Blog

  • கனவுக் குதிரைகள்

     

    சிவ .விஜயபாரதி

     

    கனவுக் குதிரைகள் பூட்டியத் தேரில்
    புவனத்தின் திசைக்குள்
    இலக்கற்ற பயணம்
    பெய்துவிட்டுப் போன மழையில்
    நனைந்து நிற்கும் முட்செடிகள்
    முட்களின் கூரிய முனைகள்
    துளியைச் சுமந்தபடி
    உச்சிக் கொம்பைப் பற்றிய தேன்கூடு
    நிரம்பி உதிர்க்கிற துளிகள்
    பழங்களைச் சிறுகச் சுவைத்து
    மீண்டும் கடக்கின்றன
    செடிகளின் பூக்களில் ஒழுகி
    வழியில் பரவ
    தேர்க்கால்கள் வழுக்குகின்றன
    வியாபித்திருக்கும் கனத்த மௌனத்தினூடே
    இருமருங்கும் உதிர்ந்து கிடக்கும் பூக்கள்
    சொப்பனத்தைக் கலைத்துப் போடுகின்றன.

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் – (41)

    நிர்மலா ராகவன்

    தற்காப்புக் கலைகள்

    நலம்-2
    அந்தப் பையன் ஒரே படுத்தல்! இவ்வளவு மோசமாகவா வளர்ப்பார்கள்!’

    `பெண்ணா இது! ரொம்ப முரடு! எவன் மாட்டிக்கொண்டு திண்டாடப்போகிறானோ!’

    ஐந்தே வயதான குழந்தைகளுக்குக் கிடைத்த (வேண்டாத) விமர்சனங்கள் மேலே குறிப்பிட்டவை. குழந்தைகளும் பெரியவர்கள்போல் நடக்க வேண்டும் என்ற எதிர்ப்புதான் பிறரை இப்படியெல்லாம் பேசவைக்கிறது. `நல்லதற்குத்தானே சொல்கிறோம்!’ என்று அவர்கள் திருப்தி பட்டுக்கொண்டாலும், இத்தகைய ஓயாத கண்டனத்தால் குழந்தைகளை பலவீனர்களாக ஆக்குகிறோம் என்று அவர்களுக்குப் புரிவதில்லை. அதைப்பற்றி அவர்களுக்கு அக்கறையும் கிடையாது. யாரோ பெற்ற குழந்தைதானே!

    அவரவர் குடும்பத்திலேயேகூட, தம் வயதுக்கேற்ப நடந்துகொள்வது சில குழந்தைகளுக்குப் பிரச்னையாக முடியலாம்.

    அம்மாவைப் படுத்துதல்

    எங்கள் உறவினர் குழந்தை அமெரிக்காவிலிருந்து என்னுடன் தொலைபேசியில் பேசினான். நாங்கள் இருவரும் சந்தித்துக்கொண்டதே கிடையாது. இருந்தாலும், அவனுக்குத் தன் மனக்குறையை யாரிடமாவது சொல்லவேண்டும்போல இருந்தது போலும்!

    எடுத்த எடுப்பிலேயே, `நிம்மலா பாட்டி! அம்மா என்னைக் கோச்சுக்கறா!’ என்றான், வருத்தம் தோய்ந்த குரலில்.

    `நீ என்னப்பா பண்ணினே?’ என்று கேட்டதும், `படுத்தினேன்!’ என்றான் அந்த மூன்று வயதுக் குழந்தை.
    எனக்குச் சிரிப்புப் பொங்கியது.

    `படுத்தல்’ என்று பொதுவாகச் சொல்வது அதீத சுறுசுறுப்பான குழந்தை ஒன்றின் நடத்தையை. எதையும் அறியவேண்டும் என்ற ஆர்வத்துடன் நிறையக் கேள்விகள் கேட்பது குழந்தைகளின் இயல்பு.
    எப்படிச் சொல்லிப் புரியவைப்பது என்று புரியாததாலோ, `முக்கியம்’ என்று படும் வேறு வேலையில் ஈடுபட்டிருப்பதாலோ, பெற்றோர் அல்லது ஆசிரியர்கள் அவனது இயற்கையான ஆர்வம் தவறு என்பதுபோல் திட்டுவார்கள், தண்டிப்பார்கள்.

    பல குழந்தைகளின் இயற்கையான ஆர்வம் தடைப்பட்டு, சற்றே மந்தமாகப் போவதற்கு இதுவும் ஒரு காரணம்.

    சில சிமயம், வளர்ப்பு முறையால், அதாவது `அன்பு’ என்றெண்ணி பெரியவர்கள் பார்த்துப் பார்த்து எல்லாவற்றையும் செய்வது குழந்தைகளுக்கு எதிர்மறையான விளைவைத்தான் உண்டுபண்ணும்.

    `கடைசிக் குழந்தை (அல்லது ஒரே குழந்தை) என்று ரொம்ப செல்லம் கொடுத்ததில் தானாக எதுவும் செய்துகொள்ளத் தெரியவில்லை இவளுக்கு! சோம்பேறி!’

    குடும்பத்தில் கிடைக்காத கவனிப்பை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்று சில சிறுவர்கள் பிற மாணவர்களிடம் முரட்டுத்தனமாக நடந்துகொள்வதும், தெரிந்தே தவறு செய்வதும் உண்டு. தவறு செய்தால் தண்டனை பெறும்போதாவது பிறர் கவனிக்கிறார்களே!

    பதின்ம வயதினருக்கு ஹார்மோன் மாற்றத்தால் அதிக சக்தி இருக்கும். தினசரி பள்ளிக்கூடம், வீட்டுப்பாடம் என்ற வாழ்க்கை சலிப்புதட்ட, தீய வழிகளில் மனம் செல்லும். பிறரை வீண்வம்புக்கு இழுக்கத் தோன்றும். `என்னைப் பாத்து ஏண்டா முறைக்கிறே?’ என்று காரணமே இல்லாது பிறருடன் சண்டைக்குப் போவார்களாம். (இப்படி நடந்துவந்த ஒரு மாணவன் பெருமையுடன் என்னிடம் தெரிவித்தது).

    எப்படிச் சமாளிப்பது?

    சுறுசுறுப்பான குழந்தையோ, பிறருடன் பழகத்தெரியாது வெட்கி ஒளிபவனோ, தன் தேவைகளைத் தானே பூர்த்தி செய்துகொள்ள முயலாது பிறரது கையை எதிர்பார்ப்பவனோ அல்லது பிறரது கவனிப்பைத் தவறான வழிகளில் பெறத் துடிப்பவனோ இவர்கள் அனைவரும் தன்னம்பிக்கையுடன் வளர ஒரு சிறந்த வழி இருக்கிறது.

    தற்காப்புக் கலை

    அதிகபட்சமான சக்தியை நல்ல வழியில் செலுத்தும் வழி தற்காப்புக் கலையைப் பயிலுவது. ஒவ்வொரு பயிற்சியின் முடிவிலும் உடல் சோர்ந்து போகலாம். ஓர் இலக்கை நோக்கிப் பயணிக்கும் உறுதி, அதை அடைந்தவுடன் கிடைக்கும் ஆனந்தம் இவைகளால் மனம் உற்சாகத்தை அடையும்.
    தற்காப்புக்கலை என்று பெயர்தான். கற்க ஆரம்பிக்கையிலேயே அநாவசியமாக இத்திறனைகளைப் பயன்படுத்தக் கூடாது என்று மாணவர்களுக்குப் போதிக்கப்படுகிறது. ஆனாலும், அவசியம் இருந்தால், தற்காத்துக்கொள்ளத்தானே வேண்டும்!

    கதை

    ஜூடோவில் முதல் பாடமாக, தன்னிடம் முறைகேடாக நடக்க முயலும் ஆணை எப்படி எதிர்ப்பது என்பதைக் கற்றாள் அப்பெண்.

    ஐந்து வருடங்களுக்குப்பின், அவளுடைய பதினேழாவது வயதில், ஆள் நடமாட்டம் அதிகமாக இருந்த ஒரு நகரில் ஒரு கயவன் அவளுடைய இடுப்பைப் பின்னாலிருந்து இரு கரங்களாலும் இறுகப் பிடிக்க, அவள் யோசிக்கவேயில்லை.

    திரும்பி அவனுடைய மர்ம பாகத்தில் ஓங்கி ஓர் உதை விட்டாளாம். அவன் அலறியபடி கீழே விழுந்தான். ஜூடோ போட்டிகளில் பரிசு பெற்றிருந்த அப்பெண் திரும்பிப் பாராது நடந்துவிட்டாள், அவனைச் சுற்றி ஒரு கும்பல் கூடியதைக் கண்டு திருப்தி அடைந்தவளாக.

    யாவரும் வெல்லலாம்

    பள்ளிக்கூடத்தில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளில் எல்லாக் குழந்தைகளும் வெற்றி பெற முடியுமா? ஆனால், ஜூடோ, கராத்தே, டேக்வான்டோ (Taekwando) போன்ற தற்காப்புக் கலைகளில் அவரவர் திறமைக்கு ஏற்ப முன்னேறலாம். எப்படியென்றால், வாராவாரம் பயிற்சி அளிக்கப்படும். ஒவ்வொரு வருடமாக, வெள்ளை, மஞ்சள் என்று வெவ்வேறு நிறங்களைக்கொண்ட இடுப்புப் பட்டியைப் பெறும் தகுதியை அடைகிறார்கள்.

    `முன்னேறிக்கொண்டிருக்கிறோம்!’ என்ற நிதரிசனம் ஒரு சிறுவனுக்குப் பெருமையை ஊட்டி, தன்னம்பிக்கையையும் வளரச் செய்கிறது.

    கதை

    சாங் என்ற பதினான்கு வயதுப் பையனுக்கு ஆடிசம். பிறருடன் பழகத் தெரியாது. தனி ஒரு உலகத்தில் சஞ்சரித்துக்கொண்டிருப்பான். பிற பையன்கள் அவனை ஒரு கேலிப்பொருளாகக் கருதி, பலவாறாக வதைத்தனர்.

    அதைக் கண்ட ஆசிரியர் அவனை ஒரு கோடியில் உட்கார வைத்துவிட்டு, அவன் பக்கத்தில் தற்காப்புக் கலையில் தேர்ச்சி பெற்ற அர்ஜூனனை அமர்த்தினார். எதுவும் வெளிப்படையாகச் சொல்லவில்லை.

    (கறுப்பு நிற இடுப்புப்பட்டி ஒருவன் தற்காப்புக்கலையில் நல்ல திறமையைப் பெற்றுவிட்டான் என்பதைக் குறிக்கும். அதற்குப் பிறகும் பல ஆண்டுகள் இடைவிடாமல் மேற்பயிற்சி உண்டு. இந்தகையவர்கள் தமது ஆத்ம பலத்தைப் புரிந்துகொண்டுவிட்டதால், பார்க்க சாதுவாக இருப்பார்கள்).

    அர்ஜூனனது திறமையை பள்ளிக்கூட விளையாட்டுத் தினத்தன்று எல்லாருமே பார்த்து அயர்ந்திருந்தனர். `ஒரு கையால் மட்டும் கனமான மரக்கட்டையை ஒரே அடியில் சுக்குநூறாக உடைப்பவன் ஆயிற்றே! இவனுடன் மோதுவதா!’ என்றஞ்சி ஒதுங்கினர்.

    ஒரு பையன் மட்டும் அசட்டுத்துணிச்சலுடன் வம்புக்கு வந்துகொண்டே இருந்தான். ஒருவன் சாதுவாகத் தோற்றமளித்தால், வம்புக்கு இழுக்கும் உலகம் அல்லவா இது!

    அவனது தொல்லை பொறுக்க முடியாது போக, அர்ஜூனன் அவனுடைய மணிக்கட்டை இறுகப் பிடித்து ஒரு விதமாக அமுக்க, அப்படி ஒரு எதிர்ப்பை எதிர்பாராதவனின் முகம் அதிர்ச்சியாலும், உடல் வேதனையாலும் துடித்தது.

    அவன் கையை விட்டுவிட்டு, அமைதியாக, `So we understand each other!’ என்றானாம் அர்ஜூனன். மறைமுகமாக, `என் பலத்தைப் புரிந்துகொள்ளாது விளையாடாதே!’ என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறான்.

    `சமயம் வரும்போது நம்மையும் காப்பான்!’ என்ற நம்பிக்கை பிறருக்கு வந்துவிட, அதற்குப் பிறகு யாரும் அவனுடன் மோதவில்லை. ஆடிசத்தால் பாதிக்கப்பட்ட பையன் சாங் நிம்மதியாக இருக்க முடிந்தது.

    அர்ஜூனன் செய்ததுபோல், தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் பாதுகாக்க முடியும் என்ற உண்மை நிலை புரியும்போது, ஒருவன் தன்னுடைய சக்தியை உணர்கிறான். அமைதியாக எந்த பிரச்னையையும் அணுக முடிகிறது.

    மேலும் பல பலன்கள்

    யாருமே, `தற்காப்பு பயில்வது கடினம். என்னால் முடியாது!’ என்று அரைகுறையாக விலகி விடுவதில்லை.

    சுமார் நான்கு ஆண்டு தற்காப்புப் பயிற்சிக்குப்பின், குஸ்தியைப்போல இருவர் ஒருவரோடு ஒருவர் மோதுவர் (Sparring). ஆரம்பத்திலும், இறுதியிலும் தலை குனிந்து எதிராளியை வணங்குவர். பிறரை மதிக்கும் குணமும், நியாயமாகப் போராட வேண்டும் என்ற தன்மையும் வளர்கின்றன. அத்துடன், தன்னைவிடப் பெரிய உருவமோ, மிகுந்த பலமோ உடைய ஒருவனைக்கூட வீழ்த்தமுடியும் என்ற நிதரிசனம் புரிய, தன்னம்பிக்கை பெருகிறது. வீண் கர்வம் ஒழிகிறது.

    பல காலம் இடைவிடாது கடுமையாக உழைத்து பயிற்சி செய்து முன்னேறி இருப்பார்கள். அதனால், நன்கு உழைத்தால் எதிலும் பலன் கிடைக்கும் என்று தோன்றிப்போகிறது. தம்மை ஒத்த பலருடன் விட்டுக்கொடுத்துப் பழகும் குணம் வருகிறது.

    சாப்பிடப் பிடிக்குமா?

    பதின்ம வயதினருக்கு, முக்கியமாக ஆண் பிள்ளைகளுக்கு, உடல் வெகுவாக வளர்வதால், அப்பருவத்தில் உணவில் விருப்பம் அதிகரிக்கும். அளவு தெரியாமல் சாப்பிடுவார்கள். உடல் பருமனால் என்னென்னவோ உபாதைகள்!

    தற்காப்புக்கலை பயிலும்போது, எவ்வளவு சாப்பிட்டாலும் உடலில் சதை போடாது. அதனால் அவர்கள் ஆசைதீர சாப்பிட முடியும். (அளவுக்கு மீறி குண்டானால், `மாஸ்டர்’ கண்டித்துவிடுவார்). சில ஆண்டுகளில், தசைநார்கள் மெல்லியதாக, ஆனால் உறுதியாக ஆகும். அதனால், உடல் வலு, விரைவு, எதையும் தாங்கும் மன உறுதி போன்ற நல்ல `பக்கவிளைவுகளும்’ உண்டு.

