூதளவியல் பேராசிரியர், பிராடு ஸிங்கர் கூறுகிறார்.

    Earth magnetic field -2

    பிராடு ஸிங்கரும் மேற்கு ஜெர்மனியில் ஆய்வு செய்யும் கென்னத் ஹா·ப்மனும் (Kenneth Hoffman) சேர்ந்து ஹவாயிக்கு அருகில் தாஹிதியின் (Tahiti) பூர்வீக எரிமலைக் குழம்பை 30 ஆண்டுகளாகச் சோதனை செய்து பூமியின் காந்த முனைத் திருப்பின் வழிமுறை களைக் (Patterns) கண்டறிந்தனர்.  வெப்பக் கனலில் திரவமான இரும்பு செழிப்பான உலோகங்களின் காந்த சக்தி திரவம் குளிர்ந்து திடமாகிக் கடினமானதும் உட்கருவில் அடைபட்டு விடுகிறது ! “பூமியின் காந்த தளத்தின் மீது எரிமலைக் குழம்பு குளிர்ந்து படிந்ததும் அப்போதுள்ள புதிய காந்த தளத்தின் பதிவு நினைவு பற்றிக் கொள்கிறது.  அவ்விதம் உண்டான எரிமலைக் குழம்பின் நினைவை அழிப்பது மிகக் கடினம்.  அதுவே பூகாந்தத்தின் பூர்வத் திசை அமைப்பின் (Paleomagnetic Direction) பதிவாகி விடுகிறது.” என்று பிராடு ஸிங்கர் கூறுகிறார்.

    Fig 4 Power of Geodynamo

    பரிதிக் காந்த முனைத் திருப்பத்தால் ஏற்படும் இயற்கைக் கேடுகள்

    2012 டிசம்பர் 21 ஆம் தேதியை ஒரு பயங்கர தினமாக விஞ்ஞானிகள் மக்களுக்கு எச்சரிக்கை செய்கிறார் ! சூரியனில் 11 ஆண்டுகள் கடந்து மீண்டும் வரும் துருவ முனை மாற்றுச் சுற்றியக்கத்தில் வடதென் துருவங்கள் மாற்றம் அடையப் போகின்றன !  பரிதியில் இப்படித் திடீரென்று துருவ நகர்ச்சியும், மாற்றமும் ஏற்படுவது இயற்கை !  அவ்விதத் துருவ மாற்றங்கள் பரிதியின் காந்தத் தளங்களில் நேரிடும் “சீரமைப்பு மீளியக்கங்கள்” (Harmonic Cycles).  துருவ முனைத் திருப்பங்கள் “சூரிய வடுக்கள் அல்லது தழும்புகள்” (Sun Spots or Sun Acnes) காரணமாக இருப்பதால் நிகழ்கின்றன.  அல்லது பரிதியின் காந்த சக்தியால் நேரிடுகின்றன.

    11,500 ஆண்டுகளில் மீண்டும் வரப் போகும் பயங்கரப் பனியுகக் காலத்தின் மையத்தில் புவி மாந்தர் இருப்பதாகப் பூதளவியல் விஞ்ஞானிகள் நினைவூட்டி வருகிறார்.  அந்தச் சுழல் நிகழ்ச்சி ஆரம்பமாகும் போது துருவத் திருப்பமும், பூத எரிமலை வெடிப்புகளும், அசுரப் பூகம்பங்களும், சுனாமிகளும், தீவிர ஹர்ரிக்கேன்களும் மக்களைப் பாடுபடுத்திக் கொந்தளிப்பில் தவிக்க வைக்கலாம் !  2008 ஆம் ஆண்டில் மட்டும் கடந்த 200 ஆண்டுகளில் நேராத மூன்று அசுரப் பூகம்பங்கள் ஏற்பட்டு மக்களைப் பாதித்துள்ளன !  அவற்றைத் தூண்டும் மூல காரணங்களில் ஒன்றாகப் பூகாந்த முனை நகர்ச்சிகள் பங்கு பெறுமா என்பதைப் பூதள விஞ்ஞானிகள்தான் விளக்கம் அளிக்க வேண்டும்.

    [தொடரும்]
    +++++++++++++++++++
    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines, Science Illustrated, Wikipedia & Earth Science & the Environmental Book.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – How Did the Solar System form ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. National Geographic – Invaders from Space – Meteorites (Sep 1986)
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world (1998)
    8. Physics for Poets By :  Robert March (1983)
    9. Atlas of the Skies (2005)
    10 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    11 Universe By : Roger Freedman & William Kaufmann III (2002)
    11 (a) Earth Science & The Environment By : Graham Thompson & Jonathan Turk (1993)
    11 Hutchison The Encyclopedia of Earth : Magnetism, Gravity & Heat (1985)
    12 Science Daily : Magnetic Field Reversals Illuminated By Lava Flows Study [September 26, 2008]
    13 Pure Energy System News: Earth’s Magnetic Field Reversal By : Mary-Sue Haliburton

