Blog

  • கொல்லிமலையின் கொள்ளையழகு!

    கவியோகி வேதம்

     

     

     

    சேலம் நாமக் கல் பக்கச்  சிறப்பழகே  கொல்லிமலை!

     

    ஓலச்சிறு அருவியுடன் இயற்கைஅன்னை உல்லாசம்!

     

    கொல்லிப் பாவைஎனும்  குறு ‘தேவி’(கால்) பாவும் இடம்!

     

    கொல்லும்  அரக்கர்களை (அன்று)- குறுநகையால்  வென்றஇடம்!

     

     

     

    யாரையும் இதுவரையும் கொல்லாத மலையைப்போய்

     

    பார்! இது  ஆட்கொல்லி மலைதாண்டா! என்றுசொன்னால்

     

    கவி இவனும்  காதில்பூ  வைத்தவனோ? நம்புவனோ?..(இது)

     

    கவலையைக் கொல்லும்மலை!  மனஅழுக்கைக் கொல்லுமலை!!

     

     

     

    குறிஞ்சிநில  வளச் ‘சாட்சி’  கொல்லிமலை! இயற்கை(யின்)மடி!

     

    உறிஞ்சியபின்   ‘சக்தியன்னை ’உயர்ந்தசிவன்  வயிற்(று)அணுவை,,

     

    கீழிறங்கிக்  காட்டுகின்றாள் கிறுகிறுக்கும் தன் அழகை!

     

    பாழிலிருந்(து)   ஆன்மாவைப்  பதமாக மேலுயர்த்த

     

     

     

    தனக்கென்று   தனிவழியை தளிர்த்தடங்கள் பூஞ்சோலை

     

    முனகிநிற்கும்  பலமுகில்கள், மூலிகைப் பண்ணைகள்

     

    பெரியசாமி  கோயில்கள், பெரியசந் தனப்பாறை

     

    அருமைப்  ‘ படகுவீடு’, அட்டகாச மலைத்தொடர்கள்,

     

     

     

    தாவர  இயல்பூங்கா, தொலைநோக்கி நிலையங்கள்,

     

    மேவுசுத்தத்  தென்றல், மிதமான தட்பவெப்பம்

     

    மூலம் எல்லாம்  நமைக்கவர்ந்து முன்னேற்று  கிறாள்மனத்தை!

     

    ‘வாலைமகள்’  சக்தி- எண்ணில், வளையாத நெஞ்சுமுண்டோ?

     

    .

     

    இருண்டஉங்கள்  மனஇறுக்கம் ரெண்டுநாளில் போகுமய்யா!

     

    பருக்கவைத்தே  உம்’ பர்ஸை’ , பின் இங்கே செலவழிப்பீர்!

     

    கட்டிவைத்த   கண் இரண்டால்,   கருங்குயிலைக் காண்பீரோ?

     

    பெட்டிகளில்  பணம்பூட்டிப் பேரின்பம் அடைவீரோ?

     

    .

     

    ஓய்வினையே  கழிப்பதற்கும்   இன்பமெலாம்  சுகிப்பதற்கும்

     

    தாய்மடியாய்  கொல்லிமலை  தான் -உம்மை வரவேற்கும்!

     

    எங்கும்உமக்கு  வேகம்ஏன்? எதிலுமே சலிப்பும்ஏன்?

     

    தங்கத்  தமிழ்மன்னர்   பாரி, காரி, மலையன்,ஓரி

     

    .

     

    ஆண்டுவந்த  கொல்லிமலை ஆத்மாவின் ஏகாந்தம்!

     

    ஆண்டிடுமோ  சிறுநோயும்  அதிகநாள் நீர்தங்கின்?

     

    கோடி கொடுப் பினு(ம்)இதுபோல் கற்கண்டுநீர் கிட்டிடுமோ?

     

    வாடவே   வைக்காத  வளர்பசுமை  வேறெங்கு?

     

    .

     

    பலாமலர்த் தேனும் மிகுருசி  அன்னாசி,மலர்த்தேனும்

     

    நிலாபோல்  கீழ்கொட்டும்  நின்றறியாத் தேனீக்கள்!

     

    சாணக்யன் பிறந்த இடம்சடசடென ஆகாயகங்கை(ஓர்)

     

    பாணம்போல்  கீழ்பாய்ந்து  பசுந்தளிர்கள் செழிக்குமிடம்!

     

     

     

    கவிதை  ஊற்றே  கொல்லிமலை!- கோபக்

     

    கனலை  மாற்றும் நல்லமலை!

     

    தவமாய்ச்   சித்தர்   அருளுமலை!நீவிர்

     

    சற்றே   படகில்  வந்துகாண்பீர்!

     

    ‘கவை’போல் காது கள்விடைக்கத்துளிர்கள்

     

    கடித்த  முயல்கள் ஓடும்மலை!

     

    நவையே கொள்வீர்! இம்மலையை அழகை

     

    நன்றாய்  உண்ண  வந்திடுவீர்

     

     

     

     

     

    Share
  • என்று முடியும் பணமதிப்பு நீக்கத்தின் பணத் திண்டாட்டம்?

    நாகேஸ்வரி அண்ணாமலை

    நவம்பர் எட்டாம் தேதி திடீரென்று ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது.  அன்றிலிருந்து ஏழை மக்கள் தாளாத துன்பத்திற்கு ஆளாகிக்கொண்டிருக்கிறார்கள்.  இந்தத் திட்டம் பணக்காரர்களிடம் இருந்த கள்ளப் பணத்தை வெளியே கொண்டுவருவதற்கு என்று அரசு அறிவித்தது.  ஆனால் எவ்வளவு கள்ளப் பணம் வெளியே வந்தது, எவ்வளவு வரும் என்று மத்திய அரசு எதிர்பார்த்தது என்று அரசு சொல்லும் கணக்குக்கும் உண்மையில் நடந்ததற்கும் சம்பந்தம் இல்லை.  சில தினங்களில் எல்லாம் சரியாகிவிடும் என்று தொடர்ந்து அறிவித்துக்கொண்டிருக்கிறது.  ஆனால் இந்தப் பிரச்சினைக்கு விடிவு விரைவில் வரப் போவதாகத் தெரியவில்லை.