    பிறரை நாம் அடிக்கும்போதோ, அடி வாங்கும்போதோ, அதை எப்படித் தடுப்பது என்று கவனமாக இருக்க வேண்டும் அல்லவா? இந்தப் பயிற்சியால் செறிவுடன் (Concentration) எதையும் செய்வது பழகிவிடுகிறது. கால் தடுக்கினாலும் கீழே விழாமல் சமாளிக்க முடியும்.

    பெரியவர்களுக்கு

    நான் பார்த்த டேக்வான்டோ வகுப்பில், ஒரு சிறுவனுடன் அவனுடைய தந்தையும் கற்க ஆரம்பித்தார்.
    `முன்பெல்லாம் என் மகனுக்குப் பிறருடன் பழகத் தெரியாது. இப்போது தன் வயதை ஒத்தவர்களுடன் கலகலப்பாகப் பேசிப் பழகுகிறான். பள்ளிக்கூடப் பாடங்களிலும் முனைப்பு அதிகமாகி இருக்கிறது!’ என்றார்.

    வேலைப்பளுவால் அவருக்கு ரத்த அழுத்தம் இருந்தது. போதிய பயிற்சி இல்லாததால் உடல் பருமனாகியது. எப்போதும் அயர்ச்சியாக இருந்ததாம்.

    `இப்போது சுறுசுறுப்பாக இருக்கிறது. உடலை வளைத்து, முன்பைவிட நிறைய காரியங்கள் செய்ய முடிகிறது!’ என்றார் மகிழ்ச்சியுடன். `என் மகன் மூன்றாவது. நான் முதல் வகுப்புதான்! ஆறு வயதுப் பையன்களுடன் சரிசமமாகக் கற்பது நானும் சிறுவனாகிவிட்டதுபோல் இருக்கிறது!’ என்று சிரிக்கிறார்.

    நம் வாழ்க்கையைச் சரியான பாதையில் செலுத்த வயது ஒரு பொருட்டா என்ன?

    தொடருவோம்

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் -63

    க. பாலசுப்பிரமணியன்

    கற்றலும் மழலையர் பள்ளிகளும்

    education-2-1-1-1

    மழலைப் பருவம் என்பது நேரடியான புத்தகம் அல்லது குறிக்கோள்கள்,  நோக்கங்கள் சார்ந்த கற்றலுக்கு ஏதுவான பருவம் அல்ல. மழலையர் பருவ, உடல், மன, அறிவு வளர்ச்சியைப் பற்றிய உலகளாவிய ஆராய்ச்சிகள் இந்தக் கருத்தை நிலைநிறுத்துகின்றன. இந்தப் பருவத்தில் மூளையின் வளர்ச்சி அபரிமிதமாக ஏற்படுவதாகவும் கற்றலுக்கான அதிகப்படியான தாகத்தை ஏற்படுத்துவதாகவும் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால் இந்தக் கற்றலின் போக்கு ஒருமுகமாக இருப்பதில்லை. ஆர்வமும் தேடலும் பன்முகப் பாங்காக உள்ளன. அவர்களின் கவனத்தின் கணிப்புகள், கால அவகாசங்கள், பரிமாணங்கள் அதிவேகத்தில் மாறுவதால் மூளையும் உணர்வுகளும் ஒரே நிலைப்பாட்டில் இருப்பதில்லை. எனவே, அவர்களின் கற்றல் அதற்கு உகந்தாற்போல் அவர்களுடைய பன்முனைத் தேடல்களுக்குத் தேவையான உணர்வுசார்ந்த, அறிவுசார்ந்த உள்ளீட்டுகளை அளிப்பதாக இருத்தல் அவசியம்.

    இதனைக் கருத்தில் கொண்டு கல்வி மற்றும் மனநல ஆராய்ச்சியாளர்கள் மழலையர்களுக்குத் திட்டமிட்ட கல்வி முறையை தருவதை விரும்புவதில்லை. அது அவர்களுடைய கற்றலின் இயல்புகளுக்கு மாறாக அமைவதாகக் கருதுகின்றனர். எனவே அவர்களுக்குத் தன்னிச்சையான விளையாட்டு சார்ந்த கற்றலுக்கு ஏதுவான சூழ்நிலைகளை ஏற்படுத்தவேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

    பொதுவாக மழலையர் பள்ளிகள் இந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டாலும் நடைமுறையில் இந்தக் கருத்தை ஆரோக்கியமான முறையில் நடைமுறைப்படுத்துவதில் அக்கறை காட்டுவதில்லை. பல இடங்களில் மழலையர் பள்ளிகளின் இருப்புச் சூழ்நிலைகள் மோசமானதாக மட்டுமின்றி கவலைக்குரியதாகவும் அமைகின்றன. அவைகளை வெறும் குழந்தைப் பாதுகாப்பகங்களாகக் கருதுகின்றனர்

    மழலையர் பள்ளிகளில் நடப்பு முறையில் காணப்படும் சில குறைகள்:

    1. இவைகள் பொதுவாக வீட்டின் ஒரு பகுதியிலோ அல்லது சில பகுதிகளிலோ அமைக்கப்படுவதால் அவை மழலையர்களின் கற்றலுக்கோ மனவளர்ச்சிக்கோ உகந்ததாக இருப்பதில்லை.
    2. பல இடங்களில் காற்று வெளிச்சம் ஆகியவை போதுமானதாக இருப்பதில்லை. இவைகள் மழலையர்களின் உடல் மனவளர்ச்சிக்கு தவறான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.
    3. பல இடங்களில் சிறிய அறைகளில் அதிகமான மழலையர்களை வைத்திருப்பதால் அவர்கள் செயற்பாட்டிற்கான இடங்கள் கிடைப்பதில்லை. பல மணி நேரங்கள் ஒரே இடத்தில் அமர்ந்து இருப்பதற்கான சூழ்நிலை ஏற்படுகின்றது.
    4. பல இடங்களில் பயிற்சிபெற்ற மேற்பார்வையாளர்களோ அல்லது ஆசிரியர்களோ இருப்பதில்லை. ஆகவே மழலையர் மனவளர்ச்சி பற்றி அறியாது பள்ளிகள் “காப்பகங்களாகவோ” அல்லது நேரத்தை போக்குவதற்கான சில விளையாட்டு மைதானங்களாகவோ ஆகிவிடுகின்றன.
    5. மழலையர்களுக்கு கற்றலுக்கு ஏதுவான மொழி “தாய்மொழியே” என ஆராய்ச்சிகள் சொன்னாலும், பெற்றோர்களின் விருப்பங்களுக்காகவும், வியாபார மேன்மைக்காகவும் பிறமொழிசார்ந்த கல்வியில் கற்றலுக்கான சூழ்நிலை ஏற்படுத்தப்படுகின்றது. இது மழலையர்களுக்கு ஒருங்கிணைத்த உடல் மனவளர்ச்சிக்கு ஏதுவாக அமைவதில்லை. ஆயினும், சமுதாயப் போக்கில் நீந்திச்செல்லும் பெற்றோர்கள் பிறமொழிக் கல்விக்கு அதிகமாக வழிமொழிகின்றனர்.
    6. மழலையர்களுக்கு விளையாட்டு முறைகளில் கற்றலுக்கு உகந்த பாதுகாப்பான ஆர்வத்தைத் தூண்டுகின்ற பொருள்களும் பொம்மைகளும் உபகரணங்களும் இருப்பதில்லை.
    7. மழலையர்களின் மனநிலைகளுக்குத் தனிச்சுதந்திரம் இன்றி கட்டுப்பாடான சூழ்நிலைகளில் விதிக்கப்பட்ட முறைகளைப் பின்பற்றவேண்டிய கட்டாயத்தில் மன அழுத்தம் அமைந்த சூழ்நிலைகளில் வளர்கின்றனர்.

    பொதுவாக சில மழலையர் காப்பகங்களில் (Day-Care Center /Creche ) குழந்தைகளை தூங்கவைப்பதற்காக சில இருமல் மருந்துகளை உபயோகிப்பதாகவும் பல மாதங்கள் முன்பு செய்திகள் வந்தன. இந்த நிகழ்வுகளுக்குக் காரணம் இந்த மாதிரியான நிலையங்களை சட்ட ரீதியாக ஒழுங்கு படுத்தாததுதான். இம்மாதிரியான காப்பகங்களை மருத்துவ மேற்பார்வைக்கான வசதிகள், சுகாதாரத் தரங்களுக்கான மேற்பார்வைகள் மற்றும் நல்ல முறையில் வழிநடத்துவதற்கான குறிப்பேடுகள் ஆகியவை இருத்தல் அவசியம். மழலைப் பருவத்தின் வளர்ச்சி பல நேரங்களில் வாழ்க்கை முழுவதற்கும் தேவையான நிரந்தரமான உணர்வுப் பதிவேடுகளை மூளையில் பதிப்பதால் இந்த பருவத்தை மென்மையாகவும் ஆரோக்கியமாகவும் கையாளுதல் அவசியம். கற்றல் என்பது வெறும் புத்தக அறிவு மட்டும் அல்ல. உணர்வுகளின் தாக்கங்கள் உள்மனதில் ஏற்படுத்தும் பதிவுகளும் வாழ்க்கை வாழ்வதற்கான கற்றலே ஆகும். ஆகவேதான் இந்தப் பள்ளிகளில் ஆக்கப்பூர்வமான (positive atmosphere)  சூழ்நிலைகளை உருவாக்குதலும் காத்தலும் மேம்படுத்துதலும் அவசியம்.

    சிறுவயதில் பள்ளிகளிலோ அல்லது வீடுகளிலோ ஏற்படும் சிறிய உணர்வுத் தாக்கங்கள்கூட அவர்களுடைய பிற்கால வாழ்க்கைப் போக்கையும் திசையையும் மாற்றி அமைக்க வாய்ப்புகள் உள்ளதாக மனநல மருத்துவர்கள் கருதுகின்றனர். ஆகவே இந்தப் பள்ளிகளிலும் காப்பகங்களிலும் தாய்மை உணர்வோடு கூடிய தொழில் திறன்களால் வலுப்படுத்தப்பட்ட, சட்டங்களால் அங்கீகரிக்கப்பட்ட, மன – உடல் நலன்களைப் பேணக்கூடிய சூழ்நிலைகளை அமைத்தலும் போற்றுதலும் அவசியமாகின்றது. இந்த நிலையில் மழலையர் என்ன கற்க வேணும் எவ்வாறு கற்கவேண்டும் என்பதைத் தொடர்ந்து பார்ப்போம்.

    (தொடரும் )

    Share
  • சொல்லுக சொல்லை…

    -முனைவர் க.துரையரசன்

    சொல்லாத சொல்லிற்கு நீ எஜமான்; சொன்ன சொல்லுக்கு அது எஜமான் – இது நூற்றுக்கு நூறு உண்மை என்று அனுபவம் கூறுகிறது. இதைத்தான் வள்ளுவர்,

    யாகவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
    சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.   (குறள். 127) என்று கூறியுள்ளார்.  பொருளற்ற சொற்களைப் பயன்படுத்தக்கூடாது என்பதைத் தொல்காப்பியர்,

    “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே”  (தொல். பெயரியல் நூ. 1)

    thiruஎன்று வலியுறுத்துகிறார். இத்தகு சொற்பயன்பாடு குறித்த வள்ளுவர் கருத்துகளை இக்கட்டுரை முன்வைக்கிறது.

    ஒத்த கருத்தை வலியுறுத்துவன:

    அதிகாரந்தோறும் பத்து குறள்கள் என்று வள்ளுவர் தான் வகுத்துக் கொண்ட வரையறைக்குள் தாம் கூறவந்த பொருண்மையைக் கூறிமுடிக்க முடியாத சில இடங்கள் இருந்ததாகவே கருத வேண்டியுள்ளது. அதனால்தான் சில பொருண்மைகள் குறித்து ஒன்றுக்கு மேற்பட்ட அதிகாரங்களை வள்ளுவர் படைத்துள்ளார். ஒத்தக் கருத்துடைய அதிகாரங்களில் நுணுக்கமான பொருள் வேறுபாடுகள் இருந்தாலும் அவற்றை நாம் ஒரு பொருள் பற்றியவையாகவே கருத வேண்டும். அப்பொழுதுதான் வள்ளுவர் கூறவந்த பொருண்மை முழுமை அடைவதாக இருக்கும். அவ்வகையில் சொற்களைப் பயன்படுத்துவதில் உள்ள முக்கியத்துவம் குறித்து வள்ளுவர் ஐந்து அதிகாரங்களைப் படைத்துள்ளார். அவை:

    • இனியவை கூறல்   –   அதிகாரம் 10
    • பயனில சொல்லாமை – அதிகாரம் 20
    • சொல்வன்மை   –   அதிகாரம் 65
    • அவையறிதல்   –   அதிகாரம் 72
    • அவையஞ்சாமை –    அதிகாரம் 73

    இங்ஙனம் ஒத்தப் பொருண்மையுடைய அதிகாரங்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.