    14 Magnetic Storm Home Page What Drives Earth’s Magnetic Field (Oct 2003)
    15 BBC News : Is The Earth Preparing to Flip ? By : David Whitehouse (March 27, 2003)
    16 Scientific American Magazine – Our Ever Changing Earth – Probing the Geodynamo By : Gary Glatzmaier & Peter Olson (September 26, 2005)
    17 Solar Pole Shift & Pole Reversal in 2012 -2013 (http://newsvote.bbc.co.uk/mpapps/pagetools ) By : Patrich Geryl (May 19, 2009)

    18.http://worldlywise.pbworks.com/w/page/26834992/The%20causes%20and%20effects%20of%20earthquakes%20and%20how%20people%20respond%20to%20them
    19. http://www.livescience.com/18426-earth-magnetic-poles-flip.html [February 10, 2012]
    20. http://en.wikipedia.org/wiki/Geomagnetic_reversal [June 21, 2015]

    21.http://www.spacedaily.com/reports/When_next_Earths_magnetic_field_reverse_begins_and_what_consequences_for_mankind_will_it_have_999.html  [April 29, 2014]

    22. http://www.sciencedaily.com/releases/2015/07/150707101952.htm  [July 7, 2015]

    23. http://www.spacedaily.com/reports/Improved_age_for_Earths_latest_magnetic_field_reversal_using_radiometric_dating_999.html  [July 8, 2015]

    24.  https://www.ngdc.noaa.gov/geomag/faqgeom.shtml  [Frequently Asked Questions]

    24[a]  http://image.gsfc.nasa.gov/poetry/venus/RevScience.html  [NASA 2003]

    25. https://en.wikipedia.org/wiki/Brunhes%E2%80%93Matuyama_reversal  [December 25, 2016]

    26.  http://www.wow.com/wiki/Brunhes-Matuyama  [December 16, 2016]

    27.  https://en.wikipedia.org/wiki/Geomagnetic_reversal  [January 30, 2017]

    28.  http://www.dailygalaxy.com/my_weblog/2017/02/nasa-earths-last-full-magnetic-pole-reversal-occured-700000-years-ago-are-we-due-the-earths-continuously-changing-ma.html  [February 1, 2017]

    ******************

    S. Jayabarathan [jayabarathans@gmail.com]   February 3,  2017  [R-1]

    https://jayabarathan.wordpress.com/

    Share
  • வானிடம் மானிடம்

     

    கவிஞர் ஜவஹர்லால்

    இரவு நேரம் வானைப் பார்த்தால்
    இதயம் பறக்கிறது;–அங்கே
    உறவு கொண்டே திளைத்து மகிழ
    உணர்வு துடிக்கிறது.

    கண்ணைச் சிமிட்டி அழைக்கும் மீன்கள்
    கனவு படைக்கிறது;–என்றன்
    எண்ணம் விண்ணில் இறக்கை யின்றி
    எங்கும் பறக்கிறது.

    நிலவின் தூய்மை என்னுள் பலவாய்
    நினைவை அசைக்கிறது;–மண்ணில்
    நிலவும் தூய்மை யற்ற தன்மை
    நெஞ்சை அலைக்கிறது.

    முழுமதி வானை ஆளும் காட்சி
    மனசை நிறைக்கிறது;– அந்த
    முழுமதி தேய்ந்து வளர்தல் ஏனோ ?
    வினாவும் பிறக்கிறது.

    திங்கள் முழுசாய் விண்ணில் தவழச்
    சிந்தை திகைக்கிறதோ ?—பூமி
    எங்கும் ராகு கேது கண்டே
    இளைத்து வளர்கிறதோ?.

    கொடுமை சிரிக்கக் கண்டே வான்தான்
    கொப்புளங் கொள்கிறது;–அந்த
    வடுவை மீன்கள் என்றே மண்தான்
    வாழ்த்தி மகிழ்கிறது.

    நேற்றைய வானம் இன்றைக் கில்லை
    விந்தை நிகழ்கிறது;–என்றும்
    மாற்றமே நிலையாம் என்னும் உண்மை
    வானில் திகழ்கிறது.

    வளர்ச்சி தேய்வு வாழ்க்கை இயல்பு
    வான்மதி சொல்கிறது;–உள்ளத்
    தளர்ச்சி நீக்கி வலம்வரின் வெற்றி
    கதிரவன் உரைக்கிறது.

    அடடா ! வானும் நிலவும் மீனும்
    தத்துவம் பொழிகிறது; –அதனை
    எடுத்துக் கொள்ள விரும்பா திங்கே
    இதயம் அலைகிறது.

    வானிடம் எத்தனை எத்தனை தத்துவம்
    வனப்பாய் விரிகிறது;–எதையும்
    மானிடம் கற்பதே இல்லை எங்கும்
    மயக்கமே தெரிகிறது.

    வானாய் நெஞ்சம் மாறி நிலவின்
    குளுமை கொஞ்சட்டும்! –இன்பத்
    தேனை வாரி வழங்கும் மீனாய்த்
    தினமும் விஞ்சட்டும்.