    சிறந்த பொருளாதார நிபுணர்களை ஆலோசிக்காமல் மத்திய அரசு எடுத்த முடிவு என்று முன்னாள் நிதிமந்திரி கூறுகிறார்.  இம்மாதிரியான தீவிர நடவடிக்கை எடுக்கும் முன் அதற்கேற்றவாறு மத்திய அரசுத் தன்னைத் தயார்படுத்திக்கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.  கள்ளப் பணத்தில் – அதாவது வரி கட்டாத பணத்தில் – ஆறு சதவிகிதம்தான் பணமாகப் பதுக்கப்பட்டிருக்கிறது; மீதிப் பணம் நிலத்திலும் கட்டடங்களிலும் தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களிலும் முடக்கப்பட்டிருக்கிறது என்று நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமெர்த்தியா சென் சொல்கிறார். அதாவது, பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் 94 சதவிகிதக் கள்ளப்பணம் வெளியே வராது.  நாட்டை முன்னேற்றப் பாதையில் எடுத்துச் செல்ல, கள்ளப் பணம் வைத்திருப்போரின் பணத்தை வெளியே கொண்டுவந்து வறுமையைப் போக்கும் திட்டங்களைச் செயல்படுத்த, இந்தியாவை முன்னேறிய நாடுகளின் வரிசையில் நிறுத்த இந்தத் திட்டம் என்று பிரதம் மந்திரி கூறி வருகிறார்.  பழைய நோட்டுகளை செல்லாது என்று சொன்னதன் மூலம் பணமுதலைகளும் பயங்கரவாதிகளும் பணத்தைப் பதுக்க முடியாது என்று இவர்கள் சொல்லிக்கொண்டிருக்க புது நோட்டுக்களும் அவர்கள் வசம் முதலில் வருவது வேடிக்கையிலும் பெரிய வேடிக்கை.

    இந்தத் திட்டம் ஏழைகளைத்தான் அதிகம் பாதித்திருப்பதாகத் தெரிகிறது.  இந்தியாவில் அடித்தட்டு மக்கள் எப்படிப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று ஒரு அமெரிக்கப் பத்திரிக்கை பட்டியல் போட்டுத் தந்திருக்கிறது.  இவர்கள் எல்லோரும் டெல்லியிலோ டெல்லிக்கு அருகிலோ வசிப்பவர்கள்.  யாஷ்பால் ரத்தோர் (வயது 29) என்பவரின் திருமணம் அவருக்கு மணமகளாக வரவிருந்தவரின் பெற்றோர்களால் பணப்புழக்கம் இல்லாததால் தள்ளிப் போடப்பட்டிருக்கிறது.  ரத்தோர் வேலைபார்த்த இருசக்கர் வாகனங்கள் விற்பனை செய்யும் ஹீரோ மோட்டார் கம்பெனி இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு வாங்குவோர் இல்லாமல் உற்பத்தி குறைந்ததால் இவரை வேலையிலிருந்து நீக்கியிருக்கிறது.  அவர்களுடைய விற்பனை முப்பது சதவிகிதம் குறைந்திருக்கிறதாம். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை.  அவர்களுடைய லாபம் குறைந்தால் தங்களைத் தானே அவர்கள் காத்துக்கொள்வார்கள்.  ‘இந்தத் திட்டத்தால் என் வேலையும் போய்விட்டது, என் திருமணமும் நின்றுவிட்டது’ என்று அழுகிறார் ரத்தோர்.

    இதே கம்பெனியில் வேலைபார்த்த சுனில் குமார் (வயது 28) என்பவர் எந்தவித முன்னறிவுப்பும் இன்றி திடீரென்று அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தால் வேலையை இழந்தார்.  15,000 ரூபாய் சம்பளத்தில் மனைவியையும் இரண்டு குழந்தைகளையும் காப்பாற்றி வந்த இவரால் இப்போது தன்னுடைய கைக்குழந்தைக்குகூட தேவையானதை வாங்க முடியவில்லை.  நவம்பர் 29-ஆம் தேதி எந்த முன்னறிவிப்பும் இன்றி திடீரென்று வேலை போனதிலிருந்து இவரது குடும்பத்தால் தங்களுக்குத் தேவையான அளவு பால், பழங்கள், காய்கறிகள் வாங்க முடியவில்லை; வீட்டு வாடகை கட்ட முடியவில்லை.

    தினக்கூலி வேலைசெய்பவர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.  மாதத்தில் எல்லா நாட்களும் வேலைபார்த்தவர்கள் இப்போது வாரத்தில் சில தினங்கள்தான் வேலைசெய்கிறார்களாம்.  பார்க்கும் நாட்களிலும் முழுக் கூலி கிடைப்பதில்லையாம்.  இரண்டு மாதங்களில் பன்னிரெண்டே நாட்கள் மட்டும் வேலைசெய்த ரஃபீக் அலியால் (வயது 32) குடும்பம் நடத்த முடியவில்லை.  மனைவியையும் குழந்தைகளையும் தன் சொந்தக் கிராமத்திற்கு அனுப்பிவிட்டார்.  தங்கள் மகளை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல மனைவி தன்னிடம் பணம் கேட்டபோது இவரிடம் அனுப்புவதற்கு ஒன்றுமில்லை.

    ஹோதி லாலுக்கு (வயது (38) மூன்று குழந்தைகள்.  சென்ற இரண்டு மாதங்களில் இவருக்கு ஆறு நாட்கள்தான் வேலை கிடைத்தது.  இவருடைய மகன் அலுவலங்களைச் சுத்தம் செய்து ஏழாயிரம் ரூபாய் சம்பாதிக்கிறான்.  அவனைச் சீக்கிரமே அந்த வேலையிலிருந்து எடுத்துக் கல்லூரிக்கு அனுப்ப முடிவுசெய்திருந்த தந்தையால் அப்படிச் செய்ய முடியவில்லை.  அவனுடைய சம்பளத்தில்தான் இப்போது குடும்பம் நடந்து வருகிறது.  ராகேஷ் யாதவ் தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் மனைவியையும் கிராமத்திற்கு அனுப்பிவிட்டு ஒரே அறை கொண்ட தன் வீட்டை வாடகை கொடுக்க முடியாதலால் காலிசெய்துவிட்டு மற்ற நான்கு பேரோடு ஒரு அறையைப் பகிர்ந்துகொண்டு வாழ்க்கையை ஓட்டி வருகிறார்.