    நட்பு:

    இப்பொருண்மையில் 5 அதிகாரங்கள் அமைந்துள்ளன. அவை:

    • சிற்றினம் சேராமை –     அதிகாரம் 46
    • நட்பு      –     அதிகாரம் 79
    • நட்பாராய்தல்      –     அதிகாரம் 80
    • தீநட்பு      –     அதிகாரம் 82
    • கூடாநட்பு      –     அதிகாரம் 83

    குறிப்பறிதல்:

    இப்பொருண்மையில் 3 அதிகாரங்கள் அமைந்துள்ளன. அவை:

    • குறிப்பறிதல்      –     அதிகாரம் 71
    • குறிப்பறிதல் –     அதிகாரம் 110
    • குறிப்பறிவுறுத்தல் –     அதிகாரம் 128

    தெரிந்துசெயல்: 

    இப்பொருண்மையில் 3 அதிகாரங்கள் அமைந்துள்ளன. அவை:

    • தெரிந்துசெயல்வகை –     அதிகாரம் 47
    • தெரிந்துதெளிதல் –     அதிகாரம் 51
    • தெரிந்துவினையாடல் –     அதிகாரம் 52

    வினை:

    இப்பொருண்மையில் 3 அதிகாரங்கள் அமைந்துள்ளன. அவை:

    • வினைத்தூய்மை –     அதிகாரம் 66
    • வினைத்திட்பம் –     அதிகாரம் 67
    • வினைசெயல்வகை –     அதிகாரம் 68

    இல்வாழ்க்கை: 

    இப்பொருண்மையில் 2 அதிகாரங்கள் அமைந்துள்ளன. அவை:

    • இல்வாழ்க்கை    –  அதிகாரம் 5
    • வாழ்க்கைத் துணைநலம் –  அதிகாரம் 6

    கல்வி: 

    இப்பொருண்மையில் 2 அதிகாரங்கள் அமைந்துள்ளன. அவை:

    • கல்வி –     அதிகாரம் 40
    • கல்லாமை – அதிகாரம் 41

    குடிமை: 

    இப்பொருண்மையில் 2 அதிகாரங்கள் அமைந்துள்ளன. அவை:

    • குடிமை –     அதிகாரம் 96
    • குடிசெயல்வகை –     அதிகாரம் 103

    கொல்லாமை: 

    இப்பொருண்மையில் 2 அதிகாரங்கள் அமைந்துள்ளன. அவை:

    • புலால் மறுத்தல் –     அதிகாரம் 26
    • கொல்லாமை –     அதிகாரம் 33

    நெஞ்சு: 

    இப்பொருண்மையில் 2 அதிகாரங்கள் அமைந்துள்ளன. அவை:

    • நெஞ்சொடு கிளத்தல் –     அதிகாரம் 125
    • நெஞ்சொடு புலத்தல் –     அதிகாரம் 130

    படை: 

    இப்பொருண்மையில் 2 அதிகாரங்கள் அமைந்துள்ளன. அவை:

    • படைமாட்சி –     அதிகாரம் 77
    • படைச்செருக்கு –     அதிகாரம் 78

    புணர்ச்சி: 

    இப்பொருண்மையில் 2 அதிகாரங்கள் அமைந்துள்ளன. அவை:

    • புணர்ச்சி மகிழ்தல் –     அதிகாரம் 111
    • புணர்ச்சி விதும்பல் –     அதிகாரம் 129

    புலவி: 

    இப்பொருண்மையில் 2 அதிகாரங்கள் அமைந்துள்ளன. அவை:

    • புலவி –     அதிகாரம் 131
    • புலவி நுணுக்கம் –     அதிகாரம் 132

    பெரியார் தொடர்பு: 

    இப்பொருண்மையில் 2 அதிகாரங்கள் அமைந்துள்ளன. அவை:

    • பெரியாரைத் துணைக்கோடல் அதிகாரம் 45
    • பெரியாரைப் பிழையாமை –     அதிகாரம் 90

    மேற்காண் செய்திகளின் அடிப்படையில் நோக்கும்பொழுது சொற்பயன்பாடு, நட்பு ஆகிய இரண்டு பொருண்மைகளுக்கு மட்டுமே தலா ஐந்து அதிகாரங்களை வள்ளுவர் படைத்துள்ளார். பிற பொருண்மைகளுக்கு இரண்டு அல்லது மூன்று அதிகாரங்களைப் படைத்துள்ளார் என்பதைக் காணமுடிகிறது.

    இனி, கட்டுரையின் பொருண்மையான சொற்பயன்பாடு குறித்துத் தொடர்ந்து நோக்கலாம். இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறியுள்ளதைப்போல இனியவை கூறல், பயனில சொல்லாமை, சொல்வன்மை, அவையறிதல், அவையஞ்சாமை ஆகிய ஐந்து அதிகாரங்களில் கூறப்பட்டுள்ள செய்திகள் ஒத்த தன்மையுடையவை அல்லது ஒத்தப் பொருண்மையுடையவை என்பதை ஆராய்வோம்.

    இனியவை கூறல்: 

    ஒருவன் இனிமையான சொற்களையே கூறவேண்டும் என்ற கருத்தை வற்புறுத்தும் வள்ளுவர் இனிய சொற்கள், அன்பு கலந்தவை – ஈதலின் நன்று – அறச்செயல் – அணிகலன் – இம்மையும் மறுமையும் இன்பம் பயப்பன – என்றெல்லாம் கூறி,

    இனிய உளவாக இன்னாத கூறல்
    கனியிருப்பக் காய்கவர்ந் தற்று. (குறள். 100) என்று வேதனையுடன் வினா எழுப்புகிறார்.

    பயனில சொல்லாமை: 

    இனிய சொற்களைக் கூறவேண்டும் என்று வலியுறுத்திய வள்ளுவர் பயனற்ற சொற்களைப் பயன்படுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்துகிறார். பயனில சொல்லுவான், எல்லாராலும் எள்ளப்படுவான் – நண்பர்களுக்குத் தீமை செய்வான் – அறம் இல்லாதவன் – மதிப்புக் கெடும் – மனிதன் என்று கூறார் – மக்கட்பதடி என்பர் – அறிவுடையோர் சொல்லார் – என்றெல்லாம் கூறி,

    சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க
    சொல்லின் பயனிலாச் சொல்.     (குறள். 200) என்று அறுதியிட்டுக் கூறுகிறார்.

    சொல்வன்மை: 

    இனியவற்றைக் கூறுக, பயனில கூறற்க என்ற வள்ளுவர் சொல்வன்மையை நாநலம் என்றியம்புகிறார். நாநலம், எல்லா நலத்துள்ளும் உயர்ந்தது – ஆக்கமும் கேடும் வரும் – கேட்பாரைப் பிணிக்கும் – கேளாரைக் கேட்பிக்கும் – அறம் பொருளை விடச் சிறந்தது – சொலல் வல்லனை இகல்வெல்லல் அரிது – உலகம் ஏவல் கொள்ளும் என்றெல்லாம் கூறி,

    சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
    வெல்லும்சொல் இன்மை அறிந்து. (குறள். 645)

    என்று சொற்களைத் தேர்ந்து – சொல்லும் சொல்லை வெல்லும் சொல் இல்லை என்று அமையுமாறு சொல்ல வேண்டும் என்று கூறி சொல்வன்மையை வள்ளுவர் விளக்குகிறார்.

    அவையறிதல்: 

    இடம், பொருள், ஏவல் அறிந்து பேசவேண்டும் என்பர் அனுபவசாலிகள். இதை வள்ளுவர் அவையறிதலில் நன்கு விளக்கிக் கூறியுள்ளார்.

    அவையறிந்து பேசவேண்டும் – ஆராய்ந்து பேசவேண்டும் – இடமறிந்து பேசவேண்டும் – அறிவுடையாரிடத்து அறிவுடையோராயும் அறிவிலிகளிடத்து அறிவிலியாயும் பேசவேண்டும் – அறிவில் மிக்கோர் கூடியுள்ள அவையில் முந்திச் சென்று பேசற்க – என்றெல்லாம் கூறிய வள்ளுவர்,

    அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தமகணத்தார்
    அல்லார்முன் கோட்டி கொளல். (குறள். 720)

    என்பதன் மூலம் ஒத்த அறிவுடையாரிடத்து ஒத்த அறிவுடைய செய்திகளைப் பேசவேண்டும். இவ்வரன்முறை மீறினால் சொல்லப்படும் செய்தி தூய்மையற்ற முற்றத்தில் (தரையில்) கொட்டிய அமிழ்தத்திற்கு ஒப்பாகும் என்கிறார்.

    அவையஞ்சாமை: 

    அவையில் அஞ்சாமல் பேசும் ஆற்றல் மிக்கோர் வாய்தவறியும் பிழை சொல்லார். அவையிலஞ்சாமல் கற்றார் மனங்கொள்ளுமாறு கூறுவோரே கற்றாருள் கற்றார் ஆவர். போர்க்களத்தில் அஞ்சாமல் சென்று சாகத்துணிந்தவர் பலரிருக்கச் சான்றோர் அவைக்களத்தில் அஞ்சாமல் சென்று உரைப்போர் ஒரு சிலரே என்று வள்ளுவர் அவையஞ்சா ஆற்றல் மிக்காரைப் புகழ்ந்துரைப்பர்.

    அவையஞ்சி உரைக்குந்திறனற்றோரை, போரிட அஞ்சுந்தன்மை கொண்டானிடம் உள்ள வாள் போன்றதே அவையஞ்சுவான் கற்ற கல்வி – தாம் கற்றவற்றைக் கல்வித்திறமிக்க அவையினில் உரைக்க இயலாதவர் கற்ற கல்வி பயனற்றது – அத்தகையவன் கல்லாதவரை விடக் கீழானவன் என்றெல்லாம் கூறும் வள்ளுவர் அவையஞ்சுவோர் உயிரோடு வாழ்ந்தாலும் இறந்தவர்க்கு ஒப்பானவர் என்பதை,

    உளர்எனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்
    கற்ற செலச்சொல்லா தார்.   (குறள். 730) என்ற குறளில் பதிவு செய்துள்ளார்.

    இங்ஙனம் மேற்கண்டவாறு வள்ளுவர் சொல்லும் சொல்லின் முக்கியத்துவத்தை வள்ளுவர்  இனியவை கூறல், பயனில சொல்லாமை, சொல்வன்மை, அவையறிதல், அவையஞ்சாமை ஆகிய ஐந்து அதிகாரங்களில் விளக்கமுற எடுத்துரைத்துள்ளார். ஆகையால் வள்ளுவரைப் பின்பற்றி சொல்லும் சொல்லை வெல்லும் சொல்லில்லை என்று அனைவரும் பாராட்டத்தக்க வகையில் பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றிக்கு வித்திடுவோம்.

    Share
  • குறளின் கதிர்களாய்…(153)

    –செண்பக ஜெகதீசன்

    முகத்தின் முதுக்குறைந்த துண்டோ வுவப்பினுங்
    காயினுந் தான்முந் துறும். (திருக்குறள் -707: குறிப்பறிதல்) 

    புதுக் கவிதையில்…

    உவகையிலும் வெறுப்பினிலும்,
    உண்மையைக் காட்டிவிடும்
    மனிதனின் முகம்… 

    அம்முகத்தைவிட
    அறிதிறம் மிக்கது
    எதுவுமில்லை…! 

    குறும்பாவில்…

    உண்மையைக் காட்டிவிடும் மனிதமுகம்
    அவன் மகிழ்ச்சியிலும் வெறுப்பினிலும்,
    அதைவிட அறிதிறமிக்கது ஏதுமில்லை…! 

    மரபுக் கவிதையில்…

    மகிழ்ச்சியில் மனிதன் இருந்தாலும்,
         -மற்றவர் மீது வெறுப்பதையே
    அகத்தில் வைத்துக் கொண்டேதான்
         -அழுத்த மாக மறைத்தாலும்,
    முகமது காட்டிக் கொடுத்துவிடும்
         -மனிதனின் உண்மை நிலையினையே,
    அகமதைக் காட்டும் முகத்தைப்போல்
         -அறிதிற மிக்கது வேறிலையே…! 

    லிமரைக்கூ…

    மகிழ்ச்சி வெறுப்பின் எல்லை
    மறைக்காது காட்டும் மனிதமுகம்போல் வேறு
    அறிதிறம் மிக்கது இல்லை…! 

    கிராமிய பாணியில்…

    காட்டிக்குடுக்கும் காட்டிக்குடுக்கும்
    மனுசமொகமே காட்டிக்குடுக்கும்…

    அவன்
    சந்தோசமா இருந்தாலும்,
    அடுத்தவன்மேல வெறுப்புலத்தான்
    சங்கடத்தில இருந்தாலும்
    அவன்மொகமே காட்டிக்குடுக்கும்… 

    எதுவுமில்ல எதுவுமில்ல
    அதுபோல எதயுமே கண்டுபுடிக்கும்
    கருவிதான் எதுவுமேயில்ல…

    காட்டிக்குடுக்கும் காட்டிக்குடுக்கும்
    மனுசமொகமே காட்டிக்குடுக்கும்…!

     

     

     

    Share
  • மகாத்மா

     

     

    அஹிம்ஸையை நிலைநிறுத்தி
    ஆங்கிலேயரை ஓட ஓட விரட்டி
    இந்தியத் தலைமகனாய் நின்று
    ஈன நிலையை அறவே கொன்று
    உலக உத்தமனாய் நீ ஒளிர்ந்து
    ஊழ்வினை தீர்த்த மகாத்மாவே
    எங்கள் அன்னை பதறித் துடித்தாளே
    ஏறு போன்ற மகன் மார்புச் சிதறக்
    கண்டு
    ஐயா நீ துயர் தந்து மறைந்தாய் இன்று
    ஒற்றுமைக்கு வித்திட்ட குணவானே
    ஓரிரு நிமிடமாவதுனை நினைப்போம்
    மீண்டும் நீதான் மீண்டு வருவாயா
    மலர்ந்து பாரதம் அமைதி கண்டிட!

    – சித்ரப்ரியங்கா ராஜா,
    திருவண்ணாமலை.

    Share
  • படக்கவிதைப் போட்டி 96-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    நீரில் நின்றாடும் இந்தக் கனிமழலையைக் காமிராவில் அள்ளிவந்திருக்கிறார் திரு. பிரேம்நாத் திருமலைசாமி. இந்த எழிலார் படத்தைப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்திருக்கிறார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். ஒளி ஓவியருக்கும் தேர்வாளருக்கும் நம் நன்றி!

    babyplaying

    நீரலையில் தன் எழிலுடம்பை நிறுத்தி, கைகளை அகலவிரித்து இந்தப் பிஞ்சுக் குழந்தை நெஞ்சு கனிந்து இரசிப்பது காகித ஓடத்தையா? அல்லது நீர்த்துளிகளின் துள்ளலையா? விடைபகரத் தளர்நடை பயின்று வா தளிரே!

    ”நம் வாழ்க்கை எனும் ஓடமும் நீர்வழிப்படூஉம் புணை போன்றதே!” என்கிறார் வாழ்க்கைப் பாடத்தை முற்றாய்க் கற்றுணர்ந்த கணியன் பூங்குன்றனார்!

    கவிஞர்களின் கற்பனை அலைகள் அடுத்து நம்மைத் தாலாட்டக் காத்திருக்கின்றன. அவற்றில் நீந்திவருவோம்! கவி மாந்திவருவோம்!

    ***

    ”சிறுபிள்ளையை நீரில் நிறுத்தி விளையாடச்சொல்லாதீர்! விளையாட்டு வினையாகிவிடக்கூடும்…கவனம்!” என்று அன்புள்ளத்தோடு பெரியோரை எச்சரிக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    பெரியோரே…

    வெள்ளை யுள்ளப் பிள்ளைக்கு
    வேண்டா மிந்த விளையாட்டு,
    பள்ளம் மேடு தெரியாத
    பருவ மிதிலே பிள்ளைக்குக்
    கள்ளம் கபடம் தெரியாமல்
    கவன மாக வளர்த்தேதான்
    உள்ளம் உயர வைப்பீரே
    உறவா யுள்ள பெரியோரே…!

    ***

    ”குழாய் நீரிலேயே குளித்துப் பழகிய இன்றைய குழந்தைகட்குப் பாய்ந்துவரும் வெள்ளத்தில் குளிப்பதில்தான் எத்தனை மகிழ்ச்சி! அந்தச் சுகத்தினை அனைவரும் அனுபவிக்கத் தேவை கள்ளமற்ற பிள்ளை மனம்!”  என்று அருமையாய் அனுபவமொழி பகர்கின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    குளிப்பதில் சுகம்

    எண்ணெய்குளியல் உடலுக்கு எழுச்சிதரும்..
    எண்ணக்குளியல் மனதுக்கு மகிழ்ச்சிதரும்..

