வானிடம் மானிடம்

 

கவிஞர் ஜவஹர்லால்

இரவு நேரம் வானைப் பார்த்தால்
இதயம் பறக்கிறது;–அங்கே
உறவு கொண்டே திளைத்து மகிழ
உணர்வு துடிக்கிறது.

கண்ணைச் சிமிட்டி அழைக்கும் மீன்கள்
கனவு படைக்கிறது;–என்றன்
எண்ணம் விண்ணில் இறக்கை யின்றி
எங்கும் பறக்கிறது.

நிலவின் தூய்மை என்னுள் பலவாய்
நினைவை அசைக்கிறது;–மண்ணில்
நிலவும் தூய்மை யற்ற தன்மை
நெஞ்சை அலைக்கிறது.

முழுமதி வானை ஆளும் காட்சி
மனசை நிறைக்கிறது;– அந்த
முழுமதி தேய்ந்து வளர்தல் ஏனோ ?
வினாவும் பிறக்கிறது.

திங்கள் முழுசாய் விண்ணில் தவழச்
சிந்தை திகைக்கிறதோ ?—பூமி
எங்கும் ராகு கேது கண்டே
இளைத்து வளர்கிறதோ?.

கொடுமை சிரிக்கக் கண்டே வான்தான்
கொப்புளங் கொள்கிறது;–அந்த
வடுவை மீன்கள் என்றே மண்தான்
வாழ்த்தி மகிழ்கிறது.

நேற்றைய வானம் இன்றைக் கில்லை
விந்தை நிகழ்கிறது;–என்றும்
மாற்றமே நிலையாம் என்னும் உண்மை
வானில் திகழ்கிறது.

வளர்ச்சி தேய்வு வாழ்க்கை இயல்பு
வான்மதி சொல்கிறது;–உள்ளத்
தளர்ச்சி நீக்கி வலம்வரின் வெற்றி
கதிரவன் உரைக்கிறது.

அடடா ! வானும் நிலவும் மீனும்
தத்துவம் பொழிகிறது; –அதனை
எடுத்துக் கொள்ள விரும்பா திங்கே
இதயம் அலைகிறது.

வானிடம் எத்தனை எத்தனை தத்துவம்
வனப்பாய் விரிகிறது;–எதையும்
மானிடம் கற்பதே இல்லை எங்கும்
மயக்கமே தெரிகிறது.

வானாய் நெஞ்சம் மாறி நிலவின்
குளுமை கொஞ்சட்டும்! –இன்பத்
தேனை வாரி வழங்கும் மீனாய்த்
தினமும் விஞ்சட்டும்.

ரவியின் கைகள் கவிஞர் நெஞ்சை
இதமாய்த் தழுவட்டும்!—இந்தப்
புவியில் கவிஞர் ரவியின் புகழைப்
பாடித் திளைக்கட்டும்.
( 19-05-99 ல் கிழக்குக் கடற்கரைச் சாலையில்
ஒரு பேரில்லத்தில் திரு, ரவி, பாரதி கலைக்
கழகம் சார்பில் அமைத்து நடத்திய மறக்க
முடியாத முழுநிலாக் கவியரங்கம். )

About கவிஞர் ஜவஹர்லால்

மரபுக் கவிஞர்.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க