    சொன்னபடி கறுப்புப் பணத்தை வெளிக்கொண்டுவர முடியவில்லை என்றதும் மத்திய அரசு திட்டதின் நோக்கத்தை மாற்றிக்கொண்டது. பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிப்பதற்குத்தான் இந்தத் திட்டமாம்.  எல்லாரும் ஆன்லைனில் பணம் கட்டலாம், கடன் அட்டையை உபயோக்கிக்கலாம் என்கிறது மத்திய அரசு.  பரிவர்த்தனனையை இப்படி மக்களுக்குக் கஷ்டத்தை உண்டுபண்ணி மாற்ற முடியாது என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். இதில் எவ்வளவோ கஷ்டங்கள் இருக்கின்றன.  கடன் அட்டை விநியோகிக்கும் கம்பெனிகள் பொது மக்களை ஏமாற்றாமல் இருக்க அமெரிக்காவில் பல சட்டங்கள் இருக்கின்றன.  முதலில் அப்படிப்பட்ட சட்டங்களையெல்லாம் கொண்டுவந்த பிறகல்லவா இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தியிருக்க வேண்டும்?  அமெரிக்காவில் கடன் அட்டைகள் புழக்கத்திற்கு வந்த பிறகு நிறையக் கடனாளிகள் உருவாகியிருக்கிறார்கள்.  அந்தத் தலைவிதி இந்தியாவுக்கும் வேண்டுமா?

    எல்லாக் கஷ்டங்களும் இன்னும் சில தினங்களுக்குத்தான் என்று சொல்லிச் சொல்லி மூன்று மாதங்களைக் கடத்திவிட்ட மத்திய அரசு ‘கஷ்டங்கள் சீக்கிரம். முடிந்துவிடும்.  இனி நாட்டில் பாலும் தேனும் ஓடும்.  அதுவரைக் கொஞ்சம் பொறுமையாக இருங்கள்’ என்று கூறி வருகிறது.  சமூகத்தின் கீழ் மட்டத்தில் இருப்பவர்களால் காய்கறிகள்,  பழங்கள் வங்க முடியாதலால் அவற்றின் விலை குறைந்து வருகிறதாம்.  மேல் மட்டத்தில் இருப்பவர்களுக்கு இதனால் இன்னும் நல்லதாகப் போயிற்று.  குறைந்த விலையில் இவற்றை வாங்கலாமே.  பாலும் தேனும் ஓடும் காலம் வருவதற்குள் இப்போது வேலை இழந்தவர்கள் எப்படி உயிர் வாழப் போகிறார்கள்?

    அமெரிக்காவில் வேலை இழந்தவர்களுக்கு மத்திய அரசு ஆறு மாதங்களுக்கு நஷ்ட ஈடு கொடுப்பதுபோல் இந்தியாவிலும் மத்திய அரசு தன் திட்டத்தால் வேலை இழந்தவர்களுக்காவது ஏதாவது செய்ய வேண்டும்.  அரசின் திட்டத்தால் வேலை இழந்தவர்களுக்கு மறுபடி அவர்களுக்கு வேலை கிடைக்கும்வரை மத்திய அரசு பண உதவி செய்ய வேண்டும்.  தங்கள் பதவியைத் தக்கவைத்துக்கொள்வதிலேயே குறியாக இருக்கும் நம் அரசியல்வாதிகளுக்கு இதையெல்லாம் சிந்திக்க நேரம் இருக்குமா?

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . (228)

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்களுடன் அடுத்த மடலிலே உங்களுடன் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதில் மனம் மகிழ்கிறேன். ஒரு நாட்டின் சுபீட்சம், நாட்டின் ஜனநாயகப் படிமுறைகள் என்பன சரியான பாதையில் எதிர்பார்ப்புகளுக்கமைய நடைபெற வேண்டுமானால் அந்நாட்டை நிர்வகிக்கும் அதிகாரத்திலிருப்போரின் நடவடிக்கைகள் ஆராயப்பட்டு எழும் கேள்விகள் அவர்களை நோக்கித் திருப்பப்பட வேண்டும். நியாயமான வகையில் இக்கேள்விகள் அமைவது அவசியம். அவ்வகையினில் அமையுமானால் அதற்கான சரியான பதிலை அதிகாரத்திலிருப்போர் வழங்கும் பட்சத்தில்தான் ஜனநாயக வழிமுறையில் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை வலுப்பெறும்.

    இத்தகைய ஜனநாயக முன்னெடுப்புக்கான நடவடிக்கைகளில் ஊடகங்களின் பங்கு முக்கியமானது. அரசாங்கத்தை, பிரதமரை, ஜனாதிபதியை, அமைச்சர்களை சரியான வழியில் நடக்கப் பண்ணுவதில் ஊடகங்களுக்கு முக்கியமான பங்கு இருப்பது மறுக்கப்பட முடியாத உண்மை. இவ்வூடகங்களில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் மிகவும் முக்கியமானவர்களாகக் கருதப்படுகிறார்கள். ஒரு நாட்டின் சராசரிக் குடிமகனிடம் உண்மைச் செய்திகளை அவ்வுண்மை நிலைக்குச் சிறிதும் பங்கம் நேராத வகையில் எடுத்துச் செல்வது இப்பத்திரிகையாளர்களின் கடமையாகிறது. அதேசமயம் ஒவ்வொரு பத்திரிகையாளருக்கும் ஒவ்வொரு செய்தியின் மீதும் தமது சொந்தக் கருத்துக்கள் இருக்கும். அச்செய்தியை வடிவமைக்கும் போது ஆங்காங்கே அவர்களின் கருத்துக்களின் சாரம் அச்செய்தியில் பதிந்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கும்.