    உடல்சுத்தம்பெற உடல்குளியல் வேண்டுமெனில்..
    உள்ளம்சுகம்பெற மனக்குளியல் தேவையன்றோ!

    தமிழதனைக் கடலாறருவி மலைமடுவென கவிரெலாம்வருணிப்பர்..
    தமிழ்அமுதமெனும் குளம்தனில் மூழ்கிநானும் கவிபாடவிரும்புகிறேன்!

    கலைந்த தண்ணீரில் எண்ணங்கள் அலையாய்த் தோன்ற..
    தெரித்த திவலைகள் எழுத்துக்களாய் ஏடுகளில்விழ..

    குதித்து மூழ்கி முத்தெடுப்பவர்க்கிடையில்..
    குளித்து மகிழ்ந்த அனுபவத்தைப் பாடுகிறேன்!

    மழைமுகிலில் பிறந்து, ஆர்ப்பரித்து அடிபட்டு..
    மண்மடியில் மெளனமாக தவழும் தண்ணீரோ..

    இளைப்பாற வந்ததுஓர் இடத்தினில் நிலையாகயதில்..
    குளித்துமகிழ மண்ணுயிர்களுக்கு மட்டான மகிழ்ச்சிதரும்!

    மலைமுகட்டில் பொழிந்த மழைத்துளிகள்..
    மரணிக்காமல் தரணிக்கு வந்து கழனியில்தேங்க..

    தவளைஓசையிட தண்ணீரில்நாம் கூத்தாடுவது..
    குவளையில் குளிப்பதைவிட நிலையான ஆனந்தமே!

    பள்ளம் பாய்ந்தோடும் பாறைநீரில்..
    குடைந்து நீராடும் குட்டிப்பையன்..

    குழாய்நீரில் குளித்தே பழகியவனானதால்..
    குளத்தைப் பார்த்ததும் துள்ளிக் குதிப்பானோ!..

    குளிர்மிகு தண்ணீரில் ஆடும் குழந்தைபெறும்..
    களிப்பாலென் னானந்தக்கண்ணீரும் தண்ணீரோடு மறையுது!

    தொட்டித் தண்ணீலே குளித்திருக்கோமானால்..
    ஒட்டி உடல்நனையக் ஒருநாளும் குளித்ததில்லை!

    ஆழிநீர் அருவிநீரில் குளித்தாலும் அலப்பரியாமல்..
    ஆழமாய் கால்பதித்துக் குளிப்பதில்தான் சுகம்!

    வெட்டவெளிநீரி லொன்றில் தேகமமமிந்தவுடன்..நம்
    வேதனைதான் பறந்திடுமே பனிபோல!

    மெல்லமெல்ல கண்களைமூடி மூழ்கும்போது..
    இருள்விழியினுள்ளேயொரு புரியாத ஒளிதெரிகிறது!

    குழந்தையுள்ளம் வேண்டுமப்பா எதையுமன் போடுரசிக்க..
    குதூகலமாய் குளிப்பதற்க்கே யந்தகுணமிக அவசியம்!………..

    ***

    நீரில் குளிப்பது குறித்து இருவேறு கருத்துக்களைப் பகிர்ந்திருக்கின்றார்கள் கவிஞர்கள் இருவரும்!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்வாகியிருப்பது அடுத்து…

    நீரின்றி அமையாது அகிலம்!
    நீயின்றிச் சுவைக்காது குடும்பம்!
    கண்ணில் நீர்வந்து அன்பைப்
    புரிய வைக்கும்!
    மகனாய் நீ வந்து வாழ்க்கையைப்
    புரிய வைத்தாய்!
    மழையாய் மண்ணில் வந்து
    நீர் பயிரை வாழ வைக்கும்!
    பெண்ணில் கருவாய் உருவாகி
    அன்னைக்குப் பெருமை தந்தாய்!
    சாதி மத பேதம் தெரியாது
    நீருக்கும், தேனாய்த் தித்திக்கும் பிள்ளைக்கும்!
    நீரிடம் நீ கற்றுக் கொள்ள வேண்டியது
    எத்தனை! எத்தனை!
    கவனமாய் கேளடா நான்
    சொல்லும் கருத்தினை!
    நதியாய் வந்து சொல்லும்
    பாடம் அமைதி!
    அருவியாய் விழுந்து சொல்லும்
    பாடம் ஆற்றல்!
    வெள்ளமாய் ஓடிச் சொல்லும்
    பாடம் வேகம்!
    கடலில் சங்கமித்துச் சொல்லும்
    பாடம் நட்பு!
    அலையாய் எழுந்து சொல்லும்
    பாடம் முயற்சி!
    மழையாய் பொழிந்து சொல்லும்
    பாடம் கொடை!
    நீரைத் தெரிந்து கொண்டால்
    நீதி புரிந்து விடும்!
    தெளிந்த நீரோடை உன்
    மனது தம்பி!
    அழுக்கைத் தான் ஏற்று
    தூய்மை நமக்குத் தரும்
    தண்ணீரைப் போற்றடா தம்பி!

    நீரின்றி உலக வாழ்வு அமைவதில்லை. மழலையின்றி மனித வாழ்வில் மகிழ்ச்சியில்லை என்பது மாந்தகுலம் அறிந்ததே.

    ”அருவி நீரிடம் ஆற்றலை அறி; நதி நீரிடம் அமைதியை அறி; வெள்ள நீரிடம் வேகத்தை அறி! மழை நீரிடம் கொடையை அறி!” என்று நீரில் நின்றிருக்கும் சின்னஞ்சிறு மழலையிடம் அரிய பெரிய வாழ்வியல் உண்மைகளை எளிமையாய் உரைத்திருக்கும் திரு. பழ. செல்வமாணிக்கத்தின் கவிதை இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தேர்வாகியிருக்கின்றது. கவிஞருக்கு என் கனிவான பாராட்டு!

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    170129 -Yogacharya -Dialogue with Arjuna

    ”நூறைநீ வென்றிட ஈரே(ழு) உலகாள்வாய்
    மாரில் கணைதைத்து மாளுங்கால் -வீராநீ
    சொர்கம் புகுவாய் சுதாரித்(து) எழுந்திரு
    தர்கம் புரிதல் தவிர்”….

    ”நாணை இழுத்திட நாணாதே நண்பனே
    ஆனை படுத்தால் அசுவமட்டம் -சேனைக்
    களம்நீங்க செல்லாத காசாவாய், வேந்தருன்
    உளம்நோக வைப்பார் உவந்து”….

    ”ஈங்கிதனைக் கேட்டோய் இதன்பெயர் கேண்மக்கள்
    சாங்கியம் என்போர், இனியடுத்து -தாங்கிய
    கர்மத் தளைகளின் கட்டவிழ்க்கும் யோகத்தின்
    மர்மம் உரைப்போம் உமக்கு”….கிரேசி மோகன்….!

    Share
  • பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் – பிரபஞ்சம் எத்தனை வேகமாக விரிகிறது என்பதற்குப் பேரொளி மின்மினிகள் [Quasars] விடை தருகின்றன

    How fast is the universe expanding?

    வெகு விரைவாய் விரியும் பிரபஞ்சம்

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    ++++++++++++++++++
     ++++++++++++++++++

    Image result for Expansion of universe

    விரியும் பிரபஞ்சத்தைப் பற்றி அறிய ஒரு பிறவிக் காலம் முழுதும் அர்ப்பணித்தாலும் போதாது! மறைந்து கிடக்கும் அகிலத்தின் மர்மங்கள் சிறிது சிறிதாகவே மலர்கின்றன!  அநேக புதிய புதிர்களை வரப் போகும் எதிர்கால யுகங்களுக்காக, இயற்கை தனியாக  வைத்துள்ளது! எல்லா மர்மங்களையும் ஒரே காலத்தில் விடுவிக்க, இயற்கை ஒருபோதும்  நம்மை விடுவதில்லை

    ஸெனேகா [Seneca (First Century)]

    புதிய பிரபஞ்சவியல் ஆய்வுத் திட்டம் [New Cosmology Project]

    2017 ஜனவரியில் ஜெர்மன் மாக்ஸ் பிளான்க் ஆய்வுக்கூடம் மற்ற உலக நாட்டு வானியல் ஆய்வுக் குழுவினரோடு இணைந்து, ஹப்பிள் நிலை இலக்கத்தைப் [Hubble Constant] புதிய முறையில் துல்லியமாய் அளக்க முயன்று கணித்துள்ளார்கள்.  “ஹப்பிள் நிலை இலக்கம்” நமது பிரபஞ்சம் எத்தனை வேகமாக விரிவடைந்து வருகிறது என்பதைக் குறிப்பிடுகிறது. புதிய அளவீடு சமீபத்தில் நிலைத்த அகிலவியல் மாடல் [Standard Cosmological Model] மூலமாய்க் கணித்த பெரும்பான்மை வேக வீத அளவுகளுக்குச் சவால் விடுவித்துள்ளது.

    (1889-1953)

    பிரபஞ்சத்தில் ஒளியண்டங்கள் எவ்வளவு தூரத்தில் உள்ளன என்று விண்ணோக்கி மூலம் கணிக்கும் போது, நமது பிரபஞ்சம் விரிகிறது போன்ற பெரும் கண்டுபிடிப்புகளுக்கு வழி பிறக்கிறது.  பிரபஞ்ச விரிவு வீதம் தற்போது “லாம்பிடா சிடிஎம்  [Lambda CDM]” எனப்படும் நிலைப்பு அகிலவியல் மாடல் மூலம் [Standard Cosmological Model] 72 km per sec per megaparsec [a megaparsec is about 3.3 million light-years] [42 miles per sec per megaparsec] கணித்து மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.  இந்த வேக வீதமேஹப்பிள் நிலை இலக்கம் [Hubble Constant] என்று கூறப்படுகிறது.  இந்த ஹப்பிள் நிலை இலக்கம் சுமார் ஒரு நூற்றாண்டு காலமாய்ச் செம்மைப் படுத்தப் பட்டு வருகிறது.  இப்போதைய புதிய தனித்த கணிப்பு மூலம் இந்த இலக்கம் 3.8% துல்லிமத்தில் சீர்மைப் படுத்தப்பட்டுள்ளது. இந்தப் புதிய அறிவிப்பு ராயல் வானியல் குழுவினர்  [Royal Astronomical Society]  இதழில் 2017 ஜனவரி 27 ஆம் தேதி வெளிவந்துள்ளது.

    Image result for Expansion of universe

    Click to Enlarge

    1920 ஆண்டுகளில் முதன்முதல் பெல்ஜிய அகிலவியல் விஞ்ஞானி ஜார்ஜிஸ் லெமெய்டர் [Georges Lamaitre] பெரு வெடிப்புக்குப் பிறகு பிரபஞ்சம் விரிவாகி வருகிறது என்று அறிவித்தவர்.  ஏறக்குறைய அதே சமயத்தில் அமெரிக்க வானியல் விஞ்ஞானி எட்வின் ஹப்பிள் [Edwin Hubble] ஒளிமந்தைகளின் [Galaxies] போக்கைத் தொலைநோக்கியில் ஆராய்ந்து, அவை நமது பால்வீதி காலாக்ஸியை விட்டு விலகிச் செல்வதாகக் கண்டார்.  மேலும் பூமிக்கு வெகு தூரத்தில் உள்ள ஒளிமந்தைகள் மிக விரைவாய் விலகிச் செல்வதையும் [Accelerating Expansion] அறிவித்தார்.

    Image result for quasars

    காலப் போக்கில் ஹப்பிள் தொலைநோக்கி உட்பட விண்ணோக்கிச் சாதனங்கள் செம்மைப்படுத்தப் பட்டன. இப்போது புதிய முறையானஈர்ப்பியல் குவிநோக்குக் காட்சி [Gravitational Lensing]  மூலம் துல்லியமாகப் பிரபஞ்ச விரிவு வேக வீதத்தைக் கணித்தார்கள்.  ஹப்பிள் நிலை இலக்கத்தை அளக்க ஈர்ப்பியல் குவிநோக்கில் ஐந்து பேரொளி மின்மினிகளின் [Quasars] ஒளியை ஆய்வு செய்தனர்.  குவசார் என்பது பன்மடங்கு ஒளித்திரட்சி கொண்ட குட்டி விண்மீன் போன்றது. ஒளிமந்தை மையத்தில் உள்ள பெருநிறைக் கருந்துளைகளே [Supermassive Black Holes] குவசார்ஸ் என்று குறிப்பிடப் படுகின்றன.  குவசார்ஸ் பேரளவு மின்காந்த கதிர்ச்சக்தியை வெளியாக்குகிறது.

    Image result for Expansion of Universe Nova

    பேரொளி மின்மினி [Quasar]

    மின்மினிகளின் ஒளித்திரட்சி [Luminosity of Quasars] காலப் போக்கில் மங்கிப் போய் விட்டுவிட்டு மாறுபடுகின்றன.  ஈர்ப்பியல் குவிநோக்கில் ஒவ்வோர் குவசார் காட்சியும் தாமதமாய்த் தெரிகிறது.  குவசாரின் ஒவ்வோர் காட்சிப் பயண தூரம் பிரபஞ்ச விரிவைப் பொருத்தது.  அதாவது ஹப்பிள் நிலை இலக்கைப் பொருத்தது.  பிரபஞ்ச விரிவு வீதம் தற்போது “லாம்பிடா சிடிஎம்  [Lambda CDM]” எனப்படும் நிலைப்பு அகிலவியல் மாடல் மூலம்[Standard Cosmological Model] 72 km per sec per megaparsec [a megaparsec is about 3.3 million light-years] [42 miles per sec per megaparsec] கணித்து மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.  இந்த வேக வீதமே ஹப்பிள் நிலை இலக்கம் [Hubble Constant] என்று கூறப்படுகிறது.

    Image result for quasars

    Click to Enlarge

    பிரபஞ்சத்தில் பெரு வெடிப்பிற்குப் பின் விளைந்த புரட்சி!

    பெரு வெடிப்புக்குப் பின், பிரபஞ்சத்தில் விளைந்தது மாறுபாடுகள் மிகுந்த மாபெரும்  புரட்சி [Chaos]! எங்கெங்கு நோக்கினும் தாறுமாறு, ஒழுங்கீனம்! விண்வெளியில்  விண்மீன்கள் இல்லை! பால்மய வீதிகள் இல்லை! காலக்ஸிகள் இல்லை! உயிரினமோ,  விலங்கினமோ எதுவும் இல்லை! ரசாயனக் கூட்டுகள் கிடையா! அங்கிங்கு எனாதபடி  எங்கும் கதிரெழுச்சிகள்! கதிர் வீச்சுகள்! வெறும் துகள்கள் [Particles]! பரமாணுக்கள் [Sub  atomic particles]! துகள்களின் நாட்டியம்! தொடர்ந்து அவை யாவும் நகர்ந்து முட்டி மோதி,  இணைந்து, பிணைந்து புதுத் துணுக்குகள் உண்டாயின! மோதலில் சில துகள்கள் அழிந்தும் போயின!  எங்கும் தணல், வெப்பம், கற்பனிக்க இயலாத அளவில் புரட்சித் துகள்கள் [Chaotic Particles]  உமிழ்ந்த உஷ்ணம்! அதே கணத்தில் கொட்டும் பேரொளி அருவிகள்! அடுத்து எங்கணும்  எக்ஸ்ரே கதிர்கள் எழுச்சி! மைய மில்லாத, கங்கு கரையற்ற எல்லை மீறிய வெளி!  எங்கெங்கு காணினும் சக்தி மயம்! எந்தெந்த அடிப்படைகளில் பிறக்க முடியுமோ, அந்தந்த  தோற்றங்களில் உருவாகிச் சக்தியின் தாண்டவம்!