    ரவியின் கைகள் கவிஞர் நெஞ்சை
    இதமாய்த் தழுவட்டும்!—இந்தப்
    புவியில் கவிஞர் ரவியின் புகழைப்
    பாடித் திளைக்கட்டும்.
    ( 19-05-99 ல் கிழக்குக் கடற்கரைச் சாலையில்
    ஒரு பேரில்லத்தில் திரு, ரவி, பாரதி கலைக்
    கழகம் சார்பில் அமைத்து நடத்திய மறக்க
    முடியாத முழுநிலாக் கவியரங்கம். )

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav

    சினம்மிகுந்த மாமன் சிறைபிறந்து ஆயர்
    இனம்புகுந்து வாழ்ந்த இடையன் -மணம்குவிந்த
    மண்ணணைநீர் மேகத்து வண்ணனை மாற்றான்தாய்க்
    கண்ணனை நெஞ்சே கருது….
    சூழ்ச்சி யுடன்வந்த பேழ்ச்சி முலைபற்றி
    மோட்ஷ விருந்தளித்த மோகனனை -மேய்ச்சலில்
    கண்ணென கோகுலக் கன்றுகள் காத்திடும்
    கண்ணனை நெஞ்சே கருது….(6)….24-03-2011

    பாலுக்(கு) அழும்பாலன் பாவை களின்லோலன்
    ஞாயலத் துயர்தீர்க்கும் நாயகன் -மாலுக்குள்
    எண்ணமாய்த் தோன்றி இடைசாதி வந்தவன்
    கண்ணனை நெஞ்சே கருது….

    பக்திக்(கு) அவன்பதங்கள், சக்திக்(கு) அவன்சரணம்
    முக்திக்(கு) அவனின் மலர்த்தாள்கள் -யுக்தியாய்
    கண்ணினுன் தாம்பினால் கட்டும் உரிமைக்குக்
    கண்ணனை நெஞ்சே கருது….

    அப்பண ஆதி அனந்தனில் தூங்குவோன்
    சொப்பனம் இவ்வுலக சாராம்சம் -அற்பநான்
    எண்ணம் தொலைத்து எழுவாய் விழிப்புடன்
    கண்ணனை நெஞ்சே கருது….
    இதுநிஜமாய் ஆகும் அது பொய்யாய்ப் போகும்
    விதவிதமாய் எண்ணல் விடுத்து -எதுவரினும்
    கண்ணணைந்த போதுதிக்கும் காரிருள் வண்ணத்து
    கண்ணனை நெஞ்சே கருது….

    எங்கரி என்றே இரணியன் கேளும்முன்
    அங்கொரு தூணில் அதிர்ந்தவன் -சங்கரி
    அண்ணனை ஆகாய வண்ணனை ஆனந்தக்
    கண்ணனை நெஞ்சே கருது….

    நினைத்திட நம்முள் நவநீதம் பொங்கும்
    கனைத்திடக் காமம் கலங்கும் -மணத்துழாய்
    திண்ணிய தோளில் துலங்கும் துவாபரக்
    கண்ணனை நெஞ்சே கருது….

    காரோத வண்ணனின் பேரோத ஆயிரம்
    நீரோடை போல்தெளிவு நம்வாழ்வில் -ஆராத
    இன்னமுதை தீந்திருக் கண்ணமுதைக் கற்கண்டைக்
    கண்ணனை நெஞ்சே கருது….கிரேசி மோகன்….!

    Share
  • விவசாயிகளும் – விளைபொருட்களும்!

    பவள சங்கரி

    தலையங்கம்

    விவசாய விளைபொருட்கள் விவசாயிகளுக்கும் பொது மக்களும் உரிய விலை கிடைக்கிறதா? உதாரணத்திற்கு முட்டைகோஸ் மேட்டுப்பாளையம் சந்தையில் கிலோ  ₹ 4 க்கு விற்பனை ஆகிறது. இதுவே பொது மக்களைச் சென்றடையும்போது கிலோ ஒன்றிற்கு  ₹ 20 – 25 ஆகிறது. இதுவே சென்னை போன்ற பெரு நகரங்களுக்குச் செல்லும்போது  ₹ 30 ஐத் தொட்டுவிடுகிறது. விவசாயிகளுக்கும் நியாயமான விலை கிடைப்பதில்லை. பொது மக்களுக்கும் நியாய விலையில் கிடைப்பதில்லை. இதுதான் இன்றைய நிலை. இதற்கு அரசு குளிர்ப்பதனப்படுத்தும் கிடங்குகளை விவசாயிகள் எளிய முறையில் பயன்படுத்தும் வசதியும், விவசாயிகள் / பொதுமக்கள் நேரடி விற்பனை சந்தைகளை உருவாக்க வேண்டியது அவசியம். தற்போதுள்ள உழவர் சந்தைகளை உயர் தொழில்நுட்ப வசதிகளோடு விரிவுபடுத்தினாலே இந்தக் குறைகள் பெருமளவில் தீர்ந்து விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் வளமான வாழ்வு நிச்சயம்.