    இந்தக் கருத்துப் பரிமாற்றம், செய்திப்பரிவர்த்தனை சரியாக நடைபெற வேண்டுமானால் பத்திரிகை நிருபர்களுக்கும்,தொலைக்காட்சிச் செய்தியாளர்களுக்கும் அச்செய்தியில் சம்பந்தப்பட்டிருக்கும் நபருக்கும் (அரசியல்வாதியோ அன்றி ஒரு பிரபலமிக்க நபரோ ) இடையிலான உறவு ஒருவருக்கொருவர் கொடுக்கும் மரியாதையின் அடிப்படையில் அமைந்திருப்பது அவசியமாகிறது. மகாகவி பாரதியின் கூற்று ” தம்பி உன்னுள்ளத்தில் உண்மை இருந்தால் பேனாவை எடு , எழுது”என்பதன் உள்ளார்த்தம் புரிகிறது. இதுதான் பத்திரிகைத்தர்மம் என்பதன் அடித்தளமாகிறது. பத்திரிகையாளர்களுக்கும்,அப்பத்திரிகை நிருபர்களுக்கும் அளிக்கப்படும் கெளரவம் போன்றே அச்செய்தியில் சம்மந்தப்பட்டவர்களுக்கும், அச்செய்தியின் சாரத்திற்கும், உண்மைக்கும் கௌரவமளிக்கப்படவேண்டியது அவசியமாகிறது. ஒரு சமுதாயத்தின் சிந்தனையின் தரத்தைப் பாதுகாக்கும் முக்கியப்பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு. மக்களை நல்வழிப்படுத்தும், அதேசமயம் அவர்களுக்கு உண்மைகளை அவர்களின் நன்மை கருதி எடுத்துச் செல்லும் கடமை ஊடகங்களுக்கு உண்டு. நாம் ஓர் அரசியல் கட்சியையோ அன்றி ஓர் அரசியல்வாதியையோ ஆதரிக்கிறோம் எனும் காரணத்திற்காக உண்மைக்குப் புறம்பான செய்திகளின் மூலம் அவர்களுக்கு ஆதரவு தேடுவது பத்திரிகாதர்மத்துக்குப் புறம்பானது. அதேநேரம் நாம் ஒருவரின் அரசியல் கொள்கைக்கோ அன்றி அவரது கருத்துக்கோ எதிரான கருத்துக் கொண்டவர்கள் என்பதனால் செய்திகளைத் திரித்துக்கூறுவதும் ஊடகத் தர்மத்திற்கு ஊறு விளைவிப்பதாகவே அமைகிறது.

    கடந்தவாரம் வெள்ளிக்கிழமை உலகத்திலேயே சக்தி வாய்ந்த வல்லரசாகக் கருதப்படும் அமேரிக்க நாட்டின் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் பதவியேற்றுக் கொள்ளும் வைபவம் நிகழ்ந்தது. ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் காலத்தில் பல முரண்பட்ட கருத்துக்களை முன்வைத்து அமெரிக்க மக்களிடையே பேதங்களை உருவாக்கிய ஒரு சர்ச்சைக்குரியவரான டொனால்ட் ட்ரம்ப் இந்த வைபவத்தில் பதவியை ஏற்று நிகழ்த்தும் உரையில் அமெரிக்க மக்களிடையே கிளர்ந்துள்ள இப்பேதத்தைக் களைந்து நாட்டினை ஒன்றுபடுத்தும் வகையிலான ஓர் உரையை டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் நிகழ்த்துவார்கள் என்று கொண்டிருந்த எதிர்பார்ப்புகளை தரைமட்டமாக்கும் வகையில் அமெரிக்க மக்களிடையே உள்ள பேதங்களை மேலும் கூர்மைப்படுத்தும் வகையிலான உரையாகவே அவரது உரை அமைந்தது என்பது அரசியல் அவதானிகள் பலரது ஒருமுகப்படுத்தப்பட்ட கருத்து. அமெரிக்க ஊடகங்களுடன் டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் ஒரு போருக்கான அறைகூவல் விடுத்துள்ளார் என்றே கூறவேண்டும். தான் தன்னுடைய கருத்துக்களை மக்களிடையே எடுத்துச் செல்வதற்குத் தன் பக்கம் ஈர்க்க வேண்டிய ஊடகங்களை முற்றுமுழுதாகப் புறந்தள்ளி அவர்களை மிகவும் அவமரியாதை செய்துள்ளார் என்பதுவே பொதுப்படையான கருத்து. வழமையான ஜனநாயக மரபுகளை விடுத்து சமூக வலைத்தளமான ட்வீட்டர் மூலமாகத் தனது கருத்துக்களைப் பதிவிடுவதன் மூலம் தன்னிச்சையாகத் தனது கருத்துக்களை வெளியிடுவது மட்டுமின்றி அவரின் செயல்களுக்கான விளக்கத்தை அறியும் வகையில் ஊடகங்கள் அவரைக் கேள்வி கேட்க முடியாத வகையில் அவரது செயற்பாடுகள் அமைகின்றன.

    அவரது பதவியேற்பு வைபவத்தில் கலந்து கொண்ட மக்கள் தொகை முன்னாள் ஜனாதிபதி ஓபாமா அவர்களின் பதவியேற்பு வைபவத்தில் கலந்து கொண்ட மக்க்கள் தொகையை விடக் கணிசமான அளவு குறைந்தே காணப்பட்டது எனும் உண்மையை ஆதரங்களுடன் வெளியிட்ட ஊடகங்களின் அறிக்கைகள் அனைத்தும் பொய்யானவை என்றும் தமது கணக்கீட்டின்படி தனது பதவியேற்று வைபத்தில் பங்குபெற்றவர்களின் தொகையே அதிகமானது என்றும் வாதிட்டு அனைவருக்கும் கறுப்பு என்று தெரியும் ஒன்றை வெள்ளையென வாதிட்டிருக்கிறார் உலகின் மிகப்பெரிய வல்லரசு நாட்டின் ஜனாதிபதி. இது மிகவும் விசனத்துக்குரியதாகும். இத்தகைய விதண்டாவாதத்தில் ஈடுபடும் இவரின் தரப்பிலிருந்து இன்னும் எவ்வகையான தரவுகள் வெளிப்படப் போகின்றன என்பதே பலரது மனக்கிலேசத்துக்குக் காரணமாகவிருக்கிறது. இந்நிலையில் பத்திரிகை தர்மத்தைக் கடைப்பிடிக்கும் ஊடகங்களின் நிலை என்ன? உண்மையான செய்திகள் மக்களை எவ்வகையில் சென்றடையப் போகிறது? இப்படிப் பல கேள்விகள் உலகெங்குமுள்ள ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டுள்ள அரசியல் அவதானிகளால் எழுப்பப்படுகின்றன.