    எத்திக்கிலும் விரிவு! வெளியெங்கும் விரிவு! விரிவு! விரிவு! ஈர்ப்பியல் இருப்பினும்  விரிவு, துரித விரிவு! இரப்பர் பலூன் உப்பும் போது, ஒரு புள்ளி அருகிய புள்ளியை  முந்தாமல் ஒன்றாய் விரிவது போல், அகிலத்தின் [Universe] ஒவ்வொரு களமும் தளமும்  விரிந்தது! ஒவ்வோர் அரங்கமும் [Region] ஒன்றை விட்டு ஒன்று விலகி அப்பால் சென்றது!  அடுத்த கணத்தில் நிகழ்ந்தது, தணிப்பு [Cooling]! குளிர்ந்து வெப்பம் தணிந்து ஏராளமான  துகள்கள் சுருங்கி இடவசதி அமைப்பு! விரியும் விண்வெளிச் சக்தியின் உக்கிரத்தைக்  குறைத்து, அகிலத்தில் உஷ்ணமும் குன்றியது!

    gravity-lensing

    Click to Enlarge

    gravitational-lensing-1

    முடிவில் ஒழுங்கீனத் தாண்டவங்களில் விளைந்த புதுத் துணுக்குகளின் பிறப்புகள்  ஒய்ந்தன! அழிவு இயக்கமும் ஓய்ந்தது! ஆனால் விண்வெளியின் விரிவு நிற்காமல்,  தொடர்ந்து விரிந்து கொண்டே பேரொளி மட்டும் மங்குகிறது! மீதப்பட்டுத் தங்கிய பிண்டத்  துணுக்குகள் குளிர்ந்து, உண்டைத் கட்டிகளாகத் திரண்டு வாயு மேகங்களாய் மிதந்தன!  அப்போது பூத ஈர்ப்பியல் விசை [Giant Gravitational Force] எழுந்து மேகங்களை அழுத்திச்  சுருக்கி விண்மீன்கள் தோன்றின! அண்ட கோளங்கள் தோன்றின! காலக்ஸிகள் [Galaxies]  தோன்றின! சூரிய மண்டலங்கள் தோன்றின!

    இருபதாம் நூற்றாண்டில் யூகித்த பெரு வெடிப்பு நியதி!

    பிரபஞ்சத்தின் பிறப்பைப் பற்றி யூகிக்கும் பல கோட்பாடுகளில் ஒன்றான, ‘பெரு வெடிப்பு  நியதியைத் ‘ தற்போது பெரும்பான்மையான விஞ்ஞானிகள் ஒப்புக் கொண்டுள்ளனர்.  அக்கருத்துப்படி ஆதியில் பிரபஞ்சம் பேரளவுத் திணிவுள்ள, மிகத் திட்பமான, வெப்பக்  கட்டியாக [Extremely Dense, Compact & Hot] இருந்தது! 10-20 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு,  ஓர் அகிலப் பெரு வெடிப்பு [Cosmic Explosion] நிகழ்ந்து அதன்பின் பிரபஞ்சம் விரிந்து,  குளிர்ந்து போய் வருகிறது! 1915 இல் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஆக்கிய ‘பொது ஒப்பியல்  நியதியின் தளவியல் சமன்பாடுகளின்’ [Field Equations of General Theory of Relativity]  அடிப்படையில் அந்தக் கோட்பாடு உருவானது!

    Image result for gravity lensing

    ஈர்ப்பியல் குவிநோக்கு  [Gravity Lensing]

    பிரபஞ்சத்தின் தோற்றத்தை விளக்கும் ‘பெரு வெடிப்பு நியதி ‘ [Big Bang Theory] இதுதான்!  பேரளவு உஷ்ண முள்ள, மாபெரும் திணிவும் [Density] பளுவு முள்ள [Mass] ஒரு தீக்கோளத்  தீவிர வெடிப்பின் தொடர் விரிவு! அவ்வெடிப்பில் ஏற்பட்ட ஒழுங்கீனத்தின் பின்  விளைவுகள்! முதலில் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் கூட பெரு வெடிப்பு நியதியை  நம்புவதற்குத் தயங்கினார்! அதற்குப் பதிலாக விரியாத, நிலையான பிரபஞ்ச மாதிரி  அமைப்பை விளக்க முயன்று அவர் தன் சமன்பாடுகளைத் திருத்தினார்! பின்னால் அவ்வாறு மாற்றியதற்கு, ஐன்ஸ்டைன் வருந்தினார்! சில ஆண்டுகளுக்குப் பிறகு 1922 இல்  ரஷ்ய வானியல் நிபுணர் அலெக்ஸண்டர் ஃபிரைட்மன் [Alexander Friedmann (1888-1925)]  பெல்ஜியம் அகிலவியல் ஞானி ஜார்ஜஸ் லெமைட்டர் [Georges Lemaitre (1894-1966)]  இருவரும் பெரு வெடிப்பு நியதியை அறிவித்து, விரியும் பிரபஞ்சத்தை முதன் முதலில்  விளக்கினார்கள்.

    1923 இல் ஐன்ஸ்டைன் மாறாத பிரபஞ்சத்தைப் பற்றி எழுதியதைத் ‘தான்  செய்த மாபெரும் தவறு ‘ என்று ஒப்புக் கொண்டார்! அலெக்ஸாண்டர் ஃபிரைட்மன்  கருத்தை ஏற்றுக் கொண்டு விரியும் பிரபஞ்சக் கோட்பாடைப் பிரதிபலிக்க, ஐன்ஸ்டைன்  தன் சமன்பாடுகளைத் திருத்தி எழுதினார்!

    அமெரிக்க வானியல் நிபுணர், எட்வின் ஹப்பிள் [Edwin Hubble] 1929 ஆம் ஆண்டில் கண்டு  பிடித்த விண்வெளி விந்தை பெரு வெடிப்பு நியதிக்கு ஆணித்தரமான சான்றாக ஆனது!  வெகு தொலைவு காலக்ஸிகள் [Galaxies] விடும் ஒளிநிறப் பட்டையை [Light Spectrum], சக்தி  வாய்ந்த பூதத் தொலை நோக்கி மூலம் ஆராய்ந்த போது, அது செந்நிற விளிம்பை  நோக்கிப் பெயர்வதைக் [Redshift, செந்நிறப் பெயர்ச்சி] கண்டார்! ‘டாப்பிளர் விளைவு ‘ [Doppler  Effect] கூற்றுப்படி செந்நிறப் பெயர்ச்சிக் காலக்ஸிகள் ஒன்றை விட்டு ஒன்று விலகி  அப்பால் போகின்றன என்று தெளிவாக நிரூபிக்கிறது! மேலும் காலக்ஸிகளின் தூரம்  அதிகமாக அதிகமாக, அவற்றின் வேகமும் மிகையாகிறது, என்றும் எட்வின் ஹப்பிள்  கண்டு பிடித்தார்!

    பூதத் தொலைநோக்கியில் பிரபஞ்சத்தை ஆய்ந்த விஞ்ஞானி

    1925 புத்தாண்டு தினத்தில் வாஸிங்டன் D.C. இல் நடந்த அமெரிக்க வானியியல்  குழுவினரின் [American Astronomical Society] முப்பத்தி மூன்றாவது கூட்டத்தில்,  காலிஃபோர்னியாவின் பாஸடேனா [Pasadena] நகரிலிருந்து, நேராக வர முடியாத  ஓரிளைஞரின் விஞ்ஞானத் தாள் மட்டிலும் வாசிக்கப் பட்டது! அப்போதைய உலகப்  பெரும் வில்ஸன் சிகரத்தின் 100 அங்குல எதிரொளிப்பியில் [Mount Wilson 100 ‘ Reflector]  பணி யாற்றிய, 32 வயதுடைய, அமெரிக்க வானியல் விஞ்ஞானி எட்வின் ஹப்பிள் [Edwin  Hubble] ஒரு பூத விண்மீனைக் [Giant Star, Cepheid] கண்டார்! அது ஒளி மலர்ச்சியிலும்,  வடிவிலும் [Luminosity, Size] மாறிடும் விண்மீன் [Variable Star]! ஆகவே காலம் நீடிக்க நீடிக்க,  அவ்விண்மீன் ஒளியின் முழுப் பூரண மதிப்புகள் [Absolute Magnitude] கிடைக்கும்.  ஆன்ரோமீடா [Andromeda or M31] என்று அழைக்கப்படும் அந்த விண்மீன், அகண்ட சுருள்  மேகம் போன்ற ஒரு மாபெரும் நிபுளா [Great Nepula]! அந்த விண்மீன் அகிலத் தூரங்களை  [Cosmic Distances] கணிப்பதற்கு மிகவும் உதவுகின்றது! ஆன்ரோமீடா நமது பால்மய  வீதிக்கும் [Milky Way] அப்பால் வெகு தொலைவில் இருப்பதாக ஹப்பிள் ஐயமின்றி  நிரூபித்துக் காட்டினார்!

    எட்வின் ஹப்பிள் அவரது காலத்திய, மாபெரும் வில்ஸன் நோக்ககத்தின் [Mount Wilson  Observatory] 100 அங்குல தொலை நோக்கியை முதன் முதல் இயக்கி வான மண்டலத்தைத்  துருவி வட்ட மிட்டு, அரிய பல கண்டு பிடிப்புகளை வெளியிட்டவர்! பிரபஞ்சத்தின்  பேரளவு, கட்டமைப்பு, பண்பாடுகள் ஆகியவற்றின் அறிவில் பெருத்த மாறுதல்களை  உண்டாக்கினார்! மாபெரும் வடிவு கொண்ட காலக்ஸிகள் [Galaxies] ‘தீவு அகிலங்கள் ‘ [Island  Universes] என்று ஹப்பிளின் ஆய்வுகள் கூறின! மேலும் ஹப்பிள் பல காலக்ஸிகளின்  வடிவங்களை நோக்கி, அவற்றின் ‘இனப் பகுப்பு ஏற்பாட்டை ‘ [Classification System for the  Galaxies] வகுத்தார். அந்த ஏற்பாடு இப்போதும் ஒப்பிடக் கையாளப் படுகிறது! அவரது  உன்னத ஆக்கம், காலக்ஸியின் தூரத்திற்கும், அது விலகி நகரும் வேகத்திற்கும் உள்ள  ஓர் உடன்பாட்டை 1929 இல் கண்டு பிடித்தது. அதாவது காலக்ஸிகளின் வேகம் அவற்றின்  தூரத்திற்கு நேர் விகிதத்தில் உள்ளது என்று அறிவித்தார்! காலக்ஸிகளின் வேகத்துக்கும்,  தூரத்துக்கும் உள்ள விகிதம் [வேகம்/தூரம்] ‘ஹப்பிள் நிலை இலக்கம் ‘ [Hubble Constant]  என்று வானியலில் குறிப்பிடப் படுகிறது!


    எட்வின் ஹப்பிளின் வாழ்க்கை வரலாறு

    1889 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி அமெரிக்காவில் எட்வின் ஹப்பிள்  மிஸ்ஸொரியில் பிறந்தார். தந்தையார் ஜான் ஹப்பிள் மிஸ்ஸொரியைச் சேர்ந்தவர்.  தாயார் வெர்ஜினியா நெவாடாவைச் சேர்ந்தவர். அவரது குடும்பத்தார் 1898 இல் சிகாகோ  நகரில் குடியேறினர். அங்கே சிறுவன் ஹப்பிள் உயர்நிலைப் பள்ளியில் சிறப்பில்லாமல்  சாதாரண மாணவன் போல் படித்தான். ஆனால் உடல்திறப் போட்டிகளில் தீரனாகப் பெயர்  எடுத்தான்! சிறு வயதில் ஜூல்ஸ் வெர்ன் [Jules Verne], ரைடர் ஹாகார்டு [Rider Haggaard]  ஆகியோர் நாவல், மற்றும் ஸாலமன் சுரங்கங்கள் [Solomon ‘s Mines] போன்ற நூல்களைப்  படித்தான். தாத்தாவின் விருப்பப்படி பனிரெண்டாம் வயதில் செவ்வாய்க் கோளைப் பற்றி  ஹப்பிள் எழுதிய ஓர் அரிய கட்டுரையை ஸ்பிரிங்ஃபீல்டு செய்தித்தாள் வெளியிட்டது!  அடுத்து உதவி நிதி பெற்று சிகாகோ பல்கலைக் கழகத்தில் சேர்ந்து 1910 இல் B.S.  பட்டத்தைப் பெற்றார்.

    கல்வி மேன்மைக்குரிய ரோடெஸ் சன்மானம் பெற்று [Rhodes Scholarship] ஆக்ஸ்ஃபோர்டு  பல்கலைக் கழகத்தின் ராணி கல்லூரியில் மேற்படிப்பு பயில, அவருக்கு ஓர் வாய்ப்புக் கிடைத்தது! ஹப்பிள் இங்கிலாந்துக்குச் சென்றார். அங்கே சட்டப் படிப்பை முடித்து, அமெரிக்காவுக்கு 1913 இல் மீண்டார். அமெரிக்காவில்தான் ஹப்பிள் தனது வானியல் அறிவை வளர்ச்சி செய்ய அநேக வாய்ப்புக்கள் கிடைத்தன.

    மறுபடியும் சிகாகோ  பல்கலைக் கழகத்தில் சேர்ந்து, வானியல் விஞ்ஞானம் பயின்று 1917 இல் Ph.D. பட்டம்  பெற்றார்! 1917-1919 இரண்டாண்டுகள் முதல் உலக யுத்தத்தில் பங்கெடுத்த பின்பு,  அமெரிக்க வானியல் வல்லுநர் ஜார்ஜ் ஹேல் [George Hale (1868-1938)] வேண்டு கோளுக்கு  இணங்கிப் பாஸடேனா, காலிஃபோர்னியாவில் உள்ள [Pasadena, California] வில்ஸன் சிகர  நோக்ககத்தில் [Mount Wilson Observatory] ஆராய்ச்சி செய்ய நுழைந்தார்!