    Share
  • நிதிநிலை அறிக்கை

    பவள சங்கரி

    சென்ற ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவித்த திட்டத் தொகைகள் எத்தனை சதவிகிதம் பயன்படுத்தப்பட்டுள்ளன, மீதமுள்ள தொகைகள் இந்த ஆண்டுத் திட்டங்களோடு இணைக்கப்படுமா. மாதாந்திர வாரியாக இந்தத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த அறிக்கைகள் அரசு பெறுகிறதா? பல திட்டங்கள் (நிர்பயா திட்டம் போன்று) தொகை அறிவிக்கப்பட்டும் செயல்படுத்தப்படாமலே பல ஆண்டுகளாக தொடர்கிறது. இதற்கு ஏதாவது நடவடிக்கை அரசு எடுக்குமா. இதைப்பற்றி எந்தத் தகவலும் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் வெளியிடவில்லை என்பது வருத்தத்திற்குரியது.

    Share
  • BIT COIN – பிட் காயின்

    பவள சங்கரி

    மத்திய ரிசர்வ் வங்கியின் எச்சரிக்கை!. – BIT COIN – பிட் காயினை நம்பாதீர்கள். பிட் காயின் என்பது உரூபாயோ, டாலரோ அல்ல. இது ஆன்லைனில் பணப்பரிமாற்றத்திற்காக பயன்படுத்தக்கூடியது. இன்று பெரும்பாலானவர்கள் ஆன்லைனில் பொருட்கள் வாங்கிக்கொண்டிருக்கிறோம்பிட் காயினை எந்த நாடும், ரிசர்வ் வங்கியும் அங்கீகாரம் செய்யவில்லை. நம் ரிசர்வ் வங்கி இரண்டாவது முறையாக எச்சரிக்கை மணி ஒலித்துள்ளது. பல இலட்சம் கோடிகள் இழப்பதற்கு முன்பு விழித்துக்கொள்வது அவசியம்..

    Share
  • மாதச்செலவுத் திட்டம்

    பவள சங்கரி

    மாதச்செலவுத் திட்டம் போடும்போது செலவுக் கணக்கை மட்டும் எழுதாமல் எந்தப் பொருள் எங்கு எப்படி வாங்கப் போகிறோம் என்பதையும் திட்டமிடுதல் அவசியம். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.. பொதுவாக அனைவரும் பயன்படுத்தும் உளுந்து பற்றி பார்ப்போம். 1 கிலோ உளுந்தின் விற்பனை விலை  ₹ 96. பர்மா உளுந்து ₹ 76. மொத்த விற்பனை மண்டியில் வாங்கினால் 1 கிலோ உளுந்து ₹ 120 க்கு வாங்கலாம். பெரிய மால், டிபார்ட்மெண்ட் ஸ்டோர் என்று போனால் ₹ 140. சின்ன மளிகைக் கடையில் குறைந்தபட்சம் ₹ 150. அதுவும் நோட்டு போட்டு மாசக் கடனுக்கு வாங்குபவர்களுக்கு கடைக்காரர் போடுவதுதான் விலை.. ஆக கிட்டத்தட்ட இரண்டு பங்கு விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. அரசு தலையிட்டு, தர நிர்ணயம், விலைக் கட்டுப்பாடு கொண்டுவந்தால் மத்தியதர மக்கள், ஏழை எளியவர்களுக்கு பயன்படும்.

    Share
  • குற்ற உணர்ச்சியே கருணையாக…

    நிர்மலா ராகவன்

    “சாப்பிட்டு முடி, செல்லம்! சமர்த்தில்லே!”

    ஞாயிறு தினசரியில் காளைமாட்டின் படத்தைப் பார்த்து, `நந்தி பகவானே! உனக்கு வந்த கதியைப் பாத்தியா?’ என்று, மானசீகமாக கைலாயத்திற்கே போய்விட்டிருந்த கமலநாதன் மனைவியின் குரலைக் கேட்டு நனவுலகிற்கு வந்தார்.

    இப்படியா பரிந்து, பரிந்து ஒரு பூனைக்குட்டிக்கு ஆகாரம் அளிப்பார்கள்?

    வீரம், பண்பாடு என்றெல்லாம் பேசுகிறவர்கள் `கருணை’ என்ற வார்த்தைக்கு அர்த்தம் இவளிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சிந்தனை போக, சிரிப்பு வந்தது க.நா.விற்கு.

    ஒரு வேளை, அவளுடைய குற்ற உணர்ச்சிதான் இப்படி இன்னொரு வழியில் வடிகால் காண்கிறதோ?

    அன்று அழுதபடி வீட்டுக்குள் வந்தாள் விமலி. தன்னுடன் போட்டி போட்டு சதுரங்கம் விளையாடிக்கொண்டிருந்த மடிக்கணினி மீதிருந்து கண்களை உயர்த்தி அவளைப் பார்த்தார் க.நா.
    அவர் எதுவும் கேட்குமுன், “ஒரு பூனைக்குட்டிமேல காரை ஏத்திட்டேன். அது அப்படியே நசுங்கி..,” மேலே தொடரமுடியாது, விசும்பினாள்.