    இத்தகைய ஒருவர் வல்லரசான அமெரிக்காவின் தலைவராக எடுக்கும் முடிவுகளின் தாக்கங்கள் அமெரிக்காவோடு மட்டும் முடிந்து போவதில்லை. இவற்றின் விளைவுகள் உலகநாடுகள் அனைத்திலும் ஏதோ ஒரு தாக்கத்தை கொண்டு செல்லப்போகின்றன. அவைகளின் விளைவுகளை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav

    சுகந்த துளசி சிலிர்க்க வலிமை
    மிகுந்த இருதோளில் பூணும் -முகுந்தன்
    நிதர்ஸனம் என்று நடப்போர் வழியை
    சுதர்ஸனம் காக்கும் சுழன்று….

    ஆலில் மிதந்தவா ஆழ்வார்கள் பாசுர
    நூலில் நிறைந்தவா நந்தலாலா -தோளில்
    திருத்துழாய் பூண்ட திருவோணத் தானே
    கருத்தில் கலந்துவளைக் காப்பு….கிரேசி மோகன்….!

    Share
  • குடியரசுதின நல்வாழ்த்துகள்!

    Happy-republic-day

    பவள சங்கரி

    சுக்கா, மிளகா சும்மாவா வந்ததிந்த சுதந்திரம்? இதற்கு எத்துணை போராட்டங்கள், எத்துணை உயிர்த் தியாகங்கள். அனைத்தும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட வரலாறுகள்!

    1930 ஆம் ஆண்டு, அதாவது 1947 ஆம் ஆண்டான, நம் இந்தியத் திருநாடு சுதந்திரம் பெறுவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்பே, பூரண சுதந்திரம் பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் சனவரி 26ஆம் நாளில் சுதந்திர தினம் கொண்டாடி விட்டோம். அது எப்படி நடந்தது ?

    வியாபாரம் செய்யவந்த கிழக்கிந்தியக் கம்பெனி கபடதாரிகள் நம் இந்திய அன்னையை மெல்ல மெல்ல அடிமைச் சங்கிலி பூட்டி மக்களையும், சுதந்திரப் போராட்டத் தலைவர்களையும் வேட்டையாடிக் கொன்றுகுவித்த காலங்களில் நம் இந்தியத் திருநாடு அடிமைத் தளையிலிருந்து விடுபடும் முன்னரே நம் தேசத்தந்தை காந்தியடிகள் 1930 ஆம் ஆண்டு, சனவரி 26ஆம் நாளன்று நாடு முழுவதும் சுதந்திர தினம் கொண்டாட வேண்டும் என்று அறிவிப்பு செய்தார்.

    ஏன் அப்படி செய்தார்?

    பொருளாதாரத்தில் பின்னடைவு ஏற்பட்டு நம் இந்தியா வறுமையின் பிடியில் சிக்கி உழன்றுகொண்டிருந்த காலகட்டமான, 1929ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்தான் லாகூரில் அகில இந்திய மாநாடு கூடியது. அதில் ‘பூரண சுயராச்சியமே நமது நாட்டின் உடனடியான இலட்சியம்’ என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை செயல்படுத்துவதற்கான திட்டம் குறித்து காந்தியண்ணல் முடிவு செய்து அறிவிப்பார் என்று மற்றொரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. சுதந்திர எழுச்சி தீவிரமாகக் கனன்றுகொண்டிருந்த காலகட்டமும் இதுதான். இதன் விளைவாகப் பல வன்முறைப் போராட்டங்களும் நடந்துகொண்டிருந்தன. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்று காந்தி எண்ணினார். அதனால் சட்ட மறுப்பு இயக்கம் தொடங்குவதை கைவிட்டார். தேசிய எழுச்சியை அகிம்சைப் பாதையில் திசை திருப்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். இதன் முதற்கட்ட நடவடிக்கையாகத்தான் நாடு முழுவதும், 1930, சனவரி 26ஆம் தேதியன்று அமைதியான முறையில் சுதந்திர தினம் கொண்டாடலாம் என வேண்டுகோள் விடுத்தார். உள்ளூரில் இருந்த மற்ற காங்கிரசு தலைவர்கள் நகர்ப்புற மற்றும் கிராமங்களிலும் கூட்டம் கூட்டி காந்தியடிகளின் சுதந்திர தின உறுதி மொழி பற்றி எடுத்துரைத்தனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி இந்த உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். இதன் வாசகம் இதுதான்:

    “நமது தாய்த்திரு நாட்டிற்கு, பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம், ஆன்மீகம் என்ற நான்கு விதங்களிலும் துன்பம் விளைவித்துவரும் ஓர் அரசாட்சிக்கு அடங்கி நடப்பது என்பது மனிதர்களுக்கும் ஆண்டவனுக்கும் செய்யும் துரோகம்” .

    ஆக, சுதந்திரம் பெறுவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்பே குடியரசு தினம் நம்பிக்கையாகக் கொண்டாடிய காந்தியடிகள் ஏற்படுத்திய அந்த சுதந்திர தின நாள்தான் சனவரி 26. சுதந்திரம் பெற்றபின் அந்த நாளையே குடியரசு தினமாகக் கொண்டாடுகிறோம். மக்களாட்சி மலர்ந்த அந்நாளையே குடியரசு தினமாகக் கொண்டாட, 26 நவம்பர் 1949இல் நேரு அமைச்சரவை முடிவு செய்தது. அதன்படி 1950ஆம் ஆண்டு முதல் இந்த நாள் குடியரசு தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

    வாழ்க சனநாயகம்!

    ஓங்குக இந்திய குடியரசின் புகழ் !!

    Share
  • “தேசத்தை நேசி”

     

    மீ.விசுவநாதன்

    உதிரத்தைப் பாலாகத் தந்தாள் – தாய்
    உணர்வோடு தாய்நாடு என்னும் – நல்
    உயர்வினைச் சிந்தையில் வைத்தாள் !

    அதிஞானம் பெற்றாலும் என்றும் – மன
    அகங்காரம் கொள்ளாத பண்பால் – உள
    அமைதியைப் போற்றிடு என்றாள் !

    அதிராத வார்த்தையைப் பேசி -நீ
    அன்போடு தேசத்தை நேசி -என
    அறிவிலே தெளிவினைத் தந்தாள் !

    புதிரான புவனத்தில் நித்தம் – புதுப்
    பூப்போலே ஆனந்த மாக – நீ
    பொலிகவே பொலிகவே என்றாள் !