    1970 ஆம் ஆண்டு வில்ஸன் & பால்மர் நோக்ககங்கள் [Mount Wilson & Mount Palmer  Observatories], விஞ்ஞானி ஹேல் நினைவாக ‘ஹேல் நோக்ககங்கள் ‘ [Hale Observatories] என்று  பெயர் மாற்றம் ஆயின! உலகின் பெரிய விண்வெளி நோக்கங்களில் காலிஃபோர்னியா  ஹேல் நோக்ககம் ஒன்று! 1919 இல் அமைக்கப் பட்ட மாபெரும் 100 அங்குல பூதத்  தொலை நோக்கியை ஹப்பிள் இயக்கியதோடு, அடுத்து 200 அங்குலத் தொலை  நோக்கியின் டிசைனுக்கும் உதவி செய்தார்! நிறுவனம் ஆன பிறகு, அதையும் தான்  இறப்பதற்கு முன் [1953] உபயோகித்து ஆய்வுகள் செய்தார்! 1973 ஆண்டு வரை பெரிதாய்க்  கருதப்பட்ட 200 அங்குல தொலை நோக்கி இருந்த இடத்தில், இப்போது மிகப் பெரிய 400  அங்குல தொலை நோக்கி ஒன்று அமைக்கப் பட்டுள்ளது!

    1924 இல் எட்வின் ஹப்பிள் கிரேஸ் பர்க் [Grace Burke] என்னும் மாதை பாஸடேனாவில்  மணந்து கொண்டார். இரண்டு உலக யுத்தங்களிலும் பங்கெடுத்து இடையே 30 ஆண்டுகள்  அண்ட வெளி ஆராய்ச்சிகள் செய்து, ஹப்பிள் 1953 ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதி  மூளை உதிரத் தடைப்பட்டு [Cerebral Thrombosis] பாஸடெனாவில் காலமானார்.

    பிரபஞ்ச விரிவு பற்றி ஐன்ஸ்டைனும், எட்வின் ஹப்பிளும்

    1915 ஆம் ஆண்டில் ஒப்பியல் நியதியை ஆக்கிய ஆரம்ப சமயத்தில் ஐன்ஸ்டைன்  பிரபஞ்சம் நிலையானது என்று நம்பினார்! பெரு வெடிப்பு நியதி வெளியாகி, பிரபஞ்சம்  சோப்புக் குமிழிபோல் உப்பி விரிகிறது என்னும் கருத்தை முதலில் ஐன்ஸ்டைன் ஒப்புக்  கொள்ளத் தயங்கினார்! அவரது பொது ஒப்பியல் நியதித் தளவியல் சமன்பாடுகளின்  தீர்வுகளிலிருந்து பெரு வெடிப்பு நியதி தோன்ற ஓர் கூட்டமைப்பு [Framework] உருவானது.  ஆனால் பல ஆண்டுகளுக்குப் பின் இன்றும் ஒப்பியல் நியதியின் பல விபரங்கள் மாற்றப்  பட்டு வருகின்றன! நியதிச் சமன்பாட்டில் பிரபஞ்சம் விரிகிறதா அல்லது சுருங்குகிறதா  என்பதை விளக்க வந்த இடத்தில், ஐன்ஸ்டைன் ஓர் நிலை யிலக்கத்தைச் [Constant]  சேர்த்ததால், விரிவும் சுருக்கமும் கழிவு பட்டுப் போயின! பின்னால் பிரபஞ்சம் விரிகிறது  என்ற கருத்துக்கள் உறுதியான போது, அகில நிலை யிலக்கத்தைச் [Cosmological Contant]  இடையில் நுழைத்தது, ‘தனது மாபெரும் தவறு ‘ என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஒப்புக்  கொண்டார்!

    aj

    1924 இல் பிரபஞ்சத்தின் பிரம்மாண்டம், அதனுள் ஊர்ந்து செல்லும் எண்ணற்ற  விண்மீன்கள், காலக்ஸிகள் ஆகியவற்றைப் பற்றிய புதிய கருத்துக்கள் பல எழுந்தன!  அமெரிக்க வானியல் வல்லுநர் மெல்வின் ஸ்லிஃபர் [Melvin Slipher], எட்வின் ஹப்பிள் [Edwin  Hubble], மில்டன் ஹுமாஸன் [Milton Humason] மூவரும் அண்டையில் நம் பால்மய வீதியில்  இருப்பதாக எண்ணி யிருந்த சில நிபுளாக்கள், மெய்யாகப் பிரபஞ்சத்தில் பல பில்லியன்  மைல்களுக்கு அப்பால் உள்ளதாகக் கண்டார்கள்! அரிசோனா பிளாக்ஸ்டாஃப் நோக்ககத்தில்  [Flagstaff Observatory, Arizona] ஸ்லிஃபரும், ஹப்பிள், ஹுமாஸன் இருவரும் காலிஃபோர்னியா  வில்ஸன் சிகர நோக்ககத்திலும் [Mount Wilson Observatory, CA] பணி புரிந்து வந்தனர். அதி  வேகத்தில் காலக்ஸிகள் பூமியை விட்டு அப்பால் வெகு தொலைவில் விலகிச் செல்வதை நோக்கி, பிரபஞ்சத்தின் பிரம்மாண்டப் பேரளவைக் கண்டு வியந்தனர்! டாப்பிளர்  விளைவைப் [Doppler Effect] பின்பற்றிக் காலக்ஸிகளின் ஒளிநிறப் பட்டையில் செந்நிறப்  பெயர்ச்சி [Red-Shift end of Spectrum] விளிம்பில் முடிவதைக் கண்டு, அவற்றின் அதி  வேகத்தைக் கண்டு வியப்புற்றனர்!

    ஹப்பிள் ஐன்ஸ்டைனுடன் சேர்ந்து பணியாற்றி, அவரது பொது ஒப்பியல் நியதிச்  சமன்பாடுகளில் [Equations in General Theory of Relativity] சில மாற்றங்கள் செய்ய உதவினார்!  1929 இல் ஹப்பிளின் விதி [Hubble ‘s Law] வெளியானது: ‘காலக்ஸிகள் நம்மை விட்டு,  தம்முள் ஒன்றை ஒன்று விட்டு விலகி அப்பால் இடைத் தூரங்களுக்கு ஏற்ப நேர்  விகிதத்தில் மிகுந்திடும் வேகங்களில் செல்கின்றன ‘ என்பதே ஹப்பிள் விதி! 1929 இல்  ஹப்பிள் மதிப்பிட்ட காலக்ஸிகளின் வேகம், வினாடிக்கு 45 மைல் [162,000 mph]!

    ஐன்ஸ்டைன் ஹப்பிள் கூறிய விரியும் பிரபஞ்சக் கருத்துக்களை ஒப்புக் கொண்டார்! 1931  இல் காலிஃபோர்னியா வில்ஸன் நோக்ககத்தில் ஐன்ஸ்டைன் மூன்று ஆண்டுகள்  ஹப்பிளுடன் பணி செய்து, பிரபஞ்ச அண்டங்களை நேராகக் கண்டு, அவருடன்  விவாதித்துத் தன் ஒப்பியல் சமன்பாடுகளைத் திருத்தினார்! பிறகு ஐன்ஸ்டைன்,  பிரின்ஸ்டன் மேல்நிலைப் பெளதிக கூடப் [Princeton Institute of Advanced Studies, New Jersey]  பதவியை ஏற்றுக் கொண்டு நியூ ஜெர்ஸிக்குச் சென்றார்!

    ஹப்பிள் கண்டுபிடித்த அகிலவெளி மெய்ப்பாடுகள்

    1920 ஆண்டுகளின் துவக்கத்தில் ஹப்பிள் காலக்ஸிகள் யாவை என்று ஆய்வுகள் செய்தார்.  சில சுருள் நிபுளாக்கள் [Spiral Nepulae] தமக்குள்ளே தனித்தனி விண்மீன்களைக்  கொண்டதாக எண்ணிய கருத்து, உறுதிப்படுத்தப் படாமலே இருந்தது! அவ்விண்மீன்  கூட்டம் நமது காலக்ஸியைச் சேர்ந்ததா அல்லது தனிப் பட்ட ‘பிரபஞ்சத் தீவைச்’ [Island  of Universe] சார்ந்ததா வென்று ஐயம் எழுந்தது! 1924 இல் ஹப்பிள் 100 அங்குல  தொலைநோக்கி மூலம் ‘ஆன்ரோமேடா நிபுளாவின் ‘ [Andromeda Nebula] தூரத்தை அளந்து,  அது நமக்கு அருகில் உள்ள விண்மீன் கூட்டத்திற்கும் அப்பால் நூறாயிரம் மடங்கு  தொலைவில் இருப்பதாகக் காட்டினார்! நமது பால்மய வீதிக்கு [Milky Way] ஒப்பான  வடிவில், ஆனால் அப்பால் வெகு தூரத்தில் உள்ள ஓர் தனிக் காலக்ஸி [Separate Galaxy]  என்றும் கூறினார்!

    ஹப்பிள் மற்றும் சில காலாக்ஸிகளின் தூரங்களை அளந்து, அவை வெளிவிடும்  தெளிவான ஒளியை ஆய்ந்து அவற்றின் தூரத்தைக் காட்டும் பொது அளவுக் கோலாக  எடுத்துக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டார்! ஒரு காலாக்ஸி நம்மை விட்டு விலகிப்  போகும் வேகத்தையோ, அல்லது அது நம்மை நோக்கி அருகி வரும் வேகத்தையோ, அது வீசும் ‘ஒளியின் டாப்பிளர் பெயர்ச்சி’ [Doppler Shift of Light] மூலம் அளப்பது மிக எளிது என்று கண்டார்.

    ஒருவர் ரயில் தண்டவாளக் கடப்புப் [Railway Crossing] பாதையில் நின்று  ரயில் ஊதும் விசிலைக் கேட்டால் டாப்பிளர் பெயர்ச்சியைப் புரிந்து கொள்ளலாம்! ரயில்  கடப்பு வாயிலை நெருங்கும் போது, விசிலின் ஓசை மிகுந்து கொண்டே பெருகுகிறது!  ரயில் கடப்பு வாயிலைத் தாண்டியவுடன் விசிலின் ஓசை குறைந்து கொண்டே தணிகிறது!  இந்நிகழ்ச்சி தான் ‘டாப்பிளர் விளைவு ‘ [Doppler Effect] என்று கூறப் படுகிறது. ஒளிச்  சக்தியும், ஒலிச்சக்தி போலவே நடந்து கொள்கிறது! தாண்டிச் செல்லும் ரயில் விசிலைப்  போல, நம்மைக் கடந்து செல்லும் காலக்ஸியின் ஒளிநிறப் பட்டையை [Light Spectrum]  நோக்கினால் செந்நிறம் மிகையாகிறது! நம்மை நெருங்கி வரும் காலக்ஸியின் ஒளிநிறப்  பட்டையை நோக்கினால் எதிர் விளிம்பான நீல நிறம் மிகையாகிறது! மேற்கூறிய  செந்நிறப் பெருக்கம் ‘செந்நிறப் பெயர்ச்சி ‘ [Redshift] என்று குறிப்பிடப் படுகிறது! ஹப்பிள்  நுணுக்கமான ஒளிப்பட்டை வரைமானியைப் [Sensitive Spectrograph] பயன்படுத்தி, விலகிச்  செல்லும் பல காலக்ஸிகளின் ‘செந்நிறப் பெயர்ச்சிகளை ‘ 1929 ஆம் ஆண்டில் சேமித்து  ஓர் வரைப்படத்தில் குறித்தார்.


    ஹப்பிள் காலக்ஸிகளின் தூரத்தைக் மட்ட அச்சிலும் [X axis], அவற்றின் செந்நிறப்  பெயர்ச்சிகளை நேர் அச்சிலும் [Y axis] குறித்து வரைந்த போது, எதிர்பாராத விதமாக ஒரு  நேர் கோடு உருவாகியது! அதாவது காலக்ஸிகளின் தூரங்கள், அவை அப்பால் விலகிச்  செல்லும் வேகங்களுக்கு நேர் விகிதத்தில் உள்ளன [Redshifts or speeds of the Galaxies are  directly proportional to their distances] என்ற விந்தையான ஓர் உடன் பாட்டைக் கண்டு பிடித்தார்!  காலக்ஸியின் தூரத்துக்கும், செல்லும் வேகத்துக்கும் உள்ள இந்த அரிய உடன் பாடே,  ‘ஹப்பிளின் விதி ‘ [Hubble’s Law] என்று கூறப்படுகிறது. காலக்ஸிகளின் செந்நிறப்  பெயர்ச்சியைக் [Red-Shift] கண்டால், அவை நம்மை விட்டு அப்பால் ஏகுகின்றன என்பது  அர்த்தம்!

    பிரபஞ்சம் உப்பி விரியும் போது, காலக்ஸிகள் நம்மை விட்டு விலகிச் செல்கின்றன!  அதை வேறு விதமாகக் கூறினால், காலக்ஸிகள் நம்மை விட்டு விலகிச் செல்வதால், பிரபஞ்சம் உப்பி விரிகிறது என்பது தெளிவாகிறது! அதாவது பிரபஞ்சம் நிலையாக  முடங்கிக் கிடக்கும் ஒரு கூண்டு என்று கருதக் கூடாது! அது சோப்புக் குமிழிபோல் உப்பிக்  கொண்டே போகும் ஒரு கோளம் என்று ஹப்பிளால் நிரூபிக்கப் பட்டது! பொது ஒப்பியல்  நியதிக்கு [General Theory of Relativity] உட்பட்டு, 1915 இல் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஆக்கிய  ‘ஈர்ப்பியல் நியதியின்’ [Theory of Gravity] தவிர்க்க முடியாத முடிவு, எல்லா காலக்ஸிகளும்,  மற்றும் பிரபஞ்சம் முழுவதுமே, பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய ‘பெரு  வெடிப்பில் ‘ உண்டானவை என்பதே!

    பெருவெடிப்பு நியதியை மெய்பித்த விஞ்ஞானிகள்

    பெரு வெடிப்புக் கோட்பாடு 1917 இல் ஐன்ஸ்டைன் பொது ஒப்பியல் நியதியில்  உருவாக்கிய ஒரு கருத்து! அதை விருத்தி செய்தவர், பெல்ஜிய விஞ்ஞானி ஜார்ஜ்  லெமைட்டர் [George Lemaitre], ஹாலந்து விஞ்ஞானி வில்லம் சித்தர் [Willem de Sitter], ரஷ்ய  விஞ்ஞானி அலெக்ஸாண்டர் பிரைடுமான் [Alexander Friedmann]. அம்மூவரது கருத்துக்களும்  பிரபஞ்சம் தோற்றத்திற்குப் பின்பு, எவ்வாறு ஒழுங்கானது என்றுதான் கூறினவே தவிர,  அகிலத்தின் ஆதித் துவக்கத்தைப் பற்றி எதுவும் ஆராயவில்லை! 1940 இல் ஜார்ஜ காமாவ்  [George Gamov] அப்பணியைச் செய்ய தனது மாணவர் ரால்ஃப் ஆல்ஃபர் [Ralph Alpher], ராபர்ட்  ஹெர்மன் [Robert Herman] இருவருடன் கூட்டுழைத்து, ஐன்ஸ்டைன் பொது ஒப்பியல்  நியதிக்காக எழுதிய பிரைடுமான் தீர்வுகளை எடுத்துக் கொண்டு அவற்றைப் பின்னும்  அபிவிருத்தி செய்தார்.