    `இதற்கா இப்படி ஒரு ஆர்ப்பாட்டம்!’ என்பதுபோல் புருவத்தைத் தூக்கினார் க.நா.

    அவர்கள் இருந்த பகுதியில் எப்போதும் ஏதாவது ஒரு பெரிய மாடி வீட்டை இடித்து, புதிதாக ஏதாவது கட்டிக் கொண்டிருப்பார்கள் சீனர்கள். `இவர்களுக்கெல்லாம் எங்கிருந்துதான் பணம் கொட்டுகிறதோ!’ என்று அதிசயித்திருக்கிறார் க.நா. ஒரு நண்பரை விசாரித்தபோது, `Feng Shui (ஃபெங் ஷ்வி — சீனர்களின் வாஸ்து) சரியாக இல்லை!’ என்றார்.

    கட்டுமானத் தொழிலாளிகள் வேலை செய்ய வரும்போது தமது உபகரணங்களுடன், எங்கிருந்தாவது ஒரு பூனைக்குட்டியையும் தூக்கி வருவது வழக்கமாக இருந்தது. சில மாதங்கள் அல்லது ஓரிரு ஆண்டுகள் கழித்து, அங்கு வேலை முடிந்ததும், அவர்கள் போய்விடுவார்கள் — பூனையை விட்டுவிட்டு.
    இதனால், செல்வம் கொழித்த அந்த குடியிருப்புப் பகுதியில் இருந்த நான்கு தெருக்களிலும் கறுப்பு, வெள்ளை, பழுப்பு, சாம்பல் வண்ணங்களில் பூனைகள் உலவிக்கொண்டு, தங்கள் இனப்பெருக்கத்திற்குத் தம் கடமையைச் செம்மையாகச் செய்துகொண்டிருந்தன.

    `நீ நிதானமா பாத்து காரை ஓட்டியிருக்கணும், விமலி. நம்ப தெருவிலே எப்போ ஒரு பூனையோ, நாயோ குறுக்கே வரும்னு சொல்லவே முடியாது!’ என்றார், நிதானமாக.

    தன் துயரத்தில் பங்கு கொள்ளாது, புத்திவேறு சொல்கிறாரே! விமலியின் துக்கம் ஆத்திரமாக மாற, “ஒங்ககிட்ட போய் சொல்றேனே!” என்று இரைந்துவிட்டு, `இதயமே இல்லாத ஜன்மம்!’ என்று முணுமுணுத்தபடி அப்பால் போனாள்.

    “இங்கே வந்து பாருங்களேன்!” என்று வாசலிலிருந்தே உற்சாகமாகக் கூவிக்கொண்டு வந்தாள் விமலி.
    முகத்தைச் சுளிக்காமல் இருக்கப் பாடுபட்டார் க.நா. நிம்மதியாக ஆடுவோம் என்றால் விடுகிறாளா? கணினியை அருகிலிருந்த மேசைமேல் வைத்துவிட்டு நிமிர்ந்தார்.

    மனைவி கையில் மூன்று நிறங்கள் கலந்த ஒரு பூனைக்குட்டி!

    “ஏது?”

    “பார்க்கிலே இருந்திச்சு. நடந்து போறப்போ பாத்தேனா! தூக்கிட்டு வந்துட்டேன்”.

    “திருடிக்கிட்டு வந்தேன்னு சொல்லு!” என்று திருத்தினார். “அதோட அம்மா தேடாதா?”

    அவள் முகம் இறுகியது. “ஒண்ணு காணாமப் போனா அம்மா பூனைக்குத் தெரியவா போகுது! மூணு, நாலு குட்டி போட்டிருக்கும்!” என்று தன் குற்ற உணர்ச்சியை மறைத்துக்கொள்ளப் பார்த்தாள்.

    பத்து குழந்தைகள் பெற்ற தாய்கூட ஒரு குழந்தை இறந்துவிட்டால், வாழ்நாளெல்லாம் துக்கத்தில் உழலுகிறாளே! பூனையும் தான் ஈன்றதைப் பால் கொடுத்து வளர்க்கும் ஜீவன்தானே? அதற்கு மட்டும் உணர்ச்சிகள் கிடையாதா? அல்லது, எத்தனை குட்டிகளை ஈன்றோம் என்பதுதான் தெரியாதா?

    இவளுக்கு ஏன் இந்த சின்ன விஷயம் புரியவில்லை?

    பெண்ணாக இருந்தால் மட்டும் போதாதோ? தாய்மை அடைந்தால்தான் இன்னொரு தாயின் வேதனை புரியுமோ?

    தான் ஏதாவது சொல்லப்போனால், அழுது ஆகாத்தியம் செய்வாள். அன்று சமையல் வாயில் வைக்க வழங்காது என்று வாயை மூடிக்கொண்டார் க.நா. எல்லாம் இருபது ஆண்டுகால இல்லற வாழ்க்கை கற்றுக்கொடுத்த விவேகம்தான்.