    கொடிதன்னில் தேசத்தைப் பாரு – அதன்
    குலம்வாழக் காத்திடுவாய் நீடு – எனும்
    கொள்கையை என்னுளே வைத்தாள் !

    கொடிதன்னில் பூத்திருக்கும் பூப்போல் -இங்கு
    குடிவாழும் உயிர்க்கூட்டம் என்று – நற்
    குருவென ஞானமே தந்தாள் !

    கொடிதான காரியங்கள் செய்யும் – தீக்
    கூடத்தின் வேர்நீக்கு என்றே – தொப்புள்
    கொடியிலே சத்தியம் பெற்றாள் !

    கொடிதெய்வம் என்கின்ற எண்ணம் – சிறு
    குழந்தையாய் இருக்கின்ற போதே – என்
    உளத்திலே பதித்தவள் சென்றாள் !
    ( 25.01.2017 20.45 pm)

    Share
  • குடியரசு தினம்

     

     

    ரா.பார்த்தசாரதி

     

    சட்டங்களையும், மனித உரிமைகளையும் ஒரு குடைக்கீழ் வந்த தினம்

    நாட்டின் ஒருமை பாட்டிற்காக,சட்டங்கள் பிரகடன படுத்திய தினம்

    எல்லா மாநிலத்திற்கும் பொதுவான சட்ட திட்டங்கள் உண்டான தினம்

    ஜனநாயக நாடு ஒரு குடியரசு நாடாய் அமல்படுத்திய தினம்.!

     

    எங்கு சட்டம் முடிகிறதோ, அங்கே கொடுங்கோல் ஆரம்பமாகும்

    இன்றைய சட்ட திட்டங்கள் தேவைக்கேற்ப வலைப்பதாகும்

    அரசியல் சாசனங்களும், அரசியல் வாதிகளும் காரணமாகும்

    கொலைக்கும், கொடுங்கோன்மைக்கும் துணை நிற்பதாகும் !

     

    தீவிர வாதத்தையும், கருப்பு பணத்தையும், அறவே ஒழிக்கமுடிந்ததா

    நாட்டின் சட்ட திட்டங்களால் இவைகளை முழுதும் அழிக்க முடிந்ததா

    ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும், இதற்கு துணைநிற்பதா

    அறுபத்து ஏழு ஆண்டுகள் ஆயினும் தீர்வு இல்லாமல் இருப்பதா !

     

    குடியரசு நாடே ! இன்று பணக்காரர்கள் ஆட்டி வைக்கும் பொம்மையா

    ஏழைகளுக்கு இன்று சட்ட திட்டங்கள் ஓர் எட்டா கனியா

    நிதி கிடைத்தால் போதும் என்றெண்ணி நீதியை புறக்கணிக்கலாமா

    நடுநிலை கொண்டு நீதியையும், தர்மத்தையும் நிலைநாட்ட வேண்டாமா !

     

    Share
  • கவிதை திறனாய்வு – ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு

    ரிஷான் ஷெரீஃபின் கவிதை 

    ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு

     

         உங்கள் இதழில் ரிஷான் ஷெரீஃபின் கவிதை நவீனத்துவத்தின் வீச்சுடன் பதிவாகி இருக்கிறது. முதலில் கவிதையை வாசிப்போம்:

    கறுத்த கழுகின் இறகென இருள்

    சிறகை அகல விரித்திருக்குமிரவில்

    ஆலமரத்தடிக் கொட்டகை மேடையில்

    ரட்சகனின் மந்திரங்கள் விசிறி

    கிராமத்தை உசுப்பும்

    சிக்குப் பிடித்துத் தொங்கும் நீண்ட கூந்தல்

    ஒருபோதும் இமைத்திராப் பேய் விழிகள்

    குருதிச் சிவப்பு வழியப் பரந்த உதடுகள்

    முன் தள்ளிய வேட்டைப் பற்கள்

    விடைத்து அகன்ற நாசியென

    நெற்றியில் மாட்டப்பட்ட முகமூடியினூடு

    கூத்துக்காரனின் முன்ஜென்மப் பெருந் துன்பம்

    சனம் விழித்திருக்கும் அவ்விரவில்

    பேரோலமெனப் பாயும்

    பச்சைப் பொய்கை நீரின் ரேகைகள்

    ஊழிக் காற்றின் வீச்சுக்கேற்ப

    மாறி மாறியசையும் அக் காரிருளில்

    அவளது உடல்விட்டகழ மறுக்கும்

    யட்சியின் பிடியையும் துர்வார்த்தைகளையும்

    மந்திரவாதியின் கசையும்

    ஆட்டக்காரர்களின் பறையும்

    மட்டுப்படுத்தும்

    பேரிளம்கன்னியைப் பீடித்துள்ள பிசாசினை

    அன்றைய தினம்

    குறுத்தோலைப் பின்னல் அலங்காரங்களில்

    எரியும் களிமண் விளக்குகளின் பின்னணியில்

    அடித்தும் அச்சுறுத்தியும் வதைத்தும் திட்டியும்

    துரத்திவிட எத்தனிக்கும் பேயோட்டியைப் பார்த்தவாறு

    ஆல விழுதுகளைப் பற்றியபடி காத்துக் கிடக்கும்

    பீதியோடு உறங்கச் செல்லவிருப்பவர்களுக்கான

    துர்சொப்பனங்கள்

    அந்தகாரத்தினூடே

    அவர்களோடும் அவைகளோடும்

    சுவர்க்கத்துக்கோ அன்றி நரகத்துக்கோ

    இழுத்துச் செல்லும் தேவதூதர்கள்

    அவளது ஆன்மாவைக் காத்திருக்கிறார்கள்

    ***

         ஒரு பேரிளம் பெண் திருமண ஏக்கம், உடல் மற்றும் உணர்வுகளின் இயல்பான தாபம், அக்கம்பக்கம், உற்றார் உறவு, சாதி சனம் எல்லோரும் ஏச்சுப் பேச்சு இவற்றால் மன அழுத்தம் அதிகமாகி, ‘சாதாரண’மல்லாத நடவடிக்கைகளைச் செய்யும் போது அவளுக்கு முதலுதவியாக அமைய முடிவது ஆறுதலான ஒரு வார்த்தை. அடுத்ததாக அன்பும் அரவணைப்பும். அதன் பின்னரே தேவைப்பட்டால் மனநல மருத்துவ ஆலோசனை.