    அடுத்து ஆல்ஃபர், ஹெர்மன் இருவரும் தனியாகக் காமாவின் கருத்துகளை விரிவு  செய்தனர். அதன்படி கதிர்வீச்சுக் கடலில் [Sea of Radiation] கொந்தளிக்கும் புரோட்டான்,  நியூட்ரான், எலக்ட்ரான் [Proton, Neutron, Electron] ஆகிய பரமாணுக்களைக் [Subatomic Particles]  கொண்ட இலெம் [Ylem] என்னும் ஆதி அண்ட நிலையிலிருந்து [Primordial State of Matter] பிரபஞ்சம் விரிந்தது!

    பிரபஞ்சம் பெரு வெடிப்பின் போது மிக மிகச் சூடான நிலையில்  இருந்து, பரமாணுக்கள் இணைந்து ஹைடிரஜன் மூலகத்தை விட கனமான மூலகங்கள்  [Heavier Elements] முதலில் உண்டாயின! காமாவ், ஆல்ஃபர், ஹெர்மன் குழுவினர் பெரு  வெடிப்பில் விளைந்த வெப்பவீச்சுக் கடல் [Sea of Radiation] இன்னும் அகிலத்தில் தங்கி  இருக்க வேண்டும் என்று ஊகித்து முன்னறிவித்தார்கள்!

    அவர்கள் கணக்கிட்ட அகிலப் பின்புலக் வெப்பவீச்சுக்கு [Cosmic Background Radiation]  இணையான உஷ்ணம் [3 டிகிரி K (கெல்வின்)]. 1965 ஆம் ஆண்டில் பெல் ஆய்வகத்தில்  [Bell Laboratories, Crawford Hill] பணியாற்றும் ஆர்னோ பென்ஸியாஸ், ராபர்ட் வில்ஸன் என்ற  இரண்டு கதிரலை விஞ்ஞானிகளால் [Radio Astronomers: Arno Penzias, Robert Wilson] அந்த  உஷ்ண நிலை விண்வெளியில் மெய்ப்பிக்கப் பட்டு, பெரு வெடிப்பு நியதி மேலும்  உறுதியாக்கப் பட்டுள்ளது! அவ்வரிய ‘அகிலப் பின்புல நுண்ணலைக் கதிர்வீச்சுக் ‘ [Cosmic  Microwave Background Radiation] கண்டு பிடிப்புக்குப் பென்ஸியாஸ், வில்ஸன் இருவரும் 1978  இல் நோபெல் பரிசு பெற்றார்கள்!

    பூமியைச் சுற்றிவரும் ஹப்பிள் விண்வெளித் தொலைநோக்கி

    நாசா [NASA] எட்வின் ஹப்பிள் நினைவாக, அவரது பெயரில் 1990 ஆம் ஆண்டில் பூமியைச்  சுற்றி வரும் ஒரு விண்வெளித் தொலை நோக்கியை [Orbiting Hubble Space Telescope] அண்ட  வெளியில் ஏவியது. பிரதம ஆடி 94.5 அங்குல விட்டமுள்ள ஹப்பிள் தொலை நோக்கி  370 மைல் உயரத்தில், வட்ட வீதியில் பூமியைச் சுற்றி வருகிறது. பூமியின் வாயுச்  சூழ்மண்டலமும், மேக மந்தைகளும் விண்வெளிக்கு முகத்திரை யிட்டு வானக்  கோள்களை மறைக்காத உயரத்தில் பயணம் செய்கிறது, ஹப்பிள் தொலை நோக்கி!  அண்ட வெளி மீன்கள் வீசும் மின்காந்த ஒளிநிறப் பட்டையின் [Electromagnetic Spectrum]  உட்சிவப்பு, புறவூதா அரங்குகளை [Infrared, Ultraviolet Regions] ஆராயும் கருவிகளைக்  கொண்டது! விரிதள, மங்கிய கோள் காமிராக்கள் [Wide Field, Faint Object Cameras], மிக  நுணுக்க, மங்கிய கோள் ஒளிநிறப் பட்டை மானிகள் [High Resolution, Faint Object Spectrographs],  விரை வேக ஒளித்திரள் ஒப்புமானி [High Speed Photometer] ஆகியவை தொலை நோக்கியில்  அமைக்கப் பட்டுள்ளன.

    பத்தாண்டுகளுக்கு மேலாக அண்ட கோளங்களின் அற்புதக் காட்சிகளை, பால்மய வீதியை,  கண்கவரும் காலக்ஸிகளைப் படமெடுத்து பூமிக்கு அனுப்பிக் கொண்டு வருகிறது ஹப்பிள்  தொலை நோக்கி! பிரபஞ்சத்தில் ஒருவேளை இருக்கலாம் என்று யூகிக்கப்பட்ட கருங்குழி  [Black Hole] இருக்கையை முதன் முதலாக உறுதிப் படுத்தி, ஹப்பிள் தொலை நோக்கி 1994  ஆம் ஆண்டில் சான்றாக விபரங்களைக் காட்டி யுள்ளது! பரிதியின் பளுவை விட மூன்று  பில்லியன் மடங்கு நிறையுடைய மாபெரும் ஓர் அண்டத்தைக் M87 காலக்ஸியின்  மையத்தில் காட்டி யுள்ளது! பூதக்கோள் வியாழனின் தெளிவான வடிவத்தைக் காட்டி, 1994  இல் வால் மீன் சூமேக்கர் லெவி [Shoemaker-Levi 9] வியாழனுடன் மோதித் தூளாகி  எரிந்ததைப் படமெடுத்துள்ளது!

     

     

    நாசாவின் ‘துணைக்கோள் கோபி’ [COBE Spacecraft, Cosmic Background Explorer] 1989-1993  ஆண்டுகளில் அகிலப் பின்புலக் கதிர்வீச்சின் தளவரைவைப் [Cosmic Background Radiation  Mapping] படம் எடுத்தது! வெப்பத்தால் அண்டங்கள் உமிழும் கதிர்வீச்சு அடர்த்தி ‘பெரு  வெடிப்பு நியதி ‘ முன்னறிவித்து போல் பிரபஞ்சத்தில் பரவி இருந்ததை அது  மெய்ப்பித்துக் காட்டியது! மேலும் அகிலப் பின்புலக் கதிர்வீச்சு சீராகப் பரவாது, அங்கு  மிங்கும் சிறிது வேறுபட்டு இருந்ததாக படத்தில் அறியப் படுகிறது! இந்தச் சீரற்ற  வேறுபாடுகள்தான் பிரபஞ்சத்தில் காலக்ஸிகளின் வளர்ச்சிக்கும், மற்றும் பிற  அண்டங்களின் பெருக்கத்திற்கும் விதைகளாய் அமைகின்றன என்று உறுதியாய்க் கருதப்  படுகிறது!

    *********************************************

    தகவல் :

    1. https://en.wikipedia.org/wiki/Edwin_Hubble   :   Edwin Hubble  (November 30, 2015)

    2.  www. Spacetelescope.org   (Edwin Hubble – The Man Who Discovered The Cosmic Expansion ).

    3. https://www.spacetelescope.org/about/history/the_man_behind_the_name/

    4.  http://www.biography.com/people/edwin-hubble-9345936

    5.  http://www.space.com/15665-edwin-powell-hubble.html

    6.  http://www.physicsoftheuniverse.com/scientists_hubble.html

    7.  https://cosmology.carnegiescience.edu/timeline/1929

    8.  https://www.aip.org/history/cosmology/ideas/hubble.htm

    9.  http://asd.gsfc.nasa.gov/archive/hubble/overview/hubble_bio.html

    10. http://www.bbc.co.uk/science/space/universe/scientists/edwin_hubble

    11. http://skyserver.sdss.org/dr1/en/astro/universe/universe.asp

    12.  https://phys.org/news/2015-02-fast-universe.html  [February 10, 2015]

    13. https://en.wikipedia.org/wiki/Accelerating_expansion_of_the_universe [January 2, 2017]

    14. https://en.wikipedia.org/wiki/Quasar  [January 23, 2017]

    15.  https://www.

    …

    [Message clipped]  View entire message

    Attachments area
    Preview YouTube video edwin hubble history of science

    edwin hubble history of science

    Preview YouTube video Edwin Hubble

    Edwin Hubble

    Preview YouTube video Edwin Hubble: an Informational Video

    Edwin Hubble: an Informational Video

    Preview YouTube video Hubble’s Heritage – Professor Ian Morison

    Hubble’s Heritage – Professor Ian Morison

    Preview YouTube video Is the Universe Expanding?

    Is the Universe Expanding?

    Preview YouTube video Expansion Of The Universe – Dark Matter And Dark Energy

    Expansion Of The Universe – Dark Matter And Dark Energy

    Preview YouTube video Why Quasars are so Awesome | Space Time

    Why Quasars are so Awesome | Space Time

    Preview YouTube video Quasars: the Brightest Black Holes – Professor Carolin Crawford

    Quasars: the Brightest Black Holes – Professor Carolin Crawford

    Preview YouTube video How Fast is the Universe Expanding?

    How Fast is the Universe Expanding?
    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav

    “அக்கிரமம் கண்டால் அதர்மம் அகற்றிட
    சக்கிரம் ஏந்தும் சுதர்ஸன -உக்கிரர்:
    சங்கில் மவுனமாய், சக்கிரத்தில் சீற்றமாய்,
    எங்கும் சுழல்வோனை ஏத்து’’….கிரேசி மோகன்….!

    Share
  • பெருமாள் திருப் புகழ்….

    கிரேசி மோகன்
    தனதன தனான தனதன தனான
    தனதன தனான-தனதான

    “இறகும யிலாடி இலகுசு ருள்கேச
    இடையர்ம கனான -பெருமாள்காண்
    விரைகள பகோபி நடுவில்க ஸுதூரி
    திலகநு தல் பூணும் – பெருமாள்காண்
    கரியவி ழிபாசம் பொழியவ ருராம
    கவுசலை குமார -பெருமாள்காண்
    குமிழழ குவேத மொழிநில வுஸ்வாஸம்
    உமிழள வுநாசி -பெருமாள்காண்
    கறவையி னம்மேய குழலமு தகானம்
    பொழிஅத ரராக – பெருமாள்காண்
    ஜனகம கள்சாய சவுகரி யமான
    விரியுநெ டிமார்பு -பெருமாள்காண்
    விரையவி ரிவானம் ,உலகள வுகாணும்,
    தொழுமுள ரிபாத -பெருமாள்காண்
    அருணகிரி நாதர் வருணனை யிலேளும்
    மருகன்மு றைமாம -பெருமாளே”….கிரேசி மோகன்….!

    Share
  • மக்களுக்காக முதல்வர்களா அல்லது முதல்வர்களின் நலனுக்காக மக்களா?

    பவள சங்கரி

    தலையங்கம்

    சல்லிக்கட்டிற்காக ஆறுநாட்கள் அறவழிப்போராட்டம் நடத்திக்கொண்டிருந்த இளைஞர்கள்/ மாணவர்கள் மகிழ்ச்சியடையும்படி, தலைநகர் சென்று பிரதம மந்திரியைச் சந்தித்து சல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசரச் சட்டம் வெளியிடுவதற்கு ஒப்புதல் பெற்று வந்ததை நேரடியாக அந்த இளைஞர்களிடம் சென்று தானும் தமிழன் தான் என்ற உணர்வோடு, இத்தகவலை வெளியிட்டு, இது நிரந்த சட்டமாகும் வகையில் சட்டசபையின் சிறப்புக் கூட்டம் கூட்டி இதற்கு வழிவகை செய்யப்படும் என்று நம் தமிழக முதல்வர் திரு ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் பேசியிருந்தாலே போதும். மாணவர்கள் முதலமைச்சரின் பேச்சுக்கு மரியாதை கொடுத்து அமைதியாக கலைந்து சென்றிருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. இத்தனை பிரச்சனைகள் நடந்திருக்க வாய்ப்பே இருந்திருக்காது.

    சில தலைவர்கள் காலங்கள் கடந்தும் கட்சி சார்பற்றும் மக்கள் மனத்தில் நிறைந்திருக்கிறார்கள் என்றால் அதற்கு அந்தத் தலைவர்கள் மக்கள் மீது கொண்டிருந்த உண்மையான அக்கறையும், அவர்களின் நல்வாழ்விற்காக தன்னலம் கருதா உழைப்பையும், நேரத்தையும் மனமுவந்து அளித்ததுதான்.

    1980 களில் திரு எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்த காலகட்டம். ஈரோட்டிற்கு தங்கள் கட்சிக் கூட்டத்திற்காக வந்திருந்த சமயம். பள்ளிபாளையம் சேசசாயி காகித ஆலையில் தொழிற்சங்க வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிப்பு செய்திருந்தார்கள். 8.33% மீதூதியம் (போனஸ்) வாங்க மறுத்து 45% மீதூதியமும், சம்பள உயர்வும் வேண்டி வேலை நிறுத்தம் செய்திருந்தார்கள். பேச்சு வார்த்தைகள் இழுபறியாக இருந்து கொண்டிருந்தது. முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள் வந்திருப்பதை அறிந்து தொழிற்சங்கத் தலைவர்கள் அவரைச் சந்தித்து முறையிட விரும்பி அவர் தங்கியிருந்த சேசசாயி விருந்தினர் மாளிகைக்குச் சென்று அவருடைய உதவியாளரிடம் அனுமதி கேட்கிறார்கள். அப்பொழுதுதான் வந்து சேர்ந்தவர், தேநீர் பருகிவிட்டு கூட்டத்திற்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்திருக்கிறார். உதவியாளர் வந்து சொன்னவுடன் சிறிதும் தயங்காமல் தொழிற்சங்கத் தலைவரை உள்ளே வரச்சொல்லிவிட்டார். கட்சிக்கூட்டம் சற்று தாமதம் ஆனாலும் பரவாயில்லை, தொழிலாளர் பிரச்சனையை தீர்ப்பது முக்கியம் என்றாராம். தொழிற்சங்கத் தலைவர்களிடம் பிரச்சனைகளை பொறுமையாகக் கேட்டவர், என்மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் உடனடியாக வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்குச் செல்லுங்கள், உங்களுக்கு வேண்டியதை நான் உடனே செய்து தருகிறேன் என்றாராம். அவர் பேச்சில் இருந்த நம்பிக்கையில், தொழிற்சங்கத் தலைவர்களும், ஆங்காங்கு வெளியூரில் இருக்கும் ஊழியர்கள் திரும்பி வந்து சேரும் ஒரு நாள் அவகாசத்தில் அனைவரும் பணிக்குத் திரும்புவதாக உறுதியளித்துச் சென்றிருக்கிறார்கள். முதல்வரும் தாம் சொன்ன வார்த்தையைக் காப்பாற்றும் விதமாக உடனடியாக சேசசாயி ஆலை நிர்வாக இயக்குநரை வரவழைத்து அவரிடம் பேசி, அரசின் உதவியும் பெறலாம் என்று கூறி அவரைச் சம்மதிக்க வைத்து தொழிலாளர்களின் குறையை உடனடியாகத் தீர்த்து வைத்தாராம். தொழிலாளர்கள் கேட்டபடி 45% மீதூதியமும், சம்பள உயர்வும் கிடைத்த மகிழ்ச்சியில் முதல்வரைக் கொண்டாடாமல் இருப்பார்களா என்ன?