    பிள்ளை இல்லாவீட்டில் அந்த பூனைக்குட்டி துள்ளி விளையாடியது. தினசரியைக் குதறியது. சர்வசுதந்திரமாக சோபாவில் படுத்து, பகலெல்லாம் தூங்கியது. சாப்பாட்டு மேசையில் ஏறி, அதன்மேலிருந்தவற்றை முகர்ந்து பார்க்கவும் தவறவில்லை.

    `அடீ! அடீ!’ என்று அதன் பின்னாலேயே ஓடும் மனைவியைப் பார்த்தால் வேடிக்கையாக இருந்தது கமலநாதனுக்கு. பரிதாபமும் உடன் எழுந்தது.

    முன்பெல்லாம், பொழுதைப் போக்க வேறு வழி தெரியாமல், டி. வி. முன்னால் ஐக்கியமாகிவிடுவாள் விமலி.

    சும்மா கண்ணுக்கு மட்டும் வேலை கொடுத்துக்கொண்டு இருக்க முடியுமா? `நாங்களும் இருக்கிறோம்!’ என்பதுபோல, கையும், வாயும் தங்கள் பாட்டில் காலி செய்யும், கச்சாங் (மலாயில் கடலைக்காய்), மிக்ஸ்சர் போன்ற நொறுக்குத்தீனி அடங்கிய பிளாஸ்டிக் பைகளை.

    `உங்கள் உடம்பைக் கொஞ்சம் குறைக்கலாம். ஏதாவது உடற்பயிற்சி செய்யுங்கள்!’ என்று பல முறை மருத்துவர்கள் கூறியபின், அவ்வப்போது அருகிலிருந்த பூங்காவிற்கு உலாவச் செல்வாள்.

    அப்படித்தான் அந்தப் பூனைக்குட்டி அவளுடைய வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாக வந்து சேர்ந்திருந்தது.

    “ஒன் பூனைக்குப் பேர் கிடையாதா?” என்று ஒரு நாள் மனைவியைச் சீண்ட, “குட்டின்னு பேர் வெச்சிருக்கேன். நல்லா இருக்கில்லே?” என்றாள் அப்பாவித்தனமாக. அவர் தன் செல்லப்பிராணியின்மேல் அக்கறை வைத்திருக்கிறாரே என்ற மகிழ்ச்சி பிறந்தது அவளுக்கு.

    “ஒரிஜினலா இருக்கு!” என்றவரின் கேலியைப் புரிந்துகொள்ள முடியவில்லை அவளால். இன்னும் பூரித்தாள்.

    வேளை தவறாது தனக்கு ஆகாரமும், குடிநீரும் கொடுத்துவந்த விமலிக்கு ஏதோ தன்னால் ஆன உதவியாக, தான் மிதித்துக் கொன்ற பல்லியையும், கரப்பான் பூச்சியையும் அவள் செருப்பின்மேல் கொண்டுவந்து போட்டது குட்டி.

    அவளுக்குப் பெருமை தாங்கவில்லை. “நான் இதெல்லாம் சாப்பிட மாட்டேண்டா, குஞ்சு!” என்று கொஞ்சினாள்.

    தன் ஆசாரத்தைக் கொஞ்சம் விட்டுக்கொடுத்து, பேரங்காடிகளில் பூனைகளுக்கென பிரத்தியேகமாக விற்கும் உணவை வாங்கிவந்தாள்.

    “நாத்தம்!” என்று முகத்தைச் சுளித்த கணவரைப் பார்த்துச் சீறினாள். “பின்னே என்ன, பூனை தயிர் சாதமா சாப்பிடும்? மீன் வாசனை அப்படித்தான் இருக்கும். நீங்க ஒண்ணும் அதுக்குப் போட வேண்டாம்! நான் பாத்துக்கறேன்!”

    குட்டியின்மேல் தனக்கிருந்த பிடிப்பை கணவன் புரிந்துகொள்ள மறுக்கிறாரே என்ற ஆதங்கம் சிறிது நேரத்தில் மறைந்தது — “இந்தக் குட்டி ரொம்ப அழகா இருக்கு, ஆன்ட்டி!” பக்கத்து வீட்டுக்கு வேலை நிமித்தம் வந்திருந்த தொழிலாளி கூறியபோது. வீட்டுக்கு வெளியே இருந்த செம்பருத்திச் செடிகளுக்குத் தண்ணீர் விட்டுக்கொண்டிருந்த விமலிக்குப் பெருமை தாங்கவில்லை. “எந்த ஊரிலேருந்து வந்திருக்கீங்க?” என்று விசாரித்தாள், மலாயில்.

    “வியட்நாம்!” என்று பதில் வந்தது. பிறகு, அவளுடைய அடுத்த கேள்வியை எதிர்பார்த்தவன்போல், “என் பேரு டாவ்!” என்று தெரிவித்தான். சோனியாக இருந்தான். ஆனால், கடினமான உழைப்பால் பெற்ற வலு கைகளில் தெரிந்தது.