         ஆனால் நாம் அவளை என்ன செய்வோம்? அவளுக்குப் பேய் பிடித்து விட்டது என்று போன ஜென்மத்துத் துன்பத்துக்குப் பழி வாங்குகிறானோ இவன் என நாம் மலைக்குமளவு அடித்துக் கொடுமை செய்யும் ஒரு பேயோட்டியிடம் கொண்டு போய் விடுவோம். அவனது அடியில் அனேகமாக அவள் உயிர் நீப்பதே சகஜம். அதன் பின் அவள் சொர்க்கம் போனாலென்ன? நரகம் போனாலென்ன?

         ஒரு பெண் வறுமை, தோலின் நிறம், முகவாகு, உடல்வாகு என எந்தக் காரணத்தினாலும் திருமணம் அமையப் பெறாதவளாக சமூகத்தால் நிராகரிக்கப் படலாம். தனியாக வாழவும் ஒரு பெண்ணுக்கு அனுமதி இல்லை. எனவே அவளைத் திருமணத்திலிருந்து நிராகரித்த அதே சமூகத்தால் சொற்களால் சித்திரவதை செய்யப் படுவாள்.

         விதவையோ பேரிளம் பெண்ணோ அவர்களின் அவலம் நம்மை பாதிப்பதில்லை. அவர்களைப் பற்றிய பொறுப்புணர்வில்லாதோர் தமது மனசாட்சியின் உறுத்தலுக்கு ஆளாவதே இல்லை. அவளுக்கு இன்னும் குரூரமான ஒரு சித்திரவதை மூலம் நிரந்தர மன ஊனமோ அல்லது மரணமோ கூட நிகழ்த்தப்படுவதை நாம் சாட்சிகளாக நின்று பார்க்கிறோம். தேவதூதர்களும் அரூபமாய் அதையே செய்கிறார்கள்.

         பெண்ணின் வலியை ஆண் எழுத்தாளர்கள் ஆழ்ந்த பதிவாக்குவதில் அபூர்வமாகவே வெற்றி பெறுவார்கள். ரிஷானுக்கு அது சாத்தியமாகி இருக்கிறது.

         நவீனக் கவிதையில் ஒரு மந்திரமான பின்புலம் இயல்பாய் விரியும். அதில் நாம் நம்மையுமறியாமல் ஒன்றுமளவு அதன் காட்சிப்படுத்தும் புனைவின் வீச்சு தென்படும். கவிஞர் மறைந்திருக்க கவிதையின் கருவை நாம் மிக ஆழ்ந்தே உள் வாங்குவோம். கவிதையின் காலகட்டத்தைத் தாண்டி அது காட்சிப்படுத்தும் சூழலையும் தாண்டி அது மீறிச் செல்லும்.

         மனித தேவகணங்கள் யாருக்குமே பெண்ணில் வலி அன்னியமானது மற்றும் அலட்சியத்துக்குரியது என்னும் புள்ளியில் கவிதை ஒரு விடைதெரியாத கேள்வியை நமக்கு நினைவு படுத்துகிறது. மானுடத்தின் உள்ளார்ந்த குரூரம் பிரபஞ்சமெங்கும் விரவி நிற்கிறதோ? ஆழ்ந்த கவித்துவ தரிசனமும் கற்பனையும் கொண்ட கவிதையைத் தந்த ரிஷானுக்கு வாழ்த்துக்கள்.

    – எழுத்தாளர் சத்யானந்தன்

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    நீல பத்பநாபன் அவர்களின் விஷ்ணு-புரம் நாவலை
    இரா.முருகன் படிக்கத் தந்தபோது….
    —————————————————————————————————–

    kesav

    கேசம் திருவல்லா கால்கள் திருவாப்பூர்
    சேஷ சயனத்தில் ஸ்ரீநிதி -வாசனாய்
    நீளப் படுத்தவரே நீலபத்ம நாபரே
    கோலத் திருவுருவே காப்பு….

     

    THREE TIER PROTECTION FOR திருவனந்த புர ஸ்வாமிக்கு….
    ————————————————————————————-
    பாஞ்சாலி, ஆனை, பிரகலாதன் துன்பத்தில்
    பூஞ்சோலை இன்பமாய் பூத்தவா -ஏஞ்சாமி !
    காப்புக் கடவுள்நீ கேரளத்தில் முப்பாது
    காப்பில் கிடக்கலாமோ கூறு….
    சர்வம் விஷ்ணு “மாயம்” ஜகத்….

    “சர்வமும் வாசுதேவ சாயலாய் பார்ப்போர்க்கு
    கர்மப்ரா ரப்தம் கிடையாது ;-மர்மமிதை
    போதித்த யாதவன் பாதத்தைப் பற்றுக;
    வேதத்தின் சாரம் விஷ்ணு”…

     

    வாசுதேவ மயம் ஜகத்….
    ——————————————-

     

    “ஏசுதேவன், அல்லா, எருதேறி வெண்ணீறு
    பூசுதேவன், நான்முகன், பொற்பில்வேல் -வீசுதேவன்
    வீசுகாதன் வேழன், வியனோ வியன்கேசவ்,
    வாசுதேவன் என்றே வணங்கு”….கிரேசி மோகன்….

    பொற்பில்வேல்-மலையில் வேல் முருகன்….
    வியனோ வியன்கேசவ் -வியத்தகு ஓவியன் கேசவ்….

    கேசம் திருவல்லா கால்கள் திருவாப்பூர்
    சேஷ சயனத்தில் ஸ்ரீநிதி -வாசா
    பதினெட்டு மைலாய் படுத்தோய் எனக்கு
    விதியெட்டா வாழ்வை வழங்கு….

    தங்கத்தில் திருவனந்தன் கோலத்தை கணினியில் கண்டு….
    ————————————————————————-
    அங்கம் ஜொலிக்க அயனரன் பாதுகாப்பில்
    தங்கமாய்த் தூங்கும் திருவனந்த -சிங்கமே !-
    பாற்கடல் விட்டெதற்கு பாதாளப் பள்ளிகொண்டீர்
    வேர்க்கலையோ அங்குமக்கு விஷ்ணு….