    இதேபோன்று இன்னுமொரு சம்பவமும் நினைவு கூரலாம். ஒரு முறை விவசாயிகளின் போராட்டத்தின்போது விவசாய சங்கத் தலைவர் திரு நாராயணசாமி நாயுடு அவர்களை அவர் இல்லத்திற்கேச் சென்று அவரைச் சந்தித்து விவசாயிகளின் கோரிக்கைகளைக்கேட்டு அவர்தம் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதாக உறுதியளித்து, பிரச்சனைகளை தீர்த்தும் வைத்துள்ளார்.

    மக்களுக்காக முதல்வரா அல்லது முதல்வரின் நலனுக்காக மக்களா என்ற கேள்விக்கே இடமில்லாத வகையில் நடந்துகொள்ளும் தலைவர்களை மக்கள் ஏன் மறக்கப் போகிறார்கள்?

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav

    ”தும்பிக்கை மாலையாய் தோள்தழுவ ஆனைக்கு
    நம்பிக்கை தந்தார் நவனீத -நம்பீசர்:(மயிலையில் இப்படி ஒரு வெண்ணைக் கடையுண்டு….மலரும் நினைவுக்கு மரியாதை)-
    ஆதிமூல மேயென்ற ஆனை கஜேந்திர
    வாதியாச்சு மோட்ச விலங்கு’’….கிரேசி மோகன்….!

    Share
  • பரம்பரை பரம்பரையாக

    நிர்மலா ராகவன்

    கணவனின் குரல் கேட்டு கண்விழித்தாள் வேணி. மெலிந்திருந்த உடலுக்குள் ஏதோ ஒன்று பரவியது — வரண்ட நிலத்தில் குளிர்ந்த நீர் படர்ந்தாற்போல்.

    அவள் படுத்திருந்த கட்டிலுக்கு அருகே வைக்கப்பட்டிருந்த முக்காலிமேல் சுடுநீர் போத்தல், கோப்பை, `டிஷ்யூ’ பேப்பர். கீழே குப்பைக்கூடை. அந்தச் சிறிய அறை மலிவானதொரு ஆஸ்பத்திரியை நினைவுபடுத்தியது.

    அவளது கட்டிலின் மேல் அமர்ந்துகொண்ட முகுந்தன் நெற்றியில் கைவைத்துப் பார்த்தான்.
    “பிள்ளை போனாப் போகட்டும்! ஒனக்கு ஏதாவது ஆகியிருந்தா! ஐயோ!”
    தன்மேல்தான் கணவருக்கு எவ்வளவு அன்பு! வேணிக்குப் பெருமிதமாக இருந்தது.

    `புருஷன் வீட்டிலே எல்லாரையும் அனுசரிச்சுக்கிட்டுப் போகணும், வேணி. வீட்டில நடக்கிறது எதுவும் நாலு சுவத்துக்குள்ளதான் இருக்கணும். எல்லாத்தையும், எல்லார்கிட்டேயும் சொல்லிக்கிட்டு இருக்காதே!’ திருமணம் ஆவதற்குமுன் அம்மா அளித்த அந்த உபதேசம் அனாவசியம் என்று தோன்றியது.

    கணவரைப்பற்றி தப்பாகச் சொல்ல என்ன இருக்கிறதாம்!

    எங்கிருந்தோ வந்த பெண், ஒருநாள் கூத்தில் தன்னை வாழ்நாள் முழுவதும் அவனுடன் இணைத்துக்கொண்டு, அதற்காகவே இப்பிறவி எடுத்ததுபோல் நடந்துகொண்டது முகுந்தன் தன்னைப்பற்றிக் கொண்டிருந்த மதிப்பை அபாயகரமான நிலைக்கு உயர்த்தியது.

    `ஆண் என்பவன்தான் எவ்வளவு மேலான பிறவி!’ என்று தோன்றிப் போயிற்று. தன் மனைவி, இதிகாச புராசங்களில் வரும் ரிஷிபத்தினிகள் மாதிரி தன் தேவைகளை எப்படி குறிப்பாலேயே நிறைவேற்றுகிறாள், எப்படித் தன் வாக்கையே வேதமாக எடுத்துக் கொள்கிறாள் என்று நண்பர்களிடம் பெருமை அடித்துக்கொண்டான்.

    அவர்களும், `ஒனக்கென்னப்பா! நீ கிழிச்ச கோட்டைத் தாண்டாத மனைவி! இப்படி அமைய புண்ணியம் பண்ணியிருக்கணும்,’ என்று மேலும் உசுப்பேற்றினார்கள்.

    அதிகாரமே அது ஒரு போதையாக, மனைவிக்கும் ஒரு மனம் இருக்கும், உணர்ச்சிகள் இருக்கும் என்பதெல்லாம் அவனுக்குப் பெரிதாகப் படவில்லை. வேணியும் கணவன் எப்படி ஆட்டுவித்தாலும், அதை பெரிதுபடுத்தாது அமைதியாக ஏற்றுக்கொண்டாள்.

    அவளுக்குக் குறைப்பிரசவம் ஆனது தன்னால்தான்; அவளது உடல்நிலையைப்பற்றி கிஞ்சித்தும் நினைத்துப் பார்க்காது, தான் இழுத்த இழுப்புக்கெல்லாம் அவள் வளைந்து கொடுத்ததுதான் என்ற குற்ற உணர்வு அலைக்கழைக்க, அவளிடம் அன்பைப் பொழிவதுபோல் நடந்துகொண்டான் முகுந்தன்.
    உடல் தேறி, வேணி மறுபடியும் நடமாட ஆரம்பித்ததும், பழைய நிலை திரும்பியது. அவள் செய்தது எல்லாமே குற்றமாகப் பட்டது. ஓயாமல் அவளை விரட்ட ஆரம்பித்தான்.

    திடீரென கிடைத்த கணவரின் அன்பும், பரிவும் மாறியது ஏன் என்று வேணிக்குப் புரியவில்லை. அடிக்கடி ஆரோக்கியம் கெட்டது. அப்போதாவது கணவனின் அன்பு திரும்பாது?

    முகுந்தனுக்கோ, ஆத்திரம்தான் எழுந்தது. “அப்பவே எல்லாரும் தலைபாடா அடிச்சுக்கிட்டாங்க, ஒனக்கு இந்தப் பொண்ணு ஏத்ததே இல்லடான்னு. அதைக் கேட்டிருந்தா, இப்படி ஓயாம பொண்டாட்டிக்கு நர்சா ஆகவேண்டி இருக்குமா? வெளியழகைப் பாத்து மயங்கினதுக்கு எனக்கு நல்லா வேணும்!’ என்று அவன் தலையில் அடித்துக்கொண்டபோது, வேணிக்கு அவமானமாக இருந்தது.

    “என்னமோ, இப்பத்தான் இப்படி ஒண்ணு மாத்தி ஒண்ணா வருது. கல்யாணத்துக்கு முந்தி நல்..லா இருந்தேன்!’ என்று ஈனஸ்வரத்தில் அவள் பதிலளித்தது அவனுடைய ஆத்திரத்தை அதிகரித்தது. “ஒன்னை என்ன, இங்க பட்டினி போட்டுக் கொல்றாங்களா?” என்று கத்திவிட்டு, “என்னை மாதிரி ஒரு நல்ல புருஷன் கிடைக்க நீ குடுத்து வெச்சிருக்கணும், தெரிஞ்சுக்க!” என்றபடி நகர்ந்தவனையே பார்த்தபடி இருந்தாள் வேணி. பணிவுக்குப் பதில் இப்போது அவனிடம் பயம் வந்தது.

    பாட்டியும், அத்தையும் அடிக்கடி அவளது நினைவில் வந்து போனார்கள்.

    `ஒங்க தாத்தாவுக்கு ஊரறிய நானும், இன்னொருத்தியும். அதைத் தவிர, பேட்டைக்கு ஒருத்தி. இதையெல்லாம் நான் பெரிசு பண்ணியிருந்தா, ஆறு பிள்ளைங்களை என் ஒருத்தியால எப்படி வளர்த்திருக்க முடியும்! பிச்சை எடுக்கத்தான் போயிருக்கணும்!’ என்று, தினம் ஒரு முறையாவது பாட்டி தன் பத்தினித்தனத்தை நிலைநாட்டிக் கொள்வாள்.

    இந்தமாதிரி நீதி போதனைகளைக் கேட்டு வளர்ந்திருந்த அத்தையோ, கட்டியவரின் சூதாட்டத்துக்கும், பெண் பித்துக்கும் கேட்டபோதெல்லாம் தயங்காது நகைகளைக் கழற்றிக் கொடுத்துவிட்டு, அதற்குப் பரிசாக காம நோயைப் பெற்றுக்கொண்டவள். கணவர் அவளை அதிகம் சோதிக்காமல், அல்பாயுசில் போனபிறகு, அண்ணன் வீட்டுக்கே நிரந்தரமாக வந்துவிட்டிருந்தாள். தான் வாழ்ந்த விதம்தான் பெண்களுக்குப் பெருமை தேடித் தரும் என்பதுபோல், பிறருக்கும் உபதேசிக்க ஆரம்பித்தாள்.

    சிறு வயது முதலே அப்பெண்கள் இருவரும் ஓயாது பேசியதைக் கேட்டு வளர்ந்திருந்த வேணிக்கு, முதன்முறையாகச் சந்தேகம் வந்தது.

    கணவரைப் பிற பெண்களுடன் பங்கு போட்டுக்கொள்ள நேரிட்டதுபற்றி பாட்டிக்குக் கொஞ்சமேனும் வருத்தமோ, கோபமோ இருந்திருக்காதா?

    அத்தை மட்டுமென்ன! `நான் இவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கும்போது, மற்றவர்கள் மட்டும் ஏன் நன்றாக இருக்கவேண்டும்?’ என்ற வயிற்றெரிச்சலில்தான் தன்னை தியாகத்தின் சின்னமாகக் காட்டிக்கொண்டாளோ?

    படுத்தபடி ஓயாது யோசித்ததில், வேணிக்கு ஒன்று மட்டும் புரிந்தாற்போலிருந்தது. தங்கள் வாழ்க்கை மகிழ்வானதாக இல்லை என்று எவருமே ஏற்க விரும்புவதில்லை. அது தமது தோல்வியை ஒத்துக்கொள்வதுபோல் ஆகிவிடுமே!

    பிற பெண்களும் இன்னல் அனுபவிப்பதை உணர்கையில், பாட்டி, அத்தை போன்ற பெண்களுக்கு தங்கள் கட்சி பலம் அடைந்துவிட்டதைப்போல ஒரு அல்ப சந்தோஷம். `பெண்ணாகப் பிறந்தாலே இப்படித்தான்!’ என்று நியாயம் கற்பிக்க முடியுமல்லவா!

    முகுந்தன் வேலை முடிந்து, வீடு திரும்பும் வேளை.

    `இன்று எதற்காக என்னிடம் ஆத்திரப்படப்போகிறாரோ!’ இருந்தாற்போலிருந்து, வேணிக்குப் படபடப்பாக இருந்தது. மூச்சு இளைத்தது.

    அந்த நிலையிலும் ஒரு தெளிவு: மனத்தின் இறுக்கத்திற்குக் காரணம் புரிந்தது.

    `கட்டினவன் சொன்னதுக்காக, நெருப்பிலகூட குதிச்சதாலதானே ராமாயணக் காலத்திலேருந்து இப்போவரைக்கும் சீதாவைக் கொண்டாடறாங்க!’ அசரீரிபோல் பாட்டியின் குரல் ஒலித்தது.

    அலட்சியமாக உதடுகளைச் சுழித்தாள் வேணி. ஸ்ரீராமச்சந்திரமூர்த்திமாதிரி கணவன் அமைந்தால் அப்படி நடக்கலாம்!

    மருந்து போத்தல்களைத் திரட்டி வீசினாள். பக்கத்திலேயே இருந்த குப்பைக்கூடையில் அவை ஐக்கியமாயின. சில உடைந்து, பல்வேறு நிறங்களில் திரவப்பொருட்கள் ஒழுகின.
    வேணி சிரிக்க ஆரம்பித்தாள்.

    Share
  • வாடிவாசல்!

    பவள சங்கரி

    1484803238vadivasal 2

    திறக்கும் வாடிவாசல் நின்
    திறம் வியக்கும்காலம் தமிழா
    மறம் எங்கள் அறமென
    கரம் இணையும் வரமென
    சுடர்மிகு தீபம் ஏந்தினாய்
    கடல் அன்னையும் வரமருளும்
    நலம் அனைத்தும் வென்றாய்
    இணையமும் ஆண்டிராய்டும்
    இழிவெனும் நிலை தகர்த்தாய்
    சகலமும் சமதர்மம் எனும்
    சத்தியம் காத்து சாதித்தாய்
    விவேகமும் வீரசாகசமும்
    வித்தென விருட்சமாய் விரிந்தாய்
    சகோதரத்துவமும் மனிதமும்
    சமயோசிதமும் கருத்தென துணிந்து
    நடைபோட்டு மனம் குளிர
    தாயவளின் வாழ்த்தும் பெற்றாய்

    இளைஞர் சக்தி வென்றதென
    இனிவரும் காலங்கள் உம்
    புகழ்பாடி வரலாறும் பேசும்
    வரங்கள் இயைந்து அளிக்கும்
    கரிசனங்கள் மலையாய் குவியும்
    தரிசனங்கள் முறையாய் மலரும்
    நந்தியெம்மானின் கொம்பிரண்டும்
    காக்கும் வரம் பெற்றவரானீர்
    அவர்தம் செவிகளிலும் வீர
    முழக்கமிட்டு சிலிர்த்தெழச் செய்தீர்
    கோடி வணக்கங்கள் குறைவிலாது
    கூடிப் பெற்றீர்! அமைதிச்
    சூளுரைத்து சூழுலகும் நேசித்தீர்
    விருதும் பட்டமும் பாராட்டும்
    எதுவும் தேவையில்லை தமிழன்
    எனும் தாரக மந்திரமே
    தரணியெங்கும் எதிரொலித்து
    ஈன்ற வயிறு இறுமாந்திருக்க
    களம்கண்டு நம் கலாச்சாரம்
    மீட்டெடுத்த காளை நீவிர்
    கல்பகோடி காலம் நின்புகழ்
    கடல் தாண்டியும் வாழும் காணீர்!
    உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு
    திமில் தழுவும் தமிழன்தன்
    வீரமுழக்கம் எட்டுத்திக்கும் விசையென
    வீறுகொண்டு எழும் கணந்தொறும்!!

    Share