    ரப்பர் குழாயிலிருந்து வெளிவந்த தண்ணீர் தன்மேல் தெறித்துவிடாமல் ஜாக்கிரதையாக, சற்றுத் தொலைவில் நின்று, வைத்த விழி வாங்காமல் எஜமானியம்மாளைப் பார்த்துகொண்டிருந்தது குட்டி.
    அதைப் பார்த்ததும் சிகரெட்டால் கறுத்திருந்த அவன் உதடுகள் சிரிப்பில் விரிந்தன. அதைத் தூக்கி அணைத்து, அதன் மென்மையான உடலை அருமையாகத் தடவிக்கொடுத்தான். “புசு புசுன்னு அழகா இருக்கு!”

    சில வாரங்கள் கடந்தன. டாவும் குட்டியும் நண்பர்களாகிப்போனார்கள்.

    “குட்டியைப் பாத்தீங்களா? நேத்து சாயந்திரத்திலேருந்து காணோமே! சாப்பிடக்கூட வரலே!” மனைவியின் கவலை தோய்ந்த குரலைக் கேட்டு நிமிர்ந்தார் க.நா.

    “பெரிசாப் போச்சில்ல? பாம்பு, தவளை எதையாவது பிடிச்சுத் தின்னிருக்கும்!” என்று அசுவாரசியமாகப் பதிலளித்தார். “தானே நாளைக்கு அதிகாலையில வந்து..,” சட்டென்று தன்னை அடக்கிக்கொண்டார். `மியாவ் மியாவ்னு கத்தி பிராணனை எடுக்கும், பாரு!’ என்று சொல்ல நினைத்ததைச் சொல்ல அவருக்கென்ன புத்தி மாறாட்டமா!

    ஆனால் மறுநாள் குட்டி வரவில்லை.

    இரண்டு நாட்களாகின. விமலியின் துயரம் ஆத்திரமாக மாறியது.

    “அந்த வியட்நாம் தடியன் குட்டிகிட்ட பாசமா இருக்கிறமாதிரி நடிக்கிறபோதே எனக்குச் சந்தேகம்தான்!” என்று பொரிந்தாள்.

    கெட்டவனுடைய உடல் எப்படி இருந்தால் என்ன? அவனைத் `தடியன்’ என்று திட்டியதும் மனம் சற்று சமாதானம் அடைந்தது.

    “அவன் எதுக்காக நடிக்கணும்?”

    “தெரியாதமாதிரி கேக்கறீங்களே! பஞ்சம் பிழைக்க மலேசியாவுக்கு வந்திருக்கிறவன்! சிக்கனும் மட்டனும் வாங்கக் கட்டுப்படியாகுமா? குட்டியோ கொழுகொழுன்னு இருக்கு!”

    “சீச்சீ!”

    பரிவுடன் அவன் குட்டியை அணைப்பதைப் பார்த்திருந்தவருக்கு அவள் சொல்வது அபத்தம் என்று பட்டது.

    `ஒரு வேளை, இவள் சொல்வதில் உண்மை இருக்குமோ?’ என்ற சந்தேகமும் உடன் எழாமலில்லை.

    `இந்தப் பூனையைக் கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு இனாம் தரப்படும்!’ என்று கணினியில் தட்டச்சு செய்யப்பட்டு, தெருக்கம்பங்களில் ஒட்டப்பட்டிருக்கும் துண்டுக் காகிதங்களின் ஒரே மாதிரியான வாசகம் நினைவில் எழுந்தது. சில சமயம், பூனை மட்டுமின்றி, அழகழகான நாய்களின் படங்களும் இருக்குமே!

    “விடு, போ! நாளைக்கு சனிக்கிழமை! லீவு! கடைக்குப் போய் அழகான பாரசீகப் பூனை வாங்கிக்கலாம்,” என்றார், சமாதானமாக.

    “எனக்கு குட்டிதான் வேணும்!”

    தாய்மை அடையாவிட்டால், ஒரு பெண் என்றுமே குழந்தைத்தனம் மாறாமல் இருந்துவிடுவாளோ என்று அவரது எண்ணம் ஓடியது.

    மறுநாள் காலை ஒன்பது மணிக்குச் சாவகாசமாகத் தூங்கி எழுந்த க.நா., பக்கத்து வீட்டிலிருந்து பெரிய இரைச்சல் கேட்க, வாசலுக்கு விரைந்தார்.

    சிறிது பொறுத்து, வீடு திரும்பியவர் முகத்தில் ஏதேதோ உணர்ச்சிகள். அவைகளை வெளியில் கொட்ட மனைவியைத் தேடி சமையலறைக்கு வந்தார். “ஒன்னோட குட்டியைத் தூக்கிவெச்சுட்டுக் கொஞ்சுவானே! அந்த வியட்நாம்காரன் அரைகுறையாக் கட்டியிருந்த மாடி பால்கனியிலேருந்து விழுந்துட்டான்!”

    நறுக்கிக்கொண்டிருந்த கீரையை அப்படியே வைத்தாள் விமலி. அவர் சொல்ல வந்தது இன்னும் சுவாரசியமாக இருக்கும்போலிருந்தது. “உசிரு போயிடுச்சா?” ஆவலுடன் கேட்டாள்.