    அடையார் அனந்த பத்பனாப ஸ்வாமி கோயிலில் எழுதியது
    —————————————————————————

    கடலேழில் தூங்கி களைப்புற்றாய் போலும்
    அடையாற்றில் பள்ளி அடைந்தோய் -மடல்வாழை
    தென்னை மரம்சூழ் திருவனந்தா, ஐம்புலக்
    கண்ணைப் பறித்தெனைக் காண்….கிரேசி மோகன்….!

     

    Share
  • வரம் தாரீரோ கண்களே!

     
    இல.பிரகாசம்

     

    உயிர் உண்ணும் கண்கள்
    களவாடிச் செல்ல
    இமைகள்
    இமைக்குந் தருணம் இதுவல்லவோ?

    இளமைஅது கொள்ளாது கொள்ளாது உன்
    உறவைத் தீண்டிட மனம் கள்ளத்தனத்
    திட்டம் தீட்டுகிறது!;
    தீயில் ஊறுந் தேனாய்க்
    கார்மேகஞ் சூழ்ந்த மையல் கொண்ட
    கயல்விழிப் பாவையின் பார்வையது பொல்லாது!

    யாவரும் மோகங் கொள்ளும் கலைநயப்
    பாவையின் நயனம் எனைத் தீண்டாதோ?
    தீரரெனப் போற்றும் வீரர்களுக்கெல்லாம்
    வீரம் விளைத்திடும் -அந்தக்
    கொற்றவையின் கருணை
    கடுகளவேனும் எனை தீண்டாதோ? கண்களே!

    காவியம்பல போற்றும் நாயகன் நானென
    பாவலர் பாடும் பாடுபொருளாய் நானாவேனோ?
    உயிருறவை ஈர்க்குங் கலைநயக் காதலை
    கருவில் சுமந்தலையும் கண்களே நீங்கள்
    நான்கேட்ட வரமதனை தாரீரோ?
    ​

    Share
  • நாமுணர்வோம் !

     
    எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா 

     

    முள்ளிருக்கும் செடியினிலே
    முகிழ்த்துவரும் ரோஜாவே
    முள்பற்றி எண்ணாமல்
    முறுவலுடன் மலர்ந்துநிற்கும்
    நல்லவர்கள் வாழ்வினிலே
    நஞ்சுநிறை முள்வரினும்
    மெல்லவரும் விலக்கிநின்று
    நல்லவற்றை நமக்களிப்பர் !

    செடிவளரும் கொடிவளரும்
    சிலவெமக்கு மருந்தாகும்
    அதனூடே வளர்ந்துவரும்
    ஆகாத செடியுமுண்டு
    அதுபோல வாழ்வினிலே
    ஆலகாலம் வரும்வேளை
    அதைப்போக்க வருபவரே
    அகிலத்தின் இரட்சகர்கள் !

    வருவார்கள் போவார்கள்
    வரவெமக்குத் தெரியாது
    வரமளித்து விட்டுவிட்டு
    மெளனமாய் போய்விடுவார்
    தெருவோரம் நின்றாலும்
    திரும்பியே நாம்பாரோம்
    அவர்சென்ற பின்னால்த்தான்
    அவர்பெருமை நாமுணர்வோம் !

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    Kamadhenu anoints Krishna as Govinda…..!

    Anoints -As part of religious ceremony, rub or smear oil….எண்ணைக் காப்பு….!

    kesav

    காளியன் குட்டையில் மூளியாய் மூழ்கஅவன்
    தோளினில் ஆடிய தெய்வமே -காளியின்
    அண்ணனே கைமாறி ஆயர் குலம்புகுந்த
    கண்ணனுக்(கு) எண்ணையால் காப்பு….கிரேசி மோகன்….!

    Share
  • படக்கவிதைப் போட்டி – (96)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    16237423_1214726405248223_530799446_n

    32535581@N07_lபிரேம்நாத் திருமலைசாமி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (28.01.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    ”அத்தை மடி மெத்தையடி”….!அத்”தை”(தை மாஸத்திற்காய் தவமிருந்த கோ”தை” கோ மாதா) மடி அரங்கனார் மெத்தை….

    kesav

    ”பாற்கடல் பாரதம், பாற்குடல் பாகவதம்
    பார்கடன் பட்டார் பசுவுக்காய், -ஏற்கனவே
    கீதைக்கும், பூமிக்கும்(பூபாரம்) கடன்பட் டவர்புவிகோ
    மாதுக்காய் மெத்தை மடி”….கிரேசி மோகன்….!

    Share
  • டயரியில் குறித்த காசு!..

     

     

     கவியோகி வேதம்

     

     

     குழந்தையாய் இருந்தான்,

     குடிக்க, தின்னப் பலவும் கேட்டான்,

     விளையாடப் பொம்மை,  கேம்ஸ்நோட் பேட்

     காசு எத்தனை..?அறியான்;

     தந்தையோ  குறித்தார்,

     கல்லூரிக்கு அனுப்பும் முன்;

    .

     டாக்டராய் ஆகு,

     அதுவே உன் லட்சியம் என்றார்!

     டயரியில் குறித்த அவனுக்கான

     செலவிலே அவர் மனம்.!.

     அவன் இன்னும்  குழந்தையாய் இருந்தான்,

     அவருக்காய்ப் படித்தான்..வென்றான்

     செய்த செலவை அப்பன் ‘டயரியில்’- குறித்தான்.

    .

     வசூலிக்கும் நேரத்தில்

     வக்கணையாய் வந்தது அவர்க்கே பெரும் நோய்!

     முதல் நோயாளி அவர் அவனுக்கு;

     அவன் காசு வசூலிக்கவில்லை..

     அதுபற்றி அவர்க்கே உறுத்தல்!

     சொல்லி மன்னிப்பாய் என்னும் முன்

     வாய் கோணியது.

     உடல் காடு ஏகியது;

     வெட்டியானோ இவன் டாக்டர்

     என அறிந்து பெரும் காசு கேட்டான்.

     அப்பனைப் பிழைக்க வைக்கமுடியாத் தண்டனையாய்

     அவனுக்கு இவன் கொடுத்தான்.

     கடைசி மூச்சில் டயரி நினைவு

     அப்பனுக்கு வந்தது அறியாதவனாய்..!

     

     *************************************************************

     

     

     

     

     

     

     

    Share