    “சரியான அடி! வலி தாங்காம துடிக்கிறான், பாவம்! `ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போடா’ன்னு நான் மேஸ்திரிகிட்ட சொல்றேன், அவன், `அதெல்லாம் வேணாம், ஸார். சும்மா மசாஜ் செஞ்சா சரியாப்போயிடும்!’ அப்படிங்கிறான்”.

    கணவர் எவனோ ஒருவனுக்காக அவ்வளவு உணர்ச்சிவசப்படுவது அவளுக்கு அலுப்பாக இருந்தது.

    க.நா. தன்பாட்டில் பேசிக்கொண்டே போனார்: “அந்த ஆள் சட்டபூர்வமா இங்க வரலியாம். அதனால அவனை வேலைக்கு வெச்சிருந்த குத்தத்துக்காக இந்த மேஸ்திரியைத் தண்டிப்பாங்க. கொஞ்சமா கூலி குடுத்து, நிறைய வேலை வாங்கலாமேங்கிற பேராசை இவனுக்கு. சீனவங்க புத்தியைக் காட்டிட்டான்!” யார்மேலாவது குற்றம் கண்டுபிடிக்க வேண்டுமென்றால், அவர்களுடைய இனத்தையே மொத்தமாகப் பழித்தால்தான் சிலருக்குத் திருப்தி.

    விமலிக்கும் திருப்தியாக இருந்தது. “என் குட்டியை வெட்டித் தின்னானே, படுபாவி! நான் எவ்வளவு துடிச்சிருப்பேன்! இப்போ அவனும் படட்டும்!” என்று சபித்தாள்.

    தன்னைப்போல ஓர் ஆணைப்பற்றி இவள் — என்னதான் மனைவியாக இருந்தாலும், ஒரு பெண் — தரக்குறைவாகப் பேசுவதா! க.நா.வின் ஆண்மை அவரை உசுப்பேற்றியது.

    “அவன் தின்னதைப் பார்த்தாப்போல பேசாதே, விமலி. சாப்பிட வழியில்லேன்னுதானே இப்படி சொந்தபந்தம் எல்லாரையும் விட்டுட்டு, நாடு விட்டு நாடு, இங்கே வந்திருக்கான்?” என்று கண்டித்தார். “இருபது முப்பது பேரோட ஒரே அறையிலே தங்கிக்கிட்டுத் திண்டாடறான், பாவம்!” மீண்டும் பரிதாபப்பட்டார்.

    அப்படியும் மனம் ஆறாது, “பூனைகிட்ட காட்டற பரிவில கொஞ்சமாவது இவங்கமேல இருக்கா ஒனக்கு?” என்று, அபூர்வமாக மனைவியை எதிர்த்தார், எதிர் விளைவுகளைப்பற்றி யோசிக்காது.

    இருவருக்குள்ளும் பேச்சுவார்த்தை அற்ற நாட்கள் தொடர்ந்தன. அவரோ, அதைச் சற்றும் பொருட்படுத்தாது, மேஸ்திரியிடம் பேசிக்கொண்டிருந்தது அவள் காதிலும் விழாமல் போகவில்லை.
    அவனுடைய காலை வெட்டி எடுத்துவிட்டார்களாமே!

    `நன்றாக வேண்டும்!’ என்று கறுவினாள்.

    நள்ளிரவு.

    “மியாவ்!”

    விமலிக்கு உடனே விழிப்புக் கொடுத்தது. இந்த வேளையில் தனியாக வாசல் கதவைத் திறந்துகொண்டு வெளியே போவதா! தனது கோபத்தை மறந்தவளாக, அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த கணவரை எழுப்பினாள்.

    “வாசல்லே பூனை கத்துது. நம்ப குட்டியாத்தான் இருக்கும். வாங்க, பாக்கலாம்!” என்று பெரிய எதிர்ப்புடன் மாடிப்படியின் கீழ் இறங்கி ஓடினாள்.

    இரவு வேளைகளில் வாசலில் போட்டிருக்கும் காலணிகளைக் களவாடுபவர்களைத் தவிர்க்கவெனப் போடப்பட்டிருந்த விளக்கு வெளியில் பிரகாசமாக எரிந்துகொண்டிருந்தது.

    அங்கே குட்டி மட்டுமில்லை, அதனுடன் இன்னொரு குட்டி, சிறிய பந்துமாதிரி!

    “இங்கே பாருங்களேன்! குட்டி அம்மாவா ஆகிடுச்சு!” பூரிப்புடன் விமலி கத்தியது அந்த நிசப்தமான இரவில் நாலைந்து வீடுகளுக்குக் கேட்டிருக்கும்.

    `இனிமேல் நம்மை எங்கே கவனிக்கப்போகிறாள்!’ என்ற சிறுபிள்ளைத்தனமான பொறாமையும் எழ, “அந்த வியட்நாம்காரனைச் சபிச்சியே!” என்று குத்திக் காட்டாமல் இருக்க முடியவில்லை க.நா.வால்.

    அவள் அதைக் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. பெரிய குட்டி, சின்ன குட்டி என்று பெயர் வைக்கலாமா என்ற யோசனையில் ஆழ்ந்துபோனாள்.

